என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தயாநிதி மாறன் மீது கோவை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
- வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
சென்னை:
மத்திய சென்னை தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கடந்த 2020-ம் ஆண்டு முதன்மை செயலாளர் தங்களை தாழ்த்தப்பட்ட மக்களை போன்று நடத்தியதாக தயாநிதி மாறன் பேசியிருந்தார். இதையடுத்து தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக தயாநிதி மாறன் மீது கோவை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. விரைவில் இவ்வழக்கு தொடர்பாக தயாநிதி மாறன் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.
- தமிழக முதலமைச்சர், மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு என்று கூறியது ஏற்புடையதல்ல.
- நிதிஆயோக் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணிப்பதாக அறிவித்திருப்பது வாக்களித்த மக்களை புறக்கணிப்பது போன்றது.
சென்னை:
பாராளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட 2024-25-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கப்பட்டதை கண்டிக்கும் வகையில் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறேன். அந்த கூட்டத்தை புறக்கணிக்கப்போவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், தமிழக முதலமைச்சர், மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு என்று கூறியது ஏற்புடையதல்ல என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
மேலும் தமிழக முதலமைச்சர், புது டெல்லியில் நடைபெற இருக்கும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணிப்பதாக அறிவித்திருப்பது வாக்களித்த மக்களை புறக்கணிப்பது போன்றது.
முதலமைச்சர் என்ற முறையில் ஏற்கனவே அறிவித்தபடி நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்று, தமிழ்நாட்டிற்கான நிதி தேவையை கேட்பது அவரது கடமை என்று தெரிவித்துள்ளார்.
- குழிகளில் மூங்கில் கம்புகளை கரையான் அரிக்காமல் இருக்க ஆற்று மணல் போட்டுள்ளதாகவும் ஆச்சரியப்படத்தக்க தகவல் தெரியவருகிறது.
- மற்றொரு குழியில் 2 பானை வடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.
திருப்புவனம்:
மதுரை அடுத்த கீழடியில் 10-ம் கட்ட அகழாய்வு பணி நடந்து வருகிறது. முதல் கட்டமாக 2 குழிகள் தோண்டப்பட்டு பணி நடைபெறுகிறது. ஏராளமான பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. தொடர்ந்து தோண்டியபோது, ஒரு குழியில் 2 பெரிய பானைகளின் முகப்புகள் தென்பட்டன. அதன் அருகே பழங்கால தமிழர்கள் மூங்கில் கம்பு ஊன்றி கொட்டகை போட்டு வாழ்ந்ததாகவும், அந்த காலத்திலேயே குழிகளில் மூங்கில் கம்புகளை கரையான் அரிக்காமல் இருக்க ஆற்று மணல் போட்டுள்ளதாகவும் ஆச்சரியப்படத்தக்க தகவல் தெரியவருகிறது.
தற்சமயம் மணல் அள்ளி அந்த குழிகளையும் கண்டுபிடித்து உள்ளனர். தொடர்ந்து அகழாய்வு பணிகள் நடந்து வரும் நிலையில் மற்றொரு குழியிலும் 2 பானை வடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. அதில் ஒரு பானை வடிவம் அரை வட்ட வடிவில் நன்றாகவும், மற்றொரு பானை சிதிலமடைந்த நிலையிலும் காணப்படுகிறது. அதே குழியில் பண்டைய தமிழர்களின் மூங்கில் மரம் ஊன்றி கொட்டகை போட்டு வசித்ததற்கான குழிகள் நிறைய உள்ளன. தற்போது கீழடியில் 3-வது குழியும் தோண்டப்பட்டு பணி நடைபெற்று வருவதாகவும், இன்னும் ஏராளமான பொருட்கள் கிடைக்கக்கூடும் எனவும் கீழடி அகழாய்வு தள இயக்குனர் ரமேஷ், இணை இயக்குனர் அஜய் தெரிவித்தனர்.
