என் மலர்
உள்ளூர் செய்திகள்
- விளாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சர்மிளாவிடம் பொன்னுச்சாமி புகார் அளித்தார்.
- ராஜ்குமாரை கைது செய்து நிலக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள எத்திலோடு ஊராட்சி மன்ற அலுவலகம் எத்திலோடு கிராமத்தில் உள்ளது. இந்த ஊராட்சியின் 6-வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் கருத்தாண்டி பட்டியைச் சேர்ந்த ஷகிலா.
இவரது கணவர் ராஜ்குமார் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வந்து அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த ஊராட்சி செயலாளர் பொன்னுச்சாமியை வெளியே வரும்படி கூறினார். அவர் எதற்காக தன்னை வெளியே வரச்சொல்கிறீர்கள் என கேட்டதற்கு தான் ஊராட்சி அலுவலகத்திற்கு பூட்டு போட போகிறேன் என்றார்.
இதற்கு பொன்னுச்சாமி, ராஜகுமாரிடம் எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் பேசிக் கொள்ளலாம் என கூறினார். இருந்தபோதும் ராஜ்குமார் ஊராட்சி செயலாளரை அலுவலகத்தை விட்டு வெளியே வரச் சொல்லி அனுப்பிவிட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு பூட்டு போட்டு பூட்டினார்.
இது குறித்து விளாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சர்மிளாவிடம் பொன்னுச்சாமி புகார் அளித்தார். அதன்பேரில் ராஜ்குமாரை கைது செய்து நிலக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.
- சென்னை மாவட்டத்தை சேர்ந்த 65 வயதுக்குட்பட்ட உடல் ஆரோக்கியம் உள்ள அனைத்து முன்னாள் இளநிலை படை அலுவலர்கள் மற்றும் இதர தரத்தில் உள்ள முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம்.
- தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் முன்னாள் படை வீரர்களுக்கு மதிப்பூயம் வழங்கப்படும்.
சென்னை:
சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பாதுகாப்பு பணிகளில் முன்னாள் படைவீரர்கள் சிறப்புக் காவலர்களாக ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதற்கு சென்னை மாவட்டத்தை சேர்ந்த 65 வயதுக்குட்பட்ட உடல் ஆரோக்கியம் உள்ள அனைத்து முன்னாள் இளநிலை படை அலுவலர்கள் மற்றும் இதர தரத்தில் உள்ள முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம்.
உரிய தகுதியுடைய முன்னாள் படைவீரர்கள் சென்னை மாவட்டம் முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனர் அலுவலகம், சைதாப்பேட்டை, சென்னை-15 எனும் முகவரியை அணுகி தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் முன்னாள் படை வீரர்களுக்கு மதிப்பூதியம் வழங்கப்படும். இதுகுறித்த கூடுதல் தகவல்களுக்கு 044-2235 0780 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ஒற்றை யானைகளும் அவ்வப்போது வனச்சாலையில் ரோந்து வருவதும் வழக்கம்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஒகேனக்கல்:
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த கூத்தப்பாடி நெருப்பூரான் கொட்டாய் பகுதியை சேர்ந்த கொளந்தையப்ப கவுண்டர் மகன் மாதையன் (வயது 60). விவசாய கூலித்தொழிலாளி.
இவருக்கு சரோஜா என்ற மனைவியும், 3 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். தற்பொழுது ஒகேனக்கல் வனப்பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட யானைகள் உணவு மற்றும் குடிநீர் தேடி வெவ்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றன.
அதேபோல் ஒற்றை யானைகளும் அவ்வப்போது வனச்சாலையில் ரோந்து வருவதும் வழக்கம்.
இந்த நிலையில் மாதையன் ஒகேனக்கல் பெரிய பள்ளம் என்ற இடத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது வனப்பகுதியில் இருந்த ஒற்றை யானை திடீரென அவரை தாக்கி உள்ளது. இதனால் மாதையன் சம்பவ இடத்திலேயே உடல் முழுவதும் அடிபட்டு அங்கேயே பலியாகினார்.
