என் மலர்
புதுச்சேரி

புதுச்சேரியில் சர்வதேச யோகா திருவிழா - நேற்று இந்தியில்... இன்று தமிழில் பேனர்கள்
- புதுச்சேரி நகரின் முக்கிய சந்திப்புகள் உள்பட நகரின் பல இடங்களில் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
- விளம்பர பேனர்களில் இந்தி எழுத்துக்களை கருப்பு மை பூசி தமிழ் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
,ஜூன் 21-ந்தேதி சர்வதேச யோகா தினம் ஆகும். இதையொட்டி புதுச்சேரி கடற்கரை காந்தி திடலில் மத்திய ஆயுஷ் அமைச்சக மெரார்ஜி தேசாய் தேசிய யோகா இன்ஸ்டிடியூட் சார்பில் இன்று யோகா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை மந்திரி பிரதாப்ராவ் ஜாதவ் கலந்துகொண்டு யோகாவை தொடங்கி வைக்கிறார். நிகழ்ச்சியில் கவர்னர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் சபாநாயகர், அமைச்சர்கள் மற்றும் பலர் கலந்துகொள்கிறார்கள்.
இதற்காக புதுச்சேரி நகரின் முக்கிய சந்திப்புகள் உள்பட நகரின் பல இடங்களில் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அதில் யோகா குறித்து இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே வாசகங்கள் இடம் பெற்று இருந்தன. எந்த இடத்திலும் இல்லாத வகையில் முழுவதுமாக தமிழ் புறக்கணிக்கப்பட்டிருந்தது. இதைப்பார்த்து புதுச்சேரி மக்கள், சமூக ஆர்வலர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்களில் இந்தி எழுத்துக்களை கருப்பு மை பூசி தமிழ் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுகுறித்து முதலமைச்சர் ரங்கசாமியிடமும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உடனடி நடவடிக்கையாக நேற்று இரவோடு இரவாக கடற்கரை சாலை உள்பட நகரில் பல்வேறு இடங்களில் யோகா விழாவுக்காக வைக்கப்பட்டிருந்த இந்தி விளம்பர பேனர்கள் மாற்றப்பட்டு அதற்கு பதிலாக அரசு சார்பில் தமிழில் வாசகங்கள் அடங்கிய பேனர்கள் வைக்கப்பட்டன. அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழ் அமைப்புகள் வரவேற்பு தெரிவித்தன.






