என் மலர்
கேரளா
- கடந்த தேர்தலில் அமேதி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார்.
- இந்த முறை வயநாடு தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறார்.
பா.ஜனதாவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், பாதுகாப்புத்துறை மந்திரியுமான ராஜ்நாத் சிங் இன்று கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் நடைபெற்ற தேர்தல் பொதுக் கூட்டத்தில் பா.ஜனதா வேட்பாளர் அனில் கே அந்தோணியை ஆதரித்து பேசினார்.
அப்போது "கடந்த முறை அமேதி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிட அவருக்கு தைரியம் இல்லை. அங்கு தோல்வியடைந்ததால் உத்தர பிரதேசத்தில் இருந்து கேரளாவிற்கு குடிபெயர்ந்துள்ளார். எனினும், வயநாடு மக்கள் இந்த முறை அவரை எம்.பி. தேர்ந்தெடுக்கமாட்டோம் என முடிவு செய்துள்ளார். இதை என்னால் கேட்க முடிகிறது" என்றார்.
நேற்று ராகுல் காந்தியிடம் மீண்டும் அமேதி தொகுதியில் போட்யிடுவீர்களா? என கேட்கப்பட்டது. இதற்கு ராகுல் காந்தி கூறியதாவது:-
அமேதி தொகுதி குறித்து கட்சி முடிவு எடுக்கும். கட்சியின் எந்த உத்தரவை நான் பெற்றாலும் அதற்கு கட்டுப்படுவேன். எங்களுடைய கட்சியில் இதுபோன்ற முடிவுகள் மத்திய தேர்தல் குழு கூட்டத்தில்தான் எடுக்கப்படும்.
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.
ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி போட்டியிட்டு வந்தார். தற்போது உடல்நலத்தை கருத்தில் கொண்டு மக்களவை தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவு செய்துள்ளார். இதனால் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதனால் ரேபரேலி தொகுதியில் பிரியங்காவின் கணவர் வதேரா போட்டியிட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இரண்டு தொகுதிகளிலும் காந்தி குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான் போட்டியிட வேண்டும் என உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
ரேபரேலி மற்றும் அமேதி தொகுதிகளுக்கு காங்கிரஸ் இன்னும் வேட்பாளர் அறிவிக்காமல் உள்ளது.
- கேரளாவில் முன்னேற்றத்திற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளன.
- ராஜ்நாத் சிங் பிரசாரம் செய்த இடங்களில் தொடங்கும்போதும், முடிக்கும் போதும் மலையாளத்தில் பேசினார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கு வருகிற 26-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் பிரசாரம் முடிவடைவதற்கு இன்னும் 6 நாட்களே உள்ளதால் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேரளாவை பொறுத்தவரை காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. அந்த கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் போட்டி போட்டு ஆதரவு திரட்டி வருகின்றனர்.
மேலும் அவர்களை ஆதரித்து கட்சியின் தேசிய தலைவர்கள் கேரளாவிற்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு மத்திய மந்திரிகள் ஆதரவு திரட்டி வருகின்றனர்.
காசர்கோடு, கண்ணூர் மற்றும் வடகரா ஆகிய மக்களவை தொகுதிகளில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்தியாவை இணைக்க ராமர் பற்றிய கருத்து மட்டுமே முடியும். ஸ்ரீராமன் இறைவன் மட்டுமல்ல. அவர் ஒரு கலாச்சார நாயகன். காங்கிரஸ் ஆதரவாளர்களும், கம்யூனிஸ்டுகளும் இதை ஏற்றுக்கொள்வது கடினம்.
ராமரை எதிர்ப்பவன் விரட்டியடிக்கப்படுவான் என்பது நாட்டின் வரலாறு. கூடாரத்தில் இருந்த ராமரை அயோத்தியில் உள்ள கோவிலுக்கு பா.ஜ.க. அழைத்து வந்தது. சி.ஏ.ஏ.-ன் கீழ் எந்த ஒரு இந்தியரும் குடியுரிமையை இழக்க மாட்டார்கள். அடுத்த 5 ஆண்டுகளில் ஒரே மாதிரியான சிவில் சட்டம் வரும்.
கேரளாவில் முன்னேற்றத்திற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளன. அதற்காக காங்கிரசையும், சி.பி.எம்.-ஐயும் விரட்டியடிக்க வேண்டும். ஒருமுறை வெளியே சென்றால் அவர்கள் திரும்பி வர மாட்டார்கள். காங்கிரஸ் மற்றும் சி.பி.எம். இரட்டை ஆட்டம் ஆடுகிறார்கள். டெல்லியில் நட்புடன் இருக்கும் அவர்கள் கேரளாவில் சண்டையிட்டுக் கொள்கிறார்கள்.
