என் மலர்
உள்ளூர் செய்திகள்
- விரைவாக ஒரு பிளாஷ்பேக்கை நினைவூட்டி, அவர்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறோம்.
- கடந்த 2021-ம் ஆண்டு, தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் அதனை நிராகரித்தது.
சென்னை:
அதானி விவகாரத்தில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தி.மு.க. அரசு மீது பரபரப்பு குற்றச்சாட்டை கூறி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பாராளுமன்றத்தில், இந்திக் கூட்டணிக் கட்சிகள், நமது பிரதமர் மோடி மீது அவதூறு கூறி நடத்திய நாடகத்தைக்காண நேர்ந்தது. இது முழுக்க முழுக்க பாராளுமன்றத்தை முடக்கி, மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் முயற்சி மட்டுமே அன்றி, வேறு எந்த ஆக்கப்பூர்வமான காரணங்களுக்காகவும் இல்லை.
குறிப்பாக, இந்த நாடகத்தைத் ராகுல் காந்தி அரங்கேற்றிய அதே நேரத்தில், 'தமிழக மின்வாரியத்தின் சிறிய வகை மீட்டர்களுக்கான ஒப்பந்தம், அதானி நிறுவனத்துக்கு வழங்கப்படலாம்' என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ.19 ஆயிரம் கோடி ஆகும்.
இப்போது, 'ஸ்டாலினும் அதானியும் ஒன்று, அதனால் அதானி பாதுகாப்பாக உள்ளார்' என்ற வாசகம் பொறித்த டிஷர்ட்டை ராகுல் காந்தி அணிவாரா?
மேலும், தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மற்றும் தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, விரைவாக ஒரு பிளாஷ்பேக்கை நினைவூட்டி, அவர்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறோம்.
தமிழக மின்சார ஒழுங்கு முறை ஆணையம் கடந்த 12.9.2014 அன்று, அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்திடம் இருந்து சூரிய சக்தி மின்சாரம் கொள்முதல் செய்ய, ஒரு யூனிட்டுக்கு ரூ.7.01 கட்டணத்தை நிர்ணயித்தது. மேலும் இந்தக் கட்டணமானது, மார்ச் 31, 2016 வரை செல்லுபடியாகும் எனக் கால நீட்டிப்பு செய்யப்பட்டது.
கடந்த 2015-ம் ஆண்டு, அப்போது எதிர்க்கட்சி வரிசையில் இருந்த மு.க.ஸ்டாலின், மத்தியப் பிரதேச மாநிலத்தில் இதே அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம், சூரிய சக்தி மின்சாரம் யூனிட் ஒன்றுக்கு ரூ.6.049 என நிர்ணயம் செய்திருக்கும் போது, தமிழகத்தில் யூனிட் ஒன்றுக்கு ரூ.7.01 எனக் கொள்முதல் விலையை நிர்ணயம் செய்ததை அ.தி.மு.க. அரசு விளக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.
இதன் பின்னர், கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், மின்சார வாரியம், அதானி திட்டத்தைச் செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறி, 25 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்திற்கு மட்டும், ஒரு யூனிட்டுக்கு ரூ.7.01 விலையில் கொள்முதல் செய்வதாகவும், மீதமுள்ள 47 மெகாவாட் திட்டத்துக்கு, ஒரு யூனிட்டுக்கு ரூ.5.01 விலையிலும், மற்றொரு 216 மெகாவாட் திட்டத்திற்கும், யூனிட் ஒன்றுக்கு ரூ.5.01 என்ற விலையில் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்ய இரண்டு கட்டண ஆணைகளை வெளியிட்டது. அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம், தமிழக மின்சார வாரியத்தின் இந்த கட்டண மாறுபாட்டுக்கு எதிராக, தமிழக மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் மேல் முறையீடு செய்தது. ஆனால், கட்டணத் திருத்தம் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம், தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனங்களின் சூரிய சக்தி மின் திட்டங்களுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.7.01 கட்டணத்தைத் தமிழக மின்சார வாரியத்திடம் இருந்து பெறுவதற்கு ஒரு குறிப்பிட்ட கால நீட்டிப்பு வழங்குவதற்கான கோரிக்கைகளை நிராகரித்தது. ஆனால், கடந்த 2023-ம் ஆண்டு, ஜூலை மாதம், தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்துக்கு ஆதரவாக, தமிழக மின்சார வாரியம் நிர்ணயித்த மாறுபட்ட கட்டணத்தை ரத்து செய்து தீர்ப்பளித்தது.
தங்களுக்குச் சாதகமான தீர்ப்பு வந்தால், ஒரு முறை வருவாயாக, தங்களுக்கு ரூ.568 கோடி வருவாய் கிடைக்கும் என்று அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது இங்கு முக்கியமாகக் கவனிக்கத்தக்கது.
மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு இணங்க, தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் உத்தரவு இருப்பதாக தி.மு.க. அரசால் கூற முடியாது. ஏனெனில், கடந்த 2019-ம் ஆண்டு, அதானி நிறுவனத்துக்கு ஆதரவாகத் தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது, ஆனால் கடந்த 2021-ம் ஆண்டு, தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் அதனை நிராகரித்தது.
