என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம்.
- சிறப்பு பஸ் இயக்கத்தை கண்காணிக்க அனைத்து பஸ் நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கிளாம்பாக்கம்:
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
1-ந்தேதி வெள்ளிக்கிழமை, 2-ந் தேதி சனிக்கிழமை மற்றும் 3-ந்தேதி ஞாயிறுக்கிழமை ஆடிப்பெருக்கு (ஆடி-18) மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு வரும் 1-ந்தேதி வெள்ளிக்கிழமை 340 பஸ்களும், 2-ந்தேதி சனிக்கிழமை 350 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 1-ந்தேதி 55 பஸ்களும் 2-ந் தேதி (சனிக்கிழமை) 55 பஸ்களும் மேற்கூறிய இடங்களில் இருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 250 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மாதவரத்தில் இருந்து 1-ந்தேதி 20 பஸ்களும், 2-ந் தேதி 20 பஸ்களும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும், ஞாயிறு சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை 6,224 பயணிகளும் சனிக்கிழமை 2,892 பயணிகளும் மற்றும் ஞாயிறு 6,695 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம். இச்சிறப்பு பஸ் இயக்கத்தை கண்காணிக்க அனைத்து பஸ் நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியை பயன்படுத்தி தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விளையாட்டு பிரிவில் எம்.பி.பி.எஸ். சீட்டுக்கு விண்ணப்பித்தார்.
- சர்வதேச போட்டிகளில் 7 நாடுகள் பங்கேற்க வேண்டும் என்பது தனிநபர் விளையாட்டு போட்டிகளுக்கு மட்டுமே பொருந்தும்.
மதுரை:
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரைச் சேர்ந்த சிவகுமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
என் மகள் ஹரினி, கடந்த மே மாதம் பிளஸ்-2 முடித்தார். இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் வெற்றி பெற்றார். ஹரினி சூட்டிங்பால் விளையாட்டு வீரர். கடந்த பிப்ரவரி மாதம் நேபாளத்தில் நடை பெற்ற ஆசிய சூட்டிங்பால் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றார். கடந்தாண்டு மார்ச் மாதம் டெல்லியில் நடைபெற்ற முதல் உலக கோப்பை சூட்டிங்பால் சேம்பியன் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார். இதனால் விளையாட்டு பிரிவில் எம்.பி.பி.எஸ். சீட்டுக்கு விண்ணப்பித்தார்.
பொதுவாக மருத்துவ மாணவர் சேர்க்கையில் விளையாட்டு பிரிவில் விண்ணப்பிப்பவர்களுக்கு சர்வதேச போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றால் 500 மதிப்பெண், வெள்ளி பதக்கம் வென்றால் 450 மதிப்பெண், வெண்கல பதக்கம் பெற்றால் 400 மதிப்பெண், போட்டியில் பங்கேற்றால் 250 மதிப்பெண் வழங்கப்படும். இந்த அடிப்படையில் 2 சர்வதேச போட்டிகளில் பெற்ற பதக்கங்கள் அடிப்படையில் 900 மதிப்பெண்ணை என் மகளுக்கு வழங்கி இருக்க வேண்டும்.
ஆனால் கடந்த 18-ந்தேதி நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்பில் விளையாட்டு பிரிவில் ஒடிசா, காசியாபாத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் பதக்கம் பெற்றதற்காக 200 மதிப்பெண் வழங்குவதாகவும், சர்வதேச போட்டிகளில் பெற்றதற்கு மதிப்பெண் வழங்க, அந்தப் போட்டிகளில் குறைந்தபட்சம் 7 நாடுகள் பங்கேற்று இருக்க வேண்டும். அவ்வாறு பங்கேற்காததால் அந்த பதக்கங்களுக்கு மதிப்பெண் வழங்க முடியாது எனக் கூறப்பட்டது.
