என் மலர்tooltip icon

    தெலுங்கானா

    • இரண்டு மீட்புக் குழுக்கள் நிலைமையை ஆராய்வதற்கு சுரங்கப் பாதைக்குள் சென்றுள்ளனர்.
    • பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளும் செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவு.

    தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் அம்ராபாத்தில் சுரங்கப்பாதை ஒன்று இடிந்து விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விபத்தில், பணியில் இருந்த தொழிலாளர்கள் 30 பேர் உள்ளே சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் சிக்கியுள்ளவர்களை மீட்டு வருகின்றனர்.

    நாகர்கர்னூல் மாவட்ட கலெக்டர், தீயணைப்புத் துறை அதிகாரிகள் மற்றும் மீட்பு படையினர் துரிதமாக மீட்பு பணி மேற்கொள்ள வேண்டும் என தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவுறுத்தி உள்ளார்.

    மேலும் அவர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளும் செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    விபத்து குறித்து நாகர்கர்னூல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வைபவ் கைக்வாட் கூறியதாவது:-

    ஸ்ரீசைலம் நீர்தேக்கத்துக்கு அருகில் உள்ள சுரங்கப் பாதையில் இன்று வழக்கமான பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது, அதன் ஒரு பகுதி கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

    நீர் பாசனத் திட்டத்தை மேற்கொண்ட நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு மீட்புக் குழுக்கள் நிலைமையை ஆராய்வதற்கு சுரங்கப் பாதைக்குள் சென்றுள்ளனர். எங்களிடம் தெளிவான தகவல்கள் இல்லை. மீட்புக்குழு வந்த பின்பு நிலைமை குறித்து தெரியவரும்.

    இவ்வாறு கூறினார்.

    • இவரது மூத்த மகளின் திருமணம் பிக்கனரில் ஒரு திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.
    • புதுமணத் தமபதிகளின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு மீதி திருமண சடங்குகளும் நடத்தி முடிக்கப்பட்டது.

    தெலுங்கானாவில் மகளின் திருமணம் முடிந்ததும் தந்தை மாரடைப்பால் உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

    தெலுங்கானாவின் கம்மாரெட்டி மாவட்டத்தின் பிகானர் பகுதியில் உள்ள ராமேஷ்வர்பள்ளி கிராமத்தில் வசித்தவர் பாலசந்திரம்(56). இவரது மூத்த மகளின் திருமணம் பிக்கனரில் ஒரு திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.

    நேற்று திருமணச் சடங்குகளின் ஒரு பகுதியாக, கன்னியாதானம் சடங்கின்போது அவர் தனது மகளின் கால்களைக் கழுவினார். அதன்பின் சில நிமிடங்களில் அவர் திடீரென மாரடைப்பால் சரிந்தார்.

    திருமண மண்டபத்தில் இருந்த குடும்ப உறுப்பினர்களும் மற்றவர்களும் உடனடியாக பாலசந்திரத்தை கம்மாரெட்டியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    ஆனால் அங்கு சென்றடைந்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

    இந்த துயர சம்பவம் உறவினர்களையும் திருமணத்தில் கலந்துகொண்டவர்களையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியது. இருப்பினும் புதுமணத் தமபதிகளின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு மீதி திருமண சடங்குகளும் நடத்தி முடிக்கப்பட்டது.  

    • உலகம் முழுவதும் 140 நாடுகளை சேர்ந்த இளம்பெண்கள் பங்கேற்க உள்ளனர்.
    • தொடக்கம் மற்றும் நிறைவு விழா போட்டிகள் ஐதராபாத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளன.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் 72-வது உலக அழகி போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் வருகிற மே மாதம் 7-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை 4 வாரங்கள் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    இதற்கு முன்பு மும்பை மற்றும் டெல்லியில் உலக அழகி போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.

    நாட்டில் 3-வது முறையாக தெலுங்கானாவில் உலக அழகி போட்டி நடைபெற உள்ளது.

    இந்த போட்டிகளில் உலகம் முழுவதும் 140 நாடுகளை சேர்ந்த இளம்பெண்கள் பங்கேற்க உள்ளனர்.

