என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • ஒவ்வொரு வருடமும் பொங்கல் அன்று டெர்பி பந்தயம் மிகச்சிறப்பாக நடைபெறுகிறது.
    • வெளிமாநிலங்களில் இருந்தும் இந்த பந்தயத்தில் குதிரைகள் கலந்து கொள்கிறது.

    சென்னை:

    கிண்டியில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) பொங்கல் அன்று 'டெர்பி' பந்தயம் நடக்கிறது.

    ஒவ்வொரு வருடமும் பொங்கல் அன்று டெர்பி பந்தயம் மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. இந்த பந்தயத்தில் மொத்தம் 9 குதிரைகள் கலந்து கொள்கின்றன. வெளிமாநிலங்களில் இருந்தும் இந்த பந்தயத்தில் குதிரைகள் கலந்து கொள்கிறது.

    டெர்பி பந்தயத்தில் ஜெயிக்கும் குதிரையின் உரிமையாளருக்கு ரூ.70 லட்சத்து 35 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்படும். 2-வது வரும் குதிரை யின் உரிமையாளருக்கு ரூ.27 லட்சமும், 3-வது வரும் குதிரையின் உரிமையாளருக்கு ரூ.11½ லட்சமும், 4-வது வரும் குதிரையின் உரிமையாளருக்கு ரூ.6 லட்சமும் வழங்கப்படும்.

    இரண்டு நாட்கள் நடைபெறும் முக்கிய பந்தயங்கள்:-

    1. டாஷ்மெஷ் ஸ்டெட் மில்லியன் ரூ.14½ லட்சம், 2. நனோலி ஸ்டெட் பில்லிஸ் கோப்பை ரூ.16½ லட்சம், 3. சென்னை ரேஸ் கிளப் கோப்பை ரூ.22 லட்சம். 4. பொங்கல் மில்லியன் கோப்பை ரூ.10½ லட்சம், 5. எம்.ஏ.எம்.ராமசாமி நினைவு கோப்பை ரூ.18 லட்சம். 6. உஷா ஸ்டெட் மில்லியன் கோப்பை ரூ.14½ லட்சம்.

    இரண்டு நாட்கள் நடைபெறும் பந்தயத்தில் 14 ரேஸ்கள் நடைபெறுகிறது. எச் பி எஸ் எல் என்ற நிறுவனம் டெர்பி பந்தயத்திற்கு ஸ்பான்சர் செய்கிறது. இதன் உரிமையாளர் பிருத்வி ராஜி டெர்பி பந்தயத்தில் ஜெயிக்கும் உரிமையாளருக்கு கோப்பையை பரிசாக வழங்குவார்.

    இந்த தகவலை ரேஸ் கிளப் செயலாளர் நிர்மல் பிரசாத் தெரிவித்தார். உடன் சீனியர் ஸ்டைபென்டிரி ஸ்டூவார்ட் வின்சன்ட் தன்ராஜ், உதவி ஸ்டைபென்டிரி ஸ்டுவார்ட் ஆர்.என்.வி.பி. குமார் உடன் இருந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • யானையை மீண்டும் எழுந்து நிற்க வைக்க பாகன்கள் முயற்சி செய்தனர்.
    • யானைக்கு தொடர்ந்து மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களில் நெல்லை டவுன் நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் 56 வயதுடைய காந்திமதி என்ற பெண் யானை உள்ளது.

    வயது முதிர்வு காரணமாக இந்த யானைக்கு கால்களில் மூட்டு வலி ஏற்பட்டு நடமாட முடியாமல் அவதிப்பட்டு வருகிறது. இதற்காக கடந்த 2020-ம் ஆண்டு முதல் மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். கடந்த சில நாட்களாக யானை கீழே படுத்து உறங்காமல் நின்றபடியே தூங்கிக் கொண்டிருந்தது.

