என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தடுப்புச் சுவர் மீது கார் மோதிய விபத்தில் அதில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
- விபத்தில் படுகாயமடைந்த 7 பேர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தஞ்சை:
தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு காரில் 11 பேர் பயணம் மேற்கொண்டனர். அவர்கள் சென்ற கார் நேற்று இரவு தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே சென்றுகொண்டிருந்தது. மனோரா என்ற பகுதியில் சென்றபோது திடீரென கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. அதனால் சாலையோர தடுப்பு சுவர் மீது கார் வேகமாக மோதி விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் காரில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 7 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கார் டிரைவர் உறங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நேரு விளையாட்டு அரங்கில் சுமார் அரை மணி நேரம் நீடித்தது.
- வெள்ள நிவாரணம் தொடர்பாக பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்தல்.
சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டியின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பிரதமர் மோடி, கேலோ போட்டியை தொடங்கி வைத்தார். விழாவின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
கேலோ இந்தியா தொடக்க விழாவுக்கு பிறகு பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசியுள்ளார்.
இந்த சந்திப்பு நேரு விளையாட்டு அரங்கில் சுமார் அரை மணி நேரம் நீடித்தது.
சந்திப்பின்போது, தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்கள், வெள்ள நிவாரணம் தொடர்பாக பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
- கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, டிடி தமிழ் என பெயரில் ஒளிபரப்பை தொடங்கி வைத்தார்.
- டிடி தமிழ் தொலைக்காட்சியை தொடங்குவதற்காக பிரசார் பாரதி சார்பில் ரூ.39.71 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது
சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகளுக்கான தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, பொதிகை சேனலை டிடி தமிழ் என்ற பெயரில் ஒளிபரப்பை தொடங்கி வைத்தார். பொது சேவை ஒளிபரப்பு நிறுவனமாக பிரசார் பாரதியின் கீழ் இயக்கும் தூர்தர்ஷன் பொதிகை தொலைகாட்சியில், புதிய தொடர்கள், புதிய நிகழ்ச்சிகள், புதிய வடிவமைப்பில் செய்திகள் ஆகியவற்றுடன் இன்று முதல் டிடி தமிழ் எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டு, புதுப்பொலிவுடன் ஒளிபரப்பை தொடங்கியது.

புதிய அம்சங்களுடன் டிடி தமிழ் தொலைக்காட்சியை தொடங்குவதற்காக பிரசார் பாரதி சார்பில் ரூ.39.71 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. பொதிகை என்ற பெயரில் இதுவரை ஒளிபரப்பு சேவையை வழங்கி வந்த இந்த தொலைக்காட்சி, பாரம்பரியம் குன்றாமல் புதிய நிகழ்ச்சிகளை அறிமுகம் செய்கிறது. இவற்றில் நான்கு பொழுது போக்கு நெடுந்தொடர்கள், திரைப்படங்கள், பாடல்கள் ஆகியவை ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
- வணக்கம் சென்னை.. என தமிழில் கூறி பிரதமர் மோடி உரையை தொடங்கினார்.
- வீரர்களின் திறமைகளை வெளியப்படுத்த கேலோ இந்தியா உதவும்.
சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டியின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பிரதமர் மோடி, கேலோ போட்டியை தொடங்கி வைத்தார். பிறகு, வணக்கம் சென்னை.. என தமிழில் கூறி பிரதமர் மோடி உரையை தொடங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டின் அழகு, கலாச்சாரம், மொழி உங்கள் வீடு போலவே உணர வைக்கும். இந்தியா முழுவதும் இருந்து விளையாட்டு வீரர்கள் இங்கு வந்துள்ளனர்.
வீரர்களின் திறமைகளை வெளியப்படுத்த கேலோ இந்தியா உதவும். 2024ல் விளையாட்டுத் துறைக்கு சிறந்த தொடக்கமாக கேலோ இந்தியா அமைந்துள்ளது.
அதிகளவில் விளையாட்டுப் போட்டிகளை நடத்தி, சிறந்த வீரர்களை உருவாக்க வேண்டும். தமிழ்நாட்டில் சிறந்து விளையாட்டு வீரர்கள் உள்ளனர். தமிழ்நாடு சாம்பியன்களை உருவாக்கும் பூமி.

