என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • ஒப்பந்தப் பணியாளர்களாக பணியாற்றி வரும் பலர் மிகக் குறைந்த ஊதியம் பெறுபவர்கள்.
    • பணம் இல்லை என்று பள்ளிகளின் செயல்பாடுகள் முடங்கினால் கல்வித்துறையில் அதை விட பேரவலம் இருக்க முடியாது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறையின் ஓர் அங்கமாக திகழும் ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தில் பணியாற்றும் நிரந்தர ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் 15,000 பேர், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 17,500 பேர் என மொத்தம் 32,500 பேருக்கு செப்டம்பர் மாதத்திற்கான ஊதியம் இன்று வரை வழங்கப்படவில்லை. கல்வித்துறை பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் செய்யப்படும் தாமதமும், காட்டப்படும் அலட்சியமும் கண்டிக்கத்தக்கவை.

    ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் 2024-25ஆம் கல்வியாண்டுக்கான முதல் காலாண்டில் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய ரூ.573 கோடியை மத்திய அரசு இன்று வரை வழங்காதது தான் ஊதியம் வழங்கப்படாததற்கு காரணம் என்று கூறப்படுகிறது. ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய நிதியை வழங்குவதற்கு மத்திய அரசு விதிக்கும் கட்டுப்பாடுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.

    கல்வி வளர்ச்சிக்காக வழங்கப்பட வேண்டிய நிதியே கல்வித்துறை முடங்குவதற்கு காரணமாக அமைந்து விடக் கூடாது. கல்வித்துறைக்கு நிதி வழங்குவதில் மத்திய அரசு காட்டும் பிடிவாதம் நியாயமானதல்ல.

    அதே நேரத்தில் மத்திய அரசின் நிதி வரவில்லை என்பதையே காரணமாகக் காட்டி, ஒருங்கிணைந்த கல்வித் திட்ட ஆசிரியர்களுக்கும், பிற பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்குவதை தமிழக அரசு நிறுத்தி வைத்திருப்பது மனிதநேய மற்ற செயலாகும்.

    மத்திய அரசிடமிருந்து நிதி வராவிட்டாலும் கூட, தமிழக அரசு நினைத்திருந்தால் தன்னிடமுள்ள பிற துறைகளுக்கான நிதியை விதிகளுக்கு உட்பட்டு பள்ளிக்கல்வித்துறைக்கு மாற்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊதியம் வழங்கியிருக்க முடியும். ஆண்டுக்கு ரூ.3.5 லட்சம் கோடிக்கு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் தமிழக அரசுக்கு ஒருங்கிணைந்த கல்வித் திட்டப் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க ரூ.25 கோடியை ஏற்பாடு செய்வது இயலாத ஒன்றல்ல.

    ஆனாலும், ஒருங்கிணைந்த கல்வித்திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் வழங்காமல் அவர்களை தவிக்கவிட்டிருப்பதை வைத்துப் பார்க்கும் போது, இந்த சிக்கலைத் தீர்ப்பதற்கு பதிலாக, பெரிதுபடுத்தி அரசியல் லாபம் தேடவே தமிழக அரசு முயல்கிறது என்பது உறுதியாகிறது.

    இந்தத் திட்டத்தில் ஒப்பந்தப் பணியாளர்களாக பணியாற்றி வரும் பலர் மிகக் குறைந்த ஊதியம் பெறுபவர்கள். மாதத்தின் இறுதி நாட்களையே கடன் வாங்கிக் கழிக்கும் அவர்களால் மாதத்தின் முதல் நாளில் ஊதியம் வராமல் வாழவே முடியாது. அவர்களின் துயரத்தை மத்திய மாநில அரசுகள் புரிந்து கொள்ள வேண்டும்.

    ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி வராததால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி காரணமாக , தமிழ்நாட்டில் 400-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் தொழில் பயிற்றுநர்கள் இன்னும் நியமிக்கப்படவில்லை. இப்போது பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கும், பிற பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்கப்படாததன் மூலம் பள்ளிக்கல்வித் திட்டத்தின் செயல்பாடுகளே முடங்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

    பணம் இல்லை என்று பள்ளிகளின் செயல்பாடுகள் முடங்கினால் கல்வித்துறையில் அதை விட பேரவலம் இருக்க முடியாது.

