என் மலர்
புதுச்சேரி
- புதுவையில் மற்ற மாநிலங்களை விட பெட்ரோல், டீசல் விலை குறைவாகவே உள்ளது.
- பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை உயர்த்த கவர்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒப்புதல் அளித்தார்.
புதுவையில் மற்ற மாநிலங்களை விட பெட்ரோல், டீசல் விலை குறைவாகவே உள்ளது. இதனிடையே பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை உயர்த்த கவர்னர் கைலாஷ்நாதன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒப்புதல் அளித்தார்.
அதன்படி புதுவையில் பெட்ரோல் மீதான வாட் வரி 14.55 சதவீதத்தில் இருந்து 16.98 சதவீதமாகவும், காரைக்காலில் 16.99 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டது. டீசல் மீதான வாட் வரி புதுவையில் 8.65 சதவீதத்தில் இருந்து 11.22 சதவீதமாகவும், காரைக்காலில் 11.23 சதவீதமாகவும் அதிகரிக்கப்பட்டது.
இந்த வரி உயர்வு காரணமாக பெட்ரோல் டீசல் விலையும் லிட்டருக்கு ரூ.2 வீதம் உயர்ந்துள்ளது. அதன்படி பெட்ரோல் விலை புதுவையில் ரூ.94.26-லிருந்து ரூ.96.26 ஆகவும், காரைக்காலில் ரூ.94.03-லிருந்து ரூ.96.03 ஆகவும் உயர்ந்துள்ளது.
இதேபோல் டீசல் விலை புதுவையில் ரூ.84.48-லிருந்து ரூ.86.48 ஆகவும், காரைக்காலில் ரூ.84.31-லிருந்து ரூ.86.31 ஆகவும் உயர்ந்துள்ளது. மேலும் மாகியில் பெட்ரோல் விலை ரூ.91.92-லிருந்து ரூ.93.92 ஆகவும், டீசல் விலை ரூ.81.90-லிருந்து ரூ.83.90 ஆகவும், ஏனாமில் பெட்ரோல் விலை ரூ.94.92-லிருந்து ரூ.96.92 ஆகவும், டீசல் விலை ரூ.84.75-லிருந்து ரூ.86.75 ஆகவும் உயர்ந்துள்ளது.
இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
- மின்னணு ஒட்டு பதிவு இயந்திரத்தில் ஆண்கள்-3,77,934, பெண்கள்-4, 29,685, 3-ம் பாலினத்தவர்-105 பேர் ஓட்டளித்தனர்.
- 3-ம் பாலின வாக்காளர்களில் 70 சதவீதம் ஓட்டளித்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்திய தேர்தல் ஆணையம் 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. இதில் புதுச்சேரியின் மொத்த வாக்காளர்களில் 53.03 சதவீதம் பெண் வாக்காளர்கள் ஓட்டளித்து இந்திய அளவில் முதல் இடத்தில் உள்ளனர். 2024 பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரியில் 5,42,979 லட்சம் பெண் வாக்காளர்கள் பதிவு செய்திருந்தனர்.
மாகி சட்டசபை தொகுதிகளில் 31 ஓட்டுச்சாவடிகளும் பெண் அதிகாரிகளால் நடத்தப்பட்டது. இவர்களுக்கு ஓட்டு பதிவு இயந்திரங்கள், தேர்தல் நடைமுறைகள் பற்றி விரிவாக பயிற்சிகள் வழங்கப்பட்டன.
2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரியில் 7,90,895 லட்சம் பேர் ஓட்டளித்த சூழ்நிலையில், கடந்த 2024 பாராளுமன்ற தேர்தலில் 8,11,432 லட்சம் பேர் ஓட்டளித்துள்ளனர். 2019 பாராளுமன்ற தேர்தலை ஒப்பிடும்போது 2.5 சதவீதம் ஓட்டு பதிவு அதிகரித்துள்ளது. மின்னணு ஒட்டு பதிவு இயந்திரத்தில் ஆண்கள்-3,77,934, பெண்கள்-4,29,685, 3-ம் பாலினத்தவர்-105 பேர் ஓட்டளித்தனர்.
