என் மலர்
தெலுங்கானா
- பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினை முக்கியமானதாக மாறி உள்ளது.
- பெங்களூருவில் ஒட்டுமொத்தமாக 74 கிலோ மீட்டருக்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
பெங்களூரு:
பெங்களூரு கிருஷ்ணா இல்லத்தில் சல்லகட்டா-கெங்கேரி, பையப்பனஹள்ளி-கே.ஆர்.புரம் இடையிலான மெட்ரோ ரெயில் சேவை தொடக்க விழாவில் பங்கேற்ற முதல்-மந்திரி சித்தராமையா பேசியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி, பெங்களூருவில் 2 மெட்ரோ ரெயில் திட்டங்களை உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் இருந்தபடியே காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைத்துள்ளார். பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினை முக்கியமானதாக மாறி உள்ளது.
இந்த போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு காணும் விதமாக தான் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. பெங்களூரு பையப்பனஹள்ளி-கே.ஆர்.புரம், சல்லகட்டா-கெங்கேரி இடையே கடந்த 9-ந் தேதி மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டாலும், அதிகாரபூர்வமாக அந்த 2 ரெயில் திட்டங்களும் தொடங்கப்பட்டு இருக்கிறது.
பெங்களூருவில் ஒட்டுமொத்தமாக 74 கிலோ மீட்டருக்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. பெங்களூருவில் முதல்கட்டமாக ரூ.42.03 கிலோ மீட்டர் மெட்ரோ ரெயில் திட்டம் ரூ.14,133 கோடியில் முடிக்கப்பட்டு இருந்தது.
இந்த திட்டத்திற்காக கர்நாடக அரசு ரூ.5,630 கோடியை செலவு செய்துள்ளது. 2-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்டம் 75 கிலோ மீட்டர் தூரத்தை கொண்டதாகும். இந்த 2-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தை நிறைவேற்ற ஒட்டுமொத்தமாக ரூ.30 ஆயிரத்து 695 கோடி தேவையாகும். 2-வது கட்ட திட்டத்தில் 32 கிலோ மீட்டருக்கான பணிகள் நிறைவு பெற்றுள்ளது.
நாகசந்திரா-மாதவாரா இடையிலான 3.14 கிலோ மீட்டர் மற்றும் ஆர்.வி.ரோடு-பொம்மசந்திரா இடையிலான 19.15 கிலோ மீட்டர் தூரத்திலான மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றிருக்கிறது. அந்த 2 ரெயில் திட்டங்களும் அடுத்த ஆண்டு (2024) பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். அதுபோல், காலேன அக்ரஹாரா-நாகவாரா இடையிலான 21.26 கிலோ மீட்டர் தூரம் வரையிலான மெட்ரோ ரெயில் திட்டம் 2015-ம் ஆண்டு நிறைவு பெறும்.
இந்ததிட்டங்கள் நிறைவு பெற்றால் பெங்களூருவில் 117 கிலோ மீட்டருக்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும். தினமும் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மெட்ரோ ரெயிலில் பயணிப்பார்கள். வருகிற 2031-ம் ஆண்டுக்குள் பெங்களூருவில் 317 கிலோ மீட்டருக்கு மெட்ரோ ரெயில் சேவை விஸ்தரிக்கப்படும். மெட்ரோ ரெயில் 2-வது கட்ட திட்டத்திற்காக கர்நாடக அரசு ரூ.11 ஆயிரத்து 583 கோடியை ஒதுக்கி உள்ளது. 2-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்டங்களை 2026-ம் ஆண்டுக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சர்ஜாபுரா-ஹெப்பால் இடையிலான 37 கிலோ மீட்டர் மெட்ரோ ரெயில் திட்டம் 3-வது கட்டமாக நிறைவேற்றப்படும். பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினையை தீர்க்கும் விதமாக மெட்ரோ ரெயில் சேவை மாறும். இந்த திட்டங்களை நிறைவேற்ற காரணமாக இருந்த மத்திய அரசு, பிரதமர் மோடி, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
- கஜ்வேல் மற்றும் காமிரெட்டி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட போவதாக சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.
