என் மலர்
தெலுங்கானா
- ஆய்வின்போது கோவில் வளாகத்தில் புதைக்கப்பட்டு இருந்த பானை ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
- பழங்கால நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் உலக வரைபடத்தில் பனிகிரி இடம் பிடித்துள்ளது.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் , சூரியா பேட்டை மாவட்டம், பனிகிரியில் புத்தர் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆய்வின்போது கோவில் வளாகத்தில் புதைக்கப்பட்டு இருந்த பானை ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டவர்கள் பானையை வெளியே எடுத்தனர். அதில் பழங்காலத்தை சேர்ந்த ஏராளமான ஈய நாணயங்கள் குவிந்து கிடந்தன.
மொத்தம் 3,730 பழங்கால நாணயங்கள் இருந்தன. பானை இருந்த இடத்தின் அருகில் கண்ணாடி மாதிரிகள் மற்றும் பெண்கள் அணியும் நகைகளின் மாதிரிகள் இருந்தன.
ஒரே நேரத்தில் இவ்வளவு பழங்கால நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டது நாட்டில் இதுவே முதல் முறை என அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
பழங்கால நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் உலக வரைபடத்தில் பனிகிரி இடம் பிடித்துள்ளது.
பவுத்த வரலாற்றை இந்த நாணயங்கள் மூலம் தெரிந்து கொள்ள முடியும். இதன் மூலம் உலகின் பல நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளின் கவனம் பனிகிரி புத்த கோவில் மீது விழுந்துள்ளது.
- கடந்த ஆண்டு நடந்த தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் 64 இடங்களை வென்று காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தது.
- 2019 தேர்தலில் சந்திரசேகர ராவ் கட்சி 49.29 சதவீதம், பா.ஜ.க- 19.45 காங்கிரஸ்- 29.48 சதவீத வாக்குகளை பெற்றன.
தெலுங்கானா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இருந்து பிரிந்து 2014-ம் ஆண்டு தனி மாநிலமாக உருவானது. ஐதராபாத், வாரங்கல், கம்மம் உள்ளிட்ட 14 பெரிய நகரங்கள் இந்த மாநிலத்தில் உள்ளன.
2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 3 கோடியே 51 லட்சத்து 93 ஆயிரத்து 978 ஆக உள்ளது. 119 சட்டமன்ற தொகுதிகள் 17 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன.
தெலுங்கானா தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகளில் பயணித்த கே.சந்திரசேகர ராவ் 2001-ம் ஆண்டு தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியை தொடங்கினார். அவரது முன்னிலையில் எடுக்கப்பட்ட போராட்டங்களால் தெலுங்கானா மாநிலம் உருவானது. இதனால் அசைக்க முடியாத தலைவராக சந்திரசேகர ராவ் உருவானார்.
தொடர்ச்சியாக 2 முறை தேர்தலில் வெற்றி பெற்று முதல் மந்திரியாக பதவி வகித்தார்.
கடந்த ஆண்டு நடந்த தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் 64 இடங்களை வென்று காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தது.
சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ். கட்சி 39 இடங்களிலும் பா.ஜ.க-8 இடங்களிலும் வென்றது. தெலுங்கானா மாநிலத்தில் வருகிற மே மாதம் 13-ந் தேதி ஒரே கட்டமாக 17 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் பா.ஜ.க., காங்கிரஸ், பி.ஆர்.எஸ். கட்சி என மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. கடந்த 2019 - ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் கட்சி-9 இடங்களிலும் பாஜக- 4, காங்கிரஸ் -3, இடங்களிலும் வெற்றி பெற்றன.
ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிகள் தெலுங்கானாவில் போட்டியில் இருந்து விலகின.
2019 தேர்தலில் சந்திரசேகர ராவ் கட்சி 49.29 சதவீதம், பா.ஜ.க- 19.45 காங்கிரஸ்- 29.48 சதவீத வாக்குகளை பெற்றன.
