என் மலர்
உள்ளூர் செய்திகள்
- இந்தியா- வங்கதேசம் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.
- டிக்கெட்டுகள் தினமும் காலை 7 மணிக்கு கவுன்டரில் பெறலாம் எனவும் அறிவிப்பு.
இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 19-ந் (நாளை) தேதி தொடங்குகிறது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கான இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியா- வங்கதேசம் அணிகள் இடையேயான டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இந்தியா- வங்கதேசம் இடையேயான டெஸ்ட் போட்டி நடைபெறும் ஒவ்வொரு நாளுக்கும் தனித்தனியாக பயன்படுத்தும் வகையில், டிக்கெட்டுகள் விற்கப்படுகிறது.
அதன்படி, டிக்கெட்டுகள் தினமும் காலை 7 மணிக்கு கவுன்டரில் பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
F,G,H அப்பர் ஸ்டாண்ட் வரிசையில் தலா ஒரு டிக்கெட் ரூ.200க்கு விற்பனை செய்யப்படுகிறது.
I,J,K லோயர் ஸ்டாண்ட் வரிசையில் தலா ஒரு டிக்கெட் ரூ.400க்கு விற்பனை செய்யப்படுகிறது.
KMK டெர்ரேஸ் வரிசையில் தலா ஒரு டிக்கெட் ரூ.1000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

- அரசியலில் வெற்றியின்றி காணாமல் போனவர்களும் உண்டு.
- பெரியாரை தவிர்த்து அரசியல் செய்வது எளிய காரியமில்லை.
தமிழக அரசியல் மற்றும் திரைத்துறையை பிரிக்கவே முடியாது. திரைப் பிரபலங்களாக இருந்து அரசியலில் சாதித்தவர்கள் தமிழகத்தில் அதிகம். இதே போன்று பிரபலங்களாக இருந்தும், அரசியலில் வெற்றியின்றி காணாமல் போனவர்களும் உண்டு.
திரைத்துறை சார்பு மட்டுமின்றி தமிழக அரசியலில் இன்றும் பெருமளவு வாக்கு வங்கி பெரியார் மற்றும் திராவிட சித்தாந்தங்களின் அடிப்படையில் தான் சுழல்கிறது. திராவிட சித்தாந்தம் கொண்டவர்களால் பெரியார் மண் என்று அழைக்கப்படும் தமிழ் நாட்டில்- திராவிடம், பெரியார், சமூக நீதி, சமத்துவம் போன்றவற்றை தவிர்த்து அரசியல் செய்வது எளிய காரியமில்லை.

பெரியார் வழி வந்த தமிழக அரசியல் தலைவர்களான அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ராமச்சந்திரன் ஆகியோர் திராவிட சித்தாந்தம் பேசியே தமிழக அரசியலில் சாதித்தனர். தமிழகத்தில் பிரதான அரசியல் கட்சியாக உள்ள அதிமுக-வும் திராவிடம் மற்றும் சமத்துவ கொள்கைகளை பேசியே மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றுள்ளது.
இடையில் திரைத்துறையில் இருந்து அரசியலில் களமிறங்கிய நடிகர் கேப்டன் விஜயகாந்த். இவரும் கூட தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற பெயரில் கட்சியை ஆரம்பித்ததோடு, திராவிட கொள்கைகளை ஒட்டியே தனது அரசியல் பயணம் மேற்கொண்டார். உணர்ச்சிகர பேச்சு, வெளிப்படைத் தன்மை காரணமாக தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத தலைவராக உருவெடுத்த விஜயகாந்த் தமிழ்நாடு சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராகவும் உயர்ந்து வெற்றி பெற்றார்.

அந்த வரிசையில், தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக உள்ள விஜய்- தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி அரசியலில் களமிறங்கியுள்ளார். இதுவரை கட்சி பெயர், கொடி மற்றும் அறிமுக பாடலை மட்டும் வெளியிட்டுள்ள விஜய், தனது கட்சியின் கொள்கை பற்றி இதுவரை பேசவில்லை. தமிழக அரசியலில் புதுவரவு கட்சியான "தமிழக வெற்றிக் கழகம்" 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்து இருக்கிறது.
