என் மலர்
தெலுங்கானா
- கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
- ஐதராபாத் சுங்க துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த 40 லட்சம் கடத்தல் சிகரெட்டு குச்சிகளும் அழிக்கப்பட்டன.
ஐதராபாத்:
தெலுங்கானாவில் ஐதராபாத் நகர சுங்க துறை மற்றும் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் இணைந்து பல்வேறு தருணங்களில் போதை பொருட்களை பறிமுதல் செய்யும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இதில், 27.9 கிலோ எடை கொண்ட ரூ.195.37 கோடி மதிப்பிலான ஹெராயின், ரூ.272.55 கோடி மதிப்பிலான மெபிடிரோன் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதனை தொடர்ந்து, மொத்தம் 216.69 கிலோ எடை கொண்ட போதை பொருட்கள் அதிகாரிகள் முன்னிலையில் நேற்று அழிக்கப்பட்டு உள்ளன.
நைஜீரிய, பெனியனாய்ஸ், தான்சானியா, தென்ஆப்பிரிக்கா மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த பயணிகளிடம் இருந்து இந்த போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
இவற்றை தெலுங்கானாவின் மேச்சல் மல்காஜ்கிரி மாவட்டத்தின் தண்டிகல் கிராமத்தில் உள்ள ஐதராபாத் கழிவு மேலாண்மை திட்ட வசதி கொண்ட இடத்தில் வைத்து அழித்தனர்.
இவற்றின் மதிப்பு ரூ.468.02 கோடி ஆகும். இவை தவிர, பல்வேறு நாடுகளில் இருந்து வந்த பயணிகளிடம் ஐதராபாத் சுங்க துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த 40 லட்சம் கடத்தல் சிகரெட்டு குச்சிகளும் அழிக்கப்பட்டன.
- டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
- அதன்படி, முதலில் ஆடிய இலங்கை 344 ரன்களை குவித்தது.
ஐதராபாத்:
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தெலுங்கானாவின் ஐதராபாத்தில் 8-வது லீக் போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, இலங்கை அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் குசால் பெராரா டக் அவுட்டானார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்கா அரை சதமடித்து 51 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து இறங்கிய குசால் மெண்டிஸ் அதிரடியாக ஆடி சதமடித்தார். அவர் 77 பந்துகளில் 6 சிக்சர், 14 பவுண்டரி உள்பட 122 ரன்கள் குவித்தார்.
அவரை தொடர்ந்து இறங்கிய சதீரா சமரவிக்ரம பொறுப்புடன் ஆடி சதமடித்து 108 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 344 ரன்களை குவித்தது.
பாகிஸ்தான் சார்பில் ஹசன் அலி 4 விக்கெட்டும், ஹரிஸ் ராப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 345 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்குகிறது.
- ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகளும் கூட இந்தக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
- அமித்ஷா 2020 -ம் ஆண்டில் முக்கிய விளையாட்டு, திரைப்படம் மற்றும் ஊடகப் பிரமுகர்களைச் சந்தித்ததன் மூலம் மாநிலத்தில் செல்வாக்கு செலுத்தத் தொடங்கினார்.
திருப்பதி:
மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று ஐதராபாத் வருகிறார். இன்று மாலை 2,000-க்கும் மேற்பட்ட தொழில் வல்லுநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், கல்வியாளர்கள், ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளை சந்தித்து பேசுகிறார்.
ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகளும் கூட இந்தக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
முக்கிய மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பார் கவுன்சில் உறுப்பினர்கள், ஓய்வுபெற்ற துணை வேந்தர்கள், முன்னாள் ஐஏஎஸ் மற்றும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அமித்ஷா 2020 -ம் ஆண்டில் முக்கிய விளையாட்டு, திரைப்படம் மற்றும் ஊடகப் பிரமுகர்களைச் சந்தித்ததன் மூலம் மாநிலத்தில் செல்வாக்கு செலுத்தத் தொடங்கினார்.