2019 பாராளுமன்ற தேர்தலில் 643 பேர் தபால் ஓட்டு பதிவு செய்திருந்தனர். இது 2024 பாராளுமன்ற தேர்தலில் 3,708 ஆயிரம் பேர் ஓட்டளித்தனர். நோட்டாவை பொருத்தவரை கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலில் 12,199 பேர் ஓட்டளித்து இருந்த சூழ்நிலையில், 2024 தேர்தலில் 9,763 பேர் ஓட்டளித்து இருந்தனர். 3-ம் பாலின வாக்காளர்களில் 70 சதவீதம் ஓட்டளித்தனர்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- நித்தியானந்தம் தரப்பினருக்கும் ஜனா தரப்பினருக்கும் இடையே ஜெயிலில் பயங்கர மோதல் ஏற்பட்டது.
- மோதலில் ஈடுபட்ட கைதிகள் பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
புதுச்சேரி:
புதுச்சேரி காலாப்பட்டில் மத்திய ஜெயில் உள்ளது. இந்த ஜெயிலில் தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் 500-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்தநிலையில் புதுச்சேரி பா.ஜ.க. பிரமுகர் செந்தில்குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நித்தியானந்தம் தரப்பினருக்கும், தொழிலதிபர் வேலழகன் கொலைவழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜனா தரப்பினருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நித்தியானந்தம் தரப்பினருக்கும் ஜனா தரப்பினருக்கும் இடையே ஜெயிலில் பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் இருதரப்பினரை சேர்ந்தவர்களும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர்.
உடனே பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட சிறைத்துறை வார்டன்கள் கைதிகள் மோதலை தடுத்து நிறுத்தினர். மோதலில் ஈடுபட்ட கைதிகள் பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு ஜெயிலில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் காரணமாக புதுச்சேரி ஜெயிலில் பரபரப்பு ஏற்பட் டது.
கைதிகள் மோதல் தொடர்பாக சிறைத்துறையினர் காலாப்பட்டு போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன்படி நித்தியானந்தம் தரப்பினர் 9 பேர் மீதும், ஜனா தரப்பினர் 4 பேர் மீதும் என மொத்தம் 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜெயில் அடிக்கடி இதுபோன்று கைதிகள் மோதலை தடுக்கும் வகையில் ஒரு தரப்பை சேர்ந்த கைதிகளை வேறு சிறைக்கு இடமாற்றம் செய்ய சிறைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
- புதுச்சேரியில் கடந்த கிறிஸ்துமஸ் முதல் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது.
- கடற்கரை சாலையில் நள்ளிரவு 12.30 மணி வரை புத்தாண்டு கொண்டாட அனுமதிக்கப்படுவர்.
புதுச்சேரி:
நாட்டிலேயே புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அதிமானவர்கள் கூடும் இடமாக புதுச்சேரி உள்ளது.
ஆண்டுதோறும் புத்தாண்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது.
அதிகரிக்கும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல நகர பகுதிகளில் ஓட்டல்கள், மதுபார்கள், ரெஸ்டோபார்கள், திறந்தவெளி மைதானங்களில் 31-ந் தேதி நள்ளிரவில் இசை, விருந்து நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
இதில் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் பங்கேற்கின்றனர். கடற்கரை சாலையிலும் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள். புதுச்சேரியில் கடந்த கிறிஸ்துமஸ் முதல் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது.
புத்தாண்டு கொண்டாட நேற்று முதல் ஆயிரக்கணக்கான வெளிநாடு, வெளிமாநில சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு வந்துள்ளனர். அருகில் உள்ள அண்டை மாநிலமான தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் புத்தாண்டை கொண்டாட கார், இருசக்கர வாகனங்களில் புதுச்சேரிக்கு இன்று மாலை வருவார்கள்.
இவர்கள் அனைவரும் புத்தாண்டை கொண்டாடிவிட்டு பாதுகாப்பாக திரும்பி செல்ல அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. புத்தாண்டு பாதுகாப்பு பணிக்காக புதுச்சேரி கடற்கரை மற்றும் நகர பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் 500 தன்னார்வலர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.
போக்குவரத்தை முறைப்படுத்த 300 போலீசார், ஊர்க்காவல் படையினர், என்.சி.சி., என்.எஸ்.எஸ். மாணவர்கள் என ஆயிரம் பேர் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இன்று காலை முதல் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு பணிக்கு வந்தனர்.
