என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை கொட்டி வருகிறது.
    • தொடர்ந்து கனமழை பெய்தால் சோலையார் அணை விரைவில் தனது முழு கொள்ளளவை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வால்பாறை:

    தமிழகத்தில் கடந்த மே மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது.

    இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் அவ்வப்போது கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

    கோவை மாவட்டம் வால்பாறையில் சோலையாறு அணை உள்ளது. இந்த அணை 160 அடிய உயரம் கொண்டது.

    கடந்த மாத இறுதியில் பெய்த மழை காரணமாக ஜூன் 1-ந்தேதி அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டியது.

    பின்னர் மழை சற்று குறைந்ததால் அணைக்கு நீர்வரத்தும் குறைந்து விட்டது. மேலும் மின் உற்பத்திக்கும், பரம்பிக்குளம் அணைக்கும் நீர் திறக்கப்பட்டதால் சோலையாறு அணையின் நீர்மட்டமும் குறைய தொடங்கியது.

    இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி முதல் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை கொட்டி வருகிறது.

    குறிப்பாக சோலையார் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்கிறது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று அணையின் நீர்மட்டம் 116.58 அடியாக இருந்தது. தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரிக்கவே இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 123 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 505 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 879 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    தொடர்ந்து கனமழை பெய்தால் சோலையார் அணை விரைவில் தனது முழு கொள்ளளவை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பொள்ளாச்சி அடுத்த ஆழியாரில் ஆழியார் அணை உள்ளது. இந்த அணையின் மொத்த நீர் மட்டம் 120 அடியாகும். தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அணைக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்துள்ளது.

    நேற்று நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 92.20 அடியாக இருந்தது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்கவே அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்துள்ளது.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 95.50 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 63 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 161 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    கோவை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் மி.மீட்டரில் வருமாறு:

    சின்னக்கல்லார்-75, சோலையார்-59, வால்பாறை பி.ஏ.பி-56, சின்கோனா, வால்பாறை தாலுகா-54, சிறுவாணி அடிவாரம்-23, பொள்ளாச்சி தாலுகா-11, ஆனைமலை தாலுகா-9, கிணத்துக்கடவு தாலுகா-8, மதுக்கரை தாலுகா-5 என மழை பெய்துள்ளது. 

    • உபரி நீர் அளவு குறைக்கப்பட்டதால் குழித்துறை கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு சற்று குறைந்துள்ளது.
    • தொடர் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட பாசன குளங்கள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் முழுவதும் கடந்த 10 நாட்களாக பரவலாக மழை கொட்டி தீர்த்து வந்த நிலையில் நேற்று மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் மட்டும் மழை பெய்தது. பேச்சிப் பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதிகளிலும், மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் பரவலாக சாரல் மழை நீடித்தது. சுருளோட்டில் அதிகபட்சமாக 8.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    மழை சற்று குறைந்ததையடுத்து பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து படிப்படியாக குறைந்து உள்ளது. நீர்வரத்து குறைந்ததையடுத்து பேச்சிப்பாறை அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டு உள்ளது.

    526 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில் தற்போது 394 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. உபரி நீர் அளவு குறைக்கப்பட்டதால் குழித்துறை கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு சற்று குறைந்துள்ளது. இருப்பினும் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருவதால் இன்று 2-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள்.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 45.44 அடி யாக இருந்தது. அணைக்கு 861 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 503 கன அடி தண்ணீர் மதகுகள் வழியாகவும், 394 கன அடி தண்ணீர் உபரியாகவும் திறக்கப்பட்டுள்ளது. பெருஞ்சாணி நீர்மட்டம் 66.25 அடியாக உள்ளது. அணைக்கு 761 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    தொடர் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட பாசன குளங்கள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. இதையடுத்து விவசாயிகள் சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

    • சீஷெல் ஓட்டலின் உரிமையாளர் வேறு ஒருவர் என்று ஆர்யா தெரிவித்துள்ளார்.
    • தரமணியில் உள்ள சீஷெல் ரெஸ்டாரண்ட் உரிமையாளர் குன்ஹி மூசா என்பவரது வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.

