என் மலர்
உள்ளூர் செய்திகள்
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வடக்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. வருகின்ற 13ஆம் தேதி வாக்கில் வடமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
இதனை தொடர்ந்து தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், ராணிபேட்டை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
13-ந்தேதி வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், ராணிபேட்டை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
14-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36# செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று முதல் 15-ந்தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- தவறான நடவடிக்கையின் காரணமாக அதிகாரிகளும், குவாரி உரிமையாளர்களும் அரசுக்கு சேர வேண்டிய வருவாயை பங்கு போட்டுக் கொள்ளும் நிலை உள்ளது.
- திண்டுக்கல் மட்டுமல்லாமல் தமிழகத்தில் முழுவதும் இதே நிலைதான் நீடிக்கிறது.
மதுரை:
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி பகுதியை சேர்ந்த தினேஷ்குமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
நான் மாற்றுத்திறனாளி. 2018-ம் ஆண்டில் திண்டுக்கல் மாவட்ட சுரங்கத்துறையின் மாவட்ட கனிம நிதி அறக்கட்டளையில் கணக்காளராக பணியில் சேர்ந்தேன். 2022-ம் ஆண்டில் மாரியம்மாள் என்பவர் இந்த துறையின் உதவி இயக்குனர் பொறுப்பு பணியை ஏற்றார். அவர் தற்காலிக பணியில் இருந்த என்னை நீக்கி விட்டார். பின்னர் அவருக்கு உதவியாளராக மட்டும் வேலை செய்யும்படியும், அதற்கான ஊதியம் தருவதாகவும் உறுதி அளித்தார்.
அதன்பேரில் வேலை செய்தபோது, குவாரி உரிமையாளர்கள் எனது வங்கி கணக்கில் செலுத்தும் லஞ்சப்பணத்தை வாரத்துக்கு ஒருமுறை எடுத்து உதவி இயக்குனர் மாரியம்மாளிடம் ஒப்படைத்து விடுவேன். திடீரென பல்வேறு முறைகேட்டுக்கு நான் தான் காரணம் என மாரியம்மாள் கூறினார்.
இதனால் அவரது தூண்டுதலின்பேரில் குவாரி உரிமையாளர்கள் கொடுத்த லஞ்சப்பணத்தை என்னிடம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். இதனால் நானும், எனது தாயாரும் 2 முறை தற்கொலைக்கு முயன்றுள்ளோம். எங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது.
எனவே குவாரி உரிமையாளர்களிடம் இருந்து மாரியம்மாள் லஞ்சப்பணத்தை வங்கிக்கணக்கு மூலமாக பெற்றதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. எனவே எனக்கும், என் தாயாருக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்கும்படியும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, மனுதாரர் உள் நோக்கத்துடன் இந்த வழக்கை தாக்கல் செய்து உள்ளார். தனிப்பட்ட முறையில் குவாரி உரிமையாளர்களிடம் இருந்தும் மனுதாரர் ஆதாயம் அடைந்துள்ளார். எனவே இந்த வழக்கு ஆவணங்கள் அனைத்தும் புனையப்பட்டவை என்பதால் இதனை தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும் என வாதாடினார்.
பின்னர் மனுதாரர் வக்கீல் ஆஜராகி, கனிமவள அதிகாரி உதவி இயக்குனர் மாரியம்மாள் லஞ்ச வழக்கில் சிக்கி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 3 மாதத்தில் மீண்டும் அதே பணியிடத்தில் நியமிக்கப்பட்டார். அவர் பல்வேறு குவாரி உரிமையாளர்களிடம் இருந்து ஏராளமான தொகையை லஞ்சமாக பெற்றதற்கு பல்வேறு ஆதாரங்கள் உள்ளன.
தற்போது அவர் தேனி மாவட்டத்தில் பணியில் இருப்பதால் இந்த மாவட்டத்தில் இருந்து சுமார் ரூ.2,000 கோடி மதிப்புள்ள கனிம வளங்கள் கேரளாவுக்கு சட்டவிரோதமாக கடத்தப்பட்டுள்ளன. எனவே இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுப்பது அவசியம் என்றார்.
