என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    • பதவியேற்பு விழாவில் அரசியல், சினிமா பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
    • மேடையில் இருந்த தனது அண்ணனான நடிகர் சிரஞ்சீவி காலில் விழுந்து பவன் கல்யாண் ஆசீர்வாதம் பெற்றார்.

    ஆந்திர பாராளுமன்ற தேர்தலில் 135 இடங்களில் தெலுங்கு தேசம் கட்சியும், 21 இடங்களில் ஜனசேனா கட்சியும் வெற்றி பெற்றது. பா.ஜ.க போட்டியிட்ட 10 இடங்களில் 8 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த கூட்டணி மொத்தமாக 164 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதனால் தெலுங்கு தேசம் தலைமையிலான கூட்டணி இன்று ஆந்திராவில் ஆட்சி அமைக்கிறது.

    விஜயவாடா கன்னவரம் விமான நிலையம் அருகே உள்ள கேசரப்பள்ளி தொழில்நுட்ப பூங்கா வளாகத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ஜேபி நட்டா நடிகர்கள் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் மற்றும் அரசியல், சினிமா பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

    இதில், ஆந்திராவின் முதல்-மந்திரியாக 4-வது முறையாக சந்திரபாபு நாயுடு பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் நசீர் அகமது பதவி பிரமாணம் செய்து வைத்தார். சந்திரபாபு நாயுடுவுக்கு அடுத்ததாக ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாணும் பதவியேற்றுக்கொண்டார்.

    பதவியேற்று முடிந்தவுடன் பிரதமர் மோடியிடம் வாழ்த்து பெற்ற பவன் கல்யாண், மேடையில் இருந்தவர்களிடம் வாழ்த்து பெற்றார். மேலும் மேடையில் இருந்த தனது அண்ணனான நடிகர் சிரஞ்சீவி காலில் விழுந்து பவன் கல்யாண் ஆசீர்வாதம் பெற்றார்.

    இதனிடையே, சந்திரபாபு தலைமையிலான அமைச்சரவையில் பவன் கல்யாணுக்கு துணை முதல்-மந்திரி வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, தேர்தல் வெற்றியை உறுதி செய்ததில் ஜனசேனா கட்சி தலைவரும், நடிகருமான பவன் கல்யாணுக்கு பெரும் பங்குண்டு என்பதால் அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கக்கூடும் என கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.


    • தமிழகத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி தொடர்பாக மாநில தலைவர் அண்ணாமலைக்கும், தமிழிசை சவுந்தரராஜனுக்கும் பனிப்போர் ஏற்பட்டுள்ளது.
    • தமிழிசை சவுந்தரராஜன் தலைவர்களுக்கு வணக்கம் தெரிவித்தவாறு சென்றார்.

    ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா நடைபெறுகிறது. விழா மேடையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. தேசிய தலைவரும், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சருமான ஜே.பி.நட்டா, முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு ஆகியோர் அமர்ந்திருந்தனர்.

    விழா மேடைக்கு வந்த முன்னாள் தெலுங்கானா கவர்னரும், தென்சென்னை பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட தமிழிசை சவுந்தரராஜன் தலைவர்களுக்கு வணக்கம் தெரிவித்தவாறு சென்றார்.

    வணக்கம் தெரிவித்துவிட்டு சென்ற தமிழிசை சவுந்தரராஜனை அழைத்து அமித்ஷா பேசும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.


    அதில் தமிழிசை சவுந்தரராஜன் கூறுவதை ஏற்க மறுத்து தான் சொல்வதை கேட்குமாறு மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுவது போன்று உள்ளது.

    தமிழகத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி தொடர்பாக மாநில தலைவர் அண்ணாமலைக்கும், தமிழிசை சவுந்தரராஜனுக்கும் பனிப்போர் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பா.ஜ.க. தேசிய குழு சார்பில் விசாரணை செய்யப்படுவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், மத்திய மந்திரி அமித் ஷா மேடையில் வைத்தே தமிழிசை சவுந்தரராஜனிடம் கடுமையாக பேசிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

    • ஆந்திராவில் ஆட்சி அமைக்க வரும்படி சந்திரபாபு நாயுடுவுக்கு கவர்னர் அப்துல் நசீர் அழைப்பு விடுத்தார்.
    • பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலுக்கும் வாக்கு பதிவு நடந்தது. இதில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி இமாலய வெற்றி பெற்றது.

