என் மலர்
உள்ளூர் செய்திகள்
- மகாளய அமாவாசையில் இறந்து போன தங்கள் முன்னோர்கள் தங்கள் வீடுகளுக்கு வருவார்கள்.
- விரதம் மேற்கொள்பவர்கள் ஆண்கள் மட்டுமே திதி கொடுக்க வேண்டும் என்பதும் ஐதீகம்.
திருச்செந்தூர்:
புரட்டாசி மாத மகாளய அமாவாசையை முன்னிட்டு இன்று ஏராளமானவர்கள் திருச்செந்தூர் கடலில் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
மாதம்தோறும் அமாவாசை திதி வரும் அந்த திதிகளில் இறந்து போன தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இதில் சிலர் தை மாதம் வரும் அமாவாசை, ஆடி மாத அமாவாசை நாட்களில் இறந்து போன தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள்.
இந்த நாட்களில் வரும் அமாவாசைக்கு திதி கொடுக்காதவர்கள் புரட்டாசி மாதம் வரும் மகாளய அமாவாசை நாளில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள். அவ்வாறு செய்தால் ஒரு வருட அமாவாசையில் திதி கொடுத்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
மகாளய அமாவாசையில் இறந்து போன தங்கள் முன்னோர்கள் தங்கள் வீடுகளுக்கு வருவார்கள். அவ்வாறு வரும் அவர்களை நினைத்து விரதம் மேற்கொண்டு கடல், ஆறு ஆகிய பகுதிகளில் நீராடி எள்ளும், தண்ணீரும் கொடுத்து தர்ப்பணம் செய்தால் நம் வீட்டிற்கு வந்த மூதாதையர்கள் அகம் மகிழ்ந்து நம்மை வாழ்த்திப் செல்வார்கள் என்பது ஐதீகம்.
அதேபோல் விரதம் மேற்கொள்பவர்கள் ஆண்கள் மட்டுமே திதி கொடுக்க வேண்டும் என்பதும் ஐதீகம்.
- உணவுகளை சாப்பிட்டவாறு படகில் பயணிப்பது மகிழ்ச்சி அளிப்பதாக சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் தெரிவிக்கின்றனர்.
- 20 நிமிடம் பயணம் செய்ய 5 நபர்களுக்கு ரூ.1,200 கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டில் முதல்முறையாக உதகை படகு இல்லத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள "டோனட் போட்" எனப்படும் மின்சார படகு சவாரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மின்சார படகு சவாரி சுற்றுலா பயணிகள் இடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.
சத்தமே இல்லாமல், சுடச்சுட டீயுடன், ஊட்டி வர்க்கி, கட்லெட், சமோசா என உணவுகளை சாப்பிட்டவாறு படகில் பயணிப்பது மகிழ்ச்சி அளிப்பதாக சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் தெரிவிக்கின்றனர்.
20 நிமிடம் பயணம் செய்ய 5 நபர்களுக்கு ரூ.1,200 கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது.
- சென்னையில் ஜிம்கானா கிளப் காமராஜர் சிலை முன்பு இருந்து செல்வப்பெருந்தகை தலைமையில் பாத யாத்திரை செல்ல முடிவு செய்தனர்.
- போலீஸ் அனுமதி மறுத்தால் மறியலில் ஈடுபடவும் காங்கிரசார் தயாரானார்கள்.
சென்னை:
காந்தி பிறந்த நாளான இன்று வெறுப்பு அரசியலை கண்டித்தும் ராகுல் காந்தியை விமர்சிப்பதை கண்டித்தும் காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று பாத யாத்திரை நடத்தப்படும் என்று காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்து இருந்தார்.
சென்னையில் ஜிம்கானா கிளப் காமராஜர் சிலை முன்பு இருந்து செல்வப்பெருந்தகை தலைமையில் பாத யாத்திரை செல்ல முடிவு செய்தனர்.
அதன்படி இன்று காலை 7 மணியில் இருந்து அந்த பகுதியில் காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டனர். அப்போது அங்கு வந்த போலீசார், அண்ணா சாலை வழியாக பாத யாத்திரை செல்ல அனுமதி இல்லை என்றனர்.
இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே சலசலப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, எம்.பி.க்கள் விஷ்ணு பிரசாத், சுதா, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் அங்கு வந்தனர்.
அவர்களிடம் போலீஸ் அதிகாரிகள் அனுமதி இல்லை என்றும் அதற்கு பதிலாக ரம்டா ஓட்டல் அருகே சென்று அங்கிருந்து புறப்படும்படியும் தெரிவித்தனர்.
