என் மலர்
உள்ளூர் செய்திகள்
- ரவுடி புதூர் அப்புவை டெல்லியில் வைத்து தனிப்படை போலீசார் மடக்கிப் பிடித்துள்ளனர்.
- ஏற்கனவே 27 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒருவர் கைது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய நபரான ரவுடி புதூர் அப்பு கைது செய்யப்பட்டுள்ளார்.
ரவுடி புதூர் அப்புவை டெல்லியில் வைத்து தனிப்படை போலீசார் மடக்கிப் பிடித்துள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங்கை கொல்ல நாட்டு வெடிகுண்டுகளை சப்ளை செய்ததாக ரவுடி புதூர் அப்பு மீது குற்றச்சாட்டு எழுந்தது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கனவே 27 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
- 300 அடி நீளத்திற்கு நிலத்தில் பிளவு ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
- நில அதிர்வு ஏற்பட்டதாக எந்த தரவுகளும் இல்லை வானியல் ஆய்வு மைய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கொடைக்கானலில் இருந்து சுமார் 60 கி.மீ தூரத்தில் உள்ள கூனிப்பட்டி என்ற வனப்பகுதியில் சுமார் 300 அடி நீளத்திற்கு நிலத்தில் பிளவு ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேல்மலையில் உள்ள கீழ் கிளாவரை கிராமத்திற்கு கடந்த சில நாட்களாக செருப்பன் ஓடையில் இருந்து குழாய் மூலம் நீர் வராததால், கிராம மக்கள் சிலர் வனப்பகுதிக்குள் சென்று பார்த்தபோது நிலம் பிளவடைந்துள்ளது தெரிய வந்தது.
இப்பகுதியில் எவ்வித கட்டுமான பணிகளோ, சுரங்க பணிகளோ நடைபெறவில்லை. அப்படி இருக்கையில் இந்த பிளவு எப்படி உருவானது என்று கிராம மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த பகுதி கேரளாவை ஒட்டியுள்ள பகுதி என்பதால், வயநாட்டில் ஏற்பட்டதை போன்ற நிலச்சரிவு இங்கும் ஏற்படுமோ? என்றும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இப்பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டதாக எந்த தரவுகளும் இல்லை வானியல் ஆய்வு மைய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
- அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டி அடுத்துள்ள வி.சாலை பகுதியில் மாநாடு நடத்த திட்டம்.
- விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனு அளித்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு தொடர்பாக, மீண்டும் அனுமதி கேட் விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தவெக மாநாட்டுக்கு அனுமதி கேட்டு விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனு அளித்தார்.
அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டி அடுத்துள்ள வி.சாலை பகுதியில் மாநாடு நடத்த திட்டமிட்டு அனுமதி, பாதுகாப்பு கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மாநாட்டிற்கான அறிவிப்பை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், நேற்று வெளியிட்டிருந்த நிலையில் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
- 2 ஆவது இன்னிங்ஸ் முடிவில் மொத்தமாக இந்தியா 514 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
- 2 ஆவது இன்னிங்சில இந்தியா தரப்பில் அஷ்வின் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இந்தியா- வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வங்கதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா அஸ்வின் சதத்தால் 376 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வங்கதேசம் 149 ரன்னில் சுருண்டது.
பின்னர் 227 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. 4 விக்கெட் இழப்பிற்க 287 ரன்கள் அடித்திருக்கும்போது 2-வது இன்னிங்சை இந்தியா டிக்ளேர் செய்தது. சுப்மன் கில், ரிஷப் பண்ட் ஆகியோர் சதமடித்து அசத்தினர்.
2 ஆவது இன்னிங்ஸ் முடிவில் மொத்தமாக இந்தியா 514 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. பின்னர் 515 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் வங்கதேச அணி 2 ஆவது இன்னிங்சில் களம் இறங்கியது.