இதனிடையே, மத்திய உணவுத் துறை மந்திரி பியூஷ் கோயல் அக்டோபர் 14-ஆம் தேதி செரிலிங்கம்பள்ளி சட்டப்பேரவைத் தொகுதியிலும், மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் அக்டோபர் 16-ந்தேதி ஹுசூராபாத் மற்றும் மகேஸ்வரம் தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜி பிரேமேந்தர் ரெட்டி தெரிவித்துள்ளார்.
- மாநிலத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பிரசாரத்தில் ஈடுபட சந்திரசேகர ராவ் முடிவு செய்துள்ளார்.
- பொதுக்கூட்ட ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலத்திலிருந்து 2014-ம் ஆண்டு தெலுங்கானா மாநிலம் புதிதாக உருவானது.
அப்போது மாநில பிரிவினைக்கு பெரும் பங்கு வகித்த சந்திரசேகர ராவ் கட்சி 63 இடங்களை கைபற்றி முதல் முறையாக ஆட்சிக்கு வந்தது. அதற்கு பின்னர் 2018-ம் ஆண்டு தேர்தலில் 88 இடங்களை பெற்று 2-வது முறையாக ஆட்சியை பிடித்தது.
இந்த நிலையில் நவம்பர் மாதம் 30-ந்தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தெலுங்கானா மாநிலத்தில் முதல்- மந்திரி சந்திரசேகர ராவ் பல்வேறு வியூகங்கள் வகுத்து வருகிறார்.
அவருக்கு ராசியான இடமாக கருதப்படும் ஹீஸ்னாபபாத்தில் இருந்து தேர்தல் பிரசாரத்தை வருகிற 15-ந்தேதி தொடங்குகிறார். அன்று காலை கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடுகிறார்.
வழக்கம் போல காமரெட்டி பகுதியில் அவர் போட்டியிட முடிவு செய்துள்ளார். முன்னதாக கோனை பள்ளியில் உள்ள வெங்கடேஸ்வரா சாமி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 15-ந்தேதி வேட்பாளர்களுக்கு பி-படிவங்களையும் அவர் வழங்குகிறார். இதைத் தொடர்ந்து மாநிலத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பிரசாரத்தில் ஈடுபட அவர் முடிவு செய்துள்ளார்.
இதற்கான பொதுக்கூட்ட ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
- தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத் மாநகராட்சியில் நடந்த தேர்தல் மூலம் பா.ஜ.க 2-வது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.
- தெலுங்கானா மாநிலத்தில் கர்நாடக மாநில பார்முலாவை பயன்படுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலத்தில் 119 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. தனி பெரும்பான்மை பெற 60 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும்.
வருகிற நவம்பர் மாதம் 30-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 2014-ம் ஆண்டு மாநிலம் உருவான போது அதிக செல்வாக்கு உள்ள பி.ஆர்.எஸ். கட்சியை சேர்ந்த சந்திரசேகரராவ் ஆட்சியை பிடித்தார்.
தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் அவர் 3-வது முறையாக ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பல்வேறு விதமான வியூகம் வகுத்து வருகிறார்.
மாநிலத்தில் அதிக செல்வாக்கு பெற்றுள்ள அவரது கட்சி ஆட்சியைப் பிடிக்கும் வகையில் வேட்பாளர்கள் தேர்வு நடந்து வருகிறது. 115 தொகுதிகளில் அவரது கட்சி வேட்பாளர்கள் நேரடியாக போட்டியிடுகின்றனர்.
வாக்காளர்களை கவரும் வகையில் தேர்தல் அறிக்கை தயாராகி வருகிறது. சந்திரசேகரராவ் கட்சியில் அவரது மகள் கவிதாவுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் தரப்படுகிறது. இதனால் வாரிசு அரசியல் என்ற பிரசாரத்தை எதிர்க்கட்சிகள் தொடங்கியுள்ளன.
ஆனாலும் அவற்றையெல்லாம் உடைத்து மக்களுக்கான நலத்திட்டங்கள் மூலம் மீண்டும் ஆட்சியை பிடிக்க தீவிர பிரசாரத்தில் இறங்கி உள்ளனர்.
தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத் மாநகராட்சியில் நடந்த தேர்தல் மூலம் பா.ஜ.க 2-வது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.
கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி 2 இடங்களில் நடந்த பொதுக்கூட்டங்களில் பேசினார். தொடர்ந்து அமித்ஷா மத்திய மந்திரிகளும் பிரசார ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
தெலுங்கானாவில் டார்கெட் 75 என்ற இலக்குடன் பா.ஜ.க. களமிறங்குகிறது. நடிகைகள் விஜயசாந்தி, ஜெயசுதா உள்ளிட்ட 25 வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசின் திட்டங்கள் மூலம் வாக்குகளை பெறுவதற்கு முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலத்தில் கர்நாடக மாநில பார்முலாவை பயன்படுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. கடந்த மாதம் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இந்த மாநிலத்தில் நடத்தப்பட்டது.
அப்போது பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2500, ரூ.500-க்கு சமையல் கியாஸ் சிலிண்டர், பெண்களுக்கு இலவச பஸ் பயணம் மற்றும் விவசாயிகளுக்கு உதவி தொகை என 6 முக்கிய வாக்குறுதிகளை சோனியா காந்தி அறிவித்தார். இதன் மூலம் பெண்கள் வாக்குகளை எளிதாக கவர முடியும் என காங்கிரஸ் கணக்கிட்டு உள்ளது.
தெலுங்கானா மாநிலத்தை பொறுத்தவரை தற்போது காங்கிரஸ் கட்சி 3-வது இடத்தில் உள்ளது. தெலுங்கானா ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சர்மிளாவை அந்த கட்சியில் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
அது நிறைவேறவில்லை. தெலுங்கானா மாநிலத்தில் இந்த சட்டமன்ற தேர்தலில் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. ஆட்சியைப் பிடிக்க ஆளும் பி.ஆர். எஸ். கட்சி, பா.ஜ.க., காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கடும் பிரசார வியூகங்களை வகுத்து வருகின்றனர்.
- ஆத்திரம் தீராமல் ஷைபாஸை துதிக்கையால் தூக்கி சுவற்றில் மோதியது.
- பராமரிப்பாளர் இறந்த சம்பவம் சக ஊழியர்கள் இடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத், பழைய பஸ்தி பாக் பகுதியில் நேரு வன உயிரியல் பூங்கா உள்ளது.
இந்த பூங்காவில் அதே பகுதியை சேர்ந்த ஷைபாஸ் (வயது 25) என்ற வாலிபர் கடந்த 2 ஆண்டுகளாக வனவிலங்கு பராமரிப்பாளராகவும் யானை பாகனாகவும் வேலை செய்து வந்தார்.
நேற்று மீராளம் குளம் என்ற இடத்தில் யானைகளை பராமரித்து கொண்டு இருந்தார்.
அப்போது விஜய் என்ற ஆண் யானை திடீரென ஷைபாசை தந்ததால் குத்தி தூக்கி வீசியது. மேலும் ஆத்திரம் தீராமல் ஷைபாஸை துதிக்கையால் தூக்கி சுவற்றில் மோதியது. இதில் படுகாயம் அடைந்த ஷைபாஸ் அலறி கூச்சலிட்டார். இவரது அலறல் சத்தம் கேட்ட சக ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு ஓடிவந்து ஷைபாஸை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி ஷைபாஸ் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார். யானை தாக்கியதில் வனவிலங்கு பராமரிப்பாளர் இறந்த சம்பவம் சக ஊழியர்கள் இடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
- சந்திரசேகர ராவ் ஆட்சிக்கு எதிராக நடைபயணம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார்.
- அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளார்.
திருப்பதி:
ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளா. தெலுங்கானா மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர்.தெலுங்கானா பார்ட்டி என்ற புதிய கட்சியை தொடங்கினார்.
சந்திரசேகர ராவ் ஆட்சிக்கு எதிராக நடைபயணம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார். அவரது கட்சியை காங்கிரசுடன் இணைக்க கட்சி மேலிடம் ஆர்வம் காட்டியது.
இதையடுத்து கர்நாடக துணை முதல்-மந்திரி சிவகுமார் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் ஷர்மிளாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது ஷர்மிளா தனக்கு மாநில தலைவர் பதவி வழங்க வேண்டும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஷர்மிளாவின் கோரிக்கைக்கு தெலுங்கானா காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் விரக்தி அடைந்த ஷர்மிளா தனது கட்சியை காங்கிரசுடன் இணைக்கும் திட்டத்தை கைவிட்டார்.
