என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பேச்சிப்பாறை-பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தது - திற்பரப்பில் குளிக்க தடை நீடிப்பு
- உபரி நீர் அளவு குறைக்கப்பட்டதால் குழித்துறை கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு சற்று குறைந்துள்ளது.
- தொடர் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட பாசன குளங்கள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் முழுவதும் கடந்த 10 நாட்களாக பரவலாக மழை கொட்டி தீர்த்து வந்த நிலையில் நேற்று மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் மட்டும் மழை பெய்தது. பேச்சிப் பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதிகளிலும், மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் பரவலாக சாரல் மழை நீடித்தது. சுருளோட்டில் அதிகபட்சமாக 8.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மழை சற்று குறைந்ததையடுத்து பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து படிப்படியாக குறைந்து உள்ளது. நீர்வரத்து குறைந்ததையடுத்து பேச்சிப்பாறை அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டு உள்ளது.
526 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில் தற்போது 394 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. உபரி நீர் அளவு குறைக்கப்பட்டதால் குழித்துறை கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு சற்று குறைந்துள்ளது. இருப்பினும் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருவதால் இன்று 2-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள்.
பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 45.44 அடி யாக இருந்தது. அணைக்கு 861 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 503 கன அடி தண்ணீர் மதகுகள் வழியாகவும், 394 கன அடி தண்ணீர் உபரியாகவும் திறக்கப்பட்டுள்ளது. பெருஞ்சாணி நீர்மட்டம் 66.25 அடியாக உள்ளது. அணைக்கு 761 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
தொடர் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட பாசன குளங்கள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. இதையடுத்து விவசாயிகள் சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.






