என் மலர்
புதுச்சேரி
- கணவரின் பெற்றோர், உறவினர்களும் உடந்தையாக இருந்துள்ளனர்.
- வரதட்சணை கேட்டு கணவர் கொடுமை செய்து வந்துள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரி வில்லியனுார் பகுதியை சேர்ந்த 25 வயது பெண் சென்னை ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
அப்போது அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் சென்னை அண்ணாநகரை சேர்ந்தவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த 2021-ம் ஆண்டு புதுச்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் ஆடம்பரமாக திருமணம் நடந்தது.
திருமணத்தின் போது பெண்ணின் பெற்றோர் 150 பவுன் நகை, ரூ. 4 லட்சம் மதிப்புள்ள தங்க கடிகாரம், ரூ.1.30 லட்சம் செல்போன் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் சீர் வரிசையாக வழங்கினர்.
இந்நிலையில் திருமணம் முடிந்த சில வாரத்திலேயே சீர்வரிசையாக அணிந்து வந்த நகைகளை மாமியார் பெற்று கொண்டார். மேலும் சில மாதங்களில் பெண்ணிடம் கூடுதலாக 50 பவுன் நகை வரதட்சணை கேட்டு கணவர் கொடுமை செய்து வந்தார்.
அதோடு பெண்ணின் பெற்றோர் வீட்டு சொத்தை தனது பெயரில் எழுதித் தர வேண்டும் என அடிக்கடி தொந்தரவு செய்து வந்தார்.
இதற்கு மறுத்த அந்த பெண்ணை அவரது கணவர் வீட்டில் வளர்த்து வரும் தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் காங்கோ சாம்பல் பறவையை கொத்த வைத்து சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு கணவரின் பெற்றோர், உறவினர்களும் உடந்தையாக இருந்துள்ளனர்.
தொடர்ந்து இதுபோன்ற கொடுமை செய்து வந்ததால் அந்த பெண் புதுச்சேரியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். பின்னர் இதுகுறித்து வில்லியனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீசார் வரதட்சணை கொடுமை செய்த கணவர் மற்றும் அவரது பெற்றோர், உறவினர்கள் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- 4 ஆண்டுகளாக மற்றவர்களுக்கும் பயிற்சி அளிக்கிறார்.
- டேலண்ட்னா வேர்ல்ட் ரெக்கார்ட் அமைப்பு அங்கீகரித்துள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி முதலியார்பேட்டை நைனார் மண்டபத்தை சேர்ந்தவர் ஜார்ஜ் புஷ் (வயது.29). வரி ஆலோசகராக உள்ளார்.
இவர் கடந்த 6 ஆண்டுகளாக கரலாக்கட்டையை சுற்றும் பயிற்சியை செய்து வருகிறார். மேலும் கடந்த 4 ஆண்டுகளாக மற்றவர்களுக்கும் பயிற்சி அளிக்கிறார்.
இந்த நிலையில் பாரம்பரிய கரலாக்கட்டை உடற்பயிற்சி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு எற்படுத்த விரும்பினார். இதற்காக இவர் 24 மணி நேரம் கரலாக்கட்டை சுற்றும் சாதனையில் ஈடுபட்டார்.
புதுச்சேரி காமராஜர் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் இந்த சாதனை நிகழ்வு நடந்தது. இதில் 24 மணி நேரத்தில் 12 ஆயிரத்து 128 முறை கரலாக்கட்டையை ஜார்ஜ் புஷ் சுற்றினார். இதனை டேலண்ட்னா வேர்ல்ட் ரெக்கார்ட் அமைப்பு அங்கீகரித்துள்ளது.
- தியாகிகளை கவுரவிக்கும் விழா கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்றது.
- ஆண்டுதோறும் ஏதேனும் பரிசு ஒன்று வழங்குவது வழக்கம்.
புதுச்சேரி:
புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் குடியரசு தின விழாவை முன்னிட்டு தியாகிகளை கவுரவிக்கும் விழா மற்றும் தேநீர் விருந்து நிகழ்ச்சி கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்றது.
விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு தியாகிகளுக்கு இனிப்பு மற்றும் பொன்னாடை வழங்கி கவுரவித்தார். இதில் அமைச்சர் லட்சுமி நாராயணன், எம்.எல்.ஏ.க்கள் அனிபால்கென்னடி, பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாட்டின் விடுதலைக்கு போராடி தமது இன்னுயிர் நீத்தவர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் உரிய மரியாதை செலுத்த வேண்டும்.
நம் நாட்டின் விடு தலையை பேணி காப்பதுடன், நமது நாட்டின் வளர்ச்சியை விடுதலை போராட்ட தியாகிகள் எண்ணத்தின்படி செயல்பட்டு வருகிறோம்.
புதுவை மாநிலத்தை சிறந்த மாநிலமாக மாற்ற அனைத்து நடவடிக்கைக ளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. கல்வி, மருத்துவம், உள்கட்டமைப்பு ஆகியவற்றில் மேம்பட்டுள்ளது. உள் கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இதற்காக கூடுதல் நிதி ஒதுக்கி அதிக கவனம் செலுத்தி வருகிறது. அனைத்து மாணவர் களுக்கும் ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை சிறந்த கல்வி வழங்கப்படுகிறது
குடியரசு தினத்தை முன்னிட்டு புதுச்சேரி தியாகிகளுக்கு ஆண்டுதோறும் ஏதேனும் பரிசு ஒன்று வழங்குவது வழக்கம். இந்தாண்டு தியாகிகளின் வங்கி கணக்கில் பரிசுப் பொருட்களுக்கு பதிலாக தலா ரூ.3 ஆயிரம் ரொக்கம் அவரவர் வங்கிக்கணக்கில் ஓரிரு நாளில் செலுத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- குழந்தைகளுக்கான இதய அறுவை சிகிச்சை நிபுணர்களில் முன்னோடியான திகழ்ந்தவர் மருத்துவர் கே.எம்.செரியன்.
- மருத்துவர் கே.எம்.செரியன் மறைவுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
இந்தியாவின் முதல் பைபாஸ் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்த இதய அறுவை சிகிச்சை நிபுணர் செரியன் (82) உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
குழந்தைகளுக்கான இதய அறுவை சிகிச்சை நிபுணர்களில் முன்னோடியான திகழ்ந்தவர் மருத்துவர் கே.எம்.செரியன்.
இந்தியாவில் எவரும் செய்யாத அரியதொரு மருத்துவ சாதனையாக ஏற்கனவே மூளைச்சாவு அடைந்த நோயாளியிடமிருந்து இதயத்தை எடுத்து அதனை இதய மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் நபருக்கு பொருத்தி வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை செய்து காட்டிய பெருமைக்குரியவராவார் மருத்துவர் கே.எம்.செரியன்.
சென்னை பெரம்பூரிலுள்ள ரெயில்வே மருத்துவமனையில் இந்தியாவில் முதல்முறையாக கரோனரி ஆர்டரி பைபாஸ் அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தவராவார். மருத்துவர் செரியனின் மருத்துவ சேவையைப் பாராட்டி அவருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மருத்துவர் கே.எம்.செரியன் மறைவுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
இதய அறுவை சிகிச்சை நிபுணர் கே.எம்.செரியன் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன்.
இதய அறுவை சிகிச்சை துறையில் மருத்துவர் செரியன் ஆற்றிய பங்களிப்புகள் தனி முத்திரையை பதித்துள்ளது. செரியனை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- புதுச்சேரி பல்கலைக் கழக ஆடிட்டோரியத்தில் 2 நாள் சர்வதேச மாநாடு நடைபெற்றது.