தென்னிந்தியாவில் கேரளம், தமிழ்நாடு, ஆந்திரா ஆகியவற்றை விட தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க. கூடுதல் கவனம் செலுத்துகிறது. சட்டமன்றத் தேர்தலில் டார்கெட் 75 இலக்குடன் களமிறங்கிய பா.ஜ.க., இந்த தேர்தலில் அதிக இடங்களில் வெல்லும் இலக்குடன் தேர்தல் பணியில் விறுவிறுப்பாக களம் இறங்கியுள்ளது.
பெண்களுக்கான பல்வேறு சலுகைகளை அறிவித்து முதன் முறையாக தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்துள்ளது. முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார்.
கட்சிக்கு புதியவரான ரேவந்த் ரெட்டி பாராளுமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளை வெல்வதன் மூலம் கட்சியில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
முக்கிய பிரமுகர்கள் கட்சியில் இருந்து ஓட்டம், வேட்பாளர்கள் பின்னடைவு, ஜெயிலில் மகள் என பல்வேறு சிக்கலில் உள்ள சந்திரசேகர ராவ் பாராளுமன்ற தேர்தல் வெற்றியின் மூலம் தனது செல்வாக்கை மீண்டும் நிரூபிக்க தீவிரமாக செயல்பட்டுகிறார்.
சந்திரசேகர ராவ் மற்றும் அவருடைய மகன் இருவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் தெலுங்கானாவில் மண்ணின் மைந்தர் என்ற கோஷத்துடன் புறப்பட்ட பி. ஆர்.எஸ்.கட்சி இந்த தேர்தலில் ஓரங்கட்டப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது தெலுங்கா னாவை பொருத்தவரை காங்கிர சுக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
- தொழிற்சாலையில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- தீ மளமளவென பிற இடங்களுக்கும் பரவியதில் பலர் தீயில் சிக்கினர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தை அடுத்துள்ள சங்காரெட்டி மாவட்டம், சந்தாபூர் எனும் ஊரில் ரசாயன தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இந்த தொழிற்சாலையில் நேற்று மாலை 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தொழிற்சாலையில் திடீரென ரசாயன டேங்கர் வெடித்து தீப்பற்றியது.
தீ மளமளவென பிற இடங்களுக்கும் பரவியதில் பலர் தீயில் சிக்கினர். இந்த கோர விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் சங்காரெட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- குரங்குகள் செத்து மிதந்த தொட்டியில் இருந்து ஒரு வாரமாக பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகிக்கப்பட்டுள்ளது.
- தண்ணீரை குடித்த பொதுமக்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தெலுங்கானா:
தெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டம் நந்திகொண்டாவில் குடிநீர் பயன்பாட்டிற்காக தொட்டியில் இருந்து திறக்கப்பட்ட நீரில் துர்நாற்றம் வீசியது. இதையடுத்து தண்ணீர் தொட்டியில் இறங்கி பார்த்தபோது அழுகிய நிலையில் 30க்கும் மேற்பட்ட குரங்குகள் செத்து மிதந்தன.
குரங்குகள் செத்து மிதந்த தொட்டியில் இருந்து ஒரு வாரமாக பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகிக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் குடிக்க தொட்டிக்குள் இறங்கிய குரங்குகள் மேலே வர முடியாமல் இறந்திருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தண்ணீரை குடித்த பொதுமக்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தண்ணீர் தொட்டியில் குரங்குகள் செத்து மிதந்ததன் பின்னணி குறித்து நந்திகொண்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விடுவதாக ஐதராபாத் கிழக்கு மண்டல அதிரடிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- புகாரின் பேரில் போலீசார் ஐதராபாத்தில் உள்ள குடோனுக்குள் நுழைந்து அதிரடி சோதனை நடத்தினர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் மர்ம கும்பல் ஒன்று கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விடுவதாக ஐதராபாத் கிழக்கு மண்டல அதிரடிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
புகாரின் பேரில் போலீசார் ஐதராபாத்தில் உள்ள குடோனுக்குள் நுழைந்து அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கட்டுக்கட்டாக கள்ள நோட்டுகள் இருப்பதை கண்டு பிடித்தனர்.
