என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • முதல் அடுக்கில் துணை ராணுவத்தினர் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    • ஜூன் மாதம் 4-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் இந்த பாதுகாப்பை மேலும் பல மடங்கு அதிகரிக்க உயர் போலீஸ் அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்தில் 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் அமைதியான முறையில் தேர்தல் நடந்து முடிந்து உள்ளது.

    சின்ன சின்ன அசம்பாவித சம்பவங்கள் மட்டுமே நடைபெற்ற நிலையில் பெரிய அளவில் வன்முறை சம்பவங்களோ, மோதலோ ஏற்படவில்லை. நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலையில் நிறைவடைந்ததை தொடர்ந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பூட்டி சீல் வைக்கப்பட்டன.

    39 பாராளுமன்ற தொகுதிகளிலும் பதிவான ஓட்டுகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்படுகிறது. நேற்று மாலையில் வாக்குப்பதிவு முடிவடைந்த பிறகு அனைத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்டன.

    மாலை 6 மணிக்கு பிறகு வரிசையில் நின்றவர்கள் டோக்கன் வாங்கிக் கொண்டு நீண்ட நேரம் காத்திருந்து ஓட்டு போட்டனர். இதனால் சில மையங்களில் இரவு 7 மணி வரையிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதன் பிறகே பல வாக்குச் சாவடிகளில் இருந்து மின்னணு எந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்டன.

    சென்னையில் அண்ணா பல்கலைக்கழகம், ராணி மேரி கல்லூரி, லயோலா கல்லூரி ஆகிய 3 மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதே போன்று 39 தொகுதிகளில் பதிவான வாக்குகளும் அந்தந்த தொகுதிக்குட்பட்ட மையங்களில் எண்ணப்படுகிறது.

    தேர்தல் முடிந்து 45 நாட்கள் கழித்தே ஜூன் 4-ந்தேதி வாக்குகள் எண்ணப்படுவதால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை ஒரு மாதத்துக்கும் மேலாக பாதுகாக்க வேண்டிய கட்டாயம் காவல்துறையினருக்கு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து வாக்கு எண்ணும் மையங்களில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    முதல் அடுக்கில் துணை ராணுவத்தினர் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இரண்டாவதாக தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படையினரும், 3-வதாக ஆயுதப்படை போலீசும், 4-வதாக உள்ளூர் போலீசாரும் பாதுகாப்பு பணிகளை கவனித்து வருகிறார்கள்.

    டி.எஸ்.பி. அல்லது போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தஸ்திலான அதிகாரிகள் தலைமையில் உள்ளூர் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வருகிறார்கள்.

    39 பாராளுமன்ற தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்ட மின்னணு எந்திரங்களை வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லும் பணிகள் நேற்று இரவு விடிய விடிய நடைபெற்றது. இன்று காலையிலும் பல இடங்களில் அந்த பணிகள் நீடித்தன.

    வாக்கு எண்ணும் மையங்களுக்கு இன்று காலையில் கொண்டு சேர்க்கப்பட்ட மின்னணு எந்திரங்கள் 'ஸ்டிராங் ரூம்' என்று அழைக்கப்படும் அறைகளில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டன. பின்னர் அந்த அறைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டன.

    இந்த அறையின் முன்பு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு உள்ளனர்.

    ஸ்டிராங் ரூம் அறையை சுற்றிலும் போலீசார் ரோந்து சுற்றி வரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதை தாண்டி மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு அருகில் யாரும் நெருங்க முடியாது என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    வாக்கு எண்ணும் மையங்கள் அனைத்திலும் நூற்றுக்கணக்கான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை 24 மணி நேரமும் கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக வாக்கு எண்ணும் மையங்களில் சிறப்பு கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்தபடியே போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

    இப்படி வாக்கு எண்ணும் மையங்களில் உச்சக்கட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு 10 ஆயிரம் போலீசார் கண்காணித்து வருகிறார்கள். ஜூன் மாதம் 4-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் இந்த பாதுகாப்பை மேலும் பல மடங்கு அதிகரிக்க உயர் போலீஸ் அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

    • சோழிங்கநல்லூர் தொகுதியில் சில இடங்களில் கொத்து கொத்தாக வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளது.
    • வாக்குரிமை மறுக்கப்பட்டவர்கள் 49 ஏ படிவத்தில் டெண்டர் ஓட்டு செலுத்த முடியும்.