    நேற்று அதிகாலை 3 மணி அளவில் யானை திடீரென்று கீழே படுத்தது. ஆனால் அதன் பிறகு அதனால் எழுந்திருக்க முடியவில்லை.

    யானையை மீண்டும் எழுந்து நிற்க வைக்க பாகன்கள் முயற்சி செய்தனர். ஆனால் அது கைகொடுக்கவில்லை. இதுகுறித்து பாகன்கள் இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் நெல்லை ஸ்ரீபுரம் கால்நடை மருத்துவமனை தலைமை டாக்டர் முருகன், நெல்லை வனகால்நடை டாக்டர் மனோகரன், மதுரை வனகால்நடை டாக்டர் கலைவாணன், நெல்லை ராமையன்பட்டி கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் செல்வமணிகண்டன், நெல்லை வனச்சரகர் சரவணகுமார் ஆகியோர் உடனடியாக கோவிலுக்கு வந்து யானையை பார்வையிட்டனர். இந்த மருத்துவ குழுவினர் யானையின் ரத்த மாதிரியை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    நேற்று மாலையில் 2 பெரிய கிரேன்கள் கோவிலுக்குள் கொண்டு வரப்பட்டன. அந்த கிரேன்கள் மூலம் யானையின் உடலில் பெல்ட் கட்டி தூக்கி நிறுத்தினார்கள்.

    சிறிது நேரம் நின்றிருந்த யானை மீண்டும் கீழே படுத்துக்கொண்டது. யானைக்கு தொடர்ந்து மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

    இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி உயிரிழந்தது.

    யானையை எழ வைத்து சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் போராடிய நிலையில் சிகிச்சை பலனின்றி காந்திமதி யானை உயிரிழந்தது.

    • கடந்த 2 நாட்களில் மட்டும் 7,309 பஸ்கள் புறப்பட்டு சென்றுள்ளன.
    • ஆம்னி பஸ்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்களின் மூலமாகவும் 3.5 லட்சம் பேர் வெளியூர்களுக்கு சென்றுள்ளனர்.

    சென்னை:

    கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட காரணங்களால் லட்சக்கணக்கான வெளியூர்வாசிகள் சென்னையில் வாழ்ந்து வருகிறார்கள். பொங்கல், தீபாவளி பண்டிகை காலங்களின்போது, சொந்த ஊர்களுக்கு சென்று அவர்கள் விழாவை சிறப்பித்து வருவது வழக்கம். மக்களின் பயன்பாட்டுக்காக விழாக்காலங்களில் சிறப்பு பஸ்-ரெயில்களும் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை 14-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அதனைத்தொடர்ந்து மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி பொங்கல் பண்டிகையை சொந்த ஊருக்கு சென்று கொண்டாட சென்னைவாசிகள் விரும்பி, நேற்று முன்தினம் முதல் சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்று வருகிறார்கள். இதனால் பஸ்-ரெயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதி வருகிறது.

    பொங்கல் பண்டிகையையொட்டி, தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் சிறப்பு பஸ்கள் என மொத்தம் (10-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை) 21,904 பஸ்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதில் கடந்த 2 நாட்களில் மட்டும் 7,309 பஸ்கள் புறப்பட்டு சென்றுள்ளன. இந்த பஸ்கள் மூலம் சுமார் 5 லட்சம் பேர் சாலை மார்க்கமாக வெளியூர்களுக்கு பயணித்துள்ளனர்.