- சந்திரசேகர ராவ் கட்சிக்கு எதிரான போராட்டத்திற்கு எப்போதும் தயங்குவதில்லை என பா.ஜ.க. தொண்டர்கள் நம்புகிறார்கள்.
தெலுங்கானா மாநிலத்தில் நவம்பர் மாதம் 30-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது.
முதல் மந்திரி சந்திரசேகர ராவ் இந்த முறை கஜ்வேல் மற்றும் காமிரெட்டி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் சந்திரசேகரராவை எதிர்த்து போட்டியிட தயாராக இருப்பதாக பா.ஜ.க.வின் தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர் நடிகை விஜயசாந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சந்திரசேகர ராவ் கட்சிக்கு எதிரான போராட்டத்திற்கு எப்போதும் தயங்குவதில்லை என பா.ஜ.க. தொண்டர்கள் நம்புகிறார்கள். எனவே சந்திரசேகரராவுக்கு எதிராக நான் காமரெட்டியில் போட்டியிட வேண்டும் என விரும்புவதில் தவறில்லை.
எம்.எல்.ஏ. தேர்தலில் போட்டியிடுவது எனது நோக்கம் அல்ல என்றாலும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு சில வியூக முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
சந்திரசேகர ராவ் போட்டியிடும் தொகுதியில் முதிராஜ் சமூகத்தை சேர்ந்த வாக்காளர்கள் அதிகம் உள்ளதால் நடிகை விஜயசாந்தியை களமிறக்கவதற்கான கோரிக்கை எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
இது தெலுங்கானா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- காங்கிரஸ் கட்சி நாட்டை கொள்ளையடித்து உள்ளது.
- பூமிக்கடியில், நிலக்கரி வரை அவர்கள் எதனையும் விட்டு வைக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
ஐதராபாத்:
தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவின் மகன் மற்றும் தெலுங்கானாவின் தகவல் தொழில் நுட்பம் மற்றும் தொழில் துறை மந்திரியான கே.டி. ராமராவ், தெலுங்கானா பவனில் பொதுமக்கள் முன் உரையாற்றும்போது, ராகுல் காந்தி நேற்று பேசும்போது பா.ஜ.க.வின் பி-அணி நாங்கள் என கூறினார்.
ஆனால், நாங்கள் பா.ஜ.க.வின் பி-அணி அல்ல. நீங்களே நாட்டின் சி-அணியாக இருக்கிறீர்கள். சி-அணி என்றால் ஷோர் அணி என்று பொருள். நீங்கள் ஏ முதல் இசட் வரை ஊழல் செய்திருக்கிறீர்கள்.
ஏ என்றால் ஆதர்ஷ் ஊழல், பி என்றால் போபர்ஸ் ஊழல், சி என்றால் காமன்வெல்த் ஊழல். இப்படி தொடர்ந்து நாங்கள் கூறினால், இசட் வரை அது செல்லும் என்று அவர் பேசியுள்ளார்.
தொடர்ந்து அவர், காங்கிரஸ் கட்சி நாட்டை கொள்ளையடித்து உள்ளது. வானத்தில், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்தம் முதல், பூமிக்கடியில், நிலக்கரி வரை அவர்கள் எதனையும் விட்டு வைக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
- மொஹமத் முய்சு, அடுத்த மாதம் அதிபராக முறைப்படி பதவியேற்கிறார்.
- அதிபராக பதவியேற்ற முதல் வாரத்தில் மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ வீரர்கள் வெளியேற்றப்படுவார்கள்.
மாலத்தீவில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் மொஹமத் முய்சு வெற்றி பெற்றார். இவர் சீன ஆதரவாளர் ஆவார். அவர் தனது தேர்தல் பிரசாரத்தின்போது மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ படைகள் வெளியேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்தார். மொஹமத் முய்சு, அடுத்த மாதம் அதிபராக முறைப்படி பதவியேற்கிறார்.