இதையடுத்து நீதிபதி, கனிம வள அதிகாரிகள் கூட்டம் நடத்துவதே ஒவ்வொரு மாதமும் எவ்வளவு வருமானம் வருகிறது? அதை எப்படி பிரித்துக் கொள்வது என்பதற்காகத் தான். தவறான நடவடிக்கையின் காரணமாக அதிகாரிகளும், குவாரி உரிமையாளர்களும் அரசுக்கு சேர வேண்டிய வருவாயை பங்கு போட்டுக் கொள்ளும் நிலை உள்ளது. திண்டுக்கல் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் இதே நிலைதான் நீடிக்கிறது.
மனுதாரர் வங்கி கணக்கில் குவாரி உரிமையாளர்கள் எதற்காக பணம் செலுத்தினார்கள்? அவர் பணம் செலுத்தியிருந்தால் இதன் மூலம் யார் ஆதாயம் அடைந்தார்கள்? என்று சம்பந்தப்பட்ட அம்பாத்துரை போலீஸ் இன்ஸ்பெக்டர் விரிவாகவும், நேர்மையாகவும் விசாரித்து இந்த கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
தவறும் பட்சத்தில் இந்த விவகாரத்தை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு மாற்ற நேரிடும். நேர்மையாக இந்த வழக்கை விசாரித்தால் இந்த துறையில் நல்லது நடப்பதற்கு உதவ முடியும். அது மட்டுமல்லாமல் குறைந்த பட்சம் ஆயிரம் கோடி ரூபாயாவது அரசுக்கு வருவாயாக நம்மால் தேடித் தர முடியும். அதற்காக தேவைப்படும் உதவிகளை திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செய்து தரவேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை வருகிற 22-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்.
- தமிழகத்தில் செயல்பட்டு வரும் எந்த பன்னாட்டு பெரு நிறுவனத்துக்கும் கேரளாவில் அனுமதி இல்லை.
- கேரள அரசு தங்கள் மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரிகளை பாதுகாத்து வருகிறது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட தொழில் வர்த்தகர் சங்கத்தின் 21ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் சிறு குறு வணிகர்கள் நெருக்கடியான சூழ்நிலையில் உள்ளனர். ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடும் கார்ப்பரேட் நிறுவனங்கள் அத்துமீறலில் இருந்து சிறு வியாபாரிகளை காப்பாற்ற வேண்டும்.
திருச்சியில் 1 லட்சம் சதுரடியில் அமைய உள்ள பெரு நிறுவனத்தின் கட்டிடம் முன்புறம் சிறு வியாபாரிகள் நசுக்கப்படுவதை கண்டித்து வருகிற 30-ந்தேதி முற்றுகை போராட்டம் நடத்த உள்ளோம். மத்திய மாநில அரசுகள் சிறு வணிகர்களை காப்பாற்ற சட்டம் இயற்ற வேண்டும்.
இந்த முன்னெடுப்பை அரசுகள் மேற்கொள்ளாத பட்சத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் சிறு வணிகர்கள் இல்லாமல் போய் விடுவார்கள். பல்பொருட்கள் விற்பனையில் பெரு நிறுவனங்கள் ஈடுபடுவது உலக மயமாக்கல் கொள்கை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
வால்மார்ட் என்ற பெரு நிறுவனத்துக்கு எதிராக வணிகர்கள் போராட்டம் நடத்திய போது அந்த நிறுவனத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தடுத்து நிறுத்தினார்.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் எந்த பன்னாட்டு பெரு நிறுவனத்துக்கும் கேரளாவில் அனுமதி இல்லை. கேரள அரசு தங்கள் மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரிகளை பாதுகாத்து வருகிறது.
