என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • சென்னையில் தொடர்ந்து இன்று காற்று மாசு அதிகரித்த வண்ணம் உள்ளது.
    • திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 204 என்ற அளவில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது.

    தீபாவளி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் நேற்று முதலே பட்டாசுகளை வெடிக்கத் தொடங்கிவிட்டனர்.

    இதனால், சென்னை மாநகரம் காலையிலேயே புகைமூட்டமாக மாறியது. நேற்று முதலே மக்கள் பட்டாசுகளை வெடிக்கத் தொடங்கியதால், பனியும், புகைமூட்டமும் சேர்ந்து இருந்தது.

    இந்நிலையில், சென்னையில் தொடர்ந்து இன்று காற்று மாசு அதிகரித்த வண்ணம் உள்ளது. சென்னையில் 3 இடங்களில் காற்றின் தரக்குறியீடு மோசமடைந்துள்ளது.

    சென்னையில் எந்த ஒரு பகுதியிலும் காற்றின் தரம் நன்றாக இல்லை என மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 204 என்ற அளவில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது.

    இதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்தில் 154, கடலூரில் 148, கோவையில் 104, புதுச்சேரியில் 119 என்ற அளவில் காற்றின் தர குறியீடு மிதமான அளவில் அதிகரித்துள்ளது.

    சென்னையைப் பொருத்தவரை காலை 7 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் காற்று மாசுபாட்டின் அளவு 190 ஆக தரக்குறியீட்டில் பதிவாகியுள்ளது.

    அதிகபட்சமாக மணலியில் 254, அரும்பாக்கத்தில் 210, பெருங்குடியில் 201 என்ற அளவில் காற்றின் தரக்குறியீடு மோசம் அடைந்துள்ளது.

    கொடுங்கையூரில் 159, மணலியில் 181, ராயபுரத்தில் 164, வேளச்சேரியில் 163 மிதமாக காற்று மாசு அதிகரித்துள்ளது.

    • உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
    • தீபாவளி முன்னிட்டு நேற்று முதலே பட்டாசு வெடிக்கத் தொடங்கிவிட்டனர்.

    நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

    தீபாவளி பண்டிகை முன்னிட்டு நாடு முழுவதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடைகள் அணிந்தும், பட்டாசு வெடித்தும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். நேற்று முதலே பட்டாசு வெடிக்கத் தொடங்கிவிட்டனர்.

    பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நேரங்களில் தீ விபத்து ஏற்பட அதிக அளவு வாய்ப்பு உள்ளது. அதனால், பொது மக்கள் பாதுகாப்புடன் பட்டாசுகளை வெடிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தீ விபத்து போன்ற அசம்பாவிதங்களை தடுக்க தீயணைப்பு துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

    தென்னிந்தியாவை பொறுத்தவரை, நரகாசுரனை பகவான் கிருஷ்ணர் வதம் செய்ததை தீபாவளியாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டியே ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் அமாவாசையுடன் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    இந்தியா மட்டுமல்லாமல், உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, இந்தியாவில் இருந்து குடிப்பெயர்ந்த மக்கள் அங்கு கொண்டாடுகின்றனர்.

    வேலைக்காகவும், படிப்புக்காகவும் பல்வேறு மாநிலங்களுக்கு, நாடுவிட்டு நாடு சென்ற மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று தீபாவளி பண்டிகை கொண்டாடுகின்றனர்.

    அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இன்று தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கிழக்கு திசை காற்று தென் இந்திய பகுதிகளில் முழுமையாக வீச இருக்கிறது.
    • வருகிற 5-ந்தேதி முதல் பருவமழை தீவிரம் அடைய உள்ளது.

    சென்னை:

    கிழக்கு திசை காற்று தென் இந்திய பகுதிகளில் முழுமையாக வீச இருக்கிறது. இதனால் வருகிற 5-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் பருவமழை தீவிரம் அடைய உள்ளது.

    அதற்கு முன்னதாக மன்னார் வளைகுடா பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளையொட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஆகியவை காரணமாக இன்று (வியாழக்கிழமை) முதல் 2-ந்தேதி (சனிக்கிழமை) வரை மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    அதன்படி, இன்று தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், திண்டுக்கல், மதுரை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும்.

