என் மலர்
உள்ளூர் செய்திகள்
- அரசியல் காரணங்களுக்காக கரூர் துயர சம்பவத்தில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
- கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் மட்டுமே ஈடுபட்டனர்.
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த 27-ந்தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் மேற்கொண்ட பிரசாரத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த உயிரிழப்புகள் தொடர்பாக கரூர் டவுண் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், துணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், மத்திய மாநகர நிர்வாகியான பவுன்ராஜ் மற்றும் நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்திருந்த போலீசார் மாவட்ட செயலாளர் மதியழகனை நேற்று கைது செய்தனர். மேலும் ஒரு த.வெ.க. நிர்வாகி இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய மாநகர நிர்வாகியான பவுன்ராஜை இன்று போலீசார் கைது செய்துள்ளனர்.
இதை தொடர்ந்து த.வெ.க. முக்கிய பிரமுகர்களான பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், துணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோரையும் கைது செய்வதற்கு போலீசார் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கி உள்ளனர்.
புதுச்சேரியை சேர்ந்த புஸ்சி ஆனந்த் தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு தலைமறைவாகி விட்டார். அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. இதே போன்று நிர்மல் குமாரும் தலைமறைவாகி இருக்கிறார். இருவரையும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
இந்நிலையில் முன்ஜாமின் கோரி த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆர்.நிர்மல் குமார் ஆகியோர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர். அவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில்,
அரசியல் காரணங்களுக்காக கரூர் துயர சம்பவத்தில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. கூட்டத்தை கட்டுப்படுத்த தேவையான போலீசார் சம்பவ இடத்தில் இல்லை. கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் மட்டுமே ஈடுபட்டனர்.
கரூரில் விஜய் பிரசார கூட்டத்தில் சமூக விரோதிகளால் நெரிசல் ஏற்பட்டது. நோயாளிகள் யாரும் இன்றி ஆம்புலன்ஸ் விஜய் பிரசார கூட்டத்திற்குள் வந்ததாக புஸ்ஸி ஆனந்த் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
- 4 சதவீதம் இடஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு அரசாணை.
- ஏ, பி, சி, டி என்று நான்கு நிலைகளிலும் 119 பதவிகள் மாற்றத்திறனாளிகளுக்கு ஏற்றவை.
மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும் என ஏற்கனவே தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் அவர்கள் பணி புரிவதற்கான ஏற்ற பதவிகள் குறித்த தகவலையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஏ, பி, சி, டி என்று நான்கு நிலைகளிலும் 119 பதவிகள் மாற்றத்திறனாளிகளுக்கு ஏற்றவை என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
- அரசியல் கட்சி தலைவர்கள் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து அறுதல் கூறி வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், கரூரில் மக்களை சந்தித்து உரையாற்றியபோது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்தியாவையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களை அரசியல் கட்சித் தலைவர்கள் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். மேலும், சம்பவம் நடைபெற்றது எப்படி என ஆராய தமிழக அரசு சார்பில் ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் குழுவை கரூருக்கு அனுப்பி வைத்துள்ளது. மத்திய அரசும் அறிக்கை கேட்டுள்ளது.
இந்த நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் (அமைப்பு) மற்றும் எம்.பி.யுமான கே.சி. வேணுகோபால் இன்று கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூற இருக்கிறார். சம்பவம் நடைபெற்ற இடத்திற்கும் செல்ல இருக்கிறார். இதற்கான கோவை விமான நிலையம் வந்தடைந்துள்ளார். அங்கிருந்து கரூர் விரைகிறார்.
- மது மற்றும் போதைக் கலாச்சாரத்தை ஒழிக்காவிட்டால் இன்றைய தலைமுறை மாணவர்களையும், இளைஞர்களையும் காப்பாற்ற முடியாது.