விளையாட்டு துறையில் சாதனை படைக்கும் நாடாக இந்தியாவை மாற்ற நினைக்கிறேன். இளைஞர்களின் முன்னேற்றம் குறித்து திருவள்ளுவர் திருக்குறளில் குறிப்பிட்டுள்ளார்.
கேலோ இந்தியா போட்டிகளில் சிலம்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் விளையாட்டு வீரர்களுக்கு புதிய தன்னம்பிக்கை பிறந்துள்ளது.
ஆசிய போட்டிகளில் இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது. ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக்கில் இந்தியா சாதனை படைத்துள்ளது.
கேலோ இந்தியா விளையாட்டு சின்னத்தில் வீர மங்கை வேலு நாச்சியார் இடம்பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.
2036ல் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த முயற்சி எடுத்து வருகிறோம். கடற்கரை விளையாட்டுகள், சுற்றுலா துறையில் இந்தியா புதிய சாதனை படைத்து வருகிறது. தேசிய கல்வி திட்டத்தில் விளையாட்டை முக்கிய அங்கமாக வைத்துள்ளோம்.
விளையாட்டுகள் மூலம் அது சார்ந்த தொழில்களும் முன்னேற்றம் அடைந்து வருகிறது. விளையாட்டு வீரர்களின் சிறப்பான எதிர்காலத்திற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன். மிகப்பெரிய இலக்குகளை சாதிக்கும் திறன் நம்மிடம் உள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா சாதனை படைத்ததற்கு கேலோ விளையாட்டு முக்கிய காரணம்.
- பெரிய அளவிலான விளையாட்டு போட்டிகளை தமிழ்நாடு மிக சிறப்பாக நடத்தி வருகிறது.
கேலோ இந்தியா விளையாட்டு போட்டி துவக்க விழாவில் கலந்து கொண்ட மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் மேடையில் உரையாற்றினார். அவர் கூறியதாவது, "இந்த தொடக்க விழாவில் பங்கேற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் பிரதமரின் முக்கிய திட்டமாகும். தற்போது சர்வதேச அளவில் இந்தியா பதக்கங்களை பெற்று முன்னிலை பெற்று வருகிறது. ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா சாதனை படைத்ததற்கு கேலோ விளையாட்டு முக்கிய காரணம் ஆகும். இப்போட்டிகளில் 100-க்கும் மேற்பட்ட பதக்கங்களை பெற்று இந்தியா சாதனை படைத்து வருகிறது.
2030, 2036 ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்காக பிரதமர் மோடி பல முயற்சிகளை செய்து வருகிறார். விஸ்வநாதன் ஆன்ந்த், பிரக்ஞானந்தா ஆகிய செஸ் ஜாம்பவான்கள் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கின்றனர். பெரிய விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கான வாய்ப்பு தமிழ்நாட்டிற்கு எப்போதெல்லாம் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் மிக சிறப்பாக தமிழ்நாடு அந்த போட்டிகளை நடத்தி இருக்கின்றது. ஹாக்கி விளையாட்டு போட்டி, ஸ்குவாஸ் கோப்பைக்கான விளையாட்டு போட்டி, செஸ் ஒலிம்பியாட் போட்டி ஆகிய போட்டிகளை மிகவும் திறமையாக நடத்தி இருக்கிறது.
கேலோ இந்தியா என்பது பதக்கங்களை வெற்றி பெறுவதற்காக நடத்தப்படும் விளையாட்டு அல்ல, உங்களின் பெருமையை, திறமையை மேலும் மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்பை தருகின்ற ஒரு விளையாட்டு போட்டி" எனக் கூறினார். மேலும் கடந்த 10 ஆண்டுகளில் கேலோ இந்தியாவின் கீழ் செலவழிக்கப்பட்ட பட்ஜெட்டை மூன்று மடங்கு உயர்த்தியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார்.
- ஜல்லிக்கட்டுக்கு மதுரையில் ரூ.62 கோடியில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
- மணிப்பூர் விளையாட்டு வீரர்களுக்கு சென்னையில் பயிற்சி அளித்தோம்.
கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
எல்லோருக்கும் எல்லாம் என்பதை உள்ளடக்கமாக கொண்டது திராவிட மாடல் அரசு. இந்தியாவின் விளையாட்டு தலைநகராக தமிழ்நாட்டை உயர்த்துவதே அரசின் குறிக்கோள் ஆகும்.
ஜல்லிக்கட்டுக்கு மதுரையில் ரூ.62 கோடியில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு அறிவியல் மையம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முதலிடம் பெற உழைத்து வருகிறோம்.
கடந்த ஆண்டு பல்வேறு சர்வதேச போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்தியுள்ளோம். கேலோ இந்தியா முத்திரையில், வீர மங்கை வேலுநாச்சியார் இடம்பெற்றிருப்பது பெருமை.
மணிப்பூர் விளையாட்டு வீரர்களுக்கு சென்னையில் பயிற்சி அளித்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தென் இந்தியாவில் முதல் முறையாக இந்தப்போட்டி தமிழகத்தில் நடத்தப்படுகிறது.
- இன்று முதல் 31-ந்தேதி வரை சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் போட்டி நடக்கிறது.
6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப்போட்டி சென்னையில் நடைபெறுகிறது. தென் இந்தியாவில் முதல் முறையாக இந்தப்போட்டி தமிழகத்தில் நடத்தப்படுகிறது.
இந்நிலையில், கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியின் கோலாகல தொடக்க விழா நேரு ஸ்டேடியத்தில் இன்று மாலை 6 மணியளவில் தொடங்கியது.
முன்னதாக, சென்னை வந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி ஐஎன்எஸ் அடையார் தளத்திற்கு சென்றார்.

பிறகு, அடையாறில் இருந்து கார் மூலம் சாலை மார்க்கமாக நேரு விளையாட்டு அரங்கிற்கு பிரதமர் மோடி வருகை தந்தார்.
வழி நெடுகிலும் கலை நிகழ்ச்சிகளை ரசித்தபடியே பிரதமர் மோடி காரில் பயணித்தார். அவருக்கு மலர் தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் மோடி தொண்டர்களை பார்த்து கையசைத்தவாறு சென்றார். பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.
விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரிகள் அனுராக் தாக்கூர், நிசித் பிராமணிக், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 31-ந்தேதி வரை சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் நடக்கிறது.18 வயதுக்குட்பட்ட பிரிவில் நடைபெறும் இந்த விளையாட்டு திருவிழாவில் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
1600-க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்களும், ஆயிரம் நடுவர்களும் கலந்து கொள்கிறார்கள். 1200-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இந்தப் போட்டிக்காக ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
3 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி, இன்று சென்னையை அடுத்து நாளை திருச்சி மற்றும் ராமேஸ்வரம் ஆகிய இடங்களுக்கு செல்கிறார்.
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்புரை நிகழ்த்தினார்.
- விளையாட்டை ஊக்குவிக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது.
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியின் கோலாகல தொடக்க விழா நேரு ஸ்டேடியத்தில் இன்று மாலை 6 மணியளவில் தொடங்கியது.
நேரு அரங்கத்திற்கு பிரதமர் மோடி வந்தைடைந்ததை தொடர்ந்து, தேசிய கீதத்துடன் விழா தொடங்கியது.
பிறகு பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேலோ இந்தியாவின் முத்திரையான வீர மங்கை சிலையை நினைவுத் பரிசாக அளித்தார்.
தொடர்ந்து, ஆளுநர், முதல்வர், மத்திய அமைச்சருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நினைவுப் பரிசை வழங்கினார்.
பின்னர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்புரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் உரையாற்றியதாவது:-
பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் தாக்கூரை வரவேற்கிறேன். தமிழக அரசின் கனவு நனவான தருணம் இது. 6வது கேலோ இந்தியா போட்டிகளை நடத்துவதில் தமிழகம் பெருமை கொள்கிறது.
ஏற்கனவே செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தினோம். விளையாட்டுத் துறையில், இந்திய அளவில் தமிழகம் முன்னேறியுள்ளது.
