என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தமிழக அரசு அறிவித்த ரூ.3 லட்சம் நிவாரண நிதியை சிறுமியின் பெற்றோரிடம் அமைச்சர் பொன்முடி வழங்கினார்.
- தவறு செய்தவர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
விக்கிரவாண்டி:
விக்கிரவாண்டி தனியார் பள்ளியில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து 3½ வயது சிறுமி லியோ லட்சுமி பலியானதாக கூறப்படுகிறது. இறந்த சிறுமியின் உடல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர் சிறுமியின் உடல் சொந்த ஊரான விக்கிரவாண்டிக்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
சிறுமியின் உடலுக்கு வனத்துறை அமைச்சர் பொன்முடி, விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா மற்றும் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். தமிழக அரசு அறிவித்த ரூ.3 லட்சம் நிவாரண நிதியை சிறுமியின் பெற்றோரிடம் அமைச்சர் பொன்முடி வழங்கினார்.
சிறுமி பலியான சம்பவம் மனவருத்ததை ஏற்படுத்தியுள்ளது. இதனை அறிந்த தமிழக முதலமைச்சர் ரூ.3 லட்சம் வழங்கியுள்ளார். இந்த சம்பவத்தில் பள்ளி நிர்வாகிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தவறு செய்தவர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். சிறுமியின் குடும்பத்திற்கு யாருக்காவது அரசு வேலை வழங்குவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
இவ்வாறு அவர் கூறினார்.
- தந்தைக்கும் ரிவன்ராஜாவுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
- மகனை வெட்டிக்கொன்ற தமிழனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டம் வருசநாடு அருகில் உள்ள சிங்கராஜபுரத்தை சேர்ந்தவர் தமிழன் (வயது55). இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு ரிவன்ராஜா (30) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
ரிவன்ராஜா குடிபழக்கத்திற்கு அடிமையானதால் யாரும் பெண் தர மறுத்துள்ளனர். இதனால் எந்த வேலைக்கும் செல்லாமல் தினமும் குடித்து விட்டு வீட்டில் தனது பெற்றோரிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
மேலும் தனது தாயிடம் மது குடிக்க பணம் தருமாறு கேட்டும் தொந்தரவு செய்து வந்துள்ளார். நேற்று இரவும் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்தார். இதனால் அவரது தந்தைக்கும் ரிவன்ராஜாவுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் குடிபோதையில் ரிவன்ராஜா தூங்க சென்று விட்டார். நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த தனது மகனை தமிழன் அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.
இதில் சம்பவ இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இன்று அதிகாலை வருசநாடு போலீஸ் நிலையத்திற்கு சென்ற தமிழன் தான் வெட்டிய அரிவாளுடன் சரண் அடைந்தார். பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொலை செய்யப்பட்ட வாலிபர் உடலை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் மகனை வெட்டிக்கொன்ற தமிழனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வெடி விபத்தில் மருந்து கலக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
- ஆலை உரிமையாளர்கள் பாலாஜி, சசிபாலன், மேலாளர் தாஸ், போர்மேன் பிரகாஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சாத்தூர்:
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அப்பையநாயக்கன்பட்டியில் சாய்நாத் பட்டாசு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகிறார்கள். தற்போது பட்டாசு ஆலையில் வெடிகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இன்று காலை பட்டாசு ஆலையில் உள்ள ஒரு அறையில் மருந்து கலக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது உராய்வு ஏற்பட்டு பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் மருந்து கலக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அதே பகுதியை சேர்ந்த வேல்முருகன், நாகராஜ், கண்ணன், சிவக்குமார், காமராஜ், மீனாட்சிசுந்தரம் ஆகிய 6 தொழிலாளர்கள் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தில் இடிபாடுகளில் சிதறி கிடந்த உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைகளுக்காக சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஆலை உரிமையாளர்கள் பாலாஜி, சசிபாலன், மேலாளர் தாஸ், போர்மேன் பிரகாஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அஜாக்கிரதையாக செயல்பட்டு உயிரிழப்பு ஏற்படுத்தியது, உரிய பாதுகாப்பின்றி தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
- திமுக ஆட்சியில் எவ்வளவோ போராட்டங்கள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- போராட்டம் நடத்துபவர்களை ரிமாண்ட் செய்யும் சூழ்நிலை கூட ஏற்படுவதில்லை.
