என் மலர்
உள்ளூர் செய்திகள்
- உளுந்தம் பருப்பு மற்றும் பாசிப்பயறு ஆகியவற்றின் விலை சற்று குறைந்துள்ளது.
- வெள்ளை பட்டாணி பருப்பு கடந்த வாரம் ரூ.4 ஆயிரம் முதல் ரூ.4,200 வரை விற்பனையானது
விருதுநகர்:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் பருப்பு விலைகளில் பெரிய அளவில் மாற்றம் வருவது வாடிக்கையான ஒன்றாகும். அந்த வகையில் விருதுநகர் வணிக சந்தையில் துவரம் பருப்பு மற்றும் பாசிப்பருப்பு, பட்டாணி ஆகியவற்றின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. அதேவேளையில் உளுந்தம் பருப்பு மற்றும் பாசிப்பயறு ஆகியவற்றின் விலை சற்று குறைந்துள்ளது.
விருதுநகர் வணிகச் சந்தையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப்பட்டியல் விபரம் வருமாறு:-
பாமாயில் 15 கிலோ டின் கடந்த வாரம் ரூ.2040-க்கு விற்கப்பட்டது. இந்த வாரம் டின் ஒன்றுக்கு ரூ.10 மட்டும் குறைக்கப்பட்டு தற்போது ரூ.2030-க்கு விற்கப்படுகிறது. மல்லி நாடு வகை கடந்த வாரம் 40 கிலோ ரூ.4 ஆயிரம் முதல் ரூ.4,200 வரை விற்கப்பட்டது. இந்த வாரம் சந்தைக்கு வரத்து அதிகரித்ததால் ரூ.500 குறைவு ஏற்பட்டு தற்போது ரூ.3,500 முதல் 4 ஆயிரம் வரை விற்பனையாகிறது.
துவரம் பருப்பு புதுசு நாடு வகை 100 கிலோ ரூ.10,500-க்கு விற்கப்பட்டது. இந்த வாரம் ரூ.300 வரை உயர்ந்து தற்போது ரூ.10,800-க்கு விற்கப்படுகிறது. துவரம் பருப்பு புதுசு லயன் வகை 100 கிலோ கடந்த வாரம் ரூ.14 ஆயிரம் முதல் ரூ.14,700 வரை விற்கப்பட்டது. இந்த வாரம் ரூ.500 வரை உயர்ந்து தற்போது ரூ.14,500 முதல் ரூ.15,500 வரை விற்பனை செய்யப்படுகிறது.
உருட்டு உளுந்தம் பருப்பு 100 கிலோ நாடு வகை கடந்த வாரம் ரூ.12,350-க்கு விற்கப்பட்டது. இந்த வாரம் ரூ.150 குறைந்து தற்போது, ரூ.12,200-க்கு விற்பனையாகிறது. உளுந்து லயன் வகை 100 கிலோ கடந்த வாரம் ரூ.9,300 முதல் ரூ.9500 வரை விற்பனையானது. இந்த வாரம் குவிண்டாலுக்கு ரூ.800 வரை குறைந்துள்ளது. எனவே, ரூ.8500 முதல் ரூ.9 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.
வெள்ளை பட்டாணி பருப்பு கடந்த வாரம் ரூ.4 ஆயிரம் முதல் ரூ.4,200 வரை விற்பனையானது. இந்த வாரம் ரூ.200 உயர்ந்து ரூ.4,200 முதல் ரூ.4,300 வரை விற்பனை செய்யப்படுகிறது. பாசிப்பயறு நாடு வகை 100 கிலோ கடந்த வாரம் ரூ.8,400 முதல் ரூ.8,700 வரை விற்கப்பட்டது. இந்த வாரம் ரூ.550 வரை குறைந்து ரூ.7,850 முதல் ரூ.8,150 வரை விற்பனையாகிறது.