விளையாட்டுகளையும் கல்வியின் அங்கமாகவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருதுகிறார். தமிழக வீரர்கள் பல்வேறு விளையாட்டுகளில் பதக்கங்களை குவித்து வருகின்றனர்.
விளையாட்டை ஊக்குவிக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
- ரூ.621 கோடி செலவில் புதிய உயர்மட்ட மேம்பாலம் கட்டப்படுகிறது.
- தமிழ்நாடு அரசின் 2023 பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியீடு.
சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை ரூ.621 கோடி செலவில் புதிய உயர்மட்ட மேம்பாலம் கட்டுவது தொடர்பாக தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், புதிய மேம்பாலத்திற்கான கட்டுமான பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை தொடங்கி வைத்தார்.
அண்ணா சாலையில் 4 வழி மேம்பாலம் கட்டப்படும் என்று தமிழ்நாடு அரசின் 2023 பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது.
- தீர்ப்பின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நகர்வு இருக்கும் என தகவல்.
போக்குவரத்துத் தொழிலாளர்களின் 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி இன்று (வெள்ளிக்கிழமை) 4-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்தப் பேச்சுவார்த்தையில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், போக்குவரத்து கழகங்களின் இயக்குனர்கள், போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், போக்குவரத்து தொழிற்சங்கத்தினருடன் மீண்டும் பிப்ரவரி 7ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என இன்று நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
வரும் பிப்ரவரி 6ம் தேதி உச்சநீதிமன்ற தீர்ப்பு வரவுள்ள நிலையில், தீர்ப்பின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நகர்வு இருக்கும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் உத்தரவாதம் அளித்துள்ளனர்.
தற்போதைய நிலையில் மீண்டும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை என தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
பிப்ரவரி 7ம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும் தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
- ஸ்ரீரங்கத்திற்கும், ஸ்ரீராமருக்கும், அயோத்திக்கும் இடையிலான தொடர்பு தொன்மையானது.
- பிரம்மாவின் தவத்தால் திருப்பாற்கடலில் இருந்து வெளிப்பட்டு தோன்றியதாகும் ஸ்ரீரங்கம் கோவில் விமானம்.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதாக போற்றப்படுகிறது. 108 திருப்பதிகளில் தானாய் தோன்றிய (சுயம்பு) திருப்பதிகள் 8 தான். அதிலும் முதல் திருப்பதி ஸ்ரீரங்கம் தான். வைகுண்டத்தின் தத்துவத்தை பூலோகத்தில் உள்ள மக்கள் கண்டு அனுபவிக்கும் வகையில் அமைந்துள்ளதால் இது பூலோக வைகுண்டம் எனப்படுகிறது.
ஸ்ரீரங்கத்திற்கும், ஸ்ரீராமருக்கும், அயோத்திக்கும் இடையிலான தொடர்பு தொன்மையானது, தெய்வீகமானது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஸ்ரீராமரின் குலதெய்வம் ஆவார். மனிதர்களாக பிறந்த அனைவருக்குமே குலதெய்வம் என்று உள்ளது. அதேபோல மகாவிஷ்ணு மனிதராக ஸ்ரீராமராக அவதாரம் எடுத்தவர்.
அயோத்தியில் அவர் வணங்கிய குல தெய்வம்தான் ஸ்ரீரங்கம் ரங்கநாதர். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டும் போது ராமரின் குலதெய்வ கோவிலான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து வஸ்திரங்கள் மற்றும் கொள்ளிடம் ஆற்றில் இருந்து மண் அனுப்பி வைக்கப்பட்டது.
பிரம்மாவின் தவத்தால் திருப்பாற்கடலில் இருந்து வெளிப்பட்டு தோன்றியதாகும் ஸ்ரீரங்கம் கோவில் விமானம். ரங்க விமானத்தில் அர்ச்சா ரூபமாக அவதரித்தவர் ஸ்ரீரங்கநாதர். ரெங்கநாதருக்கு நித்திய பூஜை செய்ய பிரம்மா சூரியனை நியமித்தார்.