3-வது நாள் முடிவில் வங்கதேச அணி 4 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் அடித்துள்ளது. கேப்டன் சாண்டோ 51 ரன்களுடனும், ஷகிப் அல் ஹசன் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா தரப்பில் அஷ்வின் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். மைதானத்தில் போதிய வெளிச்சம் இல்லாததால் முன்கூட்டியே 3-ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
வங்காளதேசம் வெற்றி பெற இன்னும் 357 ரன்கள் அடிக்க வேண்டும். அதே சமயம் இந்தியா வெற்றி பெற 6 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். இன்னும் 2 நாட்கள் மீதமிருப்பதால் இந்தியாவின் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
- வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுக்க திட்டமிட்ட அந்த நபர் டம்மி ஏ.டி.எம். கார்டை வசந்தாவிடம் கொடுத்து விட்டு அவரது கார்டை எடுத்து கொண்டார்.
- ஏ.டி.எம். எந்திரத்தில் உள்ள கேமரா பதிவுகளை ஆய்வு செய்து அந்த நபரை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளனர்.
சேலம்:
சேலம் காமநாயக்கன்பட்டி ராஜா பட்டறையை சேர்ந்தவர் மகேந்திரன், இவரது மனைவி வசந்தா (58), இவர்களுக்கு தினேஷ் என்ற மகனும், நிஷாந்தி என்ற மகளும் உள்ளனர். தினேஷ் தனியார் நிறுவனத்தில் டிரைவராக உள்ளார். நர்சாக பணி புரிந்து வரும் நிஷாந்தி சேலத்தில் உள்ள ஒரு கல்லூரி விடுதியில் தங்கி உள்ளார். கணவர் இறந்து விட்டதால் வசந்தாவும், அதே கல்லூரியில் அலுவலக உதவியாளராக பணி புரிந்து வருவதுடன் மகளுடன் தங்கி உள்ளார்.
இவர்களுக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்ட திட்டமிட்ட வசந்தா, பி.எப். பணத்தை எடுக்க விண்ணப்பித்திருந்தார். கடந்த 12-ந் தேதி அவரது வங்கி கணக்கிற்கு பணம் வந்தது. நேற்று முன்தினம் மாலை சாரதா கல்லூரி சாலையில் அழகாபுரம் போலீஸ் நிலையம் அருகே உள்ள வங்கி ஏ.டி.எம். மையத்தில் 500 ரூபாயை எடுக்க முயன்றார்.
அப்போது அவரது பின்னால் நின்றிருந்த ஒருவர் எந்திரத்தில் கை வைத்த படி வசந்தாவை நகரும் படி கூறினார். தொடர்ந்து ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த வசந்தாவின் ஏ.டி.எம். கார்டை எடுத்து விட்டு டம்மியான ஒரு ஏ.டி.எம். கார்டை வசந்தாவிடம் கொடுத்தார். அதனை கவனிக்காத வசந்தா அந்த கார்டையும், 500 ரூபாயையும் வாங்கி கொண்டு வீட்டிற்கு சென்றார்.
சற்று நேரத்தில் வசந்தாவின் வங்கி கணக்கில் இணைக்கப்பட்ட அவரது மகள் நிஷாந்தியின் செல்போனுக்கு அடுத்தடுத்து 2 லட்சம் ரூபாய் எடுத்ததற்கான குறுந்தகவல் வந்தது. உடனே வசந்தாவை தொடர்பு கொண்டு மகள் கேட்ட போது 500 ரூபாய் மட்டுமே எடுத்ததாக கூறினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த நிசாந்தி மற்றும் வசந்தா ஆகிய 2 பேரும் அழகாபுரம் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தனர். அப்போது வங்கி கணக்கை முடக்கி விட்டோம், நாளை வந்து புகார் கொடுங்கள் என்று கூறி அனுப்பினர். ஆனால் நேற்று காலை 8 மணிக்கு மீண்டும் அடுத்தடுத்து ரூ. 40 ஆயிரம் பணம் எடுத்ததாக குறுந்தகவல் வந்தது.
இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த வசந்தா கண்ணீர் மல்க கதறிய படி அழகாபுரம் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தார். புகாரை வாங்கிய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்திய போது, ஏ.டி.எம். மையத்தில் வசந்தா பணம் எடுக்க முயன்ற போது பின்னால் நின்றிருந்த நபர் ஏ.டி.எம்.கார்டின் ரகசிய குறியீட்டு எண்ணை பார்த்துள்ளார்.
தொடர்ந்து அவரது வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுக்க திட்டமிட்ட அந்த நபர் டம்மி ஏ.டி.எம். கார்டை வசந்தாவிடம் கொடுத்து விட்டு அவரது கார்டை எடுத்து கொண்டார்.
