என் மலர்
ராஜஸ்தான்
- ராஜஸ்தானில் 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பட்ஜெட் கூட்டத்தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
- காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்திற்குள் போர்வைகள் கொண்டுவந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜஸ்தானில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்திற்கு போர்வைகள், மெத்தைகள் கொண்டுவந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜஸ்தான் அரசாங்கத்தின் 'லக்பதி தீதி' திட்டம் குறித்த விவாதத்தின் போது பாஜக அமைச்சர் அவினாஷ் கெலாட், "முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை "ஆப்கி தாதி" (உங்கள் பாட்டி) என்று கூறினார்.
இதற்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, இதற்காக பாஜக அமைச்சர் அவினாஷ் கெலாட் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.இதனையடுத்து ஆறு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பட்ஜெட் கூட்டத்தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இதனையடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நேற்று இரவு சட்டமன்றத்திற்குள் போர்வைகள், மெத்தைகள் கொண்டுவந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- பவர் லிஃப்டிங்கில் யாஷ்டிகா ஒரு வளர்ந்து வரும் நட்சத்திரமாக இருந்தார்.
- கோவாவில் நடந்த 33வது தேசிய பெஞ்ச் பிரஸ் சாம்பியன்ஷிப்பில் யாஷ்டிகா தங்கம் வென்றிருந்தார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் பவர்லிஃப்ட் வீராங்கனை யாஷ்டிகா ஆச்சார்யா (17), 270 கிலோ எடையைத் தூக்க முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் கழுத்து உடைந்து உயிரிழந்தார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பவர் லிஃப்டிங்கில் யாஷ்டிகா ஒரு வளர்ந்து வரும் நட்சத்திரமாக இருந்தார். கோவாவில் நடந்த 33வது தேசிய பெஞ்ச் பிரஸ் சாம்பியன்ஷிப்பில் தங்கம் மற்றும் வெள்ளி வென்றதன் மூலம் தேசிய அளவில் கவனிக்கப்பட்டார்.
இந்நிலையில், யாஷ்டிகா பயிற்சியின் போது 270 கிலோ எடையை பயிற்சியாளர் உதவியுடன் தூக்க முயன்றார். அப்போது பயிற்சியாளர் எடையை அவர் மீது விட்டபோது, அந்த எடையைத் தாங்க முடியாமல் அவர் நிலை தடுமாறியதில் மொத்த எடையும் அவர் மீது விழுந்தது. இதனையடுத்து படுகாயமடைந்த அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
- வேகமாக வந்த பைக்கின் மீது மோதியதால் சிறுத்தைக்கும் காயம் ஏற்பட்டது.
- பின்னர் அந்த இடத்தை விட்டு சிறுத்தை மெதுவாக நடந்து சென்றது.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் பால்காரர் பைக்கில் வந்துகொண்டிருக்கும்போது சாலையை கடக்க வேகமாக ஓடிவந்த சிறுத்தை அவர்மீது மோதியதில் பால்காரர் தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவர் கொண்டு வந்த பால் அனைத்தும் தரையில் கொட்டி வீணானது.
வேகமாக வந்த பைக்கின் மீது மோதியதால் சிறுத்தைக்கும் காயம் ஏற்பட்டது. பின்னர் அந்த இடத்தை விட்டு சிறுத்தை மெதுவாக நடந்து சென்றது.
சத்தம் கேட்டு விபத்து நடந்த இடத்திற்கு வந்த இருவர் சாலையில் காயமடைந்த கிடந்த பால்காரரை காப்பாற்றினர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- "வேலையில்லாதவர்" என்று கூறி அவரது மனைவி அவருடன் வாழ மறுத்து பிரிந்து சென்றார்.
- ஒரு பெரிய ஆட்சேர்ப்பு ஊழல் நடந்துள்ளதை சிபிஐ கண்டறிந்துள்ளது.
ராஜஸ்தானில் மனைவி பிரிந்த விரக்தியில் கணவன் கொடுத்த தகவல் ரெயில்வே ஆட்சேர்ப்பில் நடந்த மோசடியை அம்பலப்படுத்தி இருக்கிறது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவைச் சேர்ந்த மணீஷ் மீனா என்பவர் 8 மாதங்களுக்கு முன்பு தனது மனைவிக்கு ரெயில்வேயில் பாயின்ஸ் - உமன் வேலை வாங்கி கொடுத்துள்ளார்.