    நாட்டில் புதிய மாநிலமாக தோன்றிய தெலுங்கானா கடந்த 10 ஆண்டுகளாக வேகமாக முன்னேறி வருகிறது. தற்போது உலக அழகி போட்டி நடைபெற உள்ளதால் உலக அளவில் தெலுங்கானா, ஐதராபாத் பெருநகர பகுதி பிரபலமாகும். தெலுங்கானா சுற்றுலா துறையுடன் இணைந்து இந்த போட்டிகளை மிஸ் வேர்ல்ட் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.

    தொடக்கம் மற்றும் நிறைவு விழா போட்டிகள் ஐதராபாத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளன.

    மீதமுள்ள போட்டிகள் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் நடத்த பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. இதற்கான இடங்கள் தேர்வு நடந்து வருகிறது.

    • தடுப்பணை கட்டியதில் சந்திரசேகர் ராவ் ஊழலில் ஈடுபட்டார் என்று ராஜலிங்கமூர்த்தி என்பவர் குற்றம் சாட்டியிருந்தார்.
    • இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

    தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறிய நபர் நீதிமன்ற விசாரணைக்கு ஒருநாள் முன்னதாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    2023 ஆம் ஆண்டு காலேஸ்வரம் திட்டத்தின் ஒரு பகுதியாக மேடிகட்டா தடுப்பணை கட்டியதில் சந்திரசேகர் ராவ் ஊழலில் ஈடுபட்டார் என்று ராஜலிங்கமூர்த்தி என்பவர் குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

    இந்நிலையில், நேற்று இரவு ராஜலிங்கமூர்த்தி தனது பைக்கில் சென்று கொண்டிருந்தபோது வழிமறித்த இருவர் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.

    இந்த கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • முஸ்லிம்களுக்கு பணி நேரத்தைக் குறைத்து தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது.
    • தெலுங்கானா அரசின் இந்த அறிக்கைக்கு அம்மாநில பா.ஜ.க. கடும் விமர்சனம் செய்து வருகிறது.

    ஐதராபாத்:

    தெலங்கானாவில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்துவருகிறது. முதல் மந்திரியாக ரேவந்த் ரெட்டி பதவி வகித்து வருகிறார். காங்கிரஸ் கட்சி ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்தே முஸ்லிம்களுக்கு அதிரடி திட்டங்களை அறிவித்து வருகிறது.

    இந்நிலையில், ரம்ஜான் நோன்புக் காலம் தொடங்க உள்ள நிலையில், முஸ்லிம்களுக்கு பணி நேரத்தைக் குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    மார்ச் 1 அல்லது 2-ம் தேதி பிறையைப் பொறுத்து தொடங்கும் ரமலான் மாதத்தில் முஸ்லிம் ஊழியர்கள் ஒரு மணி நேரம் முன்னதாகவே வீடு திரும்பலாம் என்ற உத்தரவை தெலுங்கானா அரசு பிறப்பித்துள்ளது.

    அனைத்து அரசு முஸ்லிம் ஊழியர்கள், ஆசிரியர்கள், ஒப்பந்த ஊழியர்கள், அவுட்சோர்சிங், வாரியம் மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்குப் பொருந்தும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவசரநிலை ஏற்பட்டால் ஊழியர்கள் தங்கியிருக்க வேண்டியிருக்கும் என்றும் அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தெலுங்கானா அரசின் இந்த அறிக்கையை அம்மாநில பா.ஜ.க. விமர்சித்து வருகிறது. தெலங்கானா அரசின் இந்த நடவடிக்கை முஸ்லிம்களை திருப்திப்படுத்தும் தந்திரம். நவராத்திரி விரதத்தின்போது இந்துக்களுக்கு இதுபோன்ற சலுகைகள் வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டி வருகிறது.

    • பறிமுதல் செய்யப்பட்ட சேவல்களை கோர்ட்டில் ஒப்படைத்தனர்.
    • பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு போட்டி போட்டு சேவல்களை ஏலம் எடுத்தனர்.

    தெலுங்கானா மாநிலம் மொய்னா பாத் புறநகர் பகுதியில் உள்ள பாஜக எம்.எல்.சிக்கு சொந்தமான பண்ணை வீட்டில் சேவல் பந்தயம் நடத்தினர்.

    போலீசார் பண்ணை வீட்டில் சோதனை நடத்தி 64 பேரை கைது செய்தனர். மேலும் ரூ.30 லட்சம் ரொக்கம், 86 சேவல்கள், கேசினோ நாணயங்கள், 54 கார்களை பறிமுதல் செய்தனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட சேவல்களை கோர்ட்டில் ஒப்படைத்தனர். தற்போது ஆந்திராவில் பறவை காய்ச்சல் பரவி வருவதால் சேவல்களுக்கு நல்ல பராமரிப்பு தேவைப்படுவதால் சேவல்களை ஏலம் விட கோர்ட்டு உத்தரவிட்டது.

