என் மலர்
புதுச்சேரி
- போகி பண்டிகை அன்று வீட்டில் உள்ள பழைய விரிப்பான்கள், துணிகள் போன்ற பொருட்களை எரிப்பது வழக்கம்.
- நைட்ரஜன் ஆக்ஸைடுகளின் அளவு 15.5 மைக்ரோ கிராம், அமோனியாவின் அளவு 50 மைக்ரோ கிராம் என பதிவாகியுள்ளது.
புதுச்சேரி:
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாள் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் வீடுகளில் பழைய பொருட்களை பொதுமக்கள் தீயிட்டு எரித்து, அகற்றுவது வழக்கம்.
ஆனால் கடந்த சில வருடங்களாக, போகியன்று டயர், ரப்பர், பிளாஸ்டிக் போன்ற பொருட்களை எரிப்பதால் நச்சு புகைமூட்டம் ஏற்பட்டு மக்களுக்கு சுவாச நோய், இருமல், நுரையீரல், கண், மூக்கு எரிச்சல் உட்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. நச்சுக்காற்றாலும், கரிப்புகையாலும் காற்று மாசுபட்டு சுற்றுச்சூழல் சீர்கேடு அடைகிறது.
எனவே, போகி அன்று டயர், ரப்பர், பிளாஸ்டிக், தெர்மோகோல், செயற்கை இழைத்துணி போன்ற பொருட்களை எரிக்க வேண்டாம் என்று மாசு கட்டுப்பாட்டு குழுமம் வேண்டுகோள் விடுத்திருந்தது. இந்தச் சூழலில், புதுச்சேரியில் 2024-ம் ஆண்டை காட்டிலும் நடப்பாண்டு போகி பண்டிகையன்று காற்றின் மாசு அளவு குறைந்துள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழுமத்தின் உறுப்பினர் செயலர் ரமேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
போகி பண்டிகை அன்று வீட்டில் உள்ள பழைய விரிப்பான்கள், துணிகள் போன்ற பொருட்களை எரிப்பது வழக்கம். காலப்போக்கில் இத்தகைய பொருட்களுடன் வீட்டில் உள்ள உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், டயர் போன்ற பொருட்களை எரிக்க தொடங்கினர்.
இதனால் காற்றில் மாசுக்களின் அளவு அதிகரித்தது புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு குழுமம், இத்தகைய பொருட்களை எரிப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றிய விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கியது. இந்தச் சூழலில் புதுச்சேரியில் மேட்டுப்பாளையம், அண்ணா நகர் மற்றும் காரைக்காலில் ஒரு இடத்திலும் போகி அன்று காற்றின் மாசு 24 மணி நேரம் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டது.
இதில் மிதவை துகள்களின் அளவு 54 மைக்ரோ கிராம், கந்தக ஆக்ஸைடுகளின் அளவு 10.4 மைக்ரோ கிராம். நைட்ரஜன் ஆக்ஸைடுகளின் அளவு 15.5 மைக்ரோ கிராம், அமோனியாவின் அளவு 50 மைக்ரோ கிராம் என பதிவாகியுள்ளது.
2024-ம் ஆண்டில் மிதவை துகள்களின் அளவு 138 மைக்ரோ கிராம். நைட்ரஜன் ஆக்ஸைடுகளின் அளவு 23.6 மைக்ரோ கிராம் என பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
போகி அன்று ஏற்பட்ட சிறு மழை தூறலும், மக்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வும் இந்த ஆண்டில் காற்றின் மாசு அளவு குறைய காரணமாக இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வைத்திலிங்கம் எம்.பி. வெற்றி வாய்ப்புள்ளவர்களை தேர்வு செய்வது, நகரம் மற்றும் கிராமங்களில் கட்சியை வளர்ப்பது என தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
- நாராயணசாமி ராஜ்பவன், காமராஜர் நகர், நெல்லித்தோப்பு தொகுதிகளை குறிவைத்து தேர்தல் முன்கள பணிகளில் தனது ஆதரவாளர்களை முடுக்கி விட்டுள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் கடந்த 2016-ம் ஆண்டு காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியில் முதலமைச்சராக நாராயணசாமி பதவியேற்று 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை ஆட்சியில் இருந்தார்.