- நாளை முதல் வழித்தடம் மாற்றி மேடவாக்கம் கூட்ரோடு, ஈச்சங்காடு, காமாட்சி மருத்துவமனை, கைவேலி வழியாக இயக்கப்பட உள்ளது.
- N45B வழித்தடங்கள் மூவரசன்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து நங்கநல்லூர், ஆலந்தூர் மெட்ரோ வழியாக இயக்கப்பட உள்ளது.
சென்னை:
சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மேடவாக்கம் நெடுஞ்சாலையில் வாணுவம்பேட்டைக்கும் மேடவாக்கம் கூட்ரோடுக்கும் இடையே CMRL மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது கீழ்கட்டளை, மடிப்பாக்கம், புழுதிவாக்கம் ஆகிய பகுதிகளில் CMRL மெட்ரோ ரெயில் நிலையங்கள் (Metro Stations) அமைத்திட பணிகள் நடைபெற்று வருவதால். அப்பகுதியில் செல்லும் கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல CMRL நிறுவனத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது கீழ்கட்டளையிலிருந்து மடிப்பாக்கம், கைவேலி வழியாக இயக்கப்பட்ட தடம் எண்.18D, 18P, M1, 45ACT நாளை முதல் மடிப்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து கைவேலி வழியாக இயக்கப்பட உள்ளது.
தடம் எண்.14M மேடவாக்கம் கூட்ரோட்டிலிருந்து கீழ்கட்டளை வழியாக என்.ஜி.ஓ. காலனிக்கு இயக்கப்பட்ட பேருந்து நாளை முதல் மேடவாக்கம் கூட்ரோட்டிலிருந்து ஈச்சங்காடு, காமாட்சி மருத்துவமனை, கைவேலி, வழியாக கிண்டி ரெயில் நிலையத்திற்கு இயக்கப்பட உள்ளது. மேலும், தடம் எண்.S14M மேடவாக்கம் கூட்ரோட்டிலிருந்து கீழ்கட்டளை, மடிப்பாக்கம் கூட்ரோடு, வாணுவம்பேட்டை வழியாக NGO காலனி பேருந்து நிலையத்திற்கு 14M வழித்தடத்திலேயே 25 சாதாரண கட்டண (விடியல் பயணம்) சிற்றுந்துகள் இயக்கப்பட உள்ளது.
தடம் எண்.M1 CT கீழ்கட்டளை பேருந்து நிலையத்திலிருந்து மடிப்பாக்கம், கைவேலி வழியாக வேளச்சேரி பேருந்து நிலையத்திற்கு 5 சாதாரண கட்டண (விடியல் பயணம்) சிற்றுந்துகள் இயக்கப்பட உள்ளது.
தற்போது தடம் எண்.76, 76B, V51, V51X ஆகிய வழித்தட பேருந்துகள் மேடவாக்கம் கூட்ரோடு, கீழ்கட்டளை, மடிப்பாக்கம், கைவேலி வழியாக இயக்கப்பட்ட பேருந்துகள் நாளை முதல் வழித்தடம் மாற்றி மேடவாக்கம் கூட்ரோடு, ஈச்சங்காடு, காமாட்சி மருத்துவமனை, கைவேலி வழியாக இயக்கப்பட உள்ளது.
மேலும் கீழ்கட்டளையிலிருந்து மூவரசன்பேட்டை, நங்கநல்லூர், ஆலந்தூர் மெட்ரோ வழியாக இயக்கப்பட்ட M18C, 18N மற்றும் N45B வழித்தடங்கள் மூவரசன்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து நங்கநல்லூர், ஆலந்தூர் மெட்ரோ
வழியாக இயக்கப்பட உள்ளது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
- பயோமெட்ரிக் முறையை பயன்படுத்தி, முக அடையாளம் வைத்தும், டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது.
- சேவை கட்டணமாக ரூ.70 தபால்காரரிடம் செலுத்த வேண்டும்.
