என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பாராளுமன்றத்தில் பலவிதமான மோசமான திட்டங்களை கொண்டு வருவதாக அறிவித்துள்ளனர்.
- தனிநபர் பிரச்சனைக்கு எல்லாம் தமிழக அரசு பொறுப்பு ஏற்க முடியாது.
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் சி.பி.எம். மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,
அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களிடம் அதானி ரூ.2,200 கோடி லஞ்சம் கொடுத்து தான் முதலீட்டை ஏற்றுள்ளார். இது தொடர்பாக அமெரிக்க நீதிமன்றம் அதானி, அவரது மருமகன் உட்பட 7 பேர் மீது பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது. இவ்வளவு பெரிய முறைகேடு நடந்ததை அங்குள்ள பங்கு சந்தை நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. ஆனால் இந்தியாவில் உள்ள சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை இதனை கண்டு கொள்ளவில்லை. ஏன் இவ்வளவு பெரிய முறைகேட்டை இவர்கள் கண்டுபிடிக்கவில்லை. அமெரிக்க நிறுவனம் சொன்ன பின்பாவது மத்திய அரசு ஏன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கும், எங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என அந்த நிறுவனம் சார்பில் பதில் கூறப்பட்டுள்ளது. இதனை மோடி அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.
அதானி என்பது முகம் தான், பின்னால் இருப்பது நரேந்திர மோடி தான். அவரது பினாமியாக இருப்பதால்தான் அதானி மீது எவ்வளவு பெரிய ஊழல் குற்றச்சாட்டு வந்தாலும் மோடி அரசாங்கம் அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுப்பது கிடையாது. அவர்கள் மீது சம்மன் அனுப்புவதில்லை. விசாரணைக்கு கூட அழைப்பது இல்லை. எனவே மத்திய அரசு உடனடியாக அதானியை கைது செய்ய வேண்டியும், முறையான விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும்.
இந்த முறைகேடு பட்டியலில் தமிழ்நாடு அரசு இடம் பெற்றுள்ளது. தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி, நாங்கள் அதானியுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை எனக் கூறியுள்ளார்.
தனியார் நிறுவனங்களிடமிருந்து மின்சாரத்தை மத்திய அரசு வாங்கி, மாநிலங்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள். நான் தமிழக முதலமைச்சரை கேட்டுக் கொள்வது, தமிழ்நாடு பெயர் அந்தப் பட்டியலில் வந்துள்ளதால் இது சம்பந்தமாக தமிழக அரசு விசாரணையை தெளிவுபடுத்த வேண்டும். முழுமையான விவரங்கள் என்னவென்று தெரிவிக்க வேண்டும்.
பாராளுமன்றத்தில் பலவிதமான மோசமான திட்டங்களை கொண்டு வருவதாக அறிவித்துள்ளனர். அவர்களுக்கு பாராளுமன்றத்தில் அறுதி பெரும்பான்மை இல்லாத சூழ்நிலையில் கூட ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற சட்டத்தை முன்மொழிவதாக கூறுகின்றனர்.
ஏதோ ஒரு முறைகேடு மூலமாக பாராளுமன்றத்தில் இந்த சட்ட திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு சதி திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற துடிக்கிறது.
தமிழக சட்டமன்றம் விரைவில் கூட உள்ளது. தமிழக சட்டமன்றத்தை 3 அல்லது 4 நாட்கள் நடத்துவதற்கு பதிலாக, எதிர்க்கட்சிகள் தோழமைக் கட்சிகள் கருத்துக்களை பேசுவதற்கும், நாட்டில் உள்ள பல முக்கியமான பிரச்சனைகளை விவாதிப்பதற்கும் உரிய அவகாசத்துடன் சட்டமன்றத்தை நடத்த வேண்டும். முதலமைச்சரும் சபாநாயகரும் சட்டமன்றத்தை போதுமான அவகாசம் கொடுத்து நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காலி பணி இடங்களை நிரப்ப வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியத்தில் உள்ள தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யும் அறிவிப்பினை சட்டமன்றத்தில் தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.
