என் மலர்
டெல்லி
- வாக்குப்பதிவு எந்திர பேட்டரியில் உள்ள முரண்பாடுகளை சுட்டிக் காட்டியது.
- புகார் குறித்து அனைத்துக்கும் விரிவான பதில் அளிப்பதாக தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அரியானா சட்டசபை தேர்தலில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவியது. மொத்தம் உள்ள 90 இடங்களில் அந்த கட்சிக்கு 37 தொகுதிகள் கிடைத்தன.
பா.ஜ.க. 48 இடத்தில் வெற்றி பெற்று தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை பிடித்தது.
அரியானா தேர்தல் வாக்குப்பதிவு எந்திரம் பேட்டரியில் உள்ள முரண்பாடுகள் குறித்து காங்கிரஸ் கட்சி ஏற்கனவே குற்றம் சாட்டி இருந்தது.
இந்த நிலையில் இந்த முரண்பாடுகள் குறித்து காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் எழுத்துப் பூர்வமாக புகார் அளித்துள்ளது. அரியானா தேர்தலில் போட்டியிட்ட 20 தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்கள் இந்த புகார் மனுவை அளித்துள்ளனர்.
சில இ.வி.எம். எந்திரங்களில் 99 சதவீத பேட்டரி சார்ஜ் இருந்தது. சில வாக்குப்பதிவு எந்திரத்தில் 60 முதல் 70 சதவீத பேட்டரி சார்ஜ் இருந்தது. இது எதிர்பாராத ஒன்று என்று காங்கிரஸ் தனது மனுவில் குற்றம் சாட்டியது. வாக்குப்பதிவு எந்திர பேட்டரியில் உள்ள முரண்பாடுகளை சுட்டிக் காட்டியது.
இந்த புகார் குறித்து அனைத்துக்கும் விரிவான பதில் அளிப்பதாக தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- வடகிழக்குப் பருவமழையின் போது தமிழ்நாடு, கேரள உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- வரும் 15ம் தேதி முதல் 18ம் தேதி வரை 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை.
தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் தற்போது வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
வளிமண்டல சுழற்சி தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் எனவும் இதனால், வங்கக்கடலில் வரும் 14-ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், வரும் 15ம் தேதி முதல் 18ம் தேதி வரை 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரபிக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது.
வடகிழக்குப் பருவமழையின் போது தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட தென் தீபகற்பப் பகுதிகளில் இயல்பை விட அதிகமாக மழை பெய்யக்கூடும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
- கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே சரக்கு ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.
- 19 பேர் படுகாயம் அடைந்த நிலையில், மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
மைசூரிலிருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (12578) வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் பொன்னேரியை அடுத்த கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே சரக்கு ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.
19 பேர் படுகாயம் அடைந்த நிலையில், மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த விபத்து குறித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மத்திய அரசை விளாசியுள்ளார்.
இதுதொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ஒடிஷா மாநிலம் பாலாஷோரில் நடந்த ரெயில் விபத்து போலவே கவரைப்பேட்டையில் விபத்து நடந்துள்ளது. ஏராளமான ரயில் விபத்துகள் நடந்து பல உயிர்கள் பறிபோனபோதும் மத்திய அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லை. மத்திய அரசு விழித்துக்கொள்ள இன்னும் எத்தனை குடும்பங்கள் அழிய வேண்டும்?"
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ஏர் இந்தியா விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய விமானிக்கு பாராட்டு தெரிவித்தனர்.
- விமானத்தில் ஹைட்ராலிக் தோல்வி ஏற்பட்டதற்கான காரணத்தை ஆய்வுசெய்ய உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:
திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, விமானம் திருச்சிக்கே திரும்பியது.
141 பயணிகளுடன் திருச்சியில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்க முடியாமல் கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கும் அதிகமாக வானத்தில் வட்டமடித்த நிலையில், விமானம் பத்திரமாக தரையிறங்கியது.
ஏர் இந்தியா விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய விமானிக்கு முதல்வர் ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி உள்பட பலர் பாராட்டு தெரிவித்தனர்.
இந்நிலையில், விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட விவகாரம் குறித்து ஆய்வு செய்ய சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகத்திற்கு மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, விமானத்தில் ஹைட்ராலிக் தோல்வி ஏற்பட்டதற்கான காரணத்தை ஆய்வு செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் பயணிகளுக்கு உரிய மாற்று ஏற்பாடு செய்யவும் மத்திய விமானப் போக்குவரத்துத்துறை மந்திரி ராம் மோகன் நாயுடு உத்தரவிட்டார்.
- நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
- ரோகித் சர்மா கேப்டனாகவும், பும்ரா துணை கேப்டனாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி:
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இந்நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. ரோகித் சர்மா கேப்டனாகவும், பும்ரா துணை கேப்டனாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய அணியின் விவரம் வருமாறு:
ரோகித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரீத் பும்ரா (துணை கேப்டன்), ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, கே எல் ராகுல், சர்பராஸ் கான், ரிஷப் பண்ட், துருவ் ஜூரல், அஸ்வின் ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், சிராஜ், ஆகாஷ் தீப்
ரிசர்வ் வீரர்கள்: ஹர்ஷித் ரானா, நிதிஷ் ரெட்டி, மயங்க் யாதவ், பிரசித் கிருஷ்ணா
முதல் டெஸ்ட் போட்டி வரும் 16ம் தேதி பெங்களுரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது.
- டெல்லியைச் சேர்ந்த ப்ரீத் இந்தர் சிங் [30 வயது ] என்ற இளைஞருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.
- தனது விந்தணு மாதிரியை உறையவைத்து அதற்கான நிறுவனத்தில் சேமித்துள்ளார்
இறந்த மகனின் விந்தணுவை சொத்தாகக் கருத முடியும் என்றும் அதை பெற்றோர் வைத்துக்கொள்ள உரிமை உள்ளது என்று டெல்லி உயர்நீதிமன்றம் புதிய தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. டெல்லியைச் சேர்ந்த ப்ரீத் இந்தர் சிங் [30 வயது] என்ற இளைஞருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.
கேன்சர் நோய்க்கான கீமோதெரபி சிகிச்சை எடுத்துக்கொள்வதற்கு முன்னர் தனது விந்தணு மாதிரியை உறையவைத்து அதற்கான நிறுவனத்தில் சேமித்துள்ளார் அவர். தற்போது சிகிச்சை பலனளிக்காமல் ப்ரீத் இந்தர் சிங் உயிரிழந்த நிலையில் அவரின் உறையவைக்கப்பட்ட விந்தணு மாதிரியை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அவரின் பெற்றோர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிரதீபா சிங், நபரின் விந்தணுவை சொத்தாக பாவிக்க முடியும் என்பதாலும், இந்துமத சொத்துரிமை சட்டத்தின்படி பெற்றோருக்கு மகனின் சொத்தில் முதல் உரிமை உள்ளது என்பதாலும் இறந்த மகனின் சேமிக்கப்பட்ட விந்தணுவை பெற்றோர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளார். மகனின் விந்தணுவை வைத்து வாடகை தாய் மூலம் குழந்தை பெற பெற்றோர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
- தனது இரங்கல் செய்தியின் இறுதியில் ஓகே, டாடா பை பை என பதிவிட்டிருந்தார்.
- இவரது பதிவைக் கண்ட நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
புதுடெல்லி:
பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடா வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் காலமானார்.
தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு பேடிஎம் சிஇஓ விஜய் சேகர் சர்மா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், அடுத்த தலைமுறையின் தொழில் முனைவோர் இந்தியாவின் மிகவும் எளிமையான தொழிலதிபருடன் தொடர்பு கொள்வதைத் தவறவிடுவார்கள். வணக்கங்கள், ஐயா. ஓகே, டாடா பை பை என பதிவிட்டிருந்தார்.
இவரது பதிவைக் கண்ட நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். செய்திகளில் இருப்பதற்கான வாய்ப்பை ஒருபோதும் தவறவிடாதீர்கள் என ஒருவரும், இது பொருத்தமற்றது என மற்றொருவரும் கண்டனம் தெரிவித்தனர். இதேபோல் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து, பேடிஎம் சிஇஓ விஜய் சேகர் சர்மா சர்ச்சையை ஏற்படுத்திய பதிவை நீக்கினார்.
- டெல்லியில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரூ.7,500 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்
- கொக்கைன் கடத்தி வந்த வந்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபர் லண்டனுக்கு தப்பிச் சென்றுவிட்டார்.
டெல்லி ரமேஷ் நகர் பகுதியில் அமைந்துள்ள கிடங்கில் இருந்து ரூ.2000 கோடி மதிப்புள்ள சுமார் 200 கிலோகிராம் கொக்கைன் போதைப்பொருட்களை டெல்லி சிறப்புப் பிரிவு போலீஸ் இன்று பறிமுதல் செய்தனர்.