சட்டசபை தேர்தலுக்கு 2 மாதங்களுக்கு முன்பாகவே இவரது ஆட்சி கவிழ்ந்ததால் 5 ஆண்டுகள் முற்று பெறாமல் ஆட்சி காலம் முடிவடைந்தது.
அடுத்து நடந்த 2021 சட்டசபை தேர்தலில், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி போட்டியிடாமல் தேர்தல் பணியாற்றினார். இந்த தேர்தலில், மாகி மற்றும் லாஸ்பேட்டை ஆகிய 2 தொகுதிகளில் மட்டும் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
கூட்டணியில் போட்டியிட்ட தி.மு.க. 6 இடங்களில் வெற்றி பெற்று மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எதிர்க்கட்சித் தலைவரானார்.
இந்த காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்து போட்டியிட்ட என்.ஆர். காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணி 16 இடங்களில் வெற்றி பெற்று முதலமைச்சராக ரங்கசாமி பதவியில் இருந்து வருகிறார்.
காங்கிரஸ் தோல்வி குறித்து பல்வேறு விமர்சனங்கள் நாராயணசாமி மீது சுமத்தப்பட்டதால் நாராயணசாமி இதற்கு பதில் கூறாமல் அமைதி காத்து வந்தார்.
இதற்கு பதிலடி தரும் வகையில் எதிர்வரும் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி கட்டிலில் அமர்த்த நாராயணசாமி தீவிர தேர்தல் பணியை தற்போதே தொடங்கி உள்ளார்.
மேலும் காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. வெற்றி வாய்ப்புள்ளவர்களை தேர்வு செய்வது, நகரம் மற்றும் கிராமங்களில் கட்சியை வளர்ப்பது என தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
காரைக்காலில் முன்னாள் அமைச்சர்கள் ஏ.வி. சுப்பிரமணியன், கமலக்கண்ணன் ஆகியோர் தேர்தல் முன்கள பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோன்று நாராயணசாமி தனக்கு ஆதரவாக கருதும் ராஜ்பவன், காமராஜர் நகர், நெல்லித்தோப்பு தொகுதிகளை குறிவைத்து தேர்தல் முன்கள பணிகளில் தனது ஆதரவாளர்களை முடுக்கி விட்டுள்ளார்.
மேலும் இளைஞர்களை குறி வைத்து நாராயணசாமியின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பேஜ்களில் நாராயணசாமி தகவல்கள் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
மேலும் வருகிற சட்டசபை தேர்தலில் நாராயணசாமி போட்டியிட்டு வென்று காட்ட மீண்டும் தேர்தல் பணிகளில் ஆர்வம் காட்டுவதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
- தமிழ்நாட்டில் இரண்டு சிறுவர்களுக்கு எச்எம்பிவி வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
- தொற்றும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
சீனாவில் இருந்து குழந்தைகளை தாக்கக்கூடிய மெட்டாப்நியூமோவைரஸ் (எச்எம்பிவி) தொற்று உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவில் பாதிப்பு 13 ஆக உயர்ந்தது.
தமிழ்நாட்டில் இரண்டு சிறுவர்களுக்கு எச்எம்பிவி வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
புதிதாக பரவி வரும் எச்.எம்.பி.வி. வைரஸ் தொற்றும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், தொற்று குறித்து பயப்படத் தேவை இல்லை எனவும், ஆனால் பாதுகாப்பு வழிமுறைகள் அவசியம் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், புதுச்சேரியில் 5 வயது சிறுமிக்கு HMPV தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
5 வயது சிறுமி காய்ச்சல் காரணமாக ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் HMPV கண்டறியப்பட்டது.
சிறுமி தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
- ஜன.17-ந்தேதி தமிழகத்தை போல் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்குமாறு பலதரப்பிலிருந்து அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
- தொடர்ச்சியாக 6 நாட்கள் அரசு அலுவலகங்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் விடுமுறை கிடைத்துள்ளது.