அதாவது, தனது மனைவிக்கு பதிலாக வேறு ஒரு நபரை தேர்வு எழுத வைத்து மோசடியாக வேலை வாங்கி தர ரெயில்வே காவலரான ராஜேந்திரா என்ற முகவருக்கு ரூ.15 கோடி கொடுத்துள்ளார். இந்த பணத்தை தனது விவசாய நிலத்தை அடைமானம் வைத்துத் திரட்டியுள்ளார்.
ஆனால் வேலைக்குச் சேர்ந்த ஐந்து மாதங்களுக்குப் பிறகு, "வேலையில்லாதவர்" என்று கூறி அவரது மனைவி அவருடன் வாழ மறுத்து பிரிந்து சென்றார்.
ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த மனீஷ், பணம் கொடுத்த விவகாரத்தை அதிகாரிகளிடம் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து மேற்கு மத்திய ரெயில்வேயின் விஜிலென்ஸ் துறை விசாரணையைத் தொடங்கியது.
இந்த விவகாரம் இறுதியில் சிபிஐயிடம் சென்றது. இதுதொடர்பாக ரெயில்வே அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மனீஷின் மனைவி ஆஷா உள்ளிட்டோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
போலி தேர்வரை பயன்படுத்தி வேலை பெற்ற ஒரே நபர் ஆஷா மட்டுமல்ல என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ரெயில்வேயில் ஒரு பெரிய ஆட்சேர்ப்பு ஊழல் நடந்துள்ளதை சிபிஐ கண்டறிந்துள்ளது. இதுதொடர்பான மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.
- ஒரு நல்ல இந்துவாக இருக்க நான்கு வழிகள் உள்ளன.
- நீங்கள் என் அணியை ஆதரிக்கவில்லை, நான் உங்கள் தலையில் அடிக்கப் போகிறேன் என்று கூறுகிறார்கள்.
காங்கிரஸ் திருவனநாதபுர எம்.பி. சசி தரூர் இந்து மதத்துக்கும், இந்துத்துவாவுக்கும் உள்ள வேறுபாட்டை சுட்டிக்காட்டி உள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இலக்கிய விழாவில், எழுத்தாளரும் காங்கிரஸ் எம்.பி.யுமான சசி தரூர் பேசுகையில், "ஒரு நல்ல இந்துவாக இருக்க நான்கு வழிகள் உள்ளன. ஞான யோகம் இருக்கிறது, அது வாசிப்பு மற்றும் அறிவு மூலம் கிடைப்பது, ஆன்மீகக் கருத்துக்களைப் பற்றி நீங்கள் படித்துணர்வது. அதை தான் நான் முயற்சிக்கிறேன்.
பக்தி யோகம் இருக்கிறது, அதுதான் பெரும்பாலான மக்கள் செய்கிறார்கள். பின்னர் ராஜ யோகம் இருக்கிறது, உள்நிலை, தியானம், உங்களுக்குள் உண்மையைத் தேடுவது அது.
இறுதியாக மகாத்மா காந்தி கடைபிடித்த கர்ம யோகம், அதாவது உங்கள் சக மனிதர்களுக்கு சேவை செய்வதன் மூலம் மனிதகுலத்திற்கு சேவை செய்து அதன்மூலம் மூலம் கடவுளை வணங்குவது.
இந்து ஒருபோதும் வெறுப்பு என்னும் தீயை பற்றவைக்க மாட்டார்கள் என்று சுவாமி விவேகானந்தர் கூறுகிறார். நம்முடையது [ இந்து மதம் ] மட்டுமே ஒரே வழி என்று சொல்வதற்கு இடமில்லை.
துரதிர்ஷ்டவசமாக இந்து மதத்தை சிலர், ஒரு அடாவடியான பிரிட்டிஷ் கால்பந்து குழு போன்ற சிறு அடையாளமாக குறைக்கிறார்கள். மேலும் அவர்கள், நீங்கள் என் அணியை ஆதரிக்கவில்லை, நான் உங்கள் தலையில் அடிக்கப் போகிறேன் என்று கூறுகிறார்கள்.