இதை வனப்பகுதியில் இருந்த சிலர் பார்த்து ஒகேனக்கல் வனத்துறைக்கும், போலீசாருக்கும் நேற்று 4 மணி அளவில் தகவல் கொடுத்துள்ளனர். நேற்று மாலை வனத்துறை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு மாதையன் சடலத்தை மீட்க போராடியும் யானை மிகுந்த பகுதியாக உள்ளதால், முடியவில்லை.
எனவே இன்று காலை மீண்டும் ஒகேனக்கல் வனத்துறை மற்றும் போலீசார் உதவியுடன் மாதையன் உடலை மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்னர்.
இதுகுறித்து ஒகேனக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- பிரசார பொதுகூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேட்பாளரை ஆதரித்து பேசுகிறார்.
- முன்னாள் அமைச்சரும் தருமபுரி அ.தி.மு.க. மாவட்ட செயலாளருமான கே.பி.அன்பழகன், தலைமை வகிக்கிறார்.
தருமபுரி:
தருமபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் அசோகனை ஆதரித்து அ.தி.மு.க. சார்பில் பிரசார பொதுக்கூட்டம் வள்ளலார் திடலில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு நடக்கிறது. இந்த பிரசார பொதுகூட்டத்தில் முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வேட்பாளரை ஆதரித்து பேசுகிறார்.
இக்கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும் தருமபுரி அ.தி.மு.க. மாவட்ட செயலாளருமான கே.பி.அன்பழகன், தலைமை வகிக்கிறார். நகர செயலாளர் பூக்கடை ரவி வரவேற்கிறார்.
முன்னதாக தருமபுரி மாவட்ட அதிமுக செயலாளர் கே.பி. அன்பழகன் இந்த பிரசார பொதுக்கூட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகளை நேற்று நேரில் வந்து பார்வையிட்டார்.
- கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 1,700 கனஅடியாக நீர் திறக்கப்பட்டு வருகிறது.
- காளிங்கராயன் பாசனத்திற்கு 500 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் 2,300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களாகவே மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. அதேநேரம் அணைக்கு வரும் நீர்வரத்தை விட பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 48.94 அடியாக குறைந்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 15-ந் தேதி பவானிசாகர் அணை நீர்மட்டம் 48.20 அடியாக குறைந்து இருந்தது. அதன் பின்னர் தற்போது தான் 48 அடிக்கு கீழ் குறைந்துள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேல் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 50 கனஅடிக்கு கீழ் வருவது குறிப்பிடத்தக்கது.
கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 1,700 கனஅடியாக நீர் திறக்கப்பட்டு வருகிறது. காளிங்கராயன் பாசனத்திற்கு 500 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் 2,300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே நீர்வரத்து இன்றி பவானிசாகர் அணை நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் தற்போது பாசனத்திற்காக கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
- வேலூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த், அரக்கோணம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஜெகத்ரட்சகன் ஆகியோருக்கு வாக்கு சேகரிக்கிறார்.
- வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று முழுவதும் டிரோன்கள், பலூன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
வேலூர்:
வேலூர் கோட்டை மைதானத்தில் இன்று மாலை 6 மணி அளவில் தி.மு.க. சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார்.
வேலூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த், அரக்கோணம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஜெகத்ரட்சகன் ஆகியோருக்கு வாக்கு சேகரிக்கிறார்.
இந்த கூட்டத்துக்கு அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார். அமைச்சர்கள் எ.வ.வேலு, ஆர்.காந்தி, திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் தேவராஜ் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் வரவேற்று பேசுகிறார். இதில் எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். முடிவில் வேலூர் மாநகர செயலாளர் கார்த்திகேயன் நன்றி கூறுகிறார்.
