என் மலர்
கேரளா
- குற்றவாளிகளை கைது செய்ய செல்லும் போது போலீசார் துப்பாக்கியை எடுத்துச் செல்லவேண்டும்.
- காவல்துறையினரை தாக்குபவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
கேரள மாநிலம் திருச்சூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரவுடி ஒருவரின் பிறந்தநாளை அவரது ஆதரவாளர்கள் கொண்டாடி உள்ள னர். அப்போது அவர்களுக்கிடையே திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது. அவர்கள் ஒருவரையொருவர் தாக்கி மோதலில் ஈடுபட்டிருக்கின்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று மோதலில் ஈடுபட்டவர்களை விரட்டியுள்ளனர். அப்போது மோதலில் ஈடுபட்டவர்கள் பயங்கர ஆயுதங்களால் போலீசாரை தாக்கியிருக்கின்றனர். போலீஸ் வாகனங்களையும் அடித்து உடைத்தனர்.
இந்த சம்பவத்தில் சில போலீசார் காயமடைந்தனர். இந்தநிலையில் கேரள மாநில ஏ.டி.ஜி.பி. வெங்கடேஷ் போலீசாருக்கு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
போலீசார் மக்களை காப்பாற்றவும், தங்களை பாதுகாத்துக் கொள்ளவும் துப்பாக்கியை பயன்படுத்தலாம். வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய செல்லும் போது போலீசார் துப்பாக்கியை எடுத்துச் செல்லவேண்டும். அப்போது அவர்கள் போலீசாரை தாக்க முயன்றாலோ, தாக்குவதற்கு தயாராக இருந்தாலோ தற்காப்புக்காக அவர்களை துப்பாக்கியால் சுடுவதற்கு போலீசார் தயங்கக்கூடாது. காவல்துறையினரை தாக்குபவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு ஏ.டி.ஜி.பி. உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
மேலும் குண்டர் வழக்குகளில் தொடர்புடையவர்களின் மீது எடுக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் ஏ.டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.
- அரியவகை விலங்குகள் மற்றும் கிளியை கொண்டு வந்தது குறித்து கணவன்-மனைவி இருவரிடமும் சுங்கத்துறையினர் விசாரணை நடத்தினர்.
- கணவன்-மனைவி இருவரையும் சுங்கத்துறையினர் கைது செய்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய 4 சர்வதேச விமான நிலையங்கள் இருக்கின்றன. இங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
வெளிநாடுகளில் இருந்து கேரளா வரக் கூடிய விமானங்களில் சட்டவிரோதமாக தங்கம் போன்ற விலையுயர்ந்த பொருட்கள், போதை பொருட்கள் அதிகளவில் கடத்தப்பட்டு வருகின்றன. அதனை தடுக்க சுங்கத்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இருந்தபோதிலும் கேரள விமான நிலையங்களுக்கு கோடிக்கணக்கான மதிப்புள்ள போதை பொருட்கள் உள்ளிட்டவை கடத்தி கொண்டு வருவது தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் தாய்லாந்தில் இருந்து கொச்சி வந்த தாய் ஏர்வேஸ் விமானத்தில் அரிய வகை விலங்குகள் மற்றும் கிளியை கடத்தி கொண்டு வந்த கணவன்-மனைவி சிக்கினர்.

கேரள மாநிலம் பத்தினம்திட்டாவை சேர்ந்தவர் ஜாப்சன் ஜாய்(வயது28). இவரது மனைவி ஆர்யமோல்(28). இவர்கள் இருவரும் தாய்லாந்தில் இருந்து கொச்சி வந்த தாய் ஏர்வேஸ் விமானத்ததில் வந்தனர். அவர்களின் உடமைகளை சுங்கத் துறையினர் சோதனை செய்தனர்.
அப்போது அவர்கள் வைத்திருந்த சாமான்களில் ஒரு சிறிய பெட்டியில் அரியவகை விலங்குகளான "மார்மோசெட்" என்று அழைக்கப்படும் 3 குரங்கு குட்டிகள், 2 வெள்ளை உதடு புலி குட்டிகள் மற்றும் "ஹியான்சித் மக்காவ்" இன கிளி ஆகியவை இருந்தன.