இவ்வாறு மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பேசினார்.
ராஜ்நாத் சிங் பிரசாரம் செய்த இடங்களில் தொடங்கும்போதும், முடிக்கும் போதும் மலையாளத்தில் பேசினார். இது கூட்டத்தில் கலந்து கொண்ட பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
- கேரளம் உள்ளிட்ட 21 மாநிலங்களுக்கு உள்பட்ட 102 தொகுதிகளில் தேர்தல்.
- உடனடியாக அதை மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நாளை (19-ம் தேதி) தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதன்படி நாடு முழுவதும் முதல் கட்டமாக நாளை முதல் கட்ட தேர்தல் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் உள்ளிட்ட 21 மாநிலங்களுக்கு உள்பட்ட 102 தொகுதிகளில் நடைபெறுகிறது
இந்நிலையில், கேரள மாநிலம் காசர்கோடு சட்டமன்ற தொகுதியில் இன்று மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில், ஒரு முறை பொத்தானை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டுகள் விழுவதாக எதிர்கட்சிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
4 இயந்திரங்களில் இந்த கோளறு கண்டறியப்பட்டுள்ளதாகவும், மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள காங்கிரஸின் கைச்சின்னம் மற்றதைவிட சிறியதாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உடனடியாக அதை மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
- பறவை காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதிகளில் உடனடியாக சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
- பறவை காய்ச்சலில் இறந்த வாத்துக்கள் இருந்த பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
திருவனந்தபுரம்:
கேரளாவில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களில் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை நிலவுகிறது.
கோடை மழை பெய்து வரும் நிலையில் கேரளாவில் டெங்கு, அம்மை உள்ளிட்ட நோய்களும் பருவ தொடங்கி இருக்கிறது. இதனால் பொதுமக்கள் கவனமுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றனர். இந்நிலையில் கேரளாவில் பறவை காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆலப்புழாவில் உள்ள எடத்துவா மற்றும் மேலும் ஒரு பஞ்சாயத்தில் விவசாய நிலத்தில் வளர்க்கப்பட்ட வாத்துக்கள் அடுத்தடுத்து இறந்தபடி இருந்தன. இதனால் இறந்த வாத்துக்களில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு போபாலில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது. அங்கு நடத்தப்பட்ட ஆய்வில் இறந்த வாத்துக்களுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து பறவை காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதிகளில் உடனடியாக சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பறவை காய்ச்சலில் இறந்த வாத்துக்கள் இருந்த பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் அந்த இடத்தை சுற்றி ஒரு கிலோ மீட்டர் தொலைவில் செயல்பட்டு வரும் பண்ணையில் வளர்க்கப்படும் பறவைகளை அழிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான திட்டத்தை மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடங்கி இருக்கின்றனர். பறவை காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டபோதிலும் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தற்போது விடுமுறை காலம் என்பதால் மூணாறுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
- ஊருக்குள் புகும் காட்டுயானைகளை விரட்ட தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று மூணாறு பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் பல கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டி இருக்கின்றன. இந்த கிராமங்களுக்குள் காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி புகுந்து விடுகின்றன. அவ்வாறு புகும் வனவிலங்குகளால் மனிதர்கள் மற்றும் வீட்டில் வளர்க்கக்கூடிய விலங்குகள் கொல்லப்படும் சம்பவங்களும் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில் சுற்றுலா பயணிகளின் காரை காட்டு யானை தாக்கி சேதப்படுத்தி இருக்கிறது. கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் மூவாட்டுபுழா பகுதியை சேர்ந்தவர்கள் மனோஜ்குமார் மற்றும் தாமஸ். இவர்கள் இடுக்கி மாவட்டம் மூணாறுக்கு சுற்றுலா வந்தனர். அப்போது அவர்கள் மேட்டுப்பட்டியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளியான சுப்பிரமணியன் என்பவரை பார்க்க சென்றனர்.
