என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • முதலில் ஆடிய சவுராஷ்டிரா முதல் இன்னிங்சில் 183 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • தமிழகம் சார்பில் இந்திரஜித் 80 ரன், பூபதி குமார் 65 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

    கோவை:

    89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்று முடிவில் விதர்பா, கர்நாடகா, மும்பை, பரோடா, தமிழ்நாடு, சவுராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஆந்திரா உள்ளிட்ட 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறின.

    ரஞ்சி கோப்பை தொடரின் காலிறுதி ஆட்டங்கள் நேற்று தொடங்கின.

    இந்நிலையில், 3-வது காலிறுதி ஆட்டத்தில் தமிழக அணி சவுராஷ்டிராவை கோவையில் எதிர்கொண்டது. டாஸ் வென்ற சவுராஷ்டிரா அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய சவுராஷ்டிரா முதல் இன்னிங்சில் 183 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஓரளவு தாக்குப்பிடித்த ஹர்விக் தேசாய் அரை சதம் அடித்து 83 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    தமிழகம் சார்பில் சாய் கிஷோர் 5 விக்கெட்டும், அஜித் ராம் 3 விக்கெட்டும், வாரியர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். தொடர்ந்து ஆடிய தமிழகம் முதல் நாள் முடிவில் 1 விக்கெட்க்கு 23 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தமிழகத்தின் ஜெகதீசன் 37 ரன்னும், சாய் கிஷோர் 60 ரன்னும், பிர்தோஷ் பால் 13 ரன்னும் எடுத்தனர். பாபா இந்திரஜித், பூபதி குமார் ஜோடி நிதானமாக ஆடியது. இருவரும் அரை சதமடித்தனர்.

    இந்திரஜித் 80 ரன்னும், பூபதி குமார் 65 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 119 ரன்கள் சேர்த்தது.

    இரண்டாம் நாள் முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 300 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது வரை தமிழகம் 117 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. விஜய் சங்கர் 14 ரன்னும், முகமது அலி 17 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    • கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • ஈஸ்வரன் "40 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெற்றி பெறும்" என தெரிவித்தார்

    சென்னை:

    திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தொகுதி பங்கீடு முடிவானது

    கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் நாமக்கல் தொகுதியை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு தான் திமுக ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது. 

    • தி.மு.க. கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
    • கடந்த தேர்தலிலும் ராமநாதபுரத்தில் நவாஸ் கனி போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சென்னை:

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், தி.மு.க. கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    ஐ.யூ.எம்.எல். கட்சி சார்பில் நவாஸ் கனி போட்டியிடுவார் என்றும், ஏணி சின்னத்தில் போட்டியிடுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலிலும் ராமநாதபுரத்தில் நவாஸ் கனி போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • விஜயதாரணிக்கு இன்று என்ன பாஜக மீது பாசம்.
    • பாஜகவிலாவது அவர் சந்தோஷமாக இருக்கட்டும்.

    கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏ. விஜயதாரணி. சட்டசபை காங்கிரஸ் கொறடாவாகவும் இருந்தார்.

    சமீபகாலமாக கட்சியில் அதிருப்தியில் இருந்து வந்த அவர் பா.ஜனதாவில் சேர போவதாக தகவல்கள் பரவி வந்தன.

    இந்நிலையில், டெல்லியில் பா.ஜ.க. பொதுச்செயலாளர் அருண் சிங் மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் விஜயதாரணி இணைந்தார்.


    இதையடுத்து விஜயதாரணி காங்கிரசில் இருந்து சென்றது காங்கிரஸ் பேரியக்கத்துக்கு விடிவு நாள் என்று காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியிருப்பதாவது:-

    இவ்வளவு காலமாக பாஜக அரசுக்கு எதிராக பேசிய விஜயதாரணிக்கு இன்னைக்கு என்ன பாஜக மீது பாசம்.

    "விஜயதாரணியால் கட்சிக்கும் பயனில்லை, நாட்டுக்கும் பயனில்லை.. பாஜகவிலாவது அவர் சந்தோஷமாக இருக்கட்டும்."

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி சட்டசபை காங்கிரஸ் கொறடாவாகவும் இருக்கிறார்.
    • விஜயதாரணி பாஜகவில் இணைந்ததை இனிப்பு வழங்கி காங்கிரஸ் கட்சி கொண்டாடினர்.

    கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏ. விஜயதாரணி. சட்டசபை காங்கிரஸ் கொறடாவாகவும் இருந்தார்.

    சமீபகாலமாக கட்சியில் அதிருப்தியில் இருந்து வந்த அவர் பா.ஜனதாவில் சேர போவதாக தகவல்கள் பரவி வந்தன. ஆனால் விஜயதாரணி அதை மறுக்கவும் இல்லை. ஒத்துக்கொள்ளவும் இல்லை. இதனால் அவர் என்ன முடிவில் இருக்கிறார் என்பது தெரியாமல் இருந்தது.

    இந்நிலையில், டெல்லியில் பா.ஜ.க. பொதுச்செயலாளர் அருண் சிங் மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் விஜயதாரணி இணைந்தார்.

    இதையடுத்து விஜயதாரணி காங்கிரசில் இருந்து சென்றது காங்கிரஸ் பேரியக்கத்துக்கு விடிவு நாள் என்று காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் தெரிவித்தனர்.

    விளவங்கோடு எம்.எல்.ஏ. விஜயதாரணி பாஜகவில் இணைந்ததை இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

    • பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்த போது, அனைத்து கேமராக்களும் பூமியை பார்த்தபடி தலைகவிழ்ந்து இருந்தது.
    • நடந்த உண்மை சம்பவத்தை கண்டறிய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

    திண்டிவனம்:

    சென்னை, கொளத்தூரை சேர்ந்த மாணவர் ரமேஷ் (வயது 21). இவர் சென்னையில் வேலை செய்து வந்த தனது காதலி பவித்ராஸ்ரீ (20) என்பவருடன் திருவண்ணாமலை கோவிலுக்கு கிரிவலம் செல்ல மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

    விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே, மோட்டார் சைக்கிளை 2 பேர் வழிமறித்து மொபைல் போனை பறித்து சென்றதாக கூறப்படுகிறது. அவர்களை தேடி மாணவர் ரமேஷ் சென்றுள்ளார்.

    அவர் திரும்பி வந்து பார்த்த போது பவித்ராஸ்ரீ சாலையில் தலை நசுங்கி இறந்து கிடந்தார். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் ஓலக்கூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், கல்லூரி மாணவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். வழிப்பறி என்று மாணவர் நாடகமாடுகிறாரா? மாணவருக்கும், அவரது காதலிக்கும் இடையே ஏதேனும் தகராறு ஏற்பட்டதில் வாகனத்தின் முன்பு ஓடிச் சென்று தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் இளம்பெண்ணை வாகனத்தின் முன்பு தள்ளி விட்டு மாணவர் கொலை செய்தாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்த போது, அனைத்து கேமராக்களும் பூமியை பார்த்தபடி தலைகவிழ்ந்து இருந்தது.

    இதனால் நடந்த உண்மை சம்பவத்தை கண்டறிய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

    • படுகாயமடைந்த ஜெயராமதாஸ் சிகிச்சைக்காக ராணிப்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    • ஜமுனா உடலை பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை சிப்காட் அடுத்த சீக்கராஜபுரம் அவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் ஜெயராமதாஸ். இவரது மனைவி ஜமுனா (வயது 50). இவர் ராணிப்பேட்டை அடுத்த புளியங்கண்ணு பகுதியில் அரசினர் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

    இன்று காலை பள்ளிக்கு செல்வதற்காக தனது கணவருடன் ஜமுனா பைக்கில் வந்தார். சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஐவிபிஎம் அருகே வந்த போது, பைக்கில் சாலை ஓரத்திலிருந்து சாலையில் ஏற முயன்ற போது எதிர்பாராதவிதமாக ஜமுனாவும் அவரது கணவரும் சாலையில் விழுந்தனர்.

    அப்போது பின்னால் சென்னை நோக்கி செல்வதற்காக வந்த கன்டெய்னர் லாரி ஏறியதில் ஜமுனா தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் படுகாயமடைந்த ஜெயராமதாஸ் சிகிச்சைக்காக ராணிப்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    தகவலறிந்த ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜமுனா உடலை பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சூலூர் விமான படை தளத்தை சுற்றிலும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், டி.எஸ்.பி. தங்கராமன் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

    சூலூர்:

    பிரதமர் நரேந்திரமோடி வருகிற 27 மற்றும் 28-ந் தேதிகளில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    27-ந் தேதி மாலை திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடக்கும் என் மண், என் மக்கள் யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசுகிறார்.