    மொத்தம் உள்ள 175 சட்டமன்ற தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி மட்டும் 135 இடங்களிலும், ஜனசேனா கட்சி போட்டியிட்ட 21 இடங்களிலும் வெற்றி பெற்றது.

    பா.ஜ.க போட்டியிட்ட 10 இடங்களில் 8 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த கூட்டணி மொத்தமாக 164 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

    தெலுங்கு தேசம் தலைமையிலான கூட்டணி கட்சிகளின் கூட்டம் விஜயவாடாவில் நேற்று நடந்தது. இதில் கூட்டணி கட்சிகளின் தலைவராக சந்திரபாபு நாயுடு ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.

    இதனைத் தொடர்ந்து சந்திரபாபு நாயுடு ஒருமனதாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடிதத்துடன் பா.ஜ.க. மாநில தலைவர் புரந்தேஸ்வரி மற்றும் தெலுங்கு தேசம், ஜனசேனா கட்சி பிரதிநிதிகள் கவர்னர் நசீர் அகமதுவை நேரில் சந்தித்து சந்திரபாபு நாயுடுவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும்படி கோரிக்கை விடுத்தனர்.

    ஆந்திர முதல்-மந்திரியாக சந்திரபாபு நாயுடு பதவியேற்கும் விழா இன்று காலை விஜயவாடா கன்னவரம் விமான நிலையம் அருகே உள்ள கேசரப்பள்ளி தொழில்நுட்ப பூங்கா வளாகத்தில் பிரமாண்டமாக நடந்தது.

    விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி விமானம் மூலம் விழா நடைபெறும் இடத்திற்கு வந்தார். அவரை சந்திரபாபு நாயுடு, கவர்னர் நசீர் அகமது ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    விழாவில் சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநில முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார். அவரை அடுத்து ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாணும் பதவியேற்றுக்கொண்டார். மற்ற அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு கவர்னர் நசீர் அகமது பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    பிரதமர் மோடி முதல்- மந்திரி சந்திரபாபு நாயுடு மற்றும் அமைச்சர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

    மத்திய மந்திரிகள் அமித்ஷா, ஜேபி நட்டா நடிகர்கள் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் மற்றும் அரசியல் சினிமா பிரமுகர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

    சந்திரபாபு நாயுடுவுக்கு விழாவில் பங்கேற்ற முக்கிய பிரமுகர்கள் பொன்னாடை அணிவித்தும் பூங்கொத்துகளை கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தனர்.

    பதவியேற்பு விழா நடந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    தெலுங்கு தேசம் ஜனசேனா,பா.ஜ.க கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    சந்திரபாபு நாயுடு மற்றும் அமைச்சர்கள் பதவியேற்றக் கொண்ட போது கைதட்டி பலத்த ஆரவாரம் செய்தனர்.

    ஆந்திர மாநில அமைச்சர்கள் தேர்வு குறித்து அமித்ஷா மற்றும் ஜே.பி. நட்டாவுடன் நடந்த சந்திப்பிற்கு பிறகு சந்திரபாபு நாயுடு இறுதி முடிவு எடுத்துள்ளார்.

    அமைச்சர்கள் பட்டியலில் 17 புது முகங்கள் தெலுங்கு தேசம் கட்சியில் இடம் பெற்றிருந்தனர். சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷுக்கு முக்கிய இலாக்கா ஒதுக்கப்படுகிறது.

    இது தவிர நடிகர் பவன் கல்யாண் உட்பட அவருடைய கட்சியில் 3 மந்திரிகளும், பா.ஜ.க.வுக்கு ஒரு மந்திரி பதவியும் வழங்கப்பட்டுள்ளது.