    சுமார் 200 ரெயில்களில் கடந்த 2 நாட்களில் சுமார் 3 லட்சம் பேர் பயணித்துள்ளனர். 50-க்கும் மேற்பட்ட விமானங்களில் கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையிலானோர் சென்றுள்ளனர். அதேபோல ஆம்னி பஸ்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்களின் மூலமாகவும் 3.5 லட்சம் பேர் வெளியூர்களுக்கு சென்றுள்ளனர். குறிப்பாக கடந்த 2 நாட்களில் மட்டும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார்கள் புறப்பட்டு சென்றுள்ளன. அந்தவகையில் கடந்த 2 நாட்களில் சென்னையில் இருந்து 12 லட்சம் பேர் பொங்கல் பண்டிகை கொண்டாட சொந்த ஊருக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

    இன்றும், நாளையும் 4,184 தினசரி பஸ்களுடன், 2,611 சிறப்பு பஸ்கள் என 6,175 பஸ்கள் சென்னையில் இருந்து இயக்கப்படுகின்றன. அதேபோல வெளியூர்களில் இருந்து சென்னைக்கு 4,390 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    வழக்கத்தை காட்டிலும் இந்தாண்டு வெளியூர் சென்ற கார்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.

    பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் பஸ்-ரெயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதி வருகின்றன. குறிப்பாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளில் உட்கார கூட இடமின்றி கூட்டம் காணப்படுகிறது. ஒவ்வொரு ரெயிலிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

    • சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    மேலும், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை (திங்கட்கிழமை) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    சென்னையை பொறுத்தவரையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.

    மீனவர்களுக்கான எச்சரிக்கையாக தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    • இன்றைய முக்கியச் செய்திகள்.
    • இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புத்தாண்டு பிறந்தது முதல் இயற்கை சீற்றம், கடலுக்கு செல்ல தடை உள்ளிட்ட காரணங்களால் மீன்பிடி வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
    • மீனவர்களை காங்கேசன் துறைமுக அலுவலகத்திற்கு கொண்டு சென்று இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மண்டபம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், மண்டபம், தங்கச்சிமடம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் தொடர் அச்சுறுத்தல்களால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள்.

    குறிப்பாக எல்லை தாண்டி வந்ததாக கூறி நடுக்கடலில் வைத்து அவர்களை சிறைபிடிப்பது, படகுகளை பறிமுதல் செய்தல், தாக்கி விரட்டி அடித்தல், வலைகளை அறுத்து சேதப்படுத்துதல் உள்ளிட்டவைகளால் நஷ்டத்தையும் சந்திக்கின்றனர்.

    புத்தாண்டு பிறந்தது முதல் இயற்கை சீற்றம், கடலுக்கு செல்ல தடை உள்ளிட்ட காரணங்களால் மீன்பிடி வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்தநிலையில் அனைத்து தடைகளும் விலகிய நிலையில் நேற்று காலை மீன்துறை அலுவலக அனுமதியுடன் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.

    அவர்களில் பெரும்பாலானோர் கச்சத்தீவு, நெடுந்தீவு அருகே பாரம்பரிய பகுதியில் வலைகளை விரித்து மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு மின்னல் வேகத்தில் வந்த இலங்கை கடற்படையினரை பார்த்து பல மீனவர்கள் வலைகளை சுருட்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர். இருந்தபோதிலும் ராமேசுவரத்தை சேர்ந்த முகேஸ்குமார், மரிய ரெட்ரிசன் ஆகியோருக்கு சொந்தமான 2 விசைப்படகுளை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்தனர்.

    மீனவர்களின் படகுகளுக்குள் தாவிக்குதித்த அவர்கள் படகில் பிடித்து வைத்திருந்த மீன்கள், ஜி.பி.எஸ். கருவி மற்றும் மீன்பிடி உபகரணங்களை பறித்துக்கொண்டனர். பின்னர் எல்லை தாண்டி வந்ததாக கூறி களஞ்சியம் (வயது 47), முனீஸ்வரன் (49), கார்மேகம் (60), கண்ணன் (43), தங்கச்சிமடத்தை சேர்ந்த பிரிஸ்மன் (25), பிரியன் (30), மரிய ஜான் ரெமோரா (48), சவேரியார் அடிமை (48) ஆகிய 8 மீனவர்களையும் சிறைபிடித்து, அவர்களின் 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து இலங்கைக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் அவர்களை காங்கேசன் துறைமுக அலுவலகத்திற்கு கொண்டு சென்று இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று விடுமுறை நாள் என்பதால் நாளை அவர்கள் ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள். அதன்பின்னரே அவர்கள் விடுதலை ஆவார்களா? அல்லது சிறையில் அடைக்கப்படுவார்களா? என்பது தெரியவரும்.

