என் மலர்
இந்தியா

மதுபோதையில் கார் ஓட்டி 3 பேரை கொன்ற நபர்.. அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதிய பதறவைக்கும் வீடியோ
- ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த நபரை சரமாரியாக தாக்கினர்.
- இதையடுத்து அவரை கட்சியில் இருந்து நீக்கி காங்கிரஸ் மாவட்ட தலைமை உத்தரவிட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் குடிபோதையில் ஒருவர் கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயமடைந்தனர்.
ஜெய்ப்பூரில் நகர்கர்க் பகுதியில் உள்ள பரபரப்பான தெருவில் நேற்று மாலை சொகுசு கார் ஒன்று வேகமாக வந்து சாலையில் சென்றுகொண்டிருந்த வாகனங்கள், சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது மோதியது. இதில் 9 பேர் படுகாயமடைந்தனர்.
அங்கிருந்த மக்கள் காரை துரத்திச் சென்று பிடித்ததில் கார் ஓட்டியவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த நபரை சரமாரியாக தாக்கினர். மேலும் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் படுகாயமடைந்தவர்களில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். எஞ்சிய 6 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் குடிபோதையில் கார் ஓட்டிய நபரை கைது செய்தனர்.
விசாரணையில் அவர் அப்பகுதியை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி உஸ்மான் கான் என்று தெரியவந்தது. இதையடுத்து அவரை கட்சியில் இருந்து நீக்கி காங்கிரஸ் மாவட்ட தலைமை உத்தரவிட்டுள்ளது.