புதுச்சேரி:
பொங்கல் பண்டிகை வருகிற 14-ந் தேதி முதல் கொண்டாடப்பட உள்ளது.
அடுத்த 15, 18 மற்றும் 19-ந்தேதிகள் அரசு விடுமுறை நாட்களாக வருகிறது. எனவே மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களது சொந்த ஊருக்குச் சென்று பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாடும் வகையில்,
அதற்கு இடைப்பட்ட நாளான ஜன.17-ந்தேதி தமிழகத்தை போல் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்குமாறு பலதரப்பிலிருந்து அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
அதையடுத்து வருகிற 17-ந் தேதி அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவினை சார்பு செயலர் ஷிரன் பிறப்பித்துள்ளார்.
இதேபோல், வருகிற 16-ந் தேதி உழவர் திருநாள் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தை பொது விடுமுறையாக அறிவிக்காமல், வரையறுக்கப்பட்ட விடுமுறை பட்டியலில் சேர்த்து ஏற்கனவே அரசாணை பிறப்பித்து இருந்தது. அதை மாற்றி தற்போது 16-ந் தேதியும் பொது விடுமுறையாக அறிவித்துள்ளது.
இந்த விடுமுறை புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதில், பிப். 1-ந் தேதி மற்றும் 8 ம் தேதி அரசு அலுவலகங்கள் இயங்கும்.
இதன் மூலம் தொடர்ச்சியாக 6 நாட்கள் அரசு அலுவலகங்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் விடுமுறை கிடைத்துள்ளது
- புதுச்சேரியில் ஏற்கனவே பொங்கலை முன்னிட்டு ஜனவரி 14 மற்றும் 15-ந்தேதி விடுமறை.
- தற்போது ஜனவரி 16 மற்றும் 17-ந்தேதி ஆகிய இரண்டு நாட்கள் சேர்த்து விடுமுறை அறிவிப்பு.
பொங்கல் பண்டிகை வருகிற செவ்வாய்க்கிழமை (14-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. அதற்கு அடுத்த நாள் மாட்டுப்பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த இரண்டு நாளும் புதுச்சேரியில் ஏற்கனவே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 16 மற்றும் 17-ந்தேதி ஆகிய இரண்டு நாட்களும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 6 நாட்கள் தொடர்ந்து விடுமுறையாகும்.
விடுமுறையை சரிசெய்யும் வகையில் பிப்ரவரி 1 மற்றும் பிப்ரவரி 8 ஆகிய இரண்டு சனிக்கிழமைகள் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக காரைக்கால் மீனவர்கள் உட்பட 10 பேரை கைது செய்துள்ளனர்.
- சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை படகுடன் விடுவிக்க முன்னுரிமை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரி:
இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக காரைக்கால் மீனவர்கள் உட்பட 10 பேரை கைது செய்துள்ளனர்.
இவர்களை மீட்கக்கோரி புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
நாகையிலிருந்து மீன்பிடிக்க காரைக்கால் மாவட்டம் கீழ்காசாக்குடி அன்பழகன், 15 வயது சிறுவன், காரைக்கால்மேடு பாண்டியன், வேலாயுதம், மயிலாடுதுறை மாவட்டம் கலைமணி, தங்கதுரை, செல்வகுமார், ரமேஷ், 16 வயது சிறுவன், நாகை ராஜசேகர் ஆகிய 10 மீனவர்கள் சென்றிருந்தனர்.
அவர்கள் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கடந்த 8-ந் தேதி இரவு 11.30 மணிக்கு விசைப்படகுடன் கைது செய்யப்பட்டனர்.
சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை படகுடன் விடுவிக்க முன்னுரிமை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
- ஆதாரம் கேட்கப் போவதாக பெரியார் திராவிடர் கழகத்தினர் அறிவிப்பு.
- ஒருவரை ஒருவர் தாக்கிப்பேசி எதிர்கோஷம் எழுப்பினர்.
புதுச்சேரி:
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் பேசும்போது, பெரியாரை விமர்சித்து கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி பேசியிருந்தார்.