மதியம் ஒரு மணி முதல் ஒயிட் டவுண் பகுதியில் வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டது. ஆம்பூர் சாலையிலிருந்து கடற்கரை நோக்கி செல்லும் அனைத்து சாலைகளும் பேரிகார்டுகள் மூலம் மூடப்பட்டது.
அந்த பகுதியில் வசிப்பவர்கள், ஓட்டலில் தங்கியுள்ளவர்கள் காவல்துறை வழங்கிய அடையாள அட்டையை காட்டி சென்றனர். நகர சாலைகளில் வாகனங்களை நிறுத்தவும் போலீசார் தடை விதித்தனர்.
சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்த பாரதிதாசன் மகளிர் கல்லூரி, உப்பளம் மைதானம் உட்பட 10 இடங்களில் நிறுத்த வசதி செய்யப்பட்டிருந்தது. இங்கிருந்து கடற்கரை சாலைக்கு செல்ல இலவசமாக 30 அரசு பஸ்கள் இயக்கப்பட்டது.
கடற்கரை சாலையில் நள்ளிரவு 12.30 மணி வரை புத்தாண்டு கொண்டாட அனுமதிக்கப்படுவர். மதுபார்களில் இரவு ஒரு மணி வரை மது விநியோகம் செய்ய கலால்துறை சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது.
புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் கடுமையாக நடந்து கொள்ளக்கூடாது என போலீசாருக்கு உயரதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அவர்கள் கேட்கும் தகவல்களை முன்கூட்டியே அறிந்து வைத்திருந்து கனிவோடு சுற்றுலா பயணிகளை அணுக வேண்டும் எனவும் போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடற்கரை சாலையில் சி.சி.டி.வி. கேமரா, கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். டிரோன் கேமரா மூலமும் கண்காணிப்பு செய்யப்பட்டது.
வழக்கமாக புதுச்சேரி அரசின் சுற்றுலாத்துறை சார்பில் இசை நிகழ்ச்சிகள் ஆங்காங்கே நடைபெறும். இந்தஆண்டு போலீசார் இசை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்கவில்லை.
மாநிலத்தின் எல்லை பகுதியிலும் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
- புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியுள்ளது.
- நகர சாலைகள் போக்குவரத்து நெரிசலால் திணறி வருகிறது.
புதுச்சேரி:
புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியுள்ளது. டிசம்பர் மாத இறுதியில் கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் புதுவையில் குவிந்துள்ளனர்.
நாள்தோறும் சுற்றுலாப் பயணிகள் வருவதும், மறுபுறம் கிளம்பிச்செல்வதுமாக உள்ளனர். புத்தாண்டுக்கு ஒரு நாளே உள்ள நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதனால் நகர சாலைகள் போக்குவரத்து நெரிசலால் திணறி வருகிறது. விடுதி அறைகள் நிரம்பி வழிகிறது. ஓட்டல்களில் உணவுக்காக சுற்றுலாப் பயணிகள் காத்திருந்து சாப்பிட்டு செல்கின்றனர். நகரம் முழுவதும் முளைத்துள்ள சாலையோர உணகங்கள், சிற்றுண்டி கடைகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
நகர பகுதியில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு வாகனங்கள் ஊர்ந்துசெல்கிறது. சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளிப்பதை தடுக்க கடற்ரை சாலை, பாண்டிமெரீனா பகுதிகளில் தடுப்பு கட்டைகள் அமைத்துள்ளனர். போலீசார் கடலில் இறங்கி குளிப்பதை தடுத்து அறிவுறுத்தி வருகின்றனர்.

நேற்று காலை முதல் சண்டே மார்க்கெட்டில் கூட்டம் அலைமோதியது. மாலை 5.30 மணியளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. விட்டு, விட்டு தொடர்ந்து பெய்த மழையால் நகரம், சண்டே மார்க்கெட்டில் கூடியிருந்த பொதுமக்கள் கலைந்தனர். கடற்கரை சாலையும் வெறிச்சோடியது.