இதற்கான ஏற்பாடுகளை வேலூர், அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் செய்துள்ளனர். இதற்காக கோட்டை மைதானத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் வருகையையொட்டி வெடிகுண்டு கண்டறிந்து அகற்றும் குழுவைச் சேர்ந்த 13 படையினர் பொதுக்கூட்டம் நடக்கும் மைதானத்தை சுற்றி மெட்டல் டிடெக்டர் கருவி உதவியுடன் சோதனை செய்தனர்.
போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின் பேரில் வேலூர் வழியாக செல்லும் வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன.
வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று முழுவதும் டிரோன்கள், பலூன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.
- தேவையற்ற செலவுகளுக்கு வழிவகுப்பதுடன் பொதுமக்களின் சுகாதார ஆதாரங்களில் அழுத்தத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்து விடுகிறது.
- 2021 வரையிலான 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் அறுவை சிகிச்சை பிரசவங்கள் 17.2 சதவீதத்தில் இருந்து 21.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.
சென்னை:
இந்தியாவில் அறுவை சிகிச்சை மகப்பேறுகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்து வருவது சென்னை ஐ.ஐ.டி. நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆராய்ச்சியாளர்களான செல்வி வர்ஷினி நீதிமோகன், டாக்டர் சிரிஜா மற்றும் டாக்டர் கிரிஜா வைத்தியநாதன், பேராசிரியர் முரளிதான் ஆகியோரை உள்ளடக்கிய ஐ.ஐ.டி. மெட்ராஸ் மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் துறை ஆராய்ச்சியாளர்களால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வு முடிவுகள் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகம் (ஐ.ஐ.டி.) ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் 2016-2021 ஆண்டுகளுக்கு இடையே நாடு முழுவதும் நடைபெற்ற அறுவை சிகிச்சை முறையிலான பிரசவங்களில் (சி பிரிவு) எண்ணிக்கை திடீரென கடுமையாக உயர்ந்துள்ளது.
அறுவை சிகிச்சை (சி பிரிவு) மகப்பேறு என்பது ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட குழந்தைகளை பிரசவிப்பதற்காக தாயின் வயிற்றில் கீறலை ஏற்படுத்தும் அறுவை சிகிச்சை நுட்பமாகும்.

மருத்துவ ரீதியாக நியாயப்படுத்தப்பட்ட இந்த செயல்முறை உயிரை காக்க கூடியது. அதே நேரத்தில் நிச்சயமாக தேவையற்ற வகையில் மேற்கொள்ளும் போது பாதகமான பல்வேறு சுகாதார விளைவுகளை ஏற்படுத்துகிறது.
தேவையற்ற செலவுகளுக்கு வழிவகுப்பதுடன் பொதுமக்களின் சுகாதார ஆதாரங்களில் அழுத்தத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்து விடுகிறது.
தமிழ்நாடு, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் விரிவான பகுப்பாய்வு நடத்தப்பட்டது. சத்தீஸ்கரை பொறுத்தவரை கர்ப்பகால சிக்கல்கள், அதிக ஆபத்துள்ள கருவூருதல் ஆகியவை அதிகமாக காணப்பட்டன. தமிழ்நாட்டில் அறுவை சிகிச்சை முறையிலான பிரசவங்கள் அதிக அளவில் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
2021 வரையிலான 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் அறுவை சிகிச்சை பிரசவங்கள் 17.2 சதவீதத்தில் இருந்து 21.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. தனியார் துறையை பொறுத்தவரை 2016-ல் இந்த எண்ணிக்கை 43.1 சதவீதமாக இருந்த நிலையில் 2021-ல் 49.7 சதவீதமாக அதிகரித்து உள்ளது. இந்த அதிகரிப்புக்கு பல்வேறு காரணங்கள் இருக்க வாய்ப்பு உள்ளது.
