என் மலர்tooltip icon

    இந்தியா

    • மதுரை குற்ற சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • ஒரே ஆண்டில் சுமார் 17 ஆயிரம் குற்றங்களை குறைத்திருக்கிறோம்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரம் நடைபெற்று வருகிறது. உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, சாத்தான்குளம் சம்பவத்தை மறந்துவிடக் கூடாது என அ.தி.மு.க. உறுப்பினர்களை நோக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். மேலும் அவர் கூறியதாவது:-

    * சட்டம் ஒழுங்கு பற்றி பேச அ.தி.மு.க.விற்கு தைரியம் இருக்கிறதா?

    * சேலம் மாவட்டத்தை சேர்ந்த சரித்திரப்பதிவேடு குற்றவாளியான ஜான், மனைவியுடன் நேற்று காரில் சென்றபோது கொலை நடந்துள்ளது. ஏற்கனவே நடந்த கொலைக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக ஜான் கொல்லப்பட்டதாக விசாரணையில் தெரிகிறது.

    * கொலையாளிகள் சதீஷ், சரவணன், பூபாலன் உள்ளிட்டோரை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.

    * தமிழக காவல்துறையின் கடும் நடவடிக்கை காரணமாக கொலை குற்றங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைகிறது.

    * மதுரை குற்ற சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    * எண்ணிக்கையில் பார்கையில், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது கடந்தாண்டு 109 கொலைகள் குறைந்துள்ளன.

    * ஒரே ஆண்டில் சுமார் 17 ஆயிரம் குற்றங்களை குறைத்திருக்கிறோம்.

    * குற்றவாளிகள் யாராக, எந்த கட்சியை சார்ந்தவராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கிறோம்.

    * தொடர் குற்றம் புரிவோர், கூலிப்படையினரின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகின்றன என்றார். 

    • தி.மு.க. ஆட்சியில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு மக்கள் மகிழ்ச்சியோடு உள்ளனர்.
    • தி.மு.க. ஆட்சியில் அமைதி பூங்காவாக தமிழ்நாடு இருக்கிறது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மக்கள் முதல்வரின் மனித நேய விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக எழும்பூர் தெற்கு பகுதி சார்பில் செனாய் நகர் வைத்தியநாதன் சாலை மற்றும் சேத்துப்பட்டு, அம்பேத்கர் திடலில் அன்னம் தரும் அமுதக்கரங்கள் நிகழ்வில் கலந்து கொண்டு ஏழை-எளிய மக்களுக்கு அமைச்சர் சேகர்பாபு காலை உணவு வழங்கினார்.

    தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-

    தி.மு.க. ஆட்சியில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு மக்கள் மகிழ்ச்சியோடு உள்ளனர். தி.மு.க. ஆட்சி அமைந்து இதுவரை 2ஆயிரத்து 700-க்கும் அதிகமான கோவில்களில் குடமுழுக்கு நடைபெற்று உள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் அது 3 ஆயிரத்தை தாண்டும். அ.தி.மு.க. ஆட்சியில் அறநிலையத்துறை இருக்கிறதா, பொறுப்பு அமைச்சர் யார்? என்ற கேள்வி இருந்தது.

    ஆனால் தற்போது சங்கிகள் தலையிட்டு திருச்செந்தூர் கோவில் விஷயத்தை திசை திருப்புவதாகவும், ஆகம விதிகளின்படி இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் குடமுழுக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. கோவில்களில் ஒரே ஒரு மருத்துவமனை இருந்த நிலையில் தி.மு.க. ஆட்சி அமைந்து 17 கோவில்களில் மருத்துவமனை அமைக்கப்பட்டு இருக்கிறது.

    தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருக்கிறது. குற்றவாளிகள் அண்டை மாநிலங்களுக்கு ஓட்டம் பிடிக்கும் அளவிற்கு தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. ஸ்காட்லாந்து காவல்துறைக்கு நிகராக தமிழ்நாடு காவல்துறை உள்ளது என்றார்.

    எதிர்பாராது நடக்கும் குற்றங்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்படுகிறது, சட்டம்-ஒழுங்கு பாதிப்பு என்பது அவர்களுடைய குற்றச்சாட்டு, தி.மு.க. ஆட்சியில் அமைதி பூங்காவாக தமிழ்நாடு இருக்கிறது.

