என் மலர்
பொது மருத்துவம்
- புளித்த ஏப்பம் என்பது அமில ரிப்லெக்சுக்கான ஒரு அறிகுறியாக இருக்கலாம்.
- அதற்கான வீட்டு வைத்தியங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
புளித்த ஏப்பம் என்பது அமில ரிப்லெக்சுக்கான ஒரு அறிகுறியாக இருக்கலாம். இதன் அறிகுறிகள் மற்றும் அதற்கான வீட்டு வைத்தியங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். சாப்பிட்ட பிறகு புளித்த ஏப்பம் வருவது நமக்கு ஒருவித அசவுகரித்தை ஏற்படுத்துகிறது. வயிற்றில் சுரக்கும் அமிலம் உணவுக் குழாய்க்கு திருப்பி அனுப்பப்படும் பொழுது ஆசிட் ரிஃப்ளக்ஸ் ஏற்படுகிறது. இதனை அலட்சியமாக கருதும் பொழுது, அது நமக்கு அசவுகரியம் மற்றும் மேலும் பல விளைவுகளை ஏற்படுத்துகிறது.
நமது உடலில் ஏற்படுத்தக்கூடிய அறிகுறிகளை தெரிந்து கொள்வது அவசியம். வயிற்றின் ஒருவித இயல்பு மாற்றம் காரணமாக ஆசிட் ரிஃப்ளக்ஸ் உருவாகிறது. நமது நெஞ்சு பகுதியையும் கீழ் வயிறு பகுதியையும் டயாபிராகம் என்ற தசை பிரித்து வைக்கிறது. வயிற்றில் சுரக்கும் அமிலம் மேலே நகராதவாறு பாதுகாப்பது இந்த தசை. எனினும் ஹெர்னியா காரணமாக இந்த அமிலம் உணவுக் குழாய் வரை பயணிக்கிறது.

புளித்த ஏப்பம் வருபதற்கு காரணம்
* அதிகப்படியாக சாப்பிடுவது உடல்பருமனாக இருப்பது அதிக உணவு சாப்பிட்ட உடனேயே படுத்துக் கொள்வது
* இரவு தாமதமாக உணவு உண்பது
* சாக்லேட், புதினா, தக்காளி, பூண்டு, வெங்காயம், காரமான மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவது.
* கார்பனேற்றப்பட்ட பானங்கள், காபி அல்லது டீ குடிப்பது
*புகையிலை பொருட்களை உட்கொள்வது
* அதிக ரத்த அழுத்தத்திற்கு கொடுக்கப்படும் ஒரு சில மருந்துகள்
அறிகுறிகள்:
அடிவயிற்றில் தொடங்கிய எரிச்சல் உணவுக் குழாய், கழுத்து மற்றும் நெஞ்சு பகுதி வரை பரவும்.
பின் வாயில் கசப்பான அல்லது புளித்த சுவை ஏற்படுதல்
வயிற்றில் இருந்து திரவங்கள் அல்லது உணவு மீண்டும் வாய்க்கு வருதல்
நாள்பட்ட இருமல்
குமட்டல் அல்லது வாந்தி
வீட்டு வைத்தியம்:
* உணவுக்குப் பிறகு சோம்பு விதைகளை மென்று சாப்பிடுவது செரிமானத்தை தூண்டும். சோம்பு விதைகள் பொதுவாக பாதுகாப்பானவை, எந்தவித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.
* பேக்கிங் சோடா மற்றும் ஆப்பிள் சைடர் வினிகர் ஆகிய இரண்டையும் மிதமான அளவு சாப்பிடுவது கேஸ்ட்ரிக் அமிலத்தை நடுநிலைப்படுத்த உதவும்.
* ஒரு டீஸ்பூன் அளவு ஓமத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடிப்பது நெஞ்சு எரிச்சலை போக்கும்.
* ஒரு சிட்டிகை பெருங்காயத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடிப்பது அசிடிட்டி பிரச்சனையை தவிர்க்க உதவும்.
* மருத்துவரின் ஆலோசனையின் பெயரில் புளித்த ஏப்பம் மற்றும் நெஞ்செரிச்சலை தவிர்ப்பதற்கு நீங்கள் ஆன்டாசிட்களை பயன்படுத்தலாம்.
உடல் பருமன் காரணமாக ஏற்படக்கூடிய ஆசிட் ரிஃப்ளக்ஸ் பிரச்சனையை தடுப்பதற்கு நீங்கள் உடல் எடையை குறைக்க வேண்டும். அசிடிட்டி பிரச்சனையை சமாளிப்பதற்கு நீங்கள் அதிக அளவு உணவை ஒரே நேரத்தில் சாப்பிட வேண்டாம். மாறாக சிறிய அளவிலான உணவை அடிக்கடி சாப்பிடலாம். உணவு சாப்பிட்ட பிறகு லேசான உடற்பயிற்சியில் ஈடுபடுவது செரிமானத்தை அதிகரிக்கும்.
- மூளை மனதின் பல்வேறு செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் ஒரு சிக்கலான உறுப்பு.
- நினைவாற்றலும், சிந்திக்கும் திறனும் குறைகின்றன.
வெறும் 1 கிலோ 400 கிராம் எடை கொண்ட மூளைதான், 60 கிலோ எடை கொண்ட மனிதனையே இயக்குகிறது. அதே மூளைதான், மனிதர்களை திறமைசாலிகளாகவும், புத்திக்கூர்மை உள்ளவர்களாகவும் மாற்றுகிறது. இதற்கு எதிர்மறையான விளைவுகளையும் மூளையே உண்டாக்குகிறது.
இத்தகைய மூளை, எல்லா மனிதர்களுக்கும் கிடைக்கப்பெற்றும், ஒவ்வொருவரின் திறமைகளும், புத்திக்கூர்மையும் ஏன் மாறுபடுகிறது என்ற கேள்வி, எல்லோர் மனதிலும் எழும். இந்த கேள்விக்கு சுவாரசியமான பதில் இருக்கிறது.