அரசியல் கட்சி தொடர்பான முதல் அறிவிப்பில் "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற சமத்துவ கொள்கைப்பற்று கொண்டிருப்போம் என்று உரக்க தெரிவித்தார் விஜய். அதன்பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் அறிக்கைகள் அனைத்திலும் "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்பது அக்கட்சியின் வாசகமாக இடம்பெற்று வருகிறது.
விஜய் மற்றும் அவரது தமிழக வெற்றிக் கழக கட்சியின் ஒவ்வொரு நகர்வுகளையும் உற்று நோக்கும் போது, அவர் திராவிட வழியில் பயணம் செய்வதாகவே தெரிகிறது. இதனை விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி பொது நிகழ்வுகளுக்கு கூறும் வாழ்த்து செய்திகளும் அப்பட்டமாக எடுத்துக் காட்டியுள்ளன. மேலும், மாணவர்களிடையே பேசிய விஜய் அவர்களிடம், அம்பேத்கர், பெரியார் பற்றி படிக்க வலியுறுத்தி இருந்தார்.

இந்த வரிசையில், பெரியாரின் 146 ஆவது பிறந்த நாளில் அவரது நினைவிடம் அமைந்துள்ள பெரியார் திடலுக்கு நேரில் சென்ற பெரியார் நினைவிடத்தில் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். கட்சி ஆரம்பித்த பிறகு முதல் முறையாக பொது இடத்தில் விஜய் நேரில் சென்று மரியாதை செலுத்தி இருக்கிறார்.
அரசியல் தலைவராக முதல்முறை பொது நிகழ்வை தந்தை பெரியார் பிறந்த நாளில் அவரது நினைவிடத்தில் விஜய் நடத்தி இருப்பது தமிழக அரசியலில் பல்வேறு கேள்விகளுக்கு வழி வகுத்துள்ளது. இதுவரை விஜய் மேற்கொண்டு வரும் அரசியல் நகர்வுகள் சமத்துவம், சமூக நீதி ஆகிய கருத்துக்களை சார்ந்தே இருந்து வந்துள்ளது.
தமிழக அரசியலில் திராவிடம், சமூகநீதி, சமத்துவம் தவிர்த்து பிரதான கட்சியாக வளர்ச்சி பெற முடியாது என்பதில் விஜய் கவனமுடன் செயல்பட்டு வருவதையே இவை உணர்த்துகின்றன. அரசியலில் தனது சீனியர்கள் பயணத்த பாதை, தமிழக அரசியல் வரலாறு ஆகியவற்றை கூர்ந்து கவனிக்கும் நபராக விஜய்யின் அரசியலை பார்க்க முடிகிறது.

தமிழகத்தில் திராவிடம், கடவுள் மறுப்பு, சமூகநீதி கருத்துக்களை பேசி வரும் ஆளும் கட்சியான திமுக, பெயரளவில் திராவிட, சமூகநீதி கருத்துக்களை வலியுறுத்தும் அதிமுக, தமிழ் தேசம் பேசும் நாம் தமிழர் என அரசியல் கட்சிகளின் பயணத்தை நாம் வரையறுக்கலாம்.
இந்த நிலையில் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை, திராவிடம், சமூகநீதி ஆகியவற்றை வலியுறுத்துமா? ஆன்மிக அரசியல் குறித்து விஜய் என்ன நிலைப்பாடு கொண்டுள்ளார்? தமிழக அரசியலில் அவர் முன்னெடுக்கப் போகும் பாதை எதை சார்ந்து இருக்கும்? என அரசியல் விமர்சகர்கள், தலைவர்கள், பொது மக்கள் மற்றும் அவரது ரசிகர் பட்டாளம் என ஒட்டுமொத்த தமிழகத்தின் கேள்விகளுக்கு விஜயின் முதல் அரசியல் மாநாட்டில் பதில் கிடைக்குமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்..!