கள்ள நோட்டு அச்சடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.36.35 லட்சம் கள்ள நோட்டு அச்சடிக்க பயன்படுத்திய எந்திரம் மற்றும் பேப்பர்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
- பா.ஜனதா சுமார் 10 தொகுதிகளில் பிஆர்எஸ் கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது.
- பிஆர்எஸ் அறிவித்த வேட்பாளரை, காங்கிரஸ் கட்சி அதே தொகுதியில் வேட்பாளராக அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு தெலுங்கானா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் கே. சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சி தோல்வி அடைந்தது. இதனைத் தொடர்ந்து அந்தக் கட்சியிலிருந்து முக்கியமான தலைவர்கள் வெளியேறி காங்கிரஸ் மற்றும் பா.ஜனதாவில் இணைந்தனர்.
மக்களவைத் தேர்தலை கணக்கில் கொண்டு தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என அவர்கள் வெளியேறி பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
இந்த நிலையில் சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சியில் இருந்து வெளியேறிய பெரும்பாலான தலைவர்களுக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் வாய்ப்பு அளித்துள்ளன.
மொத்தம் 17 தொகுதிகளில் 10 தொகுதிகளில் பிஆர்எஸ் கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு பாரதிய ஜனதா கட்சி போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளது. அதில் பி.ஆர்.எஸ். கட்சியின் முன்னாள் தலைவர் எட்டாலா ராஜேந்தரும் அடங்குவார்.
2021-ம் ஆண்டு பா.ஜனதா கட்சியில் இவர் இணைந்தார். இதனால் பிஆர்எஸ் இவரை கட்சியில் இருந்து நீக்கியது. இந்த நிலையில் மல்காஜ்கிரி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதைத் தவிர பி.ஆர்.எஸ். கட்சியில் இருந்து வெளியேறி கட்சியில் இணைந்த சில மணி நேரத்தில் பலர் பா. ஜனதா கட்சியின் வேட்பாளர் பட்டியலில் இடம் கிடைத்துள்ளனர்.
ஜகீராபாத் பி.ஆர்.எஸ். எம்.பி. கட்சியிலிருந்து விலகி பா.ஜனதா கட்சியில் இணைந்தார். இணைந்த சில மணி நேரத்தில் பாரதிய ஜனதா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பி.ஆர்.எஸ். எம்.பி. ராமுலு மகன் பாரத் நகர்குர்னூல் தொகுதியில் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ராமுலு தனது மகனுடன் கட்சியிலிருந்து விலகி பா.ஜனதாகட்சியில் இணைந்த சில மணி நேரத்திலேயே அக்கட்சியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதே வகையில்தான் அரூரி ரமேஷ் வாரங்கல் தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
இதே அடிப்படையில்தான் காங்கிரஸ் கட்சி பிஆர்எஸ் தலைவர்களை வரவேற்று உள்ளது. செவால்லா எம்.பி. ரஞ்சித் ரெட்டி பிஆர்எஸ் சார்பில் வெற்றி பெற்றிருந்தார். தற்போது காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
பிஆர்எஸ் கட்சி சார்பில் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற தனம் நாகேந்தர் எம்எல்ஏ தற்போது செகந்திராபாத் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்டுள்ளார்.
முன்னாள் பிஆர்எஸ் மந்திரி பட்னம் மகேந்தர் ரெட்டியின் மனைவி சுனிதா மகேந்தர் ரெட்டி விகார்பத் மாவட்ட பஞ்சாயத்து தலைவராக உள்ளார். தற்போது காங்கிரஸ் கட்சி சார்பில் மல்காஜ்கிரி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்
பிஆர்எஸ் கட்சி வாரங்கல் தொகுதியில் கடியம் காவியாவிற்கு வாய்ப்பு வழங்கியது. ஆனால் அவர் அங்கிருந்து காங்கிரஸ் கட்சிக்கு சென்று அதே தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்டுள்ளார். இவரது தந்தை கடியம் ஸ்ரீஹரி பிஆர்எஸ் சார்பில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் எம்.எல்.ஏ.-வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது
சந்திரசேக ராவின் கட்சி முதலில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி என்ற பெயரில் தெலுங்கானா மாநிலத்தில் ஆதிக்கம் செலுத்தியது. இரண்டு முறை முதல்வராக இருந்தார்.