- மாநாட்டில் மத்திய இணையமைச்சர் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தனியார் பள்ளிகளின் பாடத்திட்டத்தின் காரணமாக மாணவர்கள் சைக்கோ போன்றுதான் இருப்பார்கள் என்று புதுச்சேரி சபாநாயகர் செல்வம் கூறியுள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
AoH (Academic of Hypnosis) மற்றும் InSPA (Indian School Pysichology Association) இணைந்து புதுச்சேரி பல்கலைக் கழக ஆடிட்டோரியத்தில் 2 நாள் சர்வதேச மாநாட்டை நடத்தியது.
இந்த மாநாட்டில் மத்திய இணையமைச்சர் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது, புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பங்கேற்று பேசினார். அவர் கூறிய கருத்து மாணவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து புதுவை சபாநாயகர் மேலும் கூறியிருப்பதாவது:-
தனியார் பள்ளி மாணவர்களின் மனநிலையே வித்தியாசமாக தான் இருக்கும். தனியார் பள்ளிகளின் பாடத்திட்டத்தின் காரணமாக மாணவர்கள் சைக்கோ போன்றுதான் இருப்பார்கள்.
9 ம் வகுப்பு படிக்கும்போதே 10ம் வகுப்பு பாடத்திட்டத்தை முடித்துவிடுவார்கள். 11ம் வகுப்பு படிக்கும்போதே 12ம் வகுப்பு பாடத்திட்டத்தை முடித்துவிடுவார்கள். அந்த 2 ஆண்டுகளில் மாணவர்களின் மனநிலையை மாற்றிவிடுகின்றனர்.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் திறன் குறைவாக இருந்தாலும், உடல் மற்றும் மன ரீதியாக எந்த பாதிப்பும் இருக்காது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு அசோக சக்கரா என்ற உலக சாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
- அசோக சக்கரத்தை அமெரிக்க உலக சாதனை குழுமத்தின் அதிகாரி பார்வையிட்டார்.
புதுச்சேரி:
புதுவையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு அசோக சக்கரா என்ற உலக சாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதில் அக்கல்லூரியை சேர்ந்த மாணவ-மாணவிகள் 4,500 பேர் பங்கேற்று தேசிய கொடியில் உள்ள அசோக சக்கரத்தை உருவாக்கினர். இது உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது.
மாணவ-மாணவிகள் ஒன்று சேர்த்து உருவாக்கிய அசோக சக்கரத்தை அமெரிக்க உலக சாதனை குழுமத்தின் அதிகாரி கிறிஸ்டோபர் டெய்லர் கிராப்ட் பார்வையிட்டு அதிகாரபூர்வமாக பதிவு செய்து அதற்கான சான்றிதழை வழங்கினார்.
- 2 ஆண்டுகளில் 230-க்கும் மேற்பட்ட ஆவணங்கள் திரட்டப்பட்டது.
- 14 பேர் தொடர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
புதுச்சேரி:
புதுச்சேரியை சேர்ந்த ஆண்ட்ரூஸ் என்பவர் கடந்த 2023-ம் ஆண்டு கடன் பெற செல்போனில் உடனடி கடன் ஆப்பை டவுன்லோடு செய்து அதன்மூலம் ரூ.10 ஆயிரம் பணம் வாங்கினார்.
அவர் வாங்கிய ரூ.10 ஆயிரம் கடனுக்கு, வட்டி மேல் வட்டி சேர்த்து, அவரி டமிருந்து ரூ.2 லட்சத்து 99 ஆயிரம் பணத்தை பெற்றுள்ளனர்.
இருப்பினும், அவரை விடாமல் அவருடைய புகைப்படத்தை நிர்வாணமாக சித்தரித்து, அவருடைய செல்போன் தொடர்பு எண்ணிலுள்ள அனைவருக்கும் அனுப்பி மிரட்டி பணம் பறித்துக் கொண்டே இருந்தனர்.