இந்த நிலையில் தான் அதிபராக பதவியேற்ற முதல் வாரத்தில் மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ வீரர்கள் வெளியேற்றப்படுவார்கள். இது தூதரக வழிகளில் மேற்கொள்ளப்படும் என்று மொஹமத் முய்சு தெரிவித்தார். மேலும், அவர் கூறும்போது, அதிபராக பதவியேற்ற பிறகு முதல் நாளில் இந்தியாவிடம் தனது படைகளை அகற்றுமாறு கோரப்படும். இதுவே எனது முதன்மையான முன்னுரிமைகளில் ஒன்றாகும். சில நாட்களுக்கு முன்பு இந்திய தூதரை சந்தித்தேன். அப்போது இந்திய படைகள் வெளியேற்றத்தை வலியுறுத்தினேன் என்றார்.
- 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
- தெலுங்கானா மாநிலத்துக்கு நவம்பர் 30-ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது.
ஐதராபாத்:
மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தெலுங்கானா மாநிலத்துக்கு நவம்பர் 30-ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, தெலுங்கானாவில் ஆட்சியைக் கைப்பற்ற ஆளும் கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில், தேர்தலுக்காக மட்டுமே வருபவர் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி என தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவின் மகள் கவிதா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கவிதா கூறுகையில், தெலுங்கானா மாநிலத்தில் தேர்தல் நடக்கும் சூழலில், காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தியும், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் இன்று தெலுங்கானா வருகிறார்கள். அவர்கள் உத்தரவாதம் அளித்து பொய்யான வாக்குறுதிகளை அளிக்கின்றனர். காங்கிரஸ் கட்சி சொல்வதை அவர்கள் செய்யவே மாட்டார்கள். தேர்தல் நேரத்தில் மட்டும் ராகுல் காந்தி வருவதால் அவரை தேர்தல் காந்தி என்றே அழைப்பேன் என தெரிவித்துள்ளார்.
- கூட்டணி குறித்து ஜனசேனாவுடன் தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர்கள் பேச்சு வார்த்தை நடத்துவார்கள்.
- தெலுங்கானா மாநிலத்தில் டார்கெட் 75 என்ற இலக்குடன் பா.ஜ.க. சட்டமன்ற தேர்தலில் களமிறங்கியுள்ளது.
தெலுங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 30-ந் தேதி நடக்கிறது. இதில் ஆளும் சந்திரசேகரராவ் கட்சி காங்கிரஸ் பா.ஜ.க போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில் ஆந்திர முன்னாள் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும் களத்தில் இறங்கப் போவதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெலுங்கானா மாநில தெலுங்கு தேசம் கட்சி தலைவர் காசானி கூறியதாவது
தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி 87 இடங்களில் போட்டியிடும்.
விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். முதல் பட்டியலில் 30 வேட்பாளர்களின் பெயர்கள் இருக்கும்.
2-வது வேட்பாளர் பட்டியல் உடன் கட்சியின் தேர்தல் அறிக்கையும் வெளியிடப்படும். தெலுங்கானா மாநிலத்தில் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியுடன் தெலுங்கு தேசம் கூட்டணி அமைக்கும்.
கூட்டணி குறித்து ஜனசேனாவுடன் தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர்கள் பேச்சு வார்த்தை நடத்துவார்கள்.
தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.வும் நடிகருமான என்.டி. ராமராவின் மகன் நந்தமுரிபாலகிருஷ்ணா தலைமையில் போட்டியிடுவோம். அவர் மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
தெலுங்கானா மாநிலத்தில் டார்கெட் 75 என்ற இலக்குடன் பா.ஜ.க. சட்டமன்ற தேர்தலில் களமிறங்கியுள்ளது. பா.ஜ.க. கூட்டணியில் தெலுங்கு தேசம், நடிகர் பவன் கல்யாண் கட்சிகள் இடம்பெறும் என பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த நிலையில் தெலுங்கு தேசம் கட்சி போட்டியிட போவதாக அறிவித்துள்ளது பா.ஜ.க. தலைவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ், அங்கு ஆட்சியை பிடிக்க போராடி வருகிறது
- குடும்ப ஊழல் மாநிலம் தாண்டி டெல்லி வரை பரவியிருக்கிறது
இந்தியாவின் தெலுங்கானா மாநில 119 சட்டசபை இடங்களுக்கான தேர்தல் வரும் நவம்பர் 30 அன்று நடைபெறவுள்ளது. இந்த தேர்தலின் முடிவுகள் டிசம்பர் 3 அன்று வெளியிடப்படும்.