    சந்திரபாபு நாயுடு ஒரு மந்திரி பதவியை காலியாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மந்திரிகள் குழுவில் 3 பெண்கள் உள்ளனர்.

    முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு இன்று மாலை திருப்பதி வருகிறார். அங்கு இரவு தங்குகிறார். நாளை அதிகாலை ஏழுமலையான் கோவிலில் சந்திரபாபு நாயுடு சாமி தரிசனம் செய்கிறார்.













    • சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக ஆந்திர முதல்-மந்திரியாக இன்று பதவியேற்கிறார்.
    • பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு மாநிலங்களின் முதல்-மந்திரிகள், மத்திய மந்திரிகள் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர்கள் பலரும் பங்கேற்க உள்ளனர்.

    விஜயவாடா:

    ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலுடன் 175 இடங்களை கொண்ட மாநில சட்டசபைக்கும் தேர்தல் நடந்தது. இதில் தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் அபார வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து ஜெகன்மோகன் ரெட்டி முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

    இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்.எம்.ஏ.க்கள் கூட்டம் விஜயவாடாவில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சட்டசபை கட்சி தலைவராக (முதல்-மந்திரியாக) சந்திரபாபு நாயுடுவை பவன் கல்யாண் முன்மொழிந்தார். பா.ஜ.க. மாநில தலைவர் டகுபதி புரந்தேஸ்வரி இதை ஆதரித்தார்.

    தொடர்ந்து, அனைத்து எம்.எல்.ஏ.க்களும் இதை ஏற்றுக்கொண்டதால் சட்டசபை கட்சி தலைவராக சந்திரபாபு நாயுடு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். சட்டசபை கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து சந்திரபாபு நாயுடு விஜயவாடாவில் கவர்னர் அப்துல் நசீரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

    அதன்படி சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக ஆந்திர முதல்-மந்திரியாக இன்று பதவியேற்கிறார். இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு மாநிலங்களின் முதல்-மந்திரிகள், மத்திய மந்திரிகள் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர்கள் பலரும் பங்கேற்க உள்ளனர்.

    இந்நிலையில், சந்திரபாபு நாயுடு தலைமையில் பதவியேற்க உள்ள 24 பேர் கொண்ட அமைச்சரவை பட்டியல் வெளியாகியுள்ளது.

    இதில், தேர்தல் வெற்றியை உறுதி செய்ததில் ஜனசேனா கட்சி தலைவரும், நடிகருமான பவன் கல்யாணுக்கு பெரும் பங்குண்டு உள்ளதால் அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அமைச்சரவை பட்டியலில் பவன் கல்யாண் பெயர் முதலாவதாக இடம்பெற்றுள்ளது.

    பவன் கல்யாணுக்கு அடுத்தப்படியாக சந்திரபாபு நாயுடுவின் மகன் நர லோகேஷ் இடம்பெற்றுள்ளார். பட்டியலில் முதன்மை பெற்றிருப்போருக்கு முக்கிய இலாக்காக்கள் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்றிரவு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. .

    கிஞ்சரபு அட்சதை, கொல்லு ரவீந்திரன், நாதெண்டல மனோகர், பொங்குரு நாராயணா, அனிதா வாங்கலபுடி, சத்ய குமார் யாதவ், நிம்மல ராம நாயுடு, நசியம் முகமது ஃபாரூக், ஜனார்தன் ரெட்டி, பாரத், சவிதா உள்ளிட்டோர் அமைச்சரவை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.


    • ஆந்திர சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது.
    • தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்.எல்.ஏ.க்களின் ஆலோசனைக் கூட்டம் விஜயவாடாவில் நடைபெற்றது.

    அமராவதி:

    சமீபத்தில் நடைபெற்ற ஆந்திர பிரதேச சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 164 இடங்களைக் கைப்பற்றி அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது.

    தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்.எல்.ஏ.க்களின் ஆலோசனைக் கூட்டம் விஜயவாடாவில் இன்று நடைபெற்றது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக தெலுங்குதேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு தேர்வு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    தொடர்ந்து, கூட்டணி கட்சிகளிடன் ஆதரவு கடிதங்களுடன் சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யான் ஆளுநர் மாளிகை விரைந்தனர். எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநர் அப்துல் நசீரிடம் வழங்கிய சந்திரபாபு நாயுடு ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

    இந்நிலையில், ஆந்திராவில் ஆட்சி அமைக்க வரும்படி சந்திரபாபு நாயுடுவுக்கு ஆளுநர் அப்துல் நசீர் அழைப்பு விடுத்தார். இதையடுத்து, சந்திரபாபு நாயுடு நாளை ஆந்திர பிரதேச முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.

    • மாநிலத்தின் பல பகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சியினருக்கும் ஜகன்மோகனின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியிடருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.
    • கர்னூல் மாவட்டத்தில் செல்வாக்கு மிக்கவராக இருக்கும் தெலுங்கு தேச காட்சியைச் சேர்ந்த கௌரிநாத் சௌத்திரியை கத்தி மற்றும் கோடரியுடன் வந்த மர்ம நபர்கள் மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிக் கொன்றனர்.

    பாஜகவின் என்.டி.ஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரசை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றியுள்ளது . மொத்தம் உள்ள 175 சட்டமன்றத் தொகுதிகளில் தெலுங்கு தேசம் 135 இடங்களிலும், கூட்டணி காட்சிகளான பாஜக மற்றும் பவன் கல்யாணின் ஜன சேனா 21 இடங்களிலும் வென்றுள்ளது.

    இந்நிலையில் மாநிலத்தின் பல பகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சியினருக்கும் ஜகன்மோகனின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியிடருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.கர்னூல் மாவட்டத்தில் செல்வாக்கு மிக்கவராக இருக்கும் தெலுங்கு தேச காட்சியைச் சேர்ந்த கௌரிநாத் சௌத்திரியை கத்தி மற்றும் கோடரியுடன் வந்த மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிக் கொன்றனர்.

    ஒய்.எஸ்.ஆர் கட்சியினரே இந்த கொலையை செய்ததாக தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்த கொலைக்கு கண்டம் தெரிவித்துள்ள சந்திரபாபு நாயுடுவும் அவரது மகன் நாரா லோகேஷும், கௌரிநாத் கொலையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு தொடர்பு உள்ளது என பரபரப்பு குற்றச்சாட்டை முனவித்துள்ளனர். மேலும் 'தேர்தலில் தோற்ற பிறகும் ஜெகன் ரத்த சரித்திரத்தை எழுதி வருகிறார், இந்த அரசியல் கொலைகளை ஜெகன் நிறுத்த வில்லை என்றால் விளைவு விபரீதமாக இருக்கும்' என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

    இதற்கிடையில் தெலுங்கு தேசம் கட்சியினர் நாரா லோகேஷ் படத்திற்கு முன் ஒய்.எஸ்.ஆர் கட்சி தொண்டரை மண்டியிட வைத்து மன்னிப்பு கேட்கச் சொல்லி துன்புறுத்தும் வீடியோவை பகிர்ந்து, தலித்துகளின் உயிருக்கு தெலுங்கு தேசம் மிகப்பெரிய ஆபத்தாக மாறியுள்ளது என்று ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே நாளை சந்திரபாபு நாயுடு ஆந்திர முதலைவராக பதவியேற்க உள்ளது குறிபிடித்தக்கது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மிக பிரம்மாண்டமான அரங்கில் நாளை சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக முதல்வர் பதவி ஏற்க உள்ளார்.
    • நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 21 இடங்களில் வெற்றி பெற்று மாநிலத்தின் 2-வது பெரிய கட்சியாக ஜனசேனா உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை மற்றும் பாராளுமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம், ஜனசேனா, பா.ஜ.க. கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. 175 பேரவை தொகுதிகளில் 164 தொகுதிகளையும், 25 பாராளுமன்ற தொகுதிகளில் 21 தொகுதிகளிலும் தெலுங்கு தேசம் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

    ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெறும் 11 சட்டசபை மற்றும் 4 பாராளுமன்ற தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று படுதோல்வியை சந்தித்துள்ளது.