பிறகு சூரிய குலத்தில் பிறந்த அரசன் இட்சுவாகு இந்த விமானத்தை தனது தலைநகரமாகிய அயோத்திக்கு கொண்டு சென்று வழிபட்டார். "ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்" ராமரின் வம்சமாகிய ரகுவம்சத்தின் குல தேய்வம். காலம்காலமாக அவர்கள் ரெங்கநாதரை வழிபட்டு வந்தனர். சூரிய வம்சத்தில் தசரதருக்கு மகனாக அவதரித்த ராமபிரான் தன் முன்னோர்கள் வழியில் ரெங்கநாதரை வணங்கி வந்தார். 67 தலைமுறைகளுக்கு முன்பு இருந்தே அஜன், திலீபன், தசரதன் என ராமபிரானின் முன்னோர்களால் வழிபட்டு வந்தவர் ரெங்கநாதர். அயோத்தியில் ராமர் தனது கரங்களால் ரங்கநாதருக்கு பூஜை செய்து வந்தார்.
இந்த சூழலில் ராமர் வனவாசம் முடிந்து அயோத்தியில் மீண்டும் அரசாட்சி புரிந்தார். அவர் முடி சூட்டிக்கொண்ட பிறகு விபீஷணனுக்கு அவன் செய்த உதவிக்காக `ரங்க விமானம்' தருகிறார் ராமர். அதை விபீஷணன் இலங்கை போகும் வழியில் சந்திரபுஷ்கரினி என்னும் தடாகம் பகுதியில் வந்தபோது சிலையை கீழே இறக்கி வைக்க வேண்டாம் என்று கருதி, அங்கு வந்த சிறுவனிடம் கொடுத்துள்ளான்.
ஆனால் காவிரியில் நீராடி விட்டு திரும்பி வருவதற்கு அந்த சிலையை சிறுவன் கீழே வைத்துவிட்டான். அதன்பிறகு சிலையை எடுக்க முடியவில்லை. கோபத்தில் விபீசணன் அந்த சிறுவனை தேடியபோது அவன் திருச்சி மலைக்கோட்டை உச்சியில் சென்று அமர்ந்து கொண்டான். சிறுவன் வடிவில் வந்தது உச்சிப்பிள்ளையார் என்றும், ரங்கநாதரை காவிரியில் அமர வைக்கவே அவர் இந்த திருவிளையாடலில் ஈடுபட்டுள்ளார். தர்மவர்மா என்ற அந்தப் பகுதி மன்னனின் பக்தியால் உருகி பெருமாள் அந்தத் தீவிலேயே தங்கி விடுகிறார். தர்மவர்மா ஆலயம் எழுப்பினான்.
பள்ளிகொண்ட நிலையில் பெருமாள் இங்கு அருள்கிறார். இதனை `சயனக் கோலம்' என்பார்கள். திருச்சியில் காவிரியும் கொள்ளிடமும் உருவாக்கிய மணல் தீவு முக்கொம்பு தொடங்கி கல்லணை வரை உள்ளது. `அரங்கம்' என்றால் ஆற்றிடைக்குறை என்று பொருள்படும். ஸ்ரீரங்கம் பெரியகோவில் 6,13,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. அதாவது 156 ஏக்கர். கோயில் சுவர்களின் மொத்த நீளம் 32,592 அடி. பெரியகோவில் 7 திருச்சுற்றுக்களோடு அமைந்துள்ளது. இந்தியாவிலேயே 7 சுற்றுக்களைக் கொண்ட கோவில் இதுமட்டுமே. பெருமாள் தென்திசை நோக்கிப் பள்ளி கொண்டுள்ளார். விபீஷணனுக்காக "தென்திசை இலங்கை நோக்கி" பள்ளி கொண்டுள்ளார் பெருமாள்.