இதுபற்றி அவர் கொடுத்த புகார் சம்பந்தமாக 2023-ம் ஆண்டு சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இதுதொடர்பாக கடந்த 2 ஆண்டுகளில் 230-க்கும் மேற்பட்ட ஆவணங்கள் திரட்டப்பட்டது. மேலும் வங்கி விவரங்கள், செல்போன் விவரங்கள், வாட்ஸ்-அப் விவரங்கள் டெலிகிராம் பற்றிய தகவல்கள் மற்றும் செல்போன்கள் யார்-யார் பெயரில் வாங்கப்பட்டது, எந்தெந்த ஊரில் இருந்து குற்றவாளிகள் செயல்படுகின்றனர், பணம் முதலில் எங்கு செல்கிறது என்பது போன்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது.

இதில் இந்தியா முழுவதும் 14 பேர் இந்த தொடர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இது தொடர்பாக சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ் பெக்டர்கள் தியாகராஜன் மற்றும் கீர்த்தி தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிபடையினர் விசா ரணையில், முதலாவது குற்றவாளியாக முகமது ஷபி (வயது 37) என்பவர் கேரளாவில் உள்ள எர்ணா குளத்தில் கைது செய்யப் பட்டார். லாரி டிரைவரான முகமது ஷபி சைபர் கும்பலுடன் இணைந்து பண மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரிடம் விசாரித்த போது அவருடைய 3 வங்கி கணக்குகளில் மட்டும் ரூ.10 கோடியே 65 லட்சம் பணம் பரிமாற்றம் நடந்துள்ளது கண்டு பிடிக்கப்பட்டது.
மேலும், அவரிடம் வங்கி கணக்கை வாங்கிய நபர்க ளின் விவரங்கள் சேகரிக்கப் பட்டது. மொத்தமாக இந்த 14 பேரின் வங்கிக் கணக்குகள் அனைத்தும் சேர்த்து ரூ. 300 கோடிக்கு மேல் பண பரிவர்த்தனைகள் நடந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.
இந்த பணம் அனைத்தும் கிரிப்டோ கரன்சிகளாக மாற்றப்பட்டு வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக செயல்பட்ட குஜராத்தை சேர்ந்த சித்தன் முகேஷா என்பவரை அமலாக்கத்துறையினர் ஏற்கனவே கைது செய்துள்ளனர். அவரின் ரூ.321 கோடி பணத்தை அமலாக்கதுறை முடக்கி வைத்துள்ளது.
மேலும் இந்த மோசடியில் தமிழகத்தை சேர்ந்த முஜிப் என்பவர் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப் பட்டுள்ளார். மொத்தம் 14 பேரில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் 11 பேரை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அடுத்தடுத்து குற்றவாளிகளை கைது செய்யப்படும் போது அந்த கிரிப்டோ கரன்சிகள் யாருக்கு சென்றது என்ற விவரங்கள் தெரிய வரும். கடன் வாங்கியோரை கம்போடியாவிலிருந்து தொலைபேசி மூலம் மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது.
தற்போது புதுச்சேரி சைபர் கிரைம் மூலம் கைது செய்யப்பட்ட முகமது ஷபியிடமிருந்து 3 செல்போன்கள் மற்றும் ஒரு சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
- புதுச்சேரியில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்து பொதுமக்கள் பாதிக்கப்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது.
- வாய்க்கால்களில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரின் அளவு சென்சார் கேமரா மூலம் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்படும்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் நாள்தோறும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதுவும் வார இறுதி நாட்களிலும், அரசு விடுமுறை நாட்களிலும் வெளி மாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு ஏராளமானோர் சுற்றுலா வருகின்றனர்.
ஏற்கனவே புதுச்சேரியில் சாலைகள் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது. அதோடு சுற்றுலா பயணிகள் வருகையால் புதுச்சேரியில் நாள்தோறும் போக்குவரத்து ஸ்தம்பிப்பால் வாகன ஓட்டிகள் அல்லாடி வருகின்றனர்.
இதையடுத்து புதுச்சேரி நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கேமராக்கள் மூலம் கண்டறிந்து ஒழுங்குப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக நகரின் முக்கிய இடங்களில் நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. சுமார் 450 கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.