    இந்நிலையில், கிருஷ்ணா மாவட்டம், கன்னவரம் அருகே உள்ள கேசரபல்லி ஐடி பார்க் மைதானத்தில் 14 ஏக்கர் பரப்பளவில் மிக பிரம்மாண்டமான அரங்கில் நாளை சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக முதல்வர் பதவி ஏற்க உள்ளார். பிரதமர் மோடி, பல்வேறு மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்ள், விஐபிக்கள் விழாவில் பங்கேற்கின்றனர்.

    இதனிடையே தேர்தல் வெற்றியை உறுதி செய்ததில் ஜனசேனா கட்சி தலைவரும், நடிகருமான பவன் கல்யாணுக்கு பெரும் பங்குண்டு உள்ளதால் அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்ககூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில், ஜனசேனா சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் தலைவர் பவன் கல்யாண் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.



    மங்களகிரியில் உள்ள ஜனசேனா கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூடி சட்டமன்ற கட்சி தலைவரை தேர்வு செய்தனர். இந்த கூட்டத்தில் ஜனசேனா கட்சியின் சட்டமன்ற தலைவராக பவன் கல்யாண் பெயரை மூத்த தலைவர் நாதெண்டலா மனோகர் முன்மொழிந்தார். இதற்கு அனைத்து எம்எல்ஏக்களும் ஒருமனதாக ஆதரவு தெரிவித்ததால், ஜனசேனா சட்டமன்ற கட்சி தலைவராக பவன் கல்யாண் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

    நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 21 இடங்களில் வெற்றி பெற்று மாநிலத்தின் 2-வது பெரிய கட்சியாக ஜனசேனா உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ரோஜா நகரியில் உள்ள தனது வீட்டை காலி செய்து விட்டு சென்னை சென்றார்.
    • மாநிலத்தில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    திருப்பதி:

    ஆந்திர சட்டமன்ற தேர்தலில் தமிழக எல்லையோரம் உள்ள நகரி தொகுதியில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் ரோஜா 3-வது முறையாக போட்டியிட்டார்.

    ஆந்திர மாநிலத்தின் சுற்றுலாத்துறை மந்திரியாக இருந்த ரோஜாவுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கக் கூடாது என நகரி தொகுதியில் உள்ள அவருடைய சொந்த கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனையும் மீறி ஜெகன்மோகன் ரெட்டி ரோஜாவுக்கு போட்டியிட வாய்ப்பளித்தார். நகரி தொகுதியில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து ரோஜா பிரசாரம் செய்தார்.

    பிரசாரத்தின் போது சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் உள்ளிட்டோரை கடுமையாக விமர்சித்தார்.மேலும் அவர் தனது ஆட்சி காலத்திலும் சட்டமன்றம் மற்றும் பொதுக்கூட்டங்களிலும் சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் ஆகியோரை விமர்சித்து வந்தார்.

    இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளரிடம் 40 ஆயிரத்து 687 வாக்குகள் வித்தியாசத்தில் ரோஜா படுதோல்வி அடைந்தார்.

    ஆந்திராவில் வாக்கு எண்ணிக்கைக்கு பிறகும் தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தொண்டர்கள் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    நடிகை ரோஜாவுக்கு திருப்பதி மற்றும் நகரி ஆகிய இடங்களில் வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் ஆந்திர மாநில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தேர்தல் மோதல் காரணமாக தொடர்ந்து ஆந்திராவில் பதட்டம் நிலவுவதால் ரோஜா நகரியில் உள்ள தனது வீட்டை காலி செய்து விட்டு சென்னை சென்றார்.