சென்னை:
தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியால் சில நாட்களாக தி.மு.க. கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேச்சால் தி.மு.க. கூட்டணியில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று விழுப்புரத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 24-வது மாநில மாநாடு பேசிய கே. பாலகிருஷ்ணன், ஒரு ஆர்ப்பாட்டம், ஊர்வலம், போராட்டம் என்று சொன்னால் காவல்துறை வழக்கு போடுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நான் கேட்க விரும்புகிறேன். தமிழ்நாட்டில் என்ன அறிவிக்கப்படாத அவசர நிலையை பிரகடனப்படுத்திவிட்டீர்களா நீங்கள்? எப்படி காவல்துறை இப்படி கட்டுப்பாடில்லாமல் செயல்படுகிறது. போராட்டத்தை கண்டு நீங்கள் அஞ்ச வேண்டிய அவசியம் என்ன? ஒரு ஆர்ப்பாட்டம் நடந்தால் அதற்கு அனுமதியை ரத்து செய்து, கைது செய்துவிட்டால் முடக்கிவிட முடியுமா? சீப்பை ஒளித்துவிடுவதனால் கல்யாணத்தை நிறுத்திவிட முடியுமா? எனவே, இப்படிப்பட்ட போக்கை காவல்துறை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தி.மு.க. அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-
நேற்றுவரை ஆட்சியை பாராட்டியவர் பாலகிருஷ்ணன். அவருக்கு என்ன நெருடல் என புரியவில்லை. அவர் எந்த கண்ணோட்டத்தில் பேசுகிறார் என்பதும் தெரியவில்லை. குற்றம்சாட்ட வேண்டுமென்ற நோக்கில் குறைசொன்னால் அதற்கெல்லாம் பதில் தர முடியாது. பாலகிருஷ்ணனின் கோரிக்கைகள் என்னவென்று அறிந்து நிவர்த்தி செய்வோம். திமுக ஆட்சியில் எவ்வளவோ போராட்டங்கள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. போராட்டங்களின்போது மக்கள் பாதிக்கக்கூடாது என்பதே அரசின் நோக்கம்.
அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நடந்தது கடந்த ஆட்சிக்காலம். போராட்டம் நடத்துபவர்களை ரிமாண்ட் செய்யும் சூழ்நிலை கூட ஏற்படுவதில்லை என்று கூறினார்.
- பல்வேறு சாலைகள் தோண்டப்பட்டு நீண்ட நாட்களாக பணிகள் கிடப்பில் உள்ளன.
- வாகன ஓட்டிகள் தவித்து வருகிறார்கள்.
சேலம்:
சேலம் பழைய பஸ் நிலைய கடை வீதியில் உள்ள பெரியார் தெரு பகுதியில் 500-க்கும் மேற்பட்ட தங்க நகை ஆசாரி கடைகள் உள்ளன. மேலும் ஏராளமான வீடுகள், வணிக நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
இதனால் இந்த சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மிகவும் முக்கியமான இந்த சாலை கடந்த சில மாதங்களாக காங்கிரீட் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி அளித்தது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமலும், பொது மக்கள் நடந்து கூட செல்ல முடியாமலும் அவதிப்பட்டனர்.
இந்த நிலையில் சாக்கடை கழிவுகள் தெருவில் தேங்கி நின்று பொது சுகாதாரத்திற்கு கேடு விளைவித்து வந்தது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அடிக்கடி விழுந்து எழுந்து சென்ற நிகழ்வுகளும் நடந்தது.
இது குறித்து அந்த பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள், வார்டு கவுன்சிலர் மற்றும் மாநகராட்சி அதிகாரியிடமும் பல முறை முறையிட்டனர். ஆனாலும் எந்த பணியும் நடைபெறவில்லை. இதையடுத்து அந்த பகுதி பொது மக்கள் பணம் வசூல் செய்து புதிதாக காங்கிரீட் சாலை அமைக்க முடிவு செய்தனர். அதன் படி அந்த பகுதி பொது மக்கள், வியாபாரிகளிடம் பணம் வசூல் செய்து காங்கிரீட் சாலை அமைத்தனர். தற்போது அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சேலம் மாநகரில் பல்வேறு சாலைகள் தோண்டப்பட்டு நீண்ட நாட்களாக பணிகள் கிடப்பில் உள்ளன. அதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் தவித்து வருகிறார்கள்.