- மதுவிலக்கு தான் மகாத்மாவின் கொள்கையும் ஆகும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் 157-ஆம் பிறந்தநாளையொட்டி நாளை மறுநாள் அக்டோபர் 2-ஆம் நாள் உள்ளாட்சி அமைப்புகளில் கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. கிராம சபைகள் மிகவும் வலிமையான அமைப்புகள் ஆகும். அவற்றில் எடுக்கப்படும் முடிவுகளை உச்சநீதிமன்றம் கூட மதிக்கும் என்பதால், அப்பாவி மக்கள் தங்களின் கோரிக்கைகளையும், எண்ணங்களையும் அரசுக்கு தெரிவிக்க கிராமசபைக் கூட்டங்களை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டின் இன்றைய தலையாய பிரச்சனை மது மற்றும் போதை ஒழிப்பு தான். ஒருபுறம் தெருத்தெருவாக மதுக்கடைகளைத் திறந்து இளைஞர்களையும், மாணவர்களையும் அரசே குடிகாரர்களாக்கி வரும் நிலையில், இன்னொருபுறம் ஆளுங்கட்சியின் ஆசிகளுடன் செயல்படும் போதை வணிகர்கள் கிராமங்கள் வரை கஞ்சா, அபின், கோகெயின், பிரவுன் சுகர், எல்.எஸ்.டி, மெத்தபெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருள்களை கொண்டு வந்துவிட்டனர்.
மது மற்றும் போதைக் கலாச்சாரத்தை ஒழிக்காவிட்டால் இன்றைய தலைமுறை மாணவர்களையும், இளைஞர்களையும் காப்பாற்ற முடியாது. மதுவிலக்கு தான் மகாத்மாவின் கொள்கையும் ஆகும். இதைக் கருத்தில் கொண்டு நாளை மறுநாள் அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் பாமகவினரும், பொதுமக்களும் பெருமளவில் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் உள்ள மதுக்கடைகளை மூடி மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்; கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
- ஹேமமாலினி தலைமையிலான எம்.பி.க்கள் குழு கோவை விமான நிலையம் வந்தனர்.
- இன்று மாலை வரை கரூரில் இருந்து அனைவரையும் சந்தித்து விசாரணை நடத்த உள்ளோம்.
த.வெ.க. தலைவர் விஜய் கரூரில் கடந்த 27-ந் தேதி தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு விசாரணைகளும் நடந்து வருகின்றன.
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆலோசனையின்படி இந்த சம்பவத்தை நேரில் விசாரிக்க எம்.பி.க்கள் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த சம்பவத்துக்கு வழிவகுத்த சூழ்நிலைகளை கரூர் சென்று ஆராயவும், இந்த துயரத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து விரைவில் தனது அறிக்கையை சமர்ப்பிக்கவும் தேசிய ஜனநாயக கூட்டணியின் குழுவை அவர் அமைத்துள்ளார்.
இந்த குழுவில் பிரபல நடிகையும், ஹேமமாலினி எம்.பி. ஒருங்கிணைப்பாளராகவும், எம்.பி.க்கள் அனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா, பிரஜ் லால், ஸ்ரீகாந்த் ஷிண்டே (சிவசேனா), அப்ரஜிதா சாரங்கி, ரேகா சர்மா, புட்டா மகேஷ் குமார்(தெலுங்கு தேசம்) ஆகியோர் உறுப்பினர்களாகவும் உள்ளனர்.
இந்த நிலையில் ஹேமமாலினி தலைமையிலான எம்.பி.க்கள் குழு கோவை விமான நிலையம் வந்தனர். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அனுராக் தாக்கூர் எம்.பி. கூறுகையில்,
இன்று மாலை வரை கரூரில் இருந்து அனைவரையும் சந்தித்து விசாரணை நடத்த உள்ளோம். உயிரிழந்த 41 நபர்களின் குடும்பங்களை தனித்தனியாக சந்தித்து பேச உள்ளோம் என்று கூறினார்.
- சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துக்களை வெளியிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- சமூக வலைத்தளங்களை தீவிரமாக கண்காணித்து அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு உள்ளனர்.
சென்னை:
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கரூரில் மேற்கொண்ட பிரசாரத்தின்போது நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
இதுபோன்ற வீடியோக்கள் மட்டுமின்றி முகநூல், இன்ஸ்டாகிராம் போன்றவற்றிலும் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். இதுபோன்று கருத்துகளை பதிவிடும் நபர்களில் பெரும்பாலானவர்கள் காவல்துறையினரை குற்றம் சாட்டியும், குறிப்பிட்ட கட்சி மீது களங்கம் விளைவிக்கும் வகையிலும் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.