ஆம்..! மனித மூளை என்பது உடல் மற்றும் மனதின் பல்வேறு செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் ஒரு சிக்கலான உறுப்பு. அது பெருமூளை, சிறுமூளை, மூளைத்தண்டு, தலாமஸ், ஹைபோதலாமஸ்... என பலவற்றை ஒருங்கிணைத்து இயங்குகிறது. இவை ஒவ்வொன்றுமே, ஒவ்வொரு செயல்பாடுகளை கொண்டுள்ளன. அதன் செயல்பாடுகளை, வேறு எதன் மூலமாகவும் ஈடுசெய்ய முடியாது. இதில் ஏதாவது ஒன்று முழுமையாக செயல்படாத பட்சத்தில்தான், மனிதர்களின் மூளைத்திறன் குறைய ஆரம்பிக்கிறது.
நினைவாற்றலும், சிந்திக்கும் திறனும் குறைகின்றன. அதன் அடிப்படையில்தான், குழந்தைகளை நாம் நன்றாக படிப்பவர்கள், படிக்க சிரமப்படுபவர்கள் என தரம் பிரிக்கிறோம்.
சில குழந்தைகளுக்கு இயற்கையாகவே, மூளைத்திறன் குறைவாக இருக்கும். ஆனால் சில குழந்தைகள், டிஜிட்டல் உலக மோகத்தினாலும், ஊட்டச்சத்து குறைபாட்டினாலும் இதுபோன்ற சிக்கல்களை சந்திக்க நேரிடலாம். அவர்களுக்கு போதிய நினைவாற்றல் இருக்காது. குழப்பமாகவே காணப்படுவார்கள். சிந்தனை திறனும், ஞாபக சக்தியும் அதிகமாக இருக்காது. இது தீர்வு காணக்கூடிய சிக்கல்தான். ஏனெனில் குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஏற்ப அவர்களின் மூளையும் வளர்ச்சி பெறும் என்பதால், சில பயிற்சிகள், விளையாட்டு முயற்சிகள் மூலமாக மூளைத்திறனை மேம்படுத்த முடியும்.
இந்த முயற்சிகள் மூளையின் குறிப்பிட்ட பகுதிகளை தூண்டி, அவர்களின் நினைவாற்றலையும், புத்திக்கூர்மையையும் செம்மையாக்க உதவுகின்றன.
குழந்தைகளின் மூளை வளர்ச்சியை எவ்வாறு தூண்டுவது?, விளையாட்டு பயிற்சிகள் மூலமாக குழந்தைகளின் அறிவாற்றலை மேம்படுத்த முடியுமா?, ஸ்மார்ட்போன் பயன்பாடு குழந்தைகளை எவ்வாறு பாதிக்கிறது?, மூளை வளர்ச்சியை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் எவை?, சிக்கல்களை சமாளிக்க குழந்தைகளை பழக்குவது எப்படி?... இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்வதற்கு முன்பாக மூளை எப்படி இயங்குகிறது, அதன் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதை விளக்கமாக அறிந்து கொள்வோம். இது, நம்முடைய புரிதல் திறனை வலுவாக்கும்.

மனித மூளையின் செயல்பாடுகள்
பெருமூளை
பெருமூளைதான் மூளையின் மிகப்பெரிய பகுதி. சிந்திப்பது, முடிவெடுப்பது, மொழி அறிவு மற்றும் தன்னார்வ இயக்கம் போன்ற உயர்மட்ட அறிவாற்றல் செயல்பாடுகளை சிறப்பாக செய்யக்கூடியது. நான்கு வகையான மடல்கள் இந்த செயல்பாடுகளை கட்டுப்படுத்துகின்றன.
1. ப்ரண்டல் லோப்- தன்னார்வ இயக்கம், முடிவெடுத்தல், சிக்கலைத் தீர்ப்பது மற்றும் உணர்ச்சி ஒழுங்குமுறை ஆகியவற்றை கட்டுப்படுத்துகிறது.
2. பாரிட்டல் லோப்- தொடுதல், வெப்பநிலை மற்றும் வலி உள்ளிட்ட உடலில் இருந்து உணர்ச்சி தகவல்களை செயலாக்குகிறது.
3. டெம்போரல் லோப்- செவி வழி தகவல், நினைவகம் மற்றும் மொழி புரிதல் ஆகியவற்றை செயலாக்குகிறது.
4. ஆக்ஸிபிடல் லோப்- கண்கள் காணும் காட்சிகளை தகவல்களாக மாற்றுகிறது.

சிறுமூளை
அடுத்தது, சிறுமூளை. உடல் இயக்கம், சமநிலை, தோரணை மற்றும் செம்மையான இயக்க திறன்களை இது ஒருங்கிணைக்கிறது. `பைன் மோட்டார் ஸ்கில்ஸ்' என்பது, எழுதுதல், வரைதல், வண்ணம் தீட்டுதல், கத்தரித்தல், கைத்தட்டுதல், பல் துலக்குதல், ஷூ கயிறு கட்டுதல், புத்தகம் திருப்புதல்... போன்ற உடலுக்கு தேவையான செம்மையான இயக்கங்களை குறிக்கும்.

மூளைத்தண்டு
மூன்றாவதாக, மூளைத்தண்டு. இது அடிப்படை உயிர் காக்கும் செயல்பாடுகளை கட்டுப்படுத்துகிறது. மூளையை முதுகெலும்புடன் இணைக்கிறது. சுவாசம், இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம், செரிமானம் மற்றும் விழுங்குதல் போன்ற தன்னிச்சையான செயல்முறைகளை ஒழுங்குபடுத்துகிறது. இது மூளைக்கும், உடலின் மற்ற பகுதிகளுக்கும் இடையிலான உணர்ச்சி மற்றும் இயக்க சமிக்ஞைகளுக்கான பாதையாகவும் செயல்படுகிறது.

தலாமஸ்
தலாமஸ் என அழைக்கப்படும் இது உணர்வு தகவல்களை பரிமாற்றும் 'ரிலே' (அஞ்சல்) நிலையமாக செயல்படுகிறது. உடலின் பல்வேறு பகுதிகளிலிருந்து கடத்தப்படும் உணர்வுகளை (வாசனையைத் தவிர) ஆராய்ந்து, அதை பெருமூளையின் வெளிப்பகுதிக்கு அனுப்பி வைக்கிறது. நாம் தூங்கும்போதும், சுயநினைவின்றி இருக்கையிலும் இந்த தலாமஸ் இயங்கிக்கொண்டே இருக்கும்.