    அவர் தனது கணவர் ஆர்.கே.செல்வமணி மற்றும் மகன், மகளுடன் சென்னையில் உள்ள வீட்டில் தங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

    தேர்தல் தோல்வியால் ரோஜா ஆந்திராவில் உள்ள வீடுகளை காலி செய்து தமிழகத்துக்கு சென்றிருப்பது ஆந்திர மாநிலத்தில் பரப்பரப்பாக பேசப்படுகிறது.

    • பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரி அமித்ஷா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.
    • சந்திரபாபு நாயுடு வருகையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் அந்த மாநிலத்தில் உள்ள 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது.

    ஆட்சியில் இருந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தனித்து போட்டியிட்டது. எதிர்க்கட்சியாக இருந்த தெலுங்கு தேசம், பா.ஜ.க. மற்றும் ஜனசேனா கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.

    இந்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி 135 சட்டமன்ற தொகுதிகளை கைப்பற்றி இமாலய வெற்றி பெற்றது. பவன் கல்யாணின் ஜனசேனா 21 இடங்களிலும் பா.ஜ.க. 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

    மத்தியில் அமைந்த என்.டி.ஏ. கூட்டணி ஆட்சியில் தெலுங்கு தேசம் கட்சி முக்கிய பங்கு வகித்ததால் ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு பதவி ஏற்பதில் தாமதம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் மாநிலத்தில் தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கும் தெலுங்கு தேசம் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று காலை நடந்தது.

    இதில் சட்டப்பேரவைத் தலைவராக சந்திரபாபு நாயுடு ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் நடிகர் பவன் கல்யாணை துணை முதல்-மந்திரியாக தேர்ந்தெடுப்பது குறித்தும் அமைச்சர்கள் பட்டியல் தயார் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநில கவர்னர் அப்துல் நஷீரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்.

    விஜயவாடா சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள கண்ணவரம் தொழில்நுட்ப பூங்கா வளாகத்தில் நாளை காலை பதவி ஏற்பு விழா நடக்கிறது. காலை 11.27 மணிக்கு சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநிலத்தின் புதிய முதல்-மந்திரியாக பதவி ஏற்கிறார்.

    பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரி அமித்ஷா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். இதனால் கண்ணவரம் தொழில்நுட்பப் பூங்கா வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    சந்திரபாபு நாயுடு பதவியேற்ற உடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்ய உள்ளார். பதவி ஏற்பு விழா முடிந்தவுடன் நாளை மாலை தனது குடும்பத்தினருடன் திருப்பதி மலைக்கு வருகிறார். இரவு அங்கு தங்குகிறார். நாளை மறுநாள் அதிகாலை வி.வி.ஐ.பி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்கிறார்.

    சந்திரபாபு நாயுடு வருகையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    சந்திரபாபு நாயுடு தரிசனத்திற்கு வருவதால் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கமானவராக கருதப்படும் முதன்மை செயல் அலுவலர் தர்மா ரெட்டி இன்று முதல் வரும் 17-ந்தேதி வரை கட்டாய விடுப்பில் சென்றுவிட்டார். வருகிற 30-ந்தேதி தர்மா ரெட்டி ஓய்வு பெறுகிறார்.

    • சந்திரபாபு நாயுடு நாளை மறுநாள் முதல் மந்திரியாக பதவி ஏற்று கொள்கிறார்.
    • புரந்தேஸ்வரி ராஜமுந்திரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    திருப்பதி:

    தேசிய ஜனநாயக கூட்டணி பிரதமராக நரேந்திர மோடி மற்றும் மத்திய மந்திரிகள் நேற்று பதவி ஏற்றனர்.

    சந்திரபாபு நாயுடு தனது கட்சிக்கு 5 மந்திரி பதவியும், 1 சபாநாயகர் பதவியும் வழங்க வேண்டும் என பா.ஜ.க.விடம் வலியுறுத்தி வந்தார்.

    ஆனால் தெலுங்கு தேசம் கட்சிக்கு 2 மந்திரி பதவிகளை பா.ஜ.க. வழங்கியது. சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியதின்படி. அவரது மனைவியின் சகோதரியும் பா.ஜ.க. மாநில தலைவரான புரந்தேஸ்வரிக்கு சபாநாயகர் பதவி வழங்க பா.ஜ.க. மேலிடம் முடிவு செய்துள்ளது.