நகர்ப்புறங்களில் வசிக்கும் நன்கு படித்த பெண்கள் அறுவை சிகிச்சை பிரசவம் செய்து கொள்ள வாய்ப்புகள் அதிகம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
குறைந்த எடையுள்ள பெண்களை விட அதிக எடை கொண்ட பெண்களுக்கு இருமடங்கு அதிகமாக அறுவை சிகிச்சை பிரசவங்கள் நடக்கின்றன. அதிக எடை கொண்ட பெண்கள் குழந்தை பெற்று கொள்ளும் விகிதம் 3 சதவீதத்தில் இருந்து 18.7 சதவீதமாக உயர்ந்துள்ளது.
அதே நேரத்தில் 35-49 வயதிற்கு இடைப்பட்ட வயதுடையவர்கள் குழந்தை பெறுவது 11.1 சதவீதத்தில் இருந்து 10.9 சதவீதமாக குறைந்திருப்பதை ஆய்வு கண்டறிந்துள்ளது. மொத்தத்தில் 2016-2021 ஆண்டுகளுக்கு இடையே ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் தனியார் ஆஸ்பத்திரிகளில் நடைபெற்ற மகப்பேறுகளில் 4 மடங்கு அளவிற்கு அறுவை சிகிச்சை மூலம் நடைபெற்று உள்ளது. சத்தீஸ்கரில் அறுவை சிகிச்சை பிரசவத்திற்காக தனியார் ஆஸ்பத்திரிகளை நாடும் பெண்கள் எண்ணிக்கை 10 மடங்கும், தமிழ்நாட்டில் 3 மடங்கும் அதிகரித்து உள்ளது.
- பறிமுதல் செய்து அதிகாரிகள் மூலம் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
- மோகன் மாவட்ட அளவிலான குழுவில் மேல் முறையீடு செய்து பணத்தை திரும்ப ஒப்படைக்க ஆணை பெற்றார்.
கடத்தூர்:
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, மஞ்சவாடி கணவாய் வெள்ளையப்பன் கோவில் சோதனை சாவடியில், கடந்த 21-ந் தேதி நிலையான கண்காணிப்பு குழு அலுவலர் பாக்கியம் தலைமையிலான குழுவினர் சேலத்தில் இருந்து அரூர் நோக்கி வந்த காரை சோதனை செய்தனர்.
அப்போது பறையப்பட்டி புதூரைச் சேர்ந்த மோகன் வந்த காரில், 96, 500 ரூபாய் இருந்தது தெரிய வந்தது. இதை பறிமுதல் செய்து அதிகாரிகள் மூலம் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
பின், மோகன் மாவட்ட அளவிலான குழுவில் மேல் முறையீடு செய்து பணத்தை திரும்ப ஒப்படைக்க ஆணை பெற்றார்.
இதைத்தொடர்ந்து உதவி தேர்தல் அலுவலர் செர்லி ஏஞ்சலா, தாசில்தார் சரவணன், தனி தாசில்தார் பெருமாள் தேர்தல் துணை தாசில்தார் சிவஞானம் ஆகியோர் மோகனிடம் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.96,500-யை திரும்ப ஒப்படைத்தனர்.
- குடுவையை கைப்பற்றி போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்துள்ளனர்.
- 2 அடி உயர முள்ள முழுமையான குடுவை ஒன்றும், உடைபட்ட சிறிய ரக 4 குடுவைகளும் இருந்தது.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த சந்தனூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமையப்பெற்றுள்ளது.