ஆனால் தமிழகத்தில் 35 லட்சம் வியாபாரிகள் உள்ளனர். எங்களிடம் 1 கோடி வாக்குகள் உள்ளன. இந்த வாக்குகளை பெற வேண்டுமானால் தமிழக அரசு எங்களை பாதுகாக்க வேண்டும். அமெரிக்கா 50 சதவீத வரி விதித்து இந்தியாவை மிரட்டிக் கொண்டு இருக்கிறது. இந்த சூழ்நிலையில் இந்திய மக்கள் உள்நாட்டு பொருட்களை மட்டும் வாங்க முன்வர வேண்டும். ஆன்லைனில் பொருட்கள் வாங்குவதை மக்கள் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழகத்தில் சிறந்த பெண் அரசியல்வாதி என்று பிரேமலதாவை தேர்ந்தெடுத்து விருது கொடுத்தார்கள்.
- பெண் ஆளுமையின் தலைமையின் கீழ் இயங்கும் கட்சி தே.மு.தி.க.
ஜெயலலிதாவும் பிரேமலதாவும் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படத்தை தே.மு.தி.க. பொருளாளர் எல்.கே.சுதீஷ் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். புகைப்படத்தை சமூக வலைத்தளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் எல்.கே.சுதீஷ் பகிர்ந்ததால் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து எல்.கே.சுதீஷ் கூறியதாவது:-
தமிழகத்தில் சிறந்த பெண் அரசியல்வாதி என்று பிரேமலதாவை தேர்ந்தெடுத்து விருது கொடுத்தார்கள். அப்போது, ஜெயலலிதாவையும் பிரேமலதாவையும் ஒப்பிட்டு பேசினேன்.

அம்மையார் ஜெயலிலதா இருக்கும் போது புரட்சித்தலைவி என்றும் சிங்கப்பெண், லயன் லேடி என்று கூறுவார்கள். இன்றைக்கு அதே இடத்தில் என்னுடைய சகோதரியும், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா சிங்கப்பெண்ணாக இருக்கிறார். தமிழகத்தில் ஜெயலலிதாவுக்கு அடுத்து வலிமை மிகுந்த பெண் தலைவராக இருக்கிறார் என்றால் அது பிரேமலதா தான். அதனால் தான் ஒப்பிட்டு பேசுகிறேன். பெண் ஆளுமையின் தலைமையின் கீழ் இயங்கும் கட்சி தே.மு.தி.க. நேற்றைய தினம் சிங்கத் தினம் (லயன் டே) என்பார்கள். அந்த தினத்தையொட்டி ஜெயலலிதாவையும், பிரேமலதாவையும் ஒப்பிட்டு பேசியதாக கூறினார்.
- கட்சி, சமூகத்தை தாண்டி நாம் குழந்தைகளை கண்ணும் கருத்துமாக கவனிக்க வேண்டும்.
- குழந்தைகளோட பாதுகாப்பையும் அம்மாவாகிய நாம் தான் உறுதி செய்ய வேண்டும்.
கடத்தூர்:
தர்மபுரி மாவட்டம் கடத்தூரில் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பசுமைத் தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
"தேர்தல் நேரங்களில் தருமபுரி பகுதிகளில் நான் போகாத ஊர்களே இல்லை. சாயங்காலம் 6 மணி ஆனால், போதையில் தள்ளாடும் இளைஞர்களை நான் பார்க்கும்போது மனசெல்லாம் வலிக்கும். அய்யோ இந்த தலைமுறை இப்படி போகுதே... நம் கண் எதிரே நம் குழந்தைகள் இப்படி போகுதேன்னு பரிதாபமாக இருக்கும்.