இப்படி அவதூறான கருத்துக்களை வெளியிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு காவல்துறை தலைமை இயக்குனரகம் சார்பில் உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதைத் தொடர்ந்து சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துக்களை வெளியிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமூக வலைத்தளங்களில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் வதந்தியான பதிவுகளை வெளியிட்ட 25 சமூக வலைதள கணக்காளர்கள் மீது சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகியான சகாயம், மாங்காடு பகுதியைச் சேர்ந்த விஜய் கட்சி உறுப்பினர் சிவனேஸ்வரன், ஆவடியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகியான சரத்குமார் ஆகிய 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் கரூர் சம்பவம் தொடர்பாக அவதூறு கருத்துக்களை தெரிவித்து வீடியோ வெளியிட்டதாக சென்னையைச் சேர்ந்த பிரபல யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து சென்னை மாநகர சைபர் கிரைம் போலீசார் அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தி பெலிக்சை சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதுதவிர மேலும் 22 பேர் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி போலீசார் ஆலோசித்து வருகிறார்கள். இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கைது நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக சென்னை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் யாரும் சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டு உள்ளனர். இதை மீறி, செயல்படும் நபர்கள் மீது உரிய கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளும் சமூக வலைத்தளங்களை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
சென்னை மாநகர சைபர் கிரைம் போலீசில் சமூக வலைத்தளங்களை கண்காணிப்பதற்கென்று ஏற்கனவே தனிப்பிரிவு உள்ளது. அவர்கள் சமூக வலைத்தளங்களை தீவிரமாக கண்காணித்து அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு உள்ளனர்.
- உண்மையில் விஜயின் உண்மையான தொண்டர்களோ, ரசிகர்களோ அப்படி செய்ய வாய்ப்பில்லை.
- ஒருவேளை காவலாளி அஜித்குமார் போன்று என் கணவரையும் போலீசார் பயங்கரம் ஆக தாக்குவார்களோ என்ற பயம் உள்ளது.
கரூர்:
கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டது தொடர்பாக அவரது மனைவி ராணி கண்ணீருடன் கூறியதாவது:-
எங்கள் குடும்பம் முழுவதுமே விஜயின் தீவிர ரசிகர்கள். விஜய் நடிக்க ஆரம்பித்த காலகட்டத்தில் இருந்தே எனது கணவர் அவரின் ரசிகராக இருந்து வருகிறார். கடந்த 27-ம் தேதி பிரசாரம் நடைபெறுவதற்கு முதல் நாள் வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு வீட்டிற்கு வந்து குளித்துவிட்டு கிளம்பி சென்றவர்தான். இப்போது வரை அவர் வீடு திரும்பவில்லை. எங்கு இருக்கிறார்... எப்படி இருக்கிறார் என்பது தெரியவில்லை.
ஆனால், அவர் கைது செய்யப்பட்டதாக தொலைக்காட்சியில் செய்தி வந்தது. நானும் விஜயின் தீவிர ரசிகை. பிரசாரம் நடைபெற்ற இடத்திற்கு நானும் எனது 2 மகன்களும் சென்றிருந்தோம். எனது பிள்ளைகளை மிகவும் பத்திரமான இடத்தில் அமர வைத்துவிட்டு என் தோழிகளுடன் நடனமாடி செல்பி எடுத்து உற்சாகமாகத்தான் இருந்தோம். அங்கு எல்லோருமே அப்டித்தான் இருந்தார்கள்.
விஜய் பிரசார இடத்திற்கு வரும் வரை அங்கு எந்த பிரச்சினையும் இருந்ததாக தெரியவில்லை. அவர் பிரசார வாகனம் வந்து நின்று பேச ஆரம்பித்த பிறகுதான் சலசலப்பு ஆரம்பித்தது. செருப்பு வீச்சு நடந்த பிறகு ஒருத்தர் ஒருவரை தள்ளி விடுவது, அடிப்பது போன்ற நிகழ்வுகள் எல்லாம் தொடங்கியது.
உண்மையில் விஜயின் உண்மையான தொண்டர்களோ, ரசிகர்களோ அப்படி செய்ய வாய்ப்பில்லை. வேண்டும் என்றே ஒரு கும்பல் உள்ளே இறக்கிவிடப்பட்டு அடிதடி நடத்தியது போல்தான் இருந்தது. இறந்தவர்களில் பெரும்பாலானோரை கழுத்தில் மிதித்தும், சாக்கடை பள்ளத்தில் தள்ளியும், அவர்கள் மீது விழுந்து மிதித்தும்தான் கொன்றார்கள்.