இப்பள்ளிக்கு சுற்று சுவர் உள்ள நிலையில், அதற்கு கேட் அமைப்பதற்காக கடந்த 28-ந்தேதி அன்று பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜசேகரன், ஜே.சி.பி. வாகனத்தை அழைத்து பள்ளம் எடுத்துள்ளார். அப்போது சுமார் 5 அடி வரை பள்ளம் எடுத்தபோது, முக்கோண வடிவில் கல் ஒன்று இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். உடனே ஜே.சி.பி. எந்திரத்தை நிறுத்தச்சொல்லியதோடு, அந்த வாகனத்தை உடனே அனுப்பியுள்ளனர். பின்னர் கட்டிட மேஸ்திரி சிலம்பு மற்றும் குமார் உதவியுடன் கடப்பாரை கொண்டு முக்கோண வடிவ கல்லை அகற்றியுள்ளனர். அப்போது அந்த கல்லுக்கடியில் சுமார் 2 அடி உயர முள்ள முழுமையான குடுவை ஒன்றும், உடைபட்ட சிறிய ரக 4 குடுவைகளும் இருந்தது. பின்னர் தலைமை ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் சத்திய மூர்த்தி ஆகிய இருவரும் குடுவையை எடுத்து பள்ளிக்கு சென்று வைத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்த கட்டிட மேஸ்திரி சிலம்பு தாமோதரஹள்ளி கிராம நிர்வாக அலுவலர் கவுரிசங்கரை சந்தித்தபோது, நடந்த இந்த விபரத்தினை தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த கிராம நிர்வாக அலுவலர் உடனடியாக பள்ளிக்கு சென்று குடுவை பற்றிய விபரத்தை கேட்டுள்ளார். அவர்களும் அதை ஒப்புக்கொண்டுள்ளனர். குடுவையில் உள்ளவற்றை அகற்றிவிட்டு தண்ணீர் விட்டு சுத்தமாக கழுவி வைத்திருந்த குடுவையை கிராம நிர்வாக அலுவலரிடம் காண்பித்தனர். கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த தகவலின் பேரில் அங்கு சென்ற போச்சம் பள்ளி வட்டாட்சியர் மகேந்திரன், தலைமை ஆசிரியரிடம் விசாரித்த போது, உள்ளே ஒன்றும் இல்லை எனவும் சுத்தமாக வைத்திருந்ததாகவும் தெரிவித்தார். குடுவை கிடைத்தவுடன் ஏன் தெரிவிக்கவில்லை என கேட்டதற்கு, பதில் ஏதும் அளிக்காமல் இருந்ததாக வட்டாட்சியர் தெரிவித்தார்.
தற்போது குடுவையை கைப்பற்றி போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்துள்ளனர்.
தொல்லியல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளதாகவும், அவர்கள் வந்தவுடன் ஒப்படைத்து விடுவதாக வட்டாட்சியர் மகேந்திரன் தெரிவித்தார்.
மேலும் பழங்காலத்து குடுவை கிடைத்தவுடன் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளிக்காமல் வைத்திருந்ததால் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் மீது நாகரசம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளிப்பதாக வட்டாட்சியர் தெரிவித்தார்.
- த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை கடந்த 27-ந்தேதி தொடங்கி வாக்கு சேகரித்து வருகிறார்.
- 7-ந்தேதி கோவை, நீலகிரி, பொள்ளாச்சி தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை கடந்த 27-ந்தேதி தொடங்கி வாக்கு சேகரித்து வரும் நிலையில், தற்போது 2-வது கட்டமாக தென்மாவட்டங்களில் பிரசாரத்தை மேற்கொள்கிறார். மாற்றி அமைக்கப்பட்ட புதிய பிரசார தொகுதிகள் அதன் விவரம் வருமாறு:-
இன்று (செவ்வாய்க்கிழமை) தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை தொகுதிகளிலும், நாளை (3-ந்தேதி) தூத்துக்குடி தொகுதியிலும், 4-ந்தேதி விருதுநகர், தேனி தொகுதிகளிலும், 5-ந்தேதி சிதம்பரம், நாகை, மயிலாடுதுறை தொகுதிகளிலும், 6-ந்தேதி ஈரோடு, கரூர் தொகுதிகளிலும், 7-ந்தேதி கோவை, நீலகிரி, பொள்ளாச்சி தொகுதிகளிலும்,
8-ந்தேதி ஈரோடு, திருப்பூர் தொகுதிகளிலும், 9-ந்தேதி மற்றும் 10-ந்தேதிகளில் தூத்துக்குடி தொகுதியிலும், 11-ந்தேதி நாமக்கல், சேலம், தர்மபுரி, வேலூர் தொகுதிகளிலும், 12-ந்தேதி ஈரோடு தொகுதியிலும், 13-ந்தேதி திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகளிலும், 15-ந்தேதி தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலூர் தொகுதிகளிலும், 16-ந்தேதி ஸ்ரீபெரும்புதூர் தொகுதியிலும் பிரசாரம் மேற்கொள்கிறார்.