    ஏற்கனவே கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முதல் நாள் 17 மீனவர்கள் 2 படகுகளுடன் சிறைபிடிக்கப்பட்டனர். தற்போது பொங்கல் பண்டிகை கொண்டாட இருந்த நிலையில் 8 மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் ராமேசுவரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கொளத்தூரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
    • அப்போது, மக்களுக்கு பணியாற்றவே 7-வது முறை ஆட்சிக்கு வருவோம் என தெரிவித்தார்.

    சென்னை:

    கொளத்தூரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:

    என்னையும், உங்களையும் எப்படி பிரிக்க முடியாதோ, அதேபோல் தி.மு.க.வையும் பொங்கலையும் பிரிக்க முடியாது. உணர்வோடும் உற்சாகமாகவும் கொண்டாடக் கூடிய பண்டிகை தான் இந்த பொங்கல்.

    நம்முடைய ஆட்சி மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி உள்ளது. தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கும், அதற்கு நீங்கள் அனைவரும் உறுதுணையாக இருக்கவேண்டும். இருப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

    அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் நான் சட்டமன்றத்திலேயே கூறி இருக்கிறேன். ஏற்கனவே 5 முறை கருணாநிதி தலைமையில் ஆட்சிக்கு வந்துவிட்டோம். 6-வது முறை என் தலைமையில் ஆட்சிக்கு வந்திருக்கிறோம். 7-வது முறையும் ஆட்சிக்கு நாம்தான் வருவோம் என்று சொல்லி இருக்கிறேன்.

    உறுதியாக சொல்கிறேன்... மக்களுக்கு பணியாற்றவே, தொண்டாற்றவே 7-வது முறை ஆட்சிக்கு ஆட்சிக்கு வருவோம் என்று கூறுகிறேன் என தெரிவித்தார்.

    • பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    • பொதுமக்களின் வசதிக்காக சில கேஷ் கவுண்டர்கள் திறக்கப்படும்.

    சென்னை:

    வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    பொங்கல் விடுமுறையின் போது பார்வையாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் சுவாரஸ்ய அனுபவத்தை உறுதி செய்வதற்காக, உயிரியல் பூங்கா நிர்வாகம் மற்ற துறைகளுடன் ஒருங்கிணைந்து பல சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூங்கா (செவ்வாய்கிழமை) செயல்படும். 14.01.2025 பார்வையாளர்கள் ஆன்லைன் தளங்கள் (UPI, WhatsApp) மற்றும் டிக்கெட் கவுன்டர்கள் மூலம் டிக்கெட்டுகளை வாங்கலாம். மேலும் பொதுமக்களின் வசதிக்காக சில கேஷ் கவுண்டர்கள் திறக்கப்படும்.

    உயிரியல் பூங்காவிற்குள் இரு சக்கர வாகனங்களுக்கும், 500 மீட்டர் தொலைவில் கேளம்பாக்கம் சாலையில் ஆட்டோ, கார், வேன், கனரக வாகனங்கள் நிறுத்துவதற்கும் பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    வாகன நிறுத்துமிடத்திலிருந்து நுழைவாயிலுக்கு பார்வையாளர்களை ஏற்றிச் செல்ல இலவச வாகன வசதி சேவை செய்யப்பட்டுள்ளது.

    ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோரின் தொடர்பு எண்ணைக் குறிப்பிடும் கை வளையம் வழங்கப்படும்.