    சென்னை:

    தென்சென்னை பாராளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று அந்த தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரி அமீத்தை சந்தித்தார்.

    அப்போது மயிலாப்பூர் 122-வது வட்டம் 13-வது வாக்குச்சாவடியில் நடந்த சம்பவம் தொடர்பாக புகார் மனு கொடுத்தார்.

    பின்னர் வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேர்தல் நேர்மையாக நடக்க வேண்டும். நேர்மையானவர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பம். ஆனால் தி.மு.க.வுக்கு எப்போதெல்லாம் தோல்வி பயம் வருகிறதோ அப்போதெல்லாம் மாற்றுப் பாதையை தேர்வு செய்வதுதான் வாடிக்கை.

    நேற்று வாக்குப்பதிவு நடந்து கொண்டிருந்தபோது மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 122-வது வார்டில் ஆஸ்டின் நகரில் அமைக்கப்பட்டிருந்த 13-வது வாக்குச்சாவடியில் மாலை 5.30 மணியளவில் பிரபு, அருண் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் உள்ளே புகுந்து பா.ஜனதா பூத் ஏஜெண்டு கோவிந்தன் உள்ளிட்டோரை அடித்து வெளியே விரட்டி விட்டு பூத்தை கைப்பற்றி கள்ள ஓட்டு போட்டுள்ளார்கள்.

    இதே கும்பல் பூத் எண். 14, 15, 16 ஆகியவற்றிலும் காலையில் இருந்தே கள்ள ஓட்டுகளை பதிவு செய்து அராஜகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்கள்.

    இந்த சம்பவம் தொடர்பாக எங்கள் தலைமை தேர்தல் ஏஜெண்டு கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன் ஆகியோர் சம்பந்தப்பட்ட பகுதி போலீஸ் அதிகாரிகள் கவனத்துக்கும் எடுத்து சென்றிருக்கிறார்கள்.

    எனவே இந்த வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று தேர்தல் அதிகாரியிடம் புகார் கொடுத்துள்ளோம்.

    சோழிங்கநல்லூர் தொகுதியில் சில இடங்களில் கொத்து கொத்தாக வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளது. தி.நகரில் வார்டு எண்கள் 199, 200, 201, 202-ல் ஆயிரக்கணக்கானவர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளது. தேர்தல் ஆணையம் இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.

    தி.மு.க.வினர் செய்த தவறுகளை மறைப்பதற்காக பா.ஜனதாவினர் தோல்வி பயத்தில் புகார் கூறுவதாகவும், பா.ஜனதாவினர் பெயர்களை நீக்கி விட்டதாக கூறுவதாகவும் கூறுகிறார்கள். அப்படியென்றால் திட்டமிட்டுதான் பா.ஜனதாவினர் பெயர்கள் நீக்கப்பட்டது என்று தி.மு.க. ஒத்துக்கொள்கிறதா?

    கணவருக்கும், மனைவிக்கும் வெவ்வேறு இடங்களில் ஓட்டு இருப்பது, ஒரே குடும்பத்தில் சிலருக்கு ஓட்டு இல்லாமல் இருப்பது, இப்படி சில குறைபாடுகள் உள்ளன. ஒட்டுமொத்தமாக வாக்குப்பதிவு சதவீதம் குறைவு என்பது கவலை அளிக்கும் விசயம்.

    வாக்கு வலிமையானது. அதை செலுத்த முடியாமல் போவது அதிக வலியை தரும். வாக்குரிமை மறுக்கப்பட்டவர்கள் 49 ஏ படிவத்தில் டெண்டர் ஓட்டு செலுத்த முடியும். இது பலருக்கு தெரியவில்லை. தேர்தல் விழிப்புணர்வுக்காக கோடிக்கணக்கில் பணம் செலவிடப்படுகிறது. ஆனாலும் எதிர்பார்த்த பலன் அளிக்கவில்லை.

    சென்னையில் 69 சதவீதம் ஓட்டுப்பதிவாகி இருந்ததாக நேற்று இரவு தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில் இன்று 10 சத வீதத்துக்கும் மேல் குறைத்து தெரிவித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த சதவீத முரண்பாடு தேர்தல் ஆணையத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கையின் மையை ஏற்படுத்தி விடும்.

