என் மலர்
புதுச்சேரி
- மூதாட்டி கொலையில் புகார் கொடுத்த எழிலரசன் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.
- போலீசார் எழிலரசனை கைது செய்து காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி மூலக்குளம்-வில்லியனூர் மெயின்ரோட் டைச் சேர்ந்தவர் சாந்தா (வயது 64). இவரது கணவர் சுப்ரமணியன் இறந்து விட்டதால், உறவுக்கார பெண் ஒருவரின் துணையுடன் வசித்து வந்தார்.
கடந்த 2016 டிசம்பர் 26-ந் தேதி சாந்தாவுடன் தங்கியிருந்த உறவுக்கார பெண் வெளியே சென்ற நிலையில் மறுநாள் காலை சாந்தா அவரது வீட்டில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் நகை மாயமாகி இருந்தது.
இதுகுறித்து அதேபகுதியை சேர்ந்த முடி திருத்தும் தொழிலாளி எழில் என்ற எழிலரசன் (30) போலீசுக்கு புகார் தெரிவித்தார். மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே மூதாட்டி கொலையில் புகார் கொடுத்த எழிலரசன் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது சாந்தா அணிந்திருந்த 7 பவுன் நகையை வீட்டிற்குள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் எழிலரசன் நகைக்காக மூதாட்டி சாந்தாவை கொலை செய்து விட்டு போலீசாரிடம் புகார் அளித்து நாடகமாடியது தெரியவந்தது.
போலீசார் எழிலரசனை கைது செய்து காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி 3-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி பாலமுருகன் குற்றம் சாட்டப்பட்ட எழிலரசனுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ரங்கநாதன் ஆஜரானார்.
- மீண்டும் மாலை 4.30 மணிக்கு சட்டசபை கூட்டம் தொடங்கியது.
- 24-ந் தேதி தொடங்கி 27-ந் தேதி வரை 4 நாட்கள் சட்டசபை நடக்க உள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 10-ந் தேதி கவர்னர் கைலாஷ்நாதன் உரையுடன் தொடங்கியது.
தொடர்ந்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 12-ந் தேதி நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி ரூ.13 ஆயிரத்து 600 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்தார்.
தொடர்ந்து, சட்டசபையில் தினமும் கேள்வி நேரம், பூஜ்ய நேரம், மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்து வந்தது.
எம்.எல்.ஏ.க்களின் கேள்விக்கு முதலமைச்சர், அமைச்சர்கள் பதிலளித்தனர். பூஜ்ய நேரத்திலும் எம்.எல்.ஏ.க்களின் விவாதம் அனல் பறந்தது. நேற்று 9-ம் நாள் கூட்டம் காலை 9.30 மணி தொடங்கியபோது, அனைத்து எம்.எல்.ஏ.க்களும் பேச வேண்டும் என்பதால் மாலையிலும் சட்டசபை கூட்டத்தொடர் நடக்கும் என சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அறிவித்தார்.
இதன்படி நேற்று காலையில் தொடங்கிய கூட்டம் மதியம் 2.20 மணி வரை நடந்தது. தொடர்ந்து மீண்டும் மாலை 4.30 மணிக்கு சட்டசபை கூட்டம் தொடங்கியது.
இந்த கூட்டம் நேற்று நள்ளிரவு 10.40 மணி வரை நீடித்தது. அனைத்து எம்.எல்.ஏ.க்கள் மானிய கோரிக்கையின் மீது பேசும் வகையில் சட்டசபை இரவு 10.40 மணி வரை நடத்தப்பட்டது.
முதலமைச்சர் ரங்கசாமி இரவு 9 மணிக்கு சட்டசபையிலிருந்து புறப்பட்டு சென்றார். ஒரே நாளில் மதிய உணவு இடைவேளை 2 மணி நேரம் தவிர்த்து 11 மணி நேரம் புதுச்சேரி சட்டமன்ற கூட்டம் நடந்தது.