கொக்கைன் கடத்த பயன்படுத்தப்பட்ட காரில் ஜிபிஎஸ் பொருத்தி கண்காணித்து போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் சிற்றுண்டி பாக்கெட்டுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர் .
டெல்லிக்கு கொக்கைன் கடத்தி வந்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபர் லண்டனுக்கு தப்பிச் சென்றுவிட்டார் என்று சொல்லப்படுகிறது.
அக்டோபர் 2 ஆம் தேதி தெற்கு டெல்லியில் உள்ள மஹிபால்பூரில் உள்ள ஒரு குடோனில் இருந்து 5,620 கோடி ரூபாய் மதிப்பிலான 560 கிலோ கோகைன் மற்றும் 40 கிலோ ஹைட்ரோபோனிக் மரிஜுவானா பறிமுதல் செய்யப்பட்டது.
துஷார் கோயல் (40), ஹிமான்சு குமார் (27), அவுரங்கசீப் சித்திக் (23), பரத் குமார் ஜெயின் (48) ஆகிய நான்கு பேர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டனர், மேலும் 3 பேர் அமிர்தசரஸ், சென்னை மற்றும் உத்தரபிரதேச மாநிலம் ஹாபூரில் இருந்து கைது செய்யப்பட்டனர்.
5,620 கோடி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துபாய் தொழிலதிபர் வீரேந்தர் பசோயாவுக்கு எதிராக டெல்லி காவல்துறை லுக்அவுட் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.
டெல்லியில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரூ.7,500 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது
- பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதால் மத்திய அரசு இந்த நடவடிக்கை.
- பயங்கரவாத அமைப்புகளில் சேர இளைஞர்களை ஊக்கப்படுத்தியது.
ஹிஸ்ப் உத் தஹிரிர் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டின் இறையாண்மைக்கு எதிராக பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதால் மத்திய அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
சட்ட விரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் இதனை பயங்கரவாத அமைப்பாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. சமூக வலைதளங்கள் மூலமாக பயங்கரவாதத்தை பரப்பியது தெரியவந்ததால் ஹிஸ்ப் உத் தஹிரிர் அமைப்புக்கு மத்திய உள்துறை தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "ஹிஸ்ப் உத் தஹிரிர் அமைப்பு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்படுகிறது. இந்த அமைப்பு பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளது."
"பயங்கரவாத அமைப்புகளில் சேர இளைஞர்களை ஊக்கப்படுத்துவது மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டுவதில் இந்த அமைப்பு ஈடுபட்டது. இந்த அமைப்பு தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. பயங்கரவாத சக்திகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கி நாட்டை பாதுகாப்பதில் மோடி அரசு உறுதியாக உள்ளது," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே பல்வேறு உலக நாடுகள் ஹிஸ்ப் உத் தஹிரிர் அமைப்பை தடை செய்திருந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் இந்த அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக ஹிஸ்ப் உத் தஹிரிர் அமைப்பிற்கு ஆள் சேர்த்ததாக தமிழகத்தை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தை சேர்ந்த 10 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்திருந்த நிலையில் ஹிஸ்ப் உத் தஹிரிர் அமைப்பிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- அதிகபட்சமாக உத்தர பிரதேசத்திற்கு 31,962 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.
- கேரளாவிற்கு 3,430 கோடி ரூபாய், ஆந்திராவிற்கு 7,211 கோடி ரூபாய், தெலுங்கானாவிற்கு 3,745 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.
தமிழ்நாட்டிற்கான வரி பகிர்வு 7,268 கோடி ரூபாயை நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு நிதி பகிர்வாக ரூ. 1,78,173 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது.
அதிகபட்சமாக உத்தர பிரதேசத்திற்கு 31,962 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. பீகாருக்கு 17,921 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.
மத்திய பிரதேசத்திற்கு 13,987 கோடி ரூபாய், மேற்கு வங்கத்திற்கு 13,404 கோடி ரூபாய், மகாராஷ்டிராவிற்கு 11,255 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.
கேரளாவிற்கு 3,430 கோடி ரூபாய், ஆந்திராவிற்கு 7,211 கோடி ரூபாய், தெலுங்கானாவிற்கு 3,745 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.