- எதிர்க்கட்சித் தலைவருக்கு பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு விரைந்து செயல்பட வேண்டும்.
- வன்முறை மற்றும் மிரட்டலுக்கு ஜனநாயகத்தில் இடமில்லை என்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.
"இந்திரா காந்திக்கு நேர்ந்தது உங்களுக்கும் நேரும்" என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு, ஷிண்டே சிவசேனா கட்சியின் எம்.எல்.ஏ. மிரட்டல் விடுத்துள்ளார்.
இதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
பாஜக தலைவர் ஒருவர் ராகுல்காந்தி 'அவரது பாட்டிக்கு நேர்ந்த கதியை சந்திக்க நேரிடும்' என்ற மிரட்டலுக்கும், ஷிண்டே சிவசேனா கட்சியின் எம்.எல்.ஏ. ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பதாக கூறிய மிரட்டல்கள் பற்றிய ஊடகச் செய்திகளால் ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்துள்ளேன்.
எனது சகோதரர் ராகுலுக்கு மக்களின் ஆதரவு அதிகரிப்பது, சிலரை நிலைகுலைய வைத்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவருக்கு பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு விரைந்து செயல்பட்டு, வன்முறை மற்றும் மிரட்டலுக்கு ஜனநாயகத்தில் இடமில்லை என்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பெரியார் அரசியல் என்பது தி.மு.க, அ.தி.மு.க. கட்சிகளுக்கு மட்டுமானது அல்ல.
- நாடு முழுவதும் மது விலக்கு கொள்கை வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
சென்னை:
தியாகி ரெட்டைமலை சீனிவாசன் நினைவு நாளையொட்டி சென்னை ஓட்டேரியில் உள்ள அவரது நினைவிடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பெரியார் நினைவிடத்தில் நடிகர் விஜய் மரியாதை செலுத்தியது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். அதனை பாராட்டி எனது சமூகவலைதள பக்கங்களில் பதிவு செய்துள்ளேன்.
சமூக நீதிப் பார்வையோடு அவர் அரசியல் களத்தில் அடியெடுத்து வைக்கிறார் என்பது மகிழ்ச்சி அளிப்பதுடன் மிகுந்த நம்பிக்கையும் அளிக்கிறது.
பெரியார் அரசியல் என்பது தி.மு.க, அ.தி.மு.க. கட்சிகளுக்கு மட்டுமானது அல்ல. சமூக நீதியின் மீது நம்பிக்கை உள்ள அனைவருக்குமானது. சமத்துவத்தை நாடும் அனைவருக்குமானது. அந்த புரிதல் அன்பு இளவல் நடிகர் விஜய்க்கு இருப்பதை அறிந்து பெருமைப்படுகிறேன். பாராட்டுகிறேன்.
தேர்தலுக்கு இன்னும் 18 மாதங்கள் உள்ளன. தி.மு.க. கூட்டணியில் பிளவு ஏற்படும் என தேர்தல் கணக்கு போட்டவர்களின் மூக்கு அறுபட்டுள்ளது. அவர்களது கூக்குரலும் புலம்பலும் இது. அவர்கள் எதிர்பார்த்தது நடக்கவில்லை. எப்படியாவது பிளவை ஏற்படுத்த வேண்டும் என முயற்சித்தனர். அது நடக்கவில்லை. ஏமாற்றம் அடைந்தனர். அதனால் விரக்தி அடைந்துள்ளனர்.
விடுதலை சிறுத்தை மது ஒழிப்பு மாநாட்டிற்கு ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் வருகிறார்கள் என்றால் கொள்கை தளத்தில் தி.மு.க.வும் விடுதலை சிறுத்தையும் இணையாக இருக்கிறோம் என்று அர்த்தம்.
தேசிய கல்விக் கொள்கையில் தி.மு.க.விற்கும், விடுதலை சிறுத்தைக்கும் உடன்பாடில்லை. நாங்கள் ஏன் அதை ஏற்க வேண்டும்.