அரியாங்குப்பம், வில்லியனூர், மேட்டுப்பாளையம், கோரிமேடு, கிழக்கு கடற்கரை சாலை ஆகிய பகுதியில் வாகனங்கள் வரும் பகுதிகளை கண்காணிக்க நவீன கேமராக்கள் பொருத்தப்படுகிறது.
இதற்கான கட்டுப்பாட்டு மையம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நவீன மீன் அங்காடி வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ளது.
இங்கிருந்தபடியே ஊழியர்கள் கண்காணித்து, போக்குவரத்து விதிகளை மீறுபவர்களின் வாகன எண்களை கண்டறிந்து அபராதம் விதிக்கப்பட உள்ளது. இதேபோல் போக்குவரத்து நெரிசல் உள்ள இடங்களை கண்டறிந்து, உடனுக்குடன் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதுமட்டுமல்லாது மழையின்போது புதுச்சேரியில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்து பொதுமக்கள் பாதிக்கப்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இதை தடுக்கும் முயற்சியாக மழைக்காலங்களில் முன்கூட்டியே வெள்ள அளவை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்காக சாலைகள், கழிவு நீர் வாய்க்கால்களை கண்காணிக்கவும் கேமரா பொருத்தப்படுகிறது. அதாவது, வாய்க்கால்களில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரின் அளவு சென்சார் கேமரா மூலம் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்படும்.
அதன்மூலம் மழை வெள்ளம் அதிகரிக்கும்போது தாழ்வான பகுதியில் இருந்து மக்களை வெளியேற்றுவது, மின்சாரத்தை துண்டிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
- மதுபோதையில் 2 பைக்குகளில் வந்த 4 வாலிபர்கள், மாணவி மற்றும் அவரது நண்பரை வீடியோ எடுத்து தகராறு செய்தனர்.
- ஷாம் மற்றும் விமலை காலாப்பட்டு போலீசார் கைது செய்து கோர்ட்டில் நீதிபதி முன் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள அரசு தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்தில், கடந்த 11-ந் தேதி விடுதியில் தங்கி படிக்கும் வடமாநில மாணவி ஒருவர், தனது சக கல்லூரி நண்பருடன் நடந்து சென்றார்.
அப்போது மதுபோதையில் 2 பைக்குகளில் வந்த 4 வாலிபர்கள், மாணவி மற்றும் அவரது நண்பரை வீடியோ எடுத்து தகராறு செய்தனர். இருவரும் மாறி மாறி வீடியோ எடுத்தபோது மோதல் உருவானது. ஒரு கட்டத்தில் அந்த கும்பல் மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்டது. இதில் படுகாயம் அடைந்த மாணவி, கதிர்காமம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இந்த விவகாரம் தொடர்பாக மாணவி புகார் அளிக்க முன்வரவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக தொழில்நுட்ப பல்கலைக்கழக நிர்வாகம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மாணவி மற்றும் மாணவரிடம் தகராறு செய்து தாக்குதலில் ஈடுபட்டது தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆடிட்டோரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர் மற்றும் அவரது உறவினர்கள் என தெரியவந்தது.
தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து மாணவி மற்றும் மாணவரை ஆபாசமாக திட்டிய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க பல்கலைக்கழக பதிவாளர் காலாப்பட்டு போலீசில் புகார் அளித்தார்.
காலாப்பட்டு போலீசார் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்திற்குள் அத்துமீறி நுழைதல், மாணவர்களை ஆபாசமாக திட்டுதல் என்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்டது, மேட்டுப்பாளையம் தனியார் கம்பெனியில் பணியாற்றும் அரும்பார்த்தபுரம் ஷாம் (வயது19), வில்லியனூர் திருக்காஞ்சி சாலையை சேர்ந்த அரசு கலை கல்லூரி மாணவர் விமல்(19) மற்றும் 2 சிறுவர்கள் என தெரியவந்தது.
ஷாம் மற்றும் விமலை காலாப்பட்டு போலீசார் கைது செய்து கோர்ட்டில் நீதிபதி முன் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.