அவர்கள் தாங்கள் வந்த காரை சாலையோரம் நிறுத்தி விட்டு சென்றனர். அப்போது அங்கு வந்த காட்டு யானை, அவர்களது காரை சேதப்படுத்தியது. இதில் அவர்களது கார் உடைந்து சேதமானது. இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து ஊருக்குள் புகுந்திருந்த காட்டி யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
காட்டு யானைகளால் அடிக்கடி இடையூறு ஏற்படுவதாக அந்த பகுதி மக்கள் தெரவித்தனர். தற்போது விடுமுறை காலம் என்பதால் மூணாறுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்நிலையில் சுற்றுலா பயணிகளின் காரை காட்டு யானை தாக்கியிருப்பது, சுற்றுலா பயணிகளின் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
எனவே ஊருக்குள் புகும் காட்டுயானைகளை விரட்ட தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று மூணாறு பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- போதையில் இருந்த மணமகன் திருமணத்தை நடத்துவதற்காக வந்திருந்த பாதிரியாரிடமும், மணமகளின் உறவினர்களிடம் தகராறு செய்தார்.
- இரு வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இது குறித்து அங்கிருந்த சிலர் போலீசுக்குத் தகவல் தெரிவித்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் கோழஞ்சேரி அருகே தடியூர் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் ஒரு இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணம் அங்குள்ள ஒரு தேவாலயத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
திருமணத்தன்று காரில் இருந்து இறங்கிய மணமகன் மதுபோதையில் தள்ளாடியபடி மணமேடை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார்.
இதை பார்த்த மணப்பெண் உள்பட அனைவரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் போதையில் இருந்த மணமகன் திருமணத்தை நடத்துவதற்காக வந்திருந்த பாதிரியாரிடமும், மணமகளின் உறவினர்களிடம் தகராறு செய்தார்.
இதனை நேரில் பார்த்து கொண்டிருந்த மணமகள் அதிர்ச்சியடைந்தார். ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த மணமகள் 'தனக்கு இந்த திருமணமே வேண்டாம்' என்று கூறி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதனால் திருமணம் நின்றது.
இதுதொடர்பாக இரு வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இது குறித்து அங்கிருந்த சிலர் போலீசுக்குத் தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து இரு வீட்டாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது மணமகளின் குடும்பத்தினர், தங்களுக்கு இந்தத் திருமணத்தில் விருப்பமில்லை என்றும் திருமணத்துக்காக பெரும் தொகை செலவு செய்ததால் மணமகனின் உறவினர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இல்லையெனில் திருமணத்துக்காக செலவு செய்த தொகையை நஷ்டஈடாக தரவேண்டும் என்றனர்.
இதை தொடர்ந்து நஷ்ட ஈடாக ரூ.6 லட்சம் கொடுக்க மணமகன் வீட்டார் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் திருமணத்துக்காக தயார் செய்திருந்த உணவு அனைத்தும் வீணானது.
இதற்கிடையே மதுபோதையில் ரகளை செய்ததாக மணமகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மக்கள் ஒரு முறை ஏமாற்றப்படலாம், ஆனால் மீண்டும் மீண்டும் ஏமாற்ற முடியாது.
- மத்தியில் உள்ள பாஜக அரசு நாட்டில் ஆர்எஸ்எஸ் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
பாலக்காடு:
கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வருகிற 26-ந்தேதி பாராளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, பட்டம்பியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் பாஜக மற்றும் காங்கிரசை குற்றம்சாட்டி பேசினார். அவர் கூறியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி இங்கு வந்து பல வாக்குறுதிகளை அளித்தார். இதை யாராவது நம்புவார்களா? வாக்குறுதிகளை மக்கள் நம்ப மாட்டார்கள். "மக்கள் ஒரு முறை ஏமாற்றப்படலாம், ஆனால் மீண்டும் மீண்டும் ஏமாற்ற முடியாது". மத்தியில் உள்ள பாஜக அரசு நாட்டில் ஆர்எஸ்எஸ் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
பாஜக தேர்தல் அறிக்கையில் சிஏஏ குறித்து தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் மீண்டும் மௌனம் காத்து வருகிறது என்றார்.
பினராயி விஜயனின் கட்சியான கம்யூனிஸ்டும் மற்றும் காங்கிரசும் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. ஆனால் கேரள மாநிலத்தில் இரு கட்சிகளும் எதிர்எதிரே களம் காண்கின்றன.
- நெய் அபிஷேகத்திற்கு வழங்கப்பட்ட ரசீதை கவுண்டரில் காண்பித்து அபிஷேக நெய்யை பெற்றுக்கொள்ளலாம்.
