என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம்: பல்லடம் மைதானத்தில் மத்திய சிறப்பு பாதுகாப்பு படை குழுவினர் ஆய்வு
- பிரதமர் மோடி வருகையையொட்டி பல்லடத்தில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பொதுக்கூட்டத்திற்கு எவ்வளவு பேர் வருவார்கள், அதற்கான பாதுகாப்பு பணியில் எவ்வளவு போலீசாரை நிறுத்துவது என ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலை எதிரில் வருகிற 27-ந்தேதி பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலையின் 'என் மண், என் மக்கள்' பாதயாத்திரை நிறைவு விழாவும், பாராளுமன்ற தேர்தல் பிரசார கூட்டமும் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அந்த பணிகளை மாநில தலைவர் அண்ணாமலை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், பல்லடம் பொதுக்கூட்டம் தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றார்.
இந்தநிலையில் பல்லடம் வரும் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இதற்காக மாதப்பூர் பகுதியில் சாலையின் இருபுறமும் கட்சி கொடி, தோரணங்கள் கட்டும் பணிகள் தொடங்கி உள்ளது.
மேலும் பிரதமர் வருகையையொட்டி திருப்பூர் பா.ஜனதா கட்சி சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி பிரதமர் வருகையை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் விதமாக திருப்பூர்-தாராபுரம் சாலை கே.செட்டிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் "நாங்கள் பிரதமர் மோடியை நேசிக்கிறோம்" (வி லவ் பி.எம்.மோடி) என்று ஆங்கில வாசகத்தில் மாணவ-மாணவிகள் 650 பேர் அணிவகுத்து நின்று பாரத பிரதமர் வருகைக்கு தங்களது அன்பை தெரிவிக்கும் விதமாக ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியானது மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமையில் சமூக ஊடக பிரிவு நிர்வாகிகள் ஏற்பாட்டில் நடைபெற்றது.
பொதுக்கூட்ட ஏற்பாடுகள் குறித்து பா.ஜனதா மாநில பொதுச்செயலாளரும், பொதுக்கூட்ட பொறுப்பாளருமான ஏ.பி.முருகானந்தம் கூறும்போது, பொதுக்கூட்டத்தில் 15 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம். பொதுக்கூட்டத்திற்கு சில மாவட்டங்களில் இருந்து பா.ஜனதா தொண்டர்கள் நடைபயணமாகவும், சைக்கிளிலும், மாட்டு வண்டி மூலமாகவும் வந்து பங்கேற்க உள்ளனர். கூட்டத்தில் பங்கேற்கும் 15 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்றார். இதற்கிடையே பிரதமர் மோடி வருகையையொட்டி பல்லடத்தில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தநிலையில் பிரதமரின் பாதுகாப்புக்கான மத்திய சிறப்பு படை அதிகாரிகள் குழு நேற்றிரவு திருப்பூர் வந்தனர். அவர்கள் இன்று காலை பொதுக்கூட்டம் நடைபெறும் பல்லடம் மாதப்பூருக்கு சென்று ஆய்வுப்பணியில் ஈடுபட்டனர். மேடை அமைக்கப்படும் இடம், பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானம் முழுவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் மைதானத்தை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இதனால் இன்று முதல் மைதானத்திற்குள் செல்பவர்கள் அனைவரும் தீவிர சோதனைக்கு பிறகே அனுப்பி வைக்கப்படுகின்றனர். மைதானத்தின் முக்கிய இடங்கள் மற்றும் ஹெலிகாப்டர் தளம் ஆகிய இடங்களில் மோப்ப நாய், மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே பொதுக்கூட்டத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருப்பூர் மாவட்ட போலீசாருடன் மத்திய பாதுகாப்பு படையினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். பொதுக்கூட்டத்திற்கு எவ்வளவு பேர் வருவார்கள், அதற்கான பாதுகாப்பு பணியில் எவ்வளவு போலீசாரை நிறுத்துவது என ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் சூலூரில் இருந்து மாதப்பூர் வரையிலான இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர்.