    அதன்படி சேவல்கள் நேற்று பொது ஏலம் விடப்பட்டன. பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு போட்டி போட்டு சேவல்களை ஏலம் எடுத்தனர். 86 சேவல்கள் ரூ.16.60 லட்சத்திற்கு ஏலம் போனது. 

    • ஜங்கான் சந்திப்பில் அருகே சாலையோரம் பைக்குகள் நிறுத்தப்பட்டிருந்தது.
    • கட்டுப்பாட்டை இழந்த கார், இருசக்கர வாகனங்கள் மீது மோதியது.

    தெலுங்கானாவின் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த எட்டு பைக்குகள் மீது வேகமாக வந்த கார் மோதிய சிசிடிவி வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஜங்கான் சந்திப்பில் அருகே சாலையோரம் பைக்குகள் நிறுத்தப்பட்டிருந்தது. அவ்வழியே வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனங்கள் மீது மோதியதில், காயமடைந்த மூன்று பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த விபத்தை அடுத்து மதுபோதையில் கார் ஓட்டி வந்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • கத்தியால் குத்திவிட்டு இருவரும் சாவகாசமாக சாலையை கடந்து செல்வதை மக்கள் வேடிக்கை பார்த்து நின்றனர்.
    • இதனால் ஆத்திரமடைந்த தம்பி ராகேஷ், உறவினர் லக்ஷ்மணன் உடன் சேர்ந்து அண்ணனை தாக்க முயன்றார்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் நடுரோட்டில் வைத்து கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட பதறவைக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.

    நேற்று பிப்ரவரி பிப்ரவரி 16 (ஞாயிற்றுக்கிழமை) ஐதராபாத்தின் மேட்சல் (medchal) பகுதியில் உள்ள பரபரப்பான NH 44 தேசிய நெடுஞ்சாலையில் வைத்து இந்த கோர சம்பவம் நடந்துள்ளது. அவ்வழியாக பல வானங்கள் அவ்வேளையில் சென்றும் யாரும் கொலையை தடுக்க முன்வரவில்லை. கத்தியால் குத்திவிட்டு இருவரும் கத்தியுடன் சாவகாசமாக சாலையை கடந்து செல்வதை மக்கள் வேடிக்கை பார்த்து நின்றனர்.

    போலீசார் கூற்றுப்படி உயிரிழந்தவர் 25 வயதான உமேஷ். கத்தியால் குத்தியவர்கள் உமேஷின் சொந்த தம்பி ராகேஷ், மற்றும் உறவினர் லக்ஷ்மணன் என்று தெரியவந்துள்ளது. உமேஷ் குடித்துவிட்டு அடிக்கடி தனது குடும்பத்தினருடன் சண்டை பிடிப்பார் என்று கூறப்படுகிறது.

    இதுகுறித்து தம்பி ராகேஷ் அண்ணனிடம் கேட்டுள்ளார். இதனால் சம்பவம் நடந்த நேற்று, உமேஷ் குடித்துவிட்டு தம்பியுடன் வாக்குவாதம் செய்துள்ளார். கட்டை ஒன்றை எடுத்து தம்பியை உமேஷ் தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தம்பி ராகேஷ், உறவினர் லக்ஷ்மணன் உடன் சேர்ந்து அண்ணனை தாக்க முயன்றார்.

    அச்சமடைந்த உமேஷ் அவர்களிடம் இருந்து தப்பி வீட்டை விட்டு ஓடியுள்ளார். உமேஷை துரத்திச் சென்ற இருவரும் வீட்டில் இருந்து 150 மீட்டர் தொலைவில் உள்ள சாலையில் வைத்து அவரை கத்தியால் குத்தி கொன்றுள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய தம்பியையும் உறவினரையும் தேடி வருகின்றனர்.

    • மோடி குஜராத் முதல்வராவதற்கு முன்பு வரை அவரது சாதி முன்னேறிய சாதியாக இருந்தது.
    • முதலமைச்சரான பிறகு, மோடி ஒரு சட்டத்தை இயற்றி தனது சமூகத்தை பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் சேர்த்தார்.