    எப்படியோ மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவை இவ்வளவு பெரிய மாநிலத்தில் சுமூகமாக நடத்தி முடித்த தேர்தல் ஆணையத்துக்கு பாராட்டுகள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த சம்பவம் தொடர்பாக தி.மு.க. மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளை சேர்ந்தவர்கள் தனித்தனியாக புகார் அளித்துள்ளனர். பாரதிய ஜனதா சார்பில் உதவி தேர்தல் அலுவலர் கீதா லட்சுமியிடம் அளிக்கப்பட்ட புகாரில் பா.ஜனதா முகவர் கவுதமை தாக்கிய தி.மு.க. பிரமுகர்களான பிரபு, அருண் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    தி.மு.க. முகவரான கிருஷ்ணவேணி தேனாம்பேட்டை போலீசில் அளித்த புகாரில், பாரதிய ஜனதா கட்சி முகவர்களை கவுதம், கிருஷ்ணன் ஆகியோர் சாதியை பற்றி குறிப்பிட்டு அவதூறாக பேசியதாக குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் அங்கு குவிந்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இரணியல்:

    இரணியல் அருகே உள்ள கட்டிமாங்கோடு என்ற இடத்தைச் சேர்ந்தவர் இளையராஜா என்ற கணேஷ் ராஜா. இவர் நேற்று மதியம் கட்டிமாங்காடு அரசு நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடிக்கு வாக்களிக்கச் சென்றார். வரிசையில் அவருக்கு பின்னால் அதே பகுதியைச் சேர்ந்த அரவிந்த் என்பவர் நின்றார்.

    வாக்குச்சாவடிக்குள் சென்றதும் கணேஷ் ராஜா வாக்கு சீட்டை சரிபார்த்த அதிகாரிகள் அவரை வாக்களிக்க அனுமதித்தனர். அவர் மின்னணு எந்திரத்தில் வாக்களித்து திரும்பும் போது, அரவிந்தும் அங்கு வந்தார். அவர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்கினை செலுத்துவதற்குள் அங்கு நின்றிருந்த கணேஷ் ராஜா மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பட்டனை அழுத்தி விட்டாராம். பீப் சவுண்ட் கேட்டதால் அதிர்ச்சி அடைந்த அரவிந்த் இது குறித்து வாக்குச் சாவடி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். அதற்குள் கணேஷ் ராஜா அங்கிருந்து நைசாக வெளியேறி விட்டார்.

    இது குறித்த தகவல் அறிந்ததும் அப்பகுதி மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் அங்கு குவிந்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. இந்த தகவல் உயர் அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். இது தொடர்பாக தேர்தல் நடத்தும் அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் கணேஷ் ராஜா மீது இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வடசென்னை தொகுதி வாக்குகள் ராணிமேரி கல்லூரியிலும் எண்ணப்படுகின்றன.
    • கேமராக்கள் மூலமாக போலீசார் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.

    சென்னை:

    தென்சென்னை தொகுதியில் பதிவாகியுள்ள வாக்குகள் அண்ணா பல்கலைக்கழகத்திலும், மத்திய சென்னை வாக்குகள் லயோலா கல்லூரியிலும், வடசென்னை தொகுதி வாக்குகள் ராணிமேரி கல்லூரியிலும் எண்ணப்படுகின்றன. இந்த 3 மையங்களிலும் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ராணிமேரி கல்லூரியில் 172 கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்தில் 180 கேமராக்களும், லயோலா கல்லூரியில் 188 கேமராக்களும் பொறுத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள் மூலமாக போலீசார் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.

    • வழக்கமாக இயக்கப்படும் பஸ்களை விட பிற பகுதிகளிலும் சிறப்பு பஸ்கள் நாளை பிற்பகல் முதல் இயக்கப்பட உள்ளன.
    • சிறப்பு ரெயில்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக நேற்று அரசு பொது விடுமுறை அறிவித்து இருந்தது. தனியார் நிறுவனங்களும் ஊழியர்களுக்கு கட்டாயம் விடுப்பு அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தததால் சொந்த ஊர்களுக்கு 17, 18 ஆகிய தேதிகளில் புறப்பட்டு சென்றனர்.