    பா.ஜ.க.வினர் பலப்பரீட்சைக்கு வாருங்கள் நாங்கள் தயாராக இருக்கிறோம். அப்பாவி தொண்டர்களை தூண்டிவிட்டு சட்டம்-ஒழுங்கு கெட பா.ஜ.க. முயற்சி செய்கிறது.

    இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

    • ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார்.
    • நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார்.

    கொல்கத்தா:

    மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார்.

    நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார்.

    சுமார் 6 மாத விசாரணைக்குப் பிறகு கடந்த ஜனவரி 20-ம் தேதி அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்நிலையில், கொலை செய்யப்பட்ட பெண் டாக்டரின் டெத் சர்டிபிகேட் அவரது பெற்றோரிடம் இன்று அளிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக, மருத்துவமனை அதிகாரிகள் கூறுகையில், அவர்களுக்கு அசல் இறப்புச் சான்றிதழ் தேவைப்பட்டது. இன்று, நான் இங்கு வந்து அதை அவர்களிடம் ஒப்படைத்தேன். எந்த விவாதமும் நடத்தப்படவில்லை என தெரிவித்தனர்.

    • சர்வதேச விண்வெளி நிலையத்தில் 287 நாட்களாக சுனிதா வில்லியம்ஸ் தங்கியிருந்தார்.
    • சுனிதா வில்லியம்ஸ் உள்பட 4 வீரர்கள் புளோரிடா அருகே பத்திரமாக கடலில் தரையிறங்கினர்.

    சென்னை:

    விண்வெளியில் உள்ள ஐ.எஸ்.எஸ். எனப்படும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 287 நாட்களாக தங்கியிருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், பூமிக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது.

    இதனையடுத்து பால்க்கன்-9 எனும் ராக்கெட்டுடன், டிராகன் எனும் விண்கலம் அனுப்பப்பட்டு சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்தது. இதன்மூலமாக சுனிதா வில்லியம்ஸ் அவர்களும், புட்ச் அவர்களும், அங்கிருந்த மேலும் 2 வீரர்களோடு இணைந்து பயணித்து, பத்திரமாக புளோரிடா அருகே கடலில் தரையிறங்கினர். பூமி திரும்பிய விண்வெளி வீரர்களுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில் பத்திரமாக பூமி திரும்பி சுனிதா வில்லியம்ஸ்-க்கு கவி பேரரசு வைரமுத்து தனது ஸ்டைலில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

    அதில்,

    சுனிதா வில்லியம்ஸின்

    பூமி திரும்பல்

    ஒரு பெண்ணின் வெற்றியோ

    நாட்டின் வெற்றியோ அல்ல;

    மகத்தான மானுடத்தின் வெற்றி

    அவர்

    மண்ணில் இறங்கும்வரை

    இரண்டு மடங்கு துடித்தது

    பூமியின் இருதயம்

    பெண்ணினத்துக்குக்

    கூடுதல் பெருமை சேர்த்துவிட்டார்

    அந்த வேங்கை மகள்

    அவரது உயரம்

    நம்பிக்கையின் உயரம்

    அவரது எடை

    துணிச்சலின் நிறை

    மரணத்தின்

    உள்கூடுவரை சென்றுவிட்டு

    வாழ்வுக்குத் திரும்பியிருக்கிற

    சுனிதா வில்லியம்ஸை

    பூமியின் ஒவ்வொரு பொருளும்

    வரவேற்கின்றது

    இந்த விண்வெளிப் பிழை

    எதிர்கால அறிவியலைத்

    திருத்திக்கொள்ளும்

    ஆதாரமாக விளங்கும்

    பிழை என்பது அறியாமை;

    திருத்திக்கொள்வது அறிவு

    என்ற பாடத்தை

    அறைந்து சொல்லும்

    சுனிதா வில்லியம்ஸ் அனுபவம்

    வந்தவரை வாழ்த்துவோம்

    மானுடத்தை வணங்குவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த 2024 பாராளுமன்ற தேர்தலின்போது, நாம் தமிழர் கட்சியில் இணைந்தார்.
    • கிருஷ்ணகிரி மக்களவை தொகுதி வேட்பாளராக களமிறங்கினார்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அதிருப்தி அடைந்த நிர்வாகிகள் பலர் அக்கட்சியில் இருந்து விலகி மாற்றுக்கட்சியில் இணைந்து வருவது தொடர்கதையாகி வருகிறது. இதனிடையே கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் சீமான் மீது அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளராக வீரப்பன் மகள் வித்யாராணி நியமிக்கப்பட்டுள்ளார்.