எங்கள் கேள்வி என்ன வென்றால், அதானியை எதிர்ப்பதாகக் கூறிக் கொண்டு, அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம், ஒரு முறை வருவாயாக ரூ.568 கோடி வருவாய் ஈட்ட உதவியாக, திமுக அரசு தனது மின் கொள்முதல் தொடர்பான முடிவை மாற்றிக் கொண்டதன் காரணம் என்ன என்பது தான். இதற்கு பதில் சொல்வார்களா?
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
- வெடிகுண்டுகள் வெடிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது.
- சினிமா படப்பிடிப்பு நடத்த கடும் எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் விரட்டியடிப்பு
மதுரை:
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள பல்லுயிர் வனக்காப்பக்கமாக அரிட்டாபட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இயற்கை எழில் மிகுந்த மற்றும் 200-க்கும் மேற்பட்ட பறவையினங்கள் வசித்து வரும் இந்த பகுதியில் திரைப்பட குழுவினர் அவ்வப்போது வந்து திரைப்படங்களை சூட்டிங் செய்வது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திரைப்பட குழுவினர் அதிக சத்தம் எழுப்பக்கூடிய வெடிகளை பிடித்து வெடிகுண்டு வெடிப்பது போன்ற காட்சிகளை படமாக்கினர். இதன் காரணமாக பொதுமக்களுக்கு இடையூறும், பறவைகள் மற்றும் வன விலங்குகளுக்கும் அச்சம் எழுந்தது.
இதையடுத்து அப்பகுதி மக்கள் சினிமா படப்பிடிப்பு நடத்த கடும் எதிர்ப்பு தெரிவித்து அந்த குழுவினரை விரட்டினர்.
இதற்கிடையே தற்போது அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு இந்துஸ்தான் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியிருப்பதாக தகவல் வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரிட்டாபட்டி, மீனாட்சிபுரம் பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். தமிழக அரசு டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதி அளிக்காது என்று அமைச்சர் மூர்த்தி உறுதியளித்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முதல் சுமார் 50-க்கும் மேற்பட்ட வாகனங்களில் புதியதாக ஒரு திரைப்படத்திற்கு படப்பிடிப்பு குழுவினர் பெட்ரோல் கேன்கள் போன்ற பொருட்களுடன் பல்லுயிர் வனகாப்பகம் அருகே வந்து முகாமிட்டு உள்ளனர். தொடர்ந்து அவர்கள் அந்த பகுதியில் படப்பிடிப்பு காட்சியை நடத்திக் கொண்டிருந்தனர்.

அப்போது அதிக சத்தம் எழுப்பக்கூடிய வெடிகுண்டுகள் வெடிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. மேலும் ஜே.சி.பி., கிரேன், கம்ப்ரசர்களை கொண்டு சுமார் 50-க்கும் மேற்பட்டோர் பாறைகளை வெடிவைத்து தகர்த்தாக தெரிகிறது.
மேலும் அதிக அளவில் மண்எண்ணை, பெட்ரோல் கேன்களும் அங்கு இருந்தன. அந்த படக்குழுவினர் ஜே.சி.பி. எந்திரம், வெடிமருந்து பொருட்கள், கிரேன்கள் ஆகியவற்றையும் கொண்டு வந்திருந்தனர்.
அந்த வழியாக விவசாய பணிகளுக்காக சென்ற உள்ளூர் மக்கள் இது குறித்து அரிட்டாபட்டி மற்றும் சுற்று வட்டார பகுதி மக்களுக்கு தகவல் கொடுத்தனர். இதனால் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு வந்து படப்பிடிப்பு குழுவினர்களை சிறைபிடித்து சரமாரி கேள்வி கேட்டனர்.
தாங்கள் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அனுமதி பெற்றுள்ளதாக கூறியதை ஏற்க மறுத்த கிராம மக்கள் பாதுகாக்கப்பட்ட பல்லுயிர் தளத்தில் எவ்வாறு வெடிவைத்து தகர்க்கலாம் என கேள்வி எழுப்பி அவர்களை வாகனங்களோடு சிறைப்பிடித்ததனர்.
இதுபற்றி தகவல் அறிந்த ஒத்தக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபாலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறை பிடிக்கப்பட்டவர்களை மீட்டு திருப்பி அனுப்பி உள்ளனர்.
டங்ஸ்டன் பிரச்சனையால் பரபரப்பாக இருக்கின்ற சூழலில் அரிட்டாப்பட்டி பகுதியில் சினிமா படப்பிடிப்பு என்று கூறி பல்வேறு வாகனங்களோடு குவிந்தவர்களால் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.
- பல்லடத்தில் 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகவும் கண்டனத்துக்குரியது.