இந்த விலங்கினங்கள் மற்றும் பறவையை இந்தியாவில் வைத்திருப்பது சடடப்படி தடை செய்யப்பட்டுள்ளதால் அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு லட்சக்கணக்கில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
அரியவகை விலங்குகள் மற்றும் கிளியை கொண்டு வந்தது குறித்து கணவன்-மனைவி இருவரிடமும் சுங்கத்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது தங்களிடம் சிலர், இந்த பெட்டிகளை கொச்சி விமானநிலையத்தில் பெற்றுக்கொள்வார்கள் என்று கூறி கொடுத்ததாகவும், அதன்பேரில் கொண்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து கணவன்-மனைவி இருவரையும் சுங்கத்துறையினர் கைது செய்தனர். அவர்கள் கைது செய்யப்பட்ட இருவரையும், பறிமுதல் செய்யப்பட்ட குரங்குகள் மற்றும் கிளிகளை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அது தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது.
- இரவிகுளம் வனப்பகுதியை சுற்றுலா பயணிகள் பார்வையிட வேண்டும் என்றால் வனத்துறையினரிடம் சிறப்பு அனுமதி பெற வேண்டும்.
- கடந்த வாரம் தான் இரவிகுளம் சரணாலயத்தின் 50-வது நிறுவன நாள் கொண்டாடப்பட்டது.
மூணாறு:
இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே இரவிகுளம் தேசிய வனஉயிரின சரணாலயம் அமைந்துள்ளது. இது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக இருக்கிறது. இந்த சரணாலய பகுதியில் வரையாடு, காட்டு யானை, புலி, சிறுத்தை, மான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு விலங்குகளும், பறவையினங்களும் உள்ளன. இரவிகுளம் வனப்பகுதியை சுற்றுலா பயணிகள் பார்வையிட வேண்டும் என்றால் வனத்துறையினரிடம் சிறப்பு அனுமதி பெற வேண்டும்.
இங்குள்ள புல்வெளிகள், சிறிதும், பெரிதுமான ஓடைகள், சலனமில்லாத காடுகள், இயற்கை எழில் கொஞ்சும் வகையில் விண்ணை முட்டும் மலைகள் என சுற்றுலா பயணிகளின் சொர்க்கபுரியாகவே இரவிகுளம் சரணாலயம் விளங்குகிறது. இதனால் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இரவிகுளத்துக்கு வந்து செல்கின்றனர்.
இந்தநிலையில் மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறை சார்பில் நாட்டில் சிறந்த முறையில் உள்ள பாதுகாக்கப்பட்ட சரணாலயங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதன்படி, 2020-ம் ஆண்டு முதல் நடப்பாண்டு வரை நாடு முழுவதும் உள்ள 438 பாதுகாக்கப்பட்ட சரணாலயங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில், சிறந்த சரணாலயங்களில் இரவிகுளம் தேசிய வனஉயிரின சரணாலயம் முதலிடம் பிடித்துள்ளது.
இதுதவிர மூணாறு வனப்பகுதிக்கு உட்பட்ட மதிகெட்டான் சோலை, சின்னார் வனஉயிரின சரணாலயம் ஆகியவையும் முதல் 10 சரணாலயங்களுக்குள் இடம்பிடித்துள்ளது. இரவிகுளம் தேசிய வனஉயிரின சரணாலயம், சிறந்த சரணாலயமாக தேர்வு செய்யப்பட்டதற்கு சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே கடந்த வாரம் தான் இரவிகுளம் சரணாலயத்தின் 50-வது நிறுவன நாள் கொண்டாடப்பட்டது. இதையொட்டி வனத்துறை சார்பில் பள்ளிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 50 மாணவ-மாணவிகளை இரவிக்குளம் வனப்பகுதிக்கு அழைத்து சென்று இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஜூம்பா நடனப் பயிற்சிக்கு மத அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன
- மாணவர்களின் உடல் மற்றும் மன நலனை கருத்தில்கொண்டு இந்த புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு ஜூம்பா நடனப் பயிற்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மாணவர்களின் உடல் மற்றும் மன நலனை கருத்தில்கொண்டு அம்மாநில அரசு இந்த புதிய முயற்சியை எடுத்துள்ளது.