எனவே வரும் காலங்களில் பொது மக்களின் அடிப்படை வசதிகளில் தீவிர கவனம் செலுத்தி மாநகராட்சி அதிகாரிகள் மக்களுக்கு தேவையான வசதிகளை உடனுக்குடன் செய்து கொடுக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
- ஓட்டல் ஊழியர்கள் அவர்கள் 4 பேரையும் கடுமையாக தாக்கினர்.
- போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
கொடைக்கானல்:
மதுரை நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த ரவிக்குமார் மகன் ஜஸ்வந்த்குமார் (வயது28). இவர் சகோதரி ஜெஸி (27), இவரது கணவர் திலிப் (29), இவர்களது உறவினர் மாலன் (22) ஆகிய 4 பேரும் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தனர்.
மூஞ்சிக்கல் அருகே உள்ள தனியார் ஓட்டலில் உணவு வாங்கி சாப்பிட்டனர். அந்த உணவு பொருட்களில் துர்நாற்றம் வீசியதால் வேறு உணவு மாற்றி கொடுக்கும்படி ஜஸ்வந்த்குமார் தெரிவித்தார். ஆனால் கடை ஊழியர்கள் அதனை மாற்றித்தர மறுத்ததுடன் அவர்களுடன் வாக்கு வாதத்திலும் ஈடுபட்டனர்.
இதனையடுத்து உணவு பொருட்களை ஜஸ்வந்த்குமார் தனது செல்போனில் வீடியோவாக படம் எடுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ஓட்டல் ஊழியர்கள் அவர்கள் 4 பேரையும் கடுமையாக தாக்கினர்.
படம் எடுத்த செல்போன்களை வாங்கி உடைத்ததுடன் சுற்றுலா பயணிகளையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். படுகாயம் அடைந்த அவர்கள் காரில் ஆஸ்பத்திரிக்கு செல்ல முயன்றபோது வழிவிடாமல் காரையும் அடித்து நொறுக்கினர். ஒரு வழியாக அவர்கள் 4 பேரும் கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்தனர்.
பின்னர் தங்களுக்கு நேர்ந்த விஷயம் குறித்து அவர்கள் பேசிய வீடியோ சமூக வலைதலங்களில் வேகமாக பரவியது. சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு வரும் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லை. தமிழ்நாட்டில் இருந்து வருபவர்களுக்கே இந்த நிலை என்றால் வெளிநாட்டில் இருந்து வருபவர்களை எவ்வாறு மதிப்பார்கள்? எனவே போலீசார் இப்பிரச்சனையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
மேலும் கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு செல்ல முயன்றபோது அங்கும் தங்களை தாக்க ஓட்டல் ஊழியர்கள் வந்ததால் நாங்கள் மதுரைக்கு செல்வதாக தெரிவித்தனர். இச்சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து கொடைக்கானல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
போலீசார் ஓட்டலில் பதிவான சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தபோது ஊழியர்களே சுற்றுலா பயணிகளை தாக்கியது உறுதியானது. மேலும் பெண் என்றும் பாராமல் சுற்றுலா பயணிகளை கடுமையாக தாக்கியது தெரியவந்ததால் ஓட்டல் ஊழியர்களான முகமதுஅலி (32), தர்வீஸ் முகைதீன் (35), அர்சத் (27), அரவிந்த் (27), சர்தார் (34), ஆஷிப்ரகுமான் (38) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
புகாருக்கு உள்ளான ஓட்டல் மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை. கேரள சுற்றுலா பயணிகளை இதேபோல் ஒரு அறையில் அடைத்து வைத்து தாக்கியதாக புகார் உள்ளது. மேலும் தரமற்ற உணவுகள் வழங்கி வருவதால் மற்ற ஓட்டல் நிறுவனங்களுக்கும் அவப்பெயர் ஏற்படுவதால் இதன்மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்படும் மது வகைகள் பல மடங்கு தரம் குறைந்தவை.
- மது குடித்தால் பல வகை புற்றுநோய்கள் உள்ளிட்ட 200 வகையான நோய்கள் ஏற்படும்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
மது அருந்துவதால் குறைந்தது 7 வகையான புற்றுநோய்கள் ஏற்படும் ஆபத்து இருப்பதாகவும், இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மதுப்புட்டிகள் மீது எச்சரிக்கை வாசகங்கள் அச்சிடப்பட வேண்டும் என்றும் அமெரிக்க அரசுக்கு அந்நாட்டின் தலைமை மருத்துவர் விவேக் மூர்த்தி அலுவலகம் பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரை அமெரிக்காவில் விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இது மிகவும் வரவேற்கத்தக்க நடவடிக்கை ஆகும்.