பாசிப்பயறு மீடியம் வகை கடந்த வாரம் ரூ.9,300-க்கு விற்கப்பட்டது. இந்த வாரம் ரூ.100 குறைக்கப்பட்டு ரூ.9,200-க்கு விற்கப்படுகிறது. கடலை புண்ணாக்கு 100 கிலோ கடந்த வாரம் ரூ.4,600-க்கு விற்கப்பட்டது. இந்த வாரம் ரூ.200 குறைந்து ரூ.4,400-க்கு விற்பனையாகிறது. எள்ளு புண்ணாக்கு 50 கிலோ ரூ.1,800-க்கு விற்பனையா னது. இந்த வாரம் ரூ.400 வரை உயர்ந்து தற்போது ரூ.2,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பிற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.
- அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இன்று ஒருங்கிணைந்த கூட்டம் நடத்தப்பட்டது.
- திமுக கூட்டணி வலுவாக உள்ளது.
சென்னை:
2026 சட்டமன்ற பொதுத்தேர்தலை எதிர்கொள்ள தி.மு.க. இப்போதே தயாராகி வருகிறது. அதற்காக தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில் 234 தொகுதிகளுக்கும் சட்டமன்ற தொகுதி பார்வையாளர்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நியமித்துள்ளார்.
இவர்கள் தங்களது தொகுதிகளுக்கு சென்று மாவட்ட கழக செயலாளர்களுடன் கலந்து பேசி, மாவட்ட கழக கூட்டங்களில் பங்கேற்று தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தனர்.
மேலும் எம்.எல்.ஏ.க்கள் நடத்தும் கூட்டங்களிலும் பங்கேற்று தொகுதி சம்பந்தமான பணிகள் குறித்தும் விவரித்தனர். வாக்காளர் பட்டியல், முகவர்களின் பெயர் பட்டியலை சரி பார்த்தல், கழக நிர்வாகிகளின் செயல்பாடுகள் சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்திறன் ஆகியவற்றை கவனித்து தலைமைக்கு அவ்வப்போது தகவல்கள் கொடுப்பதுதான் இவர்களது பணியாகும்.
பாராளுமன்ற தேர்தலின்போதும் இதே போல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அந்த பார்வையாளர்களில் 60 சதவீதம் பேர்களை எடுத்து விட்டு இப்போது இளைஞரணி, மாணவரணி, மகளி ரணி, வழக்கறிஞர் அணி உள்ளிட்ட பல அணிகளில் உள்ளவர்கள் தொகுதி பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவதற்காக அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இன்று ஒருங்கிணைந்த கூட்டம் நடத்தப்பட்டது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி. பொன்முடி, டி.கே.எஸ்.இளங்கோவன், தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன் மற்றும் தொகுதிப் பார்வையாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
ஆலோசனைக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
* திமுக கூட்டணி வலுவாக உள்ளது.
* 200 தொகுதிகளில் வெற்றி பெறும் அளவுக்கு கடுமையாக பணி செய்ய வேண்டும்.
* கடுமையாக உழைத்து 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
* 2026 சட்டமன்ற தேர்தலில் 200 இடங்களில் வெல்வது நமது இலக்கு அதற்காக தீவிரமாக களப்பணியாற்ற வேண்டும் என்று பேசினார்.
- வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
- நீலகிரி வழியாக வயநாடு சென்ற அவர், கல்லூரி மாணவர்களை சந்தித்தார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி. இவரது மகளும், ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரியங்கா காந்தி முதன்முறையாக தேர்தலில் நேரடியாக களம் இறங்கியுள்ளார்.
வயநாடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக களம் நிறுத்தப்பட்டுள்ளார். இன்று அவர் வயநாடு தொகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
இதற்காக டெல்லியில் இருந்து தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம் வந்தடைந்தார். நீலகிரி வந்த அவர் கல்லூரி மாணவர்களை சந்தித்தார். அவரை பார்ப்பதற்காக கல்லூரி மாணவர்கள் நீண்ட வரிசையில் நின்றிருந்தனர்.