மேலும் 2 பேரை போலீசார் தேடி வந்தனர். அவர்கள் 17 வயதுக்குட்பட்ட 2 சிறுவர்கள் என தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் பிடித்தனர். விசாரணை நடத்தி அவர்களை அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
- போகி பண்டிகை அன்று வீட்டில் உள்ள பழைய விரிப்பான்கள், துணிகள் போன்ற பொருட்களை எரிப்பது வழக்கம்.
- நைட்ரஜன் ஆக்ஸைடுகளின் அளவு 15.5 மைக்ரோ கிராம், அமோனியாவின் அளவு 50 மைக்ரோ கிராம் என பதிவாகியுள்ளது.
புதுச்சேரி:
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாள் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் வீடுகளில் பழைய பொருட்களை பொதுமக்கள் தீயிட்டு எரித்து, அகற்றுவது வழக்கம்.
ஆனால் கடந்த சில வருடங்களாக, போகியன்று டயர், ரப்பர், பிளாஸ்டிக் போன்ற பொருட்களை எரிப்பதால் நச்சு புகைமூட்டம் ஏற்பட்டு மக்களுக்கு சுவாச நோய், இருமல், நுரையீரல், கண், மூக்கு எரிச்சல் உட்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. நச்சுக்காற்றாலும், கரிப்புகையாலும் காற்று மாசுபட்டு சுற்றுச்சூழல் சீர்கேடு அடைகிறது.
எனவே, போகி அன்று டயர், ரப்பர், பிளாஸ்டிக், தெர்மோகோல், செயற்கை இழைத்துணி போன்ற பொருட்களை எரிக்க வேண்டாம் என்று மாசு கட்டுப்பாட்டு குழுமம் வேண்டுகோள் விடுத்திருந்தது. இந்தச் சூழலில், புதுச்சேரியில் 2024-ம் ஆண்டை காட்டிலும் நடப்பாண்டு போகி பண்டிகையன்று காற்றின் மாசு அளவு குறைந்துள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழுமத்தின் உறுப்பினர் செயலர் ரமேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
போகி பண்டிகை அன்று வீட்டில் உள்ள பழைய விரிப்பான்கள், துணிகள் போன்ற பொருட்களை எரிப்பது வழக்கம். காலப்போக்கில் இத்தகைய பொருட்களுடன் வீட்டில் உள்ள உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், டயர் போன்ற பொருட்களை எரிக்க தொடங்கினர்.
இதனால் காற்றில் மாசுக்களின் அளவு அதிகரித்தது புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு குழுமம், இத்தகைய பொருட்களை எரிப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றிய விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கியது. இந்தச் சூழலில் புதுச்சேரியில் மேட்டுப்பாளையம், அண்ணா நகர் மற்றும் காரைக்காலில் ஒரு இடத்திலும் போகி அன்று காற்றின் மாசு 24 மணி நேரம் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டது.
இதில் மிதவை துகள்களின் அளவு 54 மைக்ரோ கிராம், கந்தக ஆக்ஸைடுகளின் அளவு 10.4 மைக்ரோ கிராம். நைட்ரஜன் ஆக்ஸைடுகளின் அளவு 15.5 மைக்ரோ கிராம், அமோனியாவின் அளவு 50 மைக்ரோ கிராம் என பதிவாகியுள்ளது.
2024-ம் ஆண்டில் மிதவை துகள்களின் அளவு 138 மைக்ரோ கிராம். நைட்ரஜன் ஆக்ஸைடுகளின் அளவு 23.6 மைக்ரோ கிராம் என பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
போகி அன்று ஏற்பட்ட சிறு மழை தூறலும், மக்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வும் இந்த ஆண்டில் காற்றின் மாசு அளவு குறைய காரணமாக இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வைத்திலிங்கம் எம்.பி. வெற்றி வாய்ப்புள்ளவர்களை தேர்வு செய்வது, நகரம் மற்றும் கிராமங்களில் கட்சியை வளர்ப்பது என தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
- நாராயணசாமி ராஜ்பவன், காமராஜர் நகர், நெல்லித்தோப்பு தொகுதிகளை குறிவைத்து தேர்தல் முன்கள பணிகளில் தனது ஆதரவாளர்களை முடுக்கி விட்டுள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் கடந்த 2016-ம் ஆண்டு காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியில் முதலமைச்சராக நாராயணசாமி பதவியேற்று 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை ஆட்சியில் இருந்தார்.