தமிழ்நாட்டில் இதே கருத்தை கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. ''ஆல்கஹால் மற்றும் சுகாதார நிலைமை குறித்த உலக அறிக்கை -2014'' என்ற தலைப்பில் பத்தாண்டுகளுக்கு முன் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் மது குடிப்பதால் 60 வகை நோய்கள் தாக்கும் என இதுவரைக் கருதப்பட்டு வந்த நிலையில், இப்போது 200 வகை நோய்கள் தாக்கும் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது. மது அருந்துபவர்களுக்கு கல்லீரல் இழைநார் வளர்ச்சி (liver cirrhosis), சிலவகை புற்றுநோய்கள் ஏற்படுவதுடன், நிமோனியா, காசநோய் போன்றவையும் எளிதில் தொற்றுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அப்போதிலிருந்தே மதுவின் இந்த தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனால், தமிழகத்தை ஆண்ட அரசுகள் இந்த யோசனையை கண்டுகொள்ளவில்லை.
அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் மதுவுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்படும் மது வகைகள் பல மடங்கு தரம் குறைந்தவை. மது குடிக்கும் அளவும் தமிழ்நாட்டில் மிகவும் அதிகம். இவற்றை வைத்துப்பார்க்கும்போது அமெரிக்காவில் மது அருந்துபவர்களுக்கு 10 ஆண்டுகளில் புற்றுநோய் ஏற்படும் என்றால், தமிழ்நாட்டில் மது அருந்துபவர்களுக்கு 2 ஆண்டுகளில் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளது. அதனால் தான் தமிழ்நாட்டில் இத்தகைய விழிப்புணர்வு வாசகங்கள் மதுப்புட்டியில் அச்சிடப்பட வேண்டும் என்று பாமக வலியுறுத்துகிறது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக நான் பதவி வகித்தபோது தான் புகையிலைப் பொருள்கள் மீது எச்சரிக்கை வாசகங்களை அச்சிடும் முறை கடுமையாக எதிர்ப்புகளையும் மீறி நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன் பயனாக புகையிலைப் பழக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு இருப்பதுடன் புகையிலைப் பழக்கமும் கணிசமாக குறைந்துள்ளது. இதேபோல், மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.
உலக அளவில் இப்போது தென்கொரியாவில் மட்டும் தான் மதுப்புட்டிகள் மீது எச்சரிக்கை வாசகங்கள் அச்சிடும் முறை நடைமுறையில் உள்ளது. அயர்லாந்து நாட்டிலும், அமெரிக்காவிலும் இத்தகைய முறை விரைவில் நடைமுறைக்கு வரவிருக்கிறது. மதுப்புட்டிகளில் எச்சரிக்கை வாசகங்களை அச்சிடும் அதிகாரம் மாநில அரசுக்கே உள்ளது. எனவே, மது குடித்தால் பல வகை புற்றுநோய்கள் உள்ளிட்ட 200 வகையான நோய்கள் ஏற்படும் என்ற வாசகத்தையும், எச்சரிக்கைப் படத்தையும் மதுப்புட்டிகளில் பரப்பில் 80% அளவுக்கு அச்சிடும் முறையை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
- சிறுமி வீடு திரும்பினாலும் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்தார்.
- பள்ளி செல்ல தொடங்கிய சிறுமி டான்யாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வீராபுரம் ஶ்ரீ வாரிநகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ் - சௌபாக்யா தம்பதி. இவர்களின் மூத்த மகளான ஒன்பது வயதான சிறுமி டான்யா அரிய வகை முகச்சிதைவு நோயால் அவதிப்பட்டு வந்தது குறித்து செய்திகள் வெளியாகின.
அதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், சிறுமி டான்யாவின் வீட்டுக்கு சென்று பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதையடுத்து சிறுமிக்கு முக அறுவை சிகிச்சை நடைபெற்றது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சிறுமியை சந்தித்து நலம் விசாரித்தார்.
