search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தெலுங்கானா மாநிலத்தில் மும்முனை போட்டி: பி.ஆர்.எஸ்., பா.ஜ.க., காங்கிரஸ் தீவிரம்
    X

    தெலுங்கானா மாநிலத்தில் மும்முனை போட்டி: பி.ஆர்.எஸ்., பா.ஜ.க., காங்கிரஸ் தீவிரம்

    • தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத் மாநகராட்சியில் நடந்த தேர்தல் மூலம் பா.ஜ.க 2-வது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.
    • தெலுங்கானா மாநிலத்தில் கர்நாடக மாநில பார்முலாவை பயன்படுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் 119 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. தனி பெரும்பான்மை பெற 60 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும்.

    வருகிற நவம்பர் மாதம் 30-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 2014-ம் ஆண்டு மாநிலம் உருவான போது அதிக செல்வாக்கு உள்ள பி.ஆர்.எஸ். கட்சியை சேர்ந்த சந்திரசேகரராவ் ஆட்சியை பிடித்தார்.

    தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் அவர் 3-வது முறையாக ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பல்வேறு விதமான வியூகம் வகுத்து வருகிறார்.

    மாநிலத்தில் அதிக செல்வாக்கு பெற்றுள்ள அவரது கட்சி ஆட்சியைப் பிடிக்கும் வகையில் வேட்பாளர்கள் தேர்வு நடந்து வருகிறது. 115 தொகுதிகளில் அவரது கட்சி வேட்பாளர்கள் நேரடியாக போட்டியிடுகின்றனர்.

    வாக்காளர்களை கவரும் வகையில் தேர்தல் அறிக்கை தயாராகி வருகிறது. சந்திரசேகரராவ் கட்சியில் அவரது மகள் கவிதாவுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் தரப்படுகிறது. இதனால் வாரிசு அரசியல் என்ற பிரசாரத்தை எதிர்க்கட்சிகள் தொடங்கியுள்ளன.

    ஆனாலும் அவற்றையெல்லாம் உடைத்து மக்களுக்கான நலத்திட்டங்கள் மூலம் மீண்டும் ஆட்சியை பிடிக்க தீவிர பிரசாரத்தில் இறங்கி உள்ளனர்.

    தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத் மாநகராட்சியில் நடந்த தேர்தல் மூலம் பா.ஜ.க 2-வது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.

    கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி 2 இடங்களில் நடந்த பொதுக்கூட்டங்களில் பேசினார். தொடர்ந்து அமித்ஷா மத்திய மந்திரிகளும் பிரசார ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

    தெலுங்கானாவில் டார்கெட் 75 என்ற இலக்குடன் பா.ஜ.க. களமிறங்குகிறது. நடிகைகள் விஜயசாந்தி, ஜெயசுதா உள்ளிட்ட 25 வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசின் திட்டங்கள் மூலம் வாக்குகளை பெறுவதற்கு முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.

    தெலுங்கானா மாநிலத்தில் கர்நாடக மாநில பார்முலாவை பயன்படுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. கடந்த மாதம் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இந்த மாநிலத்தில் நடத்தப்பட்டது.

    அப்போது பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2500, ரூ.500-க்கு சமையல் கியாஸ் சிலிண்டர், பெண்களுக்கு இலவச பஸ் பயணம் மற்றும் விவசாயிகளுக்கு உதவி தொகை என 6 முக்கிய வாக்குறுதிகளை சோனியா காந்தி அறிவித்தார். இதன் மூலம் பெண்கள் வாக்குகளை எளிதாக கவர முடியும் என காங்கிரஸ் கணக்கிட்டு உள்ளது.

    தெலுங்கானா மாநிலத்தை பொறுத்தவரை தற்போது காங்கிரஸ் கட்சி 3-வது இடத்தில் உள்ளது. தெலுங்கானா ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சர்மிளாவை அந்த கட்சியில் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

    அது நிறைவேறவில்லை. தெலுங்கானா மாநிலத்தில் இந்த சட்டமன்ற தேர்தலில் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. ஆட்சியைப் பிடிக்க ஆளும் பி.ஆர். எஸ். கட்சி, பா.ஜ.க., காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கடும் பிரசார வியூகங்களை வகுத்து வருகின்றனர்.

    Next Story
    ×