நீங்கள் ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்லவில்லையானால் உங்களை சவுக்கால் அடிக்க போகிறேன் என்று மிரட்டுகிறார்கள். அது இந்து மதம் இல்லை. அதற்கும் இந்து மதத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்று தெரிவித்தார்.
- அவரிடம் 5 நாட்களுக்கு முன் ஆடைகளை தைக்கக்கொடுத்த சிறுவன் வாங்க வந்தான்.
- இன்னும் தைத்து முடிக்கவில்லை என்றும் மதியம் வருமாறும் முதியவர் கூறியுள்ளார்.
ராஜஸ்தானில் ஆடைகளை தைத்து தர தாமதமானதால் தையல் கடைக்காரரைச் சிறுவன் அடித்துக்கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஜெய்ப்பூரில் சோமு நகரில் உள்ள பக்கா பந்தா சௌராஹாவில் உள்ள தேவ் மருத்துவமனைக்கு அருகில் சூரஜ்மல் பிரஜாபத் [60 வயது] ஒரு சிறிய தையல் கடை நடத்தி வந்தார். அவரிடம் 5 நாட்களுக்கு முன் ஆடைகளை தைக்கக்கொடுத்த 14 வயது சிறுவன் அதை வாங்க நேற்று காலை 10 மணியளவில் கடைக்கு சென்றுள்ளான்.
ஆனால் ஆடைகளை இன்னும் தைத்து முடிக்கவில்லை என்றும் மதியம் வருமாறும் முதியவர் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவன், முதியவரை கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளான். அவ்வழியாக பைக்கில் சென்ற ஒருவர் இதை பார்த்து முதியவரின் குடும்பத்தினரிடம் கூறியுள்ளார்.
தையல் கடைக்கு விரைந்த முதியவரின் மகன் மற்றும் குடும்பத்தினர் ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். தாக்குதல் நடத்திய சிறுவனை தப்பிக்கவிடாமல் பிடித்து முதியவரின் குடும்பம் போலீசிடம் ஒப்படைத்துள்ளது,
- கடந்தாண்டு மெக்லாரென் நிறுவனம் தனது சக்திவாய்ந்த சூப்பர் கார் 750S மாடலை அறிமுகம் செய்தது.
- இதன் ஆன் ரோடு விலை ரூ.6 கோடியே 79 லட்சம் ஆகும்.
பிரிட்டனை சேர்ந்த சூப்பர் கார் உற்பத்தியாளர் மெக்லாரென் இந்திய சந்தையில் 50 கார்களை விற்பனை செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
இதனை கொண்டாடும் விதமாக ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் மெக்லாரென் நிறுவனம் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிரபல பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித் தனது மெக்லாரென் 750S காரில் வந்தார்.
கார்களை வாங்குவதில் ஆர்வம் கொண்ட மாதுரி தீட்சித் பல கோடி மதிப்பில்லா பல கார்களை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்தாண்டு ஏப்ரல் மாதம் தான் மெக்லாரென் சக்திவாய்ந்த சூப்பர் கார் 750S மாடலை அறிமுகம் செய்தது. இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ. 5 கோடியே 91 லட்சம் ஆகவும் ஆன் ரோடு விலை ரூ.6 கோடியே 79 லட்சம் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.
இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 2.8 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டிருக்கிறது. மேலும் இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 331 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. மெக்லாரென் இதுவரை உற்பத்தி செய்ததிலேயே இது மிகவும் சக்திவாய்ந்த மாடல் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
- மாணவி ஒருவரின் உடல் இன்று காலை 10 மணியளவில் கண்டெடுக்கப்பட்டது.
- நாளை மறுநாள் நடைபெற இருந்த ஜேஇஇ மெயின்ஸ் தேர்வு எழுத இருந்தார்.
கோச்சிங் சென்டர்கள் மண்டியிருக்கும் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் நீட், ஜேஇஇ உள்ளிட்ட நுழைவுத் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது.
கடந்த வருடம் கோட்டாவில் வெவ்வேறு பயிற்சி மையங்களில் படித்து வந்த 17 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர்.
இந்நிலையில் இந்த வருட தொடக்கத்தில் ஒரே மாதத்தில் 6 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்று ஒரே நாளில் மட்டுமே 2 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.