ஒரு தலைமுறையை குடிக்கு அடிமையாக உள்ளது. அதைவிட மோசம் போதை. போதையில் இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியாது. குடித்தால் கூட நாற்றம், கண் சிவக்கும்... ஆனால் போதையில் எதுவும் தெரியமாட்டேங்குது. போதை மாத்திரைகள் எல்லாம் பள்ளி, கல்லூரிகளின் அருகிலேயே கிடைக்கிறது என்பதால் நாம் குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பாது? கட்சி, சமூகத்தை தாண்டி நாம் குழந்தைகளை கண்ணும் கருத்துமாக கவனிக்க வேண்டும். குழந்தைகளோட பாதுகாப்பையும் அம்மாவாகிய நாம் தான் உறுதி செய்ய வேண்டும். அவர்கள் சமூக வலைத்தளத்தில் எவ்வாறு பயணிக்கிறார்கள். அவர்களுடைய நண்பர்கள் யார்? வீட்டிற்கு எப்போது வருகிறார்கள் போன்றும் பெண்களுக்கு விதிக்கக்கூடிய கட்டுப்பாடுகளை உங்கள் மகன்களுக்கும் விதியுங்கள். 6 மணிக்கு பொண்ணு வீட்டுக்கு வரணும்னா... பையனும் அதே மாதிரிதான். இரண்டு பேருக்கும் ஒரே கட்டுப்பாடுதான் இருக்கணும். பொண்ணுக்கு சமைக்க கற்றுக்கொடுத்தால், பையனுக்கும் சமைக்க கற்றுக்கொடுங்கள். எந்த ஒரு பாகுபாடு எல்லாம் பெண் குழந்தைகளையும், ஆண் குழந்தைகளையும் வளர்க்க வேண்டும் என்றார்.
- பல்வேறு மக்கள் பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.
- கூட்டத்தில் நகராட்சி ஆணையர், நகராட்சி பொறியாளர், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதன் விவரம் வருமாறு:-
மார்த்தாண்டம் பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் குழித்துறை நகராட்சி அதிகாரிகளுடன் குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளின் பல்வேறு மக்கள் பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தெய்வத்திரு வசந்தகுமார் அவர்களின் முயற்சியால் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட மார்த்தாண்டம் காந்தி மைதானத்தில் அமைந்துள்ள பொது கழிப்பறை மக்களால் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதை சுட்டிக்காட்டி அதை மக்கள் பயன்படுத்தும் வகையில் தயார் செய்ய கேட்டுக் கொண்டார்.

மேலும் மார்த்தாண்டம் நகரின் அனைத்து கழிவு நீர்களும் அட்டைகுளம் கால்வாய் வழியாக கொல்லன் குளத்தில் கலப்பது குறித்தும் அட்டைக் குளத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் அதிகாரிகளுடன் சென்று காந்தி மைதானத்தில் உள்ள கழிப்பறை வசதியை ஆய்வு மேற்கொண்டார்.
இந்தக் கூட்டத்தில் நகராட்சி ஆணையர், நகராட்சி பொறியாளர், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் குருந்தன்கோடு சந்திப்பில் நடைபெற்ற பொது கூட்டத்தில் ஜனநாயகத்தை அழிக்க துடிக்கும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக விஜய் வசந்த் எம்.பி. குரல் கொடுத்தார்.
திருவட்டார் பகுதியை சேர்ந்த பல இளைஞர்கள் காங்கிரஸ் கட்சி மீதும், தலைவர் ராகுல் காந்தி மீதும் நம்பிக்கை கொண்டு காங்கிரஸ் பேரியக்கத்தில் தங்களை இணைத்து கொண்டனர். அவர்களை காங்கிரஸ் கட்சிக்கு விஜய் வசந்த் எம்.பி. வரவேற்றார்.
- உங்களுடன் ஸ்டாலின் திட்டம் சூப்பர் ஹிட் ஆனதை பொறுக்க முடியாமல் நீதிமன்றம் சென்றார் எடப்பாடி பழனிசாமி.
- ஊர் ஊராக சுந்தரா டிராவல்ஸ் பேருந்தில் சென்று பொய்களை உரக்க பேசினால் மக்கள் நம்பிவிடுவர் என நினைக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
உடுமலை:
உடுமலையில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
* அ.தி.மு.க. ஆட்சியில் திருப்பூர் புறக்கணிப்பட்டது.