    நடிகர் ஆர்யாவிற்கு சொந்தமான சீஷெல் ஓட்டலில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியானதையடுத்து இதுதொடர்பாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.

    சென்னையில் வருமான வரி சோதனை நடக்கும் ஓட்டலுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்த ஓட்டலின் உரிமையாளர் வேறு ஒருவர் என்று ஆர்யா தெரிவித்துள்ளார்.

    நடிகர் ஆர்யாவிற்கு சொந்தமான இந்த ஓட்டல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குன்ஹி மூசா என்பவருக்கு விற்பனை செய்யப்பட்டதாக தெரிகிறது.

    கேரளா தலசேரியை சேர்ந்த குன்ஹி மூசா என்பவருக்கு சொந்தமான சீஷெல் ரெஸ்டாரண்டில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் உள்ள சீஷெல் ரெஸ்டாரண்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது

    சென்னை தரமணியில் உள்ள சீஷெல் ரெஸ்டாரண்ட் உரிமையாளர் குன்ஹி மூசா என்பவரது வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • எங்கள் பள்ளியைச் சுற்றி சுவர் எழுப்பினால், தோட்டம் அமைத்து, தூய்மையாகப் பராமரிக்க முடியும்.
    • ஸ்மார்ட் வகுப்பறையும் அமைத்துக் கொடுத்தீர்கள் என்றால் எங்களின் கனவு நிறைவேறிவிடும் என்று தெரிவித்து இருந்தார்.

    சென்னை:

    புதுக்கோட்டை மாவட்டம் குருங்களூர் கிராமத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் ஞானதர்ஷினி என்ற மாணவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய கடிதம் நாளிதழில் வெளியாகி இருந்தது. அக்கடிதத்தில்,

    மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு, வணக்கம். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குருங்களூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து வருகிறேன். இந்தப் பள்ளியில் விவசாயக் கூலித் தொழிலாளர்களின் மகள்களும், மகன்களும்தான் படித்து வருகிறோம். மாணவர்களுக்கான உதவித்தொகை, நான் முதல்வன் திட்டம், காலை உணவுத் திட்டம் போன்று பல நல்ல திட்டங்களை எங்களுக்காகச் செய்திருக்கிறீர்கள். இதற்காகத் தங்களுக்கு மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

    இதை எங்கள் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டோம். உங்களிடம் இரண்டு கோரிக்கை, எங்கள் பள்ளியைச் சுற்றி சுவர் எழுப்பினால், தோட்டம் அமைத்து, தூய்மையாகப் பராமரிக்க முடியும். அப்படியே ஸ்மார்ட் வகுப்பறையும் அமைத்துக் கொடுத்தீர்கள் என்றால் எங்களின் கனவு நிறைவேறிவிடும் என்று தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில், இக்கடிதத்தை மேற்கோள்காட்டி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எக்ஸ் தள பக்கத்தில்,

    அன்பு மாணவி ரா.ஞானதர்ஷினியின் கனவு நிச்சயம் நிறைவேறும்.

    முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, மாணவியின் இரண்டு கோரிக்கைகளும் விரைவில் நிறைவேற்றப்படும்.

    இன்றே குருங்களூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ளுமாறு மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு ஆணையிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார். 



    • ஒரு லிட்டர் மற்றும் 150 மில்லி குவளை அளவுகளில் நீரினை பெற்றுக்கொள்ளலாம்.
    • முதல் கட்டமாக 50 இடங்களில் சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் தானியங்கி கருவி அமைக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் கட்டணமில்லா குடிநீர் வழங்கும் தானியங்கி இயந்திரங்களின் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

    அதிகளவில் மக்கள் கூடும் இடங்களில் கட்டணமில்லா குடிநீர் வழங்கும் தானியங்கி இயந்திரங்களின் சேவை மெரினாவில் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைக்கப்பட்டது. ஒரு லிட்டர் மற்றும் 150 மில்லி குவளை அளவுகளில் நீரினை பெற்றுக்கொள்ளலாம். தொட்டியில் தண்ணீர் தீர்ந்து போனால், குடிநீர் வாரியத்துக்கு IOT தொழில்நுட்பம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு, உடனடியாகத் தண்ணீர் நிரப்பப்படும்.