- இரவு நேரங்களில் அப்பகுதியில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் சேமலை கவுண்டன்பாளையத்தை சேர்ந்த தெய்வசிகாமணி, அவரது மனைவி அலமேலு, மகன் செந்தில்குமார் ஆகியோர் கடந்த 29-ந்தேதி மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டனர். இக்கொலை சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இந்தநிலையில் இன்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பல்லடத்தில் 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகவும் கண்டனத்துக்குரியது. இக்கொலையில் ஈடுபட்டவர்களை கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும். அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை முதலும் முடிவுமாக இருக்க வேண்டும்.
அப்போது மற்றவர்கள் பயப்படுவார்கள். தமிழ்நாடு காவல் துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொலையாளிகளை பிடிக்க 14 தனிப்படை என்பது பிரம்மாண்ட விசாரணை முறை. இருப்பினும் இந்த கொலை குறித்து சி.பி.ஐ. விசாரணை மேற்கொள்ள தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம். சி.பி.ஐ., சிறப்பான குற்ற புலனாய்வு அமைப்பு. எனவே அதற்கு தமிழக அரசு அனுமதி தர வேண்டும். போதையால்தான் பெரும்பாலான குற்றச்சம்பவங்கள் நடக்கிறது. எனவே தமிழகத்தில் போதை கலாச்சாரத்தை தடுக்க வேண்டும்.
தோட்டத்து பகுதியில் வயதானவர்கள்தான் வசித்து வருகிறார்கள். எனவே இரவு நேரங்களில் அப்பகுதியில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
உயிரிழந்த செந்தில்குமாரின் மனைவி கவிதா அண்ணாமலையிடம் கூறுகையில், இரவு முழுவதும் கடும் வேதனையுடன் இருந்துள்ளனர். அந்த உயிர் வேதனையை அவர்கள் அனுபவிக்க வேண்டும். குற்றம் செய்தவர்களை எத்தனை நாட்கள் ஆனாலும் பிடித்து தண்டிக்க வேண்டும் என தெரிவித்தார்.
- புரட்சியாளர் அம்பேத்கருக்குப் புரட்சி வணக்கம்.
- தனது பேரறிவால் சமத்துவத்துக்கும் நீதிக்கும் பாதை சமைத்தவர்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:-
"கற்பி-புரட்சி செய்-ஒன்றுசேர்" பெரும்பாலான மக்களின் உரிமைகளையும்-கண்ணியத்தையும் மறுத்த, இந்தச் சமுதாயத்தில் வேரூன்றிய சமூக அநீதிகளுக்கு எதிராக நம்மிலிருந்து உருவாகி எதிர்த்த புரட்சியாளர் அம்பேத்கருக்குப் புரட்சி வணக்கம்.
கல்வியின் மகத்துவத்தை உணர்த்தி, தனது பேரறிவால் சமத்துவத்துக்கும் நீதிக்கும் பாதை சமைத்தவர் அவர்.
தனது சிந்தனைகளால் நமக்கு உரமூட்டி-நம்மைப் பாதுகாக்கும் புரட்சியாளர் அம்பேத்கர் நம்முடைய வாளாகவும் கேடயமாகவும் என்றென்றும் வாழ்கிறார். அண்ணலின் அறிவொளியில் சமத்துவச் சமுதாயத்துக்கான பாதையில் நடைபோடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 189 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்.
- கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை தொடர் போராட்டம்.
மதுரை:
மதுரை விமான நிலையம் 633.17 ஏக்கர் பரப்பளயில் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக சின்ன உடைப்பு, பரம்புபட்டி உள்ளிட்ட கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் சின்ன உடைப்பு கிராமத்தில் மட்டும் 146 நபர்களின் வீடுகள், நிலங்கள் என 189 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்தநிலையில் சின்ன உடைப்பு கிராம நிலம் கையப்படுத்த எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே தங்களை மீள்குடி அமர்த்தாமல் இங்கிருந்து வெளியேற்றக் கூடாது என நேற்று மதுரை ஐகோர்ட்டில் கிராம மக்கள் சார்பாக வழக்கு தொடர்ந்த நிலையில் சின்ன உடைப்பு பகுதியில் மீண்டும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதுதொடர்பான வழக்கு நேற்று ஐகோர்ட்டு மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வருகிற 19-ந்தேதி வரை சின்ன உடைப்பு கிராம மக்களின் வீடுகளை அகற்ற எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதாக முடிவு எடுக்கப்பட்டு இன்று தொடர்ந்த சின்ன உடைப்பு கிராம மக்கள் மூன்றாவது நாளாக நீடிக்கிறது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
- ரெயில் நிலையம், பார்சல் குடோன்களில் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- கோவில்கள், மசூதிகள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
திருப்பூர்:
டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி எவ்வித அசம்பாவித சம்பவங்களும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஆண்டுதோறும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு திருப்பூரில் இன்று பல்வேறு இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
திருப்பூர் ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பயணிகள் மற்றும் அவர்கள் கொண்டு வந்த உடமைகளை போலீசார் தீவிர சோதனை நடத்திய பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். வெடிகுண்டு கண்டறியும் நவீன கருவிகளை கொண்டு உடமைகள் சோதனை செய்யப்பட்டது.