    நடப்பாண்டின் இரண்டாவது காலாண்டும் முடிவடைந்து விட்ட நிலையில், மத்திய அரசு இனியும் தாமதிக்காமல் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்படி வழங்கப்பட வேண்டிய நிதியை தமிழகத்திற்கு வழங்க வேண்டும். தமிழக அரசும் அந்த நிதிக்காக காத்திருக்காமல் சொந்த நிதியில் ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அன்பில் மகேஷ் பொய்யா மொழிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது.
    • இன்று டிஸ்சார்ஜ் ஆவார் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

    சென்னை:

    தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சட்டமன்ற தொகுதி வாரியாக சென்று பள்ளிக் கூடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

    அந்த வகையில் காஞ்சீபுரம், உத்தரமேரூர் பகுதியில் நேற்று பள்ளி கட்டிடங்கள், நூலகங்கள் குறித்து கேட்டறிந்து நேரில் சென்று பார்வையிட்டார்.

    ஆய்வுகளை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய அமைச்சர் அன்பில் மகேஷுக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது . இதனால் அமைந்தகரையில் உள்ள பில்ரோத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் அவரது உடல்நிலை சரியானது. இதைத் தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று டிஸ்சார்ஜ் ஆவார் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

    • தங்கம் விலை அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
    • இன்று அதிரடியாக ரூ.56,800 ஆக உயர்ந்தது.

    சென்னை:

    தங்கம் விலை சமீபகாலமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஜூலை மாதம் மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால் தங்கத்தின் விலை குறைந்தது.

    அதன் பிறகு 2 மாதங்களுக்கு பிறகு தங்கம் விலை அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

    கடந்த 16-ந்தேதி தங்கம் விலை ஒரு பவுன் ரூ 55 ஆயிரத்தை தாண்டியது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் கடந்த 24-ந்தேதி ரூ.56 ஆயிரத்தை தொட்டது. அதன் பிறகும் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது.

    கடந்த 29-ந்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.56,760-க்கு விற்கப்பட்டது. அதன்பிறகு கடந்த 2 நாட்களாக தங்கம் விலை குறைந்திருந்தது. நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.56,400-க்கு விற்கப்பட்டது.

    இந்த நிலையில் தங்கம் விலை இன்று அதிரடியாக ரூ.56,800 ஆக உயர்ந்தது. ஒரே நாளில் பவுனுக்கு ரூ.400 அதிகரித்துள்ளது.

    நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.7,050-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ரூ.7,100-க்கு விற்கப்படுகிறது.

    அதே நேரத்தில் வெள்ளி விலையில் கடந்த 4 நாட்களாக மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.101-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 1000-க்கு விற்பனையாகிறது.

    • இலங்கை அரசின் அடக்குமுறையை கண்டித்து முற்றுகை போராட்டம்.
    • தமிழக மீனவ அமைப்புகளுக்கும் அழைப்பு.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசின் அடக்குமுறையை கண்டித்து பா.மக. சார்பில் வருகிற 8-ந்தேதி இலங்கை தூதரகத்தை முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது.

    தொடர்ந்து வங்க கடலில் மீன்பிடிக்க செல்லக்கூடிய தமிழக மீனவர்களை இலங்கை படை தொடர்ந்து தாக்கி வருவதாலும், அவர்களுடை உடைமைகளை அதாவது வலைகளை சேதப்படுத்துவது, கைது செய்து சித்ரவதை செய்வது போன்ற அத்துமீறலில் ஈடுபட்டு வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    மீன்பிடிக்கும் உரிமையை மதிக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள மீனவர்களை இலங்கை கடற்பட்டையினர் மதிக்காமல் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழ்நாட்டு மீனவர்களின் உரிமையை பாதுகாக்கும் வகையில் பா.ம.க. சார்பில் மிகப்பெரிய முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளது.

    இந்த போராட்டத்தில் பா.ம.க. நிர்வாகிகள் மற்றும் தமிழக மீனவ அமைப்புகளுக்கும் இலங்கை தூதரக முற்றுகை போராட்டத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மகாத்மா காந்தி 156-வது பிறந்த நாள்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை.