    முதல் கட்டமாக 50 இடங்களில் சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் தானியங்கி கருவி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, அடையாறு, கோடம்பாக்கம், வளசரவாக்கம் உள்ளிட்ட மண்டலங்களில் குடிநீர் வழங்கும் தானியங்கி கருவி அமைக்கப்பட்டுள்ளது.

    • சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓடிய நாய் மீண்டும் அதே இடத்திற்கு வந்தது.
    • ரெயில் நடு வழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் ரெயிலில் இருந்து இறங்கி தவித்தபடி நின்றனர்.

    சேலம்:

    ஈரோட்டில் இருந்து சேலம், ஜோலார்பேட்டை வழியாக சென்னைக்கு தினசரி ரெயிலாக ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த ரெயில் நேற்றிரவு 9 மணியளவில் வழக்கம் போல ஈரோட்டில் இருந்து புறப்பட்டு சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்த மாவேலிபாளையத்தை கடந்து மகுடஞ்சாவடி அருகே வந்து கொண்டிருந்தது .

    அப்போது ரெயில் என்ஜின் சக்கரத்தில் இரும்பு துண்டு சிக்கிய நிலையில் தரதரவென சிறிது தூரம் இழுத்து சென்றது. ஏதோ விபரீதம் நடப்பதை அறிந்த ரெயில் என்ஜின் டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார்.

    பின்னர் கீழே இறங்கி சென்று பார்த்தபோது தண்டவாளத்தில் பெரிய அளவிலான இரும்பு துண்டு வைக்கப்பட்டிருந்ததும் அது ரெயில் என்ஜினின் சக்கரத்தில் சிக்கி இருப்பதும் தெரிய வந்தது.

    இதனால் ரெயில் என்ஜின் பழுதானதால் தொடர்ந்து இயக்க முடியாத நிலையில் ரெயில் இருப்பதை அறிந்த என்ஜின் டிரைவர் இது குறித்து ரெயில்வே கோட்ட கட்டுப்பாட்டறைக்கு தகவல் தெரிவித்தார்.

    உடனே அங்கு விரைந்து வந்த ரெயில்வே அதிகாரிகள் மற்றும் சேலம், ஈரோடு ரெயில்வே போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்கும் நோக்கில் பெரிய அளவிலான 10 அடி நீளமுள்ள உடைந்த தண்டவாள துண்டை ரெயில்தண்டவாளத்தின் குறுக்கே மர்ம நபர்கள் வைத்து சென்றது தெரிய வந்தது. தொடர்ந்து மோப்பநாயும் வரவழைத்து ஆய்வு செய்தனர். சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓடிய நாய் மீண்டும் அதே இடத்திற்கு வந்தது.

    இதற்கிடையே ரெயில் நடு வழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் ரெயிலில் இருந்து இறங்கி தவித்தபடி நின்றனர். தொடர்ந்து சேலத்தில் இருந்து மாற்று என்ஜின் கொண்டு வரப்பட்டு அந்த என்ஜின் பொருத்தப்பட்டது.

    பின்னர் 2 மணி நேரம் தாமதமாக இரவு 11.45 மணிக்கு ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லி சென்ற எக்பிஸ்பிரஸ் ரெயில் 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

    இதே போல ஈரோடு மார்க்கமாக சென்னை மற்றும் பெங்களூரு செல்லும் 3 ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. இதனால் அந்த ரெயில்களில் பயணம் செய்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

    இந்த சம்பவம் குறித்து ரெயில்வே டி.எஸ்.பி.பாபு மற்றும் போலீசார் நடத்திய விசாரணையில், இரவு நேரத்தில் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்தி இருக்கலாம் என்றும், மது போதையில் அங்குகிடந்த 10 அடி நீளமுள்ள உடைந்த தண்டவாள துண்டை ரெயில் தண்டவாளத்தின் குறுக்கே வைத்து சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    இதையடுத்து அந்த பகுதி காட்டுப்பகுதி என்பதால் அங்கு கேமராக்கள் இல்லை. ஆனாலும் அருகில் உள்ள காளி கவுண்டம்பாளையம், மாவேலிக்கரை, மகுடஞ்சாவடி பகுதியில் தண்டவாள பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றி திரிந்த நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் அந்த பகுதிகளில் உள்ள உள்ள கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து குடிபோதையில் சுற்றி திரியும் நபர்களை பிடித்து விசாரணை நடத்த உள்ளனர். தொடர்ந்து மர்ம நபர்களை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.