சென்னை:
ஓய்வூதியர்கள் தொடர்ந்து ஓய்வூதியம் பெற தங்கள் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டி உள்ளது. இதற்காக 'இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி' திட்டத்தின் கீழ் ஓய்வூதியர்களின் வீட்டு வாசலிலேயே, பயோமெட்ரிக் முறையை பயன்படுத்தி, முக அடையாளம் வைத்தும், டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது.
ஓய்வூதியர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார், செல்போன் எண், பி.பி.ஓ.எண் மற்றும் ஓய்வூதிய வங்கி கணக்கு விவரங்களை தெரிவித்து, கைவிரல் ரேகை பதிவு செய்தால், ஒரு சில நிமிடங்களில் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும். இதற்கு சேவை கட்டணமாக ரூ.70 தபால்காரரிடம் செலுத்த வேண்டும்.
அதேபோல் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் சுயநிதி பள்ளிகளில் மாநில பாடதிட்டத்தில் தமிழ் வழியில் 3 முதல் பிளஸ்-2 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, மத்திய, மாநில அரசுகள் வழங்கும் கல்வி உதவித் தொகைகள், ஊக்கத்தொகைகள் பெறுவதற்கு ஆதார் எண் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு அவசியமாகும்.
5-ம் வகுப்பு வரை படிப்பவர்களுக்கு தபால் துறை கணக்கும், 6 முதல் பிளஸ்-2 வரை படிப்பவர்களுக்கு தபால் துறை வங்கி கணக்கும் தொடங்க தமிழக பள்ளிக்கல்வி துறையுடன் தபால் துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. எனவே பள்ளிகளிலோ அல்லது தபால் நிலையங்களில் கணக்குகளை தொடங்கலாம் என்று முதன்மை தபால் துறை தலைவர் சுவாதி மதுரிமா தெரிவித்துள்ளார்.
- பெரம்பூர், புழல் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
- கொலைக்கான சதித் திட்டம் தீட்டிய இடங்களுக்கும் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
சென்னை:
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ந் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த ஆண்டு பட்டினப்பாக்கத்தில் வைத்து கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலை சம்பவத்துக்கு பழிக்குப்பழி வாங்கும் வகையிலேயே ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்த போலீசார் அது தொடர்பாக ஆற்காடு சுரேசின் தம்பி பொன்னை பாலு, குன்றத்தூர் திருவேங்கடம் உள்பட 11 பேரை கைது செய்தனர்.
இவர்களில் திருவேங்கடம் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டு விட்ட நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணை சூடு பிடித்து ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. ரவுடிகள் பலர் பெரிய அளவில் சதி திட்டம் தீட்டி ஆம்ஸ்ட்ராங்கை தீர்த்துக் கட்டியிருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்த கொலை வழக்கில் அரசியல் பிரமுகர்கள் பலருக்கு தொடர்பு இருப்பது போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அ.தி.மு.க. பிரமுகர்களான மலர்க்கொடி, ஹரிஹரன், தி.மு.க. பிரமுகரான அருள், த.மா.கா.வை சேர்ந்த ஹரிஹரன், பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த அஞ்சலை ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர் அருளை தனியாக அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரண்டாவது முறையாக போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் அருளை இன்று அதிகாலை பெரம்பூர், புழல் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
கொலைக்கான சதித் திட்டம் தீட்டிய இடங்களுக்கும் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
- சென்னை மாநகராட்சியில் ஒரு சதுர அடிக்கு ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.