சம்பவ இடத்தில் இருந்து நான் பார்த்தேன் என்பதை விட எனக்கும் அப்படியான ஒரு அனுபவம்தான் கிடைத்தது. என்னையும் அருகில் இருந்த சாக்கடை பள்ளத்தில் தள்ளி கழுத்தில் கால் வைத்து மிதித்தார்கள். மிகவும் சிரமப்பட்டுதான் தப்பித்து வந்தேன். நானும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று நேற்றுதான் வீடு திரும்பினேன்.
என் கணவர் கைது செய்யப்பட்டதாக செய்தி வந்ததே தவிர அது தொடர்பான வீடியோ எதுவும் வரவில்லை. பிரசாரம் முடிவதற்கு முன்பு வரை அவர் எங்களிடம் பேசிக்கொண்டுதான் இருந்தார். ஆனால், இப்போது அவரை பற்றி எந்த தகவலும் எனக்கு தெரியவில்லை. என்னிடம் இதுவரை காவல்துறையும் எந்த தகவலும் சொல்லவில்லை.
ஒருவேளை காவலாளி அஜித்குமார் போன்று என் கணவரையும் போலீசார் பயங்கரம் ஆக தாக்குவார்களோ என்ற பயம் உள்ளது. நான் அரசுக்கும் காவல்துறைக்கும் ஒரே ஒரு வேண்டுகோள்தான் வைக்கிறேன். எனக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள். தயவு செய்து என் கணவரை எங்கு வைத்து இருக்கிறீர்கள்.. அவர் எப்படி இருக்கிறார் என்பதை மட்டும் சொல்லுங்கள். அவரை என் கண்ணில் காட்டுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் நகராட்சி அதிகாரிகள் அனைத்து பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
- சாலையோர வியாபாரிகள் 25-ந்தேதிக்குள் கடைகளை அகற்ற அவகாசம் தரப்பட்டு இருந்தது.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூர் நகர பகுதியில் அரசின் விதிமுறைகளுக்கு புறம்பாகவும், உரிய அனுமதி பெறாமலும் பல்வேறு கட்டிடங்கள் கட்டப்படுகின்றன.
இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் நகராட்சி அதிகாரிகள் அனைத்து பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் மாடல் ஹவுஸ் பகுதியில் அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து அடுக்குமாடி கட்டிட பணி நடைபெறுவது தெரியவந்தது.
தொடர்ந்து நகராட்சி கமிஷனர் இளம்பரிதி உத்தரவின்பேரில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பந்தப்பட்ட கட்டிடத்திற்கு சீல் வைத்தனர்.
இதேபோல நகராட்சிக்கு உட்பட்ட மார்க்கெட் பகுதியில் வாடகை நிலுவைத்தொகை செலுத்தாத வியாபாரிகளுக்கு நகராட்சி சார்பில் பலமுறை நோட்டீஸ் வழங்கப்பட்டன.ஆனாலும் சம்பந்தப்பட்ட வியாபாரிகள் நிலுவை வாடகைத்தொகை செலுத்த முன்வரவில்லை.
தொடர்ந்து குன்னூர் நகராட்சி கமிஷனர் இளம்பரிதி உத்தரவின்பேரில் அதிகாரிகள் மார்க்கெட் பகுதிக்கு சென்று அங்குள்ள 15 கடைகளுக்கு நேற்று முன்தினம் இரவு சீல் வைத்தனர்.
மேலும் சாலையோர வியாபாரிகள் 25-ந்தேதிக்குள் கடைகளை அகற்ற அவகாசம் தரப்பட்டு இருந்தது. பண்டிகை காலம் என்பதால் சாலையோர வியாபாரிகளுக்கு மேலும் ஒரு வாரம் அவகாசம் கொடுத்து உள்ளதாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
- சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
- நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
ஒகேனக்கல்:
கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 3-வது நாளாக 6,500 கனஅடியாக வந்தது.
இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இதனால் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
மேலும் அவர்கள் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர். பின்னர் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.
சுற்றுலா பயணிகள் மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டி இருக்கிறது.
- வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
தங்கம் விலை இம்மாத தொடக்கத்தில் இருந்தே உயர்ந்து வருகிறது. இம்மாத ஆரம்பத்தில் ஒரு சவரன் ரூ.77 ஆயிரம் என்ற நிலையில் விற்பனையானது. அதன்பிறகு விலை 'கிடுகிடு'வென உயரத் தொடங்கியது. கடந்த 6-ந் தேதி ஒரு கிராம் ரூ.10 ஆயிரம் என்றும், ஒரு சவரன் ரூ.80 ஆயிரம் என்றும் அதிகரித்து, அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது.