இதனை தொடர்ந்து சிறுமி வீடு திரும்பினாலும் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்தார். இதில் சிறுமியின் முகம் இயல்பு நிலைக்கு திரும்ப மேலும் சில அறுவை சிகிச்சைகள் நடைபெற்றது. இந்த அறுவை சிகிச்சைகளும் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து சிறுமி டானியா பள்ளி செல்லத்தொடங்கினார். அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிலையில், முக சீரமைப்பு அறுவை சிகிச்சை பெற்று பயனடைந்த சிறுமி டான்யாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வீடு வழங்கினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் முறையான சிகிச்சை வழங்கப்பட்டு தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள சிறுமி டான்யாவுக்கு வீடு வழங்கப்பட்டுள்ளது.
- சிறுவன் அங்கு வந்து திடீரென அம்மிக்கல்லை எடுத்து தாயின் தலையில் போட்டுக்கொலை செய்தான்.
- விசாரணைக்கு பின்னர் சிறுவனை நெல்லையில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். அதில் 17 வயதான மூத்த மகனுக்கு திடீரென மனநலம் சற்று பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் எங்கும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று சிறுவனின் தந்தை வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், இரவில் சிறுவனின் 45 வயதான தாய் வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது சிறுவன் அங்கு வந்து திடீரென அம்மிக்கல்லை எடுத்து தாயின் தலையில் போட்டுக்கொலை செய்தான். பின்னர் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப்போன அந்த சிறுவன், தனது தந்தைக்கு போன் செய்து அம்மாவின் தலையில் அம்மிக்கல்லை போட்டுவிட்டேன். தலையில் இருந்து ரத்தம் கொட்டுகிறது என்று கூறியுள்ளான்.
உடனே பதறிப்போன அவர், தனது வீட்டிற்கு அருகில் வசிக்கும் நபர்களிடம் போனில் தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் விரைந்து வந்து பார்த்தபோது அந்த பெண் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து கடையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர். அவனை போலீஸ் நிலையத்தில் வைத்திருந்தபோது, தனது தாயை நினைத்து தேம்பி தேம்பி அழுது கொண்டே இருந்தான்.
மேலும் அங்கிருந்த போலீசாரிடம், எனது தாயை எங்கே, நான் அவரிடம் போக வேண்டும் என்று அழுதபடியே கேட்ட சம்பவம் அங்கிருந்தவர்களை கண் கலங்க செய்தது. தொடர்ந்து விசாரணைக்கு பின்னர் சிறுவனை நெல்லையில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.
- சிறுமி உயிரிழந்த நிலையில் அசம்பாவிதங்களை தவிர்க்க தனியார் பள்ளி முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர்.
- பள்ளியில் இருக்கக்கூடிய அலுவலர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து நேற்று சிறுமி லியா லட்சுமி உயிரிழந்தார்.
சிறுமி உயிரிழந்த நிலையில் அசம்பாவிதங்களை தவிர்க்க தனியார் பள்ளி முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர்.
முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு நிறைவடைந்த நிலையில் சிறுமி லியாவின் உடல் அவரது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் சிறுமியின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில் தனியார் பள்ளியில் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர். பள்ளியில் இருக்கக்கூடிய அலுவலர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
- எப்படி காவல்துறை இப்படி கட்டுப்பாடு இல்லாமல் செயல்படுகிறது.
- மக்கள் உரிமைக்காக போராடினால் கைது செய்வதா?
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டதை கண்டித்து அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க. கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
போராட்டம் நடத்த அனுமதி மறுத்த காவல் துறை, தடையை மீறி போராட்டம் நடத்தியவர்களை கைது செய்து பின்னர் விடுவித்தது.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது:
ஆர்ப்பாட்டம், ஊர்வலம், போராட்டம் என்றால் காவல் துறை வழக்கு போடுகிறது.
நான் முதல்வர் மு.க.ஸ்டாலினை கேட்கிறேன்... தமிழ்நாட்டில் என்ன அறிவிக்கப்படாத ஒரு அவசர நிலை பிரகடனப்படுத்திவிட்டீர்களா நீங்கள்? எப்படி காவல்துறை இப்படி கட்டுப்பாடு இல்லாமல் செயல்படுகிறது.
திமுக ஆட்சியில் மக்கள் ஊர்வலங்கள் நடத்தக்கூடாதா? தமிழ்நாட்டிலே மக்கள் இயக்கங்கள் நடத்தக்கூடாதா? மக்கள் உரிமைக்காக போராடினால் கைது செய்வதா?
ஆர்ப்பாட்டம் நடந்தால் அதை அனுமதி ரத்து செய்து கைது செய்து விட்டால் முடக்கி விட முடியுமா? சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்றுவிடுமா? என்று அவர் கூறி உள்ளார்.
