என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • மிளகாய் பொடி தூவி, காரின் கண்ணாடியை உடைத்து அதில் வைத்திருந்த 10 கிலோ தங்கத்தை கொள்ளை அடித்துக் கொண்டு தப்பி சென்றனர்.
    • நகைக்கடை மேலாளர் சமயபுரம் போலீசில் புகார் செய்தார்.

    திருச்சி:

    சென்னை சவுகார்பேட்டையில் பிரபல ஆர்.கே. ஜுவல்லரி அமைந்துள்ளது. இவர்கள் தமிழகம் முழுவதும் உள்ள நகைக்கடைகளுக்கு ஆபரண தங்கம் விற்பனை செய்து வருகிறார்கள். அந்த வகையில் ஆர் கே ஜுவல்லரி மேலாளர் கடந்த 8-ந் தேதி சென்னையில் இருந்து கிலோ கணக்கில் ஆபரண தங்கத்தை எடுத்துக் கொண்டு காரில் திண்டுக்கல் சென்றார்.

    பின்னர் அங்கு சில கடைகளுக்கு ஆபரண நகைகளை விற்பனை செய்துவிட்டு மீதமுள்ள 10 கிலோ தங்கத்துடன் நேற்று இரவு 3 ஊழியர்களுடன் சென்னை திரும்பினர்.

    திருச்சி- சென்னை பைபாஸ் சாலையில் சமயபுரம் அருகே உள்ள கொணலை பகுதியில் சிறுநீர் கழிப்பதற்காக காரை நிறுத்தினர். அப்போது அங்கு வந்த ஒரு மர்ம கும்பல் அவர்கள் மீது மிளகாய் பொடி தூவி, காரின் கண்ணாடியை உடைத்து அதில் வைத்திருந்த 10 கிலோ தங்கத்தை கொள்ளை அடித்துக் கொண்டு தப்பி சென்றனர். உடனடியாக நகைக்கடை மேலாளர் சமயபுரம் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் 4 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

    காரை வழிமறித்து கார் கண்ணாடியை உடைத்து 10 கிலோ ஆபரண தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் திருச்சி மற்றும் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சென்னை, கலைவாணர் அரங்கத்தில் தொடங்கி வைத்து, குழந்தைகளுக்கு உதவித் தொகையினை வழங்கவுள்ளார்.
    • தமிழ்நாடு அரசின் முயற்சியால் சேர்க்கப்பட்டுள்ள மாணவ/ மாணவியர்களுக்கு மடிக்கணினிகளும் வழங்கவுள்ளார்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு:-

    ஏற்றமிகு தமிழ்நாட்டை உருவாக்கிட, குழந்தைகளின் கல்வி மற்றும் அவர்களின் சீரான வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகின்றது.

    மிகவும் வறுமையில் வாழும் குடும்பங்களை அடையாளம் கண்டு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தமிழ்நாடு அரசின் "தாயுமானவர்" திட்டத்தின் ஒரு பகுதியாக, பெற்றோர்கள் இருவரையும் இழந்த மற்றும் பெற்றோரில் ஒருவரை இழந்து மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில், "அன்புக்கரங்கள்" திட்டம் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது.

    அக்குழந்தைகளின் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர, மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்குவதுடன், பள்ளிப் படிப்பு முடித்த பின்னர் கல்லூரிக் கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் அவர்களுக்கு வழங்க வழிவகை செய்யும் இத்திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (15-ந் தேதி) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் தொடங்கி வைத்து, குழந்தைகளுக்கு உதவித் தொகையினை வழங்கவுள்ளார்.

    மேலும், பெற்றோர் இருவரையும் இழந்து 12-ஆம் வகுப்பு முடித்து, பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் தமிழ்நாடு அரசின் முயற்சியால் சேர்க்கப்பட்டுள்ள மாணவ/ மாணவியர்களுக்கு மடிக்கணினிகளும் வழங்கவுள்ளார்.

    • இசைஞானி இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    • இது ஒரு பொன்மாலைப் பொழுது என நேற்றைய மாலை ராஜாவின் ராகங்களோடு கரைந்து போனாலும் - உள்ளத்தில் உறைந்து நிற்கிறது!