இதை ஏற்க காங்கிரசார் மறுத்தனர். இதனால் காங்கிரசாருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சுமார் 2 மணி நேரம் அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.
போலீஸ் அனுமதி மறுத்தால் மறியலில் ஈடுபடவும் காங்கிரசார் தயாரானார்கள். அதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர்.
கடைசியில் ஒரு வழியாக மூன்று மூன்று பேராக செல்ல அனுமதித்தனர். 9.30 மணியளவில் பாதயாத்திரை தொடங்கியது. அங்கிருந்து மே தின பூங்கா, சிந்தாதிரிப்பேட்டை, ரமடாஓட்டல், புதுப்பேட்டை லான்ஸ் கார்டன் வழியாக எழும்பூர் அருங்காட்சியகம் அருகே நிறைவடைந்தது.
பாத யாத்திரையில் மாநில துணை தலைவர் சொர்ணா சேதுராமன், பொதுச்செயலாளர் தளபதி பாஸ்கர், எஸ்.ஏ.வாசு, அகரம் கோபி, மாவட்டத் தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவராஜ சேகர், டில்லி பாபு, முத்தழகன், அடையார் துரை மற்றும் பி.வி.தமிழ் செல்வன், திருவான்மியூர் மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அண்ணன் எடப்பாடி பழனிசாமி மீது செல்போன் வீசிய செயலை வன்மையாக கண்டிக்கிறேன்.
- இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார்? என்பதை கண்டறிந்து தமிழக அரசு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திண்டுக்கல்:
அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில நிர்வாகிகள், மண்டல நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு வந்த எடப்பாடி பழனிசாமி தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் செல்போனை எடப்பாடி பழனிசாமி மீது வீசினார். அந்த செல்போன் இ.பி.எஸ். காதில் பட்டு கீழே விழுந்தது. இதனால் அவர் திடீரென பதட்டமடைந்தார். இந்த சம்பவம் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து தேனி முன்னாள் எம்.பி.யும், ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அண்ணன் எடப்பாடி பழனிசாமி மீது செல்போன் வீசிய செயலை வன்மையாக கண்டிக்கிறேன். இது முற்றிலும் அநாகரீகமான செயல். அரசியல் மற்றும் கருத்து வேறுபாடுகளுக்கு பின்னால் இருந்து வந்தாலும், நம்முடைய மரியாதையும், சீர்திருத்தமும் குறைவாக கூடாது. வன்முறையை தூண்டக்கூடாது. இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார்? என்பதை கண்டறிந்து தமிழக அரசு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தலைவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய போலீசார் மிகுந்த கவனமுடனும், விழிப்புடணும் செயல்பட வேண்டும்.
இவ்வாறு தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கட்சிக்கு துரோகம் இழைத்ததாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன்களை எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். அதன் பிறகு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன்கள் அ.தி.மு.க.வில் இணைய வாய்ப்பே இல்லை என முன்னாள் அமைச்சர்களும், எடப்பாடி பழனிசாமியும் கூறி வந்தனர். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியை அண்ணன் என அன்போடு அழைத்து ரவீந்திரநாத் பதிவிட்டு இருப்பது அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் ஓ.பி.எஸ். ஆதரவாளர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
- தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மாலாத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், கரூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
தமிழகத்தில் நாளை ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
4-ந்தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
5-ந்தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்,இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
6-ந்தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், திருச்சிராப்பள்ளி, சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
7-ந்தேதி மற்றும் 8-ந்தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27°-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35°-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27°-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
இன்று மற்றும் நாளை மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- அமைச்சரவை கூட்டம் வருகிற 8-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- உயர்கல்வித்துறை செயலாளர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை செயலாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை பிரதீப் யாதவ் வகித்துள்ளார்.
சென்னை:
தமிழக அமைச்சரவை சமீபத்தில் மாற்றப்பட்டது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். மேலும் சில புதிய அமைச்சர்கள் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டனர். சில அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றப்பட்டது.
இதையடுத்து, அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்ட பிறகு முதல் அமைச்சரவை கூட்டம் வருகிற 8-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
உயர்கல்வித்துறை செயலாளர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை செயலாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை பிரதீப் யாதவ் வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அறநிலையத்துறை புனரமைப்பு செய்த கோவில்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
- நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 15 சதவீத வாக்குகளை இழந்துள்ளது.
சென்னை:
தமிழக பாரதிய ஜனதா ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் மதுக்கடைகளை திறந்தவர்கள் தான் மூட வேண்டுமே தவிர மத்திய அரசு மூடாது. விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாடு என்பது அரசியல் மோசடி மாநாடு. மக்களை ஏமாற்றும் மோசடி.