ஹைபோதலாமஸ்
இது மூளைக்குள் இருக்கும் ஆழமான பகுதி. இது உடல் இயக்கத்தின் `ஸ்மார்ட்' ஒருங்கிணைப்பு மையமாக செயல்படும். உடல் மற்றும் மூளை நரம்பு செல்கள் மூலமாக பகிரப்படும் ரசாயன சமிக்ஞைகளை உள்வாங்கி, உடல் இயக்கத்தை சம நிலையாக பராமரிப்பது இதன் முக்கிய வேலை.
இப்படி மூளையின் பல்வேறு பகுதிகள் பல்வேறு பணிகளை செய்கிறது. அவை சரிவர நடைபெறாத போதும், மூளை திறன் குறையும் போதும் ஞாபக மறதி, குறைந்த புரிதல் திறன், சிக்கல்களுக்கு தீர்வு காண முடியாமல் திணறுதல்... போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதேபோல, ஒருசில பயிற்சிகள், விளையாட்டுகளால் மூளைத்திறனை சிறப்பாக மேம்படுத்தி, அதீத நினைவாற்றல் பெற முடியும்.
- `சூப்பர் புட்’ உணவுப்பொருளாக முருங்கைக்காய் விளங்குகிறது.
- முருங்கைக்காயில் இயற்கையாகவே நீர்ச்சத்து நிறைந்துள்ளது.
கோடை காலத்தில் நிலவும் வெப்பத்தின் தன்மைக்கேற்ப உடலை நீரேற்றமாகவும், ஊட்டச்சத்துடனும், ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதற்கு உணவு பழக்கத்தில் மாற்றத்தை கொண்டு வர வேண்டியது அவசியமானது. கோடை கால வெப்ப சூழலுக்கு ஏற்ற `சூப்பர் புட்' உணவுப்பொருளாக முருங்கைக்காய் விளங்குகிறது. ஏராளமான ஊட்டச்சத்துகள், மருத்துவ குணங்கள் நிரம்பிய முருங்கைக்காயை வெப்பமான காலநிலை நிலவும் மாதங்களில் ஏன் அவசியம் சாப்பிட வேண்டும் என்பதற்கான காரணங்கள் உங்கள் கவனத்திற்கு...
1. நீரேற்றம்:
முருங்கைக்காயில் இயற்கையாகவே நீர்ச்சத்து நிறைந்துள்ளது. இது கோடை வெப்பத்தின் போது உடலை நீரேற்றமாக வைத்திருக்க சிறந்த தேர்வாக அமைகிறது. பொதுவாகவே அதிக நீர் உள்ளடக்கம் கொண்ட உணவுகளை உட்கொள்வதன் மூலம் வெப்பத்தின் காரணமாக ஏற்படும் திரவ இழப்பை ஈடு செய்துவிடலாம். முருங்கைக்காய் உட்கொள்வது நீரிழப்பை தடுக்கும். உடலை குளிர்ச்சியாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க உதவும்.
2. ஊட்டச்சத்து:
முருங்கைக்காயில் வைட்டமின்கள் ஏ, சி, ஈ, கால்சியம், பொட்டாசியம், இரும்பு, தாதுக்கள், ஆன்டி ஆக்சிடென்டுகள் உள்ளிட்ட அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. அவை ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கு அவசியமானவை. நோய் எதிர்ப்பு செயல்பாடு, எலும்பு ஆரோக்கியம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதில் அவை முக்கிய பங்கு வகிக்கின்றன.
3. குளிர்ச்சித்தன்மை:
முருங்கைக்காயில் இயற்கையான குளிர்ச்சித் தன்மை உள்ளது. வெப்பமான காலநிலையில் உடலின் உட்புற வெப்பநிலையை தணிப்பதற்கு உதவுகிறது. முருங்கைக்காயை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் அதிக வியர்வை, சோர்வு மற்றும் உடல் உஷ்ணம் போன்ற வெப்பம் தொடர்பான அசவுகரியங்களை தவிர்க்கலாம்.

4. செரிமானம்:
அஜீரணம், மலச்சிக்கல், வீக்கம் போன்ற செரிமான பிரச்சினைகளைப் போக்க பாரம்பரிய மருத்துவத்தில் முருங்கைக்காய் பயன்படுத்தப்படுகிறது. இதில் இருக்கும் நார்ச்சத்து, செரிமானப் பாதையில் உணவு சீராக செல்ல உதவும். அதன் மூலம் செரிமான செயல்பாடு விரைவாக நடைபெறுவதற்கு உதவும்.
5. அழற்சி எதிர்ப்பு பண்புகள்:
முருங்கைக்காயில் பிளாவனாய்டுகள், பீனாலிக் அமிலங்கள் போன்றவை உள்ளன. அவை வலிமையான அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டவை. தொடர்ந்து முருங்கைக்காயை உட்கொள்வதன் மூலம் கீல்வாதம், ஒவ்வாமை போன்ற அழற்சி அறிகுறிகளை கட்டுப்படுத்தலாம்.
6. நோய் எதிர்ப்பு சக்தி:
முருங்கைக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. அது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதிலும், நோய்த்தொற்றுகளைத் தடுப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. ப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்தில் இருந்து செல்களைப் பாதுகாக்கவும் உதவுகிறது.
7. எடை மேலாண்மை:
முருங்கைக்காயில் கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைவாகவே உள்ளன. ஆனால் நார்ச்சத்து மிகுந்திருக்கிறது. பசியை கட்டுப்படுத்தி அதிக அளவு உணவு உட்கொள்வதை தடுக்கும். இதன் மூலம் உடல் எடை குறைவதற்கும், உடல் எடையை சீராக பராமரிப்பதற்கும் உதவி செய்யும்.
முருங்கைக்காயை குழம்பு வகைகளில் சேர்ப்பதோடு சூப் தயாரித்தும் பருகலாம். முருங்கைக்காய் சூப் வெப்பமான கோடை நாட்களில் உடலுக்கு ஊட்டமளிக்கும். முருங்கைக்காய் மற்றும் முருங்கை இலைகளை பிற காய்கறி, பழங்களுடன் சேர்த்து சாலட்டுகளாக தயார் செய்தும் சாப்பிடலாம். பழங்கள், தயிர், ஐஸ் ஆகியவற்றுடன் கலந்து பானமாகவும் ருசிக்கலாம்.
- ஒரே இடத்தில் உட்கார்ந்து கொள்வதால் கலோரிகளை எரிக்க கடினமாக உள்ளது.
- அடிக்கடி செரிமான பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள்.
இன்றைய காலகட்டத்தில், பலர் வீட்டில் இருந்து வேலை (வொர்க் ஃப்ரம் ஹோம்) என்ற பெயரில் வீட்டில் மற்றும் அலுவலகத்தில் அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்கிறார்கள். இந்த வேலைகளில் பெரும்பாலானவை 8 முதல் 9 மணிநேர ஷிப்டுகளை அடிப்படையாகக் கொண்டவை. அத்தகைய சூழ்நிலையில் அவர்கள் அனைவரும் 8 முதல் 9 மணி நேரம் தொடர்ந்து உட்கார்ந்து வேலை செய்கிறார்கள். இருப்பினும், இது ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
உட்கார்ந்து வேலை செய்பவர்கள் பல உடல்நலப் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். உட்கார்ந்து வேலை செய்பவர்களிடையே அதிகரித்து வரும் பிரச்சனைகள் என்ன என்பத்தை இங்கே தெரிந்து கொள்வோம்..
தொடர்ந்து ஒரே இடத்தில் உட்கார்ந்து கொள்வதால் கலோரிகளை எரிக்க கடினமாக உள்ளது. அதனால் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்கள் சில சமயம் உடல் பருமனாக மாறுகிறார்கள். இது கெட்ட கொழுப்பாக உடலில் சேரும். உடல் பருமன் உடலில் பல கடுமையான நோய்களுக்கு வழிவகுக்கிறது.
அதுபோல், உட்கார்ந்து வேலை செய்பவர்கள் அடிக்கடி செரிமான பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். ஏனெனில், ஒரே இடத்தில் அமர்ந்து சாப்பிடுவதால் அவை செரிமானம் ஆகாது. அத்தகையவர்களுக்கு மலச்சிக்கல், அஜீரணம் போன்ற பிரச்சனைகளும் இருக்கும்.

நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதால் தசைகள் பலவீனமடைகின்றன. முழங்கால் வலியும் தொல்லை தரும். இப்போதெல்லாம் 9 மணி நேரம் உட்கார்ந்திருக்கும் வேலையில் உடலில் ரத்த ஓட்டம் மிகவும் மெதுவாக உள்ளது. இதனால் கால்களில் கூச்சம் ஏற்படும்.
மேலும் இவர்களின் உடல் செயல்பாடு மிகவும் குறைவாக இருக்கும். இதன் காரணமாக, அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைகிறது. அவர்கள் அடிக்கடி நோய்வாய்ப்படுகிறார்கள். அத்தகையவர்கள் முடிந்தால் தவறாமல் உடற்பயிற்சி அல்லது யோகா செய்ய வேண்டும்.
உட்கார்ந்து வேலை செய்பவர்கள் பெரும்பாலும் கணினிகள் அல்லது மடிக்கணினிகளில் வேலை செய்கிறார்கள். ஒருவர் 8 முதல் 9 மணி நேரம் கணினித் திரையைப் பார்ப்பதால், அதிலிருந்து வெளிப்படும் நீலக்கதிர்கள் கண்களுக்கு தீங்கு விளைவிக்கும். இதன் தாக்கம் கண்பார்வையை பலவீனப்படுத்துகிறது.
தொடர்ந்து உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு டைப் 2 நீரிழிவு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், இதை தவிர்க்க நீங்கள் ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும் மற்றும் உடற்பயிற்சியும் செய்ய வேண்டும்.
- உடல்நல கோளாறுகளுக்கு ரோஜா இதழ்கள் அருமருந்தாக இருக்கிறது.
- ரோஜா இதழ்களில் தேநீர் போட்டு குடிப்பதால் ஏராளமான நன்மை கிடைக்கும்.
மருத்துவ குணம் கொண்ட ரோஜா மலர்கள் எடை இழப்பு, மன அழுத்தம், மாதவிடாய் பிரச்சனை, செரிமான பிரச்சனை, நீரிழிவு நோய் பிரச்சனை குடல் புண் உள்ளிட்ட பல்வேறு உடல்நல கோளாறுகளுக்கு ரோஜா இதழ்கள் அருமருந்தாக இருக்கிறது. ரோஜா இதழ்களை பச்சையாகவோ அல்லது உலர வைத்து தேநீர் போட்டு குடிப்பதால் ஏராளமான நன்மை கிடைக்கும்.
ரோஜா இதழ்களை அப்படியே மென்று சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும். ரோஜாவில் இருந்து எடுக்கப்படும் தைலம் காது வலி, காது குத்தல், காது புண், காது ரோகம் ஆகியவற்றை குணமாக்கும். ரோஜா குல்கந்தை சாப்பிட்டால் ரத்தம் சுத்தம் அடைந்து சருமம் பளபளப்பாகும்.
ரோஜா சர்பத்தை அருகினால் மூலச்சூடு, மலச்சிக்கல், குடலில் புண் குணமாகும். ரோஜா இதழ்களை ஆய்ந்து ஒரு கையளவு எடுத்து பாத்திரத்தில் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி அதில் பாதியை எடுத்து சர்க்கரையை சேர்த்து காலை, மாலை குடித்து வந்தால் மலச்சிக்கல் விலகும்.

பித்தம் காரணமாக மயக்கம், குமட்டல், வாந்தி, நெஞ்சு எரிச்சல் மற்றும் பித்தக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் இரண்டு கைப்பிடி அளவு ரோஜா இதழ்களை ஒரு பாத்திரத்தில் போட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாகக் கொதித்ததும் வடிகட்டி காலை, மாலை இருவேளை ஒரு டம்ளர் வீதம் குடிக்க வேண்டும். இவ்வாறு ஏழு நாட்கள் குடித்து வந்தால் பித்தம் அறவே நீங்கிவிடும்.
ரோஜா இதழ்களை வேளைக்கு ஒரு கைப்பிடி வீதம் வெறுமனே மென்று சாப்பிட்டால் சீதபேதி குணமாகும். ரோஜா பூ கஷாயத்துடன் கருஞ்சீரகத்தை சேர்த்து அரைத்து மெல்லிய துணியால் நனைத்து முகர்ந்தால் மூக்கடைப்பு, ஜலதோஷத்தால் ஏற்படக்கூடிய பல்வேறு வகை கோளாறுகள் அகலும்.
ரோஜாப்பூ நிறைய கிடைக்கும்போது ரோஜா பூவை நிழலில் உலர்த்தி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். இதை கஷாயம் போட்டு சாப்பிட்டால் உடம்பிற்கு மிகவும் நல்லது. ஒரு டம்ளர் தண்ணீரில் உலர்ந்த ரோஜாக்களை போட்டு பாதி அளவுக்கு சுண்டும்படி காய்ச்சி இறக்கி ஆறவைத்து வடிகட்டி சிறிது நாட்டு சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் போதும். வேண்டுமென்றால் கொஞ்சம் பாலையும் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் வாய்ப்புண் சரியாகும் மற்றும் கர்ப்பிணிகளுக்கு சிறுநீர் தாராளமாகப் போகும்.