    பிரதமர் மோடி பிறப்பால் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் அல்ல என்றும், அவரது மனநிலை பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிரானது என்றும் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    ஐதராபாத்தில் தெலுங்கானா காங்கிரஸ் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற இளைஞர் காங்கிரஸ் கூட்டத்தில் ரேவந்த் ரெட்டி பங்கேற்றார்.

    குஜராத்தில் காங்கிரஸ் அரசு நடத்திய சாதி கணக்கெடுப்பு குறித்த பவர்பாயிண்ட் பிரசன்டேஷன் போது பேசிய ரேவந்த் ரெட்டி, மோடி குஜராத் முதல்வராவதற்கு முன்பு வரை அவரது சாதி முன்னேறிய சாதியாக இருந்தது. மோடி தான் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்று கூறிக்கொள்கிறார்.

    உண்மையில் மோடிஜி பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் அல்ல. அவர் சட்டப்பூர்வமாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக (BC) மாற்றப்பட்டுள்ளார். முதலமைச்சரான பிறகு, மோடி ஒரு சட்டத்தை இயற்றி தனது சமூகத்தை பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் சேர்த்தார்.

    தனது (மோடியின்) சான்றிதழில் தான் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் (BC) சேர்ந்தவர் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், அவரது மனநிலை பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிரானது என்று அவர் கூறினார்.

    மோடி பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்றால், 2021 இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏன் நடத்தப்படவில்லை என்றும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மக்கள் தொகை ஏன் கண்டறியப்படவில்லை என்றும் கேள்வி எழுப்பினார். ரேவந்த் ரெட்டி கருத்துக்கு பாஜக, ராகுல் காந்தியின் மதம் குறித்து கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்துள்ளது. 

    • கைதி நீதிபதியிடம் பேச விரும்புவதாகவும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசாரிடம் கைவிலங்கை கழற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.
    • கொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் கைதிக்கு பெண் நீதிபதி ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு கூறினார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், ஜெகத்கிரி குட்டா பகுதியை சேர்ந்த ஒருவரை போலீசார் கொலை முயற்சி வழக்கில் கைது செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணைக்காக கைதியை எல்.பி. நகர், ரங்கா ரெட்டி, 9-வது கூடுதல் மாவட்ட நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். பின்னர் வழக்கு விசாரணை முடிந்து கைதியை செல்ல பள்ளி ஜெயிலில் அடைத்தனர்.

    இந்த நிலையில் நர்சிங்கி போலீசார் அதே கைதியை கொலை வழக்கு சம்பந்தமாக நேற்று அதே கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் கைதிக்கு பெண் நீதிபதி ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு கூறினார்.

    அப்போது கைதி நீதிபதியிடம் பேச விரும்புவதாகவும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசாரிடம் கைவிலங்கை கழற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

    போலீசார் கைவிலங்கை கழற்றி விட்டனர். அப்போது கைதி பெண் நீதிபதியை திட்டி விட்டு காலில் இருந்த செருப்பை கழற்றி நீதிபதி மீது வீசினார்.

    இதனைக் கண்டு ஆத்திரம் அடைந்த வக்கீல்கள் கைதியை வெளியே இழுத்து வந்து சரமாரியாக தாக்கி நையப்புடைத்தனர். அவரை உள்ளூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    மேலும் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் கைதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து வக்கீல்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த சம்பவத்தால் கோாட்டில் பரபரப்பு ஏற்பட்டது.

    • சிவலிங்கம் அருகே மாமிசத்துண்டு ஒன்று இருந்ததால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
    • பாஜக கட்சியினர் இப்பிரச்னையை கையில் எடுத்தனர்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள தப்பாசபுத்ரா பகுதியில் ஆஞ்சநேயர் கோவில் ஒன்று உள்ளது. கடந்த 11ம் தேதி இக்கோவிலில் உள்ள சிவலிங்கம் அருகே இறைச்சி துண்டு ஒன்று இருந்ததால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

    சிவலிங்கம் அருகே இறைச்சி துண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த கோவில் பூசாரி, கோவில் கமிட்டி உறுப்பினர்களுக்கு இதை பற்றி தெரிவித்துள்ளார்.

    கோவிலுக்குள் இறைச்சி துண்டு இருந்ததாக பரவிய செய்தியை கேட்டதும் பாஜக கட்சியினர் இப்பிரச்சனையைக் கையில் எடுத்தனர். இதனால் அபபகுதியில் மதரீதியான பிரச்சனை எழுமா என பொதுமக்கள் அஞ்சினர்.