தொடர்ந்து மழை பெய்து வந்ததால் சுற்றுலா பயணிகள் வெளியே செல்லமுடியாமல் ஓட்டல் மற்றும் விடுதிகளில் முடங்கி போனார்கள்.
வழக்கமாக புதுவையில் டிசம்பர் மாதம் குளிர் வாட்டும். கடந்த சில நாட்களாக புதுவையில் குளிர் அதிகரித்துள்ளது. ஆனால் 2 நாட்களாக அவ்வப்போது பெய்யும் மழையால் வியாபாரிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
நாளை உச்சமாக இருக்கும் புத்தாண்டு கொண்டாட்டத்தை கெடுக்கும் வகையில் மழை பெய்யுமோ? என வியாபாரிகள் அச்சமடைந்துள்ளனர். அது மட்டுமின்றி, நட்சத்திர ஓட்டல்கள், மதுபார்கள் திறந்த வெளியில் பல்வேறு இசை, கலைநிகழ்ச்சிகள், மது, உணவு விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இவை மழையால் சீர்குலையுமோ? என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.
புத்தாண்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்கு போலீசார் விரிவான ஏற்பாடுகள் செய்துள்ளனர். கடற்கரைக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
வாகனங்களை நிறுத்த 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த பார்க்கிங்கை அறிந்து கொள்ள கி.யூ.ஆர். கோடு வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த மையங்களிலிருந்து கடற்கரை சாலைக்கு செல்ல இலவச பஸ் வசதியும் செய்யப்பட்டுள்ளது. கடற்கரை சாலையில் 12.30 மணி வரை புத்தாண்டு கொண்டாட சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவர்.
பார்களிலும், கேளிக்கை நிகழ்ச்சி நடைபெறும் இடங்களிலும் இரவு ஒரு மணி வரை மது வழங்க கலால் துறை சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது.
புதுவையில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்கவும், புத்தாண்டு கொண்டாட்ட பாதுகாப்பு பணியிலும் 300 போக்குவரத்து போலீசார் உட்பட 2 ஆயிரம் போலீசாரும், 500 தன்னார்வலர்களும் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கு பணியிடங்கள் இன்று ஒதுக்கீடு செய்யப்பட்டது.
புத்தாண்டை வரவேற்க நாளை மாலை முதல் நள்ளிரவு வரை லட்சக்கணக்கில் மக்கள் கூடுவார்கள் என்பதால் கடற்கரை சாலையில் சி.சி.டி.வி. கேமராக்கள், டிரோன் கேமராக்கள் மூலம், கண்காணிப்பு கோபுரங்கள் மூலம் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட உள்ளனர்.
- முதலமைச்சர் வாயே திறக்காமல் அமைதி காப்பது ஏற்புடையது அல்ல.
- தி.மு.க. கூட்டணி கட்சித் தலைவர்களும் குரல் கொடுக்காததும் வருத்தம் அளிக்கிறது.
புதுச்சேரி:
ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலில் நடந்த திருப்பாவை முற்றோதல் ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை தொடங்கி வைத்த புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு, அண்ணாமலை கண்டனம் தெரிவித்ததுடன் அறவழியில் தன்னுடையபோராட்டத்தை தொடங்கி தனக்குத் தானே அடித்துக் கொண்ட சாட்டையடி, தி.மு.க. ஆட்சிக்கான சவுக்கடி.
சென்னையின் பிரதான பகுதியில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்த சம்பவத்தில், பொறுப்பாக பதில் அளித்து இருக்க வேண்டிய முதலமைச்சர் ஸ்டாலினும், துணை முதலமைச்சர் உதயநிதியும் வாயே திறக்காமல் அமைதி காப்பது ஏற்புடையது அல்ல.
ஆனால், சம்பந்தமே இல்லாமல் தி.மு.க. பிரமுகர்களெல்லாம், இது குறித்து கருத்தும் விளக்கமும் சொல்கின்றனர். பாதிக்கப்பட்ட மாணவிக்கு தி.மு.க. கூட்டணி கட்சித் தலைவர்களும் குரல் கொடுக்காததும் வருத்தம் அளிக்கிறது.