அதுவும் நின்றபாடில்லை. மேலும் விலை அதிகரித்துக்கொண்டேதான் இருந்தது. அதன்படி கடந்த 9-ந் தேதி ரூ.81 ஆயிரத்தையும், 16-ந் தேதி ரூ.82 ஆயிரத்தையும், 22-ந் தேதி ரூ.83 ஆயிரத்தையும், அதற்கு மறுநாளே ரூ.84 ஆயிரம் மற்றும் ரூ.85 ஆயிரத்தையும் கடந்து, ஒவ்வொரு நாளும் புதிய உச்சம் என்ற வகையிலேயே பயணித்தது. அதன்பின்னர், அவ்வப்போது லேசான சரிவு இருந்தாலும், ரூ.84 ஆயிரம் மற்றும் ரூ.85 ஆயிரம் என்ற இடைப்பட்ட அளவிலேயே ஆட்டம் காட்டியது.
இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் விறுவிறுவென விலை ஏற்றம் கண்டது. காலையில் கிராமுக்கு ரூ.70-ம், சவரனுக்கு ரூ.560-ம் அதிகரித்தது. பின்னர் மாலையில் கிராமுக்கு ரூ.60-ம், சவரனுக்கு ரூ.480-ம் உயர்ந்தது. அப்படியாக நேற்று மட்டும் கிராமுக்கு ரூ.130-ம், சவரனுக்கு ரூ.1,040-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 770-க்கும், ஒரு சவரன் ரூ.86 ஆயிரத்து 160-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதன்மூலம் தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டி இருக்கிறது. பொருளாதார மந்த நிலையில், தங்கத்தின் தேவை அதிகரிப்பு, டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு போன்றவற்றால் விலை உயருகிறது. இந்த மாதத்தில் மட்டும், அதாவது கடந்த 1-ந் தேதியில் இருந்து நேற்று வரை கிராமுக்கு ரூ.1,065-ம், சவரனுக்கு ரூ.8,520-ம் உயர்ந்துள்ளது.
இதனை தொடர்ந்து, மாத இறுதி நாளான இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,860-க்கும் சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.86,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இன்று கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 161 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 61 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
29-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.86,160
28-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.85,120
27-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.85,120
26-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.84,400
25-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.84,080
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
29-09-2025- ஒரு கிராம் ரூ.160
28-09-2025- ஒரு கிராம் ரூ.159
27-09-2025- ஒரு கிராம் ரூ.159
26-09-2025- ஒரு கிராம் ரூ.153
25-09-2025- ஒரு கிராம் ரூ.150
- செப்டம்பர் வரையில் பெய்யக்கூடிய மழை அளவைத்தான் தென்மேற்கு பருவமழை காலத்தில் பதிவு செய்யப்படுகிறது.
- கடந்த ஆண்டும் நெல்லையில் 249 சதவீதம் இயல்பைவிட அதிக மழை பதிவாகியிருந்தது.
சென்னை:
தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் 1-ந்தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் 30-ந்தேதி வரை கணக்கில் கொள்ளப்படுகிறது. இந்த பருவமழை முற்றிலும் நீங்க, அக்டோபர் மாதம் 2-வது வாரம் வரை காலம் எடுத்துக் கொண்டாலும், செப்டம்பர் வரையில் பெய்யக்கூடிய மழை அளவைத்தான் தென்மேற்கு பருவமழை காலத்தில் பதிவு செய்யப்படுகிறது.
அந்த வகையில் தென்மேற்கு பருவமழை காலங்களில் தமிழ்நாடு, புதுச்சேரி பெறக்கூடிய மொத்த மழை என்பது 32.8 செ.மீ. ஆகும். இது இயல்பான மழை அளவு. அதன்படி, கடந்த ஜூன் 1-ந்தேதியில் இருந்து நேற்று வரையிலான (செப்டம்பர் 29-ந்தேதி) நிலவரப்படி, 32.5 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. அதாவது இயல்பைவிட ஒரு சதவீதம் அதிகமாக மழை கிடைத்திருக்கிறது.