அவர்களுடன் புன்னகைத்தவாறு கைக்கொடுத்து சென்றார். நீலகிரியில் இருந்து வயநாடு தொகுதி செல்லும் பிரியங்கா காந்தி அங்கு தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
ராகுல் காந்தி ரேபரேலி, வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால் வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதன் காரணமாக வருகிற 13-ந்தேதி வயநாட்டிற்கு இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.
- தவெக மாநாட்டுக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து தொண்டர்கள் வருகை தந்தனர்.
- மாநாட்டில் சுமார் 8 லட்சம் மக்கள் பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் [தவெக] முதல் அரசியல் மாநாடு நேற்று விக்கிரவாண்டியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
த.வெ.க மாநாட்டிற்காக இரவும் பகலுமாக திடல் அமைக்கும் பணி கடந்த சில வாரங்களாக நடைபெற்றது. பெண்கள் அமர தனி இடம், விஐபிகளுக்கு தனி இடம் என திடல் முழுவதும் தொண்டர்களின் வசதிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த மாநாட்டுக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து தொண்டர்கள் வருகை தந்தனர். மாநாட்டிற்கு தமிழகம் மட்டுமல்லாமல் கர்நாடகா, கேரளாவில் இருந்தும் மக்கள் வருகை தந்தனர்.
சுமார் 3 மணியளவில் மாநாடு தொடங்கியது. பல்வேறு நாட்டுப்புற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த மாநாட்டில் சுமார் 8 லட்சம் மக்கள் பங்கேற்றுள்ளனர்.
மாநாட்டு திடல் வெளியில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் எல்இடி திரை மூலம் விஜய்யின் உரையை கண்டுகளித்தனர். இதுப்போன்ற பிரம்மாண்ட அலங்காரத்தை வேறு எங்கும் கண்டதில்லை என மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
இந்நிலையில், மாநாட்டிற்கு நேற்று செல்ல முடியாதவர்களும், அந்த வழியாக செல்லும் பொது மக்கள் சிலர், மாநாட்டு திடலில் முகப்பு வாயில் முன்பும், மேடை மற்றும் கட் அவுட் முன்பும் செல்பி எடுத்துச் செல்கின்றனர்.
- கரும்பு டன் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.4000 வழங்கப்படும் என்று சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது வாக்குறுதி அளித்தது.
- கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையை வழங்க முதலமைச்சர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கரும்பு டன் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.4000 வழங்கப்படும் என்று சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது வாக்குறுதி அளித்து ஆட்சியைப் பிடித்து 41 மாதங்கள் கடந்த நிலையில், 2023-24-ம் ஆண்டில் கரும்பு சப்ளை செய்த அனைத்து விவசாயிகளுக்கும் சிறப்பு ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு ரூ.215 வழங்கப்படும் என்று சட்டமன்றத்தில் வேளாண்மை துறை அமைச்சர் அறிவித்தார்.
அதையே உறுதி செய்து தீபாவளிக்கு முன்பு அனைத்து கரும்பு விவசாயிகளுக்கும் இத்தொகை வழங்கப்படும் என்று அரசின் சார்பில் செய்தி குறிப்பும் வெளியிடப்பட்டது.
ஆனால் இன்று வரை இத்தொகை கரும்பு விவசாயிகளுக்கு வழங்குவதற்கான எந்த விதமான நடவடிக்கைகளையும் தி.மு.க. அரசு எடுக்கவில்லை.
தீபாவளிக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் ஊக்கத்தொகை கிடைக்காத கரும்பு விவசாயிகள் இந்தாண்டு தீபாவளியை வழக்கமான உற்சாகத்தில் கொண்டாட முடியாமல் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர்.
உடனடியாக கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையை வழங்க முதலமைச்சர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- பள்ளிக்கூட ஒப்பிப்பு.. சினிமா நடிப்பு.
- சூர்யாவை அரசியலுக்கு வர வேண்டும் என்று கூறி இருந்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. லட்சக்கணக்கான மக்கள் மாநாட்டில் திரண்டனர்.