    சென்னை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் தங்கி வேலை செய்து வந்த கூலி தொழிலாளர்கள், ஊழியர்கள் ஓட்டு போடுவதற்காக சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். இதற்காக அரசு சிறப்பு பஸ்கள் இயக்கின. தெற்கு ரெயில்வே சிறப்பு ரெயில்களை சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு இயக்கியது.

    இந்த நிலையில் ஓட்டு போட சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக கூடுதலாக பஸ் வசதியை அரசு போக்குவரத்து கழகங்கள் இன்று (சனிக்கிழமை) முதல் செய்துள்ளது. அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு சனி, ஞாயிறு தொடர் விடுமுறை கிடைப்பதால் 22-ந்தேதி (திங்கட்கிழமை) வேலைக்கு செல்ல வசதியாக பெரும்பாலும் நாளை பயணத்தை தொடர்வார்கள்.

    அதனால் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கோவை, சேலம், ஓசூர், திருப்பூர், சிதம்பரம், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு கூடுதலாக பஸ்கள் விடப்பட்டுள்ளது.

    வழக்கமாக இயக்கப்படும் பஸ்களை விட பிற பகுதிகளிலும் சிறப்பு பஸ்கள் நாளை பிற்பகல் முதல் இயக்கப்பட உள்ளன.

    தூத்துக்குடியில் இருந்து சென்னை எழும்பூருக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் விடப்பட்டு உள்ளது. இந்த ரெயில் தூத்துக்குடியில் இன்று மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு எழும்பூருக்கு நாளை அதிகாலை 3.50 மணிக்கு வந்து சேருகிறது. பின்னர் 4.45 மணிக்கு சென்ட்ரல் நிலையம் சென்றடைகிறது.

    இந்த சிறப்பு ரெயிலில் உள்ள அனைத்து பெட்டிகளும் முன்பதிவு செய்யப்படாதவை. இந்த ரெயில் மதுரை, திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம் வழியாக இயக்கப்படுகிறது.

    மற்றொரு சிறப்பு ரெயில் திருச்சியில் இருந்து எழும்பூருக்கு இன்று இயக்கப்பட்டது. இன்று அதிகாலை 5.30 மணிக்கு புறப்பட்ட ரெயில் பகல் 1.20 மணிக்கு எழும்பூர் வந்து சேர்ந்தது.

    இதே போல் தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு இன்று சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் தாம்பரத்தில் இரவு 7.50 மணிக்கு புறப்பட்டு நாளை காலை 11.15 மணிக்கு திருநெல்வேலி சென்றடைகிறது.

    மறுமார்க்கத்தில் திருநெல்வேலியில் இருந்து நாளை பகல் 3.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.55 மணிக்கு தாம்பரம் வந்து சேருகிறது. சிறப்பு ரெயில்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இது குறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் கூறும்போது நாளை (ஞாயிற்றுக்கிழமை) பயணம் செய்ய 34 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். மொத்தம் 1.25 லட்சம் இடங்கள் உள்ளன. பொதுமக்கள் நெரிசலை தவிர்க்க அரசு பஸ்களில் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 40 தொகுதிகளுக்கு நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது.
    • விஜய் பலத்த பாதுகாப்புடன் வாக்குச்சாவடிக்குள் சென்று வாக்களித்தார்.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கு நேற்று ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடந்து முடிந்தது.

    வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், அரசியல் கட்சி தலைவர்களும், திரைப் பிரபலங்களும் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து சென்றனர்.

    அதன்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் நேற்று நண்பகலில் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க சென்றார்.

    அப்போது அங்கு கூட்டம் அலைமோதியது. இதனால், விஜய் பலத்த பாதுகாப்புடன் வாக்குச்சாவடிக்குள் சென்று வாக்களித்தார்.

    இந்நிலையில், விஜய் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் புகார் தெரிவித்துள்ளார்.

    பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், 200க்கும் மேற்பட்ட நபர்களுடன், தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்குச்சாவடிக்குள் சென்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சினிமா உலகில் ஜாபர் சாதிக்குடன் நெருக்கமாக இருந்த மேலும் பலரிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது.
    • ஹவாலா பணத்தை பரிமாற்றம் செய்தது தொடர்பாக ஜாபர்சாதிக், மண்ணடியை சேர்ந்த தரகருடன் நெருங்கிய தொடர்பில் இருந்திருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

    சென்னை:

    டெல்லியில் இருந்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு சூடோ பெட்ரின் என்கிற போதைப்பொருட்களை கடத்தி விற்பனை செய்த தி.மு.க. அயலக அணி முன்னாள் நிர்வாகியான ஜாபர்சாதிக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவருடன் மேலும் 4 பேரும் கைதாகியுள்ளனர்.