சர்வதேச போட்டிகளில் 7 நாடுகள் பங்கேற்க வேண்டும் என்பது தனிநபர் விளையாட்டு போட்டிகளுக்கு மட்டுமே பொருந்தும். சூட்டிங்பால் போட்டி என்பது ஏழு பேர் அடங்கிய குழுவினர் விளையாடும் குழு விளையாட்டு ஆகும். இதற்கு 7 நாடுகள் விதி பொருந்தாது. எனவே சர்வதேச போட்டியில் தங்கம், வெண்கல பெற்ற பதக்கங்களுக்கு 900 மதிப்பெண் வழங்கி, விளையாட்டு பிரிவில் எம்.பி.பி.எஸ். சீட் வழங்கவும், என் மகளுக்காக ஒரு எம்.பி.பி.எஸ். இடத்தை காலியாக வைக்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி சி.சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வக்கீல் கணபதி சுப்பிரமணியன் ஆஜராகி, மனுதாரர் மகள் சர்வதேச போட்டியில் பதக்கம் பெற்றதால் மத்திய அரசு பணிக்கு தகுதியானவர் என மத்திய அரசு சான்றிதழ் வழங்கியுள்ளது. அப்படியிருக்கும் போது 7 நாடுகள் பங்கேற்கும் சர்வதேச போட்டியில் பதக்கம் பெற்றதால் தான் மதிப்பெண் வழங்குவோம் என்பது சரியல்ல என்றார்.
விசாரணை முடிவில் மனுதாரர் மகளுக்கு சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்றதற்காக 900 மதிப்பெண் அரசு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
- 80 இடங்களில் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் இயங்கும் சி.சி.டி.வி. கேமராக்கள் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன.
- மாற்றங்கள் மக்களின் மனதில் இருந்து வந்தால் மட்டுமே இது போன்ற முயற்சிகள் பலனளிக்கும்.
மதுரை:
சமீபத்தில் வெளியிடப்பட்ட மத்திய அரசின் தூய்மை நகரங்கள் பட்டியலில் மதுரை 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட நகரங்களின் பட்டியலில் கடைசி இடமான 40-வது இடத்தை பிடித்தது. இது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், நகரின் தூய்மை பணிகளை மேம்படுத்தும் பணியில் மாநகராட்சி கவனம் செலுத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, பொது இடங்களில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்கவும், மக்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் குப்பைகள் கொட்டப்படும் இடங்களில் அழகிய ரங்கோலி கோலங்கள் போடப்பட்டு வருகின்றன. இது ஓரளவுக்கு மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்ப டுத்தி வருவதாக மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், சமீபத்தில் வெளியிடப்பட்ட தூய்மை நகரங்களின் பட்டியல் கடந்த 2024-ம் ஆண்டு தரவுகளைக் கொண்டு வெளியிடப்பட்டுள்ளது. எனினும் தற்போது மதுரை மாநகரில் தூய்மை பணிகளை மாநகராட்சி முடுக்கி விட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, நகரில் குப்பைகள் கொட்டப்படும் இடங்கள் 1,152லிருந்து 749 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக குப்பைகள் பெறும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதே போல், கட்டுமான பகுதிகளில் தூசியை குறைக்கும் பொருட்டு பச்சை நிற துணியை பயன்படுத்தாத கட்டுமான நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. தொடர்ச்சியான குற்றங்களுக்கு ரூ. 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. சமீபத்தில் கட்டுமான பகுதிகளில் பச்சை நிற துணியை பயன்படுத்துவதை மாநகராட்சி கட்டாயப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதே போல், மதுரையில் 80 இடங்களில் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் இயங்கும் சி.சி.டி.வி. கேமராக்கள் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் குப்பைகள் நிரம்பி வழியும்போது, அவற்றை மாநகராட்சி ஊழியர்கள் உடனுக்குடன் அகற்ற ஏதுவாகிறது. இதே போல் மாநகராட்சி ஊழியர்களின் பணிகளை கண்காணிக்க நகரம் முழுவதும் 200 கியூ.ஆர். கோடுகள் அமைக்கப்பட்டுள்ளன. குப்பைகள் அதிகம் போடப்படும் இடங்களில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த அழகிய ரங்கோலி கோலங்கள் போடப்பட்டு வருகின்றன. வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ இந்த கோலங்கள் போடப்படும் என்றார்.
மாநகராட்சியின் இந்த முயற்சிகள் குறித்து நேதாஜி ரோட்டைச் சேர்ந்த குடியிருப்புவாசி ஒருவர் கூறுகையில், மாநகராட்சியின் இந்த முயற்சி ஓரளவுக்கு பயன் அளித்தாலும், முழுமையாக பயன் தரவில்லை என்பதே உண்மை. ரங்கோலி கோலங்கள் போடப்படும் இடங்களில் குப்பைகள் கொட்டப்படுவது குறைந்துள்ளது. எனினும் சிலர் அவற்றை மதிக்காமல் தொடர்ந்து குப்பைகள் போடப்படும் நிகழ்வுகள் தொடர்கின்றன. மாற்றங்கள் மக்களின் மனதில் இருந்து வந்தால் மட்டுமே இது போன்ற முயற்சிகள் பலனளிக்கும் என்றார்.