    சென்னை:

    மகாத்மா காந்தியின் 156-வது பிறந்த நாளை முன்னிட்டு கிண்டி காந்தி மண்டபத்தில் உள்ள காந்தி சிலை மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது.

    கவர்னர் ஆர்.என்.ரவி காந்தி மண்டபம் சென்று அங்குள்ள சிலைக்கு மாலை அணிவித்தும் காந்தியின் உருவ படத்துக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    அவருடன் மத்திய மந்திரி எல்.முருகன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் காந்தி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

    தமிழக அரசின் சார்பில் எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியக வளாகத்தில் உள்ள காந்தியின் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. சிலைக்கு அருகே காந்தியின் உருவப்படமும் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று காந்தியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினாார்.

    அவருடன் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், ராஜ கண்ணப்பன், மா.சுப்பிர மணியன், பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, தலைமைச் செயலாளர் முருகானந்தம், தமிழ்ச்சி தங்கபாண்டியன் எம்.பி., எம்.ஏல்.ஏ.க்கள் பரந்தாமன், ஏ.எம்.வி.பிரபாகரராஜா, முன்னாள் எம்.எல்.ஏ., ப.ரங்கநாதன் மற்றும் செய்தித் துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று காந்தி படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

    பின்னர் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியிலும் பங்கேற்றனர்.

    • புனித நீராடி முன்னேர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.
    • அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர்.

    ஈரோடு:

    புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையை மகாளய அமாவாசையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி நீர் நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி முன்னேர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

    ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை சிறந்த பரிகார தலமாக விளங்கி வருகிறது. இதனால் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கூடுதுறைக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து ஆற்றில் புனித நீராடி சங்கமேஸ்வரரை வழிபட்டு வருகிறார்கள்.

    மேலும் கர்நா டகா, ஆந்திரா, தெலு ங்கானா, கேரளா மற்றும் வட மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் அதிகளவில் வந்து நீராடி வழிபட்டு செல்கிறார்கள்.

    இந்த நிலையில் புரட்டாசி மாத மகாளய அமாவாசை யான இன்று ஏராளமான பொதுமக்கள் பவானி கூடு துறைக்கு வந்திருந்தனர். அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர்.

    அவர்கள் ஆற்றில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி, எள்ளும் தண்ணியும் விடு தல், பிண்டம் விடுதல், பித்ரு பூஜை, தர்ப்பணம் போன்ற பரிகாரங்களை செய்தனர். தொடர்ந்து பொது மக்கள் சங்கமேஸ்வரரை தரிசனம் செய்தனர்.

    நேரம் செல்ல செல்ல பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. ஈரோடு, சேலம், நாமக்கல், கோவை, சென்னை, கரூர் உள்பட பல்வேறு மாவட்ட பக்தர்கள் மற்றும் வெளி மாநில பக்தர்கள் என லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுதுறையில் குவிந்து புனித நீராடினர்.

    இதையொட்டி ஆண்கள் மற்றும் பெண்கள் குளிப்பதற்கு தனி, தனியாக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கோவில் வளாகத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டு பொது மக்கள் வரிசையாக சென்று வழிபட்டனர். இதனால் பவானி நகரம் முழுவதும் பக்தர்களின் கூட்டமாக காணப்பட்டது.

    அசம்பாவித சம்பவங்கள் நடை பெறாமல் இருக்கும் பொருட்டு கோவில் நிர்வா கத்தின் மூலம் பல்வேறு இடங்களில் 72 கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்த ப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    கோவிலுக்கு செல்லும் நுழைவு வாயில் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு பொதுமக்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் புனித நீராடும் பகுதியில் போலீசார் ஒலி பெருக்கி மூலம் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து வலியுறுத்தினர்.

    தீயணைப்பு வீரர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் படகுகள் மூலம் ஆற்றில் சென்று கண்காணித்து ஆழமான பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி வருகிறார்கள்.

    இதனால் பவானி நகரம் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. ஆயிரக்கணக்கான வாகனங்களில் பொதுமக்கள் வந்ததால் கோவில் வளாகத்தில் வாக னங்கள் அணிவகுத்தன.