அண்ணாமலை நடத்திய போராட்டத்தை தான் விமர்சிக்கின்றனர். இதன் வாயிலாக தி.மு.க.வும், அதன் கூட்டணி கட்சி களும் மக்கள் மீது எவ்வளவு அக்கறையாக இருக்கின்றனர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
அண்ணா பல்கலை மாணவி பிரச்சினையில், தி.மு.க. அரசு நியாயமான முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகள் தப்பிக்க உதவியாக இருக்கக்கூடாது.
தமிழகத்துடன் ஒப்பிடுகையில் புதுச்சேரியில் பெட்ரோல் விலை குறைவு தான். நிர்வாக செலவுகள், வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தல், வரி வருவாயை அதிகரித்தல் உட்பட பல்வேறு காரணங்களின் அடிப்படையில் தவிர்க்க முடியாமல் புதுச்சேரியில் பெட்ரோல் விலை உயர்த்தப்படுகிறது.
பா.ம.க.வில் நடப்பது உட்கட்சி பிரச்சனை. அதை அவர்களே பேசி சரி செய்து கொள்வர். இதில் தலையிடுவது அர்த்தமற்றது.
இவ்வாறு அவர் கூறினார்.
- எனது முடிவை ஏற்காதவர்கள் வெளியேறி விடலாம் என ராமதாஸ் கூறினார்.
- முகுந்தன் என்பவர் அன்புமணியின் சகோதரி மகன் ஆவார்.
புதுச்சேரி பா.ம.க. பொதுக்குழுவில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையே மோதல் ஏற்பட்டது.
முகுந்தன் என்பவரை மாநில இளைஞரணி தலைவராக நியமித்ததற்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார். பா.ம.க. கட்சியில் சேர்ந்து 4 மாதங்கள் ஆனவருக்கு பதவி அளிப்பதா என மேடையிலேயே அன்புமணி கேள்வி கேட்டார்.
நான் யாரை நியமிக்கிறேனோ அவர்கள் தான் நிர்வாகிகள் என்றும் நான் உருவாக்கிய கட்சி என பல முறை அழுத்தமாக கூறினார்.
எனது முடிவை ஏற்காதவர்கள் வெளியேறி விடலாம் என ராமதாஸ் கூறியதும், மேடையிலேயே சரி சரி என அன்புமணி கூறினார்.

அன்புமணிக்கு முகுந்தன் துணையாக இருப்பார் என ராமதாஸ் கூற, தேவையில்லை என அன்புமணி பதில் கூறினார்.
சரி சரி என கூறிய அன்புமணியிடம் வெளியேறுவது என்றால் வெளியேறு என்று ராமதாஸ் கூறினார்.
பனையூரில் எனக்கு அலுவலகம் உள்ளது. அங்கு வந்து தொடர்பு கொள்ளுங்கள் என மைக்கை எறிந்து விட்டு அன்புமணி சென்றார்.
முகுந்தன் என்பவர் அன்புமணியின் சகோதரி மகன் ஆவார்.
- புத்தாண்டையொட்டி ஓட்டல்களில் மதுவிருந்துகள், ஆடல்பாடல் நடனங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- அனைத்து ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிகின்றன.
புதுச்சேரி:
புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி சுற்றுலா பயணிகள் கடலில் இறங்காமல் இருக்க தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது.
புத்தாண்டு பிறக்க இன்னும் 3 நாட்களே இருக்கிறது. இதையொட்டி புத்தாண்டை கொண்டாட புதுச்சேரி தயாராகி வருகிறது. இப்போதே ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
இதன் காரணமாக அனைத்து ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிகின்றன. எங்கு பார்த்தாலும் வெளிமாநில பதிவெண் கொண்ட கார்கள் சுற்றி வருகின்றன.
இதற்கிடையே புத்தாண்டையொட்டி ஓட்டல்களில் மதுவிருந்துகள், ஆடல்பாடல் நடனங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கடற்கரை பகுதியில் புத்தாண்டை கொண்டாட லட்சக்கணக்கானவர்கள் திரளுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகின்றனர். ஒயிட்டவுன் பகுதியில் வாகனங்கள் செல்வதை தடுக்க செஞ்சிசாலை, ஆம்பூர் சாலை சந்திப்புகளில் தடுப்புகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
மேலும் கடற்கரையில் புத்தாண்டை கொண்டாடுபவர்கள் கடலில் இறங்காமல் தடுக்கவும் தடுப்புகள் அமைக்கப்படுகின்றன. இரும்பு, மரக்கம்புகளை வைத்து இந்த தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே புத்தாண்டு கொண்டாட்டம் பாதுகாப்பு தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு இஷாசிங் தலைமையில் போலீசார் நேற்று இரவு கடற்கரையில் ஆய்வு செய்தனர்.