    மறைந்த சந்தன மரக்கடத்தல் வீரப்பனின் மகள் வித்யாராணி. இவர் தற்போது தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 2024 பாராளுமன்ற தேர்தலின்போது, நாம் தமிழர் கட்சியில் அவர் இணைந்தார். உடனடியாக அவருக்கு நா.த.க தலைமை கிருஷ்ணகிரி மக்களவை தொகுதி வேட்பாளராக களமிறக்கி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

    • இரவு நேரங்களில் கரடியின் நடமாட்டம் உள்ளது என அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
    • அப்பகுதியினர் மிகுந்த அச்சம் அடைந்துள்ள நிலையில், அந்த கரடியை வனப்பகுதிக்குள் விரட்டவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே நெசவாளர் காலனியில், வயல் வெளியில் அமைந்துள்ள அக்னி சாஸ்தா கோவில் பகுதியில் நேற்றிரவு கரடி ஓன்று புகுந்தது. தொடர்ந்து அங்கும் இங்குமாக உலா வந்து பூஜை பொருட்களை சேதப்படுத்தியது. இந்த சம்பவம் அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைராலாகி வருகிறது.

    மேலும் கல்லிடைக்குறிச்சி அருகேயுள்ள தெற்கு பாப்பான்குளம், கோல்டன் நகர், நெசவாளர் காலனி, கோல்டன் நகர் போன்ற பகுதிகளில் இரவு நேரங்களில் கரடியின் நடமாட்டம் உள்ளது என அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    தொடர்ச்சியாக மலை அடிவார கிராம பகுதிகளில் கரடியின் நடமாட்டம் இருப்பதால் அதை கூண்டு வைத்துப் பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விடுவிக்குமாறு வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கடையம் மேற்குத் தொடர்ச்சி மலையில் சிறுத்தை, யானை, கரடி, உள்பட பல்வேறு வகையான வன விலங்குகள் உள்ள நிலையில், இவற்றில் யானை மற்றும் கரடி இரவு நேரங்களில் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன.

    இந்நிலையில் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள பூவன்குறிச்சி என்ற கிராமத்தில் நேற்று இரவு ஒற்றைக் கரடியானது சுற்றி திரிந்தது. இதனை அப்பகுதியினர் செல்போனில் வீடியோ எடுத்த நிலையில் அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

    இதனால் அப்பகுதியினர் மிகுந்த அச்சம் அடைந்துள்ள நிலையில், அந்த கரடியை வனப்பகுதிக்குள் விரட்டவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சேலத்தில் இருந்து பதிவு எண் இல்லாமல் வந்த காரை நிறுத்தி அதில் இருந்த 3 பேரிடம் விசாரணை நடத்தினர்.
    • திருட்டு வழக்கில் தொடர்புடைய மேலும் 4 பேரை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே புறவடை தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு பகுதியை சேர்ந்தவர் ஷேர்லின்பெல்மா (வயது 44). இவர் கோவிலூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. ஆசிரியை தனது தாயார் மேரியுடன் வசித்து வருகிறார். கடந்த 8-ந்தேதி ஷேர்லின்பெல்மா வழக்கம் போல் பள்ளிக்கு சென்று விட்டார்.

    இதனால் மேரி வீட்டை பூட்டி விட்டு வெளியில் சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பினார். அப்போது மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 100 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சேலத்தில் இருந்து பதிவு எண் இல்லாமல் வந்த காரை நிறுத்தி அதில் இருந்த 3 பேரிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரில் சோதனை நடத்தினர். அதில் பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தன.

    இதையடுத்து காரில் வந்த 3 பேரையும், போலீசார் அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று துருவி, துருவி விசாரணை நடத்தினர். அவர்கள் 3 பேரும் நெல்லை டவுன் கீழத்தெருவை சேர்ந்த சுரேஷ் (34), கார்த்திக் (25), அம்பாசமுத்திரத்தை சேர்ந்த துர்காநம்பி (25) ஆகியோர் என தெரியவந்தது.