இதற்கு திராவிடர் இயக்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்தநிலையில் இன்று புதுவை நெல்லித்தோப்பில் உள்ள கீர்த்தி மகாலில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் பங்கேற்க ஒருங்கிணைப்பாளர் சீமான் காலை 11 மணிக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. புதுவைக்கு வரும் சீமானுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பெரியார் பற்றி அவர் கூறிய கருத்துக்களுக்கு ஆதாரம் கேட்கப் போவதாக புதுவை மாநில தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அறிவித்திருந்தனர்.
இதன்படி இன்று காலை 10.30 மணியளவில் நெல்லித்தோப்பு சுப்பையா சிலை சதுக்கம் அருகே தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஒன்று கூடினர். இந்த போராட்டத்துக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் வீரமோகன் தலைமை வகித்தார். துணை தலைவர் இளங்கோ, பொதுச்செயலாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திராவிடர் விடுதலை கழக தலைவர் லோகு ஐயப்பன், தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் பிரகாஷ், பெரியார் சிந்தனையாளர் இயக்கம் தீனா, திராவிடர் கழகம் அன்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சுப்பையா சிலை சதுக்கத்திலிருந்து கீர்த்தி மகாலை நோக்கி முன்னேற முயன்றனர். அதேநேரத்தில் நாம் தமிழர் கட்சியினர் மணிமேகலை பள்ளி அருகே சீமானை வரவேற்க ஒன்று கூடியிருந்தனர். இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிப்பேசி எதிர்கோஷம் எழுப்பினர்.

இருதரப்பினரையும் மோதிக் கொள்ளாமல் இருக்க பேரிகார்டு வைத்து போலீசார் தடுத்தனர். போலீசாரை தள்ளிவிட்டு இருதரப்பினரும் முன்னேற முயன்றனர். இதில் சிலர் செருப்பு, கற்களை வீசினர். ஒரு கட்டத்தில் போலீசார் இருதரப்பையும் நெட்டித்தள்ளினர்.
திராவிடர் இயக்கத்தை சேர்ந்தவர்கள் சாலையோரங்களில் வைக்கப்பட்டிருந்த நாம் தமிழர் கட்சியின் கொடிகளை பிடுங்கி கிழித்து எறிந்தனர். சீமான் உருவப்படத்தை அவமதிப்பு செய்தனர்.

இதையடுத்து போலீசார் திராவிடர் இயக்கத்தினரை குண்டுக்கட்டாகத் தூக்கி வேன், பஸ்களில் ஏற்றி அவர்களை அப்புறப்படுத்தினர்.

சுமார் 100 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதி கலவர பூமியாக காட்சியளித்தது. போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
- பெரியார் குறித்து கடந்த காலங்களில் பேசியது தவறு என்று ஒத்துக்கொள்கிறேன்.
- பிரபாகரனை பார்த்த பின்னர் தான் தமிழ் தேசியம் குறித்த தெளிவு பிறந்தது.
தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக புதுச்சேரியில் அவர் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழ் ஒரு காட்டுமிராண்டித்தனமான மொழி என்றால் நீங்கள் எழுதியது, பேசியது எந்த மொழியில்?
* இஸ்லாமியர் வேறு நாட்டவர் என்று பேசியிருக்கிறார் பெரியார்.
* திராவிடம் திராவிடம் என பேசி அதற்கு முன்வந்த பெரும் தலைவர்களை புறக்கணித்துள்ளனர்.
* பார்ப்பனியரும் எதிரி, இஸ்லாமியர் வேறு நாட்டவர் என்றால் நீ யார், இடஒதுக்கீடு தவறு என கூறுவது எவ்வாறு?
* பெரியார் குறித்து கடந்த காலங்களில் பேசியது தவறு என்று ஒத்துக்கொள்கிறேன்.
* புத்தகங்களை படித்த பின்னர் தான் தற்போது தெளிவு பிறந்தது.
* பிரபாகரனை பார்த்த பின்னர் தான் தமிழ் தேசியம் குறித்த தெளிவு பிறந்தது.
* திராவிடம் என்றால் திருடர்கள் என்று பிற்காலங்களில் இருந்து தெரிய வந்தது.