அரசின் இந்த முயற்சிக்கு இதற்கு மத அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில், மாணவர்கள் பள்ளி சீருடையிலேயே இந்த நடனப் பயிற்சியை மேற்கொள்வதாக கல்வி அமைச்சர் சிவன்குட்டி விளக்கம் அளித்துள்ளார்.
- பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஒரு பெண்ணின் கதாபாத்திரத்திற்கு சீதா தேவியின் பெயரை வைக்கக்கூடாது.
- அது எந்த குறிப்பிட்ட சாதி அல்லது மதத்தைச் சேர்ந்தது அல்ல
மத்திய அமைச்சரும் நடிகருமான சுரேஷ் கோபி, நடிகை அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள மலையாளப் படம் 'ஜானகி Vs ஸ்டேட் ஆப் கேரளா'
பிரவீன் நாராயண் இயக்கியுள்ள இந்தப் படம், ஜானகி என்ற பெண்ணின் சட்டப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு த்ரில்லர்.
இருப்பினும், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஒரு பெண்ணின் கதாபாத்திரத்திற்கு சீதா தேவியின் மற்றொரு பெயரான 'ஜானகி' என்ற பெயர் பயன்படுத்தப்பட்டதற்கு சென்சார் வாரியம் எதிர்ப்பு தெரிவித்து சான்றிதழ் அளிக்க மறுத்தது.
ஜூன் 27 அன்று படத்தை வெளியிட படக்குழு ஆரம்பத்தில் திட்டமிட்டிருந்த நிலையில் சென்சார் சான்றிதழ் மறுப்பால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளரான காஸ்மோஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் தாக்கல் செய்த மனுவை கேரள உயர்நீதிமன்ற நீதிபதி என். நாகரேஷ் விசாரித்தார்.
அப்போது 'ஜானகி' என்ற தலைப்பை மாற்ற வேண்டியதன் அவசியம் குறித்து சென்சார் வாரியத்தை கேள்வி எழுப்பிய அவர், 'ஜானகி' என்பது எல்லா இடங்களிலும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் பெயர் என்றும், அது எந்த குறிப்பிட்ட சாதி அல்லது மதத்தைச் சேர்ந்தது அல்ல என்றும், அந்தப் பெயர் சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவை எவ்வாறு பாதிக்கும் என்றும் வினவினார்.
மேலும், "சீதா அவுர் கீதா என்ற பெயரில் திரையரங்குகள் வெளியிடப்பட்டுள்ளன. ஜானகி என்பது சீதா. ஆனால் அப்போது எந்த பிரச்சனையும் இல்லை. ராம் லகன் என்ற படம் உள்ளது. அதற்கும் யாரும் புகார் கூறவில்லை.
பிறகு, ஜானகி என்று பெயரில் என்ன பிரச்சனை வந்தது?. ஏன் தலைப்பையும் பெயரையும் மாற்ற வேண்டும்" என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து இதற்கு ஜூன் 30 ஆம் தேதிக்குள் விளக்கத்தை தாக்கல் செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
- ஹேமா கமிட்டி அடிப்படையில் 35 வழக்குகள் பதியப்பட்டன.
- வாக்குமூலம் அளிக்க யாரும் முன்வராததால் வழக்குகள் கைவிடப்பட்டதாக அறிவிப்பு.
ஹேமா கமிட்டி கேரள அரசிடம் தாக்கல் செய்த அறிக்கை, மலையாள திரையுலகை அதிர்ச்சியில் உலுக்கியது. சினிமா நடிகைகள், சினிமா துறைகளில் வேலைப்பார்க்கும் பெண்கள் பலர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. அறிக்கை அடிப்படையில் 35 வழக்குகள் பதியப்பட்டன. பாதிக்கப்பட்டவர்கள் வாக்குமூலம் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால் யாரும் முன்வந்து வாக்குமூலம் அளிக்கவில்லை.