    • மதுரையில் வருகிற 22-ந் தேதி இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடக்கிறது.
    • முறையான ஆவணங்களை சமர்ப்பித்து உரிய வாகன அனுமதி சீட்டினை பெற்று கலந்து கொள்ளலாம்.

    மதுரை:

    மதுரையில் நடக்கும், முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வாகனங்களில் வருபவர்களுக்கு மாநகர போலீசார் சார்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    இதுகுறித்து மதுரை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரையில் வருகிற 22-ந் தேதி இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடக்கிறது. இந்த மாநாடு நடத்துவதற்கு மதுரை ஐகோர்ட்டு பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. மாநகர் வண்டியூர் சுங்கச்சாவடி அருகே இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற இருக்கிறது.

    அதன்படி, வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களை அடையாளம் காணும் பொருட்டு ஒவ்வொரு மண்டலத்தில் இருந்து வரும் வாகனத்திற்கும், தனித்தனி வண்ணங்களில் வாகன அனுமதி சீட்டு, அந்தந்த மாவட்ட, மாநகர போலீசார் மூலம் வழங்கப்பட உள்ளது. முறையான ஆவணங்களை சமர்ப்பித்து உரிய வாகன அனுமதி சீட்டினை பெற்று கலந்து கொள்ளலாம்.

    மாநாட்டில் பங்கேற்பவர்கள் அந்தந்த துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களில் விண்ணப்பித்து, வாகன அனுமதி சீட்டை பெறவேண்டும். தெற்கு மாவட்டங்களான மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு பச்சை நிற அனுமதி சீட்டும், வடக்கு மாவட்டங்களான திருவண்ணாமலை, வேலூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ஆவடி, தாம்பரம், சென்னையிலிருந்து வரும் வாகனங்களுக்கு வெள்ளை நிற அனுமதி சீட்டும் வழங்கப்பட உள்ளன.

    மத்திய மாவட்டங்களான திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சியில் இருந்து வரும் வாகனங்களுக்கு நீல நிற அனுமதி சீட்டும், மேற்கு மாவட்டங்களான கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோவை, சேலம், திருப்பூரில் இருந்து வரும் வாகனங்களுக்கு மஞ்சள் நிற அனுமதி சீட்டும், பிற மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு சிவப்பு நிற அனுமதி சீட்டும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அனுமதி சீட்டு உள்ள வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

    மேலும், வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வரும் வாகனங்கள் அனைத்தும் அனுமதிக்கப்பட்ட வழியாகவே மாநாடு நடைபெறும் இடத்திற்கு வந்து, மாநாடு முடிந்த பிறகு அதே வழியிலேயே திரும்பிச்செல்ல வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இன்று காலை முதல் மழைப்பொழிவு முற்றிலும் குறைந்து வெயில் அடிக்க தொடங்கியதால் அருவிகளுக்கு வரும் தண்ணீர் வரத்தும் சீரானது.
    • வெளியூர்களில் இருந்து வந்திருந்த பல சுற்றுலா பயணிகளும் அருவி நீரில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த 4 நாட்களாக பெய்து வந்த தொடர் மழையின் எதிரொலியாக குற்றால அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    அதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் 2 நாட்களுக்கு பின்பு நேற்று முதல் மெயின் அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் பழைய குற்றால அருவி, ஐந்தருவியில் தடை நீடிக்கப்பட்டிருந்தது.

    இன்று காலை முதல் மழைப்பொழிவு முற்றிலும் குறைந்து வெயில் அடிக்க தொடங்கியதால் அருவிகளுக்கு வரும் தண்ணீர் வரத்தும் சீரானது.