பள்ளியில் ஆசிரியர்கள், நீதிமன்றத்தில் வக்கீல்கள், மருத்துவமனையில் டாக்டர்கள் தாக்கப்படுவதும், கொலை செய்யப்படுவதும் வன்மையான கண்டனத்துக்குரியது. இது தனிமனித விரோதம் காரணமாக நடைபெறுகிறது. தனிநபர் பிரச்சனைக்கு எல்லாம் தமிழக அரசு பொறுப்பு ஏற்க முடியாது. போதைப்பொருள் ஒழிப்பதில் அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசார் இந்த விஷயத்தில் மெத்தனமாக உள்ளனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிக்கட்டான்பட்டியில் மத்திய அரசு 2000க்கும் மேற்பட்ட இடங்களில் கனிம வளங்களை எடுப்பதற்கு ஏலம் விட்டுள்ளது. அந்த இடத்தை பல்லுயிர் பாதுகாப்பு மையம் என்கின்ற முறையில் தமிழக அரசு 6 மாதத்திற்கு முன்பே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு உடனடியாக அந்த டெண்டரை ரத்து செய்ய வேண்டும்.
2026 தேர்தலில் கூட்டணிகள் மாறும் என பலர் அவர்கள் யூகத்தின் அடிப்படையில் கூறி வருகின்றனர். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கு மேல் உள்ளது. கூட்டணி மாறுவதற்கான முகாந்திரம் இருப்பதாக தெரியவில்லை .
அ.தி.மு.க.வில் உள்ள தலைவர்களுக்கிடையே கடுமையான கருத்து வேறுபாடுகள் உள்ளது. அ.தி.மு.க. பாராளுமன்ற தேர்தலில் தோற்றத்துக்கு சரியான கூட்டணி இல்லாதது தான் காரணம் என கூறுகின்றனர்.
மீண்டும் அ.தி.மு.க. பா.ஜ.க.வுடன் கூட்டணிக்கு சென்றால் அ.தி.மு.க. என்ற ஒரு கட்சியே இருக்காது.
முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசும் போது, கூட்டணி கட்சிகளுக்கு சீட்டு மற்றும் கோடிக்கணக்கில் பணம் கொடுக்க வேண்டும் என பேசி உள்ளார். பொத்தாம் பொதுவாக சொல்லாமல் உங்களிடம் யார் பணம் கேட்டார்கள் என பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.
யார் பணம் கேட்டார்கள்? நீங்கள் எவ்வளவு பணம் கொடுத்தீர்கள்? என்பதை வெளிப்படையாக சொல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது சச்சிதானந்தம் எம்.பி. மதுக்கூர் ராமலிங்கம் மற்றும் பலர் உடனிருந்தனர்.
- நாம் தமிழர் கட்சியினர் யாரும் விலகவில்லை, நாங்கள் தான் அனுப்பி வைக்கிறோம்.
- மற்ற கட்சிகளில் உளவு பார்ப்பதற்காக நாங்கள் தான் எங்கள் கட்சியினரை அனுப்பி வைக்கிறோம்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் நாதக கட்சியில் இருந்து விலகுவோர் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதுதொடர்பாக சீமான் கூறியதாவது:
* நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுபவர்கள் எங்களின் ஸ்லீப்பர் செல்.
* நாம் தமிழர் கட்சியினர் யாரும் விலகவில்லை, நாங்கள் தான் அனுப்பி வைக்கிறோம்.
* மற்ற கட்சிகளில் உளவு பார்ப்பதற்காக நாங்கள் தான் எங்கள் கட்சியினரை அனுப்பி வைக்கிறோம்.
கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து விலகுவது தொடர்பான கேள்விக்கு சிரித்துக்கொண்டே அவர் பதில் அளித்தார்.
- மாணவர் ஆசிரியரை அசிங்கமாக திட்டி கொலை மிரட்டல் விட்டதாக ஆசிரியர் கொடுத்த புகாரின் பேரில் மாணவர் சேட்டு மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
- 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
உளுந்தூர்பேட்டை:
உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் கெடிலம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 கணித ஆசிரியர் ஜெய்சங்கர் மீது வழக்கு பதிவு செய்ததால் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநாவலூர் கெடிலம் ஆற்றுப்பகுதியில் அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு கணித ஆசிரியராக ஜெய்சங்கர் பணி ஆற்றி வருகிறார். அவரை அதே பள்ளியில் படிக்கும் 12-ம் வகுப்பு சி குரூப் மாணவன் சேட்டு ஜெய்சங்கரை அசிங்கமாக திட்டியதாக தெரிகிறது. அவர் அந்த மாணவனை அழைத்துக் கொண்டு தலைமை ஆசிரியர் அலுவலகத்தில் ஒப்படைத்தார்.