இந்த நிலையில் தெலுங்கானாவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் ஷர்மிளா தனித்து போட்டியிடுகிறார்.
அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளார்.
மேலும் தனது கட்சி சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் அடுத்த வாரம் முதல் மனு அளிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
- மாநகராட்சி சார்பில் அறிக்கை ஏதும் சமர்ப்பிக்கப்படவில்லை.
- பெங்களூருவில் உள்ள பொது கழிவறைகளை மாநகராட்சி நிர்வகிக்க தவறிவிட்டது.
பெங்களூரு:
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் மக்கள் அடர்த்தி அதிகரித்து வருகிறது. இதனால் நகரின் பல்வேறு இடங்களில் மக்கள் வசதிக்காக கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை பெங்களூரு மாநகராட்சி நிர்வகித்து வருகிறது. ஆனால் பெங்களூருவில் உள்ள பொது கழிப்பறைகள் முறையாக பராமரிக்கப்படாமல் இருப்பதாக கூறி தனியார் நிறுவனம் சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே கடந்த வழக்கு விசாரணையின்போது, பெங்களூருவில் உள்ள பொது கழிப்பறைகளின் நிலை குறித்து ஆய்வு நடத்தவும், அதுதொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்கவும உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால் மாநகராட்சி சார்பில் அறிக்கை ஏதும் சமர்ப்பிக்கப்படவில்லை. இந்த நிலையில் அந்த மனு மீது நேற்று மீண்டும் விசாரணை நடந்தது.
நீதிபதிகள் பிரசன்னா, கிருஷ்ணா எஸ் தீக்ஷித் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்றது. விசாரணையின்போது நீதிபதிகள் இருதரப்பு வாதங்களையும் கேட்டனர். பின்னர் கூறுகையில், பெங்களூருவில் உள்ள பொது கழிப்பறைகளை மாநகராட்சி நிர்வகிக்க தவறிவிட்டது. இதுதொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை.
மேலும் பெங்களூரு போன்ற பெருநகரில் மக்கள் தொகைக்கு ஏற்ப போதிய அளவு பொது கழிப்பறைகளை கட்ட மாநகராட்சி தவறிவிட்டது. மேலும் பொது கழிப்பறை விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்ட அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்த நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் இதுதொடர்பாக விளக்கம் அளிக்க நகர்ப்புற மேம்பாட்டு துறை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதுடன், வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (நவம்பர்) 2-ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
- தெலுங்கானாவின் 119 இடங்களுக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது
- மாநில அரசுக்கு கோவில்களின் நிர்வாகத்தில் தலையிட உரிமை உள்ளதா என கேட்டார்
தெலுங்கானாவில் 2018ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாரத் ராஷ்டிர சமிதி (முன்னர் தெலுங்கானா ராஷ்டிர சமிதி) கட்சியை சேர்ந்த கே. சந்திரசேகர் ராவ் தலைமையிலான கட்சி வெற்றி பெற்று அவர் ஆட்சி அமைத்தார்.
இவ்வருட இறுதிக்குள் தெலுங்கானா மாநிலத்தில் 119 இடங்களுக்கான சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது.