- தமிழின் பெருமைகளை உலகெங்கிலும் பிரதமர் மோடி பரப்பி வருகிறார்.
- உதயநிதி ஸ்டாலின் செங்கலை காட்டி எய்ம்ஸ் திட்டத்தை கொச்சைப்படுத்தி வருகிறார்.
மதுரை:
மதுரை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழின் பெருமைகளை உலகெங்கிலும் பிரதமர் மோடி பரப்பி வருகிறார். தமிழ் கலாச்சாரத்தின் மீது அதிக பற்று கொண்ட மோடி தமிழராகவே செயல்படுகிறார். மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை தென் மாவட்ட மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் ஆகும். இந்த விவகாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செங்கலை காட்டி எய்ம்ஸ் திட்டத்தை கொச்சைப்படுத்தி வருகிறார்.
எய்ம்ஸ் மருத்துவமனை திட்டம் தொடங்கப்படாததற்கு காரணம் எதிர்க்கட்சிகள் தான். மருத்துவமனை வருவதற்கு துணை நிற்காமல், வராமல் இருப்பதற்கு துணை நிற்கிறார்கள். ஆனாலும் எய்ம்ஸ் மருத்துவமனை கண்டிப்பாக வரும். அதன் திறப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்வார்.
கச்சத்தீவு பிரச்சனை தமிழக மீனவர்களின் முக்கிய பிரச்சனையாகும். கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது கச்சத்தீவு தொடர்பாக எடுத்த முடிவுக்கு தி.மு.க. துணை போனது. இதில் மாற்று கருத்து இருக்க முடியாது. தமிழக மக்களுக்கும், மீனவர்களுக்கும் கச்சத்தீவு விவகாரத்தில் துரோகம் செய்த கூட்டணியாக தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி உள்ளது.
இதனை மக்கள் மறக்க மாட்டார்கள். மீனவ மக்களின் வாக்கு அவர்களுக்கு கிடைக்காது. தி.மு.க. ஆட்சி மீது தமிழக மக்களுக்கு அதிருப்தி உள்ளது. 10 வருட காலம் மோடி அரசின் சாதனை எங்களது வெற்றிக்கு அடித்தளமாக அமையும். இந்த வெற்றியானது அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலிலும் தொடரும்.
இவர் அவர் பேசினார்.
- தங்கத்தை போலவே வெள்ளியும் உயர்ந்து வருகிறது.
- வெள்ளி கிராமுக்கு 40 பைசாக்கள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.82-க்கும் கிலோவுக்கு 400 ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ரூ.82,000-க்கும் விற்பனையாகிறது.
சென்னை:
ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த மாதம் 28-ந்தேதி வரலாற்றிலேயே முதன்முறையாக சவரன் ரூ.50,000-க்கு விற்பனையானது. மறுநாள் ரூ.51,120-க்கும், 30 மற்றும் 31-ந்தேதிகளில் ரூ.50,960-க்கும் நேற்று ரூ.51,640-க்கும் விற்பனையானது.
இந்நிலையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ரூ.51,440-க்கும் கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் ரூ.6,430-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தை போலவே வெள்ளியும் உயர்ந்து வருகிறது. இன்று வெள்ளி கிராமுக்கு 40 பைசாக்கள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.82-க்கும் கிலோவுக்கு 400 ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ரூ.82,000-க்கும் விற்பனையாகிறது.