இந்த நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மாணவன் ஆசிரியர் ஜெய்சங்கர் அடித்து விட்டதாக கூறி உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதேபோல் மாணவர் ஆசிரியரை அசிங்கமாக திட்டி கொலை மிரட்டல் விட்டதாக ஆசிரியர் கொடுத்த புகாரின் பேரில் மாணவர் சேட்டு மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த சம்பவம் அந்தப் பள்ளியில் மாணவர்களுக்கிடையே கிடைத்த தகவலின் பேரில் ஆசிரியர் பள்ளிக்கு வராததால் ஆசிரியர் மீது ஏன் பொய் வழக்கு போட்டீர்கள் என்று மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சம்பவம் தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெ க்டர் இளையராஜா, சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன், சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜாபர் அலி, ஜெயா, அஷ்டலட்சுமி தனி பிரிவு போலீசார் செந்தமிழ் செல்வன், சரவணன் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை உருவாகி வருகிறது.
- சனாதன எதிர்ப்பு என்பது பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வை நம்புவது.
- ஒருபோதும் எங்கள் நம்பிக்கை தான் சரியானது என்று காயப்படுத்தி அதை திணிக்க முயன்றதில்லை.
சென்னை விமான நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சனாதனம் வேறு... கடவுள் நம்பிக்கை என்பது வேறு.
கடவுள் நம்பிக்கை, மத நம்பிக்கை இது சாதாரண மக்களுடைய உணர்வுகள். சாதாரண மக்களுடைய உணர்வுகளை மதிக்க வேண்டியது எங்களை போன்றவர்களது கடமை.
தேவாலயத்திற்கு அழைக்கின்றபோது நாங்கள் அங்கு செல்கிறோம். மசூதிகளுக்கு அழைக்கின்றபோது அங்கே செல்கிறோம். இதேபோன்று ஏராளமான தோழர்கள் கோவில்களுக்கு அழைக்கிறார்கள். கோவில்களுக்கும் செல்கிறோம். இது உணர்வுகளை மதிக்கிற ஒரு நிலைப்பாடு அவ்வளவு தான்.
சனாதன எதிர்ப்பு என்பது பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வை நம்புவது. ஆண்கள் மேலானவர்கள். பெண்கள் கீழானவர்கள். வருண அடிப்படையிலே ஒரு குறிப்பிட்ட வர்ணம் மேலானது. மற்ற வர்ணங்கள் கீழானவை என்று போதிக்கின்ற அந்த முறையும் அதை நம்புகின்ற நடவடிக்கைகளும் தான் விமர்சனத்திற்கு உரியவை. அவற்றை தான் நாங்கள் எதிர்க்கிறோம். அதைத்தான் நாங்கள் அம்பலப்படுத்துகிறோம்.
மக்களுடைய உணர்வுகள், நம்பிக்கைகள் அவரவருக்கானது. ஒருபோதும் எங்கள் நம்பிக்கை தான் சரியானது என்று காயப்படுத்தி அதை திணிக்க முயன்றதில்லை.
அதனுடைய ஒரு வெளிப்பாடு தான் பழனிக்கு சென்று இருந்தபோது இயக்க தோழர்கள் விடுத்த அழைப்பை ஏற்று 30 ஆண்டுகளுக்கு பிறகு அந்த மலைக்கு சென்று வந்து இருக்கிறேன். இதில் எந்த முரண்பாடும் இல்லை என்று நம்புகிறேன் என்று கூறினார்.
- சதுப்பு நில பகுதியில் ஆக்கிரமித்து கட்டி இருந்த 47 வீடுகளை அகற்ற நோட்டீசு வழங்கப்பட்டது.
- வீடுகள் இடிக்கப்படுவதை கண்டதும் லட்சுமி என்பவர் மயங்கி விழுந்தார்.
சோழிங்கநல்லூர்:
துரைப்பாக்கம் அடுத்த மேட்டுக்குப்பம், வி.பி.ஜி. அவென்யூ மகாலட்சுமி நகர் பகுதியில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள், கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன.