நாடு முழுவதும் மது விலக்கு கொள்கை வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். குடி நோயாளிகளாக மக்கள் மாறுவது வேதனை அளிக்கிறது. அதனால் தான் தேசிய மதுவிலக்கு கொள்கை குறித்து பேசுகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அதிர்ஷ்டவசமாக ரெயில் பெட்டிகள் தடம் புரளவில்லை.
- பயணிகள் உயிர் தப்பினர்.
திருச்சி:
ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் சேது எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை 1.10 மணிக்கு திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் வந்தது. அங்குள்ள நடைமேடை பகுதியில் எஞ்சின் டிரைவர் ரெயிலை நிறுத்த முயன்றார்.
அப்போது அந்த ரெயிலின் கடைசி 3 பெட்டிகள் தனியாக கழன்று ஓடியது. இதைக்கண்டு, சேது எக்ஸ்பிரஸ் ரெயில் பயணிகளும், ரெயில் நிலையத்தில் நின்றிருந்த பயணிகளும் அதிர்ச்சியில் உறைந்தனர். அதிர்ஷ்டவசமாக ரெயில் பெட்டிகள் தடம் புரளவில்லை. இதனால் பயணிகள் உயிர் தப்பினர்.
உடனே இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரெயில் நிலைய பொறியாளர்கள் விரைந்து வந்து ரெயில் பெட்டிகளை இணைத்தனர்.
அதன்பிறகு ரெயில் சென்னைக்கு புறப்பட்டு சென்றது. பெட்டிகள் இணைப்பு பகுதியில் ஏற்பட்ட பழுது காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த சம்பவம் காரணமாக சுமார் அரை மணி நேரம் தாமதமாக சேது எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னையை சென்றடைந்தது. ரெயிலில் இருந்து பெட்டிகள் தனியாக கழன்று ஓடிய சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- திமுக பவள விழா கூட்டம் குறித்தே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
- அனைத்து அமைச்சர்களும் முதலமைச்சருக்கு துணையாக இருப்போம்.
சென்னை:
சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் திமுக மூத்த நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வந்த ஆலோசனை முடிவடைந்தது.
இந்நிலையில் திமுக இளைஞர் அணிச் செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* திமுக பவள விழா கூட்டம் குறித்தே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
* திமுக தொண்டர்கள் தங்கள் விருப்பத்தை தெரிவித்துள்ளனர். துணை முதல்வர் பொறுப்பு குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார்.
* அனைத்து அமைச்சர்களும் முதலமைச்சருக்கு துணையாக இருப்போம்.
* தமிழகத்தில் பெரியாரை தொடாமல் அரசியல் செய்ய முடியாது என்று பெரியார் நினைவிடத்தில் விஜய் அஞ்சலி செலுத்தியது குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.
- மணமகன் ஹரிஹரனின் தந்தை மீனாட்சிசுந்தரம், தனது செல்போனில் சமூக வலைதள பதிவவை பார்த்துக் கொண்டிருந்தார்.
- புதுமணத் தம்பதியினர் தங்களது திருமண நிகழ்ச்சியில் கிடைத்த மொய் பணம் ரூ.1.91 லட்சத்தை புற்றுநோய் சிகிச்சை பிரிவு கட்டிட கட்டுமானத்திற்காக நன்கொடையாக தந்துள்ளனர்.
மதுரை:
தேனி மாவட்டம் ஜக்கம்பட்டியில் சென்னையை சேர்ந்த ஐ.டி. என்ஜினீயர் ஹரிஹரன்-தேன்மொழி ஆகியோருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் மூலம் கிடைத்த திருமண மொய் பணத்தை ஏதாவது ஒரு வகையில் ஏழை மக்களின் உதவிக்காக பயன்படுத்த வேண்டும் என்று இந்த புதுமண தம்பதியினர் திட்டமிட்டனர்.