ரெயில் நிலையம், பார்சல் குடோன்களில் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதேப்போல் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமி உத்தரவின் பேரில் மாநகர் முழுவதும் போலீசார் நேற்று இரவு முதல் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கோவில்கள், மசூதிகள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. 22 ரோந்து வாகனங்களில் போலீசார் 24 மணி நேரமும் ரோந்து பணி மேற்கொண்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- ஓசூர் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் அங்கு ஆய்வு மேற்கொண்டனர்.
- நெய் பாட்டில்கள் மாதிரியை, பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஓசூர்:
ஓசூர் அருகே கோவிந்த அக்ரஹாரம் பகுதியில், ஏ.எம்.எஸ்., மில்க் புராடக்ஸ் என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு தரமற்ற முறையில், பால் உற்பத்தி பொருட்கள் மற்றும் நெய் தயாரிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, ஓசூர் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் அங்கு ஆய்வு மேற்கொண்டனர்.
அதில், சுகாதாரமற்ற டிரம்களில், 125 கிலோ அளவில் பூஞ்சை பிடித்த நிலையில் வெண்ணை, பட்டர் கிரீம் உள்ளிட்டவைகள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த அலுவலர்கள், அவற்றை உடனடியாக அழித்தனர். மேலும் அங்கிருந்து, நெய் பாட்டில்கள் மாதிரியை, பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி, நிறுவனத்திற்கு நோட்டீஸ் வழங்கி உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
- சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் 4 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
- குடிநீர் வரும் குழாய்கள் முழுவதும் சோதனை செய்யப்பட்டது.
தாம்பரம்:
பல்லாவரம், காமராஜர் நகர், கண்டோண்மெண்ட் பல்லாவரம் 6-வது வார்டுக்கு உட்பட்ட முத்து மாரியம்மன்கோவில் தெரு, மாரியம்மன்கோவில் தெரு, மலை மேடு பகுதிகளில் வசிக்கும் 40-க்கும் மேற்பட்டோருக்கு நேற்று முன்தினம் திடீரென வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
உடனடியாக அவர்கள் குரோம்பேட்டை அரசு ஆஸ் பத்திரியிலும், தனியார் ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டனர். இதில் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற மாங்காடு பகுதியை சேர்ந்த திருவேதி(56), மோகனரங்கம் (42) ஆகியோர் இறந்தனர். இதேபோல் கண்டோண்மெண்ட் பல்லாவரம், மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்த வரலட்சுமி (88) என்பவர் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். அவர்களது இறப்புக்கு குடிநீரில் கழிவுநீர் கலந்ததே காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் பாதிக்கப்பட்ட மக்கள் வசிக்கும் இடங்களில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறும்போது, தண்ணீரை குடித்ததால் பாதிப்பு ஏற்படவில்லை. அவர்கள் உட்கொண்ட உணவு காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்து இருந்தார்.
குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் 31 பேர் சிகிச்சைபெற்ற நிலையில் இன்று காலை அவர்களில் 6 பேரின் உடல் நிலை சீரானது. இதையடுத்து அவர்கள் வீட்டுக்கு திரும்பினர். 25 பேருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் 4 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
பொதுமக்கள் பயன் படுத்திய குடிநீரின் தன்மையை அறிய 5 இடங்களில் மாதிரி சேகரிக்கப்பட்டது. அதனை பரிசோதனைக்காக அனுப்பி வைத்து உள்ளனர். இந்த பரிசோதனை முடிவு வெளிவர 3 நாட்கள் ஆகும் என்று தெரிகிறது.

இதற்கிடையே பாதிப்பு ஏற்பட்ட பல்லாவரம் காமராஜ் நகர், கண்டோண்மெண்ட் பல்லாவரம் 6-வது வார்டு பகுதியில் சுகாதார நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டது. தெருக்கள் அனைத்தும் சுத்தப்படுத்தப்பட்டு பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது. மேலும் வீடு, வீடாக சுகாதார ஊழியர்கள் சென்று பாதிப்பு ஏதேனும் உள்ளதா? என்று கணக்கெடுத்தனர்.
குடிநீர் வரும் குழாய்கள் முழுவதும் சோதனை செய்யப்பட்டது. இதில் எந்த இடத்திலும் உடைப்பு இல்லை. மேலும் குடிநீர் வினியோகிக்க தேக்கி வைக்கப்படும் தொட்டிகள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டது. அப்பகுதி மக்களுக்கு லாரிகள் மூலம் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. 6 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
உடல்நலம் பாதிப்பு இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
பல்லாவரம் கண்ணபிரான் கோவில் தெருவில் உள்ள வீடுகளில் சேகரித்து வைக்கப்பட்டு இருந்த குடிநீரின் தரத்தை மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் இன்று காலை பரிசோதித்து ஆய்வு செய்தார். இதேபோல் அங்குள்ள குடிநீர் மேல் நிலை நீர்த்தேக்க தொட்டியில் உள்ள தண்ணீரும் பரிசோதிக்கப்பட்டது. அப்போது மண்டலக்குழுத்தலைவர் ஜோசப்அண்ணாத்துரை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- அறியாமையில் உளறிக் கொட்டும் “சில” “அறிக்கை அரசியல்வாதிகள்” புரிந்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்!