- கட்டணங்கள் அனைத்தும் சுய சான்று மூலம் கட்டப்படும் கட்டிடங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
சென்னை:
தமிழகத்தில் 2500 சதுர அடி வரையிலான மனையில், 3,500 சதுர அடி வரையில் தரைத்தளம் அல்லது தரைத்தளத்துடன் கூடிய முதல் தளம் என கட்டப்படும் குடியிருப்பு கட்டிடங்களுக்கு சுயசான்று அடிப்படையில் இணைய வழி கட்டிட அனுமதி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் கீழ் பொதுமக்கள் சதுர அடிக்கு எவ்வளவு தொகை செலுத்த வேண்டும் என்பது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, சதுர அடிக்கு ரூ.15 முதல் ரூ.100 வரையில் உள்ளாட்சி அமைப்புகளின் தரநிலைக்கு ஏற்ப இந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்குள் வளர்ச்சி கட்டணம், கட்டிட லைசென்சு கட்டணம், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல நிதி, சாலை சேதம் சீரமைப்பு கட்டணம் என அனைத்து அடங்கிவிடும்.
சென்னை மாநகராட்சியில் ஒரு சதுர அடிக்கு ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். சிறப்பு நிலை ஏ மாநகராட்சிகளான மதுரை, கோவை, திருப்பூரில் சதுர அடிக்கு ரூ.88 ம், சிறப்பு நிலை பி மாநகராட்சிகளான தாம்பரம், சேலம், திருச்சியில் சதுர அடிக்கு ரூ.84-ம், தேர்வு நிலை மாநகராட்சிகளான ஆவடி, நெல்லை, வேலூர், தூத்துக்குடி, ஈரோட்டில் சதுர அடிக்கு ரூ.79ம், தஞ்சை, நாகர்கோவில், ஓசூர், கடலூர், கரூர், கும்பகோணம், திண்டுக்கல், சிவகாசி, காஞ்சிபுரத்திற்கு சதுர அடிக்கு ரூ.74-ம் கட்டணமாக செலுத்த வேண்டும்.
நகராட்சிகளை பொறுத்தவரை, 45 சிறப்பு நிலை மற்றும் தேர்வு நிலை நகராட்சிகளில் சதுர அடிக்கு ரூ.74 ம், நிலை-1, நிலை-2 என 93 நகராட்சிகளில் ஒரு சதுர அடிக்கு ரூ.70-ம் கட்டணமாக செலுத்த வேண்டும். பேரூராட்சிகளை பொறுத்தவரை 62 சிறப்பு நிலை பேரூராட்சிகளில் சதுர அடிக்கு ரூ.70-ம், 179 தேர்வு நிலை பேரூராட்சிகளில் சதுர அடிக்கு ரூ.65-ம், 190 நிலை -1 பேரூராட்சிகளில் சதுர அடிக்கு ரூ.55-ம், நிலை-2 பேரூராட்சிகளில் சதுர அடிக்கு ரூ.45-ம் கட்டணமாக செலுத்த வேண்டும்.
தமிழகத்தில் உள்ள 12,525 ஊராட்சிகளை பொறுத்தவரை, சி.எம்.டி.ஏ. எல்லைக்குள் உள்ள நகர் கிராம ஊராட்சிகளில் ஒரு சதுர அடிக்கு ரூ.27-ம், இதர பகுதிகளில் நகர் கிராம ஊராட்சிகளில் சதுர அடிக்கு ரூ.25-ம், சி.எம்.டி.ஏ எல்லைக்குள் உள்ள இதர ஊராட்சிகளுக்கு சதுர அடிக்கு ரூ.22-ம், இதர 11 ஆயிரத்து 791 கிராம ஊராட்சிகளில் சதுர அடிக்கு ரூ.15-ம் கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த கட்டணங்கள் அனைத்தும் சுய சான்று மூலம் கட்டப்படும் கட்டிடங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
இவ்வாறு அரசு அறிவித்துள்ளது.
- விவேகானந்தர் மண்டபம் செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
- சுற்றுலா படகு சேவை இன்று தற்காலிகமாக ரத்து.
தமிழகத்தின் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக கன்னியாகுமரி கடல்பகுதி விளங்குகிறது. இங்கு தினமும் பல நாடுகள், இந்தியாவின் மற்ற மாநிலம் மற்றும் மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரி வந்து செல்கின்றனர்.