பின்னர் அந்த ஏ.டி.எம். கார்டு மூலம் பணத்தை எடுத்தார். வை-பை கார்டு என்பதால் ஒரே நாளில் அதிக அளவில் பணத்தை அந்த நபர் எடுத்ததும் தெரிய வந்தது. இதையடுத்து ஏ.டி.எம். கார்டை நூதன முறையில் வாங்கி பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து சென்ற நபரை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளார்.
தொடர்ந்து அவர் பணம் எடுத்த ஏ.டி.எம். எந்திரத்தில் உள்ள கேமரா பதிவுகளை ஆய்வு செய்து அந்த நபரை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளனர். விரைவில் அவர் சிக்குவார் என்று போலீசார் நம்பிக்கை தெரிவித்தனர்.
- கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கோவில் நிர்வாகம் எங்கு நெய் வாங்கியது எனவும், பஞ்சாமிர்தத்தின் உண்மை தன்மை குறித்து விளக்க வேண்டும் எனவும் செய்தி பரப்பினர்.
- பழனி கோவில் பஞ்சாமிர்தத்திற்கு ஆவின் நிர்வாகத்திடம் இருந்தே நெய் சப்ளை செய்யப்படுவதாக தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
பழனி:
திருப்பதியில் தயாரிக்கப்படும் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்பு கலக்கப்பட்டதாக எழுந்த புகார் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து லட்டு தயாரிக்க பயன்படுத்திய பொருட்களின் தரத்தை ஆய்வு செய்ய கோவில் நிர்வாகம் உத்தரவிட்டது. அதன்படி திருப்பதி தேவஸ்தானத்துக்கு திண்டுக்கல்லில் இயங்கி வரும் ஏ.ஆர். டெய்ரி நிறுவனம் சார்பில் நெய் அனுப்பப்பட்டு வந்தது தெரிய வந்தது.
அந்த நெய்யில் கொழுப்பு இருப்பதாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து தங்களது நிறுவனம் சார்பில் அனுப்பிய நெய்யில் எந்த குறைபாடும் இல்லை என மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த நிறுவனத்தில் திண்டுக்கல் மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளர் அனிதா தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
நிறுவனத்தில் பால் பொருட்கள் தயாரிக்கப்படும்போது வெளியேறும் கழிவு நீரை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். இதனை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆய்வகத்தில் ஆய்வு செய்து அதில் உள்ள பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்யப்படும் என தெரிவித்தனர். குறைபாடு இருப்பது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.
நேற்று மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் இன்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நெய் தயாரிக்கும் நிறுவனத்தில் ஆய்வுக்கு வந்தனர். அவர்கள் நெய் தயாரிக்க பயன்படுத்தப்படும் பால் மற்றும் மற்ற பொருட்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். ஏற்கனவே ஆலையின் உரிமையாளர் தங்கள் நிறுவனத்தில் தரமான பொருட்கள் மட்டுமே உற்பத்தி செய்வதாகவும், இது குறித்து தரக்கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் வழங்கிய சான்று உள்ளதாகவும் தெரிவித்த நிலையில் அடுத்தடுத்து சோதனை நடைபெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே பழனி கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பஞ்சாமிர்தத்திலும் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தில் இருந்து வாங்கிய நெய் பயன்படுத்தப்பட்டது என்றும், எனவே இது குறித்து கோவில் நிர்வாகம் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என சமூக வலைதளங்களில் செய்தி பரப்பப்பட்டது. கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கோவில் நிர்வாகம் எங்கு நெய் வாங்கியது எனவும், பஞ்சாமிர்தத்தின் உண்மை தன்மை குறித்து விளக்க வேண்டும் எனவும் செய்தி பரப்பினர்.
ஆனால் பழனி கோவில் பஞ்சாமிர்தத்திற்கு ஆவின் நிர்வாகத்திடம் இருந்தே நெய் சப்ளை செய்யப்படுவதாக தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதன்பின்பும் சமூக வலைதளங்களில் பொய்யான தகவலை பரப்பிய பா.ஜ.க.மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் பி.செல்வம் மீது கோவில் தேவஸ்தான நிர்வாகி பாண்டியராஜன் அடிவாரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆற்றல் மிகு இளைஞர்களின் பங்களிப்பை அரசியலில் அதிகரிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
- உடல் உறுப்புகள் தானத்தில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதலிடம் வகிக்கிறது.