இந்த நிலையில் மணமகன் ஹரிஹரனின் தந்தை மீனாட்சிசுந்தரம், தனது செல்போனில் சமூக வலைதள பதிவவை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது மதுரையை அடுத்த திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்த ஒரு தனியார் அறக்கட்டளை புற்றுநோயாளிகளை பராமரிப்பதற்கும், சிகிச்சை அளிப்பதற்கும் தனியாக ஒரு மையம் ஏற்படுத்தி வருவதாகவும், அதற்கு தாராள மனம் கொண்ட நன்கொடையாளர்கள் உதவி செய்யும்படியும் அந்த வீடியோவில் அந்த அறக்கட்டளை சேர்ந்த பால் மாணிக்கம் என்பவர் வீடியோ பதிவிட்டு இருந்ததை பார்த்தார்.
இந்த தனியார் அறக்கட்டளையின் நோக்கம் நிறைவேற இந்த புதுமணத் தம்பதியினர் உதவும் வகையில் தங்களது திருமணத்தில் கிடைத்த மொய் பணம் ரூ.1.91 லட்சத்தை இந்த அறக்கட்டளையின் புற்றுநோய் சிகிச்சை மையம் கட்டுவதற்கு உதவியாக வழங்க திட்டமிட்டனர். இதற்காக மீனாட்சி சுந்தரம் மற்றும் புதுமண தம்பதியர் ஹரிஹரன்-தேன்மொழி ஆகியோர் திருப்பரங்குன்றம் வந்து அங்குள்ள தனியார் அறக்கட்டளை நிர்வாகிகளிடம் இந்த தொகையை நன்கொடையாக ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக அறக்கட்டளை மேலாளர் ரமேஷ் கூறுகையில், புதுமணத் தம்பதியினர் தங்களது திருமண நிகழ்ச்சியில் கிடைத்த மொய் பணம் ரூ.1.91 லட்சத்தை புற்றுநோய் சிகிச்சை பிரிவு கட்டிட கட்டுமானத்திற்காக நன்கொடையாக தந்துள்ளனர். இதை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டுள்ளோம். இந்த மையம் அமைக்க ரூ.40 லட்சம் செலவாகும் என திட்டமிடப்பட்டுள்ளது.
20 படுக்கைகள் கொண்ட இந்த சிகிச்சை மையத்தில் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கி சிகிச்சை பெறவும், அவர்களுக்கு தேவையான மறுவாழ்வு பணிகளை செய்ய முடிவு செய்துள்ளோம். இந்த புதிய சிகிச்சை மையம் இன்னும் சில வாரங்களில் தயாராகிவிடும் என்றார்.
திருமணத்திற்கு வந்த மொய் பணத்தை வைத்து எதிர்காலத்திற்கு திட்டமிடும் மணமக்கள் மத்தியில், புற்றுநோய் சிகிச்சை மையம் கட்ட இந்த புதுமணத் தம்பதியின் தன்னலமற்ற சேவையை பலரும் பாராட்டி உள்ளனர்.
- உடலில் விஷம் கலந்ததால் உடலுறுப்புகள் செயல் இழந்து விட்டதாகவும், உயிர் பிழைப்பது கடினம் என தெரிவித்தனர்.
- உயிரிழந்த நாய்க்கு மாலை அணிவித்தும், வீட்டில் விளக்கு ஏற்றிவைத்தும் இறுதி சடங்குகள் நடத்தப்பட்டன.
மேட்டுப்பாளையம்:
கோவை மேட்டுப்பாளையம் மணி நகர் பகுதியை சேர்ந்தவர் அருள்வேல். காய்கறி வியாபாரி. இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.
அருள்வேல் தனது வீட்டில் கடந்த 6 ஆண்டுகளாக ஆண் நாய்க்குட்டி ஷேடோ ஒன்றை பாசத்துடன் வளர்த்து வந்தார். இந்த நாய் பின்னாளில் அவரது குடும்பத்தில் ஒருவராகவே மாறி விட்டது.
இந்த நிலையில் ஷேடோ நேற்று வீட்டில் இருந்து வெளியே வந்தது. அப்போது தெருவில் சுற்றி திரிந்த நாய்கள் கடித்து குதறின. இதில் ஷேடோவுக்கு படுகாயம் ஏற்பட்டது.