    இதனால் தடை விதிக்கப்பட்டிருந்த பழைய குற்றாலம் மற்றும் ஐந்தருவியிலும் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

    இன்று காலை முதல் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் அனுமதி அளித்த நிலையில் வெளியூர்களில் இருந்து வந்திருந்த பல சுற்றுலா பயணிகளும் அருவி நீரில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

    மேலும் இந்த ஆண்டிற்கான குற்றால சாரல் திருவிழா அடுத்த மாதம் நடத்தப்படு வதற்கான பணிகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக இறங்கி உள்ளது. சாரல் திருவிழா தொடங்கப்படும் தேதி இன்னும் ஒரு சில தினங்களில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

    • படங்களில் பிசியாக நடித்து வந்தாலும், சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான டெவில்ஸ் டபிள் நெக்ஸ்ட் லெவல் படத்தை தயாரித்து இருந்தார்.
    • வரி ஏய்ப்பு புகாரின்போரில் சோதனை நடைபெறுவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ஆர்யா.

    அறிந்தும் அறியாமலும், சர்வம், நான் கடவுள், ஆரம்பம், மதராசப்பட்டினம், சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். பல படங்களில் பிசியாக நடித்து வந்தாலும், சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான டெவில்ஸ் டபிள் நெக்ஸ்ட் லெவல் படத்தை தயாரித்து இருந்தார்.

    இந்த நிலையில், சென்னையில் உள்ள நடிகர் ஆர்யா வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    வரி ஏய்ப்பு புகாரின்போரில் சோதனை நடைபெறுவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

    • கடந்த இரண்டு நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது.
    • வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த 10-ந்தேதியில் இருந்து விறுவிறுவென உயரத் தொடங்கியது. அதன்படி 11-ந்தேதி ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்தையும், 13-ந்தேதி ரூ.74 ஆயிரத்தையும் கடந்தது.

    அன்றைய தினம் விலைதான் வரலாறு காணாத உச்சமாக பார்க்கப்பட்டது. அதற்கு மறுநாளும் விலை உயர்ந்து, மேலும் புதிய உச்சத்தை எட்டியது. நேற்று முன்தினம் விலை சற்று குறைந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்றும் விலை குறைந்திருந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 305-க்கும், ஒரு சவரன் ரூ.74 ஆயிரத்து 440-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.105-ம், சவரனுக்கு ரூ.840-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 200-க்கும், ஒரு சவரன் ரூ.73 ஆயிரத்து 600-க்கும் விற்பனை ஆனது. இதன் மூலம் தங்கம் விலை மீண்டும் ரூ.74 ஆயிரத்துக்கு கீழ் குறைந்து வந்துள்ளது.

    இந்த நிலையில், தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,250-க்கும் சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,000-க்கும் விற்பனையாகிறது. கடந்த இரண்டு நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 122 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    17-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,600

    16-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,440

    15-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,560

    14-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,560

    13-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,360

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    17-06-2025- ஒரு கிராம் ரூ.120

    16-06-2025- ஒரு கிராம் ரூ.120

    15-06-2025- ஒரு கிராம் ரூ.120

    14-06-2025- ஒரு கிராம் ரூ.120

    13-06-2025- ஒரு கிராம் ரூ.120

    • ஒவ்வொருவரரிடமும் 200 வாக்காளர்கள் கட்டுப்பாட்டில் இருந்தால், அவர்களது வளர்ச்சியை யாரும் கட்டுப்படுத்த முடியாது.
    • இந்தியாவிலேயே தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக முதன்முதலில் குரல் கொடுத்தவர் மு.க.ஸ்டாலின்தான்.

