என் மலர்
டெல்லி
- விலையை கட்டுப்பாட்டுக்குள் வைக்க வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு கடந்த டிசம்பர் மாதம் தடை விதித்தது.
- மார்ச் 31-ந்தேதி வரை அமலில் உள்ள வெங்காய ஏற்றுமதி தடை, அடுத்த உத்தரவு வரும் வரை மேலும் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.
புதுடெல்லி:
உள்நாட்டில் வெங்காயம் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்யவும், விலையை கட்டுப்பாட்டுக்குள் வைக்கவும் வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு கடந்த டிசம்பர் மாதம் தடை விதித்தது. இந்த தடை வருகிற 31-ந்தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த தடையை மேலும் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
இது தொடர்பாக வெளிநாட்டு வர்த்தக இயக்குனர் ஜெனரல் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மார்ச் 31-ந்தேதி வரை அமலில் உள்ள வெங்காய ஏற்றுமதி தடை, அடுத்த உத்தரவு வரும் வரை மேலும் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது' என குறிப்பிடப்பட்டு உள்ளது. அதேநேரம் நட்பு நாடுகளுக்கான வெங்காய ஏற்றுமதி நிபந்தனைகளின் அடிப்படையில் அரசின் ஒப்புதலுடன் அனுமதிக்கப்படும் என கூறப்பட்டு உள்ளது.
- கரூர் தொகுதியில் ஜோதிமணிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
- கிருஷ்ணகிரி தொகுதியில் கே. கோபிநாத் போட்டியிடுகிறார்.
காங்கிரஸ் கட்சி மக்களவை தேர்தலுக்கான தேசிய அளவிலான 4-வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 46 பேர் இடம் பெற்றுள்ளது.
தமிழகத்தில் 9 இடங்களில் ஏழு இடங்களுக்கான வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
1. திருவள்ளூர் (தனி)- சசிகாந்த் செந்தில்
2. கிருஷ்ணகிரி- கே. கோபிநாத்
3. கரூர்- ஜோதிமணி
4. கடலூர்- எம்.கே. விஷ்னு பிரசாத்
5. சிவகங்கை- கார்த்தி சிதம்பரம்

6. விருதுநகர்- மாணிக்கம் தாகூர்
7. கன்னியாகுமரி- விஜய் வசந்த்.
திருநெல்வேலி மற்றும் மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படவில்லை. அதேபோல் புதுச்சேரிக்கும் இன்னும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படவில்லை.
கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி, விஜய் வசந்த், மாணிக்கம் தாகூர் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
- மத்திய அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்பு.
- நாளை 120 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்ப்பு.
பிரதமர் மோடி தலைமையில் பாஜகவின் 3வது மத்திய தேர்தல் குழு கூட்டம் தொடங்கியது.
இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
உத்தர பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் எஞ்சியுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இறுதி செய்வது குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.
நாளை 120 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- அமலாக்கத்துறை அதிகாரிகளால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.
- நீதிமன்றம் காவலில் எடுத்து விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்துள்ளது.
டெல்லி மாநில முதல்வராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று முன்தினம் (மார்ச் 21-ந்தேதி) அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரது வீட்டிற்கு சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்திய நிலையில், கைது செய்தனர்.
நேற்று டெல்லி மாநில ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ஏழு நாள் அமலாக்கத்துறை காவலுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. வருகிற 28-ந்தேதி வரை அமலாக்கத்துறை அவரிடம் விசாரணை நடத்தி, அன்றைய தினம் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.
இந்த நிலையில் இன்று மாலை டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் "அமலாக்கத்துறை கைது செய்தது. ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அமலாக்கத்துறை காவலுக்கு அனுமதி அளித்தது சட்டவிரோதம்.
விசாரணையில் இருந்து விடுவிக்க அவருக்கு தகுதி உண்டு" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த மனுவை அவசரமாக விசாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை ஞாயிறு என்பதால் அதற்கு முன்னதாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் நீதிமன்றம் கெஜ்ரிவாலின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது.
கைது செய்யப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்துவிட்டார். மேலும், ஜெயிலில் இருந்து ஆட்சி நடத்துவேன். விரைவில் விடுதலையாகி டெல்லி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் எனத் தெரிவித்துள்ளார்.
- இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைதான பெங்களூருவைச் சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர்.