    போதைப்பொருள் கடத்தல் மூலமாக ஜாபர்சாதிக் ரூ.2 ஆயிரம் கோடியை சுருட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இப்படி சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தை ஜாபர்சாதிக் சினிமா மற்றும் ஓட்டல் தொழிலில் முதலீடு செய்திருப்பது அம்பலமானது.

    இது தொடர்பாக சினிமா இயக்குனர் அமீரிடம் டெல்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். சினிமா உலகில் ஜாபர் சாதிக்குடன் நெருக்கமாக இருந்த மேலும் பலரிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது.

    இந்த வழக்கு விசாரணை டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. ஜாபர்சாதிக்கை ஏற்கனவே அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்தியுள்ளனர். இந்த நிலையில் ஜாபர்சாதிக் மீதான போதைப்பொருள் வழக்கு விசாரணை டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் இன்று நடைபெறுவதாக இருந்தது.

    இந்த வழக்கு விசாரணை வருகிற 22-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்று ஜாபர்சாதிக் உள்பட கைதான 5 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் ஜாபர்சாதிக் ஹவாலா பணப்பரிமாற்றத்திலும் ஈடுபட்டிருக்கலாம் என்று போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பான தகவல்களை அவர்கள் திரட்டி வருகிறார்கள். இந்த நிலையில் சென்னை மண்ணடியை சேர்ந்த ஹவாலா பணப்பரிமாற்ற தரகர் ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரை பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஹவாலா பணத்தை பரிமாற்றம் செய்தது தொடர்பாக ஜாபர்சாதிக், மண்ணடியை சேர்ந்த தரகருடன் நெருங்கிய தொடர்பில் இருந்திருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. இதைத் தொடர்ந்து அதன் பின்னணி தொடர்பாக போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடி விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    • மட்டிகரைப்பட்டியை சேர்ந்த 95 வயது மூதாட்டி முதுமை காரணமாக நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார்.
    • ஊன்றுகோல் உதவியுடன் வந்த வயதான மூதாட்டிகள் வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் நேற்று ஒரே கட்டமாக நடந்தது. 72 சதவீதம் வாக்குப்பதிவான நிலையில் நகர் பகுதியை விட கிராமப்புறங்களில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

    இதேபோல் 18 வயது நிரம்பிய இளம் வாக்காளர்களும் வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்து உற்சாகத்துடன் வாக்களித்து சென்றனர்.

    இளம் வாக்காளர்களை விட எந்த விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்பதை காட்டும் வகையில் வயதானவர்களும் வரிசையில் காத்திருந்து வாக்களித்ததை காண முடிந்தது.

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மட்டிகரைப்பட்டியை சேர்ந்த 95 வயது மூதாட்டி முதுமை காரணமாக நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார். நேற்று தேர்தல் நாள்  என்பதால்தான் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் எனக்கூறிய மூதாட்டி வாக்கு மையத்திற்கு அழைத்து செல்லுமாறு வற்புறுத்தவே, உறவினர்களும் அவரை மொபட்டின் முன்புறம் அமர வைத்து வாக்கு மையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

    வயது மூப்பு காரணமாக தேர்தல் அதிகாரிகள் அவரை வரிசையில் காத்திருக்க வைக்காமல் வாக்களிக்க அனுமதித்தனர். இதையடுத்து 95 வயது மூதாட்டி நடக்க முடியாத சூழ்நிலையிலும் அவர் தனது வாக்குப்பதிவை செலுத்தினார்.

    இதேபோல் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியிலும் நடக்க முடியாத சூழ்நிலையில் மூதாட்டிகள் ஆர்வமாக வந்து வாக்களித்தனர். செட்டியார்பட்டியில் உள்ள மகாத்மா காந்தி வாக்குச்சாவடி மையத்திற்கு ஊன்றுகோல் உதவியுடன் வந்த வயதான மூதாட்டிகள் வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.