கருவறை விமானத்தில் 4 கலசங்கள் உள்ளன. இவை 4 வேதங்களைக் குறிக்கின்றன. சுந்தரபாண்டியன் விமானத்துக்குத் தங்கம் பதித்தான். அதனால் பொன்மேய்ந்த பெருமாள் என அழைத்தனர். பொன்னால் வேயப்பட்ட இந்த விமானம் ஓம் என்ற பிரணவ வடிவில் எழுந்தருளி உள்ளது. ரெங்கநா தனின் திருக்கண்கள் விபீஷணனால் வழங்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
மூவேந்தர்கள் தொடங்கி விஜயநகர மன்னர்கள், நாயக்கர்கள், ஆங்கிலேயர்கள் எல்லோருமே ரெங்கநாதரை வணங்கி கோவிலை வளர்த்தனர்.
கம்பர் தனது ராமகாதையை கி.பி.885-ல் இங்குதான் அரங்கேற்றம் செய்தார். வால்மீகி ராமாயணத்தில் இல்லாத `இரண்ய வதைப்படலம்' எனும்பகுதியை கம்பர் தனது காவியத்தில் எழுதியதை சிலர் ஏற்க மறுத்தனர். ஆனால் மேட்டழகிய சிங்கர் என்ற நரசிம்மர் கர்ஜித்து ஏற்றதாக ஸ்தல புராணம் கூறுகிறது.
தாயார் சந்நிதிக்கு அருகில் உள்ள நான்குகால் மண்டபத்தில்தான் கம்பராமாயணம் அரங்கேறியதாம். இதன் சாட்சியாக திருவந்திக்காப்பு மண்டபத் தூணில் கம்பர் கைகூப்பி வணங்கும் சிற்பம் உள்ளது.
பழைமையான தமிழ் வழிபாட்டு முறைகளில் ஒன்றான பெருமாள் வழிபாட்டில் மிக உயர்ந்த இடத்தில் இருப்பது ஸ்ரீரங்கம். ஒரு நாட்டின் மன்னனுக்கு நடப்பதுபோன்று பெருமாளுக்கு விழாக்கள் நடக்கின்றன. இதனால்தான், "திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே" என்று கூறுகிறார்கள்.
ஆசியா - பசிபிக் மண்டலத்தில் உள்ள 10 நாடுகளிலிருந்து கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கும் அமைப்புகள் குறித்த அறிக்கைகளை ஆய்வு செய்த யுனெஸ்கோ அமைப்பு, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு கலாச்சார பாரம்பரியம் ஆகியவற்றை பழமை மாறாமல் பாதுகாத்ததற்கான விருதை 2017-ம் ஆண்டில் வழங்கி சிறப்பித்தது. தமிழகத்திலேயே முதல் முறையாக இந்த கோவிலுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிசேகம் காணப்படும் இந்த சூழலில் ராமபிரானின் குல தெய்வமான ஸ்ரீரெங்கநாதர் ஆலயம் அமைந்துள்ள ஸ்ரீரங்கமும் முக்கியத்துவம் பெறுகிறது. ராமரின் குலதெய்வத்தை தரிசனம் செய்துவிட்டு, அதன்பிறகு அயோத்தியில் ராமரின் கோவிலை திறந்து வைப்பதே சரி என கருதி பிரதமர் மோடியின் ஸ்ரீரங்கம் வருகை இதன் முக்கியத்துவத்தை மேலும் அதிகமாக்கி உள்ளது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தை மாத பூபதி திருநாள் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 19-ந்தேதி 4-ம் திருநாள் கருடசேவை தரிசனம் நடைபெற உள்ளது. அன்றைய தினம் ஸ்ரீரங்கம் வருவது மேலும் சிறப்பாகும்.
- ஜி.கே.வாசன், ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் இடம்பெற்றுள்ளனர்.
- வரவேற்கும் குழுவில் இருப்போர் பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை:
6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் இன்று சென்னை வருகிறார். சென்னைக்கு வரும் பிரதமர் மோடியை வரவேற்கும் அரசியல் தலைவர்கள் பட்டியலில் ஓ.பன்னீர்செல்வம் பெயர் இடம்பெற்றது.
அப்பட்டியலில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் ஜி.கே.வாசன், ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் இடம்பெற்றுள்ளனர்.
வரவேற்கும் குழுவில் இருப்போர் பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வாரம் திருச்சிக்கு பிரதமர் வந்தபோது ஓ.பன்னீர்செல்வம் அவரை வரவேற்று வழியனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.