அக்டோபர் மாதம் வழங்கக்கூடிய தவணையுடன் கூடுதல் தவணையாக 89,086.50 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
- ரத்தன் டாடாவிற்கு எற்கனவே பத்ம விபூஷன், பாரத பூஷன் வழங்கப்பட்டுள்ளது.
- பாரதத்திற்குரிய ரத்தன்-ஐ (ரத்தன் டாடா) விட பாரத ரத்னா விருதுக்கு தகுதியானவர்கள் யாரும் இருக்கமுடியாது.- சுஹேல் சேத்
டாடா குழும தலைவர் ரத்தன் டாடா நேற்றிரவு காலமானார். அவரது உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார். இந்த நிலையில் தொழில் அதிபரும் கட்டுரையாளருமான சுஹேல் சேத், ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
"இதை நான் சொல்லக்கூடாது, இருந்தாலும் மதிப்பிற்குரிய பிரதமர் மோடி, பாரதத்திற்குரிய ரத்தன்-ஐ (ரத்தன் டாடா) விட பாரத ரத்னா விருதுக்கு தகுதியானவர்கள் யாரும் இருக்கமுடியாது. தனிப்பட்ட உதாரணத்தால் ஊக்கமளித்து, அவர் தனது பொதுசேவை மூலம் மில்லியன் கணக்கானோருக்கு நம்பிக்கையை அளித்தார். மேலும் ஒரு உண்மையான இந்தியன்... அது விருதை அழகாக்க மட்டுமே செய்யும்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், "ரத்தன் டாடாவின் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், அவருக்கு சொந்தமாக குடும்பம் இல்லை. இன்னும் ஒவ்வொரு இந்தியனும் அவனது குடும்ப உறுப்பினராக இருந்தான். ஒரு மனிதனுக்காக 1.4 பில்லியன் மக்கள் துக்கம் அனுசரிப்பது அரிது.
அதுதான் ரத்தன் டாடா. தொடர்ந்து இருக்கும்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருது பாரத ரத்னா ஆகும். ரத்தன் டாடா பத்ம விபூஷன், பத்ம பூஷன் ஆகிய விருதுகளை பெற்றுள்ளார்.
- 2024 பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி காங்கிரசுடன் 3 இடங்களை பகிர்ந்து கொண்டது.
- அரியானாவில் கூட்டணி அமைக்க "இந்தியா' கூட்டணி கட்சிகள் எடுத்த அனைத்து முயற்சிகளையும் காங்கிரஸ் முறியடித்தது.
புதுடெல்லி:
ஆம்ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், தேசிய செய்தித் தொடர்பாளருமான பிரியங்கா கக்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
டெல்லி சட்ட தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டியிடும். அதீத நம்பிக்கை கொண்ட காங்கிரசையும், திமிர் பிடித்த பா.ஜனதா வையும் நாங்கள் தனித்து எதிர்த்துப் போராடும் திறன் கொண்டவர்கள். அண்மையில் நடைபெற்ற அரியானா சட்டமன்ற தேர்தலில் கூட்டணிக் கட்சிகளை காங்கிரஸ் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
அதன், அதீத நம்பிக்கையின் காரணமாக இறுதியில் தோல்வியைச் சந்தித்தது. கடந்த 10 ஆண்டுகளாக டெல்லி சட்டமன்றத்தில் காங்கிரசுக்கு பூஜ்ஜிய இடங்களே இருந்தன. இருப்பினும், 2024 பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி காங்கிரசுடன் 3 இடங்களை பகிர்ந்து கொண்டது.
அரியானாவில் கூட்டணி அமைக்க "இந்தியா' கூட்டணி கட்சிகள் எடுத்த அனைத்து முயற்சிகளையும் காங்கிரஸ் முறியடித்தது. கூட்டாளிகளை தங்களுடன் அழைத்துச் செல்வது அவசியம் என்று காங்கிரஸ் நினைக்கவில்லை. ஆம் ஆத்மியும், காங்கிரசும் தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அரியானாவில் சட்டமன்ற தேர்தலுக்கு முன் கூட்டணி அமைக்கத் தவறிவிட்டன. ஆம் ஆத்மி அரியானாவில் போட்டி யிட்ட அனைத்து இடங் களிலும் தோல்வியடைந் தாலும், காங்கிரஸ் பெரும் பான்மையை விட மிகக் குறைந்துவிட்டது. இது, ஆளும் பா.ஜனதா தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைப் பதற்கு வழிவகுத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.