அறநிலையத்துறை புனரமைப்பு செய்த கோவில்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 15 சதவீத வாக்குகளை இழந்துள்ளது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பாதையில் அ.தி.மு.க. செல்கிறதா? என அக்கட்சி தொண்டர்கள் நினைத்திருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆபாச படங்களை காட்டி ஓரினச்சேர்க்கை.
- உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம், கருக்குப் பேட்டையை சேர்ந்தவர் ராஜேஷ்(வயது34). இவர் காஞ்சிபுரம் நில அளவை பிரிவில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். மேலும் பரந்தூர் விமான நிலைய திட்டத்திலும் நில அளவையில் பணியாற்றினார்.
இவரது மனைவி கருத்து வேறுபாட்டால் பிரிந்து சென்றுவிட்டதாக தெரிகிறது. இதனால் ராஜேஷ் தனியாக தங்கி பணிக்கு சென்று வந்தார்.
அதே பகுதியில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த இளம்பெண் ஒருவர் தனது தாயுடன் தள்ளுவண்டியில் டிபன் படை வைத்து உள்ளார்.
கடைக்கு அடிக்கடி சென்று வரும்போது இளம் பெண்ணுடன் ராஜேசுக்கு பழக்கம் ஏற்பட்டது.
அப்போது 4-ம் வகுப்பு படித்து வரும் இளம்பெண்ணின் 9 வயது மகள், மற்றும் 1-ம் வகுப்பு படித்து வந்த 5 வயது மகன் குகன் ஆகியோருடனும் ராஜேஷ் நெருக்கமானார்.
இளம்பெண்ணின் ஏழ்மையை தெரிந்து கொண்ட ராஜேஷ் தனக்கு தெரிந்து அறக்கட்டளை மூலம் சிறுவனையும், சிறுமியையும் படிக்க வைப்பதாக தெரிவித்தார்.
இதனால் இளம் பெண்ணும் ராஜேசுடன் மிகவும் நெருக்கமானார். அவரது மகன், மகளுடன் ராஜேஷ் பழுகுவதையும் தவறாக நினைக்கவில்லை.
இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட ராஜேஷ் சிறுவன் குகனை தனது வீட்டுக்கு அழைத்து சென்று செல்போனில் ஆபாச படங்களை காட்டி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டார்.
மேலும் இதுபற்றி வெளியில் யாரிடமும் கூறக் கூடாது என்று மிரட்டினார். இதனால் சிறுவன் குகன் இதுபற்றி யாரிடமும் கூறாமல் இருந்தார்.
இந்த நிலையில் குகனுக்கு உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டு மயக்கம் அடைந்தார். அவனை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்த போது சிறுவன் குகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவன் தாக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.
இதுபற்றி விசாரித்த போதுதான் ராஜேஷ் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட போது மறுத்து சத்தமிட்டதால் சிறுவன் குகனை தாக்கியதும் பின்னர் அவனை வீட்டில் வந்து விட்டு சென்று இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து நிலஅளவையர் ராஜேசை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் இளம் பெண்ணின் மகளுக்கும் ஆபாச படங்களை காட்டி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்தது தெரிய வந்தது. இதுபற்றியும் போலீசார் தனியாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- குடிநீர் மற்றும் கழிவு நீர் இணைப்புக் கட்டணங்கள் ஆண்டு தோறும் உயர்த்தப்படும் நிலை போன்றவற்றால் தமிழக மக்களின் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக சீரழித்து வருகிறது.
- தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சிகளுக்கு உட்பட்ட வட்டங்களிலும்; நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளிலும், மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம் நடைபெறும்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வரும் அ.தி.மு.க., தி.மு.க. ஆட்சியில் நடைபெறும் பல்வேறு ஊழல்கள் மற்றும் முறைகேடுகளை அவ்வப்போது நாட்டு மக்களுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டி வருவதோடு, களத்தில் நின்று போராடி வருகிறது.
தமிழக அரசின் 40 மாத ஆட்சியில் மூன்று முறை மின்கட்டண உயர்வுடன், இனி ஆண்டுதோறும் மின் கட்டணம் உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு. பத்திரப்பதிவு கட்டணம் பல மடங்கு உயர்வு.
பால் பொருட்கள் விலை பலமுறை உயர்வு மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வு. கொலை, கொள்ளை என்று தொடர்ந்து சட்டம்-ஒழுங்கு சீர்கேடு. பெண்கள், சிறுமியருக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகள்.