    பார்வையாளர்கள் பிளாஸ்டிக் நிரம்பிய உணவுப் பொருட்களையோ பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களையோ கொண்டு வர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மதுபானம் மற்றும் ஆயுதங்கள் போன்ற பொருட்கள் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளன. இந்த பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட பூங்கா நிர்வாகம் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறது என தெரிவித்துள்ளது.

    • 20 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 5746 ஏக்கர் பரப்பளவில் புதிய விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
    • விமான நிலையம் அறிவிப்பு வெளியான நாள் முதல் ஏகனாபுரம் கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 20 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 5746 ஏக்கர் பரப்பளவில் புதிய விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

    இதற்கு பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். விமான நிலையம் அறிவிப்பு வெளியான நாள் முதல் ஏகனாபுரம் கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்நிலையில், பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் கிராம மக்களை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் விரைவில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராடி வரும் மக்களை தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சந்திக்க அனுமதி கோரி காவல்துறையிடம் தவெக நிர்வாகிகள் மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

    அதன்படி, வரும் ஜனவரி 19, 20 ஆகிய தேதிகளில் சந்திக்க அனுமதி அளிக்க வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    அரசியல் கட்சி அறிவித்த பிறகு, விஜய் முதல்முறையாக களத்திற்கு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தேர்தல் பணிக்குழு அமைத்து காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
    • திமுக வேட்பாளர் வெற்றிக்காக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தல் பணிக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - தேர்தல் பணிக்குழு அமைத்து காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    05.02-2025 அன்று நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் திரு வி.சி. சந்திரகுமார் அவர்களி வெற்றிக்காக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பில் கீழ்கண்ட தேர்தல் பணிக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

    கே.வி.தங்கபாலு, க. திருநாவுக்கரசர், எம். கிருஷ்ணசாமி, கே.எஸ்.அழகிரி, எஸ் ராஜேஷ்குமார் எம்எல்ஏ, செல்வி எஸ். ஜோதிமணி, எம்.பி., டாக்டர் எம்.கே.விஷ்ணுபிரசாத் எம்.பி., கார்தி ப சிதம்பரம், எம்.பி., கே. கோபிநாத் எம்.பி., விஜய் வசந்த், எம்.பி., டாக்டர் சி.ராபர் ப்ரூஸ் எம்.பி., சரிகாந்த் செந்தில், எம்.பி., செல்வி சுதா ராமகிருஷ்ணன், எம்.பி., கே.ஆர். ராமசாமி, ரூபி ஆர். மனோகரன், எம்.எல்.ஏ., ஏ.ஆர்.முனிரத்தினம், எம்.எல்.ஏ., ஜெ.ஜி. பிரின்ஸ் எம்எல்ஏ, ஜெ.எம்.எச். ஹசன் பௌலானா, எம்.எல்.ஏ., எஸ். ராஜ்குமார். எம்.எல்.ஏ., ஆர்.கணேஷ், எம்.எல்.ஏ., எஸ். பழனிநாடார், எம்.எல்.ஏ., ஆர். ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., துரை சந்திரசேகர், எம்.எல்.ஏ., எஸ். அமிர்தராஜ், எம்எல்ஏ., நியமிக்கப்பட்டுள்ளனர்.

    எஸ்.தி. ராமச்சந்திரன், எம்.எல்.ஏ., தாரகை சுத்பர்ட், எம்.எல்.ஏ., எஸ். மாங்குடி, எம்.எல்ஏ., ஆர். கருமாணிக்கம், எம்.எல்.ஏ., ஏ.எம்.எஸ்.ஜி. அசோகார், எம்.எல்.ஏ., டி. திருச்செல்வன், எம்.பி. சரவணன், மக்கள் ஜி. ராஜன், ஆர்.எம்.பழனிசாமி, சஞ்சய் சம்பத் எல்.முத்துக்குமார், பி.என்.நல்லுசாமி, ஈ.ஆர். ராஜேந்திரன், வி.எஸ், காளிழுத்து, வெளில் பிரசாத், சாரதா தேவி, சித்ரா விஸ்வநாதன், கே.பி. முத்துக்குமார், ஆர். சிவகுமார், ராஜேஷ் ராஜப்பா, கே.பி.உதயகுமரன், ஞானதிபன், கே.ஏ. கானப்ரியா உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • கொளத்தூரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
    • சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார்.