இதனை அகற்ற வனத்துறையினர் முடிவு செய்த போது ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி நீர் நிலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார். இதையடுத்து சதுப்பு நில பகுதியில் ஆக்கிரமித்து கட்டி இருந்த 47 வீடுகளை அகற்ற நோட்டீசு வழங்கப்பட்டது. ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் வீடுகளை அகற்றாமல் இருந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை வருவாய்த்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து அகற்ற ஜே.சி.பி.எந்திரத்துடன் வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் அதிகாரிகளு டன் கடும் வாக்குவாதம் செய்தனர்.
மேலும் வீடுகளை இடிக்க விடாமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களிடம் துரைப்பாக்கம் போலீசார் மற்றும் அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்து தொடர்ந்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பத்மா, பன்னீர்செல்வம், ராஜா உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
வீடுகள் இடிக்கப்படுவதை கண்டதும் லட்சுமி என்பவர் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். கைதான அனைவரும் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
பின்னர் சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 47 வீடுகளும் இடித்து அகற்றப்பட்டது. சுமார் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
- உண்மையான சங்கி யார் என்றால் எங்களையெல்லாம் சங்கின்னு சொல்றவங்க தான்.
- திடீரென்று பிரதமரை காலையில் மகனோ, மாலையில் அப்பாவோ சந்திக்கிறீங்க.
சென்னை:
ரஜினிகாந்தை சங்கி என்றும், நாம் தமிழர் கட்சி பாஜகவின் B டீம் என்றும் அழைக்கப்படுவது குறித்து சீமான் கூறியதாவது:-
சங்கி என்றால் சக தோழன், நண்பன் என்று அர்த்தம். சங்பரிவாரில் இருந்து சங்கி என்று சொல்கிறார்கள். உண்மையான சங்கி யார் என்றால் எங்களையெல்லாம் சங்கின்னு சொல்றவங்க தான்.
திடீரென்று பிரதமரை காலையில் மகனோ, மாலையில் அப்பாவோ சந்திக்கிறீங்க. எதுக்கு சந்திக்க போனோம்னு சொல்லமாட்டிறீங்க... என்ன சந்திச்சி பேசினோம்னு சொல்லமாட்டிறீங்க. இப்போ நான் ரஜினிகாந்த்தை சந்தித்த போது பேசினதை சொல்றேன். அதை ஏன் சொல்ற மாட்டீறீங்க. அதை ஏன் சொல்ல மாட்டிறீங்க.. அப்போ என்னை வந்து கேட்குறாங்க கள்ள உறவான்னு.. நல்ல உறவே இருக்கு.
பொண்ணு கொடுத்து பொண்ணு எடுத்த சம்மந்திங்கள் மாதிரி பிரதமரும், முதலமைச்சரும் போய் சந்தித்து வர்றீங்க. ஆனா வெளியில வந்து எங்களை சங்கின்னு சொல்றீங்க. இது என்ன கொடுமை . திமுகவை எதிர்த்தாலே சங்கின்னா... அப்போ இத எப்படி சொல்றது ... அப்போ பெருமையா நாங்க சங்கி-ங்கறத ஏற்கதான் வேண்டும். சங்கின்னா நண்பன் என்று பொருள் இருக்கு என்றார்.
- ஒரு படத்தின் மூலமா ஏதாவது ஒரு நல்ல செய்தி சொல்லணும்னு நினைக்கிறதும் அரசியல்தான்.
- நான் புரிஞ்சிகிட்டவரை அரசியல் என்பது ஒரு வாழ்வியல்.
சென்னை:
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:-
ஆட்சியாளர்கள் சிறப்பாக ஆட்சி செய்யும்போது அந்த தலைவனை மக்கள் கொண்டாடுவார்கள். அப்படி இல்லாததால் நாங்க நல்ல ஆட்சி கொடுத்து இருக்கோம்... சிறப்பாக செய்றோ... யாராலையும் குறை சொல்ல முடியாதுன்னு ஆட்சியாளர்களே சொல்றாங்க.