    சென்னை :

    சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இளையராஜாவின் பொன்விழா ஆண்டு பாராட்டு விழா நேற்று நடந்தது. விழாவில் அரை நூற்றாண்டு காலம் பலரது இதயத்தை ஆண்ட இசைஞானி இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இந்த நிலையில், இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில், இளையராஜாவின் பாராட்டு விழா நிகழ்ச்சி வீடியோவை பகிர்ந்து வெளியிட்டுள்ள பதிவில்,

    இது ஒரு பொன்மாலைப் பொழுது என நேற்றைய மாலை ராஜாவின் ராகங்களோடு கரைந்து போனாலும் - உள்ளத்தில் உறைந்து நிற்கிறது!

    இசைஞானி தமிழ்நாட்டின் பெருமை! அவரைக் கொண்டாடுவது நம் கடமை! என கூறியுள்ளார். 

    • ஓசூர், வேப்பனஹள்ளி மற்றும் தளி ஆகிய மூன்று தொகுதிகளை சேர்த்து ஒரு புதிய மாவட்டமாக உருவாக்க வேண்டும்.
    • தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நிறைய தொழில் முதலீடுகளை ஈர்த்து வருகிறார். அதனை பா.ம.க. வரவேற்கிறது.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இன்று நடைபெற உள்ள மேற்கு மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள கட்சியின் மாநில தலைவர் டாக்டர் ராமதாஸ் நேற்று ஓசூர் வந்தார். பின்னர், ஓசூர் மூக்கண்ட பள்ளி பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஓசூர், வேப்பனஹள்ளி மற்றும் தளி ஆகிய மூன்று தொகுதிகளை சேர்த்து ஒரு புதிய மாவட்டமாக உருவாக்க வேண்டும், ஓசூர் மாநகராட்சியாக உள்ளது.

    ஓசூர் மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என பல்வேறு காலகட்டத்தில் பா.ம.க. சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது.

    ஓசூரில் ஒரு விமான நிலையம் அமைக்க வேண்டும். அதே போல், ஓசூர் நகரத்திற்கு மெட்ரோ ரெயில் கண்டிப்பாக தேவை. நாளுக்கு நாள் ஓசூர் நகரம் வளர்ந்து வருகிறது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நிறைய தொழில் முதலீடுகளை ஈர்த்து வருகிறார். அதனை பா.ம.க. வரவேற்கிறது.

    தந்தை, மகன் பிரச்சனை குறித்த கேள்விக்கு கடந்த 10, மற்றும் 11-ந் தேதியுடன் தீர்ந்து விட்டது. நல்லவை மேலே போகும். தீயவை கீழே போகும் என்ற அவர், அதனை தெலுங்கு மற்றும் கன்னட மொழியில் மொழி பெயர்த்து கூறுமாறு ஜி.கே.மணி மற்றும் முனிராஜிடம் கூறினார்.

    தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சி வளர்ந்து வருகிறது. எங்கள் கட்சி, யாருடன் கூட்டணி என்பது குறித்து நல்ல முடிவை விரைவில் அறிவிப்பேன். அதற்கான அதிகாரத்தை, கட்சியின் பொதுக்குழு எனக்கு அளித்துள்ளது.

    இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார்.

    • திருச்சியில் ரூ.24.78 கோடி மதிப்பீட்டில் பள்ளிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது.
    • தமிழ்நாட்டின் மையப்பகுதியான திருச்சி மாவட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்து பணி மேற்கொள்ளப்படுகிறது.

    திருச்சி:

    திருச்சியில் 2 அமைச்சர்கள் இருந்து எந்த வளர்ச்சியும் இல்லை என த.வெ.க. தலைவர் விஜய் குற்றம்சாட்டி இருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக தி.மு.க. ஆட்சியில் திருச்சி மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ள பணிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பட்டியலிட்டு கூறியதாவது:-

    * கேக்கலையா கேக்கலையா என்று கேட்கும் விஜய், திருச்சியின் வளர்ச்சியை பார்க்கலையா?

    * திருச்சியில் ரூ.24.78 கோடி மதிப்பீட்டில் பள்ளிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது.

    * தமிழ்நாட்டின் மையப்பகுதியான திருச்சி மாவட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்து பணி மேற்கொள்ளப்படுகிறது.

    * கல்லூரி, டைடல் பார்க், அங்காடி, பேருந்து முனையம், ஜல்லிக்கட்டு மைதானம் உள்ளிட்ட திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

    * திருச்சியில் நூலகம், அறிவுசார் மையம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்றார்.  

    • திருச்சியை தொடர்ந்து அரியலூரில் விஜய் பிரசாரம் மேற்கொண்டார்
    • விஜயின் பிரசார பயணத்தை தேசிய பத்திரிகைகளும் களத்தில் இருந்து செய்தி சேகரித்தன.