    சென்னை கொளத்தூரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

    சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார்.

    பின்னர், நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    என்னையும், கௌத்தூர் தொகுதியையும் பிரிக்க முடியாது. அதுபோல திமுகவையும், பொங்கலையும் பிரிக்க முடியாது.

    பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட 17-ம் தேதியும் விடுமுறை அறிவித்தோம்.

    பொங்கல்தான் தமிழர்களுக்கான பண்டிகை என்றும் பெரியார் கூறினார். பொங்கல் பரிசாக திருக்குறளை தருகிறேன் எனக்கூறியவர் பெரியார். தமிழுக்காகவும், தமிழ் சமூகத்திற்காகவும் கடைசிவரை பாடுபட்டவர் பெரியார். பெண்களின் உரிமை உள்ளிட்டவற்றுக்காக பெரியார் தொடர்ந்து போராடி வந்தார். இன்று யார் யாரோ பெரியார் குறித்து பேசி வருகின்றனர். பெரியார் குறித்து அவதூறாக பேசுவோர் பற்றி பேசி, அவர்களை அடையாளம் காட்ட விரும்பவில்லை.

    மகளிர் உரிமைத்தொகை, பெண்கள் இலவச பயணம் போன்ற திட்டங்களால் பெண்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர். தேர்தல் வாக்குறுதிகளில் சிலவற்றை இன்னும் நிறைவேற்றவில்லை. அதை ஒப்புக்கொள்கிறேன். நிறைவேற்றாத ஒன்று, இரண்டு வாக்குறுதிகளையும் விரைவில் நிறைவேற்றுவோம். அதில் பின்வாங்க மாட்டோம்.

    பதவி சுகத்திற்காக இல்லாமல், மக்கள் பணியாற்றவே முதல்வராகியுள்ளேன். தமிழ்நாட்டிற்கும், தமிழ் சமூகத்திற்கும் என் உடலில் உயிர் இருக்கும் வரை உழைப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னை பெருநகர காவல் துறை விரிவான தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    • குழந்தைகள் காணாமல் போனால் உடனடியாக மீட்பதற்கு காவல் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

    சென்னை பெருநகர காவல் ஆணையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

    சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில், பொதுமக்கள் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் காணும் பொங்கலை கொண்டாடுவதற்கு 16,000 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் மூலம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    16.01.2025 அன்று காணும் பொங்கலை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் குடும்பத்தாருடன் மெரினா கடற்கரை உள்ளிட்ட இதர பொழுது போக்கு இடங்களுக்கு அதிகளவில் வருவதால், எவ்வித அசம்பாவிதமும் நிகழா வண்ணம் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணும் பொங்கலை கொண்டாடுவதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின் பேரில், விரிவான பாதுகாப்பு ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின் பேரில் 16,000 காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் சுமார் 1,500 ஊர்க்காவல் படையினரும் மூலம் காணும் பொங்கல் கொண்டாட்டத்தின்போது பாதுகாப்பு அளிக்க சென்னை பெருநகர காவல் துறை விரிவான தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    1. மெரினா கடற்கரை (உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை) சென்னையில் காணும் பொங்கலை முன்னிட்டு உழைப்பாளர் சிலை முதல் காந்தி சிலை வரை 3 தற்காலிக காவல் கட்டுப்பாட்டறைகள் (Temporary Mnl Control room) அமைக்கப்பட்டும், உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையிலுள்ள 7 சர்வீஸ் சாலைகளின் நுழைவு வாயில்களில் காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டும். அவசர மருத்துவ உதவிக்காக மருத்துவக் குழுவினருடன் 8 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் மீட்புப் பணிக்காக தீயணைப்பு வீரர்கள் அடங்கிய 2 தீயணைப்பு வாகணங்கள் ஆகியவை தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படும். இவை தவிர மீட்புப் பணிக்காக மோட்டார் படகுகள் மற்றும் சுமார் 200க்கும் மேற்பட்ட நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படுவார்கள்.