இன்று (சனிக்கிழமை) நாளை ஞாயிற்றுக்கிழமை சட்டசபை கூட்டத்தொடர் இல்லை.
இதைத்தொடர்ந்து 24-ந் தேதி தொடங்கி 27-ந் தேதி வரை 4 நாட்கள் சட்டசபை நடக்க உள்ளது.
இதில் 27-ந் தேதியை தவிர்த்து மற்ற 3 நாட்களில் முதலமைச்சர், அமைச்சர்கள் மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளிக்கின்றனர்.
- குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு, வீடாக சென்று ரேசன் பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்தார்.
- ஏழை மக்களுக்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இலவசமாக வழங்கப்படும்.
புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடரின் முதல் நாளில் 2025- 26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து 7-வது நாள் கூட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. வட்டம் தொடங்கியதும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 9 மாதங்களுக்கு பிறகு பத்திரமாக பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட குழுவிற்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, நியாய விலைக்கடைகள் இல்லாத பகுதிகளில் வாகனங்கள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு, வீடாக சென்று ரேசன் பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்தார்.
மேலும், கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் பேசுகையில், "புதுச்சேரியில் அடுத்த மாதம் 14-ந்தேதி முதல் ஏழை மக்களுக்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இலவசமாக வழங்கப்படும்" என அறிவித்தார்.
இந்நிலையில், புதுச்சேரியில் மஞ்சள் நிற ரேசன் அட்டை வைத்துள்ள மகளிருக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
தற்போது சிவப்பு நிற ரேசன் அட்டைதாரர்களுக்கு மட்டும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே சாதாரண குடும்ப அட்டை வைத்திருக்கும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மஞ்சள் நிற குடும்ப அட்டை என்பது ஆண்டு குடும்ப வருமானம் ரூ.1,20,000 வரை மட்டுமே பெரும் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
- வணிக நிறுவனங்கள் தங்களது பெயர் பலகையில், தமிழ் எழுத்து இருப்பது கட்டாயம்.
- வணிகர்கள், வியாபாரிகள் தங்களது கடை பெயர் பலகையில் தமிழில் எழுத வேண்டும்.
புதுச்சேரி:
புதுச்சேரி சட்டசபையின் 6-வது நாள் கூட்டம் இன்று நடந்தது. இதில் பூஜ்ய நேரத்தில் சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு பேசியதாவது:-
தாய்மொழியான தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக புதுவை, காரைக்காலில் செயல்படும் வணிக நிறுவனங்களில் உள்ள பெயர் பலகைகள் மற்றும் விளம்பர பலகை களில் தமிழ் எழுத்துகளின் வாசகங்கள் முதல் வரிசையில் இடம்பெற செய்ய வேண்டும். அதற்கடுத்து தான் பிறமொழி வாசகங்கள் இடம்பெற செய்ய வேண்டும்.
பல மாநிலங்களில் அவர்கள் சார்ந்த தாய் மொழி எழுத்துக்களில்தான் வணிக நிறுவனங்களிலும், பொது இடங்களிலும் வாசகங்கள் இடம் பெற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக நகராட்சி நிர்வாக இயக்குனர், தமிழ் பயன்படுத்த வேண்டும் என்றும், பிற மொழிகளுக்கான அளவு 5:3:2 என இருக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே கடைகளில் வைக்கப்படும் பெயர் பலகையில், தமிழ் மொழி பெரிய அளவிலும், ஆங்கிலம் மொழி சிறிய அளவிலும் இருத்தல் வேண்டும் என்ற விதிமுறை நடைமுறையில் உள்ளது. இந்த விதியை பெரும்பாலான கடைகள் பின்பற்றுவதில்லை. இந்த விதியை பின்பற்றாத கடையின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாரதியார், பாரதிதாசன் போன்ற தமிழ் கவிஞர்கள் மற்றும் பெரும்புலவர்கள் வாழ்ந்த இந்த மண்ணில் தமிழுக்கான முக்கியத்துவம் குறைந்து கொண்டு வருகிறது. பிற மொழிகளின் ஆதிக்கம் வளர்ந்து வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கு பதிலளித்து முதலமைச்சர் ரங்கசாமி கூறியதாவது:-
புதுவையில் உள்ள வணிக நிறுவனங்கள் தங்களது பெயர் பலகையில், தமிழ் எழுத்து இருப்பது கட்டாயம். தமிழ் பெயர் கட்டாயம் இருக்க வேண்டும், எழுத வேண்டும்.