மக்களால் கொண்டாடப்படும் தலைவன் என்றால், ஒரு தலைவன் வரப்போ தன்னிச்சையா ஓடிப்போய் மக்களே வரவேற்பு கொடுக்கறது இருக்கோம். ஆனா இங்க அப்படி இல்ல... நல்ல ஆட்சி கொடுத்தா வாக்குக்கு காசு கொடுக்க வேண்டிய நிலைமை தேவை இல்லை. அவசியமே இல்லை. தொடர்ச்சியா அதை தான் செய்றாங்க.. இங்க வந்து ஒண்ணுதான் சொல்ல தோணுது... சேவை அரசியலோ... செயல் அரசியலோ கிடையாது... செய்தி அரசியல் தான். கட்சி அரசியல் தேர்தல் அரசியல் தான் செய்யப்படுகிறது. மக்கள் அரசியல் செய்யப்படலை. இந்த மாறுதல் தான் System Wrong-னு ஆங்கிலத்தில் ரஜினிகாந்த் சொன்னார். அதை நான் தமிழில் அமைப்பு தப்பா இருக்கு மாத்தணும்னு சொன்னேன். அதுகுறித்து தான் பேசினோம்.
இந்த நாடும் மக்களும் நல்லா இருக்கணும் நினைக்கிறே எல்லா நல்லா உள்ளங்களுக்கும் அரசியல். அதுவே அரசியல் தான். ஒரு படத்தின் மூலமா ஏதாவது ஒரு நல்ல செய்தி சொல்லணும்னு நினைக்கிறதும் அரசியல்தான்.
நான் புரிஞ்சிகிட்டவரை அரசியல் என்பது ஒரு வாழ்வியல். ஒரு மனிதனின் உடலில் இருந்து உயிரை பிரிப்பதும் ஒரு மனிதனின் வாழ்வியலில் இருந்து அரசியலை பிரிப்பதும் இரண்டும் ஒன்று தான் என்பது என்னுடைய மதிப்பீடு. என்னுடைய புரிதல், கோட்பாடு... அந்த அடிப்படையில் அரசியல் இல்லாமல் எதுவும் இல்லை. அரசியல் என்பது தனியா என்று இல்லை. அது வாழ்வியல். அதனால் ஒரு மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை அரசு தான் எல்லாத்தையும் தீர்மானிக்கிறது. அந்த அரசு அரசியலைத்தான் தீர்மானிக்கிறது. அதனால் ரஜினிக்கு அரசியலில் ஆர்வம் இல்லாமல் எப்படி இருக்கும்.
விமர்சனத்தை கடக்க இயலாதவன், விமர்சனத்தை தாங்க முடியாதவன் விரும்பியதை அடைய முடியாது. அவதூறுகளை கடக்க இயலாதவன் அற்ப வெற்றியை கூட தொடமுடியாது. இதை என்னிக்கோ நான் படிச்ச கோட்பாடு என்றார்.
- நவம்பர் 25-ந்தேதி (திங்கட்கிழமை) கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
- 26-ந்தேதி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்ங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, நாளை 23-ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த இரு தினங்களில் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
தெற்கு அந்தமான் கடல் பகுதிகளிலிருந்து மன்னார் வளைகுடா வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
22-11-2024 முதல் 24-11-2024 வரை
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
25-11-2024:
கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
26-11-2024:
தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஒரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
27-11-2024:
தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
28-11-2024:
தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சென்னை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:-
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
- நல்ல தலைமை எது என்பதை மக்கள் தான் முடிவு செய்யணும்.
- இங்கு தலைவர்கள் உருவாகவில்லை. உருவாக்கப்படுகிறார்கள்.
நடிகர் ரஜினிகாந்தை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று சந்தித்தார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்தில் அவரை சீமான் சந்தித்து பேசினார்.
இதையடுத்து ரஜினிகாந்தை திடீரென சந்தித்தது குறித்து சீமான் கூறியதாவது:-
ரொம்ப நாளாகவே சந்திக்கணும் என்று இருந்தது. அதனால நேற்று சந்தித்தோம். அன்பின் நிமித்தமாக மரியாதையான சந்திப்பு தான். அரசியல் கொடூரமான ஆட்டம். ரஜினிகாந்தின் மனநிலைக்கு இது சரி வராது. இந்த களத்தில் நேர்மையாக இருக்கறது ரொம்ப கஷ்டம்.
நிறைய நேரம் பேசினோம். அதை எல்லாத்தையும் பகிர்ந்துக்க முடியாது. ஒரு அன்பான மரியாதை நிமித்தமான சந்திப்புதான். திரையுலகம், அரசியல் குறித்து விவாதித்தோம்.