இந்நிலையில் அ.தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசிய வீடியோவை வெளியிட்டு, "ஸ்டாலின் மாடல் என்பது அதிகார அடக்குமுறைக்கான பாசிச மாடல் தான் என்பதற்கு கூட்டணி கட்சிகளின் இத்தகைய வாக்குமூலங்களே சாட்சி!" என்று தெரிவித்துள்ளது.
- பவுர்ணமி நாட்களில் கோவில் கடற்கரையில் இரவில் குடும்பத்தோடு தங்கி வழிபாடு செய்வார்கள்.
- திருச்செந்தூர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஆச்சரியமாக பார்த்து அதன் மீது நின்று “செல்பி” எடுத்து மகிழ்கின்றனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கோவில் முன்புள்ள கடற்கரையில் புனித நீராடி கோவிலில் சுவாமி தரிசனம் செய்வார்கள்.
மேலும் பவுர்ணமி நாட்களில் கோவில் கடற்கரையில் இரவில் குடும்பத்தோடு தங்கி வழிபாடு செய்வார்கள்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் கடந்த சில நாட்களாக அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் கடல் திடீரென உள்வாங்குவதும், வெளியே சீற்றம் அதிகமாக காணப்பட்டும் வருகிறது.
கடந்த 31-ந்தேதி அமாவாசையாக இருந்ததால் 2 நாட்களாக கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. இதனால் கோவில் முன்புள்ள கடற்கரையில் அதிக அளவில் கடல் அரிப்பு ஏற்பட்டு சுமார் 20 அடி நீளத்திற்கு 10 அடி ஆழத்திற்கு இந்த கடலில் அரிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் திருச்செந்தூர் கடற்கரையில் கடல் அரிப்பு ஏற்பட்ட பகுதியில் இருப்புபாதை, வினோதம் பாலம் போன்ற கல்சாலைகள் போன்ற அமைப்பு காணப்படுகிறது. அந்த சாலை நீண்ட தூரத்திற்கு காணப்படுகிறது.
இதுகுறித்து அப்பகுதியினர் கூறும்போது, இது பண்டைய கால மன்னர்கள் ஆட்சி செய்தபோது திருச்செந்தூரில் இருந்து குலசேகரன்பட்டினத்தில் உள்ள துறைமுகத்திற்கு பொருட்கள் ஏற்றிச் செல்ல பயன்படுத்திய சாலை அல்லது ஆங்கிலேயர் காலத்தில் கடற்கரை வழியாக போடப்பட்ட ரெயில் இருப்புபாதையாக இருக்கலாம் என தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே மதுரைக்கு தெற்கே பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்த போது குலசேகரபட்டிணம் ஒரு துறைமுகமாக இருந்து இங்கிருந்து ஜாவா, சுமத்திரா, இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு முத்து, உப்பு, போன்றவை ஏற்றுமதி செய்ய கப்பல் போக்குவரத்து இருந்துள்ளதாக இந்த பகுதியில் உள்ள கோவில் கல்வெட்டு மூலம் தெரிகிறது.
அதே போல் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் குலசேகரன்பட்டினத்தில் துறைமுகம் இருந்ததாகவும், இந்த துறைமுகத்திற்கு திருச்செந்தூர் கடற்கரை வழியாக ரெயில் பாதை இருந்ததாகவும் அங்கு சீனி ஆலைகள் இருந்ததாகவும் ரெயிலில் பொருட்களை ஏற்றி வந்து கப்பல் வழியாக ஏற்றுமதி நடந்துள்ளது என கூறப்படுகிறது.
பின்னாளில் கடல் சீற்றம் ஏற்பட்டு ரெயில் போக்குவரத்து, துறைமுகம் காணாமல் போயிருக்கலாம் என தெரிகிறது.
அதற்கான தடயங்கள் தான் தற்போது கடல் உள்வாங்கிய போது கடற்கரை வழியாக குலசேகரன்பட்டினந்திற்கு ரெயில் பாதை அல்லது சாலையாக இருந்த அடையாளம் அதாவது சாலை போன்று காணப்படுகிறது எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் இந்த வினோத பாதையை திருச்செந்தூர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஆச்சரியமாக பார்த்து அதன் மீது நின்று "செல்பி" எடுத்து மகிழ்கின்றனர்.