தற்போது தெலுங்கானாவில் பாரத் ராஷ்டிர சமிதி (Bharat Rashtra Samithi) கட்சியின் தலைவர் கே. சந்திரசேகர் ராவ் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது.
இத்தேர்தலில் பி.ஆர்.எஸ். கட்சியை ஆட்சியிலிருந்து அகற்றி புதியதாக ஆட்சி அமைக்க காங்கிரஸ் மற்றும் மத்தியில் ஆளும் தற்போதைய பா.ஜ.க. ஆகிய இரு தேசிய கட்சிகளும் தீவிரமாக போராடி வருகின்றன.
இரு கட்சியின் முக்கிய தலைவர்களும் இதற்காக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தெலுங்கானாவின் கரிம் நகர் மாவட்டத்தில் உள்ள ஹுசுராபாத் (Huzurabad) பகுதியில் தெலுங்கானா பா.ஜ.க. ஏற்பாடு செய்திருந்த ஒரு பொதுக்கூட்டத்தில் இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:
கடந்த 10 வருடங்களில் தெலுங்கானாவின் வளர்ச்சி ஒரு குடும்பத்திற்கான வளர்ச்சியாக மாறி விட்டது. எங்கும் கே.சி.ஆர். குடும்பத்தின் ஆதிக்கம் தெரிகிறது. தெலுங்கானாவில் மக்களாட்சி நடைபெறவில்லை; தனியார் குடும்ப நிறுவனத்தின் ஆட்சிதான் நடக்கிறது. கே.சி.ஆர். ஆட்சியை நடத்தத்தான் அவருக்கு மக்கள் வாக்களித்தனர்; அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் ஆட்சி நடத்த அல்ல. நான் அவர் குடும்ப உறுப்பினர் எவர் பெயரையும் குறிப்பிட விரும்பவில்லை. மக்கள் அலட்சியப்படுத்தப்படுகிறார்கள். அதிகார துஷ்பிரயோகம் நடைபெறுகிறது. ஊழலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கே.சி.ஆர். குடும்ப ஊழல் ஹைதராபாத்துடன் மட்டுமே நிற்காமல் டெல்லி வரை பரவியிருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
- பாலஸ்தீன பிரச்னை என்பது முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, மனிதாபிமானப் பிரச்சனை.
- காசாவின் ஏழைகள் உங்களுக்கு என்ன தீங்கு செய்தார்கள்?
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை 'பேய்' என்று ஏ.ஐ.எம் ஐ.எம் தலைவர் ஓவைசி கடுமையாக விமர்சனம் செய்தார்.
பாலஸ்தீனியர்களுக்கு எதிராக நடத்தப்படும் அட்டூழியங்களைத் தடுத்து நிறுத்துமாறு பிரதமர் மோடியிடம் நான் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன்.
பாலஸ்தீன பிரச்சனை என்பது முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, மனிதாபிமானப் பிரசனை. எனவே, காசா மக்களுக்கு ஆதரவாக ஒற்றுமை காட்டுமாறு பிரதமரை கேட்டுக் கொள்கிறேன். நெதன்யாகு ஒரு பேய், கொடுங்கோலன், போர்க் குற்றவாளி. காசாவில் 10 லட்சம் பேர் வீட்டை இழந்துள்ளனர்.
உலகமே இதைப் பார்த்து மவுனம் காக்கிறது. காசாவின் இந்த ஏழைகள் உங்களுக்கு என்ன தீங்கு செய்தார்கள்? இந்த விவகாரத்தில் ஒரு தலைப்பட்சமான தகவல் வெளியிடுகின்றனர்.