இப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், இந்த முயற்சி கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் அமல்படுத்தட்டது. அதே போன்ற முறை இங்கு முயற்சிக்கப்படுவது கண்டு மகிழ்ச்சி. எனினும் குப்பைகள் அகற்றப்படுவதை முறைப்படுத்தாமல் இது போன்ற முயற்சிகள் வீணாகவே முடியும். ஏனெனில் மதுரை மாநகராட்சியின் பல வார்டுகளில் தூய்மை பணியாளர்கள் பணி செய்வதில்லை. ஒரு வார்டுக்கு 5 பணியாளர்கள் அனுப்பப்பட்டால் அவர்களில் 2 பேர் மட்டுமே வேலை செய்கின்றனர் என்றார்.
- தொடர்ந்து மக்களுடன் மக்களாகவே இருக்க போகிறோம்.
- நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம்.
பனையூரில் அமைந்துள்ள தமிழக வெற்றிக்கழக தலைமை அலுவலகத்தில் MY TVK எனும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.
தமிழக வெற்றிக்கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்காக 'வெற்றிப்பேரணியில் தமிழ்நாடு' என்ற செயலியை அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டார். ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு தமிழக வெற்றிக்கழகத்தின் அடையாள அட்டையை அதன் தலைவர் விஜய் வழங்கினார்.
இதன்பின் பேசிய விஜய் கூறியதாவது:-
* 1967, 1977 போல் 2026 தேர்தலும் அமைய போகிறது.
* 1967, 1977-ல் அதிகார பலம், அசுர பலத்தை எதிர்த்தே வெற்றி பெற்றுள்ளனர்.
* மக்களிடம் செல், மக்களிடம் இருந்து கற்று கொள் என்ற அண்ணாவின் வார்த்தைகளை கடைபிடிப்போம்.
* அண்ணா சொன்னதை கடை பிடித்தாலே நாம் வெற்றி பெற்று விடுவோம்.
* தொடர்ந்து மக்களுடன் மக்களாகவே இருக்க போகிறோம். வீதிக்கு வீதி, தெருவுக்கு தெரு சென்று அனைவரையும் சந்தித்தவர்களே வெற்றி பெற்றனர்.
* நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம் என்றார்.
- விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பாபாஜி என்கிற சௌந்தர் என்பது தெரிய வந்துள்ளது.
- கைது செய்யப்பட்ட சௌந்தர் மீது மறைமலைநகர் காவல் நிலையத்தில் செல்போன் பறிப்பு வழக்கு உள்ளது.
சென்னை பெருங்குடி ரெயில் நிலையத்தில் தனியாக இருந்த பெண்ணிடம் இளைஞர் ஒருவர் நகை பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நகை பறிப்பில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அவர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பாபாஜி என்கிற சௌந்தர் (28) என்பது தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட சௌந்தர் மீது மறைமலைநகர் காவல் நிலையத்தில் செல்போன் பறிப்பு வழக்கு உள்ளது.
மதிய வேளையில் தனியான இருந்ததால் பேச்சு கொடுத்து பெண்ணிடம் கைவரிசை காட்டியதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
- ஒரு செல்போன் எண்ணில் 5 பேரை உறுப்பினராகும் வகையில் செயலி வடிவமைவமைப்பு.
- ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு தமிழக வெற்றிக்கழகத்தின் அடையாள அட்டையை அதன் தலைவர் விஜய் வழங்கினார்.
2026 தமிழக சட்டசபை தேர்தலை நோக்கி தமிழக வெற்றிக்கழகம் பணிகளை மேற்கொண்டு வருகிறது. பூத் கமிட்டி கூட்டம், மாநாடு, உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், பனையூரில் அமைந்துள்ள தமிழக வெற்றிக்கழக தலைமை அலுவலகத்தில் MY TVK எனும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.
தமிழக வெற்றிக்கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்காக 'வெற்றிப்பேரணியில் தமிழ்நாடு' என்ற செயலியை அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டார். நிர்வாகிகளிடம் விஜய் நேரடியாக பேசும் வகையிலும், ஒரு செல்போன் எண்ணில் 5 பேரை உறுப்பினராகும் வகையில் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந் நிகழ்ச்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு தமிழக வெற்றிக்கழகத்தின் அடையாள அட்டையை அதன் தலைவர் விஜய் வழங்கினார். கட்சியில் இணைந்தவர்களுக்கு பொன்னாடை போர்த்தினார் விஜய்.