    த.வெ.க. தலைவர் விஜய் தனது முதல் அரசியல் பிரசாரத்தை தொடங்கினார். விஜயின் வருகையில் நேற்று திருச்சி தொண்டர்களால் குலுங்கியது. கட்டுக்கடங்காத ரசிகர்கள், தொண்டர்கள் கூட்டத்தால் பிரசார களத்திற்கு விஜயால் நேரத்திற்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.

    திருச்சியை தொடர்ந்து அரியலூரில் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். விஜயின் பிரசார பயணத்தை தமிழக செய்தி சேனல்கள் மட்டுமில்லாமல் தேசிய பத்திரிகைகளும் களத்தில் இருந்து செய்தி சேகரித்தன.

    இந்நிலையில், அரியலூரில் பிரபல ஆங்கில செய்தித்தாளின் நிருபர் விஜயின் பிரசார பயணத்தில் செய்தி சேகரித்து கொண்டிருக்கும்போது த.வெ.க. தொண்டர் ஒருவர் நடனமாடிய படியே அவரை செய்தி சேகரிக்க விடாமல் தொந்தரவு செய்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. செய்தியாளரின் கழுத்தில் த.வெ.க. கோடியை போட்டு தொண்டர் ரகளையில் ஈடுபட்டார். தொண்டரின் தொந்தரவை மீறியும் செய்தியாளர் செய்தி சேகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கலைஞர் மகளிர் உரிமைத் தொகை போன்ற திட்டங்கள் விஜய் போன்றவர்கள் சொல்லி கொண்டுவரப்பட்டதல்ல.
    • திமுக அரசின் திட்டங்களால் பயன்பெறும் மக்களுக்கு தெரியும் அரசின் செயல்பாடுகள் பற்றி.

    பெசன்ட்நகர்:

    த.வெ.க. தலைவர் விஜய் நேற்று தனது முதல் அரசியல் பயணத்தை தொடங்கினார். மக்கள் சந்திப்பு என்ற பயணத்தை திருச்சியில் தொடங்கிய விஜய், தி.மு.க. அரசு மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். இதற்கு தி.மு.க. அமைச்சர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில், தி.மு.க. அரசு மீது குற்றம் சுமத்துவதற்கு முன்பாக விஜய் படித்துவிட்டு வந்து பேச வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில்,

    கலைஞர் மகளிர் உரிமைத் தொகை போன்ற திட்டங்கள் விஜய் போன்றவர்கள் சொல்லி கொண்டுவரப்பட்டதல்ல.

    திமுக அரசின் திட்டங்களால் பயன்பெறும் மக்களுக்கு தெரியும் அரசின் செயல்பாடுகள் பற்றி.

    இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதம். தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 11.19 சதவீதம். இதெல்லாம் விஜய் படித்து தெரிந்துக்கொண்டு அதன்பிறகு குற்றம்சாட்டுவது நல்லது என்றார். 

    • பெரம்பலூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயை காண மதியம் முதல் நள்ளிரவு வரை தொண்டர் காத்திருந்தனர்.
    • இரவு 1 மணியை கடந்து விட்டதால் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பெரம்பலூர் மக்கள் சந்திப்பை விஜய் ரத்து செய்தார்.

    த.வெ.க. தலைவர் விஜய் தனது முதல் அரசியல் பிரசாரத்தை தொடங்கினார். விஜயின் வருகையில் நேற்று திருச்சி தொண்டர்களால் குலுங்கியது. கட்டுக்கடங்காத ரசிகர்கள், தொண்டர்கள் கூட்டத்தால் பிரசார களத்திற்கு விஜயால் நேரத்திற்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.

    பெரம்பலூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயை காண மதியம் முதல் நள்ளிரவு வரை தொண்டர் காத்திருந்தனர். இரவு 1 மணியை கடந்து விட்டதால் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பெரம்பலூர் மக்கள் சந்திப்பை விஜய் ரத்து செய்தார்.

    இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் பெரம்பலூர் மக்கள் சந்திப்பு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என த.வெ.க சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.

    தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 19-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி, தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது. 

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
    • கட்டபொம்மன் மெயின் ரோடு, ஜம்புலி தெரு, எம்.எச்.ரோடு.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (15.09.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    ரெட்ஹில்ஸ்: சோத்துபெரும்பேடு, கிருதாலாபுரம், புதூர், அருமந்தை, விச்சூர், மேட்டுப்பாளையம், கண்டிகை, வெள்ளிவயல்.