இந்த நிலையில் கேரள மாநில உயர்நீதிமன்றத்தில், ஹேமா கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் பதியப்பட்ட 35 வழக்குகளும் கைவிடப்பட்டதாக சிறப்பு புலனாய்வுக்கு குழு தெரிவித்துள்ளது. வாக்குமூலம் அளிக்க யாரும் முன்வராததால் கைவிடப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளது.
- சம்பந்தப்பட்டவர்களின் மீது நடவடிக்கை எடுக்க சிறப்பு புலனாய்வு குழுவை அரசு நியமித்தது.
- ஹேமா கமிட்டியிடம் நடிகைகள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மொத்தம் 34 வழக்குகள் பதியப்பட்டன.
திருவனந்தபுரம்:
மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவு அதிகம் இருப்பதாக வந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, அதுபற்றி விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் விசாரணை கமிட்டியை மாநில அரசு கடந்த 2017-ம் ஆண்டு அமைத்தது.
அந்த கமிட்டியினர் ஏராளமான நடிகைகளிடம் வாக்குமூலம் பெற்று அறிக்கை தயாரித்தனர். ஹேமா கமிட்டி தனது விசாரணை அறிக்கையை 2019-ம் ஆண்டு கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயனிடம் ஒப்படைத்தது. ஆனால் அந்த அறிக்கை பல ஆண்டுகளாக வெளியிடப்படாமல் இருந்தது.
இந்தநிலையில் பல தரப்பினரும் வலியுறுத்தி வந்ததன் பேரில் ஹேமா கமிட்டி அறிக்கையை கடந்த ஆண்டு கேரள அரசு வெளியிட்டது. அந்த அறிக்கையில் மலையாள நடிகைகள், சினிமா படப்பிடிப்பு தளங்கள் உள்ளிட்ட பல இடங்களில் தங்களுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைகள் பற்றி மிகவும் வெளிப்படையாக தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து சம்பந்தப்பட்டவர்களின் மீது நடவடிக்கை எடுக்க சிறப்பு புலனாய்வு குழுவை அரசு நியமித்தது. அந்த குழுவினர் நடிகைகளின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் மலையாள திரையுலகை சேர்ந்த பல முன்னணி இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் மீது வழக்கு பதிந்தனர்.
ஹேமா கமிட்டியிடம் நடிகைகள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மொத்தம் 34 வழக்குகள் பதியப்பட்டன. ஒவ்வொரு வழக்கிற்கான குற்றப்பத்திரிகையை தயார் செய்யும் பணியில் சிறப்பு புலனாய்வு குழுவினர் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் பாலியல் புகார் கொடுத்த நடிகைகளில் பலர், வழக்கை தொடர விரும்பவில்லை.
இதனால் மலையாள திரையுலகினர் மீதான பாலியல் புகார் வழக்கு விசாரணையில் கடும் பின்னடைவு ஏற்பட்டது. இந்தநிலையில் ஹேமா கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் பதியப்பட்ட 34 வழக்குகள் விசாரணையையும் சிறப்பு புலனாய்வு குழு நிறுத்தியுள்ளது.
பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டதாக ஹேமா கமிடடியிடம் வாக்குமூலம் அளித்தவர்கள், விசாரணைக்கு ஒத்துழைக்காததன் காரணமாக விசாரணையை முடிக்க வேண்டியிருந்ததாக கோர்ட்டில் சிறப்பு புலனாய்வு குழு தகவல் தெரிவித்திருக்கிறது.
மலையாள திரையுலகினர் மீதான பாலியல் வழக்குகளில் பலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது தொடர்பான அனைத்து வழக்குகளின் விசாரணையையும் சிறப்பு புலனாய்வு குழு நிறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
- ஒரு நாளைக்கு சுமார் 400 முதல் 500 குண்டு பட்டாசுகளும், 100 ராக்கெட் பட்டாசுகளும் வெடிக்கப்படுகிறது.
- ஒரு நாளைக்கு பட்டாசு வெடிக்க மட்டும் ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் செலவு செய்யப்படுகிறது.