- அரைகுறை அரசியல்வாதிகளுக்கு அதானி நிறுவனத்தையோ- அதிமுகவையோ விமர்சிக்க துணிச்சல் இல்லாமல் தவிக்கிறார்கள் என்பது மட்டும் புரிகிறது.
சென்னை:
மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அதானி நிறுவனத்திடம் இருந்து ஒரு யூனிட் சூரிய ஒளி மின்சாரத்தை ரூ.7.01க்கு நீண்ட கால அடிப்படையில் பெற 2014ல் ஒப்பந்தமிட்ட அரசை விட்டுவிட்டு, 2021ம் ஆண்டு பொறுப்பேற்ற உடனே தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் அதானி நிறுவனத்துக்கு எதிரான வழக்கை திறம்பட நடத்தியை திராவிட முன்னேற்றக் கழக அரசை- மின்சார வாரியத்திற்கு சாதகமாக, அதாவது ரூ.5.10க்கு ஒரு யூனிட் மின்சாரம் என்னும் அளவிற்கு சாதகமான ஆணையைப் பெற்ற அரசை குறை சொல்வது எந்த வகையிலும் நியாயமாகாது. அதனால்தான் அறிக்கைகள் விட ஆர்வம் இருக்கலாம். ஆனால் அதற்கு அடிப்படை புரிதலும் அறிவும் இருக்க வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், தமிழ்நாடு அரசு கடந்த மூன்று ஆண்டு காலமும் மின்சார கொள்முதல் குறித்து எந்த ஒரு தனியார் நிறுவனத்துடனும் எவ்வித ஒப்பந்தமும் செய்து கொள்ளவில்லை என்பதை தெள்ளத் தெளிவாக தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். அதாவது 2016-ஆம் ஆண்டு அ.தி.மு.க. அரசு நேரடியாகவே தனியார் நிறுவனத்துடன் சூரிய ஒளி மின்சாரத்தை யூனிட் ரூபாய் 7.01 என்ற அளவில் நீண்ட காலம் பெறுவதற்கு ஒப்பந்தம் போட்டதை விட, கழக ஆட்சியில் மிகக் குறைந்த அளவில், யூனிட் ரூபாய் 2.61 மட்டும் என்ற ஒன்றிய அரசின் கட்டாய விதியின் அடிப்படையில் மட்டுமே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதுவும் தனியார் நிறுவனத்துடன் அல்ல; ஒன்றிய அரசின் நிறுவனத்துடன்தான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
மின் உற்பத்தியினைப் பொருத்தவரையில், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்குச் சொந்தமான அனைத்து மின் நிலையங்களிலிருந்தும் முழுமையான அளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மாநிலத்தின் மின்சாரத் தேவையினைப் பொறுத்து, நடுத்தர மற்றும் நீண்ட கால ஒப்பந்தங்கள் அடிப்படையில் யூனிட் ஒன்றிற்கு ரூ.3.45 முதல் 5.31 வரை தனியார் நிறுவனங்களிடமிருந்து ஒளிவு மறைவற்ற ஒப்பதப்புள்ளி வாயிலாக மாண்பமை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதியுடன் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. 1x800 மெகாவாட் திறனுள்ள வடசென்னை அனல்மின் திட்டம், நிலை-3, கடந்த 27.06.2024 அன்று, தனது முழு நிறுவுத்திறனான 800 மெகாவாட் மின் உற்பத்தியை வெற்றிகரமாக எட்டியுள்ளது. இதுவரை சுமார் 750 மில்லியன் யூனிட் மின்சாரம் வடசென்னை அனல் மின் திட்டம், நிலை-3-இல் இருந்து உற்பத்தி செய்யப்பட்டு மக்களுக்கு பயன்பட்டுள்ளது. இதுபோன்ற அடிப்படைத் தகவல்களைக்கூட அறியாதவர்கள் போல் அறிக்கைகள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவது கண்டிக்கத்தக்கது!