* திராவிடத்தை ஒழிப்பதும், பெரியாரை எதிர்ப்பதும் தான் எனது கொள்கை என்று கூறினார்.
- பெரியார் நூல்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டால் தான் உண்மைகள் தெரிய வரும்.
- அம்பேத்கரையும் பெரியாரையும் சமமாக பேசுவதா?
தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக புதுச்சேரியில் சீமான் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தந்தை பெரியார் பேசியது தொடர்பான அனைத்து ஆதாரங்களை நீங்கள் வைத்துக்கொண்டு என்னிடம் ஆதாரம் கேட்டால் எப்படி?
* நாங்கள் தான் ஆதாரங்களை காணொலியில் வெளியிட்டு கொண்டிருக்கிறோம்.
* பெரியார் நூல்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டால் தான் உண்மைகள் தெரிய வரும்.
* கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் எதிரிகள் என பெரியார் சொல்வதை எப்படி ஏற்கிறீர்கள்?
* நமக்கு கீழே உள்ள இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் எதிரிகள் என்றால் நாம் யார், உங்களில் கீழானவர் யார்?
* தமிழர்கள் என பேசுவது எந்த இனத்திற்கு எதிரி?, திராவிடன் என்பது யார்? இதற்கெல்லாம் சான்று கேட்காதது ஏன்?
* 3 ஆயிரம் ஆண்டுகளாக தமிழர்கள் யாரும் படிக்கவில்லையா?
* அம்பேத்கரையும் பெரியாரையும் சமமாக பேசுவதா?
* பெரியார் வந்த பின்னர் தான் படித்தோம் என்றால் அதற்கு முன்னர் திருக்குறள் உள்ளிட்ட நூல்கள் வந்தது எப்படி?
* பெரியார் வருவதற்கு முன்பு 3,000 ஆண்டுகளாக யாரும் படிக்கவில்லையா? என்று கூறினார்.
- இரு சக்கர வாகனங்கள் வைத்திருக்கும் அனைத்து அரசு ஊழியர்களும் தவறாமல் ஹெல்மெட் அணிந்து பணிக்கு வர வேண்டும்.
- ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் ஹெல்மெட் அணியாததால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இதனால் வருகிற 12-ந் தேதி கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக போக்குவரத்து போலீசார் பல்வேறு இடங்களில் வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். பொதுமக்களுக்கு முன் மாதிரியாக போலீசார் மற்றும் அனைத்து அரசு துறை அரசு ஊழியர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய செய்ய வேண்டும் என போக்குவரத்து சீனியர் சூப்பிரண்டு பிரவீன்குமார் திரிபாதி நிர்வாக சீர்த்திருத்த துறைக்கு பரிந்துரை செய்திருந்தார்.
அதன் அடிப்படையில், நிர்வாக சீர்த்திருத்த துறை அனைத்து அரசு துறைகளுக்கும் அவசர சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதில் புதுச்சேரி போக்குவரத்து காவல்துறை மிஷன் ஜீரோ திட்டத்தின் கீழ் உயிரிழப்பினை தடுக்க வருகிற 12-ந் தேதி முதல் ஹெல்மெட் உபயோகத்தை கட்டாயமாக அமல்படுத்த உள்ளது. இரு சக்கர வாகனங்கள் வைத்திருக்கும் அனைத்து அரசு ஊழியர்களும் தவறாமல் ஹெல்மெட் அணிந்து பணிக்கு வர வேண்டும். இது உங்களது தனிப்பட்ட பாதுகாப்பின் நலனுக்காக அறிவுறுத்தப்படுகிறது.
ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். மேலும் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் 3 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் நிறுத்தி வைக்கப்படும்.ஹெல்மெட் அணியாதது குறித்து பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகள், சொசைட்டிகளின் பணிபுரிபவர்கள் உட்பட அனைத்து அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு வரப்படும்.
அனைத்து நிர்வாக செயலாளர்கள், டி.ஜி.பி., துறைத் தலைவர்கள் இதனை உறுதி செய்து கடுமையான நடவடிக்கை எடுப்பர்.
இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- அப்பா பைத்தியம் சாமி கோவிலில் அர்ஜூன்ராம் மேக்வால் சாமி தரிசனம்.