    இதற்காக மோடி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலம் சூலூர் விமான படை தளத்துக்கு வருகிறார். அங்கிருந்து அவர் ஹெலிகாப்டரில் புறப்பட்டு பொதுக்கூட்டம் நடக்கும் இடத்துக்கு செல்கிறார்.

    பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். சூலூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சூலூர் விமான படை தளத்தை சுற்றிலும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள சோதனைச்சாவடிகளுடன் மேலும் 3 சோதனைச்சாவடிகள் கூடுதலாக அமைக்கப்பட்டு உள்ளன. இங்கு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    விமானப்படை தளத்தை சுற்றி 500 மீட்டர் அளவில் உள்ள குடியிருப்புகள் மற்றும் குடியிருந்து வருபவர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. கோவை மற்றும் சூலூரில் உள்ள லாட்ஜ், ஓட்டல்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு உள்ளனர். சந்தேகப்படும்படியாக புதிய நபர்கள் யாராவது வந்து தங்கினால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என ஓட்டல் ஊழியர்களுக்கு அறிவுரைகள் வழங்கி உள்ளனர்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், டி.எஸ்.பி. தங்கராமன் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். சூலூர் மட்டுமல்லாமல் கோவை மாவட்டம் முழுவதும் உள்ள சோதனைச்சாவடிகளிலும் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    பாதுகாப்பு பணிக்கு உள்ளூர் போலீசார் மட்டுமல்லாமல் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும், சி.ஆர்.பி.எப். வீரர்களும் வர உள்ளனர்.

    • 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.
    • புத்தக கண்காட்சியை பார்த்து பொதுமக்கள் தங்களுக்கு பிடித்த புத்தகங்களை வாங்கலாம்.

    திருவள்ளூர்:

    தமிழகம் முழுவதும் கடந்த 2022-ம் ஆண்டு முதல் மாவட்டம் தோறும் புத்தக கண்காட்சி நடந்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்கெனவே கடந்த 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் திருவள்ளூர், ஆவடி ஆகிய இடங்களில் புத்தக கண்காட்சி நடை பெற்றுள்ளது.

    இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான புத்தக கண்காட்சி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே இன்று தொடங்கியது. இந்த கண்காட்சியை திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக பதிப்பாளர் விற்பனையாளர் சங்கம் ஆகியவை இணைந்து நடத்துகின்றன.

    இந்த கண்காட்சி மார்ச் 4-ந்தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது. தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை கண்காட்சி நடைபெறும். இந்த கண்கட்சியில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் பயன்படத்தக்க புத்தகங்கள் ஒரே கூரையின் கீழ் இந்த புத்தக கண்காட்சியில் கிடைக்கின்றன.


    இந்த கண்காட்சியில் விற்பனை செய்யப்படும் அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் கண்காட்சி நடைபெறும் வளாகத்தில் தினமும் சிந்தனையை தூண்டும் நட்சத்திர பேச்சாளர்கள் மற்றும் தமிழறிஞர்கள் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளனர்.

    மேலும் புத்தக வாசிப்பின் பயன்கள் குறித்து மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. இந்த புத்தக கண்காட்சியை பார்த்து பொதுமக்கள் தங்களுக்கு பிடித்த புத்தகங்களை வாங்கலாம்.

    • வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் புகார் தெரிவிக்க மொபைல் ஆப் உள்ளது.
    • ஒருதலைப்பட்சமாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை:

    பாராளுமன்றத்துக்கு ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் தமிழகம் வந்த அதிகாரிகள் குழு சென்னையில் 2 நாட்களாக ஆலோசனை நடத்தினர்.

    இந்நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    *2 நாட்கள் ஆலோசனை கூட்டத்தை நடத்தி முடித்துள்ளோம்.

    * வாக்காளர்கள் முழுமையாக வாக்களிக்க வேண்டும்.

    * அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தினோம். பணப்பட்டுவாடாவை தடுக்க வேண்டும் என அரசியல் கட்சியினர் வலியுறுத்தினர். தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டுமெனவும் வலியுறுத்தினர்.

    * நேர்மையாக தேர்தல் நடத்தப்படும் என உறுதி அளித்துள்ளோம்.

    * பணப்பட்டுவாடாவை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம், அதை பொறுத்துக்கொள்ளவும் மாட்டோம்.