- உச்சநீதிமன்ற நீதிபதிகள் இப்போது தெரிவித்திருக்கும் கருத்தைக் கடந்த காலங்களில் பலமுறை பா.ம.க. தெரிவித்துள்ளது.
- ஒரு மக்கள் நல அரசு மக்களுக்கு ஆதரவாகத் தான் செயல்பட வேண்டும்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வேலைக்கு பணம் வாங்கி மோசடி செய்த வழக்கில் இருந்து அவரைக் காப்பாற்றும் நோக்கத்துடன் தான், அந்த வழக்கில் அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்த அப்பாவிகள் உள்ளிட்ட 2 ஆயிரம் பேரை அந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களாக திமுக அரசு சேர்த்திருக்கிறது என்றும், இது நீதி வழங்கும் அமைப்பின் மீது நடத்தப்படும் மோசடி என்றும் உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்கிறது. குற்றம் செய்தவர்களைத் தண்டித்து அப்பாவிகளை பாதுகாக்க வேண்டிய தமிழக அரசு, அப்பாவிகளைத் தண்டித்து குற்றம் செய்தவர்களை பாதுகாக்க முயல்வது கண்டிக்கத்தக்கது.
2014-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் 5 கோட்டங்களில் 1630 பணிகளுக்கான ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்ட நிலையில், நடத்துநர் பணிக்கு ரூ.1.75 லட்சம் தொடங்கி உதவிப் பொறியாளர் பணிக்கு ரூ.12 லட்சம் வரை செந்தில் பாலாஜி கையூட்டு வாங்கிக் குவித்ததாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், செந்தில்பாலாஜி அவரது செல்வாக்கைப் பயன்படுத்தி , தம்மீது புகார் கொடுத்த அனைவருக்கும் பணத்தைக் கொடுத்து, புகார்களை திரும்பப் பெறச் செய்தார். இதை சென்னை உயர்நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டு அவரை விடுதலை செய்தது. ஆனால், அதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜி மீது மீண்டும் வழக்கு தொடர்ந்து நடத்த வேண்டும் என்று ஆணையிட்டது.
அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்த திமுக அரசு, செந்தில் பாலாஜி மற்றும் அவருக்கு துணையாக இருந்தவர்களை மட்டும் குற்றச்சாட்டப்பட்டவர்களாக சேர்க்காமல், அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்களையும் வழக்கில் சேர்த்திருக்கிறது. இதைத் தான் உச்சநீதிமன்றம் கண்டித்திருக்கிறது. ஒரு வழக்கில் 2000 பேர் குற்றஞ்சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டால், செந்தில்பாலாஜியின் வாழ்நாள் முடியும் வரை இந்த வழக்கின் விசாரணை முடியாது என்பதற்காகத் தான் திமுக அரசு இவ்வாறு செய்ததாக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்காக காவல்துறையை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும்.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் இப்போது தெரிவித்திருக்கும் கருத்தைக் கடந்த காலங்களில் பலமுறை பா.ம.க. தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி செந்தில் பாலாஜி செய்தது ஊழல் என்று என்று பாமக குற்றஞ்சாட்டி வந்த நிலையில், அவர் செய்தது தியாகம் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சான்றிதழ் அளித்த முதலமைச்சர் ஸ்டாலின், செந்தில் பாலாஜியின் தியாகத்தைப் போற்றும் வகையில் அவருக்கு அமைச்சர் பதவியும் வழங்கினார். இதற்கும் பா.ம.க. கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்படுவதையும் உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
ஒரு மக்கள் நல அரசு மக்களுக்கு ஆதரவாகத் தான் செயல்பட வேண்டும். ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களோ மக்களின் நலன்களை பலி கொடுத்து செந்தில் பாலாஜியை பாதுகாக்க முயல்கிறார். இதற்கு உச்சநீதிமன்றமே கண்டனம் தெரிவித்திருக்கும் நிலையில், தமது நீதி தவறிய செயலுக்காக தமிழக மக்களிடம் அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும். அதுமட்டுமின்றி, செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கிலிருந்து அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்களை நீக்கி விட்டு, செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான வழக்கை வேறு மாநில நீதிமன்றத்துக்கு மாற்றி தமிழக அரசு ஆணையிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சிதம்பரம் நடராஜன் கோவிலில் இருந்து மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் நேரலையில் நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.