கடந்த 70 ஆண்டுகளாக இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளராக இருந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தெலுங்கானாவில் ஆட்சிக்கு வந்தால் 93 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் காப்பீடு அளிக்கப்படும்.
- ரூ.400 விலையில் கியாஸ் சிலிண்டர் வழங்கப்படும் என முதல் மந்திரி சந்திரசேகர ராவ் வாக்குறுதி அளித்தார்.
ஐதராபாத்:
தெலுங்கானா சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 30-ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, அங்கு ஆளுங்கட்சியாக உள்ள பாரத ராஷ்டிர சமிதி நேற்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. கட்சித் தலைவரும், முதல் மந்திரியுமான சந்திரசேகர ராவ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தெலுங்கானாவில் பாரத ராஷ்டிர சமிதி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தகுதியுள்ள பயனாளிகளுக்கு ரூ.400 விலையில் சமையல் கியாஸ் சிலிண்டர் வழங்கப்படும். மீதி தொகையை மாநில அரசு ஏற்றுக்கொள்ளும்.
வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள 93 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் காப்பீடு அளிக்கப்படும். அதற்கான பிரீமியம் தொகையை மாநில அரசு செலுத்திவிடும்.
'ஆரோக்கிய ஸ்ரீ' திட்டத்தின்கீழ், தகுதியுள்ள பயனாளிகளுக்கு தலா ரூ.5 லட்சம் சுகாதார காப்பீடு அளிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை ரூ.15 லட்சமாக உயர்த்தப்படும்.
சமூக பாதுகாப்பு ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வரும் ரூ.2,016 மாதாந்திர தொகை, 5 ஆண்டுகளில் ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்படும். முதல் ஆண்டிலேயே ரூ.3,016 ஆக அதிகரிக்கப்படும்.
மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் தற்போதைய ரூ.4 ஆயிரத்து 16-ல் இருந்து 5 ஆண்டுகளில் ரூ.6 ஆயிரத்து 16 ஆக உயர்த்தப்படும்.
விவசாயிகளுக்கான முதலீட்டு பாதுகாப்பு திட்டத்தில், ஒரு ஏக்கருக்கு ஆண்டொன்றுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது. இத்தொகை 5 ஆண்டுகளில் படிப்படியாக ரூ.16 ஆயிரமாக உயர்த்தப்படும்.
நிச்சயமாக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவோம். ஆட்சிக்கு வந்த 6 முதல் 7 மாதங்களிலேயே வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். தனிநபர் வருமானம், மின்சார பயன்பாடு ஆகியவற்றில் தெலுங்கானா முதன்மை மாநிலமாக உருவெடுத்துள்ளது என தெரிவித்தார்.
- பிரம்மாண்ட பிரசாரத்தில் ஈடுபட கே. சந்திரசேகர ராவ் முடிவு.
- பொது கூட்டங்களில் கலந்து கொள்ள சந்திரசேகர ராவ் திட்டம்.
தெலுங்கானா மாநிலத்தில் நவம்பர் 30-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகின்றன. அந்த வகையில், பி.ஆர்.எஸ். கட்சி தலைவரும், தெலுங்கானா மாநில முதலமைச்சருமான கே. சந்திரசேகர ராவ் தனது கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை நாளை அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக பிரம்மாண்ட பிரசாரத்தில் ஈடுபட கே. சந்திரசேகர ராவ் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி நாளை (அக்டோபர் 15) துவங்கி மொத்தம் 41 பொதுக்கூட்டங்களில் பங்கேற்க முதலமைச்சர் சந்திரசேகர ராவ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தேர்தல் பிரசாரத்தினை சித்திப்பெட் மாவட்டத்தில் உள்ள ஹூஸ்னாபாத்தில் கே. சந்திரசேகர ராவ் துவங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அக்டபோர் 16 மற்றும் அக்டோபர் 17-ம் தேதிகளில் ஜங்கோன், புவனகிரி மற்றும் சிர்சிலா மற்றும் சித்திப்பெட் பகுதிகளில் நடைபெற இருக்கும் பொது கூட்டங்களில் சந்திரசேகர ராவ் கலந்து கொள்ள இருப்பதாக தெரிகிறது.