மாநாடு நடந்ததையடுத்து பல அரசியல் தலைவர்கள் விஜயையும் அவரது கொள்கைகளையும் விமர்சித்து வருகின்றனர்.
தற்போது இயக்குனர் மற்றும் நடிகரான போஸ் வெங்கட் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜயை விமர்சித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
யப்பா.. உன் கூடவுமா அரசியல் பன்னனும்.. பாவம் அரசியல்.. பள்ளிக்கூட ஒப்பிப்பு.. சினிமா நடிப்பு. மற்றும் அதீத ஞாபக சக்தி.. வியப்பு.. எழுதி கொடுத்தவன் நல்ல வாசிப்பாளன்.. முடிவு??? பாப்போம்.. என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற சூர்யாவின் 'கங்குவா' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய போஸ் வெங்கட், சூர்யாவை அரசியலுக்கு வர வேண்டும் என்று கூறி இருந்தார்.
சூர்யாவை அரசியலுக்கு வரச்சொன்ன போஸ் வெங்கட் விஜயை விமர்சித்து கருத்து தெரிவித்து இருப்பது தற்போது பேசு பொருளாகி உள்ளது.
- ஜெயந்தி விழா இன்று தொடங்கி வருகிற 30-ந் தேதி வரை நடக்கிறது.
- 2-ம் நாள் அரசியல் விழாவாகவும், 3-ம் நாள் ஜெயந்தி விழா வாகவும் நடைபெறும்.
பசும்பொன்:
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் ஒவ்வொரு ஆண்டு முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா 3 நாட்கள் விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு ஜெயந்தி விழா இன்று தொடங்கி வருகிற 30-ந் தேதி வரை நடக்கிறது.
முதல் நாள் இன்று ஆன்மிக விழாவாகவும், 2-ம் நாள் அரசியல் விழாவாகவும், 3-ம் நாள் ஜெயந்தி விழா வாகவும் நடைபெறும்
ஆன்மிக விழாவை முன்னிட்டு இன்று பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடம் மற்றும் அவரது சிைல வண்ண மலர்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தது. இன்று காலை கணபதி யாக பூைஜகள் நடந்தது. பின்னர் அங்குள்ள பால முருகன், தேவர் திருமகனார் கோவிலுக்கு சிறப்ப பூஜை நடந்தது. இன்று மாலை 1008 திருவிளக்கு பூஜைகள் நடை பெறுகின்றன. இரவு ஆன்மீக சொற்பொழிவு, வள்ளி திருமண நாடகம் நடக்கிறது.
நாளை (29-ந்தேதி) நடைபெறும் அரசியல் விழாவில் அரசியல் சொற் பொழிவுகள் நடைபெறும். மேலும் பெண்கள் உள்பட ஏராளமானோர் பால்குடம் மற்றும் முளைப்பாரி, வேல் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்து வார்கள்.
முக்கிய நிகழ்ச்சியான தேவர் ஜெயந்தி விழா வருகிற 30-ந்தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது. அன்றயை நாளில் அரசு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். ராமநாதாபுரம், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- 1000 கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்.
- ஒத்திவைக்கப்பட்ட போட்டித்தேர்வுகளை உடனடியாக நடத்தி அந்த இடங்களுக்கு நிரந்தர உதவிப் பேராசிரியர்களை நியமிக்க வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 4,000 உதவிப் பேராசிரியர்களை நியமிக்க தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் மூலம் வெளியிடப்பட்ட அறிவிக்கை செயல்படுத்தப்படாமல் இருக்கும் நிலையில், 1,000 கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க அரசு முடிவு செய்திருக்கிறது. நிரந்தர உதவிப் பேராசிரியர்களை நியமிப்பதற்கு பதிலாக, இட ஒதுக்கீட்டு முறை கடைபிடிக்கப்படாத கவுரவ விரிவுரையாளர் நியமனத்தை மேற்கொள்வது சமூகநீதிக்கு எதிரானது.