மின்கட்டண உயர்வு மூலம் 31,500 கோடி ரூபாய் என்று ஒரு அபத்தமான குற்றச்சாட்டையும் முன்வைக்கிறார்கள். எப்போது மின் கட்டண உயர்வை ஏற்படுத்தினாலும், ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாகச் செயல்படுவது திராவிட முன்னேற்றக் கழக அரசு மட்டுமே. இலட்சக்கணக்கான ஏழை எளிய மக்களின் வீடுகளுக்கான கட்டண உயர்வை தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொண்டு மின் மானியமாக வழங்க ஆணை வெளியிட்டு, வீடுகளுக்கான மின்கட்டண உயர்வே இல்லாமல் பார்த்துக்கொண்டவர் முதலமைச்சர் மட்டுமே என்பதை இந்தநேரத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். ஏழை எளிய மின் நுகர்வோர் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, கடந்த 2023-24 நிதியாண்டில் மட்டும், தமிழ்நாடு அரசு 17,117 கோடி ரூபாயினை மானியமாகத் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு வழங்கி, தமிழ்நாட்டு மக்களை தாய் உள்ளத்துடன் நடத்திச் செல்பவரும் எங்கள் முதலமைச்சர் அவர்கள் மட்டுமே என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அதைவிட முக்கியமாக மின்கட்டண வருவாய் அதிகரிப்பு ஒருபுறம் என்றாலும், விலைக்குறைவான மின்கொள்முதல், செலவுகளைப் பெருமளவில் கட்டுப்படுத்தியது, உள்நாட்டு மின் உற்பத்தி என நிர்வாகத் திறன்மிக்க நடவடிக்கைகள் கழக அரசில்தான் எடுக்கப்பட்டுள்ளன. அந்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மூலம் மின்வாரியத்திற்கு ஏற்பட்ட நட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில்தான் என்பதை, அறியாமையில் உளறிக் கொட்டும் "சில" "அறிக்கை அரசியல்வாதிகள்" புரிந்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்!
ஆகவே உண்மை இவ்வாறு இருக்க, 2021-ஆம் ஆண்டு ஒன்றிய அரசின் கட்டாயத்தின் அடிப்படையில், ஒன்றிய அரசு நிறுவனமான சூரிய மின்சக்தி கழகத்திடமிருந்து இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களைப் போலவே சூரிய ஒளி மின்சாரத்தைப் பெறுவதற்காகத் தமிழ்நாடு மின்சார வாரியமும் ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், அது சம்பந்தமாக 2024-ஆம் ஆண்டு நிறுவனத்தின் பிரதிநிதியை முதலமைச்சர் சந்தித்ததாகக் கூறுவது முற்றிலும் தவறானது மட்டுமல்லாது, மக்களிடம் வேண்டுமென்றே பொய்யான தகவல்களைக் கொண்டுச் சென்று தமிழ்நாட்டு மக்களைத் திசைதிருப்பும் முயற்சியாகவே கருத வேண்டி உள்ளது. அதிமுக ஆட்சியில் ஒப்பந்தம் போடப்பட்டதையும் மறைத்து- உச்சநீதிமன்ற உத்தரவையும் அறியாதவர்கள் போல்- அதிமுக அரசின் மின்கொள்முதலை திமுக அரசின் மின் கொள்முதல் முடிவு போல் சித்தரிக்க துடிக்கும் அரைகுறை அரசியல்வாதிகளுக்கு அதானி நிறுவனத்தையோ- அதிமுகவையோ விமர்சிக்க துணிச்சல் இல்லாமல் தவிக்கிறார்கள் என்பது மட்டும் புரிகிறது. அதற்குள்தான் அதிமுக- பா.ஜ.க. கூட்டணி திரைமறைவில் ஒளிந்து கிடக்கிறது.
முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் திராவிட மாடல் அரசில், மின்வாரியம் நிர்வாக ரீதியாகவும், நிதிச் சுமையிலிருந்தும் சீரடைந்து, ஏழை எளிய நுகர்வோரின் நலனைப் பிரதானமாக எண்ணி நல்லாட்சிக்கு இலக்கணமாகச் செயல்பட்டு வருவதை பொறுத்துக்கொள்ள இயலாமல், "அவரைச் சந்தித்தார்" "இந்தத் தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டார்" என்றெல்லாம் பொய்த் தகவல்களைத் தொடர்ந்து பரப்புவார்களேயானால், அவர்கள் மீது கடும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
- PRAPTI போர்ட்டலில் சமர்ப்பிக்கப்பட்ட பில்களை 75 நாட்களுக்குள் செலுத்த வேண்டுமென விதி உள்ளது.
- மின்சாரத்திற்கான மேல்முறையீட்டு ஆணையத்தின் இந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க கோரியது.
சென்னை:
மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தொழிலதிபர் அதானியை முதலமைச்சர்சந்தித்தது போலவும், அதிக விலைகொடுத்து அதானியிடமிருந்து சூரிய ஒளி மின்சாரம் பெற ஒப்பந்தம் போட்டிருப்பதுபோலவும் தொடர்ந்து எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும் கற்பனையான தகவலைக் கட்டுக்கதைகள் போல் வெளியிட்டு - தெரிவித்து வருவதற்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு முதலமைச்சர் அதானியைச் சந்திக்கவும் இல்லை. அதானி நிறுவனத்துடன் நேரடியாகச் சூரிய ஒளிமின்சாரம் பெற எந்த ஒப்பந்தமும் போடவும் இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். அ.தி.மு.க. ஆட்சியில் நிர்வாக ரீதியாகவும், நிதிநிலைமை ரீதியாகவும் முற்றிலும் சீர்குலைந்திருந்த தமிழ்நாடு மின்சார வாரியத்தை அடுத்தடுத்த நிர்வாகச் சீர்திருத்த மற்றும் ஆக்கபூர்வமான நடவடிக்கை மூலம், இன்றைக்குத் தமிழ்நாடு மின்சார வாரியத்தைத் தலைநிமிர வைத்துள்ளவர் முதலமைச்சர். அதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் இப்படி அடிப்படை உண்மை கிஞ்சித்தும் இல்லாத பொய்க் குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பரப்பி வருவது அரசியல் பண்பாடு அல்ல!