- செப்டம்பர் மாத இறுதியிலும் பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளதாக கூறப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக கடந்த 26-ந்தேதி இரவு தமிழகம் வந்தார். அப்போது, தூத்துக்குடி சர்வதேச விமான நிலையத்தில் புதிய முனையத்தையும், மறுநாளான 27-ந்தேதி கங்கைகொண்ட சோழபுரத்தில் முதலாம் ராஜேந்திர சோழனின் 1000-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டத்திலும் கலந்து கொண்டு ரூ.4,800 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில், பிரதமர் மோடி அடுத்த மாதம் 26-ந்தேதி மீண்டும் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, அடுத்த மாதம் 26-ந்தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி திருவண்ணாமலை மற்றும் சிதம்பரம் மாவட்டத்திற்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.
சிதம்பரம் நடராஜன் கோவிலில் இருந்து மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் நேரலையில் நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். மேலும் செப்டம்பர் மாத இறுதியிலும் பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளதாக கூறப்படுகிறது.
- 39 அகழாய்வுகளில் 33 அகழாய்வு பணிகள் அ.தி.மு.க. ஆட்சியில்தான நடைபெற்றன.
- தமிழகத்தில் உள்ள நிறைய அரசுக் கல்லூரிகளில் போதிய பேராசிரியர்கள் இல்லை.
சிவகங்கை மாவட்டம் கீழடி அருங்காட்சியகத்தை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். அதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:
* அ.தி.மு.க. ஆட்சியில் தான் கீழடி அகழாய்வு பணிகள் முதன்முதலாக மேற்கொள்ளப்பட்டன.
* கீழடிக்கு அகழாய்வு அருங்காட்சியகத்தை உருவாக்கியது அ.தி.மு.க. அரசு தான்.
* கீழடி என் தாய்மடி என்ற பெயரை சூட்டி மகிழ்ந்தது அ.தி.மு.க. அரசில் தான்.
* கீழடியில் பிரம்மாண்டமாக அருங்காட்சியகம் அமைக்க நிதி ஒதுக்கியது அ.தி.மு.க. அரசுதான்.
* 2020-ல் YMCA-வில் நடைபெற்ற புத்தக கண்காட்சியில் கீழடி கண்காட்சியை காட்சிப்படுத்தியது அ.தி.மு.க. அரசு.
* 39 அகழாய்வுகளில் 33 அகழாய்வு பணிகள் அ.தி.மு.க. ஆட்சியில்தான நடைபெற்றன.
* 2018-ல் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் அமெரிக்காவுக்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்டன.
* தமிழர்களின் பெருமையை உலகிற்கு பறைசாற்றியது அ.தி.மு.க. அரசு தான்.
* அகழாய்வில் கிடைத்த பொருட்களை உலகிற்கு காட்சிப்படுத்தினோம்.
* மத்திய அரசு கேட்டதற்காக சரியான விளக்கத்தை தி.மு.க. அரசு கொடுத்ததா என தெரியவில்லை.
* கீழடி ஆய்வறிக்கைக்கு ஒப்புதல் பெற வேண்டியது தி.மு.க. அரசின் கடமையாகும்.
* தமிழகத்தில் உள்ள நிறைய அரசுக் கல்லூரிகளில் போதிய பேராசிரியர்கள் இல்லை.
* காலிப் பணியிடங்கள் இவ்வளவு இருக்கும்போது நிர்வாகம் எப்படி சிறப்பாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- விஜயுடன் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளதாக தகவல் வெளியானது.
- பா.ஜ.க. கூட்டணியில் இடம் கிடைக்காததால் அடுத்தகட்டம் குறித்து ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜயுடன் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளதாக தகவல் வெளியானது.
கூட்டணி குறித்து விஜயின் நெருங்கிய நண்பர் ஒருவருடன் ஓ.பி.எஸ். நேரடியாக பேசி வருவதாக தகவல் வெளியான நிலையில், ஓ.பி.எஸ். தனிக்கட்சி தொடங்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.
பா.ஜ.க. கூட்டணியில் இடம் கிடைக்காததால் அடுத்தகட்டம் குறித்து ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
* நாளை சென்னையில் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கிறேன்.
* த.வெ.க.வுடன் கூட்டணி உள்ளிட்ட கேள்விகளுக்கு நாளை பதில் சொல்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அஜித் குடும்பத்திற்கு அ.தி.மு.க. துணை நிற்கும்.
- தி.மு.க. ஆட்சி நடக்கும்போதெல்லாம் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விடுகிறது.
மடப்புரம் அஜித் குமார் இல்லத்திற்கு சென்ற அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அஜித்குமார் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதனை தொடர்ந்து அஜித்குமார் தாய், சகோதருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
* அஜித்குமார் போலீசாரால் அடித்து கொல்லப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது.