சென்னை:
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் பொதுக்குழு கூட்டம் சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் நிலைப்பாடு, கூட்டணி மற்றும் கட்சியை பலப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
தன்னுடைய துறையில் அளப்பரிய சாதனைகளைச் செய்த தன்னிகரற்ற தமிழ் ஆளுமையாகவும் கடந்த காலத்தை அறிந்து, நிகழ்காலத்தைப் புரிந்து எதிர்காலத்தைக் கணித்துச் செயலாற்றுகிற முன்னோடியான கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமைப் பொறுப்பை மீண்டும் ஏற்று, இந்த இயக்கத்தை வழிநடத்த வேண்டும் என்று கூட்டத்தில் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.
கூட்டத்தில் மேலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
கட்சியை மேலும் வலுப்படுத்தும் விதமாக, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் வருகிற ஜூன் 25-ந்தேதிக்குள் குறைந்தது 5 ஆயிரம் புதிய உறுப்பினர்களைச் சேர்க்க உறுப்பினர் சேர்க்கை முகாம்களை நடத்த வேண்டும். இந்தப் பணிகளில் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் முழுமூச்சுடன் ஈடுபட வேண்டும்.
அனைத்து வாக்குச்சாவடிகளுக்கு, தலா ஒரு பூத்துக்கு குறைந்தபட்சம் 5 பேர் நியமிக்கப்பட வேண்டும்.
பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. இந்தக் குற்றங்களின் ஆணி வேரைக் கண்டறிந்து களையவும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அறிஞர்கள், சமூக சேவகர்கள், வல்லுனர்களை உள்ளடக்கிய ஒரு குழுவை மக்கள் நீதி மய்யம் உருவாக்கி விரிவான ஆய்வுகள் செய்து அதன் அறிக்கையை, பரிந்துரைகளை தமிழ்நாடு மற்றும் மத்திய அரசுக்கு சமர்ப்பிப்பது.
போதை வஸ்துக்களின் புழக்கமற்ற தமிழ்நாட்டை உருவாக்கும் அரசின் முயற்சிகளுக்கு எங்கள் தலைவர் கமல்ஹாசனும், மக்கள் நீதி மய்யம் கட்சியும் என்றும் உறுதுணையாக நிற்கும்.
சாதி வாரியான கணக்கெடுப்பு இந்தியா முழுவதிலும் உடனடியாக தொடங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.
தமிழ்நாட்டுக்கு உரிய நிதிப்பகிர்வை அரசியலாக்கி, விவாதப்பொருளாக்கி தமிழ்நாட்டு மக்களைத் தண்டிக்கும் போக்கை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும்.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நிகழ்த்தும் கொடூர தாக்குதல்களையும், அத்துமீறல்களையும் மக்கள் நீதி மய்யம் வன்மையாகக் கண்டிக்கிறது.
ஏற்கனவே சிறைபட்டிருக்கும் தமிழக மீனவர்களையும், அவர்களது உடமைகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். அதற்கேற்றபடி இரு நாடுகளிடையே புதிய ஒப்பந்தங்களை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும்.
மக்கள்தொகையின் அடிப்படையில் பாராளுமன்றத் தொகுதிகளை உருவாக்குவது, தங்களது மாநிலங்களின் பிறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதியாகும்.
பெரும்பாலான அரசியல் கட்சிகள் இந்த திட்டத்தை எதிர்க்கும் சூழலில், ஒருமித்த கருத்தின்றி மக்களவைத் தொகுதி மறுசீரமைப்புத் திட்டத்தை நிறைவேற்ற முயற்சிக்கக் கூடாது.
ஒரே நாடு ஒரே தேர்தல் நாட்டிற்கு ஆபத்தானது. ஒரே நாடு ஒரே தேர்தல் எனும் முயற்சி கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது. மாண்புமிக்க ஜனநாயகத்தை மண் கொண்டு புதைக்கும் செயல்.