"ஒவ்வொரு மாநிலமும் ஆண்டுதோறும் நுகர்கின்ற மொத்த மின்சாரத்தில் குறிப்பிடத்தக்க அளவு புதுப்பிக்கத்தக்க மின் சக்தியைப் பயன்படுத்த வேண்டும். தவறும்பட்சத்தில், அபராதம் செலுத்த வேண்டும்" என்ற ஒன்றிய அரசின் கட்டாய விதியின் அடிப்படையில் 2020, 2021, 2023 ஆகிய ஆண்டுகளில் 2000 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் ஒன்றிய அரசின் சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (SECI)வுடன் ஒப்பந்தம் செய்துள்ளதே தவிர, எந்தவொரு தனியார் நிறுவனத்துடனும் அல்ல!
இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களைச் சேர்ந்த மின்சார வாரியங்களைப் போல தமிழ்நாடு மின்சார வாரியமும் ஒன்றிய அரசின் சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (SECI) நிறுவனத்துடன் மட்டுமே மின்சாரம் கொள்முதல் செய்து வருகின்றது. குறிப்பாக, திராவிட முன்னேற்றக் கழக அரசு அமைந்தப் பிறகு, எந்த தனியார் நிறுவனங்களுடனும் மின்சார வாரியம் நேரடியாக எவ்விதமான ஒப்பந்தமும் செய்து கொள்வதில்லை. இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும், மாநிலத்தின் மின் தேவையைப் பூர்த்தி செய்யவும், ஒன்றிய அரசால் கட்டாயமாக்கப்பட்டுள்ள மரபுசாரா கொள்முதல் (RPO) இலக்குகளை அடைவதற்கும் மாண்பமை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் பெற்று செய்யப்பட்ட ஒப்பந்தங்களாகும். இதில், எவ்வித முறைகேடும், விதிமுறை மீறல்களும் இல்லை.
இன்னும் சொல்லப் போனால், ஒன்றிய அரசின் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தைப் பெறுவது குறித்த கட்டாய விதி எதுவும் இல்லாத காலகட்டத்தில் அதிமுக ஆட்சியில் அதானி லிமிடெட் நிறுவனம், தங்களுக்கு சொந்தமான ஐந்து நிறுவனங்கள் மூலமாக, 648 மெகாவாட் திறன் கொண்ட சூரிய சக்தியை உற்பத்தி செய்வதற்கான எரிசக்தி கொள்முதல் ஒப்பந்தத்தில் 04/07/2015 அன்று கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி, ஒரு யூனிட்டுக்கு ரூ.7.01 என முடிவு செய்து, 31/03/2016க்கு முன் உற்பத்தி ஆலைகள் இயக்கப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்படுகிறது. அதானி நிறுவனம் 31/03/2016க்கு முன் பல்வேறு தேதிகளில் 313 மெகாவாட் மின்சாரத்தை இயக்கி, ஒப்பந்தப்படி ஒரு யூனிட்டுக்கு ரூ.7.01 உரிமை கோரியது.. 31/03/2016 தேதிக்குப் பிறகு, அதாவது கிட்டத்தட்ட 6 மாதங்கள் கழித்து, 18/09/2016 அன்று 288 மெகாவாட் மின்சாரம் வழங்கியது.
31/03/2016க்குப் பிறகு வழங்கப்பட்ட மின்சாரத்திற்கு, ஒரு யூனிட்டுக்கு ரூ.7.01 வேண்டுமென அதானி நிறுவனம் கோரியது. மேலும் 22/03/2016 முதல் மின்சாரம் வழங்கிட தயாராக இருந்ததாகவும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்தின் (TANGEDCO) முழு செயலற்றதன்மையின் காரணமாக மின்சாரம் வழங்க முடியவில்லை எனவும் திரித்து கூறியது.. ஆனால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம், அதானி நிறுவனத்தின் குற்றச்சாட்டை மறுத்து, ஒப்பந்தப்படி ஒரு யூனிட்டுக்கு ரூ.5.10 கட்டணத்தை கொடுக்க முடியுமென தெரிவித்தது.