தொடர்ந்து அருள்வேல் குடும்பத்தினர் நாயை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நாயை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் உடலில் விஷம் கலந்ததால் உடலுறுப்புகள் செயல் இழந்து விட்டதாகவும், உயிர் பிழைப்பது கடினம் என தெரிவித்தனர்.
தொடர்ந்து அருள்வேல் குடும்பத்தினர் கண்ணீருடன் ஷேடோ நாயை வீட்டுக்கு கொண்டுவந்து பராமரித்து வந்தனர். இந்த நிலையில் அந்த நாய் பரிதாபமாக உயிரிழந்தது.
வாழ்வில் பிரிக்க முடியாத பிணைப்பாக மாறிய ஷேடோ நாய்க்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், அதன் மேல் உள்ள பாசத்தை வெளிப்படுத்தும் விதமாகவும், வீட்டில் ஒருவர் மரணித்தால் என்ன ஈம காரியங்கள் செய்வோமோ அதேபோல இறுதி சடங்குகள் செய்வதென அருள்வேல் குடும்பத்தினர் முடிவுசெய்தனர்.
தொடர்ந்து உயிரிழந்த நாய்க்கு மாலை அணிவித்தும், வீட்டில் விளக்கு ஏற்றிவைத்தும் இறுதி சடங்குகள் நடத்தப்பட்டன.
பின்னர் இன்று காலை அந்த நாய் அலங்கரிக்கப்பட்ட காரில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர் அங்குள்ள சுடுகாட்டில் வளர்ப்பு நாய் ஷேடோ அடக்கம் செய்யப்பட்டது.
- வழக்கு விசாரணை இலங்கை புத்தளம் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
- தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து 7 மீனவர்களும் சிறைசாலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணி மகாராஜா. இவர் அந்தோணி தேன் டெனிலா என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த மாதம் 20-ம் தேதி மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். அவர்கள் சர்வதேச எல்லை தாண்டி இலங்கை பகுதியில் மீன் பிடித்ததாகக் கூறி 22 மீனவர்களை இலங்கையை சேர்ந்த கடற்படையினர் கைது செய்ததுடன், விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் கடந்த வாரம் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 12 பேருக்கு தலா ரூ.1.5 கோடி அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மீனவர்கள் அபராதத்தை செலுத்த தவறினால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் இலங்கை நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது. மேலும் மீதமுள்ள 10 மீனவர்களை, நீதிமன்ற காவலில் வைக்கவும் இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் இன்று வழக்கு விசாரணை இலங்கை புத்தளம் நீதிமன்றத்தில் நடைபெற்றது. 10 மீனவர்களில் 3 பேருக்கு உடல்நலக்குறைவு காரணமாக ஆஜராகவில்லை. மீதமுள்ள 7 பேர் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி தருவைகுளம் மீனவர்கள் 10 பேருக்கும் ரூ.3.5 கோடி அபராதம் மற்றும் 6 மாதம் சிறை தண்டனை விதித்தார். இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து 7 மீனவர்களும் சிறைசாலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- ஒற்றைக் கட்சி ஆட்சி முறை என்பதுதான் கொடிய சனாதனம்.
- ஆட்சியில் பங்கு தர முடியாது என்று சொல்லும் கட்சிகள் தனித்து நின்று தேர்தலில் சந்தித்து வெற்றி பெற வேண்டும்.
புதுக்கோட்டை:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க. 100 ஆண்டு ஆட்சியில் இருக்கும் என்கிறார்கள். தமிழ்நாடு இருக்குமா? மாநில சுய ஆட்சி என்று வெற்று வார்த்தையே தவிர வேறு எதையும் வைக்கவில்லை, வசனத்தையும் திரைக்கதையையும் மாற்ற வேண்டும்.