    நாளையும் (வெள்ளிக்கிழமை), நாளை மறுதினமும் (சனிக்கிழமை) தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், நாளை மறுதினம் நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

    • பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    • இந்த ஆண்டு தீ விபத்து போன்ற அசம்பாவிதங்களை தடுக்க தீயணைப்பு துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை இன்று (31-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. தீபாவளியை கொண்டாட கடந்த சில நாட்களாகவே அனைவரும் புத்தாடை மற்றும் பட்டாசுகளை வாங்கி வைத்துக்கொண்டு தயார் நிலையில் இருந்தனர்.

    இன்று காலை முதலே புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடிக்க தொடங்கி விட்டனர்.. பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தீபாவளி பண்டிகை அன்று அனைத்து பகுதிகளிலும் பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்டு கொண்டேதான் இருக்கும்.

    இதுபோன்ற நேரங்களில் தீ விபத்து ஏற்பட அதிக அளவு வாய்ப்பு உள்ளது. ஆண்டுதோறும் சில இடங்களில் தீ விபத்து ஏற்படுவது தடுக்க முடியாத ஒன்றாக உள்ளது. எனவே, இந்த ஆண்டு தீ விபத்து போன்ற அசம்பாவிதங்களை தடுக்க தீயணைப்பு துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

    தமிழகம் முழுவதும் உள்ள தீயணைப்பு நிலையங்களில் பணியாற்றும் தீயணைப்பு வீரர்கள் அனைவருக்கும் நேற்று முன்தினம் முதலே பணிகள் ஒதுக்கி கொடுக்கப்பட்டு, தங்களுக்கான இடங்களில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் உள்ள 43 தீயணைப்பு நிலையங்களில் பணியாற்றும் 800 தீயணைப்பு வீரர்களும், கூடுதலாக வெளி மாவட்டங்களில் இருந்து 21 தீயணைப்பு வண்டிகளில் 300 பேரும் என 1,100 தீயணைப்பு வீரர்கள் தீபாவளி தீ விபத்தை தடுப்பதற்கு தயார் நிலையில் உள்ளனர்.

    இவர்கள் அனைவரும் சென்னையில் முக்கியமானதாக கருதப்படும் 64 பகுதிகளில் தயார்நிலையில் உள்ளனர். அதில் வெளிமாவட்டங்களில் இருந்து வந்த 21 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் வீரர்கள் முக்கிய பஸ் நிலையம், பூங்கா, மண்டபம் போன்ற பகுதிகளில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் மாலை 5 மணி முதலே தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபடத்தொடங்கியுள்ளனர். தீபாவளி பண்டிகையை தொடர்ந்து அதற்கு அடுத்த நாளும் தொடர்ச்சியாக பட்டாசுகள் வெடிப்பார்கள். இதனை கருத்தில் கொண்டு வரும் 2-ந்தேதி வரையில் தீயணைப்பு வீரர்கள் தீ விபத்தை தடுக்க பணிகளில் ஈடுபடுகிறார்கள்.

    மேலும், தீபாவளி பண்டிகைக்கு முன்பாகவே, தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மற்றும் பொது இடங்களில் பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பது எப்படி? என்பது பற்றி பல்வேறு விழிப்புணர்வுகள் மற்றும் துண்டு பிரசுரங்களை தீயணைப்பு துறையினர் வினியோகித்துள்ளார்கள். அதன்படி, பாதுகாப்பான முறையில் தீபாவளியை மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டும் என போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    • சென்னையில் இருந்து பஸ், ரெயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.
    • ரெயில்கள் மூலம் சுமார் 5 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பயணித்ததாக சொல்லப்படுகிறது.

    தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து கடந்த 3 நாட்களில் பஸ், ரெயில்கள் மூலம் 13 லட்சம் பேர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.

    தமிழ்நாட்டில் உள்ள மொத்த மக்கள் தொகையில் சென்னையில் மட்டும் சுமார் 1 கோடிக்கும் மேல் வசிக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர், பணி, தொழில் மற்றும் கல்விக்காக சென்னையை வாழ்விடமாக கொண்டுள்ளனர்.

    அவர்கள் அனைவரும் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வதை வழக்கமாக கொண்டு இருக்கின்றனர்.

    இதுபோன்ற பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களுக்கு செல்பவர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

    அதன்படி, இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்காக கடந்த 3 நாட்களாக வழக்கமாக இயக்கப்படும் 6 ஆயிரத்து 276 சிறப்பு பஸ்களுடன் கூடுதலாக 7 ஆயிரத்து 740 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 14 ஆயிரத்து 86 பஸ்கள் இயக்கப்பட்டன.