தேசிய அளவிலான தலைவர் என்ற பார்வை ஏற்படுத்த விரும்பிய அவர், தனது கட்சியின் பெயரை பாரத் ராஷ்டிரிய சமிதி என மாற்றினார். இந்த முயற்சி அவருக்கு கை கொடுக்கவில்லை. சட்டமன்றத் தேர்தலில் அவரை படுதோல்வி ஆக்க செய்தது.
மேலும் ஊழல் குற்றச்சாட்டு அவரது மகள் கே கவிதா டெல்லி மாநில மதுபான கொள்கை வழக்கில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு ஆகியவை பின்னடைவை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
- சட்டமன்ற தேர்தலின் போது சந்திரசேகர ராவ் கட்சி தோல்வியை சந்தித்தது.
- காவ்யா மீண்டும் வாரங்கல் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சந்திரசேகர ராவ் ஆட்சியில் துணை முதல் மந்திரியாக இருந்தவர் கடியம் ஸ்ரீ ஹரி.
இவரது மகள் கடியம் காவ்யா. சட்டமன்ற தேர்தலின் போது சந்திரசேகர ராவ் கட்சி தோல்வியை சந்தித்தது. காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
இதனால் சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ். கட்சியிலிருந்து தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்து வருகின்றனர்.
கடியம் ஸ்ரீ ஹரியன் மகள் காவ்யா வாரங்கல் தொகுதியில் போட்டியிட பி.ஆர்.எஸ். கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார்.
அவர் திடீரென போட்டியில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தார். காவ்யா மீண்டும் வாரங்கல் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நில பிரச்சினை சம்பந்தமாக பழங்குடியினர் இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது.
- இன்ஸ்பெக்டரை குறிவைத்து பழங்குடியின வாலிபர்கள் சிலர் தாக்கி கொண்டே இருந்தனர்.
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் சத்துப்பள்ளி மண்டலம் ராய பாலம் கிராமத்தில் பழங்குடியினர்கள் வசித்து வருகின்றனர்.
நில பிரச்சினை சம்பந்தமாக பழங்குடியினர் இரு தரப்பினர் இடையே நேற்று தகராறு ஏற்பட்டது.
இதனை அறிந்த சத்து பள்ளி போலீசார் பழங்குடியினருக்கு இடையே ஏற்பட்ட மோதலை தடுக்க அங்கு வந்தனர். இரு தரப்பினரையும் ஒருங்கிணைத்து பிரச்சினைக்கு தீர்வு காண முயன்றனர்.
அப்போது ஆத்திரம் அடைந்த பழங்குடியினரின் ஒரு தரப்பினர் கம்புகளால் போலீசாரை தாக்கினர். அதிலும் குறிப்பாக இன்ஸ்பெக்டர் ஒருவரை பைக்கில் இருந்து கீழே இழுத்து தள்ளினர். அவரை கம்பு மற்றும் கைகளால் புரட்டி எடுத்தனர். அங்கிருந்த போலீசாரால் இதை தடுக்க முடியவில்லை.
இன்ஸ்பெக்டரை குறிவைத்து பழங்குடியின வாலிபர்கள் சிலர் தாக்கி கொண்டே இருந்தனர்.
இதனால் போலீசார் இன்ஸ்பெக்டரை மீட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதில் இன்ஸ்பெக்டர் உட்பட மேலும் சில போலீசார் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
பழங்குடியினர் குறிப்பாக ஒரு இன்ஸ்பெக்டரை மட்டும் குறிவைத்து அதிக அளவில் தாக்கியது ஏன் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்ல. இன்ஸ்பெக்டரை குறி வைத்து தாக்கியதில் சதி செயல் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்ஸ்பெக்டரை பழங்குடியினர் விரட்டி தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
- கருப்புப் பண ஒழிப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? கருப்புப் பண ஒழிப்பு என்ன ஆனது?