சூரிய கதிர்களால் ஏற்படும் சரும பாதிப்புகள் நீங்க ஒரு சுத்தமான பவுலில் ஒரு ஸ்பூன் அரைத்த ரோஜா இதழ்களை எடுத்து அதனுடன் ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்த்து இந்த கலவையை சருமத்தில் தடவி இருபது நிமிடங்களுக்குப் பிறகு சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வர சருமம் பளபளப்பாகக் காணப்படும்.
- தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.
- இயர்போன் பயன்படுத்துவதால் காது, கண், மூளை என மூன்றுமே பாதிப்படைகிறது.
ஒவ்வொரு நாளும் நம்முடைய தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. அதற்கான முக்கியக் காரணம் `ஸ்மார்ட் ஃபோன்கள்'. ஆம்...! இன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நம் அனைவருடைய கைகளிலுமே புகுந்து விளையாடுகிறது இந்த `ஸ்மார்ட்' போன்கள்.
செல்போன் உடன், அதன் இணைபிரியா நண்பனாக காதில் மாட்டிக்கொள்ள இயர்போன் கட்டாயம் கையில் வைத்துக்கொள்ள வேண்டிய நிலை வேறு. இதன் பயன்பாடு காரணமாக 1.1 பில்லியன் இளைய தலைமுறையினர் காது கேளாத அபாயத்தில் இருப்பதாக உலக சுகாதர நிறுவனம் தெரிவித்துள்ளது.
கதிர்வீச்சு காது கேளாமைக்கு காரணமா...?
செல்ஃபோனை பார்த்துக்கொண்டே இருப்பதால் கண் பார்வை பாதிப்படைகிறது. ஆனால் அதேநேரத்தில் அதிக நேரம் இயர்போன் பயன்படுத்துவதால் காது, கண் மற்றும் மூளை என மூன்றுமே பாதிப்படைகிறது. செல்ஃபோன் அழைப்புகளின் போது `ரேடியோ ஃப்ரீக்வன்ஸி' எனப்படும் கதிர்வீச்சு அதிர்வெண் வெளிப்படும். இது அதிகளவிலான பாதிப்பை உண்டாக்கும். அதாவது, ஒருவரின் மூளை வரை சென்று பாதிப்பை உண்டாக்கக் கூடியது. இந்த கதிர்வீச்சுகளின் வேகமானது குறையவும் செய்யலாம், கூடவும் செய்யலாம் அது முழுக்க முழுக்க அவரவர் பயன்படுத்தும் நேரத்தைப் பொறுத்தது.

தொடர்ந்து பாடல் கேட்பது தவறா...?
காதுகளில் இயர்போன்களை மாட்டிக்கொண்டு பேசுவதைக் காட்டிலும் சத்தமாக பாட்டு கேட்பதையே பலரும் விரும்புகிறார்கள். தொடர்ந்து அதிக நேரம் பாடல்கள் கேட்கும் போது நம்முடைய காதுகள் செவித்திறனை இழப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
மேலும் இது தொடர்ந்து நீடிக்கும்பட்சத்தில் காதுகளின் உயிரணுக்களின் உணர்ச்சி நிரந்தர சேதத்திற்கு வழிவகுக்கும். இதனை மீண்டும் சரிசெய்ய சாத்தியமே இல்லை. இதனால் நிரந்தர காது கேளாமை கூட ஏற்படலாம்.
மன அழுத்தம் மற்றும் கவனச்சிதறலுக்கு என்ன காரணம்...?
இயர்போன்களை பயன்படுத்துவதை ஒரு அன்றாட பழக்கமாகக் கொள்வது ஒருவரது சமூக வாழ்க்கை மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கும். சில சமயங்களில் அதிகப்படியான பதட்டம் மற்றும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும். இறுதியாக நம்முடைய மனஅமைதி கெடும். அதுபோக, இயர்போன்களில் தொடர்ந்து பாடல்களைக் கேட்பதால் சாதாரணமாக கவனம் செலுத்துவதில்கூட குறைபாடு ஏற்படுகிறது. இது படிப்பு, வேலை அல்லது பிற செயல்பாடுகளில் தவறுகள் ஏற்பட வழிவகுக்கும்.
இயர்போன்களைப் பயன்படுத்துவதால் இதய நோய் வருமா...?
இயர்போன்களை அதிகநேரம் காதில் மாட்டிக்கொண்டு இசையைக் கேட்பதால் காதுகளுக்கு மட்டுமின்றி இதயத்திற்கும் நல்லதல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். இதனால் இதயம் வேகமாக துடிக்கும். அதோடு இதயம் சார்ந்த அதிக பாதிப்புகள் ஏற்படலாம்.

பாதிப்பைக் குறைப்பதற்கான வழிமுறைகள்:
சத்தங்கள் டெசிபல் என்ற அளவீடுகளில் அளக்கப்படுகின்றன. அதாவது 60 டெசிபல்களுக்கு குறைவாகக் கேட்டால் காதுகள் பாதிப்பு அடைவதில் இருந்து பாதுகாக்கப்படும். ஆனால், 85 டெசிபலுக்கு மேல் இருக்கக்கூடிய சத்தங்களை மீண்டும் மீண்டும் கேட்டால் செவித்திறன் பாதிக்கப்படும். எனவே, 60 டெசிபலுக்கு குறைவாக பயன்படுத்துவது நல்லது. ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்துக்கும் குறைவாக இயர்போன் பயன்படுத்துவது பாதுகாப்பானது.
இயர்போன்களுக்கு பதில் ஹெட்போன்களை பயன்படுத்தலாம். ஹெட்போனை காதுகளுக்குமேல் வைத்துக் கேட்பதால் அதில் இருந்து வெளியாகும் சத்தம் செவிப்பறையில் நேரடியாகப் பாதிப்பை உண்டாக்காது.
ஹெட்போனோ அல்லது இயர்போனோ... தொடர்ந்து கேட்காமல் இடைவெளிவிட்டு கேட்பது நல்லது. அதாவது அரை மணி நேரம் கேட்டால் 5 நிமிட ஓய்வும் அதே நேரத்தில் ஒரு மணி நேரம் கேட்டால் 10 நிமிட ஓய்வும் கொடுக்க வேண்டும். இயர்போனை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வது நல்லதல்ல. காதில் தொற்று ஏற்படாமல் இருக்க தினமும் இயர்போனை சுத்தம் செய்ய வேண்டும்.
- இமயமலை சிகரத்தின் குன்றுகளில் வளரும் ஒரு மூலிகைச் செடி.
- உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
இமயமலை சிகரத்தின் குன்றுகளில் வளரும் ஒரு மூலிகைச் செடி, உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. புராணங்களில் கூறப்படும் சஞ்சீவினி மூலிகையைப் போன்றதொரு மூலிகை இது. அத்துடன் மலைப்பகுதியில் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ப உடலைத் தகவமைத்துக் கொள்ளவும், கதிரியக்க பாதிப்பை தடுக்கவும் இந்த மூலிகை உதவுவதாக தெரியவந்துள்ளது.