    இதில், சென்னையில் கிளாம்பாக்கம், மாதவரம், கோயம்பேடு பஸ் நிலையங்களில் இருந்து மட்டும் வழக்கமாக இயக்கப்படும் பஸ்களை காட்டிலும் கூடுதலாக 4 ஆயிரத்து 900 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதன் மூலம் சென்னையில் இருந்து மட்டும் கடந்த 3 நாட்களில் சுமார் 5 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்று இருக்கின்றனர். முதல் 2 நாட்களில் பெரும்பாலானோர் சென்னையில் இருந்து சென்றுவிட்டதால் நேற்றைய தினம் குறைவான எண்ணிக்கையிலேயே மக்கள் பயணித்தனர்.

    அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்பட்ட பஸ்களை போல, தனியார் ஆம்னி பஸ்களும் கடந்த 3 நாட்களில் அதிக அளவில் இயக்கப்பட்டுள்ளன. இதிலும் பலர் முன்பதிவு செய்து பயணம் செய்துள்ளனர்.

    அந்த வகையில் கடந்த 28-ந் தேதி 1,025 ஆம்னி பஸ்களில் 41 ஆயிரம் பயணிகளும்,29-ந்தேதி 1,800 ஆம்னி பஸ்களில் 72 ஆயிரம் பயணிகளும், 30-ந்தேதி (அதாவது நேற்று) 1,600 ஆம்னி பஸ்களில் 64 ஆயிரம் பயணிகளும் என மொத்தம் ஒரு லட்சத்து 77 ஆயிரம் பேர் பயணித்து இருப்பதாக அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அன்பழகன் தெரிவித்தார்.

    என்னதான் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டாலும், ரெயிலில் சொகுசாக பயணம் செய்வது போன்ற அனுபவம் வேறு எதிலும் வராது என்று சொல்லும் அளவுக்கு தீபாவளி பண்டிகைக்கு 120 நாட்களுக்கு முன்னதாகவே முன்பதிவு செய்து கடந்த 28, 29, 30-ந்தேதிகளில் பயணிகள் பலர் பயணம் செய்து இருக்கின்றனர்.

    அதிலும் ஒவ்வொரு ரெயிலிலும் இணைக்கப்பட்ட முன்பதிவில்லா ரெயில் பெட்டிகளில் ஏறி பயணிக்க ரெயில் புறப்படுவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்னதாகவே சென்று காத்திருந்து ரெயில் வந்ததும் ஓடிச் சென்று, முண்டியடித்து இடத்தை பிடித்தனர். இருக்கை கிடைக்காதவர்கள் கீழே அமர்ந்தபடியும், நின்றபடியும் பயணித்தனர். அந்த வகையில் ரெயில்கள் மூலம் சுமார் 5 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பயணித்ததாக சொல்லப்படுகிறது.

    மொத்தத்தில் கடந்த 3 நாட்களில் மட்டும் தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக சுமார் 13 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சென்னையில் இருந்து பஸ், ரெயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இதுதவிர பலர் சொந்த கார்களிலும், வாடகை கார்களிலும், மேலும் சில விமானங்களிலும் சென்று இருக்கின்றனர்.

    ஆம்னி பஸ்களில் கட்டணக் கொள்ளை தொடர்ந்து அரங்கேறிக் கொண்டுதான் இருப்பதாக பயணிகள் குமுறுகின்றனர்.

    அதற்கேற்றாற்போல், தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்து மீண்டும் திரும்புவதற்கான பயண கட்டணமும் ஆம்னி பஸ்களில் 2 முதல் 3 மடங்கு அதிகமாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    உதாரணமாக மதுரை- சென்னைக்கு சாதாரண நாட்களில் ரூ.570 முதல் ரூ.2,100 வரை இருந்த கட்டணம், வருகிற 2, 3-ந்தேதிகளில் ரூ.3 ஆயிரத்து 400 வரை நிர்ணயித்துள்ளனர். இதில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.1,100-க்கு குறைவாக இல்லை. அதேபோல், திருநெல்வேலி-சென்னைக்கு சாதாரண நாட்களில் ரூ.690 முதல் ரூ.2,400 வரை இருந்த கட்டணம், 2, 3-ந்தேதிகளில் ரூ.1,700 முதல் ரூ.3,800 வரை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

    • தீபாவளி முன்னிட்டு 30 கிராமங்களில் இனிப்புகள் வழங்கப்பட்டன.
    • தீபாவளி அன்றும் மலைவாழ் கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு இனிப்புகள் மற்றும் பட்டாசுகள் வழங்கப்பட உள்ளன.

    தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, ஈஷா யோக மையத்தை சுற்றியுள்ள பல்வேறு மலைவாழ் கிராமங்களைச் சேர்ந்த பழங்குடி குழந்தைகளுக்கு, ஈஷா சார்பில் புத்தாடை மற்றும் பட்டாசுகள் வழங்கப்பட்டன. மேலும் 30 கிராமங்களில் உள்ள மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

    ஈஷாவை சுற்றியுள்ள தாணிக்கண்டி, மடக்காடு, பட்டியார் கோவில்பதி, சாவுக்காடு, முள்ளங்காடு, குளத்தேறி உள்ளிட்ட பழங்குடி கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு ஈஷா சார்பில் புத்தாடைகள் மற்றும் பட்டாசுகள் வழங்கப்பட்டன. மேலும் தீபாவளி நாளன்றும் இந்த மலைவாழ் கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு இனிப்புகள் மற்றும் பட்டாசுகள் வழங்கப்பட உள்ளன.

    இதனுடன் முட்டத்துவயல், செம்மேடு, காந்தி காலனி, நொய்யல் நகர், இருட்டுப்பள்ளம், சாடிவயல் சோதனை சாவடி, ராஜீவ் காலனி உள்ளிட்ட 30 கிராமங்களில் இருக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு வீடு வீடாக சென்று இனிப்புகள் வழங்கப்பட்டன.

    ஈஷா யோக மையத்தை சுற்றியுள்ள பழங்குடியின குடியிருப்புகள் மற்றும் கிராம மக்களின் நல்வாழ்விற்காக பல்வேறு பணிகளை ஈஷாவின் கிராமப் புத்துணர்வு இயக்கத்தின் மூலம் கடந்து 20 வருடங்களாக செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • கோவிலின் குளம் அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ள ராக்கெட் லாஞ்சரால் பரபரப்பு.
    • ராக்கெட் லாஞ்சர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் சிவன் கோவில் அருகே ராக்கெட் லாஞ்சர் கண்டிபிடிக்கப்பட்டுள்ளது.

    கோவிலின் குளம் அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ள ராக்கெட் லாஞ்சரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    ராக்கெட் லாஞ்சரை அங்கிருந்து பாதுகாப்பாக ஜீயபுரம் போலீசார் கொண்டு சென்றனர்.

    மேலும், இந்த ராக்கெட் லாஞ்சர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரசியல் கட்சி தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    • த.வெ.க தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தீபாவிள வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து த.வெ.க தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தீபங்களின் ஒளி வெள்ளத்தில் காரிருள் விலகி, நல்விடியல் பிறக்கட்டும். அனைவரது இல்லங்களிலும் உள்ளங்களிலும் அன்பு, அமைதி. செல்வம் நிலைத்து நீடித்திருக்கட்டும்.

    தீப ஒளித் திருநாளைப் பாதுகாப்பாகக் கொண்டாடி மகிழ்வோம். அனைவருக்கும் இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாள் மற்றும் குருபூஜை தினத்தையொட்டி மரியாதை.
    • விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாள் மற்றும் குருபூஜை தினத்தையொட்டி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மரியாதை செலுத்தியுள்ளார்.

    அதன்படி, த.வெ.க. அலுவலகத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் படத்திற்கு மலர் விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    இதுகுறித்து விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    இந்தியத் திருநாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட அய்யா பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் பிறந்தநாள் மற்றும் குருபூஜை தினத்தையொட்டி, எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மருதுவும், கார்த்திக்கும் சேர்ந்து பரமசிவத்தை சரமாரியாக அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.
    • மாநகர போலீஸ் கமிஷனர் ரூபேஷ்குமார் மீனா உத்தரவின்பேரில் துணை கமிஷனர் கீதா மேற்பார்வையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த பேட்டை அருகே உள்ள மலையாளமேடு உடையவர் தெருவை சேர்ந்தவர் பரமசிவம்(வயது 50). இவரது மகன் மாரிசெல்வன். அதே பகுதியில் வசித்து வருபவர் மண்டையன் பெருமாள். தொழிலாளி.

    இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இவரது பெயர் ரவுடிகள் பட்டியலில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்.