போதைப் பொருட்களின் கேந்திரமாக மாறிய தமிழகம் ஏற்கெனவே உயர்த்தப்பட்ட 100 சதவீதம் மற்றும் 150 சதவீதம் சொத்து வரி உயர்வுடன் இனி ஆண்டுதோறும் 6 சதவீதம் சொத்து வரி கட்டணம் உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு குடிநீர் மற்றும் கழிவு நீர் இணைப்புக் கட்டணங்கள் ஆண்டு தோறும் உயர்த்தப்படும் நிலை போன்றவற்றால் தமிழக மக்களின் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக சீரழித்து வருகிறது.
''40 மாத காலமாக, மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதற்குக் காரணமான ஸ்டாலினின் தி.மு.க. அரசைக் கண்டித்தும்; மக்கள் நலன் கருதி, உயர்த்தப்பட்ட சொத்து வரியை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும்'' அ.தி.மு.க. சார்பில், 8-ந்தேதி (செவ்வாய்கிழமை) காலை 10.30 மணியளவில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சிகளுக்கு உட்பட்ட வட்டங்களிலும்; நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளிலும், மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம் நடைபெறும்.
ஸ்டாலினின் தி.மு.க. அரசைக் கண்டித்தும், மக்கள் நலனை முன்வைத்தும் நடைபெற உள்ள இந்த மனித சங்கிலி போராட்டத்தில் விவசாயிகள், வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பி.எஸ்.என்.எல். எப்.டி.டி.எச். வை-பை வசதிகள் உள்ள அனைத்து இடங்களில் பெறலாம்.
- 500-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சேனல்கள் வழங்கப்படும்.
சென்னை:
பி.எஸ்.என்.எல். நிறுவன தினத்தையொட்டி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் "சர்வத்ரா-பி.எஸ்.என்.எல். வை-பை" மற்றும் இண்ட்ராநெட் டெலிவிஷன் என்ற இரண்டு புதிய சேவையை பரிசோதனை அடிப்படையில் எப்.டி.டி.எச். வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.
சர்வத்ரா-பி.எஸ்.என்.எல். வை-பை ரோமிங் சேவையை பெற பி.எஸ்.என்.எல். எப்.டி.டி.எச். வாடிக்கையாளர்கள் http:/portal.bsnl.in/ftth/wigiroming என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து கொண்டு தங்களின் வெளியூர் பயணங்களின் போது இணைய தளத்தில் இணைந்திருக்க முடியும்.
இந்த சேவையை பி.எஸ்.என்.எல். எப்.டி.டி.எச். வை-பை வசதிகள் உள்ள அனைத்து இடங்களில் பெறலாம்.
இதற்கான டேட்டா தரவுகள் வாடிக்கையாளர்களின் தற்போதைய தேர்ந்து எடுக்கப்பட்ட திட்டத்தில் இருந்தே கழிக்கப்படும். வை-பை ரோமிங் சேவைக்கு தனியாக கட்டணம் கிடையாது.
இண்ட்ராநெட் பைபர் டெலிவிஷன் சேவையை ஆண்ட்ராய்டு-10 மற்றும் அதற்கு மேல் உள்ள ஸ்மார்ட் டி.வி.யில் எப்.டி.டி.எச். வாடிக்கையாளர்களுக்கு சோதனை அடிப்படையில் வழங்கப்பட இருக்கிறது. இதில் 500-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சேனல்கள் வழங்கப்படும்.
மேலும் ஒரு சலுகையாக இந்த மாதம் 24-ந்தேதி வரை ரூ.500 மற்றும் அதற்கு அதிகமாக ரீசார்ஜ் செய்யும் பிரிபெய்டு மொபைல் வாடிக்கையாளர்களுக்கு 24 நாட்கள் செல்லுபடியாகத்தக்க 24 ஜி.பி. டேடா கூடுதலாக வழங்கப்படும் என்று பி.எஸ்.என்.எல். தலைமை பொதுமேலாளர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
- கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட், செயின் பறிப்பு போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை பிடிக்கவும் போலீசார் ரகசியமாக கண்காணிக்க உள்ளனர்.
- விமான சாகச நிகழ்ச்சியையொட்டி 3 நாட்கள் ஒத்திகை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சென்னை:
இந்திய விமானப் படையின் 92-ம் ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் வருகிற 6-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) விமான சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அன்று காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெறும் இந்த சாகச நிகழ்ச்சியை கண்டு களிப்பதற்காக மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கானோர் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2003-ம் ஆண்டு நடைபெற்ற விமான சாகச ஒத்திகையின் போது மெரினாவில் லட்சக்கணக்கானோர் திரண்டுள்ளனர். அதே போன்று வருகிற 6-ந்தேதி நடைபெற உள்ள விமான சாகச நிகழ்ச்சியை காண்பதற்கும் ஏராளமான பொதுமக்கள் கூடுவார்கள் என்பதால் பலத்த பாதுகாப்புக்கு போலீசார் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
அன்றைய தினம் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உயர் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். காணும் பொங்கல் தினத்தில் மேற்கொள்வது போன்று மெரினா கடற்கரை பகுதி முழுவதும் போலீசார் தீவிரமாக கண்காணிக்க உள்ளனர்.