திருவனந்தபுரம்:
திருவனந்தபுரத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம், அரபிக்கடலோரத்தில் அமைந்துள்ளது. பீமா பள்ளி முதல் சங்கு முகம் வரையில் உள்ள மீனவ கிராம பகுதியில் இந்த விமான நிலையம் உள்ளதால், இங்கு மீன்களை இரையாக தேடி வரும் பறவைகளின் தொல்லை அதிகம். இதன் காரணமாக விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்படும் போதும், விமானங்கள் வந்து இறங்கும் போதும் கூட்டம் கூட்டமாக பறந்து திரியும் பறவைகளால் தினமும் அச்சுறுத்தல் இருந்து வருகிறது. கடந்த ஒரு வருடத்தில் பறவைகள் மோதி 10 விமானங்களுக்கு மேல் சேதம் ஏற்பட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன.
பறவைகளின் அச்சுறுத்தலை கட்டுப்படுத்தும் வகையில் விமான நிலையத்தின் நாலாபுறமும் சுமார் 12 இடங்களில், அவ்வப்போது அதி சத்தம் எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க செய்து பறவைகளை விரட்டியடித்து வருகிறார்கள். விமானங்கள், தரை இறங்குவதற்கும், புறப்படுவதற்கும் முன்பாக இந்த பட்டாசுகள் முழங்கும். சில நேரங்களில், வானில் சென்று வெடிக்கும் பட்டாசுகளும் பயன்படுத்தப்படுகிறது. ஒரு நாளைக்கு சுமார் 400 முதல் 500 குண்டு பட்டாசுகளும், 100 ராக்கெட் பட்டாசுகளும் வெடிக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு பட்டாசு வெடிக்க மட்டும் ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் செலவு செய்யப்படுகிறது.
அதாவது ஆண்டுக்கு சராசரியாக ரூ.12 கோடிக்கு பட்டாசுகள் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வெடிக்கப்படுகிறது. இது தவிர பட்டாசு வெடிக்கும் பணிக்கு 30 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களது மாத சம்பளம் ரூ.24 ஆயிரம் ஆகும். சம்பள வகையில் மட்டும் மாதம் ரூ.7 லட்சத்து 20 ஆயிரம் செலவு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
- பொதுநல மனுவை தலைமை நீதிபதி நிதின் ஜம்தார் தலைமையிலான அமர்வு விசாரித்தது.
- அமைச்சரவைக் கூட்டத்தில் அதற்கு எதிராக ஒரு முடிவு எடுக்கப்பட்டது.
சூனியம் மற்றும் மாய மந்திரம் போன்ற மனிதாபிமானமற்ற செயல்களைத் தடை செய்வதற்கான சிறப்புச் சட்டத்தை உருவாக்கும் முன்மொழிவை கேரள இடதுசாரி அரசு கைவிட்டுள்ளது.
இதுபோன்ற செயல்களைத் தடைசெய்யும் சட்டத்தை கொண்டு வரவில்லை என்று கேரள உயர் நீதிமன்றத்தில் மாநில அரசு செவ்வாய்க்கிழமை தெளிவுபடுத்தியது.
சூனியத்தைத் தடைசெய்ய அரசாங்கம் ஒரு சிறப்புச் சட்டத்தை உருவாக்குகிறதா இல்லையா என்பது குறித்து விளக்கம் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை தலைமை நீதிபதி நிதின் ஜம்தார் தலைமையிலான அமர்வு விசாரித்தது. சூனியம் போன்ற செயல்களைத் தடைசெய்ய ஒரு வரைவுச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தனது பொதுநல மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், வரைவு குறித்து அமைச்சரவையில் விரிவான விவாதங்களுக்குப் பிறகு, ஜூலை 5, 2023 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மசோதாவைத் தொடர வேண்டாம் என முடிவு எடுக்கப்பட்டதாக அரசாங்கம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இது அரசாங்கத்தின் கொள்கை முடிவு என்பதால், நீதிமன்றம் ஒரு மனு மூலம் அத்தகைய சட்டத்தை இயற்றுமாறு மாநிலத்திற்கு உத்தரவிட முடியாது என்றும் அரசு மேலும் கூறியது.
