என் மலர்
வணிகம் & தங்கம் விலை

GOLD PRICE TODAY : புதிய உச்சத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலை... இன்றைய நிலவரம்
- தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டி இருக்கிறது.
- வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
தங்கம் விலை இம்மாத தொடக்கத்தில் இருந்தே உயர்ந்து வருகிறது. இம்மாத ஆரம்பத்தில் ஒரு சவரன் ரூ.77 ஆயிரம் என்ற நிலையில் விற்பனையானது. அதன்பிறகு விலை 'கிடுகிடு'வென உயரத் தொடங்கியது. கடந்த 6-ந் தேதி ஒரு கிராம் ரூ.10 ஆயிரம் என்றும், ஒரு சவரன் ரூ.80 ஆயிரம் என்றும் அதிகரித்து, அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது.
அதுவும் நின்றபாடில்லை. மேலும் விலை அதிகரித்துக்கொண்டேதான் இருந்தது. அதன்படி கடந்த 9-ந் தேதி ரூ.81 ஆயிரத்தையும், 16-ந் தேதி ரூ.82 ஆயிரத்தையும், 22-ந் தேதி ரூ.83 ஆயிரத்தையும், அதற்கு மறுநாளே ரூ.84 ஆயிரம் மற்றும் ரூ.85 ஆயிரத்தையும் கடந்து, ஒவ்வொரு நாளும் புதிய உச்சம் என்ற வகையிலேயே பயணித்தது. அதன்பின்னர், அவ்வப்போது லேசான சரிவு இருந்தாலும், ரூ.84 ஆயிரம் மற்றும் ரூ.85 ஆயிரம் என்ற இடைப்பட்ட அளவிலேயே ஆட்டம் காட்டியது.
இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் விறுவிறுவென விலை ஏற்றம் கண்டது. காலையில் கிராமுக்கு ரூ.70-ம், சவரனுக்கு ரூ.560-ம் அதிகரித்தது. பின்னர் மாலையில் கிராமுக்கு ரூ.60-ம், சவரனுக்கு ரூ.480-ம் உயர்ந்தது. அப்படியாக நேற்று மட்டும் கிராமுக்கு ரூ.130-ம், சவரனுக்கு ரூ.1,040-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 770-க்கும், ஒரு சவரன் ரூ.86 ஆயிரத்து 160-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதன்மூலம் தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டி இருக்கிறது. பொருளாதார மந்த நிலையில், தங்கத்தின் தேவை அதிகரிப்பு, டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு போன்றவற்றால் விலை உயருகிறது. இந்த மாதத்தில் மட்டும், அதாவது கடந்த 1-ந் தேதியில் இருந்து நேற்று வரை கிராமுக்கு ரூ.1,065-ம், சவரனுக்கு ரூ.8,520-ம் உயர்ந்துள்ளது.
இதனை தொடர்ந்து, மாத இறுதி நாளான இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,860-க்கும் சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.86,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இன்று கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 161 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 61 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
29-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.86,160
28-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.85,120
27-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.85,120
26-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.84,400
25-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.84,080
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
29-09-2025- ஒரு கிராம் ரூ.160
28-09-2025- ஒரு கிராம் ரூ.159
27-09-2025- ஒரு கிராம் ரூ.159
26-09-2025- ஒரு கிராம் ரூ.153
25-09-2025- ஒரு கிராம் ரூ.150