* அ.தி.மு.க. ஆட்சியில் திருப்பூர் மாவட்டத்திற்கு ஏதாவது செய்திருக்கிறார்களா?
* திருப்பூரில் கலைஞர் அறிவித்த 5 பாலங்கள் அமைக்க உத்தரவிட்ட நிலையில், பணியை முடக்கியது அ.தி.மு.க. ஆட்சி.
* அ.தி.மு.க. ஆட்சியில் நிறுத்தப்பட்ட 3 ரெயில்வே பாலம் உள்பட 5 பாலங்கள் தி.மு.க. ஆட்சியில் மீண்டும் நடைபெறுகிறது.
* அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை தி.மு.க. ஆட்சியில் பணி முடித்து செயல்படுத்தி வருகிறோம்.
* உங்களுடன் ஸ்டாலின் திட்டம் சூப்பர் ஹிட் ஆனதை பொறுக்க முடியாமல் நீதிமன்றம் சென்றார் எடப்பாடி பழனிசாமி.
* ஊர் ஊராக சுந்தரா டிராவல்ஸ் பேருந்தில் சென்று பொய்களை உரக்க பேசினால் மக்கள் நம்பிவிடுவர் என நினைக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
* அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு நீதிமன்றத்தை நாடாதீர் என கண்டனம் தெரிவித்த நீதிமன்றம் அபராதமும் விதித்தது.
* எடப்பாடி பழனிசாமி எந்த தைரியத்தில் மேற்கு மண்டலத்தில் இருந்து பிரசார பயணத்தை தொடங்கினார்?
* எந்த தைரியத்தில் திருப்பூரில் இருந்து தேர்தல் பிரசாரத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்கினார் என தெரியவில்லை.
* அ.தி.மு.க.வின் தோல்விப்பயணம் இதே மேற்கு மண்டலத்தில் இருந்து தொடங்கிவிட்டது என்றார்.
- டெல்லிக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னைக்கு திருப்பி விடப்பட்டது.
- விமானம் சென்னையில் பாதுகாப்பாக தரையிறங்கியதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
நேற்று இரவு திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லிக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னைக்கு திருப்பி விடப்பட்டது.
விமானம் சென்னையில் பாதுகாப்பாக தரையிறங்கியதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
விமானத்தில் பயணித்தவர்களில் கே.சி.வேணுகோபால், கே.ராதாகிருஷ்ணன், கொடிக்குன்னில் சுரேஷ் மற்றும் அடூர் பிரகாஷ் உள்ளிட்ட நான்கு கேரள எம்.பி.க்கள் அடங்குவர்.
கடந்த ஜுன் மாதம் 12 ஆம் தேதி நடந்த அகமதாபாத் விமான விபத்துக்குப் பிறகு ஏர் இந்தியா விமானங்களில் தொடர்ச்சியாக தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
- தி.மு.க. ஆட்சியில் திருப்பூர் மாவட்டத்திற்கு எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
- காங்கேயம் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட உள்ளது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அரசு விழாவில் பங்கேற்ற பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதன்பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
* அண்ணா, கலைஞர் படங்களில் பாடல் இயற்றிய நாராயண கவியின் சொந்த ஊர் உடுமலை. இயற்கை எழில் சூழ்ந்து, சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு இனிப்பான சர்க்கரை அள்ளித்தரும் ஊர் உடுமலை.
* இயற்கை, கலை, இலக்கியம் என அனைத்து துறைகளின் கோட்டை தான் உடுமலைப்பேட்டை.
* ஆறுகள், மலைகள் என இயற்கை எழில் சூழ்ந்த உடுமலைக்கு வந்ததில் மகிழ்ச்சி.
* பெரியாரும், அண்ணாவும் சந்தித்த திருப்பூர் மாவட்டங்களில் இன்று விழா நடைபெறுகிறது.