இந்த வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்ட போதிலும், இந்த நடைமுறைகளைத் தடுக்க சட்டம் தவிர வேறு ஏதேனும் நடவடிக்கைகளை எடுக்க முன்மொழிகிறதா என்பது குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு அரசுக்கு உத்தரவிடப்பட்டது.
- பிளாஸ்டிக் இல்லாத, சுற்றுச்சூழலுக்கு ஆபத்து இல்லாத புதிய வகை பேனாவை கண்டுபிடிக்க அமலா தீர்மானித்தார்.
- புதிய கண்டுபிடிப்புக்கு அரசு ரூ.2 லட்சம் பரிசு வழங்கியது.
கேரள மாநிலம், தொடுபுழா அருகே உள்ள மூலமட்டம் பகுதியை சேர்ந்தவர் அமலா (வயது 25). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. இறுதி ஆண்டு படித்து வருகிறார்.
தற்போது பயன்பாட்டில் உள்ள பேனாக்கள் அனைத்தும் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டுள்ள நிலையில், பிளாஸ்டிக் இல்லாத, சுற்றுச்சூழலுக்கு ஆபத்து இல்லாத புதிய வகை பேனாவை கண்டுபிடிக்க அமலா தீர்மானித்தார். தொடர்ந்து இது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
அதன் பயனாக பிளாஸ்டிக் இல்லாத புதிய பேனாவை அவர் கண்டுபிடித்தார். இந்த பேனாவுக்கு அரசின் தகுதி சான்றிதழ் நேற்று கிடைத்தது. மேலும் இந்த புதிய கண்டுபிடிப்புக்கு அரசு ரூ.2 லட்சம் பரிசு வழங்கியது. ரூ.15, ரூ.20 ஆகிய விலைகளில் 2 வகையான பேனாக்களை அமலா உருவாக்கியுள்ளார். விரைவில் இந்த பேனாக்கள் விற்பனைக்கு வர உள்ளது.
- பிரிட்டிஷ் கடற்படையின் மேம்பட்ட போர் விமானங்களில் முதன்மையானது F35B ஆகும்.
- போர் விமானம் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கேரளாவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட பிரிட்டிஷ் F-35B போர் விமானம், கடந்த ஆறு நாட்களாக இந்தியாவில் உள்ளது.
அதிநவீன தொழில்நுட்பத்திற்கு பெயர் பெற்ற மற்றும் மிகவும் விலையுயர்ந்த ஒன்றாகக் கருதப்படும் இந்த ஜெட் விமானம், ஹேங்கரில் (விமான நிறுத்துமிடத்தில்) நிறுத்தப்படவில்லை என்று நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விமானம் தற்போது வெளியில் இருப்பதாக தேசிய ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.
பிரிட்டிஷ் கடற்படை விமானத்தை தங்கள் ஹேங்கரில் வைத்திருக்க ஏர் இந்தியா முன்வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், பிரிட்டிஷ் கடற்படை இந்த வாய்ப்பை பணிவுடன் நிராகரித்துள்ளது. பிரிட்டிஷ் கடற்படை அதன் தனித்துவமான அதிநவீன தொழில்நுட்பம் யாருடைய கைகளிலும் சிக்குவதை விரும்பாததால் இந்த முடிவை எடுத்ததாகத் தெரிகிறது.
இருப்பினும், இறுதி ஆய்வுகளின் போது விமானத்தை ஹேங்கருக்கு நகர்த்தவும் அவர்கள் ஒப்புக்கொள்ளலாம் என்று நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரிட்டிஷ் கடற்படையின் மேம்பட்ட போர் விமானங்களில் முதன்மையானது F35B ஆகும். அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட இந்த விமானம் உலகிலேயே மிகவும் விலை உயர்ந்தது என்று கூறப்படுகிறது. வேறு எந்த போர் விமானத்திலும் காணப்படாத மேம்பட்ட தொழில்நுட்ப அமைப்புகளை இது கொண்டுள்ளது.
இந்த விமானம் பிரிட்டனின் HMS பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் ஸ்ட்ரைக் குழுவின் ஒரு பகுதியாக இந்தோ-பசிபிக் பிராந்தியம் வந்தடைந்தது. F35B சமீபத்தில் இந்திய கடற்படையுடன் கடற்படை பயிற்சிகளிலும் பங்கேற்றுள்ளது.