    சந்திரபாபு நாயுடு நாளை மறுநாள் முதல் மந்திரியாக பதவி ஏற்று கொள்கிறார். அவரது பதவி ஏற்பு விழாவிற்கு பிறகு புரந்தேஸ்வரி இன்னும் சில நாட்களில் சபாநாயகராக பதவியேற்பார் என கூறப்படுகிறது.

    புரந்தேஸ்வரியை சபாநாயகராக தேர்ந்தெடுத்தால் ஆந்திரா மாநிலம் மேலும் வளர்ச்சி பெறும் என கூறப்படுகிறது.

    ஆந்திர மாநில பா.ஜ.க. தலைவர் புரந்தேஸ்வரி தெலுங்கு தேசம் கட்சி தலைவரும் முன்னாள் முதல் மந்திரியுமான நடிகர் என்.டி.ராமராவின் மகள். என்டி ராமராவ் மகளும், புரந்தேஸ்வரியின் சகோதரிமான புவனேஸ்வரியை சந்திரபாபு திருமணம் செய்து கொண்டார்.

    என.டி.ராமராவின் மறைவுக்கு பிறகு சந்திரபாபு நாயுடு தெலுங்கு தேசம் கட்சி தலைவரானார். ஆந்திர அரசியலில் கால் பதிக்க நினைத்த புரந்தேஸ்வரி தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்து மந்திரி, எம்.பி பதவிகளை வகித்தார். 2004-ம் ஆண்டு பாபட்லா எம்.பி.யாகவும், 2009-ம் ஆண்டு விசாகப்பட்டினம் எம்.பி.யாகவும் பணியாற்றினார்.

    பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகி எந்த கட்சியிலும் சேராமல் இருந்தார்.

    இந்த நிலையில் ஆந்திராவில் பா.ஜ.க. கால் பதிக்க முடியாமல் திணறிக்கொண்டு இருந்தபோது கட்சி மேலிடம் புரந்தேஸ்வரியை மாநில தலைவராக அறிவித்தது.

    புரந்தேஸ்வரி மாநில தலைவராக பதவி ஏற்ற பிறகு கட்சியின் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். இவரது நடவடிக்கையால் ஆந்திராவில் பா.ஜ.க. அபார வளர்ச்சி அடைந்தது.

    நடந்து முடிந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க, தெலுங்கு தேசம் மற்றும் ஜனசேனா கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. புரந்தேஸ்வரி ராஜமுந்திரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    பா.ஜ.க. 10 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு 8 சட்டமன்ற தொகுதிகளையும், 3 பாராளுமன்ற தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்றது.

    • கடந்த 150 ஆண்டுகளாக மீன் பிரசாதம் வழங்கி வருகின்றனர்.
    • வரிசையில் நின்ற போது அவர்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், நம் பள்ளியை சேர்ந்த பத்தனி குடும்பத்தினர் ஆஸ்துமா நோயாளிகளுக்காக மிருகசீர கார்த்திகை தினத்தில் கடந்த 150 ஆண்டுகளாக மீன் பிரசாதம் வழங்கி வருகின்றனர்.

    தெலுங்கானா, ஆந்திரா மட்டமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான நோயாளிகள் மீன் பிரசாதம் சாப்பிடுவதற்காக தெலுங்கானா வருவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு நம் பள்ளியில் உள்ள சுமேஷ் மைதானத்தில் மீன் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை தெலுங்கானா மந்திரி பொன்னம் பிரபாகர் சபாநாயகர் கதம் பிரசாத் குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    மீன் பிரசாதத்தை லட்சக்கணக்கான ஆஸ்துமா நோயாளிகள் மைதானத்தில் குவிந்தனர். ஆஸ்துமா நோயாளிகள் மீன் பிரசாதத்தை பெறுவதற்காக வரிசையில் நின்ற போது அவர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    அப்போது நிஜாமாபாத் மாவட்டம்,ஸ்ரீ கொண் டாவை சேர்ந்த ராஜண்ணா என்ற 65 வயது முதியவர் கூட்ட நெரிசலில் சிக்கி கீழே விழுந்தார். அங்கிருந்தவர்கள் ராஜண்ணாவை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு ராஜண்ணா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வேகம் பேட்டை போலீசார் குருவையில் முதியவர் இறந்தது சம்பந்தமாக இதுவரை புகார் எதுவும் வராததால் தான் வழக்கு பதிவு செய்யவில்லை என தெரிவித்தனர்.