விமான சாகச நிகழ்ச்சியை கண்டு ரசிக்க வருபவர்கள் கடலில் இறங்கி குளிக்க வருகிற 6-ந்தேதி தடை விதிக்கப்பட உள்ளது.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் காலையில் இருந்தே மக்கள் மெரினாவில் கூடுவார்கள் என்பதால் அவர்களை ஒழுங்குபடுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மெரினா காமராஜர் சாலையில் அன்று காலையில் இருந்தே போக்குவரத்தை நிறுத்தி பொதுமக்களை மட்டும் அனுமதிப்பதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட், செயின் பறிப்பு போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை பிடிக்கவும் போலீசார் ரகசியமாக கண்காணிக்க உள்ளனர்.
புத்தாண்டு மற்றும் காணும் பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபடுவது போல அன்றைய தினம் மெரினாவில் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள் என்பதால் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள உயர் போலீஸ் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
விமான சாகச நிகழ்ச்சியையொட்டி 3 நாட்கள் ஒத்திகை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்படி நேற்று முதல் நாள் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இன்று 2-வது நாளாகவும் ஒத்திகை நடத்தப்பட்டது. இதனை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
வருகிற 4-ந்தேதி கடைசி நாள் ஒத்திகை நடத்தப்படுகிறது. இதன் பின்னர் சாகச நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற உள்ளன.
- ஆண்டு முழுவதும் தள்ளுபடி விலையில் விற்பனை.
- காந்தியடிகள் 156-வது பிறந்த நாள்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காந்தி பிறந்த நாளையொட்டி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டிலுள்ள கதர் நூற்பாளர்கள் மற்றும் நெசவாளர்களின் பொருளாதார மேம்பாட்டினையும், அவர்களது நலன்களையும் கருத்திலே கொண்டு கதர் கிராமத் தொழில் வாரியம் மூலமாக தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
இந்திய விடுதலைப் போராட்டத்தின்போது "அகிம்சை ஆயுதமாக" அண்ணல் காந்தியடிகளால் முன்மொழியப்பட்ட கதர், கைத்தறி ஆடைகளை தயாரிப்பது, அதையே அணிவது என்பதன் அடிப்படையில், கை ராட்டைகளை கொண்டு நூல் நூற்பதிலும், கதர் ரகங்களை நெசவு செய்வதிலும் தமிழ்நாடு முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறது.
கிராமப்புறங்களில் உள்ள கதர் நெசவாளர்களால் நவீன சூழலுக்கு ஏற்ப புத்தம்புது வடிவமைப்புகளில் கண்ணைக் கவரும் வண்ணத்தில் நெசவு நெய்யப்படும் கதராடைகள் மற்றும் கிராமப்புற கை வினைஞர்களால் உற்பத்தி செய்யப்படும் பலதரப்பட்ட கிராமப் பொருட்களை தமிழ்நாட்டிலுள்ள கதர் அங்காடிகள் மூலம் விற்பனை செய்திட தமிழ்நாடு அரசு தூண்டுகோலாய் துணை நின்று அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.
பொதுமக்களுக்குக் குறைந்த விலையில் கதர் பருத்தி, கதர் பாலியஸ்டர் மற்றும் கதர் பட்டு ரகங்களை வழங்க வேண்டும் என்ற நோக்கில் ஆண்டு முழுவதும் 30 சதவீதம் விற்பனைத் தள்ளுபடியை அரசு அனுமதித்துள்ளதால், ஆண்டு முழுவதும் தள்ளுபடி விலையில் அவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
அண்ணல் காந்தியடிகளின் 156-வது பிறந்த நன்னாளையொட்டி, கதர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள கதர் நூற்போர் மற்றும் நெய்வோர் அனைவருடைய வாழ்க்கையிலும் உயர்வு ஏற்படுத்தி, கதர்த் தொழிலுக்குக் கை கொடுக்கும் வகையில், தேச நலன் காக்கும் கதர் மற்றும் கிராமப் பொருட்களை அதிகளவில் வாங்கி நாட்டிற்கு வலிமை சேர்த்திட வேண்டும் என மாணவ, மாணவிகள், இளைஞர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியப் பெருமக்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