- மேலும் 200 கோடி ரூபாய் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு திஹார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
டெல்லி மாநில முதல்வராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை அமலாக்கத்துறை ஏழு நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
அமலாக்கத்துறை காவல் முடிந்த பிறகு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கப்படவில்லை என்றால், டெல்லி திஹார் ஜெயலில் அடைக்கப்பட வாய்ப்புள்ளது.
இந்த நிலையில், திஹார் ஜெயிலுக்கு வரவேற்கிறேன் என சுகேஷ் சந்திரசேகர் கெஜ்ரிவாலுக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவால் குறித்து சுகேஷ் சந்திரசேகர் கூறுகையில் "உண்மை வென்றுள்ளது. திஹார் ஜெயிலுக்கு நான் அவரை வரவேற்கிறேன். கெஜ்ரிவால் பற்றிய செய்திகளை வெளிப்படுத்துவேன். நான் அரசு தரப்பு சாட்சியாகுவேன் (approver). அவரை விசாரணைக்கு கொண்டு வருவதை உறுதி செய்வேன். அனைத்து ஆதாரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன" இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
அதேபோல் டெல்லி மதுபான கொள்கை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்திரசேகராவின் மகள் கே. கவிதாவுக்கும் ஒரு மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில் "போலி வழக்குள் என்ற நாடகம் மற்றும் குற்றச்சாட்டு பொய்த்துவிட்டன. உண்மை வென்றுள்ளது. உங்களுடைய கர்மா மீண்டும் உங்களுக்கு வந்துள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைதான பெங்களூருவைச் சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், 200 கோடி ரூபாய் பணமோசடி வழக்கில் திஹார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது.
- கெஜ்ரிவால் நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணைக்கு தகுதியுடையவர்.
- அவர் தடையின்றி அனைத்து சட்ட வழிகளையும் பயன்படுத்த முடியும் என ஜெர்மனி அதிகாரி கருத்து.
டெல்லி மாநில முதல்வராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. இது தொடர்பாக 9 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகவில்லை.
மேலும், டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தன்மீது கைது போன்ற கடினமான நடவடிக்கைகள் மேற்கொள்ளக் கூடாது என உத்தரவிடக்கோரி மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதனைத் தொடர்ந்து கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை, நேற்று முன்தினம் இரவு கைது செய்தது. நேற்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.
அப்போது ஏழு நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த, அமலாக்கத்துறைக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து ஜெர்மன் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் "இந்தியா ஜனநாயக நாடு என்பதை நாங்கள் கருத்தில் கொண்டுள்ளோம்.
நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகள் தொடர்பான நிலைகள் இந்த வழக்கில் பயன்படுத்தப்படும் என்று நாங்கள் கருதுகிறோம், எதிர்பார்க்கிறோம். குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் மற்ற நபர்களை போலவே, கெஜ்ரிவால் நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணைக்கு தகுதியுடையவர். இதில் அவர் தடையின்றி அனைத்து சட்ட வழிகளையும் பயன்படுத்த முடியும்." எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் டெல்லியில் உள்ள ஜெர்மனி தூதரகத்தின் உயர் அதிகாரியை அழைத்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது எதிர்ப்பை கடுமையாக தெரிவித்துள்ளது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் "இதுபோன்ற கருத்துக்கள் எங்களது நீதித்துறை செயல்பாட்டில் தலையிடுவதாகவும், எங்களது நீதித்துறையின் சுதந்திரத்தை குறைத்து மதிப்பிட உட்படுத்துவதாகவும் பார்க்கிறோம். சட்டம் அதன் வழியில் அதன் நடவடிக்கையை மேற்கொள்ளும். இந்த விசயத்தில் ஒருதலைபட்சமான அனுமானம் மிகவும் தேவையற்றதாகும்" எனத் தெரிவித்துள்ளது.
- என் வாழ்க்கையின் ஒவ்வொரு அங்கமும் இந்த நாட்டு மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒன்று.
- அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருப்பதால் மாதம் ஆயிரம் ரூபாய் கிடைக்குமா, கிடைக்காதா என பெண்கள் யோசிக்கலாம்.
புதுடெல்லி:
டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை 28-ந்தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க நேற்று டெல்லி கோர்ட்டு அனுமதி அளித்தது.
இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதா கெஜ்ரிவால் காணொலி வாயிலாக உரையாற்றினார்.
அமலாக்கத்துறை காவலில் இருக்கும் தனது கணவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், டெல்லி மக்களுக்கும் சொல்ல விரும்பிய செய்தியை தற்போது தான் கூறுவதாக அவரது செய்தியை வாசித்தார். அதில்,
* நான் உள்ளே இருந்தாலும் சிறையில் இருந்தாலும் எனது வாழ்க்கை நாட்டு மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒன்று. என் வாழ்க்கையின் ஒவ்வொரு அங்கமும் இந்த நாட்டு மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒன்று.
* நான் நிறைய போராட்டங்களை சந்தித்து விட்டேன். இந்த கைது என்பது எனக்கு எந்தவிதமான ஆச்சர்யத்தையும் கொடுக்கவில்லை.
* நான் உள்ளே இருந்தாலும் வெளியே இருந்தாலும் மக்களை பற்றிதான் சிந்தித்து கொண்டு இருப்பேன்.
* இந்தியாவிற்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கக்கூடிய சில சக்திகள் இந்தியாவை பலவீனமாக்கி வருகின்றன. அந்த சக்திகளை நாம் அடையாளம் கண்டு அவர்களை வீழ்த்த வேண்டும்.
* அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருப்பதால் மாதம் ஆயிரம் ரூபாய் கிடைக்குமா, கிடைக்காதா என பெண்கள் யோசிக்கலாம்.
* சிறையில் இருந்து விரைவில் வெளியே வந்து வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன்.
* உங்களின் சகோதரனையும் மகனையும் நம்புங்கள் என வேண்டுகோள் விடுக்கிறேன்.
* நான் சிறையில் இருப்பதால் எந்த பணிகளும் தடைபட்டு விடக்கூடாது.
* பாஜகவினரை யாரும் வெறுக்க வேண்டாம். அவர்களும் நம் சகோதர - சகோதரிகள்தான் என்று தெரிவித்துள்ளார்.
#WATCH | Delhi CM Arvind Kejriwal's wife Sunita Kejriwal issues a video statement and reads out the CM's message from jail. She says, "...There are several forces within and outside India that are weakening the country. We have to be alert, identify these forces and defeat… pic.twitter.com/jqlHpguugP
— ANI (@ANI) March 23, 2024
- 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது.
- கட்டண உயர்வு ஏப்ரல் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.
புதுடெல்லி:
தமிழகத்தில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது.
மணகெதி, கல்லக்குடி, வல்லம், இனம்கரியாந்தல், தென்னமாதேவி ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு ஏப்ரல் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.
ஒரு முறை பயணம் செய்வது, ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணம் ரூ.5 முதல் 20 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர கட்டணம் 100 முதல் 400 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
- முழு அரங்கமும் தீப்பற்றி எரிந்து சேதம் அடைந்தது.
- இந்த கடினமான நேரத்தில் ரஷிய கூட்டமைப்பின் அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் இந்தியா உறுதுணை நிற்கிறது என கூறியுள்ளார்.
ரஷிய தலைநகர் மாஸ்கோவில் உள்ள கிரோகஸ் சிட்டி அரங்கில் நடைபெற்ற இசைநிகழ்ச்சியில் மர்மநபர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 60 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இச்சம்பவத்தால் முழு அரங்கமும் தீப்பற்றி எரிந்து சேதம் அடைந்தது.
தாக்குதல் நடத்தியவர்கள் யார்? பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களா? என போலீஸ், புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மாஸ்கோவில் நடந்த கொடூரமான தீவிரவாத தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம் என பிரதமர் மோடி எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த கடினமான நேரத்தில் ரஷிய கூட்டமைப்பின் அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் இந்தியா உறுதுணை நிற்கிறது என கூறியுள்ளார்.
We strongly condemn the heinous terrorist attack in Moscow. Our thoughts and prayers are with the families of the victims. India stands in solidarity with the government and the people of the Russian Federation in this hour of grief.
— Narendra Modi (@narendramodi) March 23, 2024
- திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறது.
- ஏணி சின்னம் கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் ஐ.யூ.எம்.எல். கட்சி சார்பில் விண்ணப்பம் அளிக்கப்பட்டு இருந்தது.