ராமாயணத்தில் லட்சுமணனை காப்பாற்ற அனுமன் கொண்டுவந்த சஞ்சீவினி மூலிகை இந்தியாவில் இருப்பதற்கான சாத்தியம் உள்ளதா என விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக ஆராய்ச்சி நடத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில் ரோடியோலா மூலிகையைதான் ராமாயணத்தில் சஞ்சீவினி என்று குறிப்பிட்டார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. லடாக் பகுதி மக்களிடையே இந்த மூலிகைக்கு சோலோ' என்று பெயர். இதன் நற்பண்புகள் பற்றி அங்குள்ளவர்களுக்கு பெரிதாக தெரியவில்லை. அதேநேரம், இந்த செடியின் இலையை கீரை போல சமைத்து இப்பகுதி மக்கள் உண்கின்றனர்.

லே பகுதியை சேர்ந்த உயர்மலைப்பகுதி ராணுவ ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த மூலிகை செடியின் மருத்துவக்குணங்கள் குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருகிறார்கள்.
`குறைந்த காற்றழுத்தம், ஆக்சிஜன் குறைவு ஆகியவற்றால் அவதிப்படும் ராணுவ வீரர்களுக்கு இந்த மூலிகை உதவிக்கரமாக இருக்கும். அத்துடன் இம்மூலிகை மனஅழுத்தத்தை குணப்படுத்தும், பசியைத் தூண்டும் அம்சமும் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது' என்கிறார்கள், ராணுவ ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள்.
- வைட்டமின் ஏ குறைபாடு சிறுநீரக கற்களை உருவாக்கும்.
- சிறுநீரக கற்களுக்கு சித்த மருத்துவத்தில் சிறந்த சிகிச்சைகள் உள்ளன.
சிறுநீரகத்தில் கால்சியம் ஆக்சலேட், கால்சியம் பாஸ்பேட், யூரிக் அமிலம் சிஸ்டின், ஷேந்தீன் வகை கற்கள் உருவாகிறது. சிறுநீரக கற்களுக்கு சித்த மருத்துவத்தில் சிறந்த சிகிச்சைகள் உள்ளன. அவை வருமாறு:-

1) சிறுகண் பீளை குடிநீர், நெருஞ்சில் குடிநீர், நீர்முள்ளி குடிநீர் இவைகளில் ஒன்றை ஒரு டீஸ் பூன் எடுத்து தண்ணீரில் கொதிக்க வைத்து 100 மி.லி. வீதம் காலை, மாலை என இரு வேளை குடிக்கவும்.
2) அமிர்தாதி சூரணம் 1 கிராம், நண்டுக்கல் பற்பம் 200 மி.கி., சிலாசத்து பற்பம் 200 மி.கி., வெடியுப்பு சுண்ணம் 100 மி.கி. வீதம் இருவேளை தண்ணீர் அல்லது இளநீரில் சாப்பிடலாம்.
3) கல்லுடைக்குடோரி - காலை, இரவு ஒரு மாத்திரை வீதம் சாப்பிட வேண்டும். கல்லுருக்கி இலை மற்றும் இரணகள்ளி இலை போன்றவற்றை தினமும் சாப்பிட்டு வர சிறுநீரக கல் குணமாகும். இதை இன்றைக்கும் கிராமங்களில் பயன்படுத்தி வருகின்றனர்.
சிறுநீரகக் கற்களை தடுக்கும் முறைகள்:
வைட்டமின் ஏ குறைபாடு சிறுநீரக கற்களை உருவாக்கும். ஆகவே, கேரட், பப்பாளி, முருங்கைக்காய் போன்றவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். பொட்டாசியம் சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கிறது, கரைக்கிறது. எனவே பொட்டாசியம்
சத்து நிறைந்த இளநீர், பீன்ஸ், கொய்யா, வாழைப்பழம், தர்பூசணி போன்றவற்றை சாப்பிடலாம்.
சிட்ரிக் அமிலம் சிறுநீரக கல்லை கரைப்பதுடன் கல் உருவாவதையும் தடுக்கும். ஆகவே, எலுமிச்சைச்சாறு, சாத்துக்குடி, ஆரஞ்சு போன்றவைகளை உணவில் சேர்க்க வேண்டும்.
கால்சியம் அளவு குறைந்தால் அது ஆக்சலேட் உடன் இணைந்து கற்களை உருவாக்கும். ஆகவே, கால்சியம் நம் உடலில் சரியான அளவில் இருக்க வேண்டும்.