தேசத்தின் ஜனநாயகத்தை ஒற்றை கட்சியின் ஆட்சிக்குக் கீழ் கொண்டு வரும் இந்த முயற்சியை பன்மைத்துவத்தின் மீது நம்பிக்கைக் கொண்ட ஜனநாயகத்தின் காவல் வீரர்களான மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
ஆற்றல் மிகு இளைஞர்களின் பங்களிப்பை அரசியலில் அதிகரிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
தேர்தலில் போட்டியிடுவதற்கான வயது வரம்பு 25 என்பது சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியபோது தீர்மானிக்கப்பட்ட ஒன்று. இன்றைய கால மாற்றத்தையும், கல்வி வளர்ச்சியையும் கவனத்தில் கொண்டு, இளைஞர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கான வயது வரம்பை 21-ஆக குறைக்க மத்திய அரசு உரிய சட்டதிருத்தம் மேற்கொள்ள வேண்டும்.
உடல் உறுப்புகள் தானத்தில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதலிடம் வகிக்கிறது. அதற்காக தமிழ்நாடு அரசையும், தமிழக மக்களையும் பாராட்ட மக்கள் நீதி மய்யம் கடமைப்பட்டுள்ளது.
கமல்ஹாசன் வழிகாட்டுதலின் படி மக்கள் நீதி மய்யமும், மோகன் பவுண்டேசனும் இணைந்து நடத்திய உடல் உறுப்புகள் தான முகாமில் 1081 பேர் தங்களைப் பதிவு செய்துள்ளனர். பத்தாயிரம் பேர் என்ற இலக்குடன் இந்த முகாம் தொடர்ந்து நடைபெறும் என்பது உள்பட 16 தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன.
- அ.தி.மு.க. பகுதி செயலாளர் மூர்த்தி 5-வது குற்றவாளியாகவும், அவரது மனைவி சுதா 6-வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
- அரசு அதிகாரிகள் சூழ்ச்சி செய்து பட்டா மாறுதல் உள்ளிட்ட குற்றச் செயல்களுக்கு உடந்தையாக இருந்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேளச்சேரி:
அ.தி.மு.க. வேளச்சேரி பகுதி செயலாளராக இருப்பவர் எம்.ஏ.மூர்த்தி, வேளச்சேரி ஆண்டாள் நகர் விரிவாக்கம் 3-வது தெருவில் வசித்துவரும் இவரும், அவரது மனைவி சுதாவும், 1200 சதுர அடி மதிப்பிலான அரசு நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்து விட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு தமிழக அரசின் வருவாய் துறை கட்டுப்பாட்டில் இருந்த 1200 சதுர அடி நிலத்தை 600 சதுர அடியாக இரண்டாக பிரித்து தாசில்தார் நில அளவையாளர், சர்வேயர் ஆகியோரது துணையுடன் நில அபகரிப்பு நடைபெற்றது தெரிய வந்தது.
இது தொடர்பாக கோர்ட்டு உத்தரவின் பேரில் சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசார் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் மூர்த்தி, அவரது மனைவி உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் வேளச்சேரி தாலுகா அலுவலகத்தில் பணிபுரிந்த சிறப்பு தாசில்தாரான மணிசேகர் முதலாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். அதே அலுவலகத்தில் சர்வே துணை ஆய்வாளராக பணிபுரிந்த லோகநாதன் 2-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
இவர் கோவை மாவட்டம் சூலூரை சேர்ந்தவர். 3-வது குற்றவாளியாக துணை ஆய்வாளராக பணிபுரிந்த சந்தோஷ் குமார் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. மேலும் வேளச்சேரி தாலுகா அலுவலகத்தில் முதுநிலை வரைவாளராக பணிரிபுரிந்த பெண் அதிகாரியான ஸ்ரீதேவி மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது. இவர் 4-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
அ.தி.மு.க. பகுதி செயலாளர் மூர்த்தி 5-வது குற்றவாளியாகவும், அவரது மனைவி சுதா 6-வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலமானது அரசால் கையகப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டு இருந்த நிலமாகும். அந்த இடத்தை பாதுகாக்க வேண்டிய அதிகாரிகள் நில அபகரிப்புக்கு துணை போய் இருப்பது தெரிய வந்ததைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து இருக்கிறார்கள்.