நல்ல தலைமை எது என்பதை மக்கள் தான் முடிவு செய்யணும். இங்கு தலைவர்கள் உருவாகவில்லை. உருவாக்கப்படுகிறார்கள்.
உருவாக்கப்படும் தலைவர்களுக்கு உழைக்கும் அடிதட்டு மக்களின் உணர்வு, பசி, கண்ணீர், கவலை என்று எதுவும் தெரியாது. அந்த மாதிரியான தலைவர்கள் இப்போ இல்லை. அதனால ரஜினிகாந்த் சொல்ற மாதிரி வெற்றிடம் இன்னமும் இருக்கிறது.
ரஜினிகாந்த் சொல்ற மாதிரி வாக்குகள் நன்மதிப்பு பெற்று பெறப்படுவதில்லை. வாங்கப்படுகிறது என்றார்.
- போலீசார் கஞ்சாவையும், கடத்தலுக்கு பயன்படுத்தியதாக கூறி ஒரு காரையும் பறிமுதல் செய்தனர்.
- லாரியில் கஞ்சா கடத்தி வரப்பட்ட சம்பவம் பேராவூரணி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே லாரியில் கஞ்சா கடத்தப்படுவதாக தஞ்சை சிறப்பு போலீஸ் படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில், போலீசார் பேராவூரணி முடச்சிக்காடு கலைஞர் நகர் பகுதியில் இன்று அதிகாலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பேராவூரணி- ஊமத்தநாடு சாலையில் பணியில் ஈடுபட்ட போது, அவ்வழியாக வந்த லாரியை மறித்து சோதனை செய்தனர். அப்போது லாரியில் கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. கடத்தி வரப்பட்ட கஞ்சாவின் மொத்த எடை 300 கிலோ ஆகும்.
தொடர்ந்து, போலீசார் கஞ்சாவையும், கடத்தலுக்கு பயன்படுத்தியதாக கூறி ஒரு காரையும் பறிமுதல் செய்தனர். மேலும், கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட காரங்குடா பகுதியை சேர்ந்த அண்ணாத்துரை (வயது 44), தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பகுதியை சேர்ந்த தர்மராஜ் (34), அம்மணிச்சத்திரம் பகுதியை சேர்ந்த முத்தையா (60) ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடம் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லாரியில் கஞ்சா கடத்தி வரப்பட்ட சம்பவம் பேராவூரணி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கள ஆய்வு கூட்டம் நெல்லை சந்திப்பு உடையார்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
- சில நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
நெல்லை:
2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் அ.தி.மு.க. பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அனைத்து மாவட்டங்களிலும் கள ஆய்வு கூட்டம் நடத்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
அந்த வகையில் அ.தி.மு.க. சார்பில் பல்வேறு மாவட்டங்களில் கள ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கள ஆய்வு கூட்டம் நெல்லை சந்திப்பு உடையார்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி எம்.எல்.ஏ., அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அருணாச்சலம் ஆகியோர் கலந்து கொண்டு கள ஆய்வு கூட்டத்தை நடத்தினர். இதில் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா மற்றும் மாவட்ட நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட சார்பு அணிகளான எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, அண்ணா தொழிற்சங்கம், வக்கீல் பிரிவு, சிறுபான்மை நலப்பிரிவு, விவசாயப்பிரிவு, மீனவரணி, தகவல் தொழில்நுட்பப்பிரிவு மற்றும் பகுதி, ஒன்றிய, பேரூர், வட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சட்டமன்ற தேர்தலை சந்திப்பது குறித்து பல்வேறு வியூகங்கள் குறித்து நிர்வாகிகள் கருத்து தெரிவித்தனர். அப்போது ஒரு நிர்வாகி பேசும்பொது, கடந்த பாராளுமன்ற தேர்தலில் நெல்லை மாநகர தொகுதிகளில் நாம் தமிழர் கட்சியை விட குறைவான வாக்குகளை பெற்றதாகவும், வாக்காளர் சேர்த்தல், திருத்த முகாம் நடைபெறும்போது அ.தி.மு.க. நிர்வாகிகள் இடம் பெறவில்லை எனவும் பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்து பேசினார்.