புதுடெல்லி:
தமிழகத்தில் முதல் கட்டமாக ஏப்ரல் 19-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது.
பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பிரதான கட்சியான தி.மு.க. முழு வீச்சில் தயாராகி உள்ளது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் தி.மு.க. 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
கூட்டணி கட்சிகளான காங்கிரஸ்-9, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் தலா 2 இடங்களிலும், ம.தி.மு.க., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்தில் போட்டியிடுகின்றன. இதில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளது.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறது.
ஏணி சின்னம் கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் ஐ.யூ.எம்.எல். கட்சி சார்பில் விண்ணப்பம் அளிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் ஐ.யூ.எம்.எல். கட்சியின் கோரிக்கையை ஏற்று ஏணி சின்னத்தை ஒதுக்கி இந்திய தேர்தல் ஆணையம் இன்று உத்தரவிட்டுள்ளது.
ஐ.யூ.எம்.எல். கட்சியின் சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் நவாஸ் கனி களம் காண்கிறார்.
- ஏழு நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அனுமதி.
- பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தால் ஜாமின் கிடைப்பது கடினம்.
அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது பண மோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் இன்று டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரை ஏழு நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என ஆம் ஆத்மி கட்சி மந்திரி ஆதிஷி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆதிஷி கூறுகையில் "இந்த நீதிமன்ற உத்தரவில் எங்களுக்கு மரியாதையுடன் உடன்பாடு இல்லை என்பதை பணிவுடன் சமர்ப்பிக்க விரும்புகிறோம். பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், நீதிமன்றத்தில் அமலாக்கத்துறைக்கு காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி வழங்க வாய்ப்பு இல்லை.
அமலாக்கத்துறை எதிர்க்கட்சி தலைவர்கள் மீது பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்கிறார்கள் என்றால், இதுபோன்ற வழக்குகளில் பெரும்பாலும் ஜாமின் கிடைப்பது கடினமாகும்.
மக்களவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை கைது செய்தது நாட்டின் ஜனநாயக கொலை" எனத் தெரிவித்துள்ளார்.
- கடந்த 2019 மக்களவை தேர்தலின்போது பா.ஜனதாவில் வெற்றி பெற முடியவில்லை.
- நாகாலாந்தில் இரண்டு தொகுதிகளிலும் என்பிபி கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர், நாகாலாந்து, மேகாலயா ஆகிய மாநிலங்களில் போட்டியிடுவது இல்லை என பா.ஜனதா முடிவு செய்துள்ளது. அந்தந்த மாநிலங்களில் உள்ள கட்சிகளுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது.
மேகாலயாவில் இரண்டு மக்களவை தொகுதிகள் உள்ளன. இந்த இரு இடங்களிலும் தேசிய மக்கள் கட்சிக்கு ஆதரவு அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
மணிப்பூரில் உள்ள இரண்டு தொகுதிகளில் ஒன்றில் நாகா மக்கள் முன்னணி கட்சிக்கு ஆதரவு அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. நாகாலாந்தில் தேசியவாத குடியரசு முற்போக்கு கட்சிக்கு ஆதரவு அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு மாநிலங்களுக்கான பொறுப்பாளர் சம்பித் பத்ரா எக்ஸ் தளத்தில் இந்த தகவலை தெரிவித்துள்ளார். தேசிய தலைவர் ஜே.பி. நட்டா அறிவுறுத்தலின்படி, இந்த தகவலை பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
2019-ம் ஆண்டு மேகாலயாவில் உள்ள இரண்டு இடங்களிலும், மணிப்பூரில் ஒரு இடத்திலும் பா.ஜனதா போட்டியிட்டது. ஆனால் மூன்று இடங்களிலும் தோல்வியை சந்தித்தது.
மணிப்பூரில் இரண்டு பிரிவினருக்கு இடையிலான மோதலால் ஏற்பட்ட அரசியல் விளைவு, பா.ஜனதாவை இந்த முடிவு எடுக்க வைத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும் மூன்று மாநிலங்களிலும் ஆதரவு அளிக்கும் இடங்களில் கிறிஸ்தவர்கள் வாக்குகள் அதிகம் என்பதால் இந்த முடிவை எடுத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இந்த கட்சிகள் தேசிய அளவில் பா.ஜனதாவுக்கு அடிக்கடி ஆதரவு தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.