வரவிருக்கும் தேர்தலில் தெலுங்கானாவில் ஆட்சியை பிடிக்க மத்தியில் ஆளும் பா.ஜ.க.வும் தீவிரம் காட்டி வருகிறது. இதனையொட்டி அம்மாநிலத்தில் உள்ள நிஜாமாபாத் நகரில் அக்கட்சி ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
தனது நீண்ட உரையில் கே.சி.ஆர். ஆட்சியை விமர்சித்த மோடி, தமிழ்நாட்டின் ஆளும் தி.மு.க.வையும் தாக்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:
தமிழ்நாட்டில் இந்து கோவில்களை தி.மு.க. அரசாங்கமே எடுத்து நடத்தி வருகிறது. அரசின் முழு கட்டுப்பாட்டில் கோவில்கள் உள்ளன. அவ்வாறு அவர்கள் செய்யும் போது கோவில் சொத்துக்கள் நிலங்கள், வீடுகள், செல்வங்கள் மற்றும் பக்தர்கள் வழங்கும் காணிக்கைகள் கொள்ளை போவதையும் தடுக்க முடியாமல் அரசே அக்கொள்ளைக்கு துணை நிற்கிறது. கோவில்களை மாநில அரசாங்கமே எடுத்து நடத்த அரசுக்கு உரிமை உள்ளதா? மாநிலத்தில் உள்ள சிறுபான்மையினரின் வழிபாட்டு இடங்களை அரசு தொடுவதில்லை. ஆனால், தொன்று தொட்டு இருந்து வரும் இந்துக்களின் கோவில் நிர்வாகத்தில் மட்டும் தி.மு.க. அரசு தலையிடுவது ஏன்? தனது கூட்டணி கட்சியான தி.மு.க. இவ்வாறு செய்வதை காங்கிரஸ் தட்டி கேட்குமா? இந்துக்களுக்கே கோவில் நிர்வாகத்தை திருப்பி அளிக்கும்படி தி.மு.க.வை கேட்குமா?
இவ்வாறு மோடி கேள்வி எழுப்பினார்.
கோவில்களின் மாநிலம் என அழைக்கப்படும் தமிழ்நாட்டில் 1000 வருடத்திற்கு மேற்பட்ட கோவில்கள் மட்டுமே 400க்கும் மேல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்ற தங்கள் கட்சிக்கு பா.ஜனதா ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
- தெலுங்கானா வளர்ச்சி திட்டங்களுக்காக மத்திய அரசு கொடுக்கும் நிதியை தெலுங்கானா அரசு கொள்ளையடித்து வருகிறது.
நிஜாமாபாத்:
பிரதமர் மோடி நேற்று தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்துக்கு சென்றார். அங்கு நடந்த பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். அதில் அவர் பேசியதாவது:-
நான் ஒரு ரகசியம் சொல்கிறேன். ஐதராபாத் மாநகராட்சி தேர்தலுக்கு முன்பெல்லாம், தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் என்னை வரவேற்க வருவார். அந்த தேர்தலுக்கு பிறகு அவர் வரவேற்க வருவது இல்லை.
திடீரென்று என்ன கோபம்? ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அப்போது, சந்திரசேகர ராவ் என்னை டெல்லிக்கு வந்து சந்தித்தார்.
ஒரு அழகிய சால்வையை போர்த்தி எனக்கு மரியாதை செய்தார். பிறகு அவர், பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர விரும்புவதாக தெரிவித்தார். பதிலுக்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டேன். ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்ற தங்கள் கட்சிக்கு பா.ஜனதா ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
ஆனால், உங்கள் தவறான செயல்களால், உங்களை கூட்டணியில் சேர்த்துக் கொள்ள முடியாது என்று கூறி, அவரது கோரிக்கையை நிராகரித்து விட்டேன். ஐதராபாத் மாநகராட்சியில் பா.ஜனதா எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தாலும் பரவாயில்லை என்று கூறிவிட்டேன்.
அதன்பிறகுதான் என்னை நேருக்குநேர் சந்திப்பதை சந்திரசேகர ராவ் தவிர்க்க தொடங்கினார். நான் சொல்வது 100 சதவீதம் உண்மை.
தெலுங்கானா ஆட்சிப்பொறுப்பை தன்னுடைய மகன் கே.டி.ராமாராவிடம் ஒப்படைக்க விரும்புவதாகவும் சந்திரசேகர ராவ் என்னிடம் கூறினார். அதற்கு நான், அப்படி செய்யாதீர்கள். இது மன்னர் ஆட்சியல்ல, ஜனநாயகம் என்று கூறினேன்.
தெலுங்கானா வளர்ச்சி திட்டங்களுக்காக மத்திய அரசு கொடுக்கும் நிதியை தெலுங்கானா அரசு கொள்ளையடித்து வருகிறது. கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பாரத ராஷ்டிர சமிதி மறைமுக ஆதரவு கொடுத்தது.