அரசு அதிகாரிகள் சூழ்ச்சி செய்து பட்டா மாறுதல் உள்ளிட்ட குற்றச் செயல்களுக்கு உடந்தையாக இருந்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாறுதல் நடவடிக்கைகளை 3 மணி நேரத்திற்குள் அரசு அதிகாரி முடித்து கொடுத்து அதற்கு லஞ்சம் பெற்றிருப்பதும் தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் மூர்த்தியும், அவரது மனைவியும் அரசு நிலத்தை சட்ட விரோதமாக அபகரிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் செயல்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இதையடுத்து வேளச்சேரியில் உள்ள மூர்த்தியின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இன்னொரு இடத்திலும் சோதனை நடைபெற்றது. இதே போன்று மேற்கு மாம்பலம், கோவை உள்பட 5 இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
- சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து இடிபாடுக்குள் சிக்கியவர்களை மீட்டனர்.
- புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அய்யம்பேட்டை:
சென்னையில் இருந்து தஞ்சாவூர் நோக்கி நேற்றிரவு அரசு விரைவு பஸ் புறப்பட்டது. இந்த பஸ்சில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். பஸ்சை அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த பழனிவேல் ஓட்டினார். கண்டக்டராக தஞ்சை ஜெபமாலைபுரத்தை சேர்ந்த வினோத் பணியில் இருந்தார்.
இந்த பஸ் இன்று காலை தஞ்சை அருகே அய்யம்பேட்டையில் வந்து கொண்டிருந்தது. அப்போது பைபாஸ் சாலை திருப்பத்தில் பஸ்சை டிரைவர் திருப்ப முயன்றார். இதில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரம் கவிழ்ந்தது. பயணிகள் காப்பாறுங்கள்.. காப்பாற்றுங்கள்... என்று கூக்குரலிட்டனர்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து இடிபாடுக்குள் சிக்கியவர்களை மீட்டனர். இந்த விபத்தில் டிரைவர் பழனிவேல், கண்டக்டர் வினோத், தஞ்சை காசவளநாடுபுதூர் தொழிலாளி ராஜசேகர் (வயது 34) உள்பட 8 பேர் பலத்த காயமடைந்தனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த அய்யம்பேட்டை போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மதியம் ராஜசேகர் இறந்தார். தொடர்ந்து 7 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சுரங்கம் தொடர்பாக அக்டோபர் 1-ந்தேதி கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுகிறது.
- மக்களின் அச்சத்தை போக்க வேண்டும்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி அருகே அணுக்கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக கிள்ளியூர் பகுதியில் ௫ கிராமங்களை உள்ளடக்கிய 1,144 ஹெக்டேர் பரப்பில் IREL நிறுவனம் அணுக்கனிம சுரங்கம் அமைக்க முடிவு செய்துள்ளது.
இதனிடையே சுரங்கம் தொடர்பாக அக்டோபர் 1-ந்தேதி நடைபெறும் கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்டு பொதுமக்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், எந்த வளர்ச்சி திட்டமும் கொண்டு வரும் முன்னர் மக்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், மக்களின் அச்சத்தை போக்க வேண்டும். அது போன்று மக்களின் கருத்துக்கு மதிப்பளித்து அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்காத வண்ணம் பாதுகாக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் மற்றும் IREL நிர்வாகத்தையும் கேட்டுக்கொண்டுள்ளார்.
- பாரதிய ஜனதாவின் உறுப்பினர் சேர்க்கை பிரசாரம் தொடர்ந்து வரலாறு படைத்து வருகிறது.
- உறுப்பினர் பிரசாரத்துக்கு மக்களின் முழு ஆதரவு உள்ளது.
பாரதிய ஜனதாவில் உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. பாரதிய ஜனதா அறிவித்துள்ள செல்போன் எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் உறுப்பினராக சேர்க்கப்படுகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 18 நாட்களில் 4 கோடி பேர் பாரதிய ஜனதாவில் இணைந்துள்ளனர். இதுகுறித்து பாரதிய ஜனதா கட்சி தனது எக்ஸ் தள பக்கத்தில், பாரதிய ஜனதாவில் 4 கோடி உறுப்பினர்கள் இணைந்துள்ளனர். அதன் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருக்கிறது. பாரதிய ஜனதா மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளது என கூறியுள்ளது.