சட்டசபை தேர்தலுக்கு 2 மாதங்களுக்கு முன்பாகவே இவரது ஆட்சி கவிழ்ந்ததால் 5 ஆண்டுகள் முற்று பெறாமல் ஆட்சி காலம் முடிவடைந்தது.
அடுத்து நடந்த 2021 சட்டசபை தேர்தலில், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி போட்டியிடாமல் தேர்தல் பணியாற்றினார். இந்த தேர்தலில், மாகி மற்றும் லாஸ்பேட்டை ஆகிய 2 தொகுதிகளில் மட்டும் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
கூட்டணியில் போட்டியிட்ட தி.மு.க. 6 இடங்களில் வெற்றி பெற்று மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எதிர்க்கட்சித் தலைவரானார்.
இந்த காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்து போட்டியிட்ட என்.ஆர். காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணி 16 இடங்களில் வெற்றி பெற்று முதலமைச்சராக ரங்கசாமி பதவியில் இருந்து வருகிறார்.
காங்கிரஸ் தோல்வி குறித்து பல்வேறு விமர்சனங்கள் நாராயணசாமி மீது சுமத்தப்பட்டதால் நாராயணசாமி இதற்கு பதில் கூறாமல் அமைதி காத்து வந்தார்.
இதற்கு பதிலடி தரும் வகையில் எதிர்வரும் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி கட்டிலில் அமர்த்த நாராயணசாமி தீவிர தேர்தல் பணியை தற்போதே தொடங்கி உள்ளார்.
மேலும் காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. வெற்றி வாய்ப்புள்ளவர்களை தேர்வு செய்வது, நகரம் மற்றும் கிராமங்களில் கட்சியை வளர்ப்பது என தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
காரைக்காலில் முன்னாள் அமைச்சர்கள் ஏ.வி. சுப்பிரமணியன், கமலக்கண்ணன் ஆகியோர் தேர்தல் முன்கள பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோன்று நாராயணசாமி தனக்கு ஆதரவாக கருதும் ராஜ்பவன், காமராஜர் நகர், நெல்லித்தோப்பு தொகுதிகளை குறிவைத்து தேர்தல் முன்கள பணிகளில் தனது ஆதரவாளர்களை முடுக்கி விட்டுள்ளார்.
மேலும் இளைஞர்களை குறி வைத்து நாராயணசாமியின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பேஜ்களில் நாராயணசாமி தகவல்கள் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
மேலும் வருகிற சட்டசபை தேர்தலில் நாராயணசாமி போட்டியிட்டு வென்று காட்ட மீண்டும் தேர்தல் பணிகளில் ஆர்வம் காட்டுவதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
- தமிழ்நாட்டில் இரண்டு சிறுவர்களுக்கு எச்எம்பிவி வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
- தொற்றும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
சீனாவில் இருந்து குழந்தைகளை தாக்கக்கூடிய மெட்டாப்நியூமோவைரஸ் (எச்எம்பிவி) தொற்று உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவில் பாதிப்பு 13 ஆக உயர்ந்தது.
தமிழ்நாட்டில் இரண்டு சிறுவர்களுக்கு எச்எம்பிவி வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
புதிதாக பரவி வரும் எச்.எம்.பி.வி. வைரஸ் தொற்றும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், தொற்று குறித்து பயப்படத் தேவை இல்லை எனவும், ஆனால் பாதுகாப்பு வழிமுறைகள் அவசியம் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், புதுச்சேரியில் 5 வயது சிறுமிக்கு HMPV தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
5 வயது சிறுமி காய்ச்சல் காரணமாக ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் HMPV கண்டறியப்பட்டது.
சிறுமி தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.