- முறைகேடாக பணம் பெற்று பக்தர்களுக்கு அபிஷேக நெய் கொடுக்கப்படுவதாக தேவசம்போர்டு லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் கிடைத்தது.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நெய் அபிஷேகம் மிக முக்கியமான வழிபாடாகும். சபரிமலை வரும் பெரும்பாலான பக்தர்கள் நெய் அபிஷேகம் செய்யாமல் திரும்புவதில்லை. இதற்கு ஒரு குறிப்பிட்ட தொகை செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண் டும். பக்தர்கள் செலுத்தும் நெய், அபிஷேகத்திற்கு பிறகு தனி கவுண்டர் மூலம் பக்தர்களுக்கு வழங்கப்படுவது வழக்கம்.
நெய் அபிஷேகத்திற்கு வழங்கப்பட்ட ரசீதை கவுண்டரில் காண்பித்து அபிஷேக நெய்யை பெற்றுக்கொள்ளலாம். இதற்காக கவுண்டரில் பூசாரிகள் பணியில் உள்ளனர். இந்த நிலையில் முறைகேடாக பணம் பெற்று பக்தர்களுக்கு அபிஷேக நெய் கொடுக்கப்படுவதாக தேவசம்போர்டு லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அவர்கள் ரகசியமாக கண்காணித்தனர்.
அப்போது திருமூழிக்குளம் கோவிலைச் சேர்ந்த பூசாரி மனோஜ் என்பவர் தான் இந்த முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார். அவரிடமிருந்து ரூ.14 ஆயிரத்து 565 பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து பம்பை போலீசில் மனோஜ் ஓப்படைக்கப்பட்டார். அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த ஆண்டு இந்த கால கட்டத்தில் 3.46 மில்லியன் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
- திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு 29 ஆயிரத்து 778 விமானங்கள் வந்துள்ளன.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் பல்வேறு நகரங்களில் விமான நிலையங்கள் உள்ளன. இதில் திருவனந்தபுரம் விமான நிலையம் பயணிகள் வருகை மற்றும் விமான சேவையில் புதிய சாதனையை படைத்துள்ளது.
கடந்த ஆண்டு (2023) ஏப்ரல் மாதம் முதல் கடந்த மாதம் (மார்ச்) வரையிலான கால கட்டங்களில் திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக 4.4 மில்லியன் (44 லட்சம்) பயணிகள் பயணம் செய்துள்ளனர். கடந்த ஆண்டு இந்த கால கட்டத்தில் 3.46 மில்லியன் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
இதேபோல் விமான சேவையிலும் சாதனை படைத்துள்ளது. திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு 29 ஆயிரத்து 778 விமானங்கள் வந்துள்ளன. இதற்கு முந்தைய ஆண்டில் 24 ஆயிரத்து 213 விமானங்கள் இயக்கப்பட்டிருந்தன. தற்போது 23 சதவீதம் அதிகரித்துள்ளது.
விமான பயணிகள் சர்வதேச அளவில் ஷார்ஜாவுக்கும், உள்நாட்டில் பெங்களூரூவுக்கும் அதிக அளவில் பயணம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- கேரள அரசு போக்குவரத்து துறை, கடந்த 1-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை துறை ஊழியர்களிடம் சோதனை நடத்தியது.
- அதிரடி நடவடிக்கை கேரள போக்குவரத்து துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநில போக்குவரத்து துறை அமைச்சர் கணேஷ்குமார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு நடவடிக்கையாக மதுபோதையில் யாராவது பணிக்கு வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தார்.
இதன்பேரில் கேரள அரசு போக்குவரத்து துறை, கடந்த 1-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை துறை ஊழியர்களிடம் சோதனை நடத்தியது. அப்போது மது அருந்தியவர்கள், மதுபானம் வைத்திருந்தவர்கள் கண்டறியப்பட்டனர். அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி 74 நிரந்தர ஊழியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். மேலும் 26 தற்காலிக ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கை கேரள போக்குவரத்து துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பிரதமர் மோடி இந்தியாவின் 5-6 பெரிய தொழில் அதிபர்களின் கருவியாக இருக்கிறார்.
- நிலவுக்கு மனிதனை அனுப்ப போகிறோம் என்று அவர் சொல்வார்.
வயநாடு:
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாட்டில் போட்டியிடுகிறார். அவர் இன்று ரோடு ஷோ சென்று ஆதரவு திரட்டினார். அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:-
இந்திய அரசியலமைப்பை அழிக்கவும், இந்திய அரசியல் அமைப்பை மாற்றவும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதா முயல்கின்றன. இந்த பாராளுமன்ற தேர்தலில் ஒரே ஒரு பெரிய பிரச்சனை இதுதான். காங்கிரஸ் கட்சியும், இந்தியா கூட்டணியும் அரசியல் சாசனத்தை காப்பாற்ற முயல்கின்றன.