    2. கடற்கரை மணற்பரப்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள்: உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையில் உள்ள மணற்பரப்பில் 13 தற்காலிக காவல் கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு உயர் கோபுரத்திலும் 3 பேர் கொண்ட காவல் குழுவினர் பணியமர்த்தப்படுவர். அவர்களுக்கு வான்தந்தி கருவி (Walky Talky), மெகா போன். பைனாகுலர் ஆகியவை வழங்கப்பட்டு, வாட்சப் குழு (WhatsApp Group) அமைக்கப்பட்டும், பைனாகுலர் மூலம் காவலர்கள் கண்காணித்து மெகா போன் மூலம் பொதுமக்களுக்கு அறிவுரைகள் வழங்கியும், கட்டுப்பாட்டறைக்கு வான் தந்தி கருவி மூலமும், வாட்சப் குழுவிலும் உடனுக்குடன் தகவல்களை வழங்குவார்கள். மேலும், 12 முக்கிய இடங்களில் கூடுதலாக 13 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, தற்காலிக கட்டுப்பாட்டறையில் உள்ள அகன்ற திரைகளில் கண்காணிக்கும் பணி மேற்கொள்ளப்படும்.

    காணும் பொங்கலன்று பொதுமக்கள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், கடற்கரையோரம் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். மேலும், குதிரைப்படையினர் மற்றும் மணற்பரப்பில் செல்லக்கூடிய 3 All Terran Vehicle மூலம் கடற்கரை மணற்பரப்பில் காவல் ஆளினர்களால் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு திருட்டு மற்றும் குற்ற சம்பவங்கள் நடை பெறாமல் கண்காணிக்கப்படுவர்.

    சென்னை பெருநகர காவல் மற்றும் கடலோர காவல் குழுமத்தின் கடற்கரை உயிர் காக்கும் பிரிவின் (Anti Drowning team) 85 காவல் ஆளிநர்கள் கடற்கரை ஒட்டிய பகுதிகளில் பொதுமக்கள் கடலில் இறங்காத வண்ணம் தீவிரமாக கண்காணிக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

    3. பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை: பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் 1 தற்காலிக காவல் கட்டுப்பாட்டறை. 3 தற்காலிக காவல் கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, காவல் ஆளிநர்களால் பைனாகுலர் மூலம் கண்காணிக்கப்படுவதுடன், ஒலிபெருக்கி மூலம் அறிவுரைகள் வழங்கப்படும். மேலும், குதிரைப்படை மற்றும் சுற்றுக் காவல் ரோந்து ஊகணங்கள் மூலம் ரோந்து வரப்பட்டு, கண்காணிக்கப்படுவதுடன். ஒலிபெருக்கி மூலம் அவ்வப்போது பாதுகாப்பு குறித்த அறிவுரைகளும் வழங்கப்படும். 2 ஆம்புலன்ஸ் வாகனங்கள். தீயணைப்பு வாகனம். அப்பகுதியை சேர்ந்த நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் மற்றும் மோட்டார் படகுகள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படும்.