* மக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறையால் உயிர் பறிபோயுள்ளது, போலீசாருக்கு அழுத்தம் கொடுத்தது யார்?
* அ.தி.மு.க. போராடிய பின்னரே காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
* அஜித்குமார் மரணத்திற்கு அரசே முழு பொறுப்பேற்க வேண்டும்.
* அஜித் குடும்பத்திற்கு அ.தி.மு.க. துணை நிற்கும்.
* தி.மு.க. ஆட்சி நடக்கும்போதெல்லாம் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விடுகிறது.
* கொலை, கொள்ளை, திருட்டு நடக்காத நாளே இல்லை.
* கொலை நிலவரம் என்ன என செய்தி வெளியிடும் அளவிற்கு தமிழகத்தில் நிலை உள்ளது என்றார்.
- நகைக்காக அஸ்வினியை கொலை செய்த விதமும் மிகக் கொடூரமானது.
- ஆதாயக் கொலைகளைப் போலவே மதுபோதையால் நிகழக் கூடிய கொலைகளும் ஆபத்தானது.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சேலம் மாவட்டம், வலசையூர் அருகே அரூரில் வசிக்கும் பூமாலை-சின்னபாப்பா தம்பதியை கொடூரமாக தாக்கி, அவர்களை கட்டிப்போட்டு விட்டு நகை-பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
கணவர் பூமாலையும், மனைவி சின்னப்பாப்பாவும், இணைந்து விவசாயம் பார்ப்பதோடு, செங்கல் சூளையிலும் வேலை பார்த்து சொந்த உழைப்பில்; பொருளீட்டி வாழ்கிற அருமையான உழைப்பாளிகள்.
ஒரு மகனை பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் படிக்க அனுப்பி வைத்திருக்கிறார்கள், இன்னொரு மகன் தமிழ்நாட்டின் திருச்செங்கோட்டில் பொறியியல் படித்துக் கொண்டிருக்கிறார். உழைப்பின் உன்னதத்தை பறைசாற்றக்கூடிய உதாரண தம்பதியராய் வாழும் அவர்களின் சேமிப்பு நகையையும், பணத்தையும்தான் கொள்ளையடித்து போயிருக்கிறது கொள்ளைக் கூட்டம்.
காஞ்சிபுரம் மாவட்டம் திம்மசமுத்திரத்திலும் இப்படியொரு சம்பவம் நடந்திருக்கிறது. எட்டுபவுன் நகைக்காக இளம்பெண் அஸ்வினியை ஜூலை 24-ந் தேதி (வியாழக்கிழமை) கொடூரமாக தாக்கிவிட்டு நகையை கொள்ளையடித்துப் போயிருக்கிறார்கள்.
26-ந்தேதி வரை மருத்துவ சிகிச்சையில் இருந்த அஸ்வினி, 27-ந்தேதி இறந்து போயிருக்கிறார். நகைக்காக அஸ்வினியை கொலை செய்த விதமும் மிகக் கொடூரமானது என்பதை உறவினர்கள் விவரித்திருக்கிறார்கள்.
ஆதாயக் கொலையும், ஆதாயக் கொள்ளையுமாக அடுத்தடுத்த நாள்களில் இருந்தது போலவே மதுபோதை மோதலிலும் அடுத்தடுத்த நாள்களில் தமிழ்நாட்டில் கொலைகள் நடந்து கொண்டிருப்பது வெட்கக்கேடு. சென்னை குரோம்பேட்டையில் டாஸ்மாக் மதுக்கூடத்திலேயே மதுபோதையில் தகராறு ஏற்பட்டு பரந்தாமன் என்பவரை ஒரு கும்பல் கொலை செய்திருக்கிறது. சென்னை ஐ.சி.எப். பகுதியில் நண்பர்களோடு மது அருந்திய விஜயகுமார் என்பவர் அதே நண்பர்களால் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
ஆதாயத்துக்காக ஒரு கொலை, ஒரு கொலை முயற்சியும்; மதுபோதையில் இரண்டு கொலைகளுமாக அடுத்தடுத்த நாள்களில் நடந்திருக்கும் இப்படியான சமூக சீர்கேட்டை சாதாரணமாக கடந்துபோக நினைப்பது ஆட்சியாளர்களுக்கு அழகல்ல. ஆதாயக் கொலைகளைப் போலவே மதுபோதையால் நிகழக் கூடிய கொலைகளும் ஆபத்தானது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