சந்திரசேகர ராவ் நவம்பர் 9-ம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான மனுத்தாக்கல் செய்வார் என்றும் கூறப்படுகிறது. சட்டமன்ற தேர்தலுக்காக ஆளும் பி.ஆர்.எஸ். கட்சி 105 பேர் அடங்கிய வேட்பாளர்களை ஏற்கனவே அறிவித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
- வாழ்க்கையில் வெறுப்படைந்த ஜோதி பாலில் விஷம் கலந்து அவரது மகன்களுக்கு கொடுத்தார்.
- ஜோதி தன்னுடைய சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் பஞ்சாரா ஹில்ஸ் என்.பி. டி. நகரை சேர்ந்தவர் மெனரிகா. இவருடைய மனைவி ஜோதி (வயது 32). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.
தம்பதியின் மகன்கள் அர்ஜுன் (4), ஆதித்யா (2). கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. திருமண வாழ்க்கையால் தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வருவதாக ஆசிரியர் ஜோதி மன வருத்தமடைந்தார்.
வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் நேற்று காலை பாலில் விஷம் கலந்து அவரது மகன்களுக்கு கொடுத்தார். அதனை குடித்த சிறிது நேரத்தில் குழந்தைகள் இருவரும் துடிதுடித்து இறந்தனர்.
இதை பார்த்து அழுது துடித்த ஜோதி தன்னுடைய சேலையால் வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வீட்டுக்கு வந்த அவரது உறவினர்கள் ஜோதி மற்றும் குழந்தைகள் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த பஞ்சாரஹில்ஸ் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆசிரியை மற்றும் குழந்தைகள் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குத்தகைக்கு எடுத்த 5 ஏக்கரில் பயிர் மற்றும் பருத்தி பயிரிட்டு இருந்தார்.
- தெலுங்கானாவில் தொடர்ந்து பெய்த பலத்த மழை மற்றும் காளீஸ்வரம் தடுப்பணையால் அசோக்கின் விவசாய நிலங்களில் மழை நீர் தேங்கியது.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், மந்தினி மண்டலம், வெள்ளிப்பள்ளியை சேர்ந்தவர் அசோக் (வயது 33). இவரது மனைவி சங்கீதா (30). தம்பதிக்கு 5 மற்றும் 4 வயதில் 2 குழந்தைகள் உள்ளனர்.
அசோக் அதே பகுதியை சேர்ந்த வேறு ஒருவரின் 5 ஏக்கர் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்தார்.
குத்தகைக்கு எடுத்த 5 ஏக்கரில் பயிர் மற்றும் பருத்தி பயிரிட்டு இருந்தார். தெலுங்கானாவில் தொடர்ந்து பெய்த பலத்த மழை மற்றும் காளீஸ்வரம் தடுப்பணையால் அசோக்கின் விவசாய நிலங்களில் மழை நீர் தேங்கியது.
விவசாய நிலங்களில் தேங்கிய மழை நீரை வெளியேற்ற அசோக் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். அவரது முயற்சிகள் தோல்வி அடைந்ததால் பயிர்கள் மழை நீரில் மூழ்கி நாசமானது.
பயிரிட முதலீடு செய்த பணம் கூட கிடைக்காமல் அசோக் கடனில் தவித்து வந்தார்.
தெலுங்கானா அரசும் சேதமடைந்த விவசாய பயிர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கவில்லை. இதனால் அசோக் கந்து வட்டிக்காரர்களிடம் பணம் வாங்கினார்.
கந்து வட்டிக்காரர்கள் பணத்தை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுத்தனர். அவர்களின் நெருக்கடியை தாங்க முடியாமல் அசோக் அவரது மனைவி சங்கீதா இருவரும் பூச்சி கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
தாயும் தந்தையும் தற்கொலை செய்து கொண்டதால் அவர்களது 2 குழந்தைகளும் தவித்து வருகின்றனர்.