- பா.ஜ.க. முன்னாள் எல்.எல்.ஏ. மனைவி மீது தாக்குதலை கண்டித்து மறியல்.
- தாக்கியவர்களை கைது செய்யக்கோரி கோஷம் எழுப்பினர்.
புதுச்சேரி:
புதுச்சேரி முதலியார் பேட்டை ஜோதி நகரை சேர்ந்தவர் பா.ஜ.க. முன்னாள் எல்.எல்.ஏ. கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவியை பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் தாக்கினர்.
அதை கண்டித்து பா.ஜ.க. எம்.எல்.ஏ. அசோக்பாபு தலைமையில் அக்கட்சியினர் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நேற்று இரவு முதலியார் பேட்டை போலீஸ் நிலையம் முன்பு நேற்று நள்ளிரவு சாலை மறியலில் ஈடுபட்டனர். தாக்கியவர்களை கைது செய்யக்கோரி கோஷம் எழுப்பினர்.
போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தாக்கியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுத்தனர். அதையடுத்து மறியல் செய்தவர்கள் கலைந்து சென்றனர்.

இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக தி.மு.க., எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் மீது வழக்குப் பதிய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதையறிந்து ஆத்திரமடைந்த முதலியார் பேட்டை, தி.மு.க. எம்.எல்.ஏ. சம்பத்தின் ஆதரவாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர், நள்ளிரவு 12 மணியளவில், முதலியார் பேட்டை போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து எப்படி வழக்குப்பதிவு செய்யலாம் என ஆக்ரோஷத்தோடு இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசாரை தள்ளி தாக்க முயற்சி செய்தனர்.
இதனால் அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியேற்றினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
- அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் தரம் உயரும்.
- தனியார் பள்ளிகள் நிச்சயமாக கல்வித் துறை உத்தரவை பின்பற்ற வேண்டும்.
புதுச்சேரி:
மத்திய அரசு 5, 8-ம் வகுப்பில் அனைத்து மாணவர்களும் கட்டாய தேர்ச்சி என்ற முறையை ரத்து செய்துள்ளது.
குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் இந்த முடிவை அரசு எடுத்துள்ளது. மத்திய அரசு பள்ளிகளான கேந்திர வித்யாலயா, நவோதயா, சைனிக் பள்ளிகளில் கட்டாய தேர்ச்சி முறை ரத்தாகியுள்ளது.
புதுச்சேரியிலுள்ள பிராந்தியங்களான புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாமில் நடப்பு கல்வி ஆண்டு முதல் அனைத்து வகுப்புகளில் மத்திய பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமலாகியுள்ளது. முதல்முறையாக சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் பொதுத்தேர்வுகளையும் புதுவை மாணவர்கள் எழுத உள்ளனர்.
இந்த நிலையில் கட்டாய தேர்ச்சி ரத்து குறித்து முதலமைச்சர் ரங்கசாமியுடன் கலந்து ஆலோசித்தார். இதயைடுத்து கல்வி அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:-
புதுச்சேரி மத்திய அரசின் கல்வித்திட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் உத்தரவை புதுச்சேரி அரசு ஏற்று செயல்படும். இதன் மூலம் அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் தரம் உயரும். அதன் அடிப்படையில் தான் மத்திய அரசு திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
தனியார் பள்ளிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். தனியார் பள்ளிகள் நிச்சயமாக கல்வித் துறை உத்தரவை பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு நமச்சிவாயம் கூறினார்.
- வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 18 கட்டிடங்கள் முதல் கட்டமாக அடையாளம் காணப்பட்டு புதுச்சேரி அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளன.
- இந்த கட்டிடங்களை இன்டாக், நகர அமைப்பு குழுமங்கள் இணைந்து கணக்கெடுக்க உள்ளன.
