என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அமித்ஷா கட்டுப்பாட்டில்தான் அ.தி.மு.க. உள்ளது - உதயநிதி ஸ்டாலின்
    X

    அமித்ஷா கட்டுப்பாட்டில்தான் அ.தி.மு.க. உள்ளது - உதயநிதி ஸ்டாலின்

    • ஒவ்வொருவரரிடமும் 200 வாக்காளர்கள் கட்டுப்பாட்டில் இருந்தால், அவர்களது வளர்ச்சியை யாரும் கட்டுப்படுத்த முடியாது.
    • இந்தியாவிலேயே தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக முதன்முதலில் குரல் கொடுத்தவர் மு.க.ஸ்டாலின்தான்.

    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். மாவட்டத்தில் நடைபெற்று வரும் திட்ட பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

    தொடர்ந்து திருப்பத்தூரில் உள்ள தனியார் திருமண மகாலில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் நடைபெற்ற தி.மு.க. சார்பு அணிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    சார்பு அணி என்பது சாதனை படைக்கும் அணி. நம்முடைய தி.மு.கழகம்தான் சார்பு அணியை சார்ந்திருக்கிறது. சார்பு அணியில் சிறப்பாக செயல்பட்டவர்கள் கழகத்தில் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர். அந்த வகையில் நம்முடைய முதல்வரையே இளைஞரணி தான் உருவாக்கியது. பொதுச் செயலாளரை மாணவரணி உருவாக்கியது. நம் மாநிலம் மட்டுமின்றி மற்ற மாநிலத்துக்கும் உரிமையை மீட்டு கொடுத்தது நமது வழக்கறிஞர் அணி. தேர்தல் நேரங்களில் தகவல் தொடர்பு அணியினர் மிக சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

    ஒவ்வொருவரரிடமும் 200 வாக்காளர்கள் கட்டுப்பாட்டில் இருந்தால், அவர்களது வளர்ச்சியை யாரும் கட்டுப்படுத்த முடியாது. தி.மு.க.வில் 25 அணிகள் உள்ளன. ஆனால் அ.தி.மு.க.வோ 25 அணிகளாக பிரிந்து விட்டது. அக்கட்சி நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு கட்டுப்படுவதில்லை. தற்போது அமித்ஷா கட்டுப்பாட்டில் தான் அ.தி.மு.க. உள்ளது. பா.ஜ.க. சூழ்ச்சி வலையில் பழனிசாமி மாட்டிக்கொண்டார்.

    மும்மொழி கொள்கையை ஏற்காவிட்டால், மத்திய அரசு ரூ.2,500 கோடி தர முடியாது என்றது. நமது முதல்வரும் தேவையில்லை என்றார். தொகுதிகள் மறுசீரமைப்பால் தமிழகத்துக்கு 8 தொகுதிகள் குறையும். இந்தியாவிலேயே தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக முதன்முதலில் குரல் கொடுத்தவர் மு.க.ஸ்டாலின்தான். ஊழலால் தண்டிக்கப்பட்ட கட்சியுடன் கூட்டணி வைத்து கொண்டு தி.மு.க.வை ஊழல் கட்சி என்று அமித்ஷா கூறுகிறார். பா.ஜ.க. ஊழல் பட்டியலை வெளியிட்டால் நீண்டு கொண்டே போகும்.

    ஆட்சியில் அ.தி.மு.க. இருந்திருந்தால் மும்மொழி என்ன, 10 மொழிக் கொள்கையையே ஏற்றுக் கொண்டிருப்பார். ஜெயலலிதா மறைந்த பின்னர் தமிழக உரிமையை பா.ஜ.க.விடம் அ.தி.மு.க. அடகு வைத்துவிட்டது. நமது சார்பு அணியினர் மக்களோடு, மக்களாக நெருங்கி பழக வேண்டும். அரசின் சாதனைகளை சொல்லி கொண்டே இருக்க வேண்டும். மாவட்ட கழக அனுமதி பெற்று தெருமுனை பிரசாரம் செய்ய வேண்டும். நம்மிடம் சிறுசிறு பிரச்சனைகள் இருக்கலாம். அதை அமர்ந்து பேசினாலே தீர்ந்து விடும். வீட்டில் உட்கார்ந்து கொண்டு உறுப்பினர்கள் சேர்க்க வேண்டாம்.

    மக்களை நேரில் சந்தித்து உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். சட்டப்பேரவைத் தேர்தலில் ஒவ்வொரு பூத்திலும் கூடுதல் வாக்குகள் பெற வைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×