என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் உபரிநீர் திறப்பும் அதிகரித்து காணப்படுகிறது.
    • மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.23 அடியாக உள்ளது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக உபரிநீர் அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக இந்தாண்டில் மேட்டூர் அணை 5 முறை நிரம்பியது. பின்னர் நீர்வரத்து குறைந்ததாலும், அணையில் இருந்து அதிகளவில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதாலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைய தொடங்கியது.

    இதற்கிடையே கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் உபரிநீர் திறப்பும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் உயர தொடங்கியுள்ளது.

    மேட்டூர் அணைக்கு நேற்று மாலை வினாடிக்கு 29 ஆயிரத்து 360 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று 31 ஆயிரத்து 854 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 119.23 அடியாக உள்ளது. இதே போல் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 22 ஆயிரத்து 500கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 850 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 92.24 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    • யமுனாபாய் வீட்டுக்கு திரும்பி சென்றபோது வீட்டில் நகை கொள்ளை போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    வண்டலூர்:

    சிங்கப்பெருமாள் கோவில், பாரதியார் தெருவை சேர்ந்தவர் யமுனாபாய். இவரது மகன் ரத்தீஸ். தி.மு.க.பிரமுகரான இவர் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய தி.மு.க. இளைஞரணி செயலாளராக உள்ளார். பஸ், லாரிகள் வைத்து தொழில் செய்து வருகிறார். யமுனாபாய் தனியாகவும், ரத்தீஸ் குடும்பத்துடன் தனியாகவும் அருகருகே வீட்டில் வசித்து வருகிறார்கள்.

    நேற்று மாலை யமுனாபாய் வீட்டை பூட்டிவிட்டு மகன் வீட்டுக்கு வந்தார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் யமுனாபாயின் வீட்டுக்குகள் பூட்டை உடைத்து புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 140 பவுன் நகை மற்றும் விலை உயர்ந்த பொருட்களை அள்ளிசென்று விட்டனர்.

    இன்று காலை யமுனாபாய் வீட்டுக்கு திரும்பி சென்றபோது வீட்டில் நகை கொள்ளை போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து மறைமலை நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் அங்கு பதிந்து இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.

    யமுனாபாய் வீட்டை பூட்டிவிட்டு வெளியே செல்லும் நேரத்தை நோட்ட மிட்டு மர்ம நபர்கள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டு உள்ளனர். இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடிவருகிறார்கள்.

    • இரவு முதலே லாரி லாரியாக குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றன.
    • 3 பொக்லைன் எந்திரங்கள் மூலமும் குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்று வருகின்றன.

    இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 27-ந் தேதி கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.

    இந்து முன்னணி மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்ட இந்த சிலைகளுக்கு கடந்த 5 நாட்களாக பூஜை செய்யப்பட்டன.

    இந்த விநாயகர் சிலைகள் சென்னையில் நேற்று ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பட்டினப்பாக்கம், காசிமேடு, எண்ணூர், திருவொற்றியூர், பாலவாக்கம் உள்ளிட்ட கடற்கரைகளில் கரைக்கப்பட்டன.

    மயிலாப்பூர், கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி, கோயம்பேடு, அண்ணா நகர், கொளத்தூர், பூக்கடை, புளியந்தோப்பு, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வழிபாட்டுக்காக வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் ஆட்டோக்கள் மினி லாரிகள் மற்றும் லாரிகளில் வைத்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு பட்டினப்பாக்கம் கடலில் கரைக்கப்பட்டன.

    சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியில் முழுவதும் கரையாத விநாயகர் சிலைகளின் எஞ்சிய பாகங்கள், மாலைகள், மரக்கட்டைகள், இரும்பு கம்பிகள் என டன் கணக்கில் குப்பைகள் குவிந்துள்ளன.

    இந்நிலையில் கரை ஒதுங்கிய குப்பைகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இரவு முதலே லாரி லாரியாக குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றன. 3 பொக்லைன் எந்திரங்கள் மூலமும் குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்று வருகின்றன.

    குப்பைகளை 100-க்கணக்கான லாரிகள் மூலம் அகற்றும் பணியில் துப்புரவு பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    • கே.ஆர்.எஸ். அணையில் இருந்து திறக்கப்பட்ட வினாடிக்கு 35 ஆயிரம் கன அடி நீர் மட்டும் தமிழகத்துக்கு வருகிறது.
    • காவிரி ஆற்றில் குளிக்க முடியாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    தருமபுரி:

    கேரள மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விட்டு, விட்டு கனமழை பெய்து வருகிறது.