இறைச்சி வகைகள், எலும்பு சூப், முட்டைக்கோஸ், காலிபிளவர், தக்காளி விதைகள், பீட்ருட், உப்பில் ஊறிய பொருட்கள் போன்றவற்றை உணவில் அடிக்கடி சேர்ப்பதை கட்டுப்படுத்த வேண்டும்.
நீர்ச்சத்து அதிகமுள்ள காய்கறிகளை தோல் நீக்கி சாறாக குடிக்கலாம். இதன் தோலில் அதிகளவு ஆக்சலேட் மற்றும் பாஸ்பேட்டுகள் உள்ள பருப்பு வகைகள், தோலை நீக்கி உணவில் சேர்க்க வேண்டும்.
வெண்பூசணி, வெள்ளரிக்காய், கோவைக்காய். முள்ளங்கிக்காய், கரைக்காய், பாகற்காய், வாழைத்தண்டு இவைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். சிறுநீரகக் கற்கள் உள்ளவர்கள் தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். சிறுநீரை அடக்காமல் அவ்வப்போது கழிக்க வேண்டும். உடல் வெப்பத்தை நீக்க, வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் எடுக்க வேண்டும்.
- வலிப்பு நோய் ஏற்பட்டவரை உடனே ஒரு பக்கமாக திருப்பிவிட வேண்டும்.
- சிறிது நேரம் ஓய்வெடுக்க விடவேண்டும்.
மூளை மற்றும் நரம்பு செல்களில் இயற்கையாக தகவல் பரிமாற்றம் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் போது, இயற்கையாக அவற்றுக்கு இடையே இயல்பாக மிகச்சிறிய அளவில் மின்சாரம் உற்பத்தியாகிறது. ஏதோ ஒரு காரணத்தினாலோ அல்லது அதிக அழுத்தத்தினாலோ, திடீரென்று மூளைக்கு கட்டுப்பாடில்லாத அளவுக்கு அதிகமான மின் தூண்டுதல்கள், கண் இமைக்கும் நேரத்தில் பாய்ந்து, மின் தொல்லையை மூளையில் ஏற்படுத்துகிறது. இது மூளையிலுள்ள நரம்புகள் வழியாக உடல் உறுப்புகளுக்குப் பாய்கின்றன.
இந்த நேரத்தில் உடல் உறுப்புகளின் செயல்பாடு மாறுபட்டு, கை மற்றும் கால்கள் கட்டுப்பாடில்லாமல் இழுக்கத் தொடங்குகின்றன. இதைத்தான் வலிப்பு நோய் என்கிறோம்.
வலிப்பின் போது வாயில் சேரும் எச்சில் நுரை, தொண்டையை அடைத்துக் கொண்டால் சுவாசம் தடைபடும். இது உயிருக்கு ஆபத்தானது. எனவே வலிப்பு நோய் ஏற்பட்டவரை உடனே ஒரு பக்கமாக திருப்பிவிட வேண்டும். வலிப்பு அடங்கும் வரை காத்திருந்து, பின் அவரது முகத்தில் தண்ணீர் தெளித்து, ஆசுவாசப்படுத்த வேண்டும்.
அவரை சிறிது நேரம் ஓய்வெடுக்க விடவேண்டும். சில நிமிடங்கள் கழித்து குடிக்க தண்ணீர் கொடுக்க வேண்டும். அவரைச் சுற்றி நாற்காலி, டேபிள் மற்றும் காயத்தை உண்டாக்கக்கூடிய பொருட்கள் ஏதாவது இருப்பின் அப்புறப்படுத்த வேண்டும்.
முதல் முறை வலிப்பு வந்தவராக இருந்தால், அவரது குடும்ப டாக்டரை உடனடியாகப் பார்க்கச் சொல்லவும். அடிக்கடி வலிப்பு வருபவராக இருந்தால், வலிப்பு மாத்திரைகளை ஒழுங்காகச் சாப்பிடுகிறாரா என்று விசாரிக்க வேண்டும். வலிப்பு சில நொடிகளில், அதிகபட்சமாக ஓரிரு நிமிடங்களில் நின்றுவிடும்.

அந்த நேரத்தில் அவரது கையில் இரும்புத் துண்டையோ, சாவிக் கொத்தையோ கொடுப்பதால் எந்தவித உபயோகமும் இல்லை. ஆனால் இரும்பை கையில் கொடுத்ததனால் தான் வலிப்பு நின்றுவிட்டது என்று நாம் நினைத்துக் கொள்கிறோம். இந்த சமயத்தில் கையில் கொடுக்கப்படும் இரும்புக் கம்பி, சாவி முதலியவைகளின் கூரான பகுதி, வலிப்பு வந்தவரின் உடலில் எங்காவது குத்தி காயத்தை உண்டுபண்ணி விட்டால், மருத்துவமனைக்கு அவசரமாக கொண்டு செல்ல வேண்டிவரும்.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு வேண்டு மானாலும் வலிப்பு வரும். பெரும்பாலான வலிப்புகளை தொடர்ந்து மருந்துகள் சாப்பிடுவதன் மூலம் கட்டுப்படுத்தலாம். மூளைக் காய்ச்சல், மூளைக்கட்டி, மூளையில் ரத்தக் கசிவு, சில போதை மருந்துகள் உபயோகித்தல், சரியான தூக்கம் இல்லாமை. சில வலி போக்கும் மருந்துகள், ரத்தத்தில் சோடியம் குறைந்து விடுதல் இவைகள் எல்லாம் வலிப்பை உண்டாக்கலாம்.
குழந்தைகளுக்கு காய்ச்சல் அதிக அளவில் போய்விட்டால் வலிப்பு வரலாம். இதை பிள்ளைக் காய்ச்சல் வலிப்பு என்று சொல்வார்கள். காய்ச்சலை உடனே கட்டுப்படுத்தினால், வலிப்பு சரியாகிவிடும். வலிப்பு நோயை பொறுத்தவரை மருத்துவரின் உதவியின்றி, வீட்டிலேயே சிகிச்சை செய்து கொள்வது நல்லதல்ல. மருத்துவரை கட்டாயம் அணுக வேண்டும்.
- மன ஆரோக்கியத்திற்கும், உணவிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
- மன அழுத்தத்தை தூண்டக்கூடிய உணவுகளை தவிர்க்கவும்.
நமது உடல் நலனில் உணவு எவ்வளவு முக்கிய பங்கு வகிக்கிறதோ, அதே அளவு நமது மன ஆரோக்கியத்திற்கும் உணவிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. மன அழுத்தம் மற்றும் பதட்டம் மீது உணவின் மீதான தாக்கத்தை புரிந்து கொள்வது அவசியம்.
மன அழுத்தத்தை தூண்டக்கூடிய உணவுகளை தவிர்க்கவும், அதே நேரத்தில் மன அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும் பெர்ரி பழங்கள், நட்ஸ் வகைகள், விதைகள் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் முக்கியத்துவத்தை நாம் அனைவரும் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.
சரிவிகித உணவு, உணர்வு சீரமைப்பை ஆதரிக்கக் கூடிய குறிப்பிட்ட ஊட்டச்சத்துக்கள் மற்றும் நமது ஒட்டுமொத்த மன ஆரோக்கியம் இந்த காலகட்டத்தின் முக்கியமான தேவையாக அமைகிறது. ஆகவே, மன அழுத்தத்தை குறைக்க உதவும் ஒரு சில உணவுகளின் பட்டியலை இந்த பதிவில் பார்க்கலாம்.

பெர்ரி பழங்கள்:
பெர்ரி பழங்களில் அதிக அளவு ஆன்டி ஆக்சிடன்ட்கள் இருப்பதால் அவை செல் சேதத்தை தவிர்த்து மன அழுத்தத்தை போக்க உதவுகிறது.

முந்திரி:
முந்திரிப் பருப்பில் 14-20 சதவீதம் வரையிலான பரிந்துரைக்கப்பட்ட ஜிங்க் அளவு உள்ளது. இது பதட்டத்தை குறைப்பதற்கு பயனுள்ளதாக அமைகிறது.

மெக்னீசியம் நிறைந்த உணவுகள்:
சியா விதைகள், பூசணி விதைகள் மற்றும் முட்டைகளில் காணப்படும் மெக்னீசியம் மனநல மேம்பாட்டுடன் தொடர்புடையவையாக இருக்கின்றன.

முட்டை:
முட்டைகளில் நிறைந்து இருக்கக்கூடிய டிரிப்டோபேன், செரட்டோனின் உற்பத்தியை தூண்டுகிறது. இது நமது மனநிலையை மேம்படுத்துவதற்கு உதவும் ஒரு ஹார்மோன் ஆகும்.