விஜய் அம்பேத்கருக்கும், பெரியாருக்கும் மாலை அணிவித்ததை வரவேற்கிறேன். அதேபோல் முத்துராமலிங்க தேவர், இரட்டை மலை சீனிவாசன், வேலுநாச்சியார், திரு.வி.க. உள்ளிட்டோருக்கும் தொடர்ந்து மாலை அணிவிக்க வேண்டும்.
பெரியாரை தமிழ் தேசியத்தின் எதிரியாக நான் பார்க்கவில்லை. ஆனால் பெரியார் மட்டும் தான் எல்லாம் செய்தார் என்பதை ஏற்க முடியாது. பெரியாரும் போராடினர் என்பது தான் என் கருத்து. ஆனால் இங்கு பெரியார் தான் எல்லாம் என்று சொல்வதை நான் ஏற்கவில்லை.
ஒற்றைக் கட்சி ஆட்சி முறை என்பதுதான் கொடிய சனாதனம். கட்சியிலிருந்து விலகுபவர்கள் அவர்களாக போகிறார்கள். அவர்களை நாங்கள் நீக்கல் கடிதம் கொடுத்து நீக்கவில்லை. அவர்கள் குற்றச்சாட்டை மட்டும் தான் வைக்கிறார்கள். பட்டுப்போன சறுகு கீழ விழுந்தால் சத்தம் கேட்க தான் செய்யும்.
தேசிய இனத்திற்கு தலைமை ஏற்று இருக்க வேண்டும் என்றால் திரைத்துறை மட்டும் பற்றாது, துணிவு வேண்டும். நமது வரலாறு, மொழி உள்ளிட்டவற்றை கற்றுக்கொண்டு விஜய் வரவேண்டும். வருவார் என்ற நம்பிக்கை உள்ளது. விஜய் செய்தியாளர்களை சந்திக்கும்போது தனித்து நிற்பாரா அல்லது சீமானோடு கூட்டணி வைப்பாரா என்று கேட்க வேண்டும்.
நிதிஷ் குமாரும் சந்திரபாபு நாயுடுவும், பா.ஜ.க. ஆதரவை விட்டு விலகினால் தி.மு.க. 22 பாராளுமன்ற உறுப்பினர்களோடு நிச்சயம் பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளிக்கும்.
ஆட்சியில் பங்கு தர முடியாது என்று சொல்லும் கட்சிகள் தனித்து நின்று தேர்தலில் சந்தித்து வெற்றி பெற வேண்டும். 2026 தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டி. விஜய் அரசியலுக்கு வந்ததால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. எங்களால் தான் மற்றவர்களுக்கு பாதிப்பு.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக நம் தமிழர் கட்சியுடன் விஜய் கூட்டணி வைப்பாரா? என்ற கேள்விக்கு சீமான் பதில் அளிக்கையில், என்னுடன் கூட்டணிக்கு யாரும் வருவார், போவார் என்று நான் எதிர்பாரக்கவில்லை. விஜய் வந்த பிறகு தான் அவர் கொள்கை என்ன சொல்கிறார் என்று பார்க்க வேண்டும். நான் தமிழ் தேசிய தத்துவத்தில் உள்ளேன் என்றார்.
- காவிரி ஆற்றிற்கு வரும் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- போலீசார், வருவாய்த்துறையினர், தீயணைப்பு படையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் அங்கு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒகேனக்கல்:
கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழைக்கு ஏற்ப ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. கடந்த சில நாட்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று முன்தினம் காலையில் வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக இருந்தது.
இதனால் அருவி மற்றும் காவிரி ஆற்றில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தருமபுரி மாவட்ட நிர்வாகம் தடைவிதித்து இருந்தது. இந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததன் எதிரொலியாக, ஒகேனக்கல்லுக்கு நேற்று நீர்வரத்து குறைந்தது.
காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து குறைந்தது. இருப்பினும் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதுடன், காவிரி ஆற்றில் பாய்ந்து ஓடுகிறது. காவிரி ஆற்றிற்கு வரும் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக உள்ளதால் அருவிகள் மற்றும் ஆற்றங்கரை ஓரங்களில் குளிக்க தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி அனுமதி வழங்கி உள்ளார். மேலும் போலீசார், வருவாய்த்துறையினர், தீயணைப்பு படையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் அங்கு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தேயிலை நிர்வாகம் சார்பில் விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
- தேயிலை தோட்ட தொழிலாளர்களின் மீதான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்த உள்ளனர்.
நெல்லை:
மாஞ்சோலை தேயிலை தோட்டங்களை நிர்வகித்து வந்த பாம்பே பர்மா நிறுவனத்தின் ஒப்பந்த காலம் வருகிற 2028-ம் ஆண்டுடன் முடிவடைய உள்ளதால் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தேயிலை நிர்வாகம் சார்பில் விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக விசாரித்த ஐகோர்ட்டு, தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் குறித்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும் வரை அவர்களை மாஞ்சோலையில் இருந்து கீழே இறக்க கூடாது என்று உத்தரவிட்டது.
இதுகுறித்து புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கடந்த மாதம் 20-ந்தேதி தேசிய மனித உரிமை ஆணையத்தின் நீதிபதி விஜய பாரதி சயானிடம் புகார் அளித்தார். இதனை ஏற்றுக்கொண்ட மனித உரிமை ஆணையம் உடனடியாக தலைமை விசாரணை இயக்குனர் அடங்கிய குழு ஒன்றை அமைத்து இந்த குழு மாஞ்சோலை பகுதிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி ஒரு மாத காலத்திற்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்த நிலையில் தேசிய மனித உரிமை ஆணைய விசாரணை குழு அதிகாரிகளான ரவி சிங், யோகேந்திர குமார் திரிபாதி ஆகியோர் அடங்கிய குழு இன்று நெல்லை வந்துள்ளது. மொத்தம் 4 நாட்கள் நெல்லையில் முகாமிட்டு இந்த குழு விசாரிக்க உள்ளது. தொடக்க நாளான இன்று இந்த குழுவானது மாஞ்சோலைக்கு நேரில் சென்று மனித உரிமை மீறல்கள் தொடர்பாக மக்களிடம் விசாரணை நடத்த உள்ளனர். தொடர்ந்து நாளையும் அந்த குழு மாஞ்சோலையில் விசாரணை நடத்துகிறது.
அவர்கள் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் மீதான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்த உள்ளனர். பின்னர் பர்மா தேயிலை நிர்வாகத்திடம் ஆய்வுகளை மேற்கொண்டு, மாஞ்சோலையில் அமைந்துள்ள தொழிற்சாலை, தேயிலை தோட்டம் உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்கிறார்கள்.
முன்னதாக இன்று காலை தொழிலாளர் துறையின் தோட்டங்கள் பிரிவின் உதவி ஆணையர் விக்டோரியா மற்றும் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் இளையராஜா ஆகியோருடனும் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் அந்த குழுவினர் ஆலோசனை நடத்தினர்.
தொடர்ந்து மாஞ்சோலை தொடர்பான முழு விவரங்கள், அது தொடர்பான நீதிமன்ற வழக்குகள், அரசு எடுத்துள்ள மறுவாழ்வு நடவடிக்கைகள், அப்பகுதி மக்களின் கோரிக்கைகள் உள்ளிட்டவை குறித்து மாவட்ட கலெக்டர் கார்த்திகேயனிடம் விரிவாக கேட்டறிந்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, அம்பாசமுத்திரம் புலிகள் சரணாலய துணை இயக்குனர் இளையராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா, தொழிலாளர் நலத்துறை கூடுதல் ஆணையாளர் உள்ளிட்ட அலுவலர்களுடன் சுமார் 1½ மணி நேரம் ஆலோசனை மேற்கொண்டனர்.
அவர்களிடம் மாஞ்சோலை தொடர்பான பல்வேறு முக்கிய ஆவணங்கள் அடங்கிய 1,125 பக்க அறிக்கையை கலெக்டர் கார்த்திகேயன் வழங்கினார்.