    இதனால் கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 124.36 அடியாக இருந்தது. அணையின் மொத்த நீர்மட்ட கொள்ளளவு 124.80 அடி ஆகும்.

    அணைக்கு வினாடிக்கு 27 ஆயிரத்து 491 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 35 ஆயிரம் கன அடி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டது.

    இதேபோல் கபினி அணையின் நீர்மட்டம் 2,277.75 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 13 ஆயிரத்து 37 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படவில்லை.

    இதனால் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து திறக்கப்பட்ட வினாடிக்கு 35 ஆயிரம் கன அடி நீர் மட்டும் தமிழகத்துக்கு வருகிறது.

    கடந்த சில நாட்களாக நீர் திறப்பு குறைக்கப்பட்டு இருந்த நிலையில் கர்நாடகத்தில் மீண்டும் மழைப்பொழிவு அதிகரித்து இருப்பதால் தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    இந்த தண்ணீர் தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற்றில் கரைபுரண்டு தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.

    இந்த நிலையில் நேற்று காலை வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடியாக வந்தது. மேலும் அதிகரித்து மாலை 32 ஆயிரம் கனஅடியாக வந்தது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து அதே அளவு நீடித்து வந்தது. இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண் ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதுடன், மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதையில் பெருக்கெடுத்து ஓடியது.

    நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடைவிதித்து 2-வது நாளாக மாவட்ட கலெக்டர் சதீஷ் உத்தரவிட்டுள்ளார்.

    காவிரி ஆற்றில் குளிக்க முடியாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இருப்பினும் அருவியின் அழகையும், காவிரி ஆற்றின் அழகையும் கண்டு ரசித்தவாறு அவர்கள் அங்கிருந்து திரும்பி சென்றனர்.

    கர்நாடக அணைகளில் இருந்து அதிக அளவில் உபரிநீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்க உள்ளது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்தை இருமாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • பூலித்தேவர் தொலைநோக்குப் பார்வைமிக்க தலைவர், சாதுர்யமான உத்திவகுப்பாளர்.
    • பாரத விடுதலைக்கான ஆரம்பகால மற்றும் மிகவும் வலிமையான போராட்டங்களில் ஒன்றை வழிநடத்தினார்.

    தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    பாரதத் தாயின் வீர மகன் பூலித்தேவர் அவர்களின் பிறந்தநாளில், தேசம் அவருக்கு உளமாற மரியாதை செலுத்துகிறது.

    தொலைநோக்குப் பார்வைமிக்க தலைவர், சாதுர்யமான உத்திவகுப்பாளர் மற்றும் அச்சமற்ற போர்வீரரான அவர் கொடுங்கோல் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்கு எதிராக உறுதிபட நின்று, பாரத விடுதலைக்கான ஆரம்பகால மற்றும் மிகவும் வலிமையான போராட்டங்களில் ஒன்றை வழிநடத்தினார். அவரது லட்சியங்கள், தியாகங்கள் மற்றும் மரபுகள், விடுதலை போராட்டத்துக்கு வலுவான அடித்தளமிட்ட இடைவிடாத போராட்டத்தில் மக்களை ஒன்றிணைத்தன. அவை நீடித்த வலிமையின் மூலாதாரமாகத் தொடர்ந்து வலுவான, மீள்தன்மை மற்றும் வளமான #வளர்ச்சியடைந்தபாரதத்தை உருவாக்குவதற்கான நமது தேசிய உறுதிப்பாட்டை ஊக்குவிக்கின்றன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சுங்கக்கட்டணம் நள்ளிரவு முதல் 5 முதல் 7 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு அமலுக்கு வந்தது.
    • சுங்கக்கட்டண உயர்வால் வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    சென்னை:

    மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் 1 லட்சத்து 44 ஆயிரத்து 634 கிலோ மீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் உள்ள 892 சுங்கச்சாவடிகளில் 675 சுங்கச்சாவடிகள் பொது நிதியளிப்பு பிரிவிலும், 180 சுங்கச்சாவடிகள் அரசின் சலுகை பெற்றவையாகவும், செயல்படுகின்றன.

    சுங்கச்சாவடிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்து கட்டணம் வசூலித்து வருகிறது. அந்தவகையில், தமிழகத்தில் 6 ஆயிரத்து 606 கிலோ மீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 78 சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன. இதில் ஆண்டொன்றுக்கு 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது.

    தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி, கடந்த 1992-ம்ஆண்டு போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008-ம் ஆண்டு போடப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. கடந்த ஏப்ரல் 1-ந் தேதி விழுப்புரம், அரியலூர், புதுக்கோட்டை உள்பட பல இடங்களில் 40 சுங்கச்சாவடிகளில், 5 முதல் 10 சதவீதம் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டது.