    இதையொட்டி பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகர் தலைமையில் 300-க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் நகரம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகிறார்கள்.


    இதே போல் கொடுமுடி காவிரி ஆற்றில் இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். தொடர்ந்து அவர்கள் மகு டேஸ்வரரை வழிபட்டனர். இதேபோல் கருங்கல்பாளையம் காவிரி ஆற்றிலும் பக்த ர்கள் பலர் திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர்.

    அம்மாபேட்டை மீனா ட்சி உடனமர் சொக்கநாதர் கோவில் காவிரி ஆற்றில் இன்று காலை முதலே பக்த ர்கள் கூட்டம் அலைமோ தியது. அவர்கள் ஆற்றில் புனித நீராடி முன்னோர்க ளுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து பரிகாரம் செய்தனர். 

    • வாகனங்கள் இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டன.
    • சுற்றுலாப் பயணிகள் வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல்

    ஊட்டி:

    சர்வதேச சுற்றுலா தலமான நீலகிரிக்கு ஒவ்வொரு ஆண்டும் 30 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.

    ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக சுற்றுலாப் பயணிகள் வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் தங்குமிடம், கழிப்பறை உள்பட பல்வேறு அடிப்படை விஷயங்களும் சுற்றுலாப் பயணிகளுக்கு கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.

    இதனால் சுற்றுலாப் பயணிகள் அனைத்து சுற்றுலா தலங்களையும் பார்க்க முடியாமல் அதிருப்தி அடைகின்றனர். உள்ளூர் மக்களும் சரியான நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.

    இதனை கருத்தில் கொண்டு சென்னை உயர்நீதிமன்றம் நீலகிரியில் சுற்றுலாப் பயணிகள் வருகையில் கட்டுப்பாடுகளை கொண்டு வருவதற்காக முதல்கட்டமாக இ-பாஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

    இதன்படி கடந்த மே மாதம் 7-ந்தேதி முதல் நீலகிரிக்குள் வரும் வாகனங்கள் இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டன.

    இதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டு உள்ளது. இதற்காக https:/;/epass.tnega.org என்ற பிரத்யேக இணையதளம் வெளியிடப்பட்டு அதன்மூலம் இ-பாஸ் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    மேலும் கடந்த செப்டம்பர் 30-ந்தேதிவரை இ-பாஸ் எடுத்து வர கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. தொடர்ந்து தற்போது மறுஅறிவிப்பு வரும்வரை நீலகிரியில் இ-பாஸ் நடைமுறை தொடர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் லட்சுமிபவ்யா தண்ணீரு கூறுகையில், நீலகிரி மாவட்டத்தை பொருத்தவரை உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் மறுஅறிவிப்பு வரும்வரை இ-பாஸ் நடைமுறை தொடரும்.

    இ-பாஸ் நடைமுறைப் படுத்தப்பட்டதில் இருந்து கடந்த 5 மாதங்களில் மட்டும் 2 3/4 லட்சம் வாகனங்களில் 13 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.

    • பூரண நலம்பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று வழிபட்டனர்.
    • ரசிகர் நற்பணி மன்றத்தின் சார்பாக சிறப்பு பூஜைகள்.

    தூத்துக்குடி:

    நடிகர் ரஜினிகாந்திற்கு திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவு ஏற்பட்டு அதன் காரணமாக சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

    இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலகினர், ரசிகர்கள் என ஏராளமானோர் நடிகர் ரஜினிகாந்த் பூரண நலம்பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று வாழ்த்தி வருகின்றனர்.

    இந்நிலையில் ரஜினிகாந்த் உடல் நலம் பெற வேண்டி தூத்துக்குடி பாகம்பிரியாள்-சங்கர ராமேஸ்வரர் கோவிலில் தூத்துக்குடி மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தின் சார்பாக நிர்வாகிகள் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர்.

    மேலும் சிவன் கோவில் சன்னதியில் உள்ள மூலவர், சண்முகர், பிள்ளையார், நடராஜர் தளங்களிலும் நடிகர் ரஜினிகாந்த் பூரண நலம்பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று வழிபட்டனர்.