புதுச்சேரி:
புதுச்சேரியை யுனெஸ்கோ பாரம்பரிய நகர பட்டியலில் இடம் பெற செய்யும் முயற்சியாக 114 பாரம்பரிய கட்டிடங்கள் அடையாளம் காணப்பட்டு கடந்த 2022-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.
அதில் விடுபட்ட 131 பாரம்பரிய கட்டிடங்கள் 2-ம் கட்ட பட்டியலில் சேர்த்து கடந்த ஆகஸ்டு மாதம் வெளியிடப்பட்டது.
இந்த பட்டியலில் பழமையான கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள், தனியார் கட்டிடங்களும் இடம் பெற்றன. இந்த 2 பட்டியலிலும் சேர்த்து இதுவரை 245 பாரம்பரிய கட்டிடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதற்கிடையில் புதுச்சேரி புல்வார்டு பகுதியில் பிரெஞ்சு கட்டிடங்களுக்கு மத்தியில் உள்ள தமிழர் பாரம்பரிய கட்டிடங்களும் தற்போது கணக்கெடுக்கப்பட்டுள்ளன.
இதில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 18 கட்டிடங்கள் முதல் கட்டமாக அடையாளம் காணப்பட்டு புதுச்சேரி அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளன. விரைவில் 3-வது பாரம்பரிய கட்டிடங்கள் பட்டியலும் வெளியாக உள்ளது.
புல்வார்டு பகுதி மட்டுமின்றி அதனையொட்டிய பகுதிகளுக்கு அப்பாலும் பல்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புதுச்சேரியில் ஏராளமான கட்டிடங்கள் உள்ளன. குறிப்பாக ஏ.எப்.டி., சுதேசி, பாரதி பஞ்சாலைகள் உள்ளன.
இதுமட்டுமின்றி வில்லியனுார் திருக்காமீசுவரர் கோவில், வில்லியனுார் லூர்து மாதா ஆலயம் உள்பட பல்வேறு வழிபாட்டு தலங்களும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. எனவே இந்த கட்டிடங்களை இன்டாக், நகர அமைப்பு குழுமங்கள் இணைந்து கணக்கெடுக்க உள்ளன. இதன் மூலம் பாரம்பரிய நகரங்களின் பட்டியலில் புதுச்சேரி இடம் பெறவுள்ளது.
- அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
- 104 பிரிவுகளின் மாணவர் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்காக சுமார் 20 ஆயிரம் மாணவ, மாணவிகள் வாக்களித்தனர்.
பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழக மாணவர் கவுன்சிலில் இந்திய மாணவர் சங்கம்(SFI) மற்றும் பகுஜன் மாணவர் கூட்டமைப்பு (BSF) கூட்டணி வெற்றி பெற்றது.
பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழக மாணவர் பேரவை தேர்தல் கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி நடைபெற்றது.
பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், பாண்டிச்சேரி சமுதாயக்கல்லூரி, காரைக்கால், அந்தமான், மாகி பகுதியில் உள்ள கல்லூரிகளில் உள்ள 104 பிரிவுகளின் மாணவர் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்காக மாணவர்கள் வாக்களித்தனர்.
சுமார் 20 ஆயிரம் மாணவ, மாணவிகள் இந்த தேர்தலில் வாக்களித்தனர்.
இந்த தேர்தலில் இந்திய மாணவர் சங்கம் (எஸ். எப்.ஐ.) அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி.) மாணவர் காங்கிரஸ் உள்ளிட்ட சங்கங்களை தோற்கடித்து மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

வாக்களிப்பு முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே இந்திய மாணவர் சங்க பிரதிநிதிகள் முன்னிலை வகித்தனர்.
இந்நிலையில் 58 இடங்களில் SFI வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். SFI கூட்டணியில் போட்டியிட்ட BSF வேட்பாளர்கள் இரண்டு இடங்களில் வெற்றி பெற்றனர். காயத்ரி எஸ். குமார் கவுன்சிலில் தலைமையேற்றார்.
வெற்றி பெற்ற கவுன்சில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் இருக்கும் பாரதரத்னா டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் கட்டிடத்தின் அருகில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.