அந்த வகையில், கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகள் கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அங்கு தியானம் செய்யும் இடம் மற்றும் திருவள்ளுவர் சிலை உள்ளிட்டவைகளையும் கண்டுகளிக்கின்றனர்.
இந்த நிலையில், கன்னியாகுமரி கடலில் ஏற்பட்டுள்ள நீர்மட்டம் தாழ்வின் காரணமாக விவேகானந்தர் மண்டபத்திற்கான சுற்றுலா படகு சேவை இன்று தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
கடலின் நீர்மட்ட தன்மையைப் பொறுத்து காலை 11.30 மணியளவில் படகு போக்குவரத்து சேவை தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இதுகுறித்த அரிவிப்பு பின்னர் வெளியாகும் என்று தெரிகிறது.
- அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
- பக்தர் ஒருவர் ரேஷன் சேலையை வழங்கி உள்ளார்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு பவுர்ணமியின்போது கோவிலில் உண்ணாமலை அம்மன் சன்னதியின் முன்பு உள்ள அம்மன் சிலைக்கு ரேஷன் கடையில் வழங்கப்படும் விலையில்லா சேலை அணிவிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது.
இதுகுறித்து அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் ஜோதியிடம் கேட்டபோது, திருவூடல் நிகழ்ச்சியில் மண்டக படியின்போது பக்தர்கள் சிலர் அம்மனுக்கு சேலையை சாத்தினர். இதில் பக்தர் ஒருவர் ரேஷன் சேலையை வழங்கி உள்ளார். பவுர்ணமியின்போது அம்மன் சிலைக்கு அந்த ரேஷன் கடை சேலை அணிவிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி அறிந்ததும் உடனடியாக சேலை மாற்றப்பட்டது' என்றார்.
- மதுரை பாந்தர்ஸ், லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதின.
- ஷாருக்கான் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நெல்லை:
8-வது டி.என்.பி.எல். தொடரின் 3-வது சுற்று லீக் ஆட்டங்கள் தற்போது நெல்லையில் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ், லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மதுரை பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, கோவை கிங்ஸ் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் அவுட்டாகினர். சாய் சுதர்சன் ஓரளவு விளையாடி 34 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
19-வது ஓவரில் கோவை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 4 ரன்களை எடுத்தது. கேப்டன் ஷாருக் கான் 5 சிக்சர், 2 பவுண்டரி விளாசி 26 பந்தில் 51 ரன்கள் குவித்து அவுட்டானார்.
இறுதியில், கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 163 ரன்களை எடுத்துள்ளது.
மதுரை அணி சார்பில் அஜய் கிருஷ்ணா 4 விக்கெட்டும், மிதுன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 164 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மதுரை அணி கோவையின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் மதுரை அணி 120 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
கோவை அணி சார்பில் கவுதம் தாமரை கண்ணன் 4 விக்கெட்டும், சித்தார்த் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசி 1 விக்கெட்டும் வீழ்த்திய ஷாருக்கான் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இப்போட்டியின் மூலம் குவாலிபியர் போட்டிகளுக்கு முதல் அணியாக கோவை தகுதி பெற்றது.
- சிறு கடைகள், வியாபாரம், சிறு தொழில்கள் போன்றவைகளுக்கு ஜிஎஸ்டி என்பது வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாகும் நிலையுள்ளது.
- வேலை வாய்ப்பை உருவாக்க கூடிய அளவு எந்த ஒரு மிகப்பெரிய தொழிற்சாலைகளும், தொழில் நிறுவனங்களும் தமிழகத்திற்கு வராததும் பெரும் ஏமாற்றம்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசு அறிவித்துள்ள 2024-2025-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தமிழகத்திற்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்திருக்கிறது. பெயரளவில் கூட தமிழ்நாடு என்ற ஒரு சொல் கூட பட்ஜெட் வாசிப்பில் இல்லை.