வணிகர்கள், வியாபாரிகள் தங்களது கடை பெயர் பலகையில் தமிழில் எழுத வேண்டும். அது நமது உணர்வு. இதைப்போல் அரசு விழா அழைப்பிதழ்களையும் தமிழில்தான் அச்சடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- புதுச்சேரியில் புதிதாக மது ஆலை தொடங்குவதற்கு சட்டசபையில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
- புதிய மது ஆலை வந்தால் அரசுக்கு ரூ.500 கோடி வருவாய் கிடைக்கும்.
புதுச்சேரி சட்டசபையில் 2025-26-ம் நிதியாண்டிற்கு ரூ.13 ஆயிரத்து 600 கோடிக்கான பட்ஜெட்டை நிதி பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி நேற்று தாக்கல் செய்தார்.
பட்ஜெட்டில் பெண்கள், மாணவர்களுக்காக பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டார்.
இந்த நிலையில் புதுச்சேரி சட்டசபை இன்று காலை கூடியது. சட்டசபை உறுப்பினர்களின் விவாதம் நடைபெற்றது.
புதுச்சேரியில் புதிதாக மது ஆலை தொடங்குவதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது முதலமைச்சர் ரங்கசாமி கூறியதாவது:
* புதிய மது ஆலை வந்தால் அரசுக்கு ரூ.500 கோடி வருவாய் கிடைக்கும்.
* புதிய மதுபான ஆலை மூலம் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
* புதுச்சேரியில் பூரண மதுவிலக்கை அனைவரும் ஆதரித்தால் நானும் தயார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- முதலமைச்சர் ரங்கசாமி உரையாற்றினர்.
- இரண்டு கிலோ இலவச கோதுமை வழங்கப்படும்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் 2025-2026ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது. அம்மாநிலத்தில் நிதித்துறை பொறுப்பில் உள்ள முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் ரூ.13,600 கோடிக்கு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து, முதலமைச்சர் ரங்கசாமி உரையாற்றினர்.
அப்போது அவர் அறிவித்த முக்கிய அறிவிப்புகள் கீழ்வருமாறு,
விவசாய தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.
குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் இலவச அரிசியுடன், இரண்டு கிலோ இலவச கோதுமை வழங்கப்படும்.
அரசு மற்றும் அனைத்து அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் மாலை சிற்றுண்டி வழங்கப்படும்.
பள்ளி மாணவர்களுக்கு வாரம் மூன்று நாள் மட்டும் வழங்கப்படும் முட்டை, இனிமேல் தினந்தோறும் வழங்கப்படும்.
6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவ-மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத் தொகை வழங்கப்படும்.
புதுச்சேரி மத்திய சிறைச்சாலை முழுமையாக கணினி மயமாக்கப்படும்.
எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.2 கோடியில் இருந்து ரூ.3 கோடியாக உயர்த்தப்படும்.
மீனவ சமுதாய பெண்கள் உயிரிழந்தால் ஈமச்சடங்குகளுக்காக வழங்கப்பட்டு வரும் நிதி ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி படகு 50 சதவீதம் மானிய விலையில் வழங்கப்படும்.
- அதிகாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் இருண்டு காணப்படுகிறது.