கோட்டாவின் ராஜீவ் நகர் காவல் நிலையப் பகுதியில் உள்ள விடுதி அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் மாணவி ஒருவரின் உடல் இன்று காலை 10 மணியளவில் கண்டெடுக்கப்பட்டது.
உயிரிழந்த மாணவியின் பெயர் அஃப்ஷா ஷேக்[23 வயது], இவர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்தவர். அஃப்ஷா கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கோட்டாவுக்கு வந்து ராஜீவ் நகர் பகுதியில் உள்ள பயிற்சி மையத்தில் சேர்ந்து விடுதியில் தங்கி நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். இந்நிலையில் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இன்ஜினீயரிங் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான ஜேஇஇ பரீட்சைக்கு கோட்டாவில் பயிற்சி மையத்தில் படித்து வந்த அசாமின் நாகோன் பகுதியைச் சேர்ந்த பராக் என்ற மாணவர் ஒருவரும் தற்கொலை செய்துகொண்டார்.
மஹாவீர் நகர் பகுதியில் அவர் தங்கியிருந்த வீட்டில் இன்று மதியம் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. நாளை மறுநாள் நடைபெற இருந்த ஜேஇஇ மெயின்ஸ் தேர்வு எழுத இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு ஆண்டும், ஒரு இலட்சம் முதல் இரண்டு லட்சம் இளைஞர்கள் மற்றும் பெண்கள் கோட்டாவிற்கு வருகிறார்கள். இங்கு காளான்கள் போல் பெருகி வரும் பயிற்சி மையங்கள் அதிக லாபம் ஈட்டும் தொழிலாக மாற்றியுள்ளது - கடந்த ஆண்டு மட்டும் ரூ.3,500 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியது.
- வீடியோ ராஜஸ்தான் மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் நகைச்சுவையான கருத்துக்களை பதிவிட்டனர்.
மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் வாலிபர் ஒருவர் மின்சார காரை பயன்படுத்தி பூரி சுடும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
வீடியோவில் கருப்பு நிற மின்சார கார் ஒன்று நின்று கொண்டிருக்கிறது. அந்த காருக்கு முன்பாக வாலிபர் ஒருவர் அமர்ந்து கொண்டு காருடன் மின்சார அடுப்பை இணைக்கிறார். பின்னர் வீட்டில் சமையலறையில் நின்று சமைப்பதை போல மாவை உருட்டி அடுப்பில் பாத்திரம் வைத்து பூரி சுடும் காட்சிகள் உள்ளது.
இந்த வீடியோ ராஜஸ்தான் மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் நகைச்சுவையான கருத்துக்களை பதிவிட்டனர். ஒரு பயனர், மின்சார வாகனங்கள் மாசு கட்டுப்பாடு, பெட்ரோல் தட்டுப்பாட்டை குறைப்பதோடு மட்டுமின்றி சமையல் தேவைக்கும் பயன்படும் என்பதை கண்டுபிடித்துள்ளார் என பதிவிட்டிருந்தார்.
- பெண் ஆசிரியை முத்தமிடுவதும், கட்டிப்பிடிப்பதும், தகாத செயல்களில் ஈடுபடுவதும் சிசிடிவியில் சிக்கியது.
- மேசையில் அமர்ந்து புகையிலையை போடுவதை காணலாம்
ராஜஸ்தான் அரசு பள்ளி தலைமையாசிரியர் ஒரு பெண் ஆசிரியையுடன் பள்ளியில் உள்ள தனது அலுவலக அறைக்குள் தகாத செயலில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கரில் உள்ள சலேரா கிராமத்தில் செயல்படும் அரசுப் பள்ளியின் தலைமையாசிரியர், பலமுறை அந்த பெண் ஆசிரியை முத்தமிடுவதும், கட்டிப்பிடிப்பதும், தகாத செயல்களில் ஈடுபடுவதும் சிசிடிவியில் சிக்கியது.
மற்றுமொரு காணொளியில், அதிபர் பாடசாலையில் தனது மேசையில் அமர்ந்து புகையிலையை போடுவதை காணலாம். இந்த வீடியோக்கள் பள்ளி வளாகத்திற்குள் தலைமை ஆசிரியரின் தகாத நடத்தைகளை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து பதிலளித்த மாவட்ட கல்வி அதிகாரி ராஜேந்திர சர்மா, "முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டுள்ளது. தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியை இருவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடந்த குழு அமைக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்
- ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தான் சந்தையில் விற்பனைக்கு வந்தது.