    இந்தநிலையில், விழுப்புரம், திருச்சி, மதுரை, நெல்லை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் குறிப்பாக விக்கிரவாண்டி, சமயபுரம், ஓமலூர் உள்ளிட்ட 38 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் நள்ளிரவு முதல் 5 முதல் 7 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு அமலுக்கு வந்தது. இந்த கட்டண உயர்வால் வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் சுங்க கட்டண விவரம்:-

    கார், ஜீப், பயணிகள் வேன் ஆகியவற்றுக்கு மாற்றமின்றி ஒரு வழி கட்டணம் ரூ.105, பல முறை பயணிக்க புதிய கட்டணம் ரூ.160 (பழைய கட்டணம் ரூ.155), மாதாந்திர கட்டணம் ரூ.3,170 (ரூ.3,100) இலகு ரக வாகனம் ஒரு வழி கட்டணம் ரூ.185 (ரூ.180), பல முறை பயணிக்க ரூ.275 (ரூ.270), மாதாந்திர கட்டணம் ரூ.5,545 (ரூ.5,420), லாரி, பஸ் ஒரு வழி கட்டணம் ரூ.370 (ரூ.360), பல முறை பயணிக்க ரூ.555 (ரூ.540), பல அச்சு வாகனம் ஒரு வழி கட்டணம் ரூ.595 (ரூ.580), பல முறை பயணிக்க ரூ.890 (ரூ.870), மாதாந்திர கட்டணம் ரூ.17,820 (ரூ.17,425). இவ்வாறு ரூ.5 முதல் ரூ.70 வரை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

    சுங்க கட்டணம் எவ்வளவு உயர்வு?

    மதுரை - எலியார்பத்தி சுங்கச்சாவடியில் கார், வேன், ஜீப் உள்ளிட்ட வாகனங்களுக்கு பழைய கட்டணத்தில் இருந்து ஒரு முறை, இருமுறை பயணத்திற்கு ரூ.5 கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. மாதாந்திர கட்டணம் ரூ.65 கூடுதல் வசூலிக்கப்படுகிறது.

    இலகுரக வாகனங்களுக்கு ஒரு முறை செல்ல கட்டணம் உயர்த்தப்படவில்லை. இருமுறை பயணத்திற்கு ரூ.5, மாதாந்திர கட்டணம் ரூ.105 கூடுதல் வசூலிக்கப்பட உள்ளது. லாரி பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு ஒரு முறை செல்ல ரூ.5 இருமுறை பயணத்திற்கு ரூ.10 கூடுதல் மாதாந்திர கட்டணம் ரூ.215 வசூலிக்கப்பட உள்ளது.

    இரண்டு அச்சு, மிக கனரக வாகனங்களுக்கு ஒரு முறை ரூ.5 இருமுறை பயணத்திற்கு ரூ.20 கூடுதல் மாதாந்திர கட்டணம் ரூ.345 கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. 

    • கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,120-ம் உயர்ந்துள்ளது.
    • தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலையும் அதிரடியாக அதிகரித்து வருகிறது.

    சென்னை:

    தங்கம் விலை மீண்டும் எகிறத் தொடங்கியுள்ளது. கடந்த 6-ந்தேதி ஒரு சவரன் ரூ.75 ஆயிரத்தை மீண்டும் தாண்டிய நிலையில், பின்னர் விலை குறைந்து காணப்பட்டது. அதன்பின்பு கடந்த 21-ந்தேதியில் இருந்து விறுவிறுவென விலை அதிகரித்து தொடர்ந்து ஏறுமுகத்தை நோக்கி பயணிக்கிறது. அதாவது, கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.390-ம், சவரனுக்கு ரூ.3,120-ம் உயர்ந்துள்ளது. தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலையும் அதிரடியாக அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.77 ஆயிரத்து 640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ரூ.9,705-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.136-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    31-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.76,960

    30-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.76,960

    29-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.76,280

    28-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.75,240

    27-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.75,120

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    31-08-2025- ஒரு கிராம் ரூ.134

    30-08-2025- ஒரு கிராம் ரூ.134

    29-08-2025- ஒரு கிராம் ரூ.131

    28-08-2025- ஒரு கிராம் ரூ.130

    27-08-2025- ஒரு கிராம் ரூ.130

    • பால் விலை உயர்வு, போக்குவரத்துச் செலவு அதிகரித்துள்ளதாள் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
    • காபி ரூ.15ல் இருந்து ரூ.20 ஆகவும் உயர்த்தப்படுகிறது