- லேசான மழை புதுச்சேரி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,
புதுச்சேரி:
புதுச்சேரியில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் வெயிலின் உக்கிரம் அதிகரிக்க தொடங்கியது.
மதிய வேளைகளில் வெயில் சுட்டெரிக்கிறது. பகல் பொழுதுகளில் மக்கள் நடமாடவே அச்சப்படும் சூழ்நிலை உள்ளது. இதனிடையே வானிலை மையம் வெப்ப அலை வீசும் என எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையில் இன்று திடீரென ஒட்டுமொத்த வானிலையும் மாறியது. அதிகாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் இருண்டு காணப்படுகிறது. லேசான மழையும் பெய்தது. இதனால் குளர்ச்சியான சூழல் நிலவுகிறது. இது புதுச்சேரி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே பூமத்திய ரேகையையொட்டி வடகிழக்கு இந்திய பெருங்கடல், தென்மேற்கு வங்ககடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலை ஏற்பட்டுள்ள தால் தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரி வானிலையிலும் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
- பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 10-ந்தேதி தொடங்குகிறது.
- 12-ந்தேதி முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
புதுச்சேரி:
புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 10-ந்தேதி தொடங்குகிறது. 12-ந்தேதி முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
சட்டசபை நிகழ்வு குறித்து தலைமை செயலாளர் சரத் சவுகான் அனைத்து அரசு துறை அதிகாரிகளுக்கு விடுத்துள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி சட்ட சபையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தொடர்பான பட்டியல் சட்டசபை செயலகத்தால் பின்னர் வழங்கப்படும்.
சம்பந்தப்பட்ட துறை தலைவர்கள் சபைக்கு வந்து விவாதங்களை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். விவாதங்கள் நடக்கும்போது துறை செயலாளர்கள், சிறப்பு செயலாளர்கள் சபை வளாகத்தில் இருந்து அமைச்சர்களுக்கு தேவையான கூடுதல் விவரங்களை உடனடியாக வழங்க வேண்டும்.
எழுத்து கேள்விகளுக்கான பதில்கள், கேள்விகள் சபையில் 48 மணிநேரத்துக்கு முன்பாகவே சட்ட சபை செயலகத்துக்கு வழங்க வேண்டும். துணை கேள்விகளுக்கும் பின்னணி தகவல்களை சேகரித்து பதில்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
சட்டசபை செயலகத்துக்கு பதில்களை வழங்குவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட துறை செயலாளர், அமைச்சரின் ஒப்புதலை பெறவேண்டும்.
நாள்தோறும் நடைபெறும் முக்கியமான நிகழ்வு 2 குறிப்புகளை தலைமைச் செயலாளருக்கு அனுப்ப வேண்டும். சட்டசபைக்கு வரும் போது செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு அதிகாரிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர வேண்டும்.
இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது
- பஸ்சில் பொருட்கள் வைக்கும் பகுதியில் பெரிய பார்சல் ஒன்று இருந்தது.
- பஸ் புதுச்சேரி பஸ் நிலையம் வந்தபோது அதை சக ஊழியர்கள் முன்னிலையில் பிரித்து பார்த்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி- பெங்களூரு இடையே அரசு (பி.ஆர்.டி.சி.) பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதுபோல் சம்பவத்தன்று புதுச்சேரி அரசு பஸ் பெங்களூருலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு புதுச்சேரிக்கு புறப்பட்டு வந்தது.
அந்த பஸ்சை டிரைவர் அரிதாஸ் ஓட்டி வந்தார். கண்டக்டராக வெங்கடாசலபதி (வயது 53) பணியில் இருந்தார். இந்த பஸ் திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் வந்தபோது பி.ஆர்.டி.சி. பறக்கும் படையினர் பஸ்சில் ஏறி திடீர் சோதனை நடத்தினார்கள்.