    * தமிழ்நாட்டில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 6.19 கோடி. ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். ஆண்கள் - 3.04 கோடி, பெண்கள் - 3.15 கோடி, மூன்றாம் பாலினம் - 8,294 வாக்காளர்கள் உள்ளனர்.

    * தமிழகத்தில் புதிய வாக்காளர் 9.18 லட்சம் பேர் உள்ளனர்.

    * வாக்கு சாவடியில் 66% வெப் காஸ்டிங் செய்யப்படும்.

    * வாக்குச்சாவடி மையங்களில் தேவையான ஏற்பாடுகளை செய்ய வலியுறுத்தப்படும்.

    * வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் புகார் தெரிவிக்க மொபைல் ஆப் உள்ளது. சி-விஜில் செயலி மூலம் தேர்தல் முறைகேடுகள் குறித்து புகார் அளிக்கலாம். சி-விஜில் செயலி மூலம் புகார் அளித்தால் 100 நிமிடங்களில் நடவடிக்கை எடுக்கப்படும்.

    * ஜனநாயக முறையில் வெளிப்படையாக தேர்தலை நடத்த ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    * எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும்.

    * 17 மாவட்டங்களில் உள்ள 145 எல்லைப்பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்படும். விமான நிலையங்களும் தீவிரமாக கண்காணிக்கப்படும்.

    * பணப்பட்டுவாடா, மது விநியோகத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    * ஒருதலைப்பட்சமாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    * வாக்குச்சாவடிகளில் தேவையான வசதிகள் ஏற்படுத்தி தரப்படும்.

    * தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம்.

    * ஒரு வங்கி கணக்கில் இருந்து பலருக்கு பணம் பட்டுவாடா செய்தால் அதை கண்காணிக்கும் வசதி உள்ளது.

    * அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு கடந்த முறை வழங்கிய சின்னமே, இந்த முறையும் வழங்கப்படும் என உறுதி அளிக்க முடியாது.

    * EVM கடந்த 40 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    * எந்த புதிய முறையும் பாராளுமன்ற தேர்தலில் கொண்டு வரவில்லை. பழைய முறை தான், ஆனால் நவீன தொழில்நுட்பத்தை கடைப்பிடிக்கிறோம்.

    * சமூக வலைதளங்கள் கண்காணிக்கப்படும் என்று கூறினார்.

    • விழாவில் தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஓட்டல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    • பிரியாணி திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு நோய் எதுவும் ஏற்படாது என்பது ஐதீகம்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வடக்கம்பட்டியில் முனியாண்டி சுவாமி கோவில் உள்ளது. ஆண்டு தோறும் இங்கு நடைபெறும் பிரியாணி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டு வழக்கம்போல் பிரியாணி திருவிழா 89-வது ஆண்டாக நடைபெற்றது.

    இதில் ரெட்டியார் சமூகத்தினர் வெள்ளிக்கிழமை காலை விரதம் மேற்கொண்டு பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்த பால்குடத்தை சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    கோவில் நிலைமாலையுடன் இளைஞர்கள் ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலமாக செல்ல பெண்கள் தங்களது வீடுகளில் இருந்து எடுத்து வந்திருந்த தேங்காய், பூ, பழம் தட்டுகளை தலையில் சுமந்து ஊர்வலமாக சென்றனர்.


    கோவிலில் தேங்காய் உடைத்து சுவாமிக்கு பூவை சமர்ப்பித்து வழிபாடு நடத்தினர். இந்த விழாவில் தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஓட்டல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் விழாவின் நிறைவாக முனியாண்டி சுவாமிக்கு ஆடு, கோழிகளை படையலிட்டனர்.