    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். மாவட்டத்தில் நடைபெற்று வரும் திட்ட பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

    தொடர்ந்து திருப்பத்தூரில் உள்ள தனியார் திருமண மகாலில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் நடைபெற்ற தி.மு.க. சார்பு அணிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    சார்பு அணி என்பது சாதனை படைக்கும் அணி. நம்முடைய தி.மு.கழகம்தான் சார்பு அணியை சார்ந்திருக்கிறது. சார்பு அணியில் சிறப்பாக செயல்பட்டவர்கள் கழகத்தில் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர். அந்த வகையில் நம்முடைய முதல்வரையே இளைஞரணி தான் உருவாக்கியது. பொதுச் செயலாளரை மாணவரணி உருவாக்கியது. நம் மாநிலம் மட்டுமின்றி மற்ற மாநிலத்துக்கும் உரிமையை மீட்டு கொடுத்தது நமது வழக்கறிஞர் அணி. தேர்தல் நேரங்களில் தகவல் தொடர்பு அணியினர் மிக சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

    ஒவ்வொருவரரிடமும் 200 வாக்காளர்கள் கட்டுப்பாட்டில் இருந்தால், அவர்களது வளர்ச்சியை யாரும் கட்டுப்படுத்த முடியாது. தி.மு.க.வில் 25 அணிகள் உள்ளன. ஆனால் அ.தி.மு.க.வோ 25 அணிகளாக பிரிந்து விட்டது. அக்கட்சி நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு கட்டுப்படுவதில்லை. தற்போது அமித்ஷா கட்டுப்பாட்டில் தான் அ.தி.மு.க. உள்ளது. பா.ஜ.க. சூழ்ச்சி வலையில் பழனிசாமி மாட்டிக்கொண்டார்.

    மும்மொழி கொள்கையை ஏற்காவிட்டால், மத்திய அரசு ரூ.2,500 கோடி தர முடியாது என்றது. நமது முதல்வரும் தேவையில்லை என்றார். தொகுதிகள் மறுசீரமைப்பால் தமிழகத்துக்கு 8 தொகுதிகள் குறையும். இந்தியாவிலேயே தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக முதன்முதலில் குரல் கொடுத்தவர் மு.க.ஸ்டாலின்தான். ஊழலால் தண்டிக்கப்பட்ட கட்சியுடன் கூட்டணி வைத்து கொண்டு தி.மு.க.வை ஊழல் கட்சி என்று அமித்ஷா கூறுகிறார். பா.ஜ.க. ஊழல் பட்டியலை வெளியிட்டால் நீண்டு கொண்டே போகும்.

    ஆட்சியில் அ.தி.மு.க. இருந்திருந்தால் மும்மொழி என்ன, 10 மொழிக் கொள்கையையே ஏற்றுக் கொண்டிருப்பார். ஜெயலலிதா மறைந்த பின்னர் தமிழக உரிமையை பா.ஜ.க.விடம் அ.தி.மு.க. அடகு வைத்துவிட்டது. நமது சார்பு அணியினர் மக்களோடு, மக்களாக நெருங்கி பழக வேண்டும். அரசின் சாதனைகளை சொல்லி கொண்டே இருக்க வேண்டும். மாவட்ட கழக அனுமதி பெற்று தெருமுனை பிரசாரம் செய்ய வேண்டும். நம்மிடம் சிறுசிறு பிரச்சனைகள் இருக்கலாம். அதை அமர்ந்து பேசினாலே தீர்ந்து விடும். வீட்டில் உட்கார்ந்து கொண்டு உறுப்பினர்கள் சேர்க்க வேண்டாம்.

    மக்களை நேரில் சந்தித்து உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். சட்டப்பேரவைத் தேர்தலில் ஒவ்வொரு பூத்திலும் கூடுதல் வாக்குகள் பெற வைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • அணைக்கு வினாடிக்கு 6040 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
    • அணையில் தற்போது 84.41 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    சேலம்:

    மேட்டூர் அணை மூலம் காவிரி டெல்டா பகுதியில் 13 மாவட்டங்களில் சுமார் 17 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் டெல்டா பாசனத்துக்காக ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது வழக்கம்.

    அதே போல் கடந்த 12-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைத்தார். முதலில் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து 5 ஆயிரம் கனஅடியாகவும், 10 ஆயிரம் கனஅடியாகவும் தண்ணீர் அதிகரித்து திறக்கப்பட்டது.

    இந்த நிலையில் பாசனத்துக்கு தண்ணீர் தேவை அதிகரித்ததன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை முதல் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் மின் உற்பத்தியும் தொடங்கி நடந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.13 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 6040 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் தற்போது 84.41 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    ×