என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
- அணைக்கு வினாடிக்கு 6040 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
- அணையில் தற்போது 84.41 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
சேலம்:
மேட்டூர் அணை மூலம் காவிரி டெல்டா பகுதியில் 13 மாவட்டங்களில் சுமார் 17 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் டெல்டா பாசனத்துக்காக ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது வழக்கம்.
அதே போல் கடந்த 12-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைத்தார். முதலில் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து 5 ஆயிரம் கனஅடியாகவும், 10 ஆயிரம் கனஅடியாகவும் தண்ணீர் அதிகரித்து திறக்கப்பட்டது.
இந்த நிலையில் பாசனத்துக்கு தண்ணீர் தேவை அதிகரித்ததன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை முதல் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் மின் உற்பத்தியும் தொடங்கி நடந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.13 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 6040 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் தற்போது 84.41 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.