பீகாருக்கும், ஆந்திர பிரதேசத்திற்கு தரும் முக்கியத்துவம் எந்த ஒரு வகையிலும் ஒரு சதவீதம் கூட தமிழகத்திற்கு தரவில்லை என்பது கண்டனத்திற்குறியது.
அதுமட்டுமில்லாமல் ஏற்கனவே ஜிஎஸ்டி (GST) மற்றும் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்ற பல்வேறு விதமான துன்பங்களை மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் ஜிஎஸ்டி வரியை ஓரளவு குறைந்தாலும், விசைத்தறிகள், சிறு, குறு வியாபாரம் மற்றும் பல்வேறு விதமான தொழிற்சாலைகளை சேர்ந்தவர்களுக்கு அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை முற்றிலுமாக நீக்க வேண்டும்.
மேலும் சிறு கடைகள், வியாபாரம், சிறு தொழில்கள் போன்றவைகளுக்கு ஜிஎஸ்டி என்பது வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாகும் நிலையுள்ளது. எனவே ஜிஎஸ்டியை திரும்பப் பெறுவது குறித்து எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லாதது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டிக்கு மத்திய பட்ஜெட்டில் புதிதாக விவசாயத்திற்கோ, ரெயில்வே துறையிலையோ, சாலைகளுக்கோ என எந்தவொரு அறிவிப்பும் இல்லை என்பது வேதனை அளிக்கிறது.
வேலை வாய்ப்பை உருவாக்க கூடிய அளவு எந்த ஒரு மிகப்பெரிய தொழிற்சாலைகளும், தொழில் நிறுவனங்களும் தமிழகத்திற்கு வராததும் பெரும் ஏமாற்றத்தை தந்திருக்கிறது.
எனவே "ஒரு கண்ணில் வெண்ணையும்", "ஒரு கண்ணில் சுண்ணாம்பும்" வைத்து தமிழகத்தை மட்டும் வஞ்சிக்கக்கூடிய பட்ஜெட்டாக தமிழக மக்களாகிய நாங்கள் பார்க்கிறோம். இது பெரும் கண்டனத்துக்குரிய மத்திய பட்ஜெட் ஆகும்.
இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
- மின் கட்டண உயர்வை எதிர்த்து அதிமுக போராட்டம் நடத்தியது வேடிக்கையானது.
- பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது போல அதிமுக செயல்பாடு உள்ளது.
மின் கட்டண உயர்வைக் கண்டித்து அதிமுகவினர் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் மின் கட்டண உயர்வு குறித்து அதிமுக போராட்டம் நடத்தியது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மின்கட்டண உயர்வு தொடர்பாக, அதிமுக இன்று ஆர்ப்பாட்டம் நடத்தியிருப்பது, வேடிக்கையாக இருக்கிறது. பிள்ளையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது போல் அவர்களது நடவடிக்கை இருக்கிறது. மின்கட்டண உயர்வுக்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டியவர்கள் அதிமுகவினர்தான். உதய் மின்திட்டத்தில் அனைத்து மாநிலமும் இணைய வேண்டும் என அப்போதைய ஒன்றிய அரசு சொன்னபோது, அப்போதைய தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா திட்டவட்டமாக மறுத்தார். திமுகவும் எதிர்த்தது.
ஆனால் அம்மையார் மருத்துவமனையில் இருந்த நிலையில், அன்றைய முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் மேலே இருந்து வந்த அழுத்தத்தின் காரணமாக உதய்மின் திட்டத்தில் இணைத்தார்.
கடந்த 2017-ம் ஆண்டு அப்போதைய மின்துறை அமைச்சர் கையெழுத்து போட்டு இந்த திட்டத்தில் இணைத்து கொண்டார். இது, ஆண்டுதோறும் மின் கட்டண உயர்வுக்கு காரணமாக அமைந்துவிட்டது.