இந்த சூழ்நிலையில் அதானி நிறுவனம், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC) முன், MP எண்.25(2020) மற்றும் MP எண். 26(2020) என இரு மனுக்களை தாக்கல் செய்தது. ஆயினும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் 20/07/2021 அன்று, அதானி நிறுவனம் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்தது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, அதானி நிறுவனம், மேல்முறையீட்டு தீர்ப்பாயம் முன் (APTEL) மேல்முறையீடு செய்தது (எண்.287 - 2021). மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அந்த மேல்முறையீட்டை அனுமதித்து, யூனிட்டுக்கு ரூ.7.01 கட்டண விகிதத்தை 07/10/2022 அன்று அங்கீகரித்தது. மின்சாரத்திற்கான மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவின் அடிப்படையில், அதானி நிறுவனம், ரூ.568 கோடிக்கான பில்களை PRAPTI (Payment Ratification and Analysis in Power Procurement) போர்ட்டலில் சமர்ப்பித்தது. PRAPTI போர்ட்டலில் சமர்ப்பிக்கப்பட்ட பில்களை 75 நாட்களுக்குள் செலுத்த வேண்டுமென விதி உள்ளது. ஆயினும், மேல்முறையீட்டு ஆணையத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் 2022ல், சிவில் மேல்முறையீட்டு முறையில் (எண். 38926), உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மின்சாரத்திற்கான மேல்முறையீட்டு ஆணையத்தின் இந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க கோரியது. 17/02/2023 அன்று, உச்சநீதிமன்றம் தடை விதிக்க மறுத்தது. அதன் காரணமாகவே தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ரூ.568 கோடி செலுத்தியது. தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானக் கழகம் தாக்கல் செய்த மேல்முறையீடு, (மேல்முறையீட்டு எண் 1274 மற்றும் 1275 - 2023) இன்னமும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதில் தமிழ்நாடு அரசின் நலனை- பகிர்மானக் கழகத்தின் நலனைக் காப்பதற்கு எங்களது வலுவான வாதத்தை எடுத்துரைக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- அம்பேத்கரின் புகழை பாடுவதில் இரும்பாக நின்று உறுதியாக இருக்க வேண்டாமா?
- முதலமைச்சருக்கு பயந்துதான் திருமாவளவன் அம்பேத்கரை ஆராதிக்க மறுக்கிறார்.
சென்னையில் இன்று நடைபெறும் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயுடன் பங்கேற்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மறுப்பு தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:
* கருவியாக காய் நகர்த்தும் அளவிற்கு திருமாவளவன் பலவீனமானவராக இருக்கிறாரா?
* அம்பேத்கரின் புகழை பாடுவதில் இரும்பாக நின்று உறுதியாக இருக்க வேண்டாமா?
* அம்பேத்கரின் பெயரை வைத்து தன்னை காய் நகர்த்துகிறார்கள் என்றால் காய் நகர்த்தும் அளவிற்கு தான் பலவீனமாக இருக்கிறேன் என்று திருமாவளவன் சொல்கிறாரா?
* இன்று திருமாவளவனின் அரசியல் வாழ்க்கையில் மிகப்பெரிய கரும்புள்ளி. அவர் அம்பேத்கரை சிறப்பு செய்கிறாரா? இல்லை கூட்டணியை சிறப்பு செய்கிறாரா?
* நாம் எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்று முதலமைச்சர் அவரை அனுப்பி வைத்திருக்க வேண்டும்.
* எப்படி பிரதமர் மோடி ராஜ்நாத் சிங்கை அனுப்பி வைத்தாரோ அதேபோல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமாவளவனை அனுப்பி வைத்திருக்க வேண்டும்.
* முதலமைச்சருக்கு பயந்துதான் திருமாவளவன் அம்பேத்கரை ஆராதிக்க மறுக்கிறார்.
* 2 பேரையுமே தவறிழைத்தவர்களாக தான் நான் பார்க்கிறேன் என்று கூறினார்.
- காளை அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நடைபெற்ற ஜல்லிகட்டுகளில் கலந்து கொண்டு பல்வேறு பரிசு பொருட்களை வென்று புகழ் பெற்றுள்ளது.
- காளை இறந்ததால் நத்தம் பகுதியே சோகத்தில் மூழ்கி உள்ளது.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் எம்.ஜி.ஆர் நகரில் அமைந்துள்ளது அரண்மனை சந்தன கருப்பு சுவாமி கோவில். இந்த கோவிலுக்கு சொந்தமான கோவில் காளை நேற்று உடல்நலக்குறைவால் இறந்துவிட்டது.
கோவில் முன்பு வைக்கப்பட்ட காளைக்கு மாலைகள் அணிவித்து சந்தனம், ஜவ்வாது, வேஷ்டி, துண்டுகள் போன்றவற்றை அணிவித்து கண்ணீர் மல்க அப்பகுதி பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இந்த கோவில் காளை அலங்காநல்லூர், பாலமேடு, கொசவபட்டி, அய்யாபட்டி, தவசிமடை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நடைபெற்ற ஜல்லிகட்டுகளில் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி காசுகளையும், சில்வர், பித்தளை, சைக்கிள் போன்ற பல்வேறு பரிசு பொருட்களை வென்று புகழ் பெற்றுள்ளது.
தொடர்ந்து அந்த காளை கோவிலின் அருகிலேயே மேளதாளம் முழங்க, வாணவேடிக்கையுடன் அடக்கம் செய்யப்பட்டது. ஊரின் காவல் தெய்வமான அரண்மனை சந்தன கருப்பு சுவாமி கோவில் காளை இறந்ததால் நத்தம் பகுதியே சோகத்தில் மூழ்கி உள்ளது.