    சென்னையில் இன்று முதல் டீ, காபி விலை உயர்த்தப்படுவதாக டீ கடை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

    இன்று முதல் ஒரு கிளாஸ் டீ ரூ.12ல் இருந்து ரூ.15 ஆகவும், காபி ரூ.15ல் இருந்து ரூ.20 ஆகவும் உயர்த்தப்படுகிறது

    பால் விலை, டீ/காபி தூள் விலை உயர்வு, போக்குவரத்துச் செலவு அதிகரிப்பால் இம்முடிவு என டீ கடை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

    01-09-2025 முதல் டீக்கடை விலைபட்டியல்

    பால் - ரூ.15

    லெமன் டீ - ரூ.15

    காபி - ரூ.20

    ஸ்பெஷல் டீ - ரூ.20

    ராகி மால்ட் - ரூ.20

    சுக்கு காபி - ரூ.20

    பூஸ்ட் - ரூ.25

    ஹார்லிக்ஸ் - ரூ.25

    பார்சல்

    கப் டீ - ரூ.45

    கப்-பால் - ரூ.45

    கப் காபி - ரூ.60

    ஸ்பெஷல் கப் டீ - ரூ.60

    ராகி மால்ட் - ரூ.60

    சுக்கு காபி - ரூ.60

    பூஸ்ட் - ரூ.70

    ஹார்லிக்ஸ் கப் - ரூ.70

    ஸ்னாக்ஸ்

    போன்டா / பஜ்ஜி / சமோசா 15 /- (Each)

    • உழைப்பால் உயர்ந்துள்ள இனம்தான் தமிழ் இனம்.
    • ஆண்டுக்கு ஒருமுறையாவது தமிழ்நாட்டிற்கு வாருங்கள், தமிழ்நாடு அடைந்துள்ள மாற்றங்களை காண வாருங்கள்.

    தமிழ்நாட்டுக்கு புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 8 நாள் பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு நேற்று முன்தினம் புறப்பட்டார்.

    டசெல்டோர்ப் விமான நிலையத்தில், நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள், குழந்தைகள், சமூக தலைவர்கள் மற்றும் குடும்பத்தினர் மலர்கள் மற்றும் பதாகைகளை ஏந்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இந்நிலையில் ஜெர்மனியில் நடைபெற்ற மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * ஜெர்மனியில் தமிழ் ஆரவாரத்தை கேட்கும்போது தமிழ் மண்ணில் இருப்பதை போன்று உணர்ந்தேன்.

    * பல்லாயிரம் கிலோ மீட்டர்களை கடந்து நீங்களும் நானும் சந்திப்பது தான் தமிழ் பாசம்.

    * வெளிநாடுகளில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு சென்னை கூட்டி வந்துள்ளோம்.

    * உக்ரைன், சூடான், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் சிக்கித்தவித்த மாணவர்களை மீட்டு வந்திருக்கிறோம்.

    * அயலக தமிழர்களை அரவணைக்க தமிழக அரசும் நானும் எப்போதும் இருப்போம்.

    * உழைப்பால் உயர்ந்துள்ள இனம்தான் தமிழ் இனம்.

    * தமிழ்நாடு வளர வேண்டும் என முடிந்த உதவிகளை தாய் மண்ணுக்கு செய்யுங்கள்.

    * தமிழர் தொன்மையின் பண்பாட்டு சின்னங்களை உங்கள் குழந்தைகளுக்கு காட்ட தமிழ்நாடு வாருங்கள்.

    * இந்த உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் தமிழர் என்பதையும் தமிழ்நாட்டையும் மறக்காதீர்.

    * தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் வேகமாக முன்னேறி வருகிறது.

    * ஜெர்மனியில் நீங்கள் சிறியதாக தொழில் செய்தாலும் அதனை தமிழ்நாட்டிலும் தொடங்க முன்வாருங்கள்.

    * ஆண்டுக்கு ஒருமுறையாவது தமிழ்நாட்டிற்கு வாருங்கள், தமிழ்நாடு அடைந்துள்ள மாற்றங்களை காண வாருங்கள்.

    * தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய மாணவர்களின் கல்விக்கு உங்களால் இயன்றதை செய்யுங்கள்.

    * உரிமையோடும் நம்பிக்கையோடும் வந்து முதலீடு செய்யுங்கள். முதலீட்டாளர்களை அழைத்து வாருங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • களை மறக்காத ஜெர்மனி நாட்டுத் தமிழ் உறவுகள் அடைந்துள்ள உயரம் கண்டு உள்ளம் பூரித்தேன்.
    • உங்கள் சகோதரன்தான் முதலமைச்சராக இருக்கிறான் என்ற உரிமையோடும் நம்பிக்கையோடும் வந்து முதலீடு செய்யுங்கள்.