மேலும் பாரதிய ஜனதா பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே கூறும்போது, பாரதிய ஜனதாவின் உறுப்பினர் சேர்க்கை பிரசாரம் தொடர்ந்து வரலாறு படைத்து வருகிறது. வெறும் 18 நாட்களில் 4 கோடி உறுப்பினர்களை தாண்டியது. உறுப்பினர் பிரசாரத்துக்கு மக்களின் முழு ஆதரவு உள்ளது. இதற்கு இந்த 4 கோடி உறுப்பினர்களே சாட்சி என்றார்.
- மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து வந்த கணேஷ் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார்.
- விபத்தில் இறந்த 2 பேரின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர்.
ராயக்கோட்டை:
கெலமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது தனியார் நிறுவன வாகனம் மோதி ஊராட்சி மன்ற கவுன்சிலரின் கணவர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். தகவலறிந்த பொதுமக்கள் 10 பஸ்களை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள போடிச்சிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் (வயது 44). கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி கலாவதி. இவர் போடிச்சிபள்ளி ஊராட்சி மன்ற கவுன்சிலராக உள்ளார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
அதே பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ் (55). நெசவு தொழிலாளி. இவருக்கு வரலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
நண்பர்களான குமாரும், கணேசும் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் கெலமங்கலத்தில் இருந்து போடிச்சிப்பள்ளி நோக்கி சென்றனர்.
ஓசூரில் இருந்து தனியார் நிறுவனம் தனது தொழிலாளர்களை ஏற்றி 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து கொண்டிருந்தது.
அப்போது குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் கெலமங்கலம் கூட்ரோடு வழியாக வந்தபோது எதிரே ஓசூரில் இருந்து வந்த தனியார் நிறுவன வாகனம் ஒன்று அவர்கள் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து வந்த கணேஷ் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார்.
மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த தனியார் நிறுவனத்தின் வாகனத்தின் முன் சக்கரத்தில் சிக்கி சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டார். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதற்கிடையே காயமடைந்த கணேசை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கெலமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கணேசை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தகவல் தெரிவித்தனர்.
இந்த விபத்து சம்பவம் அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவியதால், விபத்தில் இறந்த 2 பேரின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர்.
அப்போது அவர்கள் விபத்தை ஏற்படுத்திய தனியாக நிறுவனத்திற்கு சொந்தமான வாகனத்தையும், அதனை தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக வந்த அதே நிறுவனத்திற்கு சொந்தமான 9 வாகனங்களையும் கட்டையாலும், கற்களாலும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இதனால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த ஓசூர் சப்-கலெக்டர் பிரியங்கா, கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை, கிருஷ்ணகிரி ஏ.டி.எஸ்.பி. சங்கர், தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி, ராயக்கோட்டை இன்ஸ்பெக்டர் பெரியதம்பி, மற்றும் ஏராளமான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அங்கு நிலவி வந்த பதட்டமான சூழ்நிலை தவிர்க்க மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
அப்போது கிராம மக்கள் கெலமங்கலம் கூட்டு ரோடு பகுதியில் சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு சாலையில் வேகத்தடை இல்லாததும், டாடா தனியார் கம்பெனி பேருந்துகள் அதிவேகமாக செல்வதும் இந்த விபத்துக்கு காரணம் என குற்றம் சாட்டினர். மேலும் இந்த கம்பெனி பஸ்கள் இதுபோன்று ஏராளமான விபத்துகளை ஏற்படுத்தி பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், வேகத்தடை அமைக்க வேண்டும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். போலீசார் மற்றும் ஓசூர் சப்-கலெக்டர் பிரியங்கா ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தனர். இதனையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பின்னர் விபத்தில் சிக்கிய குமாரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஊழியர்கள் பத்திரமாக தங்க வைக்கப்பட்டனர்
முன்னதாக தனியார் நிறுவன வாகனங்களில் வந்த ஊழியர்களை போலீசார் பத்திரமாக மீட்டு அந்த பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபம் தங்க வைத்தனர். இதைத்தொடர்ந்து அவர்களை மாற்று பஸ்சில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தால் கெலமங்கலம் கூட்ரோடு பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து கெலமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க போடிச்சிபள்ளி முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர்.