பிரதமர் மோடி இந்தியாவின் 5-6 பெரிய தொழில் அதிபர்களின் கருவியாக இருக்கிறார். நாட்டின் உண்மையான பிரச்சனைகளில் இருந்து மக்களை திசை திருப்புவதும், இந்தியாவில் உள்ள பணக்கார தொழில் அதிபர்களை பாதுகாப்பதும், அவர்களின் வங்கி கடனை மன்னிப்பதும் மோடியின் வேலை. நாட்டில் உள்ள 20-25 பேருக்கு மோடி ரூ.16 லட்சம் கோடி வழங்கி உள்ளார்.
நிலவுக்கு மனிதனை அனுப்ப போகிறோம் என்று அவர் சொல்வார். ஆனால் வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் பிரச்சனை, விலைவாசி உயர்வு ஆகியவற்றை பற்றி எல்லாம் பிரதமர் மோடி பேசுவதில்லை.
தேர்தல் பத்திரங்கள் பெற்ற விவகாரம் பிரதமர் மோடியால் நடத்தப்பட்ட மிரட்டி பணம் பறிக்கும் செயலாகும்.
இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.
- சரக்கு கப்பலில் 17 இந்தியர்கள் உள்பட 25 மாலுமிகள் உள்ளனர்.
- இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
திருவனந்தபுரம்:
சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ஈரான் துணை தூதரகத்தின் மீது கடந்த 1-ந்தேதி வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஈரானில் இஸ்லாமிய புரட்சி காவல்படை தளபதிகள் 2 பேர் உள்பட 12 பேர் பலியாகினர்.
இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாக குற்றம்சாட்டிய ஈரான், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலுடன் சம்பந்தப்பட்ட சரக்கு கப்பலை கடந்த 13-ந்தேதி சிறைபிடித்தது. ஓமன் வளைகுடா அகில் ஹார்முஸ் ஜலசந்தியையொட்டிய பகுதியில் வைத்து ஈரான் இஸ்லாமிய புரட்சி காவல் படையால் கப்பல் சிறை பிடிக்கப்பட்டது.
அந்த சரக்கு கப்பலில் 17 இந்தியர்கள் உள்பட 25 மாலுமிகள் உள்ளனர். சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கக்கோரி ஈரான் வெளியுறவுத்துறை மந்திரியிடம், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.
அதன்பேரில் இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஈரானில் சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரேல் கப்பலில் தவித்துவரும் கேரள மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் நேற்றுமுன்தினம் தனது குடும்பத்தினருடன் பேசினார்.
இந்நிலையில் அதே கப்பலில் சிக்கியுள்ள கேரள மாநில பெண் ஒருவரும் தனது குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். கேரள மாநிலம் திருச்சூர் வெளுத்தூர் பகுதியை சேர்ந்த பிஜூ ஆபிரகாம் என்பவரின் மகள் ஆன் டெஸ்சா ஜோசப்.
இவர் அந்த கப்பலில் கடந்த 9 மாதங்களாக ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 13-ந்தேதி ஈரானில் சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிக்கொண்டார். ஆன் டெஸ்சாவுடன் அவரது குடும்பத்தினர் கடந்த 12-ந்தேதி பேசியுள்ளனர். அதன்பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியாமல் தவித்தனர்.
இந்தநிலையில் ஆன் டெஸ்சா தனது குடும்பத்தினருடன் செல்போனில் வீடியோ கால் மூலமாக தொடர்பு கொண்டு பேசினார். கப்பலை சிறைபிடித்திருந்தவர்கள் அனுமதித்ததன் பேரில் அவர் தனது குடும்பத்தினரை போனில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.
அவர் கப்பலில் இருக்கும் அனைவரும் பத்திரமாக இருப்பதாகவும், உணவு சரியாக அளிக்கப்படுவதாகவும், ஆகவே பயப்பட வேண்டாம் என்றும் கூறியிருக்கிறார். அதன்பிறகே ஆன் டெஸ்சா குடும்பத்தினர் நிம்மதியடைந்தனர்.
ஆன் டெஸ்சா பாதுகாப்பாக இருப்பதாக அவர் பணிபுரிந்த நிறுவன அதிகாரிகளும், அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்திருக்கிறார்கள். மத்திய உள்துறை வட்டாரங்கள் ஆன் டெஸ்சா குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்கின்றனர்.