அப்போது பஸ்சில் பொருட்கள் வைக்கும் பகுதியில் பெரிய பார்சல் ஒன்று இருந்தது. அந்த பார்சல் யாருடையது? என்ற விவரமும் இல்லை. இந்த பார்சல் சம்பந்தமாக பறக்கும் படையினர் கண்டக்டர் வெங்கடாசலபதியிடம் விசாரணை நடத்தினர். ஆனால் அவர் முறையாக பதில் அளிக்கவில்லை.
இதனிடையே பஸ் புதுச்சேரி பஸ் நிலையம் வந்தபோது அதை சக ஊழியர்கள் முன்னிலையில் பிரித்து பார்த்தனர். அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த பார்சலில் ஹான்ஸ் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் இருந்தது.
இதுகுறித்து மேலாண் இயக்குனர் சிவகுமாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பஸ் கண்டக்டர் வெங்கடாசலபதியை பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து உத்தரவிட்டார்.
இந்த போதைப்பொருட்களை புதுச்சேரிக்கு அனுப்பியவர்கள் யார்? போதைப்பொருள் கும்பலுக்கும் பஸ் ஊழியர்களுக்கும் தொடர்பு உள்ளதா? இதுபோன்று பெங்களூருரில் இருந்து புதுச்சேரிக்கு போதைப்பொருட்கள் தொடர்ந்து கடத்தப்பட்டு வந்ததா? என்பது குறித்து துறை ரீதியாக விசாரணை நடந்து வருகிறது.
- 4 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
- 4 வழிச் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திருபுவனை:
புதுச்சேரி மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட கிராமங்களில் தனியார் நிறுவனம் மூலம் 50-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் துப்புரவு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தொழிலாளர்களுக்கு கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் தொழிலாளர்கள் பலமுறை அந்த நிறுவனத்திடம் சம்பள பாக்கி கேட்டு முறையிட்டனர். ஆனாலும் சம்பளம் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் துப்புரவு தொழிலாளர்கள் உடனடியாக சம்பளம் வழங்கக் கோரியும் இ.எஸ்.ஐ., பி.எப். பிடிப்பு மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க கோரி திருபுவனை 4 வழி சாலையில் குப்பை வண்டிகள், குப்பை கூடைகளுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அறிந்த திருபுவனை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட துப்புரவு தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதனை துப்புரவு தொழிலாளர்கள் ஏற்க வில்லை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து திருபுவனை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. கோபிகா சாலை மறியலில் ஈடுபட்ட துப்புரவு தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
மேலும் குப்பை வாரும் பணியை மேற்கொண்டு வரும் தனியார் நிறுவன பொதுமேலாளர் நரேன்னிடம் தொலைபேசியில் பேசி 4 மாத சம்பள பாக்கியை உடனடியாக ஊழிகளுக்கு வழங்க அவர் கேட்டுக்கொண்டார்.
அதற்கு தனியார் குப்பை வாரும் நிறுவன பொதுமேலாளர் சம்பளம் உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். இதனை ஏற்றுக் துப்புரவு தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தினால் புதுவை-விழுப்புரம் 4 வழிச் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- நள்ளிரவில் மிளகாய் வத்தல் யாகம் நடத்தினர்.
- வேத மந்திரங்கள் ஓதியவாரு ஜப்பான் நாட்டினர் பூஜையில் கலந்துகொண்டனர்.
புதுச்சேரி:
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் நடிகைகள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் புதுச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள தமிழக பகுதியில் உள்ள கோவில்களில் ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் உலக நன்மை வேண்டியும், அமை திகாக்கவும் புதுச்சேரியை அடுத்த மொரட்டாண்டி பகுதியில் அமைந்துள்ள உலகிலேயே மிக உயரமான மகா பிரத்தியங்கிரா காளி கோவிலில் நேற்று நள்ளிரவில் மிளகாய் வத்தல் யாகம் நடத்தினர்.
கோவில் பீடா திபதி நடாத்தூர் ஜனார்த்தனன் சாமிகள் தலைமையில் நடைபெற்ற பூஜையில் 108 கிலோ மிளகாய் வத்தல் உட்பட 108 யாக பொருட்களைக்கொண்டு பூஜைகள் நடந்தது. இதில் இந்திய முறைப்படி வேத மந்திரங்கள் ஓதியவாரு ஜப்பான் நாட்டினர் பூஜையில் கலந்துகொண்டனர்.
பின்னர் பய பக்தியுடன் பிரத்தியங்கிரா காளியை வழிபட்டனர். ஜப்பான் நாட்டினர் இந்திய முறைப்படி யாகம் நடத்தி சாமி தரிசனம் செய்ததை கோவிலுக்கு வந்த பக்தர்கள் பார்த்து வியப்படைந்தனர்.
- போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
- சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் பதட்டம் நீடித்தது.
புதுச்சேரி:
புதுவை வில்லியனுார் மூலக்கடை சந்திப்பில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். சிலை இருந்தது.
1996-ல் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இந்த சிலையை திறந்து வைத்தார். இந்த சாலை புறவழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டபோது போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் என எம்.ஜி.ஆர். சிலை அகற்றப்பட்டது.
சாலை விரிவாக்கம் செய்யப்பட்டபின் புதிதாக எம்.ஜி.ஆர். வெண்கலச் சிலை அமைக்கப்பட்டது. இந்த சிலை திறப்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சிலையின் கல்வெட்டில் தங்கள் பெயர் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக அ.தி.மு.க. உரிமை மீட்பு குழுவினர் புகார் தெரிவித்தனர்.
தங்களின் பெயரும், வில்லியனுார் தொகுதியை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் பெயரும் இடம்பெற வேண்டும் என கலெக்டரிடம் மனு அளித்தனர்.
இதனிடையே புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன், நேற்று முன்தினம் எந்த முன் அறிவிப்புமின்றி கட்சி நிர்வாகிகளுடன் சென்று எம்.ஜி.ஆர். சிலையை திறந்து வைத்து மாலை அணிவித்தார்.
இதையடுத்து அ.தி.மு.க. உரிமை மீட்பு குழுவினர் இன்று மீண்டும் அந்த சிலையை திறக்க உள்ளதாக அறிவித்தனர். இதற்கு புதுவை அ.தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அந்த சிலைக்கும், மற்றவர்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. சிலையை மீண்டும் திறக்க அனுமதிக்கக்கூடாது என போலீசாரிடம் அ.தி.மு.க.வினர் மனு அளித்தனர்.
இந்த நிலையில் இன்று காலை 8 மணி முதல் வில்லியனுார் புறவழிச்சாலை சந்திப்பில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
காலை 10 மணிக்கு மேல் ஒருபுறம் அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் அ.தி.மு.க.வினரும், மறுபுறம் முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்திசேகர் தலைமையில் உரிமை மீட்பு குழுவினரும் திரண்டனர்.
மேலும் அவர்கள் எதிர் எதிராக கோஷம் எழுப்பியதால் அங்கு கடும் பதட்டம் ஏற்பட்டது. அப்போது போலீசார் ஓம்சக்தி சேகரிடம், சிலைக்கு மாலை அணிவிக்க எந்த தடையும் இல்லை, ஆனால் திறப்பதற்கு அனுமதியில்லை என தெரிவித்தனர்.
ஓம்சக்தி சேகரும், அவரின் ஆதரவாளர்களும் இதனை ஏற்கவில்லை. போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் பதட்டம் நீடித்தது.
இதையடுத்து ஓம்சக்தி சேகர் தலைமையிலான உரிமை மீட்பு குழுவினர் சிலையை நோக்கி செல்ல முயன்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி ஓம்சக்தி சேகர் உட்பட 100-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். எம்.ஜி.ஆர். சிலைக்கு தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.