    இவரது மகன்கள் மருது என்ற சுடலைமணி(வயது 27), லெட்சுமணன், கொம்பையா என்ற கார்த்தி(20). இதில் சுடலைமணி டிரைவராகவும், மற்ற 2 பேரும் விவசாய தொழிலாளிகளாகவும் இருந்து வருகின்றனர்.

    இந்நிலையில் சமீப காலமாக பரமசிவம் குடும்பத்தினருக்கும், மண்டையன் பெருமாள் குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது. அடிக்கடி ஒருவரையொருவர் முறைத்து பார்த்து கொள்வதும், பின்னர் வாக்குவாதத்தில் ஈடுபடுவதுமாக இருந்து வந்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் நேற்று இரவு பரமசிவம் சாப்பிட்டு முடித்துவிட்டு காற்று வாங்குவதற்காக வீட்டை விட்டு வெளியே தனது மகன் மாரிசெல்வத்துடன் தெருவில் நின்று பேசிக்கொண்டிருந்தார். அவரது உறவினரான விக்கி என்பவரும் அவர்களுடன் நின்றார். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் மண்டையன் பெருமாளின் மகன்கள் மருது, கார்த்தி, லெட்சுமணன் மற்றும் அவரது மருமகன் முருகபெருமாள் ஆகியோர் அங்கு வந்துள்ளனர்.

    தொடர்ந்து 2 தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், மருதுவும், கார்த்திக்கும் சேர்ந்து பரமசிவத்தை சரமாரியாக அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க முயன்ற அவரது மகன் மாரிசெல்வனுக்கும், விக்கிக்கும் வெட்டு விழுந்தது. இதனிடையே பதிலுக்கு மாரிசெல்வன் அரிவாளால் வெட்டியதில், முருகபெருமாளுக்கு வெட்டு விழுந்தது.

    இதனை கேள்விப்பட்டு அங்கு வந்த மண்டையன் பெருமாளுக்கும் அரிவாள் வெட்டு விழுந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த பரமசிவம் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த பேட்டை போலீசார் பரமசிவம் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வெட்டுக்காயம் அடைந்த 4 பேருக்கும் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதனிடையே கோஷ்டி மோதலில் நடந்த அரிவாள் வெட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 4 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

    இதனால் அங்கு மாநகர போலீஸ் கமிஷனர் ரூபேஷ்குமார் மீனா உத்தரவின்பேரில் துணை கமிஷனர் கீதா மேற்பார்வையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • சென்னையில் இருந்து மூன்று சிறப்பு ரெயில்களும் இன்று இரவு இயக்கப்படுகிறது.
    • எழும்பூர், தாம்பரம், சென்ட்ரலில் இருந்து சிறப்பு ரெயில்கள் இன்று இயக்கப்படுகின்றன.

    தீபாவளி பண்டிகையை ஒட்டி சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக முழுக்க முன்பதிவு இல்லா மூன்று சிறப்பு ரெயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, இந்த மூன்று சிறப்பு ரெயில்களும் இன்று இரவு இயக்கப்படுகிறது.

    எழும்பூரில் இருந்து இரவு 9.10 மணிக்கு விழுப்புரம், சிதம்பரம், தஞ்சை, வழியே திருச்சிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றன.

    தாம்பரத்தில் இருந்து இரவு 12.30 மணிக்கு விழுப்புரம், விருதாச்சலம், அரியலூர் வழியே திருச்சிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றன.

    சென்ட்ரலில் இருந்து இரவு 10.10 மணிக்கு அரக்கோணம், திருப்பத்தூர், திருப்பூர் வழியே கோவை போத்தனூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றன.

    • மதுரை வெள்ள பாதிப்பு குறித்து, அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.
    • செல்லூரில் 290 மீட்டர் நீளத்திற்கு சிமெண்ட் கால்வாய் அமைக்க உத்தரவு.

    மதுரை மாவட்டடத்தில் மழை பாதிப்பு எதிரொலியால் செல்லூரில் ரூ.11.9 கோடி மதிப்பீட்டில் புதிய சிமெண்ட் கால்வாய் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    மதுரை வெள்ள பாதிப்பு குறித்து, அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

    ஆலோசனையில் அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட செல்லூரில் மீண்டும் பாதிப்பு ஏற்படாதவாறு சிமெண்ட் கால்வாய் அமைக்க நடவடக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    மேலும், மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட செல்லூரில் மீண்டும் பாதிப்பு ஏற்படாதவாறு 290 மீட்டர் நீளத்திற்கு சிமெண்ட் கால்வாய் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    ×