    வத்திராயிருப்பு அருகே உள்ள வ.புதுப்பட்டியை சேர்ந்த 92 வயதான மூதாட்டி ருக்மணி என்பவரும் வாக்களித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த 1962-ம் ஆண்டு முதல் தவறாமல் வாக்களித்து வருகிறேன். தற்போது எனக்கு வயது 92. வயது மூப்பு பாதிப்பு இருந்தாலும் நல்ல அரசை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்காக வாக்களித்துள்ளேன் என்றார்.

    • கொடைக்கானலில் உயர்தர மற்றும் நட்சத்திர அந்தஸ்து கொண்ட விடுதிகள் அதிக அளவில் உள்ளன.
    • வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் முதல் தர விடுதிகளில் இடம் கிடைக்காவிட்டால் மற்ற இடங்களை தேடி செல்வது வழக்கம்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு வருடந்தோறும் சுற்றுலா பயணிகள் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள்.

    தற்போது கோடை வெயில் அதிகரித்து வருவதாலும் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.

    இந்நிலையில் கடந்த 2 வாரங்களாக தேர்தல் பணி காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை குறைவாகவே காணப்பட்டது. சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது அரசியல் கட்சியினர் தங்கள் ஆதரவாளர்களுடன் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

    தற்போது தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்து விட்டதால் ஓய்வுக்காக கொடைக்கானலை நோக்கி படையெடுக்க தொடங்கி உள்ளனர்.

    இதனால் அனைத்து விடுதிகளும் நிரம்பி உள்ளது. கொடைக்கானலில் உயர்தர மற்றும் நட்சத்திர அந்தஸ்து கொண்ட விடுதிகள் அதிக அளவில் உள்ளன. இந்த விடுதிகளை எங்கிருந்த நிலையிலும் ஆன்லைன் மூலமே புக்கிங் செய்து கொள்ளலாம். அதன்படி தேர்தல் முடிந்த 20-ந்தேதி முதல் பேக்கேஜ் விடுமுறையாக ஒருவாரம் வரை பலர் புக்கிங் செய்துள்ளனர். இதனால் அனைத்து விடுதிகளிலும் நிரம்பி விட்டது. இவற்றை தவிர நடுத்தர விடுதிகள் மற்றும் ஏராளமான காட்டேஜ்களும் உள்ளன. வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் முதல் தர விடுதிகளில் இடம் கிடைக்காவிட்டால் மற்ற இடங்களை தேடி செல்வது வழக்கம்.

    எனவே முதல் தர விடுதிகள் நிரம்பி விட்டதால் மற்ற விடுதிகளை நோக்கி அவர்கள் படையெடுத்து வருகின்றனர். தற்போது தொடர் விடுமுறை என்பதால் அரசியல் கட்சியினர் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் கொடைக்கானலில் குவிய தொடங்கி உள்ளனர்.

    கொடைக்கானலில் அவ்வப்போது சாரல் மழை பெய்தாலும் பகல் பொழுதில் வெப்பம் நிலவி வருகிறது. மாலை மற்றும் இரவு நேரங்களில் வெப்பத்தின் தாக்கம் இல்லாத அளவுக்கு ரம்யமான சீதோசனம் காணப்படுகிறது. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

    கடந்த சில நாட்களாக வெறிச்சோடி காணப்பட்ட சுற்றுலா தலங்களில் மீண்டும் கூட்டம் அதிகரித்து காணப்படுவதால் சுற்றுலா தொழிலை நம்பி உள்ள டாக்சி டிரைவர்கள், வழிகாட்டிகள், ஓட்டல் உரிமையாளர்கள், சாலையோர வியாபாரிகள் உள்பட அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • மின் ஊழியர்கள் மின்கம்பத்தில் ஏறி சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
    • மின்கம்பத்தில் இருக்கும் ராடு குத்தியதில் ஊழியர்கள் 2 பேர் காயம் அடைந்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பெரிய கோவிலில் இன்று காலை சித்திரை பெருவிழா தேரோட்டம் தொடங்கியது. தஞ்சை மேலவீதியில் இருந்து தேர் காலை 7 மணிக்கு வடம் பிடித்து புறப்பட்டது.