- ஆளுநர்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று கூறுவதற்கு பதில், அரசியலமைப்பின்படி செயல்பட வேண்டும்
ஐதராபாத்தில் நடைபெற்ற சட்டப்பல்கலைக்கழக கருத்தரங்கில் உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், "நவம்பர் 8, 2016ஆம் ஆண்டு என்ன நடந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அப்போது பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வரப்பட்டது. அதன்பின்பு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களில் 98% திரும்ப வந்துவிட்டது. கருப்புப் பண ஒழிப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? கருப்புப் பண ஒழிப்பு என்ன ஆனது? கருப்புப் பணத்தை வெள்ளையாக்க பண மதிப்பிழப்பு ஒரு நல்ல வழி என்று நினைக்கின்றேன்.
அதன் பிறகு வருமானவரித்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. பண மதிப்பிழப்பு சாதாரண மக்களையே நெருக்கடிக்கு ஆளாக்கியதால் அது தொடர்பான வழக்கில் மாறுபட்ட தீர்ப்பை தந்தேன்
மேலும், சமீபகால நிகழ்வுகளை பார்க்கும் போது, மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பதாலும், அவர்களின் பிற நடவடிக்கைகளினாலும், உச்ச நீதிமன்ற வழக்குகளில் ஆளுநர்கள் முக்கிய பேசுபொருளாக இருக்கின்றனர். இது ஆரோக்கியமான போக்கு அல்ல. ஆளுநர் பதவி என்பது முக்கியமான அரசியலமைப்பு பதவியாகும். ஆளுநர்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று கூறுவதற்கு பதில், அரசியலமைப்பின்படி செயல்பட வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
- காங்கிரஸ், பா.ஜ.க என்ற பலமான அரசியல் எதிரிகளை தேர்தல் களத்தில் சந்திக்க முடியாமல் பி.ஆர்.எஸ் கட்சி திணறி வருகிறது.
- சந்திரசேகரராவ் கட்சி முக்கிய தலைவர்களை இழுக்கும் வேலையில் காங்கிரஸ், பா.ஜ.க. தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகர ராவ் மிகப்பெரிய அரசியல் சக்தியாக வலம் வந்தார்.
ஆளும் கட்சியாக இருந்த சந்திரசேகரராவின் பாரத் ராஷ்டிரீய சமிதி கட்சி கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியை இழந்தது. அதன்பிறகு பிறகு கட்சி நிலைகுலைந்து விட்டது.
சந்திரசேகரராவின் மகள் கவிதா டெல்லி மதுபான ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார். அவருக்கு வீட்டு சாப்பாடு வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்திரசேகரராவ் மன உளைச்சல் அடைந்துள்ளார்.
இந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க. வேட்பாளர்கள் அறிவிக்க திணறி கொண்டிருந்த நேரத்தில் முதல் ஆளாக 17 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார்.
சந்திரசேகரராவின் பி.ஆர்.எஸ். கட்சியின் மூத்த தலைவர்கள், தற்போதைய எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் என பெரும்பாலான தலைவர்கள் ஆளும் கட்சியான காங்கிரசிலும் பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்து வரும் பாரதிய ஜனதா கட்சியிலும் சேர்ந்து வருகின்றனர்.
மேலும் கட்சியில் இருக்கும் வலுவான மூத்த தலைவர்கள் இந்த முறை போட்டியிட தயங்குகின்றனர். இதனால் காங்கிரஸ், பா.ஜ.க. என்ற பலமான அரசியல் எதிரிகளை தேர்தல் களத்தில் சந்திக்க முடியாமல் பி.ஆர்.எஸ். கட்சி திணறி வருகிறது.
இந்நிலையில் பி.ஆர்.எஸ். கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் போட்டியிலிருந்து விலகத் தொடங்கியுள்ளனர்.
சந்திரசேகரராவ் முதல் மந்திரியாக இருந்தபோது துணை முதல் மந்திரியாக இருந்தவர் ஸ்ரீஹரி. அவரது மகள் காவ்யா, வாரங்கல் தொகுதி பி.ஆர்.எஸ். வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.