இந்த முத்தரப்பு ஒப்பந்தத்தில் முக்கிய சரத்து என்னவென்றால் ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வை தமிழ்நாடு அரசு செயல்படுத்த வேண்டிய உத்தரவாதத்தை அளித்தது அன்றைய அதிமுக அரசு.
கடந்த 2011- 12-ம் ஆண்டு வரை, திமுக ஆட்சியில் இருந்தபோது, மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு ஒட்டு மொத்த நிதி இழப்பு 18 ஆயிரத்து 954 கோடி ரூபாய் ஆக இருந்தது.
பின்னர் 10 ஆண்டுகால திறனற்ற அதிமுக ஆட்சியில் இந்த செலவு, 94 ஆயிரத்து 312 கோடி ரூபாய் ஆக அதிகரித்ததுடன், திமுக ஆட்சி பொறுப்பை ஏற்கும் முன்பு வரை, 1 லட்சத்து 13 ஆயிரத்து 266 கோடி ரூபாய் ஆக தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ஒட்டு மொத்த நிதி இழப்பு அதிகரித்தது.
இதற்கு காரணம் யார்? அதிமுக அரசுதான். பின்பு திமுக ஆட்சிக்கு வந்த பின்பு நிதி இழப்பினை அரசே ஏற்றுக் கொண்டு உள்ளது. இந்த நிதி இழப்பை முந்தைய அரசு வழங்காத காரணத்தால், தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கான கடன், 43 ஆயிரத்து 493 கோடி ரூபாய் ஆக இருந்தது. இது, அதிமுக ஆட்சியின் பத்து ஆண்டுகளில் மூன்று மடங்கு உயர்ந்து, 2021 திமுக ஆட்சி பொறுப்புக்கு வருவதற்கு முன்பு கடன் மட்டும் 1 லட்சத்து 59ஆயிரத்து 823 கோடி ரூபாய் ஆக வந்திருக்கிறது.
இந்த கடனுக்கு வட்டி கட்ட வேண்டும். வட்டியை பொறுத்தவரை, 2011 திமுக ஆட்சியில் இருக்கும்வரை, 4,588 கோடி ரூபாய் ஆக இருந்தது. பின்பு 259 சதவீதம் ஆக அதிமுக ஆட்சியில் கூடியது. அதன்படி வட்டி மட்டும் 2021-ல் 16511 கோடி ரூபாய் ஆக வந்திருக்கிறது.
இந்த சூழலில்தான், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நிதி நிலைமையை மோசமாக வைத்து விட்டு சென்றார்கள். இந்த இழப்புகளை சரி கட்டதான் தற்போதைய மின் கட்டண உயர்வு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
1 கோடி பேருக்கு மின்கட்டண உயர்வு வராது. குறைந்த அளவில்தான் மின் கட்டண உயர்வு உயர்த்தப்பட்டுள்ளது. பிற மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கையில், மிக குறைவான அளவில் மின் கட்டண நிர்ணயம் தமிழ்நாட்டில் மட்டும்தான்.
அதிமுக ஆட்சியில் 2012, 13, 14 ஆண்டுகளில் முறையே 3.7, 3.57, 16.33 சதவீதம் என மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதையெல்லாம் மறைத்து விட்டு மக்களை ஏமாற்றும் வகையில் அதிமுகவினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
இன்று மின்வாரிய நிதிநிலை நெருக்கடியை சமாளிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு, பங்கு மூலதனம், மின்கட்டண மானியம், கடன் உதவிகள் என வழங்கி கொண்டு வருகிறது.
வருவாய் இழப்பை சரி செய்யும் வகையிலும் அரசு மானியம் வழங்கி வருகிறது. இதற்காக மட்டும் 32 ஆயிரத்து104 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசு மின்சார வாரியத்துக்கு வழங்கி இருக்கிறது.
இவ்வாறு தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.