    4.முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள்:

    (I) குழந்தைகள் காணாமல் போனால் உடனடியாக மீட்பதற்கு காவல் அடையாள அட்டை:

    கடற்கரைக்கு பெற்றோருடன் வரும் குழந்தைகள் கூட்ட நெரிசலில் காணாமல் போனால் அவர்களை உடனடியாக மீட்பதற்காக சென்னை பெருநகா காவல் மூலம் தயாரிக்கப்பட்ட கைகளில் கட்டப்படும் பேண்ட், அடையாள அட்டைகள் காவல் உதவி மையங்கள் மற்றும் தற்காலிக காவல் கட்டுப்பாட்டறைகளில் வைக்கப்பட்டுள்ளது. இந்த அடையாள அட்டைகள் குழந்தைகளுடன் வரும் பெற்றோர்களிடம் விபரங்கள் பெறப்பட்டு, அடையாள அட்டையில் குழந்தையின் பெயர், பெற்றோர் பெயர், முகவரி மற்றும் ஆகியவற்றை எழுதி, குழந்தைகளின் கைகளில் கட்டி அனுப்பி வைக்கப்படுவர். ஆகவே குழந்தைகளுடன் வரும் பெற்றோர் மேற்கூறிய காவல் உதவி மையங்களில் (Wrist ID Band) அடையாள அட்டையை பெற்றுக்கொண்டு கடற்கரைக்குள் செல்லுமாறு அறிவுறுத்தப்படுவர்.

    (II)டிரோன் கேமராக்கள்:

    மெரினா கடற்கரை மணற்பரப்புகளில் 4 டிரோன் கேமராக்கள் (Drone Camera) மற்றும் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை மணற்பரப்புகளில் 4 டிரோன் கேமராக்கள் என மொத்தம் 8 டிரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்படும். மேலும், அதிக திறன் கொண்ட டிரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு அவைகள் மூலம் கடலோர மணற்பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை வாசகங்கள் ஒலிபரப்பப்படும்.

    5. இதர பாதுகாப்பு ஏற்பாடுகள்:

    காணும் பொங்கலை முன்னிட்டு, பொதுமக்கள் அதிகளவு கூடும் மற்ற முக்கிய இடங்களான கிண்டி சிறுவர் பூங்கா, தீவுத்திடலில் உள்ள தமிழக அரசு சுற்றுலா பொருட்காட்சி, செம்மொழி பூங்கா உள்ளிட்ட கேளிக்கை பூங்காக்கள் (Amusement Park) மற்றும் இதர இடங்களிலும் தற்காலிக காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியுடனும் காணும் பொங்கலை கொண்டாட சிறப்பான முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், வணிக வளாகங்கள் (Malls) மற்றும் திரையரங்குகள் கொண்ட வணிக வளாகங்களில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், சென்னை பெருநகர காவல் துறை சார்பில் முக்கியமான இடங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டு அனைத்து மாவட்டங்களில் சிறப்பு வாகன தணிக்கை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, குடிபோதையில் வாகனம் ஓட்டி வருபவர்கள் மற்றும் போக்குவரத்து விதிறேல்களில் ஈடுபடுவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    6. சென்னை பெருநகர போக்குவரத்து காவல்:

    காணும் பொங்கலன்று சாலை பாதுகாப்பு குழுக்கள் இருசக்கர வாகனத்தில் ரோந்து சென்று பொதுமக்களுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வாகன ஒட்டிகளுக்கு உரிய அறிவுரைகள் மற்றும் தேவையான உதவிகளையும் வழங்குவார்கள். இது மட்டுமின்றி கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை. துரைப்பாக்கம், மதுரவாயல் பைபாஸ் சாலை, GST ரோடு மற்றும் இதர சாலைகளில் இருசக்கர வாகன பந்தயம் (Blice Race) தடுப்பு நடவடிக்கையாக கண்காணிப்பு சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டு பைக் சாகசங்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து முக்கிய சாலைகள் மற்றும் சந்திப்புகளில் போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் மூலம் போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும். சென்னை பெருநகர காவல்துறையின் அறிவுரைகள் மற்றும் கட்டுப்பாடுகளை கடைபிடித்து பொதுமக்கள் மகிழ்ச்சியான பொங்கலை கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×