    இந்த திருவிழாவில் அவ்வாறு படையலிடப்பட்ட 150-க்கும் மேற்பட்ட ஆடுகள், 300-க்கும் மேற்பட்ட கோழிகளை கொண்டு பிரியாணி தயார் செய்யப்பட்டது. இதற்காக 2500 கிலோ பிரியாணி அரிசியில் மிக பிரமாண்டமான முறையில் பிரியாணி தயார் செய்யப்பட்டது. இன்று காலை பிரியாணியை கருப்பசாமிக்கு படைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    திருவிழாவை முன்னிட்டு ஏற்கனவே தயார் செய்யப்பட்டிருந்த பிரியாணி அண்டாக்களில் நிரப்பி வைக்கப்பட்டிருந்தன. விழா நிறைவாக பிரியாணி பக்தர்களுக்கு சுடச்சுட வழங்கப்பட்டது. அவ்வாறு நடைபெற்ற அன்னதானத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இதில் கள்ளிக்குடி, வில்லூர், அகத்தாபட்டி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இரவு முழுவதும் தங்கி இருந்து முனியாண்டி சுவாமியை வழிபட்டு திருவிழாவில் தங்களது வேண்டுதல் மற்றும் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    இந்த பிரியாணி திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு நோய் எதுவும் ஏற்படாது என்பது ஐதீகம். விழாவையொட்டி தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    • பிரதமர் மோடி வருகையையொட்டி பல்லடத்தில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • பொதுக்கூட்டத்திற்கு எவ்வளவு பேர் வருவார்கள், அதற்கான பாதுகாப்பு பணியில் எவ்வளவு போலீசாரை நிறுத்துவது என ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலை எதிரில் வருகிற 27-ந்தேதி பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலையின் 'என் மண், என் மக்கள்' பாதயாத்திரை நிறைவு விழாவும், பாராளுமன்ற தேர்தல் பிரசார கூட்டமும் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அந்த பணிகளை மாநில தலைவர் அண்ணாமலை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், பல்லடம் பொதுக்கூட்டம் தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றார்.

    இந்தநிலையில் பல்லடம் வரும் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இதற்காக மாதப்பூர் பகுதியில் சாலையின் இருபுறமும் கட்சி கொடி, தோரணங்கள் கட்டும் பணிகள் தொடங்கி உள்ளது.

    மேலும் பிரதமர் வருகையையொட்டி திருப்பூர் பா.ஜனதா கட்சி சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி பிரதமர் வருகையை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் விதமாக திருப்பூர்-தாராபுரம் சாலை கே.செட்டிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் "நாங்கள் பிரதமர் மோடியை நேசிக்கிறோம்" (வி லவ் பி.எம்.மோடி) என்று ஆங்கில வாசகத்தில் மாணவ-மாணவிகள் 650 பேர் அணிவகுத்து நின்று பாரத பிரதமர் வருகைக்கு தங்களது அன்பை தெரிவிக்கும் விதமாக ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியானது மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமையில் சமூக ஊடக பிரிவு நிர்வாகிகள் ஏற்பாட்டில் நடைபெற்றது.


    பொதுக்கூட்ட ஏற்பாடுகள் குறித்து பா.ஜனதா மாநில பொதுச்செயலாளரும், பொதுக்கூட்ட பொறுப்பாளருமான ஏ.பி.முருகானந்தம் கூறும்போது, பொதுக்கூட்டத்தில் 15 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம். பொதுக்கூட்டத்திற்கு சில மாவட்டங்களில் இருந்து பா.ஜனதா தொண்டர்கள் நடைபயணமாகவும், சைக்கிளிலும், மாட்டு வண்டி மூலமாகவும் வந்து பங்கேற்க உள்ளனர். கூட்டத்தில் பங்கேற்கும் 15 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்றார். இதற்கிடையே பிரதமர் மோடி வருகையையொட்டி பல்லடத்தில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்தநிலையில் பிரதமரின் பாதுகாப்புக்கான மத்திய சிறப்பு படை அதிகாரிகள் குழு நேற்றிரவு திருப்பூர் வந்தனர். அவர்கள் இன்று காலை பொதுக்கூட்டம் நடைபெறும் பல்லடம் மாதப்பூருக்கு சென்று ஆய்வுப்பணியில் ஈடுபட்டனர். மேடை அமைக்கப்படும் இடம், பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானம் முழுவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் மைதானத்தை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இதனால் இன்று முதல் மைதானத்திற்குள் செல்பவர்கள் அனைவரும் தீவிர சோதனைக்கு பிறகே அனுப்பி வைக்கப்படுகின்றனர். மைதானத்தின் முக்கிய இடங்கள் மற்றும் ஹெலிகாப்டர் தளம் ஆகிய இடங்களில் மோப்ப நாய், மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே பொதுக்கூட்டத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருப்பூர் மாவட்ட போலீசாருடன் மத்திய பாதுகாப்பு படையினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். பொதுக்கூட்டத்திற்கு எவ்வளவு பேர் வருவார்கள், அதற்கான பாதுகாப்பு பணியில் எவ்வளவு போலீசாரை நிறுத்துவது என ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் சூலூரில் இருந்து மாதப்பூர் வரையிலான இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர்.

    ×