சந்திர சேகரராவின் ஆட்சியில் நடந்த ஊழல் தொடர்பாக வரும் புகார்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களின் தொலைபேசி ஒட்டு கேட்பு விவகாரம் ஆகியவை கட்சிக்கு மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்தி இருப்பதால் தேர்தலில் போட்டியிடப் போகவில்லை என அவர் கூறியுள்ளார்.
இதேபோல் மேலும் சில வேட்பாளர்கள் போட்டியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளனர்.
சந்திரசேகரராவ் கட்சி முக்கிய தலைவர்களை இழுக்கும் வேலையில் காங்கிரஸ், பா.ஜ.க. தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
வலுவான வேட்பாளர்கள் எல்லோரும் காங்கிரஸ் பா.ஜ.க.வுக்கு தாவிய நிலையில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் போட்டியிலிருந்து விலகத் தொடங்கி இருப்பது சந்திரசேகரராவ் கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர் பரிதவிப்பில் உள்ளார்.
- தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்த கேசிஆருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
- போட்டியில் இருந்து விலகியதற்காக தலைவர் மற்றும் பிஆர்எஸ் ஆர்வலர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
தெலுங்கானா மாநிலம் வாரங்கல் தொகுதியில் சந்திரசேகரராவின் பாரத் ராஷ்டிர சமிதியின் (பிஆர்எஸ்) வேட்பாளராக முன்னாள் துணை முதல்வர் கடியம் ஸ்ரீஹரியின் மகள் காவ்யா காடியம் அறிவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் அவர் தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
சந்திரசேகரராவுக்கு எழுதிய கடிதத்தில், காவ்யா தனது முடிவின் பின்னணியில் முந்தைய பிஆர்எஸ் ஆட்சிக்கு எதிரான சமீபத்திய ஊழல் மற்றும் தொலைபேசி ஒட்டுக்கேட்பு குற்றச்சாட்டுகளை மேற்கோள் காட்டியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகள் கட்சியின் கவுரவத்தைக் குறைத்து விட்டன.
தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்த கேசிஆருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். போட்டியில் இருந்து விலகியதற்காக தலைவர் மற்றும் பிஆர்எஸ் ஆர்வலர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என அவர் கூறியுள்ளார்.
- பா.ஜ.க. சார்பில் சமூக தன்னார்வலரான மாதவி லதா என்பவரை பா.ஜ.க வேட்பாளராக அறிவித்துள்ளது.
- ஐதராபாத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் யார் என்பதில் மக்களிடமும் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் தொகுதியில் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் நிறுவனர் சலாவுதீன் ஒவைசி எம்.பி.யாக இருந்தார்.
அவரது மறைவிற்குப் பிறகு தற்போது அந்த கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி தொடர்ந்து இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று வருகிறார்.
இந்த முறை அவரை வெல்ல பா.ஜ.க. சார்பில் சமூக தன்னார்வலரான மாதவி லதா என்பவரை பா.ஜ.க வேட்பாளராக அறிவித்துள்ளது.
இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தின் நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் பாராளுமன்ற தேர்தலிலும் தனது பலத்தை நிரூபிக்க முடிவு செய்துள்ளது.
ஐதராபாத் தொகுதியில் ஒவைசி மற்றும் பா.ஜ.க வேட்பாளரை விட பிரபலமான ஒருவரை களமிறக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
அதன்படி பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை களமிறக்கலாம் என முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக சானியா மிர்சாவிடமும் அவரது குடும்பத்தாரிடமும் காங்கிரஸ் கட்சியினர் பேசி முடிவு செய்துள்ளனர்.
ஒருவேளை சானியா மிர்சா போட்டியிட மறுத்தால் அவரது தந்த இம்ரான் மிர்சாவை களமிறக்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை டெல்லியில் தெலுங்கானாவில் மீதமுள்ள தொகுதி வேட்பாளர்கள் தேர்வு குறித்து மத்திய காங்கிரஸ் தேர்தல் குழு தரப்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
விளையாட்டுத்துறையில் இருந்து அரசியல் துறைக்கு சானியா மிர்சாவை களமிறக்க முயற்சிகள் நடைபெற்று வருவதால் ஐதராபாத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் யார் என்பதில் மக்களிடமும் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.