    இவர்கள் 3 பேரும் கூட்டாளிகளுடன் சேர்ந்து ஆசிரியை ஷேர்லின்பெல்மா வீட்டில் 100 பவுன் நகை, பணத்தை திருடியதும், பிரபல கொள்ளையர்கள் என்பதும், 3 பேர் மீதும் பல்வேறு இடங்களில் திருட்டு, கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 30 பவுன் நகை, கார், பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த திருட்டு வழக்கில் தொடர்புடைய மேலும் 4 பேரை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • கைது செய்யப்பட்ட 2 பெண்களிடமும் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
    • கடத்தலில் தொடர்புடைய வேறு நபர்கள் பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள 4 சர்வதேச விமான நிலையங்களில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. அவ்வாறு வரக் கூடிய விமானங்களில் தங்கம் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்கள் மற்றும் போதை பொருட்கள் கடத்தி கொண்டு வரப்படுகிறது.

    இதுபோன்ற கடத்தலை தடுக்க சுங்கத்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தபோதிலும் வெளிநாட்டில் இருந்து வரக்கூடிய சில பயணிகள் சட்டவிரோதமாக விலையுயர்ந்த பொருட்கள் மற்றும் போதை பொருட்களை கடத்துவது நடந்தபடியே இருக்கிறது.

    இந்தநிலையில் பாங்காங்கில் இருந்து கொச்சி வந்த தாய் ஏர்வேஸ் விமானத்தில் கலப்பின கஞ்சா கடத்தி கொண்டு வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த விமானம் இரவில் கொச்சி வந்ததும், விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் அவரது உடமைகளை சுங்கத் துறையினர் சோதனை செய்தனர்.

    அப்போது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த மாடல் அழகியான மான்வி சவுத்ரி, டெல்லியை சேர்ந்த ஒப்பனை கலைஞர் சிபத் ஸ்வாந்தி ஆகிய இருவரும் 15 கிலோ கலப்பின கஞ்சாவை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    விமான நிலையத்தில் நடத்தப்படும் சோதனையில் கண்டுபிடிக்க முடியாத வகையில் 'மேக்கப்' பொருட்கள் இருந்த பெட்டியில் மறைத்து வைத்துகொண்டு வந்துள்ளனர். ஆனால் சுங்கத்துறையினர் அதனை கண்டு பிடித்துவிட்டனர். இதையடுத்து மாடல் அழகி மற்றும் பெண் ஒப்பனை கலைஞர் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    அவர்கள் கடத்தி கொண்டுவந்த ரூ4.5கோடி மதிப்புள்ள கலப்பின கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 2 பெண்களிடமும் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கலப்பின கஞ்சாவை ஒரு கும்பலுக்கு கொடுப்பதற்காக கொச்சிக்கு கொண்டு வந்ததாக தெரிவித்தனர்.

    மாடல் அழகியிடம் இருந்து கஞ்சாவை வாங்குவதாக கூறிய நபர்கள் யார்? என்று சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த கடத்தலில் தொடர்புடைய வேறு நபர்கள் பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • முழுவதுமாக உள்நாட்டு உபகரணங்களைக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்றன.
    • இரண்டு இருக்கைகள் கொண்ட ஒரு விமான டாக்சி வடிவமைக்கப்பட்டு வி2 என்று பெயரிடப்பட்டது.

    அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய விமான டாக்சிகளை நகரங்கள் மற்றும் பெருநகரங்களில் கிடைக்கச் செய்வதற்கான முயற்சிகள் உலகம் முழுவதும் நடந்து வருகின்றன.

    இந்தப் பந்தயத்தில் சீனா போன்ற நாடுகள் மட்டுமே முன்னிலையில் உள்ள நிலையில், ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த ஒரு இளைஞர் விமான டாக்சிகள் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

    குண்டூரைச் சேர்ந்த சாவா அபிராம், அமெரிக்காவில் ரோபாட்டிக்ஸ் பொறியியலில் முதுகலைப் பட்டம் முடித்தார். நம் நாட்டில் ஏதாவது ஒரு அமைப்பை நிறுவும் நோக்கத்துடன் அவர் இங்கு வந்தார்.

    போக்குவரத்து நெரிசல் உள்ள நகரங்களில் விமான டாக்சிகளை கிடைக்கச் செய்வது பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பி, அவர் அதை கவனமாக ஆய்வு செய்து வருகிறார்.