* தி.மு.க. ஆட்சியில் திருப்பூர் மாவட்டத்திற்கு எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
* காங்கேயம் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட உள்ளது.
* தாராபுரம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்தப்பட உள்ளது.
* ரூ.172 கோடியில் நொய்யல் ஆறு மேம்பாடு செய்யப்பட உள்ளது. கீழக்கோவிலில் பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது.
* திருப்பூர் நியோ டைடல் பூங்கா, 7 ஊராட்சிகளுக்கு கூட்டுக்குடிநீர் செயல்படுத்தப்பட உள்ளது.
* நீராறு, நல்லாறு, ஆனைமலையாறு திட்டப்பணிகளை விரைவில் செயல்படுத்த உள்ளோம்.
* பரம்பிக்குளம் ஆழியாறு பாசனப்பகுதியை தூர்வாற ரூ.10 கோடி ஒதுக்கப்படும்.
* நவீன வசதிகளுடன் ரூ.9 கோடியில் மாவட்ட மைய நூலகம் அமைக்கப்படும். ரூ.5 கோடியில் பல்நோக்கு விளையாட்டு அரங்கம், உப்பாற்றின் குறுக்கே ரூ.7 கோடியில் புதிய தடுப்பனை கட்டப்படும்.
* ரூ.6.5 கோடியில் புதிய வெண்ணெய் தொழிற்சாலை அமைக்கப்படும்.
* அரசு பள்ளிக்கு நிலம் அளித்த சாதிக் பாட்ஷா பெயரில் சாலை அமைக்கப்படும் என்றார்.
- ஏத்தாப்பூர், வீரகனூர், கரியகோவில் உள்பட பல பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை.
- மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.
குறிப்பாக சேலம் கிழக்கு மாவட்ட பகுதிகளான வாழப்பாடி, ஏத்தாப்பூர், வீரகனூர், கரியகோவில் உள்பட பல பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கன மழை கொட்டியது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.
ஏற்காட்டில் நேற்று பெய்த சாரல் மழையால் அங்கு குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இதனால் அங்கு ரம்மியமான சூழல் நிலவியதால் அங்கு வசிக்கும் பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர்.
சேலம் மாநகரில் நேற்றிரவு 7 மணியளவில் தொடங்கிய மழை சாரல் மழையாக அரை மணி நேரம் பெய்தது . மழையை தொடர்ந்து சேலம் மாநகரிலும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. மாவட்டத்தில் அதிக பட்சமாக வாழப்பாடியில் 28 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலம் மாநகர் 8.4, ஏற்காடு 12.8, வாழப்பாடி 28, ஆனைமடுவு 17, ஆத்தூர்11.6, கெங்கவல்லி 10, தம்மம்பட்டி 15, ஏத்தாப்பூர் 27, கரியகோவில் 22, வீரகனூர் 20, நத்தக்கரை 15, ஓமலூர் 1.5, டேனீ ஷ்பேட்டை 1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 189.80 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
- பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
- தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்ப்பு நிலவியது.
தஞ்சாவூர்:
தென்னிந்திய கடலின் மேற்பரப்பில் வணிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதன்படி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் விடிய விடிய கனமழை வெளுத்து வாங்கியது.
தஞ்சை மாவட்டத்தில் நேற்று மதியம் வரை வெயில் அடித்தது. அதன் பின்னர் மாலையில் மழை பெய்தது. 1 மணி நேரம் கனமழை கொட்டியது. தொடர்ந்து இரவு முழுவதும் விட்டு விட்டு கனமழை பெய்தன.
இன்று அதிகாலையில் தஞ்சை, பாபநாசம், வல்லம், குருங்குளம், திருவையாறு, திருவிடைமருதூர், அய்யம்பேட்டை, கும்பகோணம், பட்டுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டியது.