- ரங்கசாமியுடன் மத்திய மந்திரி சிறிது நேரம் ஆலோசனை நடத்திவிட்டு புறப்பட்டார்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் நடந்த நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி நிறைவு விழாவில் பங்கேற்க மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணை மந்தரி அர்ஜூன்ராம் மேக்வால் புதுச்சேரிக்கு வந்தார்.
கவர்னர் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களை சந்தித்துவிட்டு, கோரிமேட்டில் உள்ள முதல்-அமைச்சர் ரங்கசாமி வீட்டிற்கு சென்றார்.
அங்குள்ள அப்பா பைத்தியம் சாமி கோவிலில் இணை மந்திரி அர்ஜூன்ராம் மேக்வால் சாமி தரிசனம் செய்தார்.
அப்போது முதல்-அமைச்சர் ரங்கசாமி தீபாராதனை காண்பித்து, மத்திய மந்திரிக்கு திருநீறு பூசி ஆசி வழங்கினார். அதன்பின்பு, முதல்-அமைச்சர் வீட்டில் ரங்கசாமியுடன் மத்திய மந்திரி சிறிது நேரம் ஆலோசனை நடத்திவிட்டு புறப்பட்டு சென்றார்.
- 50-க்கும் மேற்பட்ட பஜனை குழுக்களும், ஆன்மிக பக்தர்களும் பாதயாத்திரை.
- 28-ம் ஆண்டு புனித பாத யாத்திரை.
புதுச்சேரி:
புதுச்சேரி அபிஷேக பாக்கம் அருகே தமிழக பகுதியான சிங்கிரிகுடியில் லட்சுமி நரசிம்மர் பெருமாள் ஆலயம் உள்ளது.
பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு உலக நன்மைக்காக ஆண்டு தோறும் ஜனவரி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையில் லட்சுமி நரசிம்ம பெருமாள் தீர்த்தம் வழிபாட்டு மன்றம் சார்பில் பாதயாத்திரை நடைபெறும்.
28-ம் ஆண்டு புனித பாத யாத்திரை புதுவை வரதராஜ பெருமாள் கோவிலிலிருந்து இன்று காலை தொடங்கியது.
யாத்திரையை திருக்கோவிலூர் ஸ்ரீமத் எம்பெருமனார் ஜீயர் சுவாமிகள் மங்களாசாசனம் செய்து தொடங்கி வைத்தார்.
வேதநாத ராமானுஜதாச பாகவதர் குழுவினர்களின் நாமசங்கீர்த்தனத்துடன் யாத்திரை சென்றது. இதில் பெரியாழ்வார் திருத்தொண்டு சபை, வணிக வைசிய ஸ்ரீஹரிகர பஜனைக்குழு, பாண்டுரங்க ரகுமாயி ஆன்மிக கைங்கர்ய சபா, வேங்டாத்திரி பஜனை கூடம், பாண்டவதூதன் சங்கீர்த்தன சபா உட்பட பல்வேறு சபை குழுவினர் பங்கேற்றனர்.
மேலும் யாத்திரையில் தமிழகம்-புதுவையை சேர்ந்த திருமாலடி யார்களும், 50-க்கும் மேற்பட்ட பஜனை குழுக்களும், ஆயிரக்கணக்கான ஆன்மிக பக்தர்களும் சிங்கிரி கோவிலுக்கு புனித யாத்திரை சென்றனர். யாத்திரை கோவிலை அடைந்ததும் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
புதுவை, கடலூர் சாலை வழியாக சிங்கிரிகோவில் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலை யாத்திரை சென்றடைந்தது. புனித யாத்திரையையொட்டி வைசியாள் வீதி வாசவி மண்டபத்தில் முருகுமணியின் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.
பாத யாத்திரையை யொட்டி புதுவையில் இருந்து சிங்கிரிகோவில் வரை பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம், தேனீர் வழங்கப்பட்டது.
புனித பாத யாத்திரைக்கான ஏற்பாடுகளை வழிபாட்டு மன்ற தலைவர் இளங்கோ மேற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.






