search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நாளை மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்: ரூ.30 லட்சம் மதிப்பிலான மலர்களால் மணமேடை அலங்கரிப்பு
    X

    நாளை மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்: ரூ.30 லட்சம் மதிப்பிலான மலர்களால் மணமேடை அலங்கரிப்பு

    • பக்தர்களின் வசதிக்காக திருக்கல்யாண மண்டபம், பக்தர்கள் அமரும் பகுதியில் குளிர்சாதன வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.
    • நாளை இரவு யானை, ஆனந்தராயர் பூப்பல்லக்கில் சுவாமி-அம்பாள் வீதி உலா நடக்கிறது.

    மதுரை:

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் நாள்தோறும் காலை, இரவு நேரங்களில் சுவாமி-அம்பாள் மாசி வீதிகளில் உலா வந்து அருள்பாலித்து வருகின்றனர்.

    விழாவின் 8-ம் நாளான நேற்று மதுரை நகரின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் வகையில் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடந்தது. கோவிலில் உள்ள அம்மன் சன்னதி முன்பு உள்ள ஆறுகால் பீடத்தில் நடந்த நிகழ்ச்சியில் ராயர் கீரிடம் சாற்றி, ரத்தின செங்கோலுடன் மீனாட்சி காட்சி அளித்தார்.

    கோவில் அறங்காவலர் குழு தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன் அம்மனிடம் இருந்து செங்கோல் பெற்று பிரகாரம் சுற்றி வந்தார். அதனை தொடர்ந்து பட்டத்தரசியாக அம்மனும், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் மாசி வீதிகளில் வெள்ளி சிம்மாசனத்தில் (கைபாரம்) எழுந்தருளினார். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    9-வது நாளான இன்று காலை மரவர்ண சப்பரத்தில் சுவாமி-அம்பாள் எழுந்தருளினர். திக்கு விஜயபுராண வரலாற்று நிகழ்வினை குறிக்கும் வகையில் இன்று இரவு திக்குவிஜயம் நடக்கிறது. அரசியான மீனாட்சி இந்திர விமானத்தில் 4 மாசி வீதிகளில் எழுந்தருளி அஷ்ட திக்கு பாலகர்களை போரில் வெற்றி கொள்ளும் நிகழ்வு நடக்கிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நாளை (21-ந்தேதி) நடக்கிறது. இதற்காக கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபம் தயார் செய்யப்பட்டு வருகிறது. ரூ.30 லட்சம் செலவில் பல டன் மலர்களால் மணமேடை அலங்கரிக்கப்பட்டு வருகிறது. மேலும் பக்தர்களின் வசதிக்காக திருக்கல்யாண மண்டபம், பக்தர்கள் அமரும் பகுதியில் குளிர்சாதன வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.

    நாளை அதிகாலை திருக்கல்யாணத்தில் பங்கேற்பதற்காக திருப்பரங்குன்றத்தில் இருந்து சுப்பிரமணிய சுவாமியும், பவளக்கனிவாய் பெருமாளும் புறப்பாடாகி மீனாட்சி அம்மன் கோவிலில் எழுந்தருளுகிறார்கள். அதிகாலை 4 மணிக்கு கோவில் மண்டகப்படிகளில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் சுவாமி-அம்மன் உலா வருகின்றனர். பின்னர் முத்துராமய்யர் மண்டபத்தில் கன்னி ஊஞ்சலாடும் நிகழ்வு நடக்கிறது.

    அதனை தொடர்ந்து திருக்கல்யாண நிகழ்ச்சிகள் தொடங்குகிறது. முதலில் மணமேடையில் முருகப் பெருமான், பவளக்கனிவாய் பெருமாள் எழுந்தருளுகின்றனர். அதன்பின் மணக்கோலத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் வருகை தருவார்கள். தொடர்ந்து காலை 8.35 மணி முதல் 8.59 மணிக்குள் மீனாட்சி திருக்கல்யாணம் விமரிசையாக நடக்கிறது.

    கோவிலில் நேரடியாக திருக்கல்யாணத்தை காண 12 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பு அனுமதி சீட்டு பெற்றவர்கள் 4 கோபுர நுழைவுவாயில் வழியாக செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சித்திரை வீதிகள் மற்றும் கோவிலை ஒட்டியுள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள எல்.இ.டி. திரை மூலம் திருக்கல்யாண நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் திருக்கல்யாண விருந்து வழங்கப்படுகிறது. பக்தர்கள் ஆயிரக்கணக்கில் கூடுவார்கள் என்பதால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    நாளை இரவு யானை, ஆனந்தராயர் பூப்பல்லக்கில் சுவாமி-அம்பாள் வீதி உலா நடக்கிறது. மறுநாள் (21-ந் தேதி) காலை தேரோட்டம் நடைபெறுகிறது.

    Next Story
    ×