எனவே, தாய்மார்களும், சகோதரிகளும் உஷாராக இருக்க வேண்டும். தெலுங்கானா சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவை ஆதரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, நிஜாமாபாத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில், பிரதமர் மோடி, ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், நிறைவடைந்த திட்டங்களை தொடங்கியும் வைத்தார்.
அவற்றில், தெலுங்கானா சூப்பர் அனல்மின் திட்டத்தின் முதலாவது அலகு திறப்பும் அடங்கும். அந்த ஆலை, 800 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யவல்லது.
மனோகராபாத்தையும், சித்திப்பேட்டையும் இணைக்கும் புதிய ரெயில் பாதை, 2 ரெயில்வே வழித்தடங்களை மின்மயமாக்கும் திட்டம் ஆகியவையும் அடங்கும்.
அந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், இன்னும் சில மாதங்களில், அனைத்து ரெயில் பாதைகளும் 100 சதவீதம் மின்மயமாக்கப்படும் என்று கூறினார்.
- விநாயகர் சதுர்த்தியன்று சிலை வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.
- ஏலம் மூலம் கிடைக்கப்படும் பணம் சொசைட்டி மூலம் பல தொண்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
தெலங்கானா மாநிலம், ஐதராபாத்-பந்தலகுடா கீர்த்தி ரிச்மண்ட் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை வைத்து வழிபடுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தியன்று சிலை வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.
அத்துடன் விநாயகருக்கு லட்டு பிரசாதம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர். இந்நிலையில், விநாயகர் விஜர்சனம் நடைபெறுவதற்கு முன்பு விநாயகருக்கு வைத்து பூஜை செய்யப்பட்ட லட்டு ஏலம் விடப்படும்.
அதன் மூலம் கிடைக்கப்படும் பணம் சொசைட்டி மூலம் பல தொண்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு நடந்த ஏலத்தில் விநாயகருக்கு வைக்கப்பட்ட லட்டு ரூ.1.20 கோடிக்கு ஏலம் போனது. இதனை அதே பகுதியில் வசிக்கும் ஒட்டு மொத்த பொதுமக்கள் ஒன்று சேர்ந்து வாங்கிக் கொண்டனர். கடந்த ஆண்டு விநாயகருக்கு வைக்கப்பட்ட லட்டு ரூ.60.80 லட்சத்திற்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.
- லட்டுவை வாங்குவதில் பக்தர்களிடம் கடும் போட்டி நிலவும்.
- சன் சிட்டியில் விநாயகருக்கு படைக்கப்பட்ட லட்டு ஏலம் விடப்பட்டது.
ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் விநாயகருக்கு லட்டு பிரசாதமாக வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவதும், பின்னர் விநாயகர் சிலைகள் கரைக்கப்படும் நாளில் லட்டு ஏலம் விடப்படுவதும் பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த லட்டுவை வாங்குபவர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைப்பதுடன் ஆரோக்கியம், செல்வச் செழிப்பு கிட்டும் என பக்தர்கள் நம்புகிறார்கள். இதனால் லட்டுவை வாங்குவதில் பக்தர்களிடம் கடும் போட்டி நிலவும்.
இந்த நிலையில் தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தின் புறநகர் பகுதியான பந்தலகுடாவில் உள்ள சன் சிட்டியில் விநாயகருக்கு படைக்கப்பட்ட லட்டு நேற்று ஏலம் விடப்பட்டது.
அந்த லட்டு ரூ.1 கோடியே 26 லட்சத்துக்கு ஏலம் போய் சாதனை படைத்தது. கடந்த ஆண்டு லட்டு ரூ.65 லட்சத்துக்கு ஏலம் போன நிலையில், இந்த முறை அதன் விலை கிட்டத்தட்ட இருமடங்காக உயர்ந்துள்ளது.
அதேபோல் ஐதராபாத்தின் பாலப்பூர் நகரில் விநாயகருக்கு படைக்கப்பட்ட லட்டு ரூ.27 லட்சத்துக்கு ஏலம் போனது. தங்க லட்டு என்று அழைக்கப்படும் 21 கிலோ எடையுள்ள பிரபலமான லட்டுவை தாசரி தயானந்த் ரெட்டி என்பவர் ஏலத்தில் எடுத்தார்.