    விமானி இல்லாமல் தரையில் இருந்து கட்டுப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த வாகனம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. விமானி இல்லாமல் இந்த வாகனங்களை இயக்க அனுமதிப்பதில்லை என்பதால், இரண்டு மற்றும் மூன்று இருக்கைகளுடன் கூடிய விமான டாக்சிகள் தயாரித்தார்.

    முழுவதுமாக உள்நாட்டு உபகரணங்களைக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்றன. இரண்டு இருக்கைகள் கொண்ட ஒரு விமான டாக்சி வடிவமைக்கப்பட்டு வி2 என்று பெயரிடப்பட்டது.

    சோதனை ஓட்டம் வெற்றியடைந்தது. அவர் 3 இருக்கைகள் ஏர் டாக்சி தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

    • கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்
    • ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

    சென்னை:

    சென்னை மாநகரில் 250 இளஞ்சிவப்பு பிங்க் ஆட்டோக்கள் இயக்க விண்ணப்பங்கள் பெறப்பட்டு முதல்கட்டமாக தகுதியான பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சர்வதேச மகளிர் தினத்தன்று இளஞ்சிவப்பு ஆட்டோக்களை மகளிருக்கு வழங்கி துவக்கி வைத்தார்.

    இதனை தொடர்ந்து பிங்க் ஆட்டோக்கள் 2-ம் கட்டமாக வழங்கப்படவுள்ளதால் தகுதியான பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறும் பொருட்டு இத்திட்டத்தின் கீழ் பயன் பெற அடுத்த மாதம் 6-ந் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 20 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். சென்னையில் குடியிருக்க வேண்டும்.

    எனவே, சென்னையில் உள்ள ஆட்டோ ஓட்ட விருப்பமுடைய பெண் ஓட்டுநர்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடைய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சென்னை மாவட்ட சமூக நல அலுவலர் (வடக்கு) அல்லது சென்னை மாவட்ட சமூக நல அலுவலர் (தெற்கு) என்ற முகவரியிட்டு 6.4.2025-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • கைது செய்யப்பட்ட 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி தருமபுரி சிறையில் அடைக்கப்பட்டனர்.

    மாரண்டஅள்ளி:

    தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே தேக்லான்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மகன் தாமோதரன் (வயது 29). இவருக்கும், பென்னாகரம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் கடந்த 10-ந்தேதி பெற்றோர் கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர்.

    இதனால் மனமுடைந்த சிறுமி நேற்று முன்தினம் வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து பாலக்கோடு அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்படடது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கட்டாய திருமணம் செய்து வைத்ததால் மனமுடைந்த சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இதையடுத்து சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த சிறுமியின் தாயார் மற்றும் புதுமாப்பிள்ளை தாமோதரன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    தொடர்ந்து அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    கைது செய்யப்பட்ட 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி தருமபுரி சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • வெள்ளி விலையில் மாற்றமில்லை.
    • ஒரு கிராம் வெள்ளி 114 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ.1,14,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த 14-ந்தேதி வரை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருந்து, கடந்த 14-ந்தேதி இதுவரை இல்லாத உச்சமாக ரூ.66 ஆயிரத்து 400 என்ற நிலையை அடைந்தது. அன்றைய தினம் ஒரே நாளில் மட்டும் சவரனுக்கு ரூ.1,440 அதிகரித்திருந்தது.

    அதனைத் தொடர்ந்து விலை குறைந்து வந்த நிலையில் நேற்று மீண்டும் உயர்ந்திருந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 210-க்கும், ஒரு சவரன் ரூ.65 ஆயிரத்து 680-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.40-ம், சவரனுக்கு ரூ.320-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 290-க்கும், ஒரு சவரன் ரூ.66,320-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,310-க்கும் சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.66,480-க்கும் விற்பனையாகிறது.



    வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 114 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ.1,14,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    19-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 66,480

    18-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 66,000

    17-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,680

    16-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,760

    15-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,760

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    19-03-2025- ஒரு கிராம் ரூ.113

    18-03-2025- ஒரு கிராம் ரூ.113

    17-03-2025- ஒரு கிராம் ரூ.113

    16-03-2025- ஒரு கிராம் ரூ.112

    15-03-2025- ஒரு கிராம் ரூ.112

    ×