அவகேடோ:
அவகேடோ என்று சொல்லப்படும் வெண்ணெய் பழத்தில் ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து வைட்டமின் சி மற்றும் பி6 நிறைந்துள்ளது. இது மன அழுத்தத்தை குறைப்பதற்கும் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதற்கும் உதவுகிறது.

பச்சை இலை காய்கறிகள்:
பச்சை இலை காய்கறிகளில் நிறைந்து காணப்படும் ஃபோலேட் சத்து நியூரோ டிரான்ஸ்மிட்டர் உற்பத்திக்கு ஆதரவு தருவதன் மூலமாக பதற்றம் மற்றும் கவலை உணர்வை எதிர்த்துப் போராட உதவுகிறது.

சால்மன்:
சால்மன் மற்றும் மத்தி மீன்களில் வைட்டமின் டி சத்து அதிக அளவில் உள்ளது. இது பதட்டம் போன்ற மனநிலை சம்பந்தப்பட்ட கோளாறுகளில் இருந்து நிவாரணம் பெறுவதற்கு உதவுகிறது.

பால் சார்ந்த பொருட்கள்:
டிரிப்டோபேன், மெலடோனின் மற்றும் பி வைட்டமின்கள் உள்பட பால் சார்ந்த பொருட்களில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மன அழுத்தத்தை குறைத்து தூக்கத்தை வரவழைக்கிறது.
- மீன் சாப்பிட்டால் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைக்கலாம்.
- எந்த வகை மீன்கள் என்று பார்க்கலாம்.
சில மீன்களை சாப்பிட்டால் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைக்கலாம். அது எந்த வகை மீன்கள் என்று பார்க்கலாம்.

சூரை மீன்
சூரை மீன் அல்லது டூனா மீனில் உள்ள அதிக அளவு ஒமேகா - 3 கொழுப்பு அமிலங்கள் இதய தமனிகளுக்கு சேரக்கூடிய ஒமேகா - 6 கொழுப்பு அமிலங்கள் மற்றும் எல்டிஎல் கொழுப்பின் அளவை குறைக்க உதவும்.

டிரவுட் மீன்
டிரவுட் மீன் ஒமேகா - 3களின் வளமான மூலமாகும். இது நல்ல கொலஸ்ட்ரால் அளவை பராமரிக்க உதவுகிறது.

ஹெர்ரிங் மீன்
ஹெர்ரிங் மீன் இரண்டு வகையான அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் EPA மற்றும் DHA ஆகியவற்றை வழங்குகிறது. இது வீக்கத்தை குறைக்கவும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

கானாங்கெளுத்தி மீன்
கானாங்கெளுத்தி மீனில் ஒமேகா - 3 அமிலம் நிறைந்துள்ளது. இது கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.

மத்தி மீன்
மத்தி மீன்கள் ஒமேகா - 3 கொழுப்பு அமிலங்களின் சிறந்த மூலமாகும். மேலும் கொலஸ்ட்ரால் அளவை பராமரிக்க உதவுகிறது.

வாள்மீன்
வாள்மீனில் காணப்படும் ஒமேகா - 3 கொழுப்பு அமிலங்கள் ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த உதகிறது.
- உடல் இயக்கம் சீராக நடைபெறுதற்கு தூக்கம் முக்கியமானது.
- நீண்ட நேரம் தூங்குவதும் உடல்நலத்தை பாதிக்கும்.
நம்முடைய உடல் இயக்கம் சீராக நடைபெறுதற்கு தூக்கம் முக்கியமானது. பிறந்த குழந்தைகள் ஒரு நாளில் 14 முதல் 17 மணி நேரம் வரை தூங்குவார்கள். வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் தினமும் 7 முதல் 8 மணி நேரம் வரை ஆழ்ந்த இரவுத் தூக்கம் அவசியமானது.
தினசரி சீராக தூங்குவதன் மூலம் உடலையும், மனதையும் புத்துணர்வாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள முடியும். அதே சமயம். ஒரு நாளில் 8 மணி நேரம் அல்லது அதற்கும் அதிகமான நேரம் தூங்கினால் உடலில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இரவு நேரத்தில் சீரான தூக்கம் கொள்ளாமல் பகல்பொழுதில் தூங்குவதும். நீண்ட நேரம் தூங்குவதும் உடல்நலத்தை பாதிக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
நீண்டநேரம் தூங்கும்போது தொடர்ச்சியாக உடல் அசைவின்றி இருக்கும். இதன் காரணமாக தசைகளின் இயக்கம் குறைந்து உறுப்புகளின் சீரான செயல்பாட்டில் இடையூறு ஏற்படும்.
இதன்மூலம் சோம்பல் உணர்வு அதிகரிக்கும். எந்த வேலையும் செய்ய முடியாமல் அலுப்பு உண்டாகும். நீண்ட நேரம் ஒரே மாதிரியான அமைப்பில் படுத்திருக்கும் போது முதுகுவலி ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது.

அதிக நேரம் தூங்கும்போது மூளையில் உள்ள நரம்புக் கடத்திகளின் செயல்பாடு குறைந்து நாளடைவில் நினைவாற்றல் இழப்பு ஏற்படக்கூடும். நீண்ட நேரம் தூங்கினால் தூக்கத்தை ஒழுங்குபடுத்தும் செரோடோனின் அளவு குறையும்.
இதன் காரணமாக தலைவலி, ஒற்றைத் தலைவலி போன்ற பிரச்சினைகள் உண்டாகும். அதுமட்டுமல்லாமல், சிந்திக்கும் திறன், தீர்வுகாணும் திறன் குறைந்து எதிர்மறையான மனநிலை மாற்றத்துக்கும் வழிவகுக்கும்.
அதிகப்படியான தூக்கம் ஹார்மோன் சுரப்பில் இடையூறை ஏற்படுத்துவதோடு, சீரற்ற நேரத்தில் தூங்கும் பழக்கத்தை உண்டாக்கும். இதன் மூலம் மனஅழுத்தம், மனச்சோர்வு, மறதி போன்ற பாதிப்புகள் உண்டாகும்.
சீரற்ற தூக்கத்தால் முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படுவதோடு உடல் இயக்கத்தின் அளவும் குறையும். இதனால், உடலில் தேவை யற்ற கொழுப்பு அதிகரிக்கும். இது உடல் பருமன் நோய்க்கு வழிவகுக்கும். அதுமட்டுமல்லாமல் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோய்கள் போன்ற வாழ்வியல் சார்ந்த நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும்.






