என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தொடரும் கனமழை: சோலையார் அணையின் நீர்மட்டம் 123 அடியாக உயர்வு
- கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை கொட்டி வருகிறது.
- தொடர்ந்து கனமழை பெய்தால் சோலையார் அணை விரைவில் தனது முழு கொள்ளளவை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வால்பாறை:
தமிழகத்தில் கடந்த மே மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது.
இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் அவ்வப்போது கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
கோவை மாவட்டம் வால்பாறையில் சோலையாறு அணை உள்ளது. இந்த அணை 160 அடிய உயரம் கொண்டது.
கடந்த மாத இறுதியில் பெய்த மழை காரணமாக ஜூன் 1-ந்தேதி அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டியது.
பின்னர் மழை சற்று குறைந்ததால் அணைக்கு நீர்வரத்தும் குறைந்து விட்டது. மேலும் மின் உற்பத்திக்கும், பரம்பிக்குளம் அணைக்கும் நீர் திறக்கப்பட்டதால் சோலையாறு அணையின் நீர்மட்டமும் குறைய தொடங்கியது.
இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி முதல் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை கொட்டி வருகிறது.
குறிப்பாக சோலையார் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்கிறது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று அணையின் நீர்மட்டம் 116.58 அடியாக இருந்தது. தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரிக்கவே இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 123 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 505 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 879 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
தொடர்ந்து கனமழை பெய்தால் சோலையார் அணை விரைவில் தனது முழு கொள்ளளவை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொள்ளாச்சி அடுத்த ஆழியாரில் ஆழியார் அணை உள்ளது. இந்த அணையின் மொத்த நீர் மட்டம் 120 அடியாகும். தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அணைக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 92.20 அடியாக இருந்தது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்கவே அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 95.50 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 63 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 161 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் மி.மீட்டரில் வருமாறு:
சின்னக்கல்லார்-75, சோலையார்-59, வால்பாறை பி.ஏ.பி-56, சின்கோனா, வால்பாறை தாலுகா-54, சிறுவாணி அடிவாரம்-23, பொள்ளாச்சி தாலுகா-11, ஆனைமலை தாலுகா-9, கிணத்துக்கடவு தாலுகா-8, மதுக்கரை தாலுகா-5 என மழை பெய்துள்ளது.






