என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அதானி நிறுவனம் ரூ.568 கோடி லாபம் ஈட்ட தி.மு.க. அரசு உதவி- அண்ணாமலை குற்றச்சாட்டு
    X

    அதானி நிறுவனம் ரூ.568 கோடி லாபம் ஈட்ட தி.மு.க. அரசு உதவி- அண்ணாமலை குற்றச்சாட்டு

    • விரைவாக ஒரு பிளாஷ்பேக்கை நினைவூட்டி, அவர்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறோம்.
    • கடந்த 2021-ம் ஆண்டு, தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் அதனை நிராகரித்தது.

    சென்னை:

    அதானி விவகாரத்தில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தி.மு.க. அரசு மீது பரபரப்பு குற்றச்சாட்டை கூறி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பாராளுமன்றத்தில், இந்திக் கூட்டணிக் கட்சிகள், நமது பிரதமர் மோடி மீது அவதூறு கூறி நடத்திய நாடகத்தைக்காண நேர்ந்தது. இது முழுக்க முழுக்க பாராளுமன்றத்தை முடக்கி, மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் முயற்சி மட்டுமே அன்றி, வேறு எந்த ஆக்கப்பூர்வமான காரணங்களுக்காகவும் இல்லை.

    குறிப்பாக, இந்த நாடகத்தைத் ராகுல் காந்தி அரங்கேற்றிய அதே நேரத்தில், 'தமிழக மின்வாரியத்தின் சிறிய வகை மீட்டர்களுக்கான ஒப்பந்தம், அதானி நிறுவனத்துக்கு வழங்கப்படலாம்' என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ.19 ஆயிரம் கோடி ஆகும்.

    இப்போது, 'ஸ்டாலினும் அதானியும் ஒன்று, அதனால் அதானி பாதுகாப்பாக உள்ளார்' என்ற வாசகம் பொறித்த டிஷர்ட்டை ராகுல் காந்தி அணிவாரா?

    மேலும், தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மற்றும் தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, விரைவாக ஒரு பிளாஷ்பேக்கை நினைவூட்டி, அவர்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறோம்.

    தமிழக மின்சார ஒழுங்கு முறை ஆணையம் கடந்த 12.9.2014 அன்று, அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்திடம் இருந்து சூரிய சக்தி மின்சாரம் கொள்முதல் செய்ய, ஒரு யூனிட்டுக்கு ரூ.7.01 கட்டணத்தை நிர்ணயித்தது. மேலும் இந்தக் கட்டணமானது, மார்ச் 31, 2016 வரை செல்லுபடியாகும் எனக் கால நீட்டிப்பு செய்யப்பட்டது.

    கடந்த 2015-ம் ஆண்டு, அப்போது எதிர்க்கட்சி வரிசையில் இருந்த மு.க.ஸ்டாலின், மத்தியப் பிரதேச மாநிலத்தில் இதே அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம், சூரிய சக்தி மின்சாரம் யூனிட் ஒன்றுக்கு ரூ.6.049 என நிர்ணயம் செய்திருக்கும் போது, தமிழகத்தில் யூனிட் ஒன்றுக்கு ரூ.7.01 எனக் கொள்முதல் விலையை நிர்ணயம் செய்ததை அ.தி.மு.க. அரசு விளக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.

    இதன் பின்னர், கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், மின்சார வாரியம், அதானி திட்டத்தைச் செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறி, 25 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்திற்கு மட்டும், ஒரு யூனிட்டுக்கு ரூ.7.01 விலையில் கொள்முதல் செய்வதாகவும், மீதமுள்ள 47 மெகாவாட் திட்டத்துக்கு, ஒரு யூனிட்டுக்கு ரூ.5.01 விலையிலும், மற்றொரு 216 மெகாவாட் திட்டத்திற்கும், யூனிட் ஒன்றுக்கு ரூ.5.01 என்ற விலையில் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்ய இரண்டு கட்டண ஆணைகளை வெளியிட்டது. அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம், தமிழக மின்சார வாரியத்தின் இந்த கட்டண மாறுபாட்டுக்கு எதிராக, தமிழக மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் மேல் முறையீடு செய்தது. ஆனால், கட்டணத் திருத்தம் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

    கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம், தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனங்களின் சூரிய சக்தி மின் திட்டங்களுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.7.01 கட்டணத்தைத் தமிழக மின்சார வாரியத்திடம் இருந்து பெறுவதற்கு ஒரு குறிப்பிட்ட கால நீட்டிப்பு வழங்குவதற்கான கோரிக்கைகளை நிராகரித்தது. ஆனால், கடந்த 2023-ம் ஆண்டு, ஜூலை மாதம், தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்துக்கு ஆதரவாக, தமிழக மின்சார வாரியம் நிர்ணயித்த மாறுபட்ட கட்டணத்தை ரத்து செய்து தீர்ப்பளித்தது.

    தங்களுக்குச் சாதகமான தீர்ப்பு வந்தால், ஒரு முறை வருவாயாக, தங்களுக்கு ரூ.568 கோடி வருவாய் கிடைக்கும் என்று அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது இங்கு முக்கியமாகக் கவனிக்கத்தக்கது.

    மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு இணங்க, தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் உத்தரவு இருப்பதாக தி.மு.க. அரசால் கூற முடியாது. ஏனெனில், கடந்த 2019-ம் ஆண்டு, அதானி நிறுவனத்துக்கு ஆதரவாகத் தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது, ஆனால் கடந்த 2021-ம் ஆண்டு, தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் அதனை நிராகரித்தது.

    எங்கள் கேள்வி என்ன வென்றால், அதானியை எதிர்ப்பதாகக் கூறிக் கொண்டு, அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம், ஒரு முறை வருவாயாக ரூ.568 கோடி வருவாய் ஈட்ட உதவியாக, திமுக அரசு தனது மின் கொள்முதல் தொடர்பான முடிவை மாற்றிக் கொண்டதன் காரணம் என்ன என்பது தான். இதற்கு பதில் சொல்வார்களா?

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    Next Story
    ×