    செம்பியம்: கட்டபொம்மன் மெயின் ரோடு, ஜம்புலி தெரு, எம்.எச்.ரோடு, வெங்கடேஸ்வரா காலனி 1 முதல் 10வது தெரு, மூலக்கடை, ஆர்.வி.நகர், அன்னை சத்யா நகர், அருள் நகர் மெயின் ரோடு, சீத்தாராம் நகர், எம்.ஆர்.எல். காலனி, காமராஜர் சாலை, சிம்சன் குரூப் ஆப் கம்பெனிகள், ரிஸ்வான் சாலை, பெரியார் நகர்.

    • இப்ப கூட இளையராஜாவின் பழைய பாடல்கள் சினிமாவுல போட்டால் சூப்பர் ஹிட் ஆகிறது.
    • நம் உலகம் வேறு ராஜாவின் உலகம் வேறு என்றார் ரஜினிகாந்த்.

    திரை இசை உலகில் 50 ஆண்டுகளைக் கடந்ததையொட்டி இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

    'சிம்பொனி – சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜா – பொன்விழா ஆண்டு 50' என்ற தலைப்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்த பாராட்டு விழா நடைபெற்றது.

    இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பங்கேற்றனர்.

    விழாவில் பேசிய இளையராஜா, "சில நாட்களுக்கு முன்பு சூப்பர்ஸ்டார் எனக்கு போன் செய்து நாம பண்ணதெல்லாம் மேடையில் சொல்லப்போகிறேன் என்று கூறினார். பெல்பாட்டம் பேண்ட் போட்டுக்கிட்டு நல்லா கிராப் முடி விட்டுட்டு கையில பட்டையா ஒரு வாட்ச் கட்டிக்கிட்டு... என்று கூறிய இளையராஜா ரஜினிகாந்திடம் சொல்லவா சொல்லவா... என்று கூறி மகேந்திரனும் நீங்களும் நானும் உக்காந்து குடிச்சோம்.

    ஸ்டூடியோவில் வந்து என்னிடம் ரஜினி சொல்றாரு... நாம குடிச்சோம் நியாபமிருக்கா... நீங்க அரை பாட்டில் பீர் குடிச்சிட்டு ஆடின ஆட்டம் இருக்கே... அதை சொல்ல போறேன் என்றார். நீங்க என்னவேனாலும் சொல்லிக்கோங்க எனக்கு கவலையில்லை என்றேன்" என்று இளையராஜா தெரிவித்தார்.

    இதைகேட்டு இருக்கையில் இருந்து எழுந்து இளையராஜா அருகில் வந்து பேசிய ரஜினி, "ஜானி படத்திற்கு இசையமைக்கும்போது நானும் மகேந்திரனும் குடிச்சோம், அப்போது இளையராஜாவிடம் குடிக்கிறீர்களா என்று கேட்டோம். அவரும் ஓகே சொல்ல... அப்போது அரை பாட்டில் பீர் குடிச்சிட்டு அவரு போட்ட ஆட்டம் இருக்கே... 3 மணி நைட் வரைக்கும்... ஊருல இருக்க கிசுகிசு எல்லாம் கேக்குறாரு... குறிப்பா கதாநாயகிகளை பத்தி... அண்ணே பெரிய காதலன்...அதான் இந்த பாட்டெல்லாம்... அப்படி இருந்தவரு... இன்னும் நிறைய இருக்கு... அடுத்தவாட்டி வைச்சிக்கிறேன்" என்று கூறிவிட்டு இருக்கையில் அமர்ந்தார். ரஜினி பேச்சால் அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது.

    இதனையடுத்து பேசிய இளையராஜா, "இல்லாததை எல்லாம் ரஜினி அடிச்சி விட்டு போறாரு" என்று கிண்டலடித்தார்.

    • நேற்று காலை தென் சென்னை புறநகர்ப் பகுதிகளில் மழை பெய்தது
    • மத்திய சென்னையின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.

    தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே வெயில் சுட்டெரித்து வருகிறது.

    குறிப்பாக, சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வந்தது. இந்நிலையில் சென்னையில் அதிகாலையில் இடியுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக வடசென்னையின் பல பகுதியில் கனமழை பெய்தது.

    இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில்,

    வட சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அதே நேரத்தில் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் மழை எதுவும் பதிவாகவில்லை. மத்திய சென்னையின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.

    சுவாரஸ்யமாக, நேற்று காலை தென் சென்னை புறநகர்ப் பகுதிகளில் மழை பெய்தது" என்று குறிப்பிட்டுள்ளார். 

    ×