    இதனையடுத்து, சிவ லிங்கம் சிலை அருகே மாமிசத்துண்டு எப்படி வந்தது எனக் கண்டறிவதற்காக 4 குழுக்கள் அமைத்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

    இந்நிலையில், கோவில் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது, இது ஒரு பூனையின் வேலை எனத் தெரியவந்தது. இறைச்சி துண்டை கோவிலுக்கு உள்ளே பூனை எடுத்துச் சென்றது சிசிடிவி காட்சியின் மூலம் தெரியவந்தது. 

    • மூத்த மகளின் மகன் ஸ்ரீகிருஷ்ணாவை வெல்ஜன் குழுமத்தின் இயக்குநராக நியமித்தார்.
    • சிறுவயதிலிருந்தே தாத்தா தன்னை புறக்கணித்ததாக அவர் குற்றம் சாட்டினார்.

    ஐதராபாத்தில் சொத்துப் பிரச்சனையில் 28 வயது பேரன் தனது தொழிலதிபர் தாத்தாவை 73 முறை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் ஹைட்ராலிக்ஸ் உபகரணங்கள், கப்பல் கட்டுதல், எரிசக்தி மற்றும் தொழில்துறை பயன்பாடுகளில் ஈடுபட்டுள்ள 460 கோடி மதிப்புள்ள வெல்ஜன் குழும நிறுவனங்களின் தலைவராகவும் நிர்வாக இயக்குநராகவும் வி.சி. ஜனார்தன் ராவ் (86 வயது) இருந்தார்.

    இந்நிலையில் அவரை கொலை செய்த குற்றச்சாட்டில் 28 வயது பேரன் பேரன் கீர்த்தி தேஜா கைது செய்யப்பட்டார்.

    முதுகலைப் படிப்புக்குப் பிறகு சமீபத்தில் கீர்த்தி தேஜா அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பியிருந்தார்.

    ஜனார்தன் ராவ் சமீபத்தில் தனது மூத்த மகளின் மகன் ஸ்ரீகிருஷ்ணாவை வெல்ஜன் குழுமத்தின் இயக்குநராக நியமித்தார். அவர் தனது இரண்டாவது மகள் சரோஜினி தேவியின் மகன் கீர்த்தி தேஜாவுக்கு ரூ.4 கோடி மதிப்புள்ள பங்குகளை தந்தார்.

    இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இரவு, அவரும் அவரது தாயார் சரோஜினி தேவியும் தனது தாத்தாவின் வீட்டிற்குச் சென்றனர். தேஜா தனது தாத்தாவிடம் பேசிக் கொண்டிருந்தபோது, அவரது தாயார் தேநீர் தயாரிக்க சமையலறைக்குச் சென்றார்.பேரனுக்கும் தாத்தாவுக்கும் நிறுவனத்தில் இயக்குநர் பதவி தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது.

    வாக்குவாதத்தின் போது, தன்னை நியாயமற்ற முறையில் நடத்தியதாக தாத்தாவை  தேஜா குற்றம் சாட்டினார். சிறுவயதிலிருந்தே தாத்தா தன்னை புறக்கணித்ததாக அவர் குற்றம் சாட்டினார்.

    ஒரு கட்டத்தில், தேஜா பொறுமை இழந்து, தான் கொண்டு வந்த கத்தியால் தனது தாத்தாவை குத்தியதாகக் கூறப்படுகிறது. தாத்தாவை தேஜா 73 முறை குத்தியதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.

    தாத்தாவின் உடலில் பல கத்திக் காயங்கள் இருப்பதாக போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். சம்பவத்தின்போது தேஜாவை தடுக்க அவரது தாயார் சமயலறையில் இருந்து விரைந்தார். ஆனால் தேஜா தனது தாயையும் கத்தியால் குத்தினார்.

    கொலைக்குப் பிறகு, தேஜா கொலையை நேரில் பார்த்த செக்யூரிட்டியை மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். நான்கு கத்திக்குத்து காயங்களுடன் தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜனார்தன் ராவ் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

    தப்பியோடிய பேரன் தேஜா கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். தேஜாவுக்கு போதைப்பழக்கம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    உயிரிழந்த ஜனார்தன் ராவ் பல்வேறு நன்கொடைகளை செய்து வந்தவர். ஏலூரில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கும் பெரும் நன்கொடைகளை வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×