    தெலுங்கானா மந்திரி பொன்னம் பிரபாகர் கூறுகையில், மீன் பிரசாதம் சாப்பிடுவதற்காக லட்சக்கணக்கான மக்கள் குவிந்ததால் 32 கவுண்டர்கள் திறக்கப்பட்டு மீன் பிரசாதம் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

    இன்று காலை 11 மணி வரை சுமார் 6 லட்சம் பேருக்கு மீன் பிரசாதம் வழங்கப்பட்டதாக பத்தன குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    • ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனத்தின் பங்கு 424 ரூபாயில் இருந்து, 661.25 ரூபாயாக உயர்ந்துள்ளது.
    • சந்திரபாபு நாயுடு இந்த நிறுவனத்தின் 2,26,11,525 பங்குகளை வைத்துள்ளார்.

    ஆந்திர பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற மாநில தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி அமோக வெற்றி பெற்றது. அதேபோல் மக்களவை தேர்தலில் 18 இடங்களை கைப்பற்றி என்டிஏ கூட்டணியில் 2-வது பெரிய கட்சியாக விளங்குகிறது. சந்திரபாபு நாயுடு கிங் மேக்கராக திகழ்கிறார்.

    சந்திரபாபு நாயுடு கட்சியின் வெற்றியில் அவரது மனைவி மற்றும் மகனின் சொத்து மதிப்பு மிகப்பெரிய அளவில் வளர்ச்சியை கண்டுள்ளது.

    சந்திரபாபு நாயுடுவால் தொடங்கப்பட்டது ஹெரிடேஜ் ஃபுட்ஸ் (Heritage Foods). இந்த நிறுவனத்தின் முக்கிய பங்குதாரர்களாக அவரது மனைவி புவனேஷ்வரி மற்றும் அவரது மகன் லோகேஷ் இருந்து வருகிறார்கள்.

    மும்பை பங்குச் சந்தையின் தரவுகளின்படி புவனேஷ்வரியுடன் 2,26,11,525 பங்குகள் உள்ளன. லோகேஷிடம் 1,00,37,453 பங்குகள் உள்ளன.

    தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பால் திங்கட்கிழமை பங்குகள் உயர்வை கண்டன. கடந்த ஜூன் 3-ந்தேதி ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு 424 ரூபாயாக இருந்தது.

    வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற ஜூன் 4-ந்தேதி ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனத்தின் பங்கு மளமளவென உயரத் தொடங்கியது. இதற்கு முக்கிய காரணம் சந்திரபாபு நாயுடு கட்சி மாநில தேர்தலில் அமோக வெற்றி பெற்றதுதான். இறுதியாக நேற்று வெள்ளிக்கிழமை 661.25 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

    இதனை வைத்து பார்க்கும்போது புவனேஷ்வரின் சொத்தி மதிப்பு 535 கோடி ரூபாய் உயர்ந்துள்ளது. லோகேஷின் சொத்து மதிப்பு 237 கோடி ரூபாய் உயர்ந்துள்ளது.

    தேர்தல் முடிவில் கடந்த ஐந்து நாட்களில் சந்திரபாபு நாயுடு குடும்பத்தின் சொத்து மதிப்பு 770 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

    ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனம் பால் தொடர்பான வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஒடிசா, டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், உத்தரகாண்ட், உத்தர பிரதேசம் என பெரும்பாலான மாநிலங்களில் பால் விற்பனை செய்து வருகிறது.

    ×