இதில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டத்தில் இயல்பைவிட 250 சதவீதம் அதிகம் மழை பெய்திருந்தது. இந்த காலக்கட்டத்தில் அங்கு 8.9 செ.மீ. மழை பதிவாகும். ஆனால் 31.3 செ.மீ. மழை பெய்திருந்தது. கடந்த ஆண்டும் நெல்லையில் 249 சதவீதம் இயல்பைவிட அதிக மழை பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதற்கடுத்தபடியாக, தென்காசி மாவட்டத்தில் 55 சதவீதமும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 79 சதவீதமும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 46 சதவீதமும், கோவை மாவட்டத்தில் 39 சதவீதமும் மழை பதிவாகி உள்ளது. இதுதவிர, அரியலூர் (+6 சதவீதம்), சென்னை (+30 சதவீதம்), கடலூர் (+14 சதவீதம்), நீலகிரி (+13 சதவீதம்), சிவகங்கை (+4 சதவீதம்), தஞ்சாவூர் (+7 சதவீதம்), தேனி (+10 சதவீதம்),
திருப்பத்தூர் (+21 சதவீதம்), திருவள்ளூர் (+33 சதவீதம்), திருவண்ணாமலை (+9 சதவீதம்), திருவாரூர் (+9 சதவீதம்), வேலூர் (+36 சதவீதம்), விழுப்புரம் (+18 சதவீதம்) மாவட்டங்களில் இயல்பைவிட அதிகமாகவும் மழை பெய்துள்ளது.
மேலும், செங்கல்பட்டு (-7 சதவீதம்), தர்மபுரி (-21 சதவீதம்), திண்டுக்கல் (-41 சதவீதம்), ஈரோடு (-26 சதவீதம்), கள்ளக்குறிச்சி (-31 சதவீதம்), காஞ்சீபுரம் (-3 சதவீதம்), கன்னியாகுமரி (-1 சதவீதம்), கரூர் (-35 சதவீதம்), கிருஷ்ணகிரி (-17 சதவீதம்), மதுரை (-24 சதவீதம்), நாகப்பட்டினம் (-22 சதவீதம்), நாமக்கல் (-31 சதவீதம்), பெரம்பலூர் (-2 சதவீதம்), புதுக்கோட்டை (-6 சதவீதம்), ராமநாதபுரம் (-48 சதவீதம்), சேலம் (-15 சதவீதம்),
திருப்பூர் (-59 சதவீதம்), தூத்துக்குடி (-62 சதவீதம்), திருச்சி (-26 சதவீதம்), விருதுநகர் (-46 சதவீதம்) ஆகிய 20 மாவட்டங்களில் குறைவான மழை பதிவாகியிருக்கிறது. தமிழ்நாட்டைத் தவிர, புதுச்சேரியில் 51 சதவீதமும், காரைக்காலில் 32 சதவீதமும் அதிகமாக இந்த பருவமழையில் மழை பெய்துள்ளது.
பொதுவாக தென்மேற்கு பருவமழையை காட்டிலும், வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் தமிழகம் அதிக மழையை பெறும். அடுத்த மாதம் (அக்டோபர்) 3-வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது.
- விஜய் பிரசாரத்தின் போது காவல்துறை எச்சரித்தும் விதிகளை பின்பற்றவில்லை என த.வெ.க. நிர்வாகிகள் மீது குற்றம்சாட்டப்பட்டது.
- த.வெ.க. கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் நேற்று கைது செய்யப்பட்டார்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் பலியானார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், மாநில இணை செயலாளர் நிர்மல்குமார், கரூர் மேற்கு மாவட்ட த.வெ.க. செயலாளர் மதியழகன் மற்றும் சிலர் மீது முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்யப்பட்டு உள்ளது.
அவர்கள் மீது 5 பிரிவுகளில் பதிவு செய்யப்பட்ட இந்த முதல் தகவல் அறிக்கை கரூர் ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு எண்-1 கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
அதில், விஜய் பிரசாரத்தின் போது காவல்துறை எச்சரித்தும் விதிகளை பின்பற்றவில்லை என த.வெ.க. நிர்வாகிகள் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இந்த நிலையில், த.வெ.க. கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் நேற்று கைதான நிலையில், மேலும் ஒரு நிர்வாகி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
கரூர் சம்பவம் தொடர்பாக த.வெ.க. கரூர் தெற்கு நகரப் பொருளாளர் பவுன்ராஜை, நகர காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தநிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.