எனவே, 1000 கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடப்பட்ட அறிவிக்கையில் இடம் பெற்றிருந்த காலி இடங்களின் எண்ணிக்கையை 8 ஆயிரமாக அதிகரித்து, ஒத்திவைக்கப்பட்ட போட்டித்தேர்வுகளை உடனடியாக நடத்தி அந்த இடங்களுக்கு நிரந்தர உதவிப் பேராசிரியர்களை நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- திராவிடமும் தமிழ்த்தேசியமும் இரு கண்கள் என்பதுதான் எங்களது கொள்கை.
- மத அப்படையில் பிளவுப்படுத்தும் அரசியலை விரும்பவில்லை.
தமிழ்த்திரை உலகில் உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இந்த கட்சியின் முதல் மாநில அரசியல் மாநாடு நேற்று விழுப்புரம் வி.சாலையில் நடைபெற்றது. 101 அடி கொடிக்கம்பத்தில் கொடி ஏற்றிய விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகளை விவரித்தார்.
திராவிடமும் தமிழ்த்தேசியமும் இரு கண்கள் என்பதுதான் எங்களது கொள்கை. தமிழ்நாட்டு உரிமைகளை சார்ந்த மதச்சார்பற்ற சமூகநீதி கொள்கையை நமது கொள்கை கோட்பாடாக முன்னிறுத்தி செயல்பட போகிறோம் எனக் கூறினார்.
மத அப்படையில் பிளவுப்படுத்தும் அரசியலை விரும்பவில்லை எனத் தெரிவித்தார். இதன்மூலம் தேசிய கட்சியான பா.ஜ.க.-வுக்கு நேர் எதிரான கட்சி என்பதை வெளிப்படையாக விளக்கிவிட்டார்.

2-வதாக அரசியல் எதிரி தி.மு.க. என்பதை தெளிவிப்படுத்தியுள்ளார். திராவிட அரசு என்ற பெயரில் தமிழக மக்களை ஏமாற்றுவதாக தி.மு.க.-வை நேரடியாக சாடினார். இதனால் அவருடைய முக்கியமான எதிரி தி.மு.க.தான் என்பது தெளிவாகிவிட்டது.
மாநாட்டின் இறுதியில் தனி மெஜாரிட்டி பெறுவதில் எந்த சந்தேகமும் இல்லை எனக் கூறினார். ஆனால், தம்முடன் வருபவர்களை அரவணைக்க வேண்டாமா... எனத் தெரிவித்து எங்களுடன் வந்தால் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு எனத் தெரிவித்துள்ளார்.
மத்தியில் கூட்டணி ஆட்சி, மாநிலங்களில் சுயாட்சி என்ற திராவிட கட்சிகளான திமுக, அதிமுக-வும் தங்களது கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு கொடுக்காத வகையில், தற்போது மற்ற சிறு கட்சிகளை குறிவைத்து இவ்வாறு பேசியிருக்கலாம் என்பது தெளிவாகிறது.
ஊழலை எதிர்த்து போராடுவோம் எனவும் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஊழல் என்றால் தி.மு.க., அதிமுக அரசைத்தான் சொல்ல முடியும். 1967-ல் இருந்து இந்த இரண்டு கட்சிகள்தான் மாறிமாறி ஆட்சி செய்துள்ளன. இதில் தி.மு.க.-வை விட அ.தி.மு.க.தான் அதிக முறை ஆட்சி செய்துள்ளது. அதன் பொதுச் செயலாளர் ஊழல் வழக்கில் சிறை வரை சென்று வந்தவர். ஆனால் பெயர் சொல்லியோ, அதிமுக-வையோ அவர் ஊழல் பற்றி பேசும்போது காரசாரமாக ஏதும் பேசவில்லை.
ஆனால் தனது சுமார் 45 நிமிட பேச்சில், தன்னை கூத்தாடி எனக் கூறுகிறார்கள். எம்.ஜி.ஆர்., என்.டி.ராமராவ் ஆகியோரும் அந்த வழியில் வந்தவர்கள்தான் என்பதற்கு எம்.ஜி.ஆர். பெயரை பயன்படுத்தினார்.