    அப்போது புறப்பட்ட சிறிது நேரத்தில் ஒரு தனியார் நிறுவன பெயர் பலகையில் தேரின் அலங்கார பந்தல் திடீரென சிக்கி கொண்டது. பின்னர் அதனை சரிசெய்து 15 நிமிடங்களுக்கு பிறகு தேர் புறப்பட்டது.

    இதையடுத்து நகர்ந்த தேர் கொங்கனேஸ்வரர் கோவில் அருகே சென்றபோது, மீண்டும் வலது புற மின் கம்பத்தில் தேரின் அலங்காரப் பந்தல் சிக்கியது. பின்னர் இடையூறாக இருந்த மின் கம்பி அகற்றப்பட்ட பிறகு தேர் சுமார் 10 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் புறப்பட்டு சென்றது.

    ஆனால் அடுத்த 50 அடி தொலைவில் வலது புற மின் கம்பத்தில் தேரின் அலங்காரப் பந்தல் வலது புற மின் கம்பத்தில் சிக்கியதால் மீண்டும் தேர் நின்றது.

    இதையடுத்து மின் ஊழியர்கள் மின்கம்பத்தில் ஏறி சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மின்கம்பத்தில் இருக்கும் ராடு குத்தியதில் ஊழியர்கள் 2 பேர் காயம் அடைந்தனர்.

    இருந்தாலும் அலங்கார பந்தலை மின் கம்பத்தில் இருந்து அகற்றி சரி செய்யப்பட்டது. தொடர்ந்து காயமடைந்த ஊழியர்கள் 2 பேரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இப்படி 3 முறை மின் கம்பங்களில் சிக்கி தேர் அடிக்கடி நின்றதற்கு அலங்காரப் பந்தலின் அகலம் வழக்கத்தை விட அதிகம் என்பதே முதன்மை காரணமாக கூறப்பட்டது. இதனால் அலங்கார பந்தலின் அகலத்தை தொழிலாளர்கள் குறைத்தனர். அதன் பின்னர் தேரோட்டம் தொடங்கி நடைபெற்றது.

    • சூலூர் அருகே ராசிபாளையத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதும் எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது.
    • கோவை வடக்கில் 58.74, சிங்காநல்லூரில் 59.33 சதவீத வாக்குகளும் பதிவாகியது.

    கோவை:

    கோவை பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு நேற்று நடந்தது.

    காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.

    கோவை பாராளுமன்ற தொகுதியில் காலை 7 மணி முதல் 9 மணி வரை 9.38 சதவீதம் வாக்குகளும், 11 மணி முதல் 1 மணி வரை 36.10 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன.

    1 மணி முதல் 3 மணி வரை 47.12 சதவீத வாக்குகளும், 3 மணி முதல் 5 மணி வரை 57.53 சதவீத வாக்குகளும் பதிவாகியது. கோவை மாவட்டத்தில் இறுதி நிலவரப்படி மொத்தம் 64.81 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

    கோவை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டசபை தொகுதிகளில் அதிகபட்சமாக சூலூரில் 75.33 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

    பல்லடம் சட்டசபை தொகுதியில் 67.42 சதவீத வாக்குகளும், கோவை வடக்கில் 58.74, சிங்காநல்லூரில் 59.33 சதவீத வாக்குகளும் பதிவாகியது.

    கோவை தெற்கில் 59.25 கவுண்டம்பாளையத்தில் 66.42 சதவீத வாக்குகளும் பதிவாகியிருந்தன. கோவை பாராளுமன்ற தொகுதியிலேயே சூலூரில் தான் அதிகபட்ச வாக்குகள் பதிவாகி இருந்தது.

    ஆனால் வழக்கம் போல மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு ஆர்வம் காட்டவில்லை.

    சூலூர் அருகே ராசிபாளையத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதும் எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனால் ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு தடைபட்டது. அதனை தொடர்ந்து மாற்று எந்திரம் வைக்கப்பட்டு, வாக்குப்பதிவு நடந்தது.

    அங்கும் வாக்குப்பதிவு முடிந்த பிறகும் கூடுதலாக 2 மணி நேரம் அனுமதிக்கப்பட்டு இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது.

    • பக்தர்களின் வசதிக்காக திருக்கல்யாண மண்டபம், பக்தர்கள் அமரும் பகுதியில் குளிர்சாதன வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.
    • நாளை இரவு யானை, ஆனந்தராயர் பூப்பல்லக்கில் சுவாமி-அம்பாள் வீதி உலா நடக்கிறது.