ஜூன் 14 அன்று, போர் விமானம் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் குறைந்த எரிபொருள் இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டதால், விமானி கேரளாவில் தரையிறங்க வேண்டியிருந்தது. இந்திய விமானப்படை மறுநாள் இந்த சம்பவத்தை உறுதிசெய்து, தேவையான உதவிகளை வழங்குவதாக அறிவித்தது. அப்போதிருந்து, அது வெளியில் நிறுத்தப்பட்டுள்ளது.
ஹைட்ராலிக் அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறை சரிசெய்ய பிரிட்டிஷ் நிபுணர்களும் விமானியும் கடுமையாக முயன்று வருகின்றனர். மறுபுறம், விமானத்திற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரெயில்களை ரெயில்வே துறை விரைவிலேயே இயக்க உள்ளது.
- திருவனந்தபுரம்-காசர்கோடு, மங்களூரு சென்ட்ரல்-திருவனந்தபுரம் வழித்தடத்தில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
திருவனந்தபுரம்:
ரெயில் பயணிகளின் வசதிக்காக ரெயில்வே துறை பல்வேறு வசதிகளை செய்து வருகிறது. மேலும் பலவிதமான புதிய ரெயில்களையும் அறிமுகப்படுத்துகிறது. அதில் ஒன்று தான் வந்தே பாரத் ரெயில்.
முழுவதும் குளிர்சாதன வசதியுடன், பயணிகள் உட்கார்ந்து பயணிக்கும் வகையிலான இந்த ரெயில்கள் பல மாநிலங்களில் முக்கிய நகரங்களுக்கு இடையே இயக்கப்படுகிறது. இந்த ரெயிலில் விரைவான பயணம், உணவு உள்ளிட்ட பல வசதிகள் பயணிகளுக்கு கிடைக்கின்றன.
இதனால் வந்தே பாரத் ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரெயில்களை ரெயில்வே துறை விரைவிலேயே இயக்க உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் வந்தே பாரத் ரெயில்களில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
அனைத்து மாநிலங்களிலுமே உணவு தொடர்பாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டபடி இருந்து வருகிறது. கேரள மாநிலத்திலும் வந்தே பாரத் ரெயிலில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக புகார் கூறப்படுகிறது. கேரள மாநிலத்தை பொறுத்தவரை திருவனந்தபுரம்-காசர்கோடு, மங்களூரு சென்ட்ரல்-திருவனந்தபுரம் வழித்தடத்தில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
அந்த ரெயில்களில் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவு தரமற்ற முறையில் இருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகின்றன. மேலும் சமீபத்தில் அது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவியது. ஆனால் அதற்கு ரெயில்வே நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தரமற்ற உணவு வழங்கியதாக தங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை எனவும் விளக்கம் அளித்திருந்தது. இந்தநிலையில் கேரளாவில் இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில்களில் தரமற்ற உணவு வழங்கியதாக ஏராளமான புகார்கள் கொடுத்திருப்பதும், உணவு ஒப்பந்த நிறுவனம் லட்சக்கணக்கில் அபராதம் செலுத்தியிருப்பதும் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக தெரியவந்துள்ளது.
வந்தே பாரத் ரெயில்களில் தரமற்ற உணவு வழங்கப்பட்டதாக கடந்த 9 மாதத்தில் மொத்தம் 319 புகார்கள் வந்துள்ளன. மேலும் உணவு சப்ளை செய்துவரும் ஒப்பந்த நிறுவனத்துக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை மட்டும் ரூ14.87லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.
அந்த தொகையை ஒப்பந்த நிறுவனம் செலுத்தியிருப்பது தகவல் அரியும் உரிமை சட்டத்தில் தெரியவந்துள்ளது. வந்தே பாரத் ரெயிலில் தரமற்ற உணவு வழங்கப்பட்டதாக கொடுக்கப்பட்டிருக்கும் புகார்கள் தொடர்பாக வெளியாகியிருக்கும் இந்த தகவல் கேரள மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