    தமிழ்நாட்டுக்கு புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 8 நாள் பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு நேற்று முன்தினம் புறப்பட்டார்.

    டசெல்டோர்ப் விமான நிலையத்தில், நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள், குழந்தைகள், சமூக தலைவர்கள் மற்றும் குடும்பத்தினர் மலர்கள் மற்றும் பதாகைகளை ஏந்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    ஜெர்மனியில் அவரது பயணத்திட்டத்தின் ஒரு பகுதியாக, ஐரோப்பா முழுவதும் உள்ள தமிழ்ச் சங்கங்களால் ஏற்பாடு செய்த நூற்றுக்கணக்கான அயலக தமிழர்கள் கலந்து கொண்ட மாபெரும் தமிழ் பண்பாட்டு நிகழ்ச்சி நேற்று நடந்தது.

    இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். தமிழ் அடையாளத்தைப் பாதுகாப்பதற்கும், தமிழ்நாட்டின் சிறப்பை வெளிநாடுகளில் மேம்படுத்துவதற்கும் பங்களித்த ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பல தமிழ்ச் சங்கங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவுரவித்தார்.

    இதைத்தொடர்ந்து டசெல்டோர்பில் இன்று உயர்நிலை முதலீட்டாளர் மாநாடு நடக்கிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்று, உலகளாவிய முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்களுடன் நேரடியாக கலந்துரையாடுகிறார்.

    இந்நிலையில் தமிழகத்தில் தொழில் தொடங்க வாருங்கள் என்று ஜெர்மனிவாழ் தமிழர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    களை மறக்காத ஜெர்மனி நாட்டுத் தமிழ் உறவுகள் அடைந்துள்ள உயரம் கண்டு உள்ளம் பூரித்தேன். அவர்கள் அளித்த வரவேற்பின் ஆரவாரத்தில் அகம் குளிர்ந்தேன்.

    தமிழ்நாட்டுக்கு வாருங்கள், நமது #DravidianModel அரசு அமைத்து வரும் தமிழர் தொன்மையின் பண்பாட்டுச் சின்னங்களைக் காணுங்கள்!

    உங்கள் சகோதரன்தான் முதலமைச்சராக இருக்கிறான் என்ற உரிமையோடும் நம்பிக்கையோடும் வந்து முதலீடு செய்யுங்கள், முதலீட்டாளர்களை அழைத்து வாருங்கள்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும் சிட்டி யூனியன் வங்கியின் 120-வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
    • திருச்சி சென்று, ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார்.

    சென்னை:

    ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக நாளை தமிழகம் வருகிறார். நாளை மதியம் சென்னைக்கு வரும் அவர், நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும் சிட்டி யூனியன் வங்கியின் 120-வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். இந்த விழாவில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனும் கலந்துகொள்கிறார்.

    நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அன்றையதினம் இரவு சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் ஜனாதிபதி தங்குகிறார். நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு திரவுபதி முர்மு திருச்சி செல்கிறார். பின்னர் திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் செல்கிறார்.

    மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்க உள்ளார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் திருச்சி சென்று, ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார். இதைத்தொடர்ந்து திரவுபதி முர்மு, திருச்சியில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

    ஜனாதிபதியின் சென்னை வருகையையொட்டி டிரோன்கள் பறக்க விடுவதற்கு தடை விதித்து சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார். திரவுபதி முர்மு பங்கேற்கும் நந்தம்பாக்கம் நிகழ்ச்சிக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதபோல அவர் கவர்னர் மாளிகையில் தங்குவதாலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    • செப்டம்பர் மாதத்திற்கான வணிக சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
    • வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

    சென்னை:

    சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே சிலிண்டர் விலையை தீர்மானித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து இந்நிறுவனங்கள் சிலிண்டர் விலையை தீர்மானிக்கின்றன.

    இந்நிலையில், செப்டம்பர் மாதத்திற்கான வணிக சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது

    சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்களின் விலை 51 ரூபாய் 50 காசுகள் குறைந்து ரூ.1,737.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் ரூ.1,789-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

    வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமுமின்றி ரூ.868.50-க்கு விற்பனையாகிறது.

    தலைநகர் டெல்லியில் ரூ.1,580, கொல்கத்தாவில் ரூ.1,684, மும்பையில் ரூ.1531.50க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    ×