என் மலர்
கேரளா
- வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரிக்கும் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும், அதிகளவில் தண்ணீர் பருகுமாறும் அறிவுறுத்தப்பட்டனர்.
- இடுக்கி மாவட்டத்தில் இடியுடன் கூடிய பலத்தமழை பெய்யவும் வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் கோடை காலம் தொடங்குவற்கு முன்னதாகவே வெயில் சுட்டெரித்தது. இந்தநிலையில் ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. பாலக்காடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை பதிவானது.
வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரிக்கும் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும், அதிகளவில் தண்ணீர் பருகுமாறும் அறிவுறுத்தப்பட்டனர். அதே வேளையில் சில மாவட்டங்களில் கோடை மழை பெய்தது. இதனால் அந்த மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்தது.
இந்நிலையில் பத்தினம் திட்டா, எர்ணாகுளம், கண்ணூர், ஆலப்புழா, கோட்டயம், மலப்புரம், கொல்லம், திருச்சூர், கோழிக்கோடு, பாலக்காடு ஆகிய 10 மாவட்டங்களுக்கு வருகிற 25-ந்தேதி வரை இந்திய வானிலை ஆய்வு மையம் உயர் வெப்பநிலை எச்சரிக்கை மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் திருச்சூர் மற்றும் கொல்லம் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும் எனவும், மற்ற மாவட்டங்களிலும் இயல்பை விட வெயில் அதிகமாக அடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் அந்த மாவட்டங்களில் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
உயர் வெப்பநிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள 10 மாவட்டங்களில் பத்தினம் திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம் திருச்சூர், கண்ணூர் ஆகிய 7மாவட்டங்களிலும், இடுக்கி மாவட்டத்திலும் இடியுடன் கூடிய பலத்தமழை பெய்யவும் வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- யாராவது பணிக்கு வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு.
- ஊழியர்கள் மீது மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.
கேரள மாநில போக்குவரத்து துறை அமைச்சர் கணேஷ்குமார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு நடவடிக்கையாக மதுபோதையில் யாராவது பணிக்கு வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தார்.
இதன்பேரில் கேரள அரசு போக்குவரத்து துறை, கடந்த 1-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை துறை ஊழியர்களிடம் சோதனை நடத்தியது. அப்போது மது அருந்தியவர்கள், மதுபானம் வைத்திருந்தவர்கள் கண்டறியப்பட்டனர். அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி 74 நிரந்தர ஊழியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். மேலும் 26 தற்காலிக ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கை கேரள போக்குவரத்து துறையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கேரள போக்குவரத்து துறையில் மதுபோதையில் பணியாற்றிய மேலும் 97 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்துள்ளனர். மேலும், 40 தற்காலிக ஊழியர்களும் பணி நீக்கம் செய்துள்ளனர்.
கடந்த 14ம் தேதி முதல் போக்குவரத்து ஊழியர்களிடம் பரிசோதனை நடைபெற்று வருகிறது. அதன் நடவடிக்கையாக, மதுபோதையில் பணியாற்றிய ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்தனர்.
- 10 ஆண்டுகளில் மோடி ஆட்சியில் பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரம் படுகுழியில் தள்ளப்பட்டுள்ளது.
- காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வேலைவாய்ப்பை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளது.
திருவனந்தபுரம்:
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தேர்தல் முடிந்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்.
இந்தியாவின் மிகப்பெரிய சவால் வேலையின்மை. சிலர் இதை குறைத்து மதிப்பிடுகின்றனர். இது மிகப்பெரிய பிரச்சனையாகும். எனது அனுபவத்தில் இவ்வளவு அதிகமான வேலையின்மை விகிதம் இருந்தது இல்லை. பட்டதாரிகள் மத்தியில் வேலையில்லா திண்டாட்டம் அதிகமாக உள்ளது. பட்டதாரிகளின் வேலையின்மை 42 சதவீதமாக உள்ளது.
14 நாட்களில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை உருவாக்கியது. அது தேர்தல் அறிக்கை என்று பெயரிடப்படவில்லை. அதை மோடியின் உத்தரவாதம் என்கிறார்கள்.
பா.ஜ.க. நீண்ட காலத்துக்கு அரசியல் கட்சியாக இருக்காது. அது ஒரு வழிபாடாக மாறிவிட்டது. அந்த வழிபாடு நரேந்திர மோடியை வணங்குகிறது. இந்தியாவில் அந்த வழிபாடு வலுப்பெற தொடங்கியதும் சர்வாதிகாரத்துக்கு வழி வகுக்கும்.
மோடி மீண்டும் 3-வது முறையாக ஆட்சிக்கு வந்தால் அரசியல் அமைப்பை திருத்தலாம். 10 ஆண்டுகளில் மோடி ஆட்சியில் பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரம் படுகுழியில் தள்ளப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் ஜனநாயகத்தை மீட்டெடுக்க வேண்டும்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வேலைவாய்ப்பை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளது. இது குறித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பேசாமல் இருக்கிறது.
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் பாராளுமன்ற முதல் அமர்விலேயே குடியுரிமை திருத்த சட்டம் ரத்து செய்யப்படும்.
இவ்வாறு ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
- தன்னை போன்ற நிர்வாகியே, ராகுல் காந்தியை அணுக முடியாத நிலையில், சாதாரண மக்கள் எப்படி அவரை அணுக முடியும்.
- கேரள அரசியலில் காங்கிரசுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் பாராளுமன்ற தேர்தல் 2-வது கட்டமாக நடக்கிறது. அங்கு வருகிற 26-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான இறுதி கட்ட தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். அவர் கடந்த சில நாட்களாக வயநாடு மட்டுமின்றி கேரள மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டினார். இந்நிலையில் வயநாடு மாவட்ட காங்கிரஸ் செயலாளர் சுதாகரன், திடீரென காங்கிரசில் இருந்து விலகி பாரதிய ஜனதாவில் இணைந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சியை மையமாக கொண்ட அரசியல் பார்வையில் தனக்கு ஏற்பட்ட ஈர்ப்பு, இந்த சகாப்தத்திற்கு மிகவும் பொருத்தமான கட்சியாக இருப்பதால், பாரதிய ஜனதாவில் இணைந்ததாக சுதாகரன் தெரிவித்துள்ளார். மேலும் தன்னை போன்ற நிர்வாகியே, ராகுல் காந்தியை அணுக முடியாத நிலையில், சாதாரண மக்கள் எப்படி அவரை அணுக முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முதல்-மந்திரியுமான கருணாகரனின் மகள் பத்மஜா கடந்த சில மாதங்களுக்கு முன்பு காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்தார். தற்போது மாவட்ட செயலாளரும் பா.ஜனதாவில் இணைந்திருப்பது கேரள அரசியலில் காங்கிரசுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.
- நாடு முழுவதும் இந்தியா கூட்டணி என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் களம் இறங்கி உள்ளன.
- பணம் விநியோகம், மது வழங்குதல், பரிசு அளித்தல் உள்ளிட்டவை தொடர்பாகவும் புகார்கள் வந்துள்ளன.
திருவனந்தபுரம்:
பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் முதல் கட்ட வாக்குப்பதிவு 19-ந்தேதி நடைபெற்றது.
2-வது கட்ட தேர்தல் வருகிற 26-ந்தேதி கேரள மாநிலம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நடைபெற உள்ளது. கேரளாவில் உள்ள 20 பாராளுமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் இந்தியா கூட்டணி என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் களம் இறங்கி உள்ளன. இந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கம்யூனிஸ்டு, காங்கிரஸ் கட்சிகள், கேரளாவில் ஒன்றையொன்று எதிர்த்து களத்தில் உள்ளன. பாரதிய ஜனதா கட்சியும் வெற்றியை எதிர்பார்த்து போட்டியில் உள்ளது.
இந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்கள் குறித்து தேர்தல் ஆணையத்துக்கு சி-விஜில் மூலம் ஏராளமான புகார்கள் வந்துள்ளன. கடந்த மாதம் 16-ந்தேதி முதல் நேற்று வரை 2 லட்சத்து 9 ஆயிரத்து 661 புகார்கள் வந்துள்ளன. இதில் அங்கீகரிக்கப்படாத சுவரொட்டிகள் மற்றும் பேனர்கள் தொடர்பாக 1 லட்சத்து 83 ஆயிரத்து 842 புகார்களும், சொத்துக் குவிப்பு தொடர்பாக 10 ஆயிரத்து 999 புகார்களும் வந்துள்ளன.
மேலும் பணம் விநியோகம், மது வழங்குதல், பரிசு அளித்தல் உள்ளிட்டவை தொடர்பாகவும் புகார்கள் வந்துள்ளன. இந்த புகார்கள் குறித்து ஆய்வு செய்து, 2 லட்சத்து 6 ஆயிரத்து 152 வழக்குகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சய் கவுல் தெரிவித்துள்ளார். 3 ஆயிரத்து 83 புகார்கள் ஆதாரமற்றவை என நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
- 2019-ல் காங்கிரஸ் கூட்டணியை சேர்ந்த 18 பேர் எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
- நாங்கள் கேட்க விரும்புவதெல்லாம் அவர்கள் யாராவது ஒருவர் கேரள மாநில நலத்திற்கான நின்றார்களா?.
கேரளா மாநிலத்தில் வருகிற 26-ந்தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. 20 தொகுதிகளை கைப்பற்றுது யார் என்பதில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கும், இடதுசாரி கட்சி தலைமையிலான கூட்டணிக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது.
இரு கட்சிகளும் இந்தியா கூட்டணியில் உள்ளது. தொகுதி உடன்பாடு எட்டப்படாததால் தனித்தனியாக போட்டியிடுகின்றன. காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் இடசாரிகளையும், இடதுசாரி கூட்டணி கட்சிகள் காங்கிரஸ் தலைவர்களையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் 2019 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 18 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், கேரள மாநில நலனிற்காக அவர்கள் நிற்கவில்லை என பினராயி விஜய் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பினராயி விஜயன் கூறுகையில் "2019-ல் காங்கிரஸ் கூட்டணியை சேர்ந்த 18 பேர் எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டனர். பாராளுமன்றத்தில் அவர்கள் மத்திய அரசை விமர்சனம் செய்வது தொடர்பாக அவர்கள் கவலைப்படவில்லை. நாங்கள் கேட்க விரும்புவதெல்லாம் அவர்கள் யாராவது ஒருவர் கேரள மாநில நலத்திற்கான நின்றார்களா? அவர்கள் ஆர்எஸ்எஸ் எஜென்டாவுடன் நின்றார்கள். கேரளாவிற்காக ஒரு வார்த்தையாவது உச்சரித்தார்களா?.
பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசின் தவறுகளுக்கு இடதுசாரி அரசை குறை கூற விரும்பினார்கள். சங்பரிவார் தனது திட்டத்தை செயல்படுத்தும்போது, மதசார்பற்ற எண்ணம் கொண்டவர்கள் அதை எதிர்க்கிறார்கள். ராகுல் காந்தி மதசார்பற்ற நபரா? சங்பரிவார் மனநிலை கொண்ட ஒருவரா? என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். சிஏஏ போன்ற சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியால் எப்படி போராட்டம் நடத்தாமல் இருக்க முடிகிறது.?
இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
- கைது செய்யப்பட்ட வாலிபர்கள் மற்றும் மீட்கப்பட்ட மாணவிகளிடம் விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.
- கைதானவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் வண்டூர் பகுதியை சேர்ந்த 15 மற்றும் 14 வயது மதிக்கத்தக்க இரண்டு சிறுமிகள் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தனர். 10 மற்றும் 8-ம் வகுப்பு மாணவிகளான அவர்கள் இருவரும் விடுமுறைக்காக வண்டூரில் உள்ள தங்களது உறவினர் வீட்டிற்கு கடந்த 16-ந்தேதி சென்றுள்ளனர்.
இந்தநிலையில் மாணவிகள் இருவரும் திடீரென மாயமாகிவிட்டனர். இதுகுறித்து அவர்களது உறவினர்கள் வண்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து மாயமான மாணவிகள் இருவரையும் தேடி வந்தனர்.
அவர்களது செல்போன் மூலம் அவர்களது இருப்பிடத்தை போலீசார் கண்காணித்தனர். அப்போது மாணவிகள் இருவரும் பெங்களூருவில் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். மாணவிகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில் அந்த மாணவிகள், 2 வாலிபர்களுடன் பஸ்சில் வந்த போது போலீசாரிடம் சிக்கினர். மாணவிகள் இருவரையும் போலீசார் மீட்டனர். அவர்களுடன் இருந்த வாலிபர்கள் குறித்து விசாரித்த போது இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்தவர்கள் என்று தெரிவித்தனர்.
மேலும் தங்களை பெங்களூருவுக்கு கடத்திச் சென்றதாகவும், மதுபானம் கொடுத்து மயங்க செய்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர். இதையடுத்து மாணவிகளுடன் இருந்த எர்ணாகுளம் அங்கமாலி பகுதியை சேர்ந்த பாசில் பேபி (வயது 23), திருச்சூர் கொடுங்கல்லூர் முகமது ரமீஸ் (22) ஆகிய இருவரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
கைது செய்யப்பட்ட வாலிபர்கள் மற்றும் மீட்கப்பட்ட மாணவிகளிடம் விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. பள்ளி மாணவிகள் இருவருக்கும், அந்த வாலிபர்கள் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகம் ஆகியுள்ளனர். அதன் மூலமாக அவர்கள் பேசி பழகி வந்துள்ளனர்.
இந்நிலையில் மாணவிகள் இருவரும் விடுமுறைக்காக வண்டூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர். அதனை அறிந்து கொண்ட அந்த வாலிபர்கள், அங்கு சென்று மாணவிகளை சந்தித்துள்ளனர். பின்பு மோட்டார் சைக்கிளில் மாணவிகள் இருவரையும் எர்ணாகுளத்துக்கு அழைத்து வந்திருக்கின்றனர்.
பின்பு மாணவிகளை பெங்களூருக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு வைத்து மாணவிகளுக்கு மதுபானம் கொடுத்து மயங்கச்செய்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேற்கண்ட தகவல்கள் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து பாசில் பேபி, முகமது ரமீஸ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களின் மீது கடத்தல், கற்பழிப்பு, காயத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் சிறுமிகளை போதையில் வைத்தல், பாலியல் வன்கொடுமை, போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராமில் பழகிய பள்ளி மாணவிகளை கடத்திச் சென்று மதுபானம் கொடுத்து மயங்க செய்து வாலிபர்கள் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- அடர்ந்த வனப்பகுதிக்குள் அமைந்துள்ளது இந்த எடமலக்குடி பழங்குடியின கிராமம்.
- முதியவர் சிவலிங்கத்தின் வாக்கை பதிவு செய்ய 3 பெண்கள் அடங்கிய 9 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கு வருகிற 26-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளதால் அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
தற்போது அங்கு தபால் ஓட்டுகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக படுத்த படுக்கையாக இருந்த 92 வயது முதியவரின் வாக்கை சேகரிப்பதற்காக தேர்தல் அதிகாரிகள் வனப்பகுதிக்குள் 18 கிலோமீட்டர் தூரம் மலையேறி சென்றுள்ளனர்.
கேரள மாநிலம் இடுக்கியில் உள்ளது எடமலக்குடி. அடர்ந்த வனப்பகுதிக்குள் அமைந்துள்ளது இந்த பழங்குடியின கிராமம். அந்த கிராமத்தை சேர்ந்த முதியவர் சிவலிங்கம். 92 வயதான அந்த முதியவர் வயது முதிர்வு காரணமாக வீட்டில் படுத்த படுக்கையாக இருந்து வருகிறார்.
படுத்த படுக்கையாக இருந்தபோதிலும் தற்போது நடக்கவுள்ள மக்களவை தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்துள்ளார். அவர் தனது குடும்பத்தினர் உதவியுடன் வீட்டில் இருந்தே வாக்களிக்கும் வசதிக்கு விண்ணப்பித்தார். அவரது விண்ணப்பத்தை மாவட்ட தேர்தல் அலுவலகம் பரிசீலித்தது.
பின்பு முதியவரின் விண்ணப்பத்தை அங்கீகரித்தது. முதியவர் சிவலிங்கம் வாழ்ந்து வரும் பழங்குடியின கிராமத்துக்கு செல்வது மிகவும் சிரமமான ஒன்றாகும். அடர்ந்த வனப்பகுதிக்குள் மலையேறி சென்றால்தான் அந்த கிராமத்திற்கு செல்ல முடியும்.
ஆகவே அங்கு சென்று முதியவர் சிவலிங்கத்தின் வாக்கை பதிவு செய்ய 3 பெண்கள் அடங்கிய 9 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. அவர்கள் வனப்பகுதிகள் சவால் பயணம் மேற்கொள்ள தயாராகினர். அவர்கள் மூணாறில் இருந்து தங்களது பயணத்தை தொடங்கினர். மூணாறில் இருந்து எடமலக்குடி நுழைவாயிலான பெட்டிமுடி அருகே உள்ள கேப்பாக்காடு வரை வாகனத்தில் பயணித்தனர்.
பின்பு அங்கிருந்து வனப்பகுதியில் கரடுமுரடான பாதையில் 18 கிலோமீட்டர் தூரம் மலையேறிச் சென்றனர். காட்டு விலங்குகள் சுதந்திரமாக திரிந்த வனப்பகுதி வழியாக அவர்கள் தங்களின் பயணத்தை மேற்கொண்டனர். இறுதியில் அடர்ந்த காட்டுக்குள் பல்வேறு சிரமங்களை கடந்து எடமலக்குடி பழங்குடியின கிராமத்தை சென்றடைந்தனர்.
அந்த கிராமத்தில் மொத்தம் 10 வீடுகளே இருந்தன. ஆனால் வீட்டுக்கு வெளியே யாரும் இல்லாமல் அமைதியாக இருந்தது. இதனால் சிவலிங்கத்தின் வீட்டை கண்டுபிடிப்பதில் தேர்தல் அதிகாரிகளுக்கு சிரமம் ஏற்பட்டது. பின்பு சிவலிங்கத்தின் வீட்டை கண்டுபிடித்து சென்றனர்.
அங்கு அவர் உட்காரவோ பேசவோ முடியாத நிலையில் படுத்த படுக்கையாக இருந்தார். அவர் படுத்திருந்த இடத்திற்கு அருகிலேயே வாக்குச்சாவடி போன்று அமைக்கப்பட்டது. தான் வாக்களிக்க தன்னுடைய பேரனின் உதவி வேண்டும் என்று தேர்தல் அதிகாரியிடம் அவர் கோரிக்கை வைத்தார்.
அதனை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து முதியவர் சிவலிங்கம் தனது பேரனின் உதவியுடன் வாக்களித்தார். தனது வாக்கை பெறுவதற்காக தேர்தல் அதிகாரிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்து தனது வீட்டிற்கே வந்தது முதியவருக்கு பூரிப்பை ஏற்படுத்தியது. அவர் தேர்தல் அதிகாரிகளிடம் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக்கொண்டார்.
இதையடுத்து தேர்தல் அதிகாரிகள் முதியவரின் வீட்டில் இருந்து திரும்பி வந்தனர். முதியவர் ஒருவரின் வாக்கை பெறுவதற்காக வனப்பகுதிக்குள் 18 கிலோ மீட்டர் தூரம் சென்று வந்த தேர்தல் அதிகாரிகள், தசைப்பிடிப்பு மற்றும் உடல் சோர்வு உள்ளிட்ட பல்வேறு சிரமங்களை சந்தித்தனர். இருந்தபோதிலும் சவாலான ஒரு பணியை முடித்ததை நினைத்து அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
முதியவர் ஒருவரின் வாக்கை பதிவு செய்வதற்காக தேர்தல் ஆணையம் எடுத்த இந்த நடவடிக்கை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
- வடக்கு நாதர் கோவில் மேற்கு நடை பகுதியில் 300 கலைஞர்கள் நின்று மேள வாத்தியங்களை இசைத்தனர்.
- அலங்கரிக்கப்பட்ட யானைகளின் அணிவகுப்பு, இரவில் நடந்த வாணவேடிக்கையால் திருச்சூரே விழா கோலம் பூண்டது.
திருச்சூர்:
கேரள மாநிலம் திருச்சூர் நகரில் ஆண்டுதோறும் பூரம் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இது புகழ்பெற்றது. திருவம்பாடி கோவில், பாரம்மேகாவு கோவில் சார்பில், தேக்கின்காடு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு திருவிழா கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் சிறப்பு வழிபாடு நடந்து வந்தது.
மேலும் பட்டம் அணிவிக்கப்பட்ட யானைகள் மீது சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு வாண வேடிக்கை நடந்தது. இதில் 2 கோவில் தரப்பில் போட்டி போட்டு பட்டாசுகளை வெடித்தனர். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான பூரம் திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.
தொடர்ந்து மாலை 4 மணிக்கு யானைகளுக்கு பட்டம் அணிவிக்கப்பட்டு, குடை மாற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் எதிர் எதிரே தலா 16 யானைகள் அணிவகுத்து வந்தன. அதில் ஒரு யானை மீது சுவாமி வீதி உலா வந்தார். வடக்கு நாதர் கோவில் மேற்கு நடை பகுதியில் 300 கலைஞர்கள் நின்று மேள வாத்தியங்களை இசைத்தனர். செண்டை மேள கச்சேரி நடந்தது.
சுவாமி எழுந்தருளிப்பு நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்கள் குடை மாற்றும் நிகழ்ச்சியை பார்வையிட்டனர். இது கண்களுக்கு விருந்தாக அமைந்தது. இதில் சுற்றுலா பயணிகளும் பங்கேற்றனர். அலங்கரிக்கப்பட்ட யானைகளின் அணிவகுப்பு, இரவில் நடந்த வாணவேடிக்கையால் திருச்சூரே விழா கோலம் பூண்டது. விழாவை முன்னிட்டு நகர் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
- நான் பா.ஜனதா எதிர்த்து போரிடும்போது, பினராயி விஜயன் தன்னை குறிவைத்து தாக்குதல் ஆச்சர்யமாக உள்ளது- ராகுல் காந்தி.
- அமைப்புகளின் விசாரணை மற்றும் ஜெயில் போன்றவற்றை போதுமான அளவிற்கு பார்த்த அனுபவம் எங்களுக்கு உள்ளது- பினராயி விஜயன்
மத்திய அமைப்புகள் இன்னும் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனிடம் ஏன் விசாரணை நடத்தவில்லை அல்லது கைது செய்யவில்லை என ராகுல் காந்தி கேட்டிருந்த நிலையில், இடதுசாரி தலைவர்கள் ஜெயிலை பார்த்து பயப்படவில்லை என பதில் அளித்துள்ளார்.
"நான் பா.ஜனதா எதிர்த்து போரிடும்போது, பினராயி விஜயன் தன்னை குறிவைத்து தாக்குதல் ஆச்சர்யமாக உள்ளது. அமலாக்கத்துறை தன்னிடம் 55 மணி நேரம் விசாரணை நடத்தியது, தன்னுடைய மக்களவை எம்.பி. பதவி, வீடுகள் பறிக்கப்பட்டது. தற்போது இரண்டு முதல் மந்திரிகள் ஜெயிலில் உள்ளனர். ஆனால் கேரள மாநில முதல்வருக்கு இது போன்று நடக்கவில்லை" எனத் தெரிவித்திருந்தார்.
"உங்களுடைய பாட்டி (இந்திராகாந்தி) எங்களின் பெரும்பாலானோரை ஒன்றரை வருடத்திற்கு மேல் சிறையில் அடைத்திருந்தார். அமைப்புகளின் விசாரணை மற்றும் ஜெயில் போன்றவற்றை போதுமான அளவிற்கு பார்த்த அனுபவம் எங்களுக்கு உள்ளது. ஜெயில்கள் பற்றி எங்களுக்கு பயம் இல்லை. ஆகவே விசாரணை, ஜெயில் போன்ற விசங்கள் மூலமாக எங்களை மிரட்ட முடியாது. நாங்கள் அது பற்றி கவலைப்படுவதில்லை" என பினராயி விஜயன் பதிலடி கொடுத்துள்ளார்.
- ஆலப்புழா மாவட்ட கலெக்டர் அலெக்ஸ் வர்க்கீஸ் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
- பண்ணைகள் மற்றும் வீடுகளில் வளர்க்கப்பட்ட பறவைகள் தனியாக ஒரு இடத்திற்கு எடுத்து செல்லப்பட்டு சுகாதாரத்துறையினர் அழித்து வருகின்றனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் ஏராளமான வாத்து மற்றும் கோழிப்பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. அந்த பண்ணைகளில் வளர்க்கப்படும் பறவைகள் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
இந்நிலையில் ஆலப்புழா மாவட்டம் எடத்துவா பகுதியில் உள்ள பண்ணையில் வாத்துக்கள் தொடர்ச்சியாக இறந்தன. இதனால் பறவை காய்ச்சல் பாதிப்பு இருக்கும் என்று கருதப்பட்டது. இதையடுத்து இறந்த வாத்துக்களில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு போபாலில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது.
அங்கு நடத்தப்பட்ட சோதனையில் வாத்துக்களுக்கு ஏவியான் இன்புளூ வன்சா என்ற பறவை காய்ச்சல் தொற்று பரவி இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஆலப்புழா மாவட்ட கலெக்டர் அலெக்ஸ் வர்க்கீஸ் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
அதில் எடத்துவா பஞ்சாயத்து முதலாவது வார்டில் பறவை காய்ச்சல் தொற்று பாதித்திருந்த இடத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் சுற்றளவில் வளர்க்கப்படும் வாத்து உள்ளிட்ட பறவை இனங்களை அழிக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் அந்த பகுதியில் இருக்கும் பறவைகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டது.
அதில் தொற்று பாதித்த பகுதிக்கு அருகே 21,537 பறவைகள் வளர்க்கப்பட்டு வருவது தெரிய வந்தது. இதையடுத்து அந்த பறவைகளை கொன்று எரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பறவைகளை கொல்லும் பணியை சுகாதாரத்துறை ஊழியர்கள் இன்று தொடங்கினர்.
பண்ணைகள் மற்றும் வீடுகளில் வளர்க்கப்பட்ட பறவைகள் தனியாக ஒரு இடத்திற்கு எடுத்து செல்லப்பட்டு சுகாதாரத்துறையினர் அழித்து வருகின்றனர். மேலும் அந்த பகுதிகள் முழுவதும் கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
பறவை காய்ச்சல் பாதித்த பகுதிகளில் கோழி, வாத்து, காடை போன்ற நாட்டு பறவைகள் மற்றும் அவற்றின் முட்டைகளை உண்ணவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு வருகிற 25-ந்தேதி வரை அமலில் இருக்கும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- 2021 சட்டமன்ற தேர்தலின்போது பல்வேறு மீடியாக்கள் நடத்திய கருத்துக் கணிப்புகளை மக்கள் புறந்தள்ளிவிட்டு எல்டிஎஃப் கூட்டணிக்கு வாக்களித்தார்கள்.
- தற்போதைய கணிப்புகள் பணம் கொடுத்து போடப்பட்ட செய்திகள் (paid news) போன்று இருப்பதாக மக்கள் கேள்வி கேட்க தொடங்கிவிட்டனர்.
கேரள மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான எல்டிஎஃப் (LDF), காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் (UDF), பா.ஜனதா ஆகியவை போட்டியிடுகின்றன. இடதுசாரி கூட்டணிக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது. பல மீடியாக்கள் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி முன்னணி வகிப்பதாக தெரிவித்துள்ளன.
இந்த கருத்துக் கணிப்புகளை அம்மாநில முதல்வர் பினராயி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பினராயி விஜயன் கூறுகையில் "நம்பகத்தன்மையின்மை அல்லது ஒருதலை பட்சம் ஆகியவற்றின் காரணமாக சில குறிப்பிட்ட செய்திகள் பணம் கொடுத்து போடப்பட்ட செய்திகள் (Paid News) என முத்திரை குத்தப்படுகின்றன. அதே அடிப்படையில் சில கணிப்புகள் பரப்பப்பட்டு வருகின்றன.
2021 சட்டமன்ற தேர்தலின்போது பல்வேறு மீடியாக்கள் நடத்திய கருத்துக் கணிப்புகளை மக்கள் புறந்தள்ளிவிட்டு எல்டிஎஃப் கூட்டணிக்கு வாக்களித்தார்கள். தற்போதைய கணிப்புகள் பணம் கொடுத்து போடப்பட்ட செய்திகள் போன்று இருப்பதாக மக்கள் கேள்வி கேட்க தொடங்கிவிட்டனர்.
கணக்கெடுப்பு நடத்தும் முறை, தகவல் சேகரிப்பில் ஈடுபட்டவர்களின் எண்ணிக்கை, முடிவு எப்படி கணிக்கப்படுகிறது போன்ற தகவல்களை வெளியிடாமல் தேர்தலுக்கு முந்தைய கணக்கெடுப்பு முடிவுகள் வெளியாகின்றன. அவற்றின் உண்மைத் தன்மை மக்களுக்குத் தெரியாது. சில ஏஜென்சிகளால் ஆதரிக்கப்படும் இந்த புள்ளிவிவரங்கள் மக்களை தவறாக வழிநடத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளன.
கேரள மக்கள் தங்கள் அரசியல் கருத்துகளை உருவாக்க போலியான செய்திகளையோ அல்லது போலியான கணக்கெடுப்பு அறிக்கைகளையோ நம்பியிருக்கமாட்டார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் மொத்தம் 20 மக்களவை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு வருகிற 26-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.