    மதுரை:

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் நாள்தோறும் காலை, இரவு நேரங்களில் சுவாமி-அம்பாள் மாசி வீதிகளில் உலா வந்து அருள்பாலித்து வருகின்றனர்.

    விழாவின் 8-ம் நாளான நேற்று மதுரை நகரின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் வகையில் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடந்தது. கோவிலில் உள்ள அம்மன் சன்னதி முன்பு உள்ள ஆறுகால் பீடத்தில் நடந்த நிகழ்ச்சியில் ராயர் கீரிடம் சாற்றி, ரத்தின செங்கோலுடன் மீனாட்சி காட்சி அளித்தார்.

    கோவில் அறங்காவலர் குழு தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன் அம்மனிடம் இருந்து செங்கோல் பெற்று பிரகாரம் சுற்றி வந்தார். அதனை தொடர்ந்து பட்டத்தரசியாக அம்மனும், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் மாசி வீதிகளில் வெள்ளி சிம்மாசனத்தில் (கைபாரம்) எழுந்தருளினார். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    9-வது நாளான இன்று காலை மரவர்ண சப்பரத்தில் சுவாமி-அம்பாள் எழுந்தருளினர். திக்கு விஜயபுராண வரலாற்று நிகழ்வினை குறிக்கும் வகையில் இன்று இரவு திக்குவிஜயம் நடக்கிறது. அரசியான மீனாட்சி இந்திர விமானத்தில் 4 மாசி வீதிகளில் எழுந்தருளி அஷ்ட திக்கு பாலகர்களை போரில் வெற்றி கொள்ளும் நிகழ்வு நடக்கிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நாளை (21-ந்தேதி) நடக்கிறது. இதற்காக கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபம் தயார் செய்யப்பட்டு வருகிறது. ரூ.30 லட்சம் செலவில் பல டன் மலர்களால் மணமேடை அலங்கரிக்கப்பட்டு வருகிறது. மேலும் பக்தர்களின் வசதிக்காக திருக்கல்யாண மண்டபம், பக்தர்கள் அமரும் பகுதியில் குளிர்சாதன வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.

    நாளை அதிகாலை திருக்கல்யாணத்தில் பங்கேற்பதற்காக திருப்பரங்குன்றத்தில் இருந்து சுப்பிரமணிய சுவாமியும், பவளக்கனிவாய் பெருமாளும் புறப்பாடாகி மீனாட்சி அம்மன் கோவிலில் எழுந்தருளுகிறார்கள். அதிகாலை 4 மணிக்கு கோவில் மண்டகப்படிகளில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் சுவாமி-அம்மன் உலா வருகின்றனர். பின்னர் முத்துராமய்யர் மண்டபத்தில் கன்னி ஊஞ்சலாடும் நிகழ்வு நடக்கிறது.

    அதனை தொடர்ந்து திருக்கல்யாண நிகழ்ச்சிகள் தொடங்குகிறது. முதலில் மணமேடையில் முருகப் பெருமான், பவளக்கனிவாய் பெருமாள் எழுந்தருளுகின்றனர். அதன்பின் மணக்கோலத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் வருகை தருவார்கள். தொடர்ந்து காலை 8.35 மணி முதல் 8.59 மணிக்குள் மீனாட்சி திருக்கல்யாணம் விமரிசையாக நடக்கிறது.

    கோவிலில் நேரடியாக திருக்கல்யாணத்தை காண 12 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பு அனுமதி சீட்டு பெற்றவர்கள் 4 கோபுர நுழைவுவாயில் வழியாக செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சித்திரை வீதிகள் மற்றும் கோவிலை ஒட்டியுள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள எல்.இ.டி. திரை மூலம் திருக்கல்யாண நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் திருக்கல்யாண விருந்து வழங்கப்படுகிறது. பக்தர்கள் ஆயிரக்கணக்கில் கூடுவார்கள் என்பதால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    நாளை இரவு யானை, ஆனந்தராயர் பூப்பல்லக்கில் சுவாமி-அம்பாள் வீதி உலா நடக்கிறது. மறுநாள் (21-ந் தேதி) காலை தேரோட்டம் நடைபெறுகிறது.

    ×