என் மலர்
புதுச்சேரி

பாராளுமன்றத்தில் வைகோவின் குரல் மீண்டும் ஒலிக்க வேண்டும் என்பதே தமிழர்களின் எதிர்பார்ப்பு - மல்லை சத்யா
- மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கன்னடத்தை விட தமிழ்தான் முதல் மொழி என்று கூறியுள்ளார்.
- மூக நலன் சார்ந்து இருமாநில அரசுகள் முடிவெடுத்து வன்முறை நடைபெறாமல் தடுக்க வேண்டும்.
புதுச்சேரி:
ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா புதுச்சேரியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
பா.ம.க. வடமாவட்டங்களில் உழைக்கும் வர்க்கங்களான வன்னியர், ஆதி திராவிடர் மக்களை இணைத்து களமாடியிருந்தால் வீழ்ச்சிக்கு வந்திருக்க வாய்ப்பிருக்காது. ராமதாசின் பணிகள் தமிழுக்கு மிகப்பெரிய சான்றாக இருந்துள்ளது. அவர்களின் உட்கட்சி விவகாரத்தில் ராமதாஸ் கண் கலங்கியிருப்பது வருத்தத்திற்குரியது.
பா.ம.க. உட்கட்சி விவகாரம் தொடர்பாகவும், ராமதாஸ் வைத்து குற்றச்சாட்டுகள் குறித்தும் அன்புமணிதான் விளக்கம் தர வேண்டும்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கன்னடத்தை விட தமிழ்தான் முதல் மொழி என்று கூறியுள்ளார். ஒரு தமிழனாக தமிழ் மொழியை தூக்கி பிடிப்பதில் தவறில்லை. தமிழ் மீதுள்ள ஆழ்ந்த புரிதலை அவர் வெளிகாட்டியுள்ளார்.
கன்னடத்தில் கமல் நடித்த தமிழ் படத்தை திரையிடமாட்டோம் என கன்னடர்கள் கூறுவது சரியில்லை. இது மொழி வெறியை குறிப்பதாக உள்ளது. தமிழகத்தில் கன்னட படம் திரையிட எதிர்ப்பு தெரிவிக்கப்படும். ஒரு நல்லிணக்கனம் இப்போதுதான் உருவாகியுள்ளது. இது இரு மாநில பிரச்சனையாகி அசாதாரணமான சூழல் உருவாகக்கூடாது. சமூக நலன் சார்ந்து இருமாநில அரசுகள் முடிவெடுத்து வன்முறை நடைபெறாமல் தடுக்க வேண்டும்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்காதது கவலையளிக்கிறது. வைகோவின் குரல் பாராளுமன்றத்தில் மீண்டும் ஒலிக்க வேண்டும் என்பதே தமிழர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மக்கள் நீதி மையத்துக்கு சட்டமன்ற தேர்தலின்போது போட்ட ஒப்பந்தப்படி எம்.பி. பதவி வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க. நடவடிக்கையில் நாங்கள் குறை காணவில்லை. எங்கள் தலைவருக்கு எம்.பி. பதவி கிடைக்கவில்லை என்பதில் எங்களுக்கு வருத்தம் உள்ளது. தனிப்பட்ட முறையில் வருத்தம் இருந்தாலும் கட்சி நலம் சார்ந்து முடிவெடுக்க வேண்டியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக புதுச்சேரி தமிழ் சங்கத்தில் நடந்த அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தின் வியட்நாம் விடுதலை 50-ம் ஆண்டு விழாவில ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா பங்கேற்று சிறப்புரையாற்றினார்.