    இதேபோல் கிறிஸ்தவ தேவாலயம் மற்றும் பள்ளி வாசல் ஆகியவைகளுக்கு சென்றும் அவர்கள் பிரார்த்தனை செய்தனர்.

    நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தின் தலைமை நிர்வாகிகள் விஜய் ஆனந்த், ஜெயபால், கண்ணன், ரமேஸ் கார்த்திகேயன், மாரிமுத்து, புதிய துறைமுகம் லெட்சுமணன், வெலிங்டன், உள்ளிட்ட ஏராளமான வர்கள் கலந்து கொண்டனர். 

    • தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கமாக இருந்து வருகிறது.
    • பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடினர்.

    மண்டபம்:

    அகில இந்திய புண்ணிய ஸ்தலங்களில் ஒன்றாகவும், காசிக்கு நிகரானதாகவும் கருதப்படும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திகோவில் பல்வேறு வகைகளில் சிறப்பு வாய்ந்ததாகும்.

    ஆடி, தை மற்றும் புரட்டாசி அமா வாசை காலங்களில் பல்லாயிரக்கணக்கானோர் வருகை தந்து தம்முடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கமாக இருந்து வருகிறது.

    ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசையை விட புரட்டாசி மாதம் வரக்கூடிய மகாளய பட்சம் அமாவாசையில் நம் முன்னோர்கள் மட்டுமல்லாது, மறைந்த நமது நண்பர்கள், குருமார்கள் மற்றும் வளர்ப்பு பிரா ணிகள் ஆகியோருக்கும் திதி கொடுத்து பிதுர் பூஜை செய்து வழிபட உகந்த நாளாக கருதப்படுகிறது.

    ஆவணி மாத பவுர்ண மிக்கு அடுத்த நாளிலிருந்து 15 நாட்கள் மகாளய பட்சம் அமாவாசையில் பித்ருபட்ச காலத்தில் மேலுலகில் வாழும் தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்கள் ஆத்மா தன் குடும்பத்தினரை காண பூலோகம் வருவதாக இந்துக்களின் நம்பிக்கை.

    அவ்வாறு செய்வதன் மூலம் அவர்களின் நல்லாசி களுடன் சிறந்த வாழ்க்கைத் துணையும், கல்வி கேள்விக ளில் சிறந்த குழந்தைகள், வீடு, விளைநிலம், பசுக்கள், தொழில் அபிவிருத்தி, ஆரோக்கியம், தீர்க்காயுள் கிடைக்கும் என்பது நம் பிக்கை.

    மகாளய அமாவாசை தினமான இன்று அதிகாலை ராமநாத சுவாமி கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பின்னர் ஸ்படிக லிங்க பூஜை நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று காலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி முன்னோர் களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதன் காரணமாக கடற்கரையை மறைக்கும் அளவிற்கு மக்கள் கூட்டம் இருந்தது.

    பின்னர் புனித நீராடிய பக்தர்கள் தம்மோடு வாழ்ந்து மறைந்த முன் னோர்களின் ஆத்ம சாந்திக் காக சங்கல்பம், திதி, தர்ப்பணம் செய்து முன் னோர்களின் பசி தீர்க்க பிண்டமிட்டு, கோதானம், வஸ்திர தானம், அன்னதானம் செய்து பிதுர்கர்மா பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர்.

    தொடர்ந்து ராமநாத சுவாமி கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாதசாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர். காலை 10 மணி அளவில் அக்னி தீர்த்த கடலில் சுவாமி எழுந்தருளி தீர்த்த வாரி நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக் தர்கள் கலந்து கொண்டனர்.

    ராமேசுவரத்தில் முக்கிய இடங்களான பஸ் நிலையம், கோவில், 4 ரத வீதிகள், அக்னி தீர்த்த கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் பக் தர்கள் கூட்டம் அலைமோதியது. பாதுகாப்பிற்காகவும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் உத்தரவின் பெயரில் 733 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நகராட்சி மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது. ராமேசுவரத்திலிருந்து பக்தர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப சென்னை, மதுரை, கோவை, திருச்சி மற்றும் பெங்களூர் போன்ற முக்கிய நகரங்களுக்கு இன்றும், நாளையும் அரசு போக்கு வரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல் மாவட்டத்தின் உள்ள பிரசித்தி பெற்ற சேதுக்கரை, தேவி பட்டினம் கடற்கரையிலும் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினர்.