அ.தி.மு.க.-வை அவர் ஏன் இழுக்கவில்லை என்பது அரசியல் விமர்சகர்களின் புருவத்தை உயர்த்தியுள்ளது. அதோடு மட்டுமல்ல அ.தி.மு.க.-வினருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது நமக்கு ஆட்சியில் இருக்கும் தி.மு.க.தான் எதிரி. அதை மட்டுமே எதிர்த்தால் தி.மு.க. - த.வெ.க. ஆகியவற்றிற்கு இடையில்தான் போட்டி என்ற பிம்பத்தை ஏற்படுத்த அப்படி செய்திருக்கலாம் என உணரப்படுகிறது.

ஒருவேளை அ.தி.மு.க. விஜய் கட்சியுடனோ, த.வெ.க. , அ.தி.மு.க.-வுடனோ இசைவுடன் செல்லலாம் என எடுத்துக்கொள்ளலாமா என்றால், அ.தி.மு.க. பலமுறை ஆண்ட கட்சி., எனவே அந்த கட்சி ஒரு புதிய கட்சியின் கீழ் செல்லாது. இதனால் அ.தி.மு.க. உடன் இசைவுடன் செல்ல வாய்ப்பு இல்லை என உணர முடிகிறது.
இதனால் அ.தி.மு.க.-வை நமது போட்டி வளையத்தற்குள் இழுக்காமல் நேரடியாக தி.மு.க.-வை மட்டுமே குறிவைத்து விஜய் பேசியிருக்கலாம்...
எது எப்படியோ... விஜயின் அடுத்தடுத்த அரசியல் நகர்வுகள் மூலம் அவரது கட்சி செல்லும் பாதை என்ன என்பது தெளிவாகும் என நம்புவோம்.
- திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றனர்.
- 234 தொகுதிகளுக்கும் நியமிக்கப்பட்ட பார்வையாளர்களுடன் ஆலோசனை நடைபெற்றது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டசபை தொகுதிகளின் பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ஆலோசனை கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றனர்.
வரும் 2026 சட்டசபை தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக 234 தொகுதிகளுக்கும் நியமிக்கப்பட்ட பார்வையாளர்களுடன் ஆலோசனை நடைபெற்றது.
- காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
- அருவிகளில் குளிக்க தொடர்ந்து 16-வது நாளாக தடை நீடிக்கிறது.
பென்னாகரம்:
கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. மேலும் தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, பிலிகுண்டுலு, ராசி மணல் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்துள்ளது.
இதனால் நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 26 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. நீர்வரத்து பகுதியில் பெய்த மழை குறைந்தது.
இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் குறைந்து வந்தது. மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் பரிசல் இயக்க மட்டும் மாவட்ட நிர்வாகம் நேற்று முதல் அனுமதி அளித்துள்ளது. ஆனால் அருவிகளில் குளிக்க தொடர்ந்து 16-வது நாளாக தடை நீடிக்கிறது.
இதனால் மெயின் அருவிக்கு செல்லும் பாதை பூட்டப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில் சுற்றுலா பயணிகள் மெயின் அருவியில் குளிக்க முடியாமல், பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்து பார்த்தனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- மேட்டூர் அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.
- அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 2500 கனஅடியாக குறைக்கப்பட்டது.
சேலம்:
தமிழக, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.
நேற்று அணைக்கு வினாடிக்கு 30 ஆயிரத்து 475 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று 20 ஆயிரத்து 255 கனஅடியாக குறைந்தது. அணையின் நீர்மட்டம் 107.54 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 2500 கனஅடியாக குறைக்கப்பட்டது. இதே போல் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 600 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவிலேயே திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக 20 அடிக்கு குறையாமல் அணைக்கு தண்ணீர் வந்து கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.