தஞ்சையில் நேற்று இரவு பெய்ய தொடங்கிய மழை இன்று காலை வரை விடிய விடிய கொட்டி தீர்த்தது. தொடர்ந்து 3 மணி நேரத்துக்கும் மேலாக இடைவிடாமல் பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது.
திருக்காட்டுப்பள்ளி, பூதலூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் பெய்த மழை இன்று காலையும் நீடித்தது. தொடர் மழையால் மக்கள் வீட்டுக்குள்ளே முடங்கினர். மதுக்கூரில் இடைவிடாது பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் ஓடின. காலையில் சாலை தெரியாத அளவுக்கு மழை பெய்ததால் வாகனங்களில் சென்றவர்கள் முகப்பு விளக்கை ஓளிர விட்டப்படி சென்றனர்.
தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் விடுமுறை அறிவிப்பு ஏதும் வராத நிலையில் மாணவர்கள் ஏமாற்றமடைந்தனர். அலுவலகம் செல்வோர் குடைப்பிடித்தபடியும், இருசக்கர வாகனத்தில் செல்வோர் ரெயின்கோட் அணிந்தபடியும் சென்றனர். தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. மாவட்டத்தில் அதிகபட்டசமாக பாபநாசத்தில் 79 மி.மீ மழை அளவு பதிவானது.
மழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் அறுவடை செய்யப்பட்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள நெல்மணிகள் சேதம் அடையுமோ என விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். மேலும் தார்பாயால் மூடி வைக்கப்பட்டுள்ள நெல்மணிகளும் நனைந்து சேதமாகும் அபாயம் உள்ளது. உனவே உடனுக்குடன் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். ஈரப்பதத்தை காரணம் காட்டி கொள்முதல் செய்ய மறுக்க கூடாது என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்று காலை 9 மணியுடன் முடிவடைந்த மழையின் அளவு மி.மீ.யில் வருமாறு :-
பாபநாசம்-79, தஞ்சாவூர்-60, திருவையாறு-60, மஞ்சளாறு-49, கீழணை-56.40, கும்பகோணம்-50, கல்லணை-43.40, குருங்குளம்-42.40, திருக்காட்டுபள்ளி-37.20. மாவட்டத்தில் ஒரே நாளில் 809.10 மி.மீ. பெய்துள்ளது குறிப்பிடதக்கது.
இதைப்போல் நாகப்பட்டினம் மாவட்டம் நாகை, நாகூர், வேளாங்கண்ணி, திருப்பூண்டி, மேலப்பிடாகை, கீழையூர், கீழ்வேளூர், திருமருகல், திட்டச்சேரி, தேவங்குடி, கட்டுமாவடி, திருச்செங்காட்டங்குடி, வேதாரண்யம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது.
குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயிர்களுக்கு உரம் உள்ளிட்ட இடுபொருள்கள் தெளித்த நிலையில் தண்ணீர் தேவையான நேரத்தில் இந்த மழை பெய்தது கடைமடை விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் 40.30 மில்லிமீட்டர், திருப்பபூண்டி 38, வேளாங்கண்ணி 70, திருக்குவளை 32, தலைஞாயிறு 75, வேதாரண்யம் 60, கோடியக்கரையில் 42.20 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி இருந்தது.
இதைப்போல் திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.
- முதலமைச்சர் கார் மூலம் திருப்பூர் மாவட்டம் உடுமலை சென்றார் .
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் இன்றும், நாளையும் கள ஆய்வுப்பணி மேற்கொள்கிறார்.
இதற்காக நேற்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனையடுத்து கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ சென்றார். வழிநெடுக பொதுமக்கள் கூடிநின்று அவரை வரவேற்றனர்.
இதனையடுத்து முதலமைச்சர் கார் மூலம் திருப்பூர் மாவட்டம் உடுமலை சென்றடைந்தார். .
இந்நிலையில், உடுமலையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் திடலுக்கு வரும் வழியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ நடத்தினார். சாலையின் இருபுறமும் நின்று பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.