- பிச்சை எடுத்த பணத்தில் ஐபோன் வாங்கியதாக பிச்சைக்காரர் தெரிவித்தார்.
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் பிச்சைக்காரர் ஒருவர் ரூ.1.44 லட்சம் மதிப்புள்ள ஐபோன் 16 ஐ வாங்கியதாக கூறும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஆப்பிள் நுண்ணறிவுக்காக உருவாக்கப்பட்ட இந்த ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தான் சந்தையில் விற்பனைக்கு வந்தது. இந்நிலையில், பிச்சை எடுக்கும் மாற்றுத்திறனாளி ஒருவர் தனது கையில் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் வைத்திருப்பதை பார்த்து நெட்டிசன்கள் ஆச்சரியப்பட்டுள்ளனர்.
அந்த வீடியோவில் பேசிய பிச்சைக்காரர், "இந்த ஐபோன் 16 ஐ நான் மொத்தமாக ரொக்கப்பணம் கொடுத்து வாங்கினேன்" என்று தெரிவித்தார்.
மேலும், அந்த வீடியோவில், 'ஒருவர் பிச்சைக்காரரிடம் எப்படி இந்த ஐபோனை வாங்குவதற்கு பணம் எப்படி கிடைத்தது என்று கேட்டதற்கு அவர் பிச்சை எடுத்ததில் கிடைத்தது' என்று தெரிவித்தார்.
அதே சமயம் இந்த வீடியோ போலியாக உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று ஒருதரப்பினர் இணையத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- தேர்வுக்கு இன்னும் 4 நாட்களே இருந்த நிலையில், தனது அறையில் நேற்று மனன் சர்மா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
- கடந்த ஆண்டில் கோட்டா பயிற்சி மையங்களில் பயின்றுவந்த 17 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.
கோச்சிங் சென்டர்களின் காடாக விளங்கும் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் நீட், ஜேஇஇ உள்ளிட்ட நுழைவுத் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது.
இன்ஜீனியரிங் படிப்புகளுக்கான ஒருங்கிணைந்த ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்காக பல மாநிலங்களில் இருந்து மாணவர்கள் இங்கு வந்து தனியார் பயிற்சி மையங்களில் சேர்ந்து தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர்.
அந்த வகையில் ராஜஸ்தானின் பண்டி மாவட்டத்தை சேர்ந்த மனன் சர்மா என்ற மாணவர், கடந்த 3 ஆண்டுகளாக கோட்டா நகரில் தங்கியிருந்து, அங்குள்ள உள்ள ஒரு பயிற்சி மையத்தில் சேர்ந்து ஜே.இ.இ. தேர்வுக்காக தயாராகி வந்தார்.
இந்நிலையில், ஜே.இ.இ. தேர்வுக்கு இன்னும் 4 நாட்களே இருந்த நிலையில், தனது அறையில் நேற்று மனன் சர்மா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த ஆண்டில் நடப்பு மாதத்தில் கோட்டா நகரில் நடந்துள்ள 4-வது தற்கொலை சம்பவம் இது. கடந்த ஆண்டில் கோட்டாவில் வெவ்வேறு பயிற்சி மையங்களில் பயின்றுவந்த 17 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.

இந்நிலையில் மாணவர்கள் காதல் விவகாரங்களால் தற்கொலை செய்துகொள்வதாக ராஜஸ்தான் கல்வி அமைச்சர் மதன் திலாவர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு படிப்பு பற்றி அழுத்தம் கொடுக்கக்கூடாது. எனது வார்த்தைகள் சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம். ஆனால் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
மாணவர்கள் தற்கொலைக்கு பயிற்சி மையங்களின் பங்கு கொஞ்சம் இருக்கலாம். சில சமயங்களில் காதல் விவகாரங்களால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர் அமைச்சர் குறிப்பிட்டார். மேலும் பெற்றோர்கள் கட்டுப்படுத்த தவறினால் மாணவர்கள் தவறான திசையில் செல்வார்கள் என்று தெரிவித்தார்.