கள ஆய்வு கூட்டத்தில் கைகலப்பில் ஈடுபட்டவர்களை முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி எச்சரித்த காட்சி
இதனைக்கேட்ட மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜாவின் ஆதரவாளர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் ஈடுபட்டனர். சில நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
இதனைப்பார்த்த எஸ்.பி. வேலுமணி, தகராறு செய்பவர்களுக்கும், கட்டுப்பாடு இல்லாதவர்களுக்கு இங்கு இடமில்லை. தவறு செய்தவர்கள் குறித்து கட்சி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும். எனவே அனைவரும் அமைதியாக இருங்கள் என்று கூறினார்.
தொடர்ந்து முன்னாள் எம்.பி. முத்துக்கருப்பனும் நிர்வாகிகளை அமைதிப்படுத்தினார்.
- முதல்வர் சிறப்பான திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருகிறார்.
- மீனவர் நலனில் எப்போதும் உறுதியாக இருப்பவர் முதல்வர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உலக மீனவ தினவிழா பொதுக்கூட்டம் நடந்தது. பொது கூட்டத்தில் பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

விழாவில் பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேசியதாவது:-
மீனவ மக்களுக்காக ராமநாதபுரத்தில் வரலாற்று சிறப்புமிக்க மீனவர் மாநாடு நடத்தியவர் முதல்வர். சென்னையில் வெள்ளம் வந்த போது ஒரே நாளில் வெள்ளத்தை அகற்றி மின்சாரம் வழங்கியவர் நமது முதல்வரின் ஆட்சி என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மீன்பிடி தடைக்கால நிவாரண நிதியை 5 ஆயிரத்தில் இருந்து 8 ஆயிரமாக உயர்த்தி தந்தவர் முதல்வர் தான். மீனவர் நலனில் எப்போதும் உறுதியாக இருப்பவர் முதல்வர் தான் அதனை செயல்படுத்தியும் காட்டியுள்ளார்.
சாதி மதமின்றி இயங்கும் ஒரு இயக்கமாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆனாலும் சரி, திராவிட முன்னேற்ற கழகமானலும் சரி திராவிட கட்சிகள் தான் தமிழகத்தை ஆள வேண்டும் என்று நிர்பந்தம் உள்ளது. முதல்வர் சிறப்பான திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருகிறார்.
மீனவர் மீது அக்கறை உள்ளவர்கள் என இந்தியாவில் வேண்டுமானால் காங்கிரஸ் கட்சி என கூறலாம் ஆனால் தமிழகத்தில் தி.மு.க. தான் என்பதனை நீங்கள் உணர வேண்டும். மத்திய அரசோடு இணக்கமாக இருக்க வேண்டும். ஆனால் 1 ரூபாய்க்கு 29 பைசா தரும் மத்திய அரசு நமக்கு வேண்டாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் விழாவில் கலந்து கொண்ட தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசும் போது,
`பா.ஜ.க. கடல் தாமரை மாநாடு நடத்தி மோடி ஆட்சிக்கு வந்தால், மீனவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது, படகுகள் இலங்கை அரசால் சிறை பிடிக்கப்படாது, அதையும் மீறி பிடித்தாலே பாதுகாப்புக்கு இந்திய ராணுவம் வந்து நிற்கும் என்றார்கள்.
ஆனால் 10 ஆண்டுகளாக வாக்குறுதியை காட்டில் பறக்கவிட்டு விட்டார்கள். மீனவர் தினம் கொண்டாடும் இந்நாளில் ஒரு பக்கம் கண்ணீரும் கம்பலையுமாக மீனவர்கள் உள்ளார்கள். மீனவர்கள் தான் பூர்வ குடிகள், மண்ணின் மக்கள்.

மீனவர்களை ஓரளவு தாங்கி பிடிப்பது தமிழகம் தான். ஆனால் இது போதாது அதிக பிரதிநிதித்துவம் வேண்டும். மீனவர்கள் விவகாரத்தில் வெளியுறவுக் கொள்கை தோல்வி அடைந்துள்ளது. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்படுவது தொடர்கிறது' என்றார்.
விழாவில் மேயர் மகேஷ், மீனவர் அணி மாநில செயலாளர் ஜோசப் ஸ்டாலின், பிஷப் நசரேன் சூசை, டன்ஸ்டன், நிக்சன், மற்றும் மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவின் இறுதியில் பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு வீர வாள் பரிசாக வழங்கப்பட்டது.