    • லேசான வயிறு வலி ஏற்பட்டதாக அமைச்சரின் உதவியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • உடல்நிலை சீரானதும் அமைச்சர் அன்பில் மகேஷ் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், உணவு ஒவ்வாமை காரணமாக வயிறு வலி ஏற்பட்டதால் சிகிச்சைக்காக சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    உடல்நிலை சீரானதும் அமைச்சர் அன்பில் மகேஷ் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.

    முன்னதாக தமிழ்நாடு முழுக்க அனைத்து தொகுதிகளிலும் உள்ள பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு வந்த நிலையில், தொடர் சுற்றுப்பயணத்தின் காரணமாக உணவு ஒவ்வாமை ஏற்பட்டு இருக்கலாம் என்றும், அதன் காரணமாக லேசான வயிறு வலி ஏற்பட்டதாக அமைச்சரின் உதவியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • விவசாயிகளுக்கு பயிர்க்கடன், நகைக்கடன், ஆடு மாடு வாங்குவதற்கான கடன் வழங்கப்படும்.
    • விவசாயிகளுக்கு கடன் வழங்குவதில் எவ்வித சமரசமும், காரணமும் இருக்கக்கூடாது.

    சென்னை:

    த.மா.கா.தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு, விவசாயிகளுக்கு விவசாயக் கடனை முறையாக காலத்தே வழங்கி விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும் துணை நிற்க வேண்டும். தமிழக அரசு மாநிலம் முழுவதும் விவசாயத்தொழிலை மேம்படுத்த விவசாயிகளுக்கு விவசாயக் கடனை வழங்க தொடர் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

    தமிழக அரசு நிதிப்பற்றாக்குறையை காரணம் காட்டி விவசாயிகளுக்கு கடன் வழங்க மறுப்பதாக விவசாயிகள் குறை கூறுகின்றனர்.

    விவசாயிகளுக்கு பயிர்க்கடன், நகைக்கடன், ஆடு மாடு வாங்குவதற்கான கடன் வழங்கப்படும். தள்ளுபடி செய்யப்படும் கடன்களுக்கு அரசு நிதிஉதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு நிதிப்பற்றாக்குறை ஏற்படுகிறது.

    விவசாயிகளுக்கு கடன் வழங்குவதில் எவ்வித சமரசமும், காரணமும் இருக்கக்கூடாது. விவசாயத்திற்கு தான் முதலில் நிதி ஒதுக்க வேண்டுமே தவிர நிதிப்பற்றாக்குறையை காரணம் காட்டி விவசாயத் தொழிலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது. எனவே தமிழக அரசு விவசாயக் கடனுக்காக காத்திருக்கும் விவசாயிகள் பயிர் செய்யும் பரப்பளவிற்கு தாமதமின்றி காலத்தே கடன் வழங்க உரிய நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • அரசியல் பிரபலங்கள் சமூக வலைதளங்கள் மூலமாக தெரிவித்து வருகின்றனர்.
    • ரஜினிகாந்த் நேற்றிரவு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    நடிகர் ரஜினிகாந்த், உடல்நலக்குறைவு காரணமாக நேற்றிரவு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர் விரைவில் உடல்நலம் பெற வேண்டுமென திரை, அரசியல் பிரபலங்கள் சமூக வலைதளங்கள் மூலமாக தெரிவித்து வருகின்றனர்.

    உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் நேற்றிரவு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஜினிகாந்த் விரைந்து உடல்நலம் பெற வேண்டும் என்று திரைத்துறையினர், அரசியல் பிரபலங்கள் மற்றும் பலர் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக பதிவிட்டு வருகின்றனர்.

    அந்த வரிசையில் ரஜினிகாந்த் விரைவில் பூரண குணம் பெற வேண்டும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பான எக்ஸ் தள பதிவில், "உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பூரண குணம் பெற்று விரைவில் இல்லம் திரும்ப விழைகிறேன்," என்று பதிவிட்டுள